நீயில்லை நிஜமில்லை 20

images (4)

நீயில்லை நிஜமில்லை 20

நீயில்லை நிஜமில்லை 20

 

எரியும் தீ பிழப்பிற்குள்

தேன் துளி நாடி வலை வீசுகிறாய்,

நான் நீயில்லை! நிஜமுமில்லை!

 

மறுநாள் காலை இளஞ்சூரிய ஒளியும் பறவைகளின் பலவித கானங்களும் தான் அஞ்சலியை‌ எழச் செய்தன.

 

மழை ஓய்ந்து இதமான ஒளி பரவிய அழகான காலைப்பொழுது, எங்கும் பச்சை பசேல் தோற்றம், ஏதோ புது உலகம் புகுந்தது போல் தான் தோன்றியது அவளுக்கு. புதிய காலை அவளுள் புத்துணர்வையும் உற்சாகத்தையும் சேர்ப்பதாய்.

 

சுற்றிலும் பெயர் தெரியாத உயர்ந்த மரங்கள், பனிப் போர்வைகள், வண்ண வண்ண பூக்கள், மேக ஊர்திகள்… சில நாட்களாக அவளுக்குள் வடிந்திருந்த உற்சாகத்தை இயற்கையின் சூழல் மீட்டெடுக்க வைப்பதாய்.

 

வியந்த முக மலர்ச்சியோடு அந்த சிறு மாளிகையை விட்டு வெளியேறி பனி பூத்திருந்த புல்வெளியில் இறங்கி நடந்தாள். முன் புறம் நடைப்பாதை போல கொஞ்சம் இடம் நீண்டு தெரிந்தது. அதிலும் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த அழகு செடிகள் வெவ்வேறு வண்ணங்களில் இலைகளை கொண்டு பூக்களின்றியே வண்ணங்கள் காட்டின.

 

அங்கிருந்து தூர தூரமாக சில வீடுகள் தெரிந்தன. மனித நடமாட்டம் என்பது வெகு குறைவாக இருந்தது. இதுவரை எந்த மனித தலையும் அவள் பார்வையில் படவில்லை.

 

காலை எட்டு மணி ஆனால் ஆறு மணி போல பனி போர்வையிட்டு இருந்தது. வெப்ப உடையின் மேல், போர்வை போர்த்தி இருந்தும் அவளுக்குள் குளிரெடுக்க தான் செய்தது. குளிரில் உடலை ஒடுக்கி, இருகைகளை தேய்த்தபடி மரங்களை தாண்டி நடந்தாள். 

 

உயர மேகங்கள் அவள் கைக்கெட்டும் தொலைவிலேயே மிதப்பதாய். கீழே அதிகம் சரிவுகளே தெரிந்தன. இது உயரமான இடம் போல என்று எண்ணிக் கொண்டு ஒரு மரத்தில் சாய்ந்தபடி அங்கேயே நின்று கொண்டாள். பார்க்க பார்க்க சலிக்கவில்லை இயற்கை தோழியின் அற்புத ஜாலங்கள்.

 

எல்லா கவலைகளையும் துறந்து இந்த இயற்கையோடே வாழ்ந்து அழிந்துவிட வேண்டும் போல் பேராசை மிகுவதாய்.

 

“இங்க ஏன் நிக்கிறீங்க பாப்பா, சாப்பிட்டு போட்டு எல்லா இடமும் சுத்தி பார்ப்பீங்க வாங்க” என்று தங்கம்மா அவளை அழைக்க, இதமான மென்னகையோடு அவருடன் வந்தாள்.

 

கட்டிடத்தின் வெளிப்புறம், தன் காரை சரிபார்த்து கொண்டிருந்த அரவிந்தை கவனித்து, “காருக்கு என்னாச்சு அரவிந்தா?” அஞ்சலி கேட்டு நிற்க,

 

“ரோட்ல காரை ஓட்டனும், காடு, மேடெல்லாம் ஓட்டுனா என்ன‌ ஆகும்? என்னோட பேவரெட் கார் உனக்காக எடுத்து வந்து இப்போ டேமேஜ் ஆகி நிக்கிது” அவன் நொந்து கொண்டான்.

 

“கார்னா ஓட்டனும் டா, கேரேஜ்லயே வச்சு பூஜை போட்டா இப்படி தான் ஆகும், பைக்ல சுத்தறவன் தான நீ, எதுக்கு டா ஒன்னுக்கு நாலு காரை வாங்கி கேரேஜ்ல பூட்டி வச்சிருக்க?”

 

அரவிந்த் நிமிர்ந்து அவளை முறைத்து வைக்கவும், “இதுக்கொன்னும் குறைச்சல் இல்ல. எவ்ளோ சொன்னாலும் உனக்கு இந்த பைத்தியம் போகாதில்ல, காராவது நாலோட போச்சு, எத்தனை பைக் உன் கேரேஜ்ல தூங்குதுன்னு நான் எண்ணி கூட பார்க்கல”

 

“ஓய் போதும், நீங்க டிரஸ், ஜுவல்லரி, மேக்கப் ஐட்டம்ஸ்னு சேர்த்து வச்சுக்கல அதுபோல தான் இதுவும்… போ போ” அவன் சொல்ல, இவள் தோள் குலுக்கிவிட்டு உள்ளே சென்றாள்.

 

ஏலக்காய் மணத்தோடு இதமான தேநீரை ருசித்து பருக, அவள் உடலும் மனமும் லேசாவதைப் போன்ற உணர்வு.

 

அபஸ்வரமாய், அந்த கிளி ஜோசியர் சொன்னவை இவள் நினைவில் வந்து மோத,‌ தலையைக் குலுக்கிக் கொண்டு எழுந்து சென்று குளித்து தயாரானாள்.

 

வித்தியாசமான சுவையான காலை உணவை இருவருமே விரும்பி உண்டனர். “மருது தாத்தா, இந்த இடத்த சுத்தி காட்டுறீங்களா?” என்று அஞ்சலி கேட்க,

 

“உத்தரவு போடு பாப்பா செய்யுறேன்” என்றார் அவர்.

 

மலர்ந்து சிரித்தவள், “அரவிந்தா நீயும் கூட வரயா?” என்று வினவ,

 

அவனோ, “எனக்கு டயர்டா இருக்கு. நான் தூங்க போறேன். நீ எங்கேயாவது சுத்திக்கோ போ” விட்டெற்றியாக சொல்லி விட்டு அவன் தூங்க போய்விட, அஞ்சலி கிளுக்கி சிரித்து விட்டாள். 

 

“இந்த தூங்கு மூஞ்சிய எனக்கு காவலுக்கு அனுபுன எங்க வீட்டு ஆளுங்கள நான் என்ன சொல்ல?” அவனுக்கு கேட்கும்படி சத்தமாக சொல்லிவிட்டு, மருதாண்டி பெரியவருடன் வெளியே சென்றாள். தன் கையடக்க கேமராவுடன்.

 

எங்கும் பச்சை பசேல் தோற்றம்… நெடிதுயர்ந்த மரங்கள் காட்சி… வெண்மேக திரள்கள் ஊர்வலம்…

மேடு, பள்ளம், பாறை, குன்று என ஒழுங்கற்ற பாதைகள்…

பார்க்க பார்க்க திகட்டவில்லை அஞ்சலிக்கு.

 

இத்தனைக்கும் அவர்கள் அதிக தூரம் கூட வந்திருக்கவில்லை. மனித ஆதிக்கம் சேராத இயற்கையின் ஆதிக்கம் மட்டுமே சூழ்ந்திருந்த அவ்விடத்தில் இவளும் புதிதாய் பிறந்த குழந்தையாகிப் போனாள்.

 

பார்க்கும் ஒவ்வொன்றையும் தன் கேமரா கண்களில் சிறைப் பிடித்தும் கொண்டாள். 

 

மழையினால் பாதை தான் சேறும் சகதியுமாக இருந்தது. ஆனாலும் அவள் ரசனையை எதுவும் குறைக்கவில்லை.

 

இருவரும் நடந்தபடி மலை முகட்டிற்கு வந்திருந்தனர். கீழே பார்க்கையில் மேகங்கள் சுற்றிக் கொண்டிருந்தன. தான் மேகத்திற்கு மேல் இருப்பதை போல் உணர இவளுக்குள் பரவசம் கூடியது. அப்படியே அந்த மேகத்தின் மேல் குதித்து அதில் மெத்தென்று புரள வேண்டும் போன்ற சிறுபிள்ளைத்தனமான ஆசைகள் தோன்றின.

 

“அந்த பக்கம் போகாத பாப்பா வழிக்கிடும், வாங்க திரும்பி போகலாம்” மருதாண்டி திரும்ப,

 

“அதுக்குள்ளயா? நாம வந்து இன்னும் ஒன் ஹவர் கூட ஆகல தாத்தா” அஞ்சலி சிணுங்கினாள்.

 

“உங்களை ரொம்ப தூரம் அழைச்சிட்டு போக கூடாதுன்னு அரவிந்தன் தம்பி சொல்லி இருக்கு பாப்பா”

 

“அவன் சொல்லி கேக்கனும்னு ஒன்னும் அவசியம் இல்ல” அவள் முறுக்கினாள். 

இன்னும் நிறைய நிறைய சுற்றி பார்க்க வேண்டும் போல் இருந்தது அவளுக்கு. அறையில் சென்று முடங்கிக் கொள்ள சிறிதும் மனமில்லை.

 

“உங்க நல்லதுக்கு தான பாப்பா தம்பி எல்லாத்தையும் பார்த்து பார்த்து செய்யுது, இந்த ஒரு வாரத்துல எத்தனை முறை போன் பண்ணி இங்க பாதுகாப்பு எல்லாம் எப்படின்னு உறுதிபடுத்திக்கிட்டு தான் வந்திருக்கு தெரியுமா? ஐயாவும் அம்மாவும் கூட அரவிந்த் தம்பிய நம்பி தான உங்களுக்கு துணையா அனுப்பி இருக்காங்க” என்றார்.

 

“நீங்க வேற தாத்தா, அவ்வளவு அக்கறை இருக்குறவன் என்கூட வந்திருக்கலாம் இல்ல. சரியான தூங்கு மூஞ்சி” அவள் சிடுசிடுத்தபடி மாளிகை வந்து சேர்ந்தாள்.

 

அரவிந்த் இப்போதும் காரை பழுது நீக்கும் வேலை தான் செய்து கொண்டிருந்தான். “இன்னுமா கார் சரியாகல, தூங்க போறதா தான சொன்ன?”

 

“அதெல்லாம் தூங்கி எழுந்தாச்சு”

 

“நான் ஏதாவது ஹெல்ப் பண்ணவா?”

 

“அவசியம் இல்ல, நீ போய் ரெஸ்ட் எடுத்துக்க” என்க, இவளும் நகர்ந்து கொண்டாள்.

 

இடம் புதிதாயினும் அறையின் தனிமை எப்போதும் போல சலித்தது. தன் கைப்பையில் இருந்த நோட்டு புத்தகத்தை எடுத்துக்கொண்டு அதில் அமர்ந்து விட்டாள்.

 

கைகள் பாட்டிற்கு அதில் கிறுக்கிக் கொண்டே சென்றது. தங்கம்மா வந்து சாப்பிட அழைக்கும் வரை.

 

அவர் சமைத்த உணவுகள் புதுமையாக இருந்தன. சுவையும் வித்தியாசமாக இருந்தது. பழங்கள் கூட மலைப்பகுதியில் பிரத்யேகமாக கிடைக்கப்பெறுபவை. வெகு சுவையாகவும் இருந்தது.

 

அஞ்சலி ஒவ்வொரு உணவையும் ருசி பார்த்து, அதன் பெயரைக் கேட்டு தெரிந்து, “ரொம்ப டேஸ்டா இருக்கு” என்று பாராட்டி உண்பதை அரவிந்த் அமைதியாகவே கவனித்தப்படி தன் தட்டை காலி செய்துக் கொண்டிருந்தான்.

 

அடுத்தடுத்த நாட்களும் இதமாகவே நகர்ந்தன.

 

****

 

‘ஒருமுறை… ஒரேமுறை… உன்னை தந்தால் என்ன பாவம்?

இருவரும் அறிமுகம் ஆனதில் வேறென்ன லாபம்?’

 

அங்கிருந்த டேப்பரிகார்டரில் பழைய பாடல்களை ஒலிக்க வைத்துக் கொண்டிந்தாள் அஞ்சலி. இந்த டேப்களை சிறுவயதில் பயன்படுத்திய நினைவு இவளுக்கு. இப்போது இவற்றை போட்டு கேட்பது சிலிர்ப்பான அனுபவமாக தோன்றியது.

 

“ஏய் இங்க பாரு அரவிந்த் டேப்ரிக்கார்டர்” என்று உற்சாகமாக அவனிடம் காட்டியவளை, அலுப்பாக பார்த்து வைத்தவன், “இந்த டப்பா டேப்ரிக்கார்டர் தவிர வேறெதுவும் இல்ல இங்க, டிவி கூட இல்லாம இவங்கெல்லாம் எப்படி தான் வாழுறாங்களோ? மொபைல்ல சுத்தமா சிக்னல் கிடைக்கல, டேட்டாவும் வரல, நல்லா இங்க வந்து மாட்டிக்கிட்டேன்” என்று நொந்தபடி புலம்பினான்.

 

“நானா உன்ன வர சொன்ன? நீ தான் பெரிய இவன் மாதிரி வந்த, இப்பவும் பெருசா ஒன்னும் இல்ல. வந்த வழியே நீ கிளம்பு… இந்த இடம், இங்கிருக்க எல்லாமே எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு” என்றாள்.

 

“நான் கால் பண்ணனும், வெளியே சிக்னல் கிடைக்கும்னு தாத்தா சொன்னாரு நான் போறேன், போடி” என்று இவன்‌ கிளம்பவும், “அரவிந்தா நானும் வரேன்” இவளும் துள்ளலோடு அவனோடு சென்றாள்.

 

அரவிந்த் மொபைலை கைகளில் தூக்கி பிடித்து கொண்டு, சிக்னலை பார்த்து கொண்டே வர, சற்றே வெப்பம் கூடி தெரிந்த அந்த சூழலை வெகுவாக ரசித்தபடி வந்தாள் அஞ்சலி.

 

“ஹேய் அங்க பாரு இந்த மரத்துல எவ்ளோ கொடி சுத்தி இருக்கு, சூப்பரில்ல” அஞ்சலி சொல்லியபடி அதை கேமாராவில் படம் பிடிக்க, அதனை நிமிர்ந்து பார்த்து ஆமென்பதைப் போல தலையசைத்து மீண்டும் மொபைலை நோண்டலானான்.

 

“எனக்கு இந்த கொடியில ஊஞ்சலாடனும் போல இருக்கு, கட்டி தாயேன் ப்ளீஸ்” அஞ்சலி கண்கள் சுருக்கி கெஞ்ச,

 

“இம்சை டீ நீ, சரி கட்டி தரேன், அதுவரைக்கும் மொபைல்ல சிக்னல் கிடைக்குதான்னு பார்த்து சொல்லு” என்று அந்த கொடிகளை இழுத்து பிடித்து ஊஞ்சல் போல கட்டி முடிக்கவும் அவனுக்கு வியர்த்து போனது.

 

“அரவிந்தா, இங்க சிக்னல் கிடைக்குது வா” அஞ்சலி தூரமாக இருந்து குரல் கொடுக்க, அங்கே சென்று கைப்பேசியை வாங்கி பார்க்க, அப்பாடா என்றிருந்தது.

 

“நான் பேசிட்டு வரேன், நீ பத்திரமா ஊஞ்சலாடு…” அவன் சொல்லி முடிக்கும் முன்னே அஞ்சலி துள்ளி ஓடி இருந்தாள். 

 

உயர்ந்த மரத்தின் தாழ்ந்த கிளையில், பச்சை இலைக் கொடிகளால் கட்டப்பட்ட ஊஞ்சலை பார்க்கும் போதே கொண்டாட்டம் கூடியது. முதலில் பார்த்து அமர்ந்து மெதுவாக ஆடியவள், பின் தைரியம் வந்து வேகமாக ஆடலானாள்.

 

நெடுமாறனுடனும் பிரபாகர் உடனும் பேசிவிட்டு திரும்பிய அரவிந்த், அஞ்சலியின் கொண்டாட்டத்தை புன்னகையோடு தன் கைப்பேசியில் பதிவிறக்கிக் கொண்டான்.

 

இந்த சூழ்நிலை இரண்டு நாட்களில் அஞ்சலியின் மனநிலையை முற்றிலுமாக மாற்றி இருப்பதை உணர்ந்து அவனுக்கும் சந்தோசம் தான்.

 

இவன் அழைத்தும் கூட மறுத்து, அஞ்சலி சலிக்க சலிக்க ஊஞ்சலாடிய படியே இருந்தாள்.

 

இவன் மனம் தன்னால் சனா பெயரை உச்சரித்தது. தனக்கும் சனாவுக்கும் காதல் இருக்கும் அளவிற்கு புரிதல் இல்லை போல‌ என்ற வெதும்பல் அவனிடம். அஞ்சலி பிரச்சனை தீரும் வரை தங்களுக்கிடையே இந்த பிரிவும் அவசியம் என்று தன்னையே சமாதானப்படுத்திக் கொண்டான்.

 

“சித்து நியூ மாடல் சைக்கிள் ரெடி ஆகிடுச்சுன்னு அப்பா சொன்னாரு. எப்போ லான்ச் செய்ய போறதா ஐடியா?” அஞ்சலி திரும்பி வரும்போது கேட்க,

 

“யா லாஸ்ட் ப்ரோஸஸ் போயிட்டு இருக்கு. நெக்ஸ்ட் மன்ந்த் மார்கெட்க்கு வந்திடு…” என்று ஏதோ நினைவில் சொன்னவன், சட்டென நிறுத்தி அவளை பார்த்தான்.

 

“என்ன லுக்கு? நீ எங்க அம்மாவ ஏமாத்தலாம்‌ என்னை ஏமாத்த முடியாது… அன்னிக்கு மீட்டிங் முடிஞ்ச மறுவாரமே சித்து கம்பேனியோட மத்த பார்ட்னர்ஸ் ஷேர்ஷ் எல்லாம் நீ வாங்கிட்டதும் தெரியும்… பட் இதையெல்லாம் ஏன் நீ மறைவா செய்யறேன்னு தான் புரியல… அதை கேக்கனும்னு நினைச்சேன் அதுக்குள்ள நீ‌ என்னைவிட்டு ரொம்ப தூரம் விலகி போயிட்ட” அவள் தோய்வாக சொல்ல, இவன் பார்வையில் கூர்மை கூடியது.

 

“ஷேர்ஷ் கைமாத்தின விசயத்தை பிரபா மாம்ஸ் கிட்ட கூட நான் இன்னும் தெரியபடுத்துல, உனக்கு எப்படி லீக் ஆச்சு?”

 

“அந்த பார்னர்ஸ்ல தேவா அங்கிளோட டாட்டர் மேகலா என்னோட ஃப்ரண்ட்னு நீ மறந்துட்ட…” என்றவள், “ஏன்டா இப்படி செய்ற?” என்று அவன் செயல் விளங்காது கேட்டாள்.

 

சற்று யோசித்தவன், “அங்கிளும் ஆன்ட்டியும் வெற்றிப்பா பத்தி எதையோ என்கிட்ட மறைக்கிறாங்க ஜெல்லி… நான் வந்ததுக்கு அப்புறம் காதம்பரி ஆன்ட்டி பிஹேவியர் சேன்ஞ் ஆனதை நீயும் கவனிச்ச தானே?” அரவிந்த் சொல்ல,

 

“அம்மா, அப்பாவ சந்தேகப்படுறியா டா?” இவளுக்கும் கலக்கமானது.

 

“எந்த ரீசனும் இல்லாம திடீர்னு எப்படி வெற்றிப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்திருக்கும்? அன்னிக்கு ஈவ்னிங் கூட எங்கிட்ட சந்தோசமா பேசினாரு, எனக்கு சர்ப்ரைஸ் இருக்கிறதா சொன்னாரு. நைட் டின்னர் பிரபா கூட அரண்மனையிலனு சொன்னாரு. மறுநாள் அவர் இல்லன்ற தகவல் வருது… இப்ப நீயே சொல்லு அஞ்சலி” அவன் நிறுத்தினான்.

 

அஞ்சலி யோசித்து பார்த்தாள். அன்று தோழியின் திருமணத்திற்காக சென்று விட்டிருந்தாள். காலையில் வெற்றிமாறன் தவறிய தகவல் கிடைத்து தான் பதறி வந்திருந்தாள்.

 

அவள் தயங்கி நிற்க, இவன் பெருமூச்சுடன் தலையசைத்து விட்டு நடந்தான்.

 

****

 

“நலமா காதம்பரி தேவியார் அவர்களே…” 

 

தொலைபேசியின் மறுமுனையில் வந்த இந்த வித்தியாசமான விசாரிப்பு. அந்த கரகரத்த ஆண் குரல், இவரை யோசிக்க வைத்தது.

 

“நீங்க யார் பேசறது?” என்றவர் பிராபகருக்கும் கேட்கும்படி ஸ்பீக்கரில் வைத்தார்.

 

“ஓ நான் யாருன்னு உங்களுக்கு தெரியாதில்ல, ஆனா என்னை பத்தி ஓரளவு தெரிஞ்சு இருக்கும்” அந்த குரல் சொல்ல,

 

“புதிர் போடாம நேரா பேசு” காதம்பரி கேட்டார்.

 

“நானே புதிர் தான்… நீங்க ரொம்ப புத்திசாலின்னு நினச்சு உங்க பொண்ணை எங்க மறைச்சு வச்சிருக்கீங்களோ, அங்கேயே தான் நானும் இருக்கேன்…”

 

இருவரின் முகத்திலும் அதிர்ச்சி பரவியது.

 

“மனுச கண்களால தான் காத்தை பார்க்க முடியாது, ஆனா, காத்தோட பார்வையில இருந்து எந்த மனிசனும் மறைய முடியாது… நானும் அந்த காற்றைப் போல…” அந்த குரல் கர்ஜிக்க, பெற்றவர்களின் குலை நடுங்கியது.

 

“அச்சோ அஞ்சு…” பிரபாகர் பதற, அவரை பார்வையால் அடக்கியவர்,

 

“சும்மா ஏதாவது உளறாத, அஞ்சலி அரண்மனையில எங்க கூட தான் இருக்கா, எங்களை மீறி உன்னால என் மகளை நெருங்க முடியாது” காதம்பரி தைரியத்தைத் திரட்டி அழுத்தமாக சொன்னார்.

 

மறுமுனையில் சற்று நிசப்தம்.

 

“உங்க அரண்மனையில மரண ஓலம் கேட்கற நாள் தூரமில்ல…” என்றதோடு மறுமுனை பேச்சை நிறுத்திக் கொண்டது.

 

பிரபாகர் வியர்த்து அமர்ந்து விட்டார். காதம்பரியின் தாய் மனமும் கலங்கி துடிக்கத் தான் செய்தது.

 

சில நிமிடங்களில் தங்களை தேற்றிக் கொண்டு, காவல் நிலையம் நோக்கி விரைந்தனர்.

 

“அவனுக்கு அஞ்சலி இங்க இல்லன்னு டவுட் வந்திருக்கு, அதால தான் இப்படி கால் பண்ணி மிரட்டி, போட்டு வாங்க பார்த்திருக்கான்… உங்க பதில் அவனை கண்டிப்பா குழப்பி இருக்கும் மேடம், நீங்க கொஞ்சம் பதறி உளறி இருந்தா கூட அவன் உஷாராகி இருப்பான்” என்றார் நெடுமாறன்.

 

“அதெப்படி, அஞ்சலி இங்கில்லாதது அவனுக்கு தெரிய வந்து இருக்கும்? நம்மல தவிர அஞ்சலி போனது இங்க யாருக்கும் தெரியாதே!” பிரபாகர் சந்தேகமாக கேட்க,

 

“ஓட்ட ஒடசல் இல்லாத பிளான் எதுவுமே இல்ல சார், நாம எங்கேயாவது நமக்கே தெரியாம மிஸ் பண்ணி இருப்போம், அதை அவன் கேட்ச் பண்ணி இருப்பான்” நெடுமாறன் சாதாரணமாக விளக்க,

 

“என்ன இன்ஸ்பெக்டர் இவ்வளவு சாதாரணமா சொல்றீங்க, அஞ்சலிக்கு இதால ஏதாவது ஆபத்து வந்துச்சுனா?” காதம்பரி பதற,

 

“அஞ்சலி இருக்க இடம் அவனுக்கு தெரியாத வரைக்கும் ஆபத்து இல்ல.”

 

“நீங்க பேசறது எங்களை இன்னும் பயமுறுத்துது ப்ளீஸ் ஏதாவது செய்யிங்க” பிரபாகர் பதறவும்,

 

“கவலைபடாதீங்க, நான் அரவிந்த்க்கு இன்ஃபார்ம் பண்றேன்” என்றவர் அரவிந்த் எண்ணிற்கு முயல, மறுமுனைக்கு அழைப்பு செல்ல வில்லை. தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாக தகவல் வந்தது. இவரும்‌ மறுபடி மறுபடி முயற்சித்து தோற்று போனார்.

 

அவனுக்கு ஒரு அவசர குறுஞ்செய்தியை அனுப்பி விட்டு, காத்திருக்க அதற்கும்‌ பதில் வரவில்லை.

 

இப்போது அவருக்குள்ளும் சந்தேகம் வந்திருந்தது. பதற்றத்துடன் அமர்ந்திருந்த பெற்றவர்களை சமாதானம் செய்தவர், தானே தன் குழுவுடன் அவர்கள் பாதுகாப்பிற்கு செல்வதாக உறுதி அளித்தார்.

 

காதம்பரி, பிரபாகர் உடன் வருவதாக எத்தனை முறை சொல்லியும் ஏற்றுக் கொள்ளாமல், வழியை மட்டும் கேட்டு கொண்டு புறப்பட்டார்.

 

அடுத்த ஒரு மணிநேரத்தில்  காவலர் வாகனம் பயணத்தை தொடங்கியது.

 

****

நிஜம் தேடி நகரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!