தொலைந்தேன் 29💜

eiIN3OH48530

தொலைந்தேன் 29💜

“நான் என்ன வேணும்னா பண்ணேன். நீ பண்ண தப்பால அந்த தப்பு நடந்து போச்சு. அதுக்காக என்னை முழுசா விட்டு விலகிடுவாளா அவ! நான் அவள ரொம்ப லவ் பண்றேன். அது ஏன் அவளுக்கு புரிய மாட்டேங்குது. காதல் இல்லாமதான் இன்னைக்கு என் கூட…” என்று போதையில் குளறியபடி சொல்ல வந்து நிறுத்திய ரிஷிக்கு அவளுடன் இன்று மஞ்சத்தில் கழித்த நினைவுகள் ஞாபகத்திற்கு வந்து மனதை ரணப்படுத்த, தன்னிலை மறந்து அழ ஆரம்பித்துவிட்டான் அவன்.

அதுவும் பணக்காரர்கள் வருகை தரும் அந்த பப்பில் அதுவும் மேக்னாவின் முன்.

தன் நண்பர்களை சந்திக்கவென அங்கு வந்திருந்தவள், கொஞ்சமும் ரிஷியை எதிர்ப்பார்க்கவில்லை. அதுவும் போதையில். அவனைப் பார்த்ததுமே அவனை நோக்கிச் சென்ற மேக்னா, தன்னைப் பார்த்ததும் புலம்பும் ரிஷியின் குளறலைக் கேட்டு அதிர்ந்து நின்றாள்.

“ரிஷ்…” என்று அவனை அதிர்ந்துப் பார்த்துக்கொண்டிருந்தவள், ஒன்றை மட்டும் உணர்ந்துக்கொண்டாள். அது ரிஷியிடமிருந்து சனாவின் பிரிவு.

கூடவே, சுற்றியிருந்தவர்களின் பார்வை ரிஷியை மொய்ப்பதைப் பார்த்ததும் அவளுக்கு சங்கடமாகிப் போனது. அவளைப் பொருத்தவரை அவளுடையவன் அவன். அப்படியிருக்கையில் மற்றவர்களின் பார்வைக்கு அவன் காட்சிப் பொருளாவதை அவளால் கொஞ்சமும் ஜீரணிக்க முடியவில்லை. அதுவும், மீடியாக்காரர்கள் மீதான பயமும் வேறு.

வேகமாக அவனை இழுத்துக்கொண்டு அங்கிருந்த தனியறைக்குள் சென்றவள், “ரிஷ், என்னாச்சு, ஏன் இப்படி ஒருமாதிரி இருக்க?” என்று கேட்டு அவனை உலுக்க, “மேகா…” என்று அழுதுக்கொண்டே அழைத்தவாறு மேக்னாவை தாவி அணைத்துக்கொண்டான் ரிஷி.

அவளுக்கோ அதிர்ச்சி.

சிலைபோல் அவள் நிற்க, “அன்னைக்கு நீ என்னை விட்டு போன, இப்போ அவ விட்டுட்டு போயிட்டா. யாருமே என்னை பத்தி யோசிக்கவே மாட்டீங்களா? என்னால தாங்க முடியல மேகா, எனக்கு அவ வேணும். சனா எனக்கு வேணும்.” என்று அவன் புலம்ப, இப்போது அதிர்ச்சி மறைந்து கோபம் தாறுமாறாக எகிறியது அவளுக்கு.

ஆனால், ஏனோ அவளால் அவனிடம் கோபத்தை காட்ட முடியவில்லை. நட்பாக இருக்கும் போது தன்னிடம் மனக்கவலைக்கான ஆறுதலை தேடும் ரிஷியை இன்று மீண்டும் உணர்கிறாள்.

ஆழ்ந்த பெருமூச்சுவிட்டவள், அடுத்தநொடி ராகவனுக்கு அழைத்து விடயத்தைச் சொல்ல, அடுத்த பதினைந்து நிமிடங்களில் அங்கு வந்து சேர்ந்தவருக்கு ரிஷியைக் கண்டதும் மனம் தள்ளாடியது.

அவனின் திறமையில் அவரே பல தடவை அசந்துப் போயிருக்கிறார். ஆனால், இன்று அத்தனை பேருக்கு மத்தியில் குடித்து உளறுபவனை பார்க்க அவராலும் பொறுக்க முடியவில்லை.

அங்கிருந்து அவனை அவர் அழைத்துச் சென்ற அடுத்தநாளே வலைத்தளங்களில் ரிஷி போதையில் தள்ளாடும் காணொளிகளும் புகைப்படங்களும் வைரலாக, படுக்கையில் தரையை வெறித்தவாறு படுத்திருந்தவனை உக்கிரமாகப் பார்த்துக்கொண்டிருந்தார் ராகவன்.

தாடி மீசை வளர்ந்து அடர்ந்த தலைமுடி கலைந்துப்போய் பைத்தியக்காரன் போல் அமர்ந்திருந்த ரிஷியை மேலிருந்து கீழ் முறைத்துப் பார்த்தவர், “என்னடா இது கோலம், வாட் த ஹெல் ஆர் யூ திங்கிங் ஆஃப் யூவர் செல்ஃப்?” என்று கத்த, அவனிடமோ எந்த பதிலுமில்லை.

“இதுக்காதான் நான் உன்னை செலக்ட் பண்ணேனா, இதுக்காகதான் நீ சாதிக்கணும்னு நான் கஷ்டப்பட்டேனா? மொத்தத்தையும் நாசம் பண்ணிட்டியே ரிஷி!” என்ற ராகவனின் வார்த்தைகளிவ் ஆத்திரம் மிதக்க, விழிகளை மட்டும் உயர்த்தி அவரை வலி நிறைந்த ஒரு பார்வைப் பார்த்தான் அவன்.

அந்தப் பார்வை இதுவரை ரிஷியிடத்தில் அவர் கண்டிராதது. அதைப் பார்த்ததுமே ஆடிப் போனவராக, “காதல் ஒரு மனுஷன எந்தளவுக்கு மாத்தும்னு இன்னைக்குதான் பார்க்குறேன். உன்னை பத்தி எல்லாமே தெரியும்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன். ஆனா, தெரியாத விஷயங்களும் இருக்குன்னு இப்போ புரியுது.” என்றவர், அவன் பக்கத்தில் அமர்ந்து அவன் தலையை கோதிவிட, ரிஷிக்கு “அங்கிள்…” என்று அடுத்தகணம் சிறுகுழந்தைப்போல் அவர் மடியில் படுத்து அழுக ஆரம்பித்துவிட்டான்.

இங்கு ராகவனுக்கோ இறந்து போன தன் இரண்டாவது மனைவியின் மகனின் நினைவு. ஆரம்பத்தில் ரிஷியை தெரிவு செய்தமைக்கு காரணம் அவனின் திறமை மட்டுமல்ல, மகனை இழந்த தன் காயத்திற்கு அவன் மருந்தாக தெரிந்ததுதான்.

இப்போது அவனின் அழுகை அந்த ஆடவனை அவருக்கு நினைவுப்படுத்த, முட்டிக்கொண்டு வந்த கண்ணீரை அடக்கி, “என்னாச்சு ரிஷ்?” என்று கேட்டார் மென்மையாக.

அவனுக்கும் வேறு வழித் தோன்றவில்லை. தன் மொத்த கவலைகளையும் கொட்டும் நோக்கில் நடந்தது அனைத்தையும் சொன்னவன், “நான் கொஞ்சமும் எதிர்ப்பபார்க்கல, மயக்கத்திலிருந்து கண் விழிச்சதும்தான் எனக்கே தெரியும். அப்படியிருக்குறப்போ நான் எப்படி அதை தெரிஞ்சே பண்ணியிருப்பேன். வேகமா போனது என் தப்புதான். ஆனா, நான் இருந்த மனநிலை அப்படி. அதை ஏன் அங்கிள் அவ புரிஞ்சிக்கல. அவ முன்னாடி வர வேணாம்னு சொல்லிட்டா. நான் இல்லைன்னாதான் அவளுக்கு நிம்மதின்னு சொல்றா. அது எப்படி அவ இல்லாம நான் இருப்பேன்?” என்று தன்னவளை நினைத்து ஏங்கி ஏங்கி அழ, ராகவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

விதி ஒருவரின் வாழ்க்கையில் இப்படி கூட விளையாடுமா என்று இன்றுதான் பார்க்கிறார்.

ஆழ்ந்த பெருமூச்சுவிட்டு, “ரிஷ், அந்த பொண்ணுக்கான இழப்பு ரொம்ப பெருசு. அவ அவள பெத்தவங்கள இழக்க நீ காரணமாயிருக்க. உன் பக்கம் நியாயம் இருந்தா கூட அவளால அதை ஏத்துக்க முடியாது. காலம்தான் அதி சிறந்த மருந்து. இப்போ நீ அவ முன்னாடி போனேன்னா அவளோட கோபம்தான் அதிகரிக்கும். உன்னை மன்னிக்க அவளுக்கு தோனாது. கொஞ்சநாள் போகட்டும். அவ உன்னை காதலிக்கிறான்னு சொல்ற. தன்னோட துணை கொலையே செய்தாலும் காதலிருக்கும் போது விட்டுக்கொடுக்க தோனாது. கண்டிப்பா அவ உன்னை புரிஞ்சிப்பா. ஆனா, அதுக்கு நீ பொறுமையா இருக்கணும்.” என்று ராகவன் பேசி முடிக்க,

நீ பண்ண தப்புக்கு பிரயாச்சித்தம் பண்ணணும்னு நினைச்சா இனி என் முன்னாடி வராத!’ என்று சனா இறுதியாக சொன்ன வசனம்தான் ரிஷிக்கு ஞாபகத்திற்கு வந்தது.

அவர் மடியிலிருந்து எழுந்தமர்ந்து, விழிநீர் ஓட அவன் சுவற்றை வெறிக்க, அவனை கூர்ந்துப் பார்த்தவாறு எழுந்து நின்றவர், “உனக்கு இப்போ இருக்குற காயத்துக்கு இசைய விட்டா வேற மருந்து கிடையாது ரிஷ். உனக்கு பிடிச்ச விஷயத்துல உன்னை மூழ்கடிச்சிக்க! நேரம் ரொம்ப கம்மியா இருக்கு. ஆனா, நிறைய வேலையிருக்கு. இப்போ உன்னோட சார்ரா சொல்றேன், பீ ரெடி டுமோர்ரோ  மார்னிங்!” என்றுவிட்டு வெளியேறினார்.

அவனுக்கும் ஏனோ ராகவன் சொல்வது சரியாகத்தான் தோன்றியது. நாட்கள் செல்லச் செல்ல தானாக காயங்கள் மறையும் கூடவே அவனவளே அவனின் பிரிவில்தான் நிம்மதி இருக்கு என்கையில் அவனாலும் எப்படி அந்தப் பிரிவை கொடுக்காமலிருக்க முடியும்?

பெருமூச்சுவிட்டு வெளிவரத் துடித்த கண்ணீரை அடக்கி வீட்டினுள்ளே செய்யப்பட்டிருந்த தன் சிறிய இசையறையினுள் வேகவேகமாக ரிஷி நுழைய, இத்தனைநேரம் ரிஷி பேசியதையெல்லாம் ராகவனின் அலைப்பேசி வழியாக கேட்டுக்கொண்டிருந்த மேக்னாவிற்கு விழிகளிலிருந்து விழிநீர் உருண்டோடியது.

மொத்தத் தவறுகளும் அவளால்தான் என்று அவள் தலையில் இடியிறங்க, அதைத் தாங்க முடியாமல் அப்படியே மண்டியிட்டு அமர்ந்தவள், கதறியழத் துவங்கினாள். ஆனால், அதுவும் சில கணங்கள்தான்.

விழிநீரை அழுந்தத் துடைத்தெறிந்தவள், அடுத்தகணம் சந்திக்கச் சென்றது என்னவோ மனோகரைதான்.

அவருடன் என்ன பேச்சு வார்த்தை நடந்ததோ, இவ்வாறு நாட்கள் ஓடி ஆறு மாதங்கள் கழிந்துவிட்டிருந்தது.

காலம் பல மனக்காயங்களை மறக்கச் செய்யும். இந்த இடைவெளி இருவருக்குள்ளும் உண்டாக்கிய மாற்றங்கள் பல என்றுதான் சொல்ல வேண்டும்.

நாட்கள் நகர்ந்து அன்று,

அத்தனை பெரிய அரங்கம் பல விளக்குகளாலும் நவீன அலங்காரங்களாலும் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்க, பல முண்ணனி நடிகர் நடிகைகள் தங்களுக்கான இருக்கைகளில் ஒய்யாரமாக வீற்றிருந்தனர்.

அது இயக்குனரும் தயாரிப்பாளருமான பிரபாகரனின் திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா.

அந்தத் திரைப்படத்தில் நடித்திருக்கும் அத்தனை நட்சத்திரங்களும் அங்கு கூடியிருக்க, மேடையில் ரிஷி கையில் கிட்டாருடன் நின்றிருந்தான் என்றால், பக்கத்தில் மேக்னா பாடுவதற்கு தயாராக நின்றிருந்தாள்.

இசையும் ஆரம்பமாக, கிட்டார் கம்பிகளை விரல்களால் அசைத்து இசையை உருவாக்கி திரைப்படத்திற்கென தான் தயாரித்த ஒரு பாடலை ரிஷி பாட, அவனோடு சேர்ந்து தன் காந்தக் குரலால் பாட ஆரம்பித்தாள் அவள். அத்தனை பொருத்தம் இருவரின் குரலுக்கும்.

பார்க்கும் ரசிகர்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் குரலில் மட்டுமல்ல, ஜோடியும் சரியாக பொருந்தியிருக்கிறதோ என்றுதான் தோன்றியது. அதற்கு காரணம் கூட கடந்த சில நாட்களாக திரைப்படத்திற்கான வேலை முடிந்தும் ரிஷியொடு மேக்னா அடுத்தடுத்த பாடல்களை தயாரிப்பதும் அவனோடே இருப்பதுமான புகைப்படங்கள் வெளியாகியதுதான்.

பாடி முடித்து பக்கவாட்டாகத் திரும்பி மேக்னாவை பார்த்தவன், “தேங்க்ஸ்…” என்றுவிட்டு மெல்லிய புன்னகை புரிய, அவனிடத்தில் கிடைத்த இந்த மாற்றமே மேக்னாவுக்கு போதுமானதாகத் தோன்றியது. ‘கூடிய சீக்கிரம் எல்லாமே சரியாக போகுது’ மனதில் நினைத்துக்கொண்டு காதலாக ரிஷியைப் பார்த்து புன்னகைத்தாள்.

அன்றே, விழா முடிந்து அத்தனை நட்சத்திரங்களுக்கும் கேளிக்கை விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, கூடவே மீடியாக்காரர்களும் சில நட்சத்திரங்களிடம் பேட்டி எடுத்துக்கொண்டிருந்தனர்.

விழாவிலிருந்து வெளியேற தயாரான ரிஷி, பத்திரிகைகாரர்கள் தன்னை பேட்டி எடுக்க தயாராக இருப்பதைப் பார்த்து சிரிப்போடு மனதில் சற்று ஜாக்கிரதையாகவே அவர்கள் முன் சென்று நிற்க, தம் கேள்விக்கணைகளை தொடுக்க ஆரம்பித்துவிட்டனர் அந்த மீடியாக்காரர்கள்.

“திஸ் இஸ் தினேஷ் ஃப்ரொம் வர்ல்ட் டெலிவிஷன். சார், கூடிய சீக்கிரம் உங்க கான்செர்ட் நடக்கப்போறதா எங்களுக்கு தகவல் கிடைச்சது. அது உண்மைதானா? அப்படியே உண்மைன்னாலும் எப்போ எங்க நடக்கப் போகுதுன்னு தெரிஞ்சிக்கலாமா?” என்று ஒருவன் கேட்க, அமைதியாக அவனைப் பார்த்து, “யாஹ், இட்ஸ் ட்ரூ. த்ரீ டேய்ஸ்ல அதை பத்தின அன்னௌன்ஸ்மென்ட் எங்க கம்பனி கொடுப்பாங்க.” என்றான் சிரிப்போடு.

“திஸ் இஸ் ஸ்ரேயா, ஃப்ரொம் நியூஸ் வர்ல்ட். ஆரம்பத்துல நடந்த உங்க கான்செர்ட்ல நீங்க ஒரு வெப் சீரீஸ் நடிக்க போறதா சொல்லியிருந்தீங்க. பட், அதுக்கப்றம் அதை பத்தி எந்த அப்டேட்ஸ்ஸும் இல்லை. இன்னும் நடிச்சிக்கிட்டுதான் இருக்கீங்களா, இல்லை… அதுலயிருந்து விலகிட்டீங்களா? ஒருவேள விலகியிருந்தா அதுக்கான காரணம் என்ன சார்?” என்று தன் கற்பனை கலந்த கேள்வியை ஒரு பெண் முன் வைக்க, வாய்விட்டுச் சிரித்துவிட்டான் ரிஷி.

“வை ஷூட் ஐ? இந்த வெப் சீரீஸ் எங்க கம்பனியோடது. ராகவன் சாரோட ப்ரொடக்ஷன்ல நடக்குது. பிரபா சாரோட படத்துக்கான வேலையால அதை நிறுத்தி வைச்சிருந்தேன். ஷூட்டிங் எல்லாம் முடிஞ்சது. என்ட் ஆல்சோ, அதை பத்தின அப்டேட்ஸ் என்னோட கான்செர்ட்ல கொடுக்கலாம்னு ஐடியா பண்ணியிருந்தோம். தட்ஸ் இட்.” என்றவன் அங்கிருந்து நகர போக, “சார் சார்…” என்றொரு ஆடவனின் குரல்.

விருப்பமில்லாது மீண்டும் வரவழைக்கப்பட்ட போலியான சிரிப்போடு,  “யெஸ்…” என்று அனுமதி வழங்கி அவர்கள் முன் ரிஷி நிற்க, “திஸ் இஸ் ஷங்கர், ஃப்ரொம் நியூஸ் வர்ல்ட். நீங்க கோல்டன் வாய்ஸ் அவார்ட் வாங்கின ஃபங்ஷன் உங்களுக்கு ஞாபகமிருக்கா?” என்று அந்த ஆடவன் கேட்ட மறுநொடி ரிஷிக்கு சனாவின் முகம்தான் மனக்கண்முன் வந்தது.

அந்த விழா நடந்த அன்றுதானே அவன் தன்னவளை முதன் முதலில் பார்த்தது. நினைவுகளின் தாக்கத்தில் எச்சிலை விழுங்கி உணர்வுகளை அடக்கியவன், “ம்ம்…” என்று மட்டும் சொல்லி இறுகிய முகமாக நிற்க, “அந்த விழாவுல உங்களுக்கும் மிஸ்.மேக்னாவுக்கும் சின்ன பிரச்சினை ஆகிச்சு. இப்போ கடந்த சில நாட்களா நீங்க இரண்டு பேரும் ஒன்னா இருக்குற ஃபோட்டோஸ் வைரலாகிட்டு இருக்கு. உங்க இரண்டு பேருக்கும் இடையிலயிருந்த பிரச்சினை சரியாகிடுச்சா என்ட் நீங்க இரண்டு பேரும் ஃப்ரென்ட்ஸ் மட்டும்தானா இல்லைன்னா காதலிக்கிறீங்களா?” என்று கேட்டு பதிலுக்காகக் காத்திருந்தான்.

ரிஷியிடம் சில கணங்கள் அமைதி. பின் ஆழ்ந்த மூச்செடுத்து சிரிப்போடு, “நானும் மேகாவும் சின்னவயசுலயிருந்து ஒன்னா இருக்கும். சின்ன விரிசல். சில வருடங்களா இரண்டு பேரும் பேசிக்கல. அதனாலதான் அன்னைக்கு ஃபங்ஷன்ல பார்த்ததும் கோபப்பட்டேன். இப்போ எவ்ரிதிங் இஸ் ஓகே.” என்றுவிட்டு அதற்குமேல் நின்றால் ஏற்படும் விபரீதத்தை உணர்ந்து விறுவிறுவென தன் கார் நிற்கும் இடத்திற்குச் செல்ல, “ரிஷ்…” என்ற மேக்னாவின் அழைப்பு.

இத்தனைநேரம் அவன் பத்திரிகைகாரர்களுக்கு சொல்லும் பதில்களை அவளும் பார்த்துக்கொண்டுதான் இருந்தாள்.

“நிஜமாவே உனக்கு என்மேல இருந்த கோபம் போயிருச்சா ரிஷ், என்னை மன்னிச்சிட்டியா?” கலங்கிய விழிகளோடு அவள் கேட்க, அவளை சிறிதுநேரம் மெல்லிய புன்னகையோடு வெறித்தவன், “மனசார உணர்ந்து மன்னிப்பு கேட்டு  அவங்க மன்னிச்சிட்டேன்னு சொல்ற ஒரு வார்த்தைக்காக காத்திருக்குறதொட வலிய இப்போ நான் அனுபவிச்சிட்டு இருக்கேன். அந்த வலிய நீ அனுபவிக்க கூடாதுன்னு தோனிச்சு.” என்றுவிட்டு காரிலேறி சென்றுவிட, மேக்னாவுக்கோ வேறெதுவும் யோசிக்கத் தோன்றவில்லை.

அதேநேரம் சென்னை ரயில்நிலையத்தில் நீண்டதூரம் பயணம் செய்த களைப்பில் அமர்ந்திருந்த சனா, அங்கு பெரிய தூணில் பொருத்தப்பட்டிருந்த தொலைக்காட்சி வழியே ரிஷியின் மேடை நிகழ்ச்சியைதான் பார்த்துக்கொண்டிருந்தாள்.

ஒருமாதமாக ஒரு புகைப்பட போட்டிக்காக சிறந்த புகைப்படமெடுக்க அலைந்து திரிந்தவள், இன்றுதான் சென்னைக்கே வந்திருந்தாள். வந்து அங்கிருந்த இருக்கையில் அமர்ந்ததும்தான் தாமதம் அவளவனின் பாடல் குரல்.

முயன்று தன்னைக் கட்டுப்படுத்தி பார்க்காது இருந்தவளுக்கு ஒருகட்டத்தில் முடியாமல் போக, பார்வை தானாக அவன் முகத்தில் படிந்தது. நிகழ்ச்சி முடிந்து அடுத்து அவன் பத்திரிகையாளர்களுக்கு பதில் சொன்னது காட்டப்பட, அதில் அவனின் மேக்னா பற்றிய பதிலில் சனாவுக்கோ இனம் புரியாத கோபம்.

‘ஓஹோ! இப்போ இரண்டு பேரும் ஃப்ரென்ட்ஸ்ஸா? ஃப்ரென்ட்ஸ் மட்டும்தானா இல்லை… வேறெதுவுமா? இருக்கட்டும் இருக்கட்டும். அப்படியே அவள காதலிச்சு கல்யாணம் பண்ணாலும் நமக்கென்ன?’ உள்ளுக்குள் தன்னை மீறி அவன்புறம் சாயும் மனதை அடக்க முடியாது ஏதேதோ பிதற்றி தன்னை சமாதானம் செய்ய அவள் முயற்சிக்க, இருந்தும் மனம் அவனையேதான் ஞாபகப்படுத்தியது.

அவனுடைய முகம், சிரிப்பு, பிடிவாதம், குரல், அவனுடைய ஒற்றை கண் சிமிட்டல்கள், முத்தம் என ஒவ்வொன்றாக நினைவு வந்து அவளை இம்சைப்படுத்தியது. இது இன்று மட்டுமல்ல. இருவரும் பிரிந்த நொடியிலிருந்து சனாவுக்கு அவனின் நினைவுகள்தான்.

எத்தனைமுறை தன் தாயின் புகைப்படத்தைப் பார்த்து நடந்ததை ஞாபகப்படுத்தி அவனை மறக்க முயற்சித்தாலும் இறுதியாக அவளிடம் அவன் அழுத அழுகை அவளின் ஞாபகத்திற்கு வர, தன்னவனை அழ வைத்ததை நினைத்து தானும் அழுதுவிடுவாள் சனா.

காதல்கொண்ட மனம் கோபத்தை பிடித்து வைக்க விடவில்லை. அவன் தவறு செய்ததாக சொல்லி மூளை எச்சரித்தாலும் அது எதிர்ப்பாக்காமல் தெரியாமல் நடந்த தவறென்று மனம் அவனை நியாயப்படுத்தி அவனை தேடத் தூண்ட, அரும்பாடு பட்டுத்தான் போனாள்.

அதுவும் மேக்னாவுடனான அவனின் புகைப்படங்களை வலைத்தளங்களில் அவளும் பார்க்கத்தானே செய்கிறாள்! இப்போது மீடியாக்காரர்கள் முன் ரிஷி இவ்வாறு சொன்னதும் ஏதோ ஒரு வலி.

விழியிலிருந்து விழிநீர் ஓட, ஆழ்ந்த மூச்செடுத்து அழுகையை அடக்கியவள், திரையில் தெரிந்த ரிஷியை நேரிலிருப்பதாக நினைத்து முறைத்துவிட்டு விறுவிறுவென அங்கிருந்து நகர, இங்கு காரில் சென்றுக்கொண்டிருந்தவன், தன்னவள் தன்னை நினைப்பதை உணர்ந்தவன் போல், “சாரி ஃபோர் எவ்ரிதிங் ஸ்வீட்ஹார்ட்” என்றான் வலியோடு.

அடுத்தநாள் காலை, எழுந்ததுமே மனோகருக்கு அழைத்த மேக்னா, “இப்போ சரியான நேரம் வந்தாச்சுப்பா, கான்செர்ட் முடிஞ்சதுமே பேசுங்க.” என்று சந்தோஷத்தோடுச் சொல்ல, “உன் விருப்பம் மேகாம்மா, ரிஷி எப்போவும் என் பேச்ச தட்ட மாட்டான்.” என்றார் அவர் உறுதியாக.

இருவரின் நினைவுகளும் ஆறு மாதங்களுக்கு முன் நடந்த சம்பவத்தை மீட்டின.

error: Content is protected !!