நீயில்லை நிஜமில்லை 23(2)

IMG-20200630-WA0009

நீயில்லை நிஜமில்லை 23(2)

நீயில்லை நிஜமில்லை 23(2)

 

எந்த புள்ளியில்

பயந்து விலகி ஓடினாயோ,

சுற்றி திரிந்து

அதே புள்ளியில் 

நிற்க வைத்து 

குரூரமாக

வேடிக்கை பார்த்திடும்

வாழ்க்கை!

 

நிறுவனத்தில் சேகரிக்க வேண்டிய தகவல்களை சேகரித்து அழுத்தமான மனநிலையில் அரண்மனை திரும்பியவனுக்கு அஞ்சலியிடம் சில கேள்விகள் கேட்க வேண்டியது இருந்தது. 

 

உண்மையை நெருங்கி விட்டிருந்தான் அவன். அதனால் அவனின் உள்ளக்கொதிப்பும் பன்மடங்கு பெருகி இருந்தது. தன் ஆத்திரத்தையும் கோபத்தையும் முயன்று கட்டுப்படுத்திக்கொண்டு தான் வந்திருந்தான். இப்போது கோபப்பட்டால் காரியம் முழுதாக கெட்டுப் போகும் என்பதும் அவனுக்கு புரிந்து இருந்தது.

இன்னும் முக்கிய தகவல்களை அவன் அறிந்துக்கொள்ள வேண்டி இருந்தது.

 

அரவிந்த் நேரே அஞ்சலி அறையை நோக்கி செல்ல, காதம்பரி அவனை நிறுத்தினார்.

 

“அரவிந்த்… அஞ்சு இப்ப தான் தூங்கி இருக்காடா, எது பேசறதா இருந்தாலும் நாளைக்கு வந்து பேசிக்கோ” என்றார்.

 

அவன் நம்பாது கடிகாரத்தில் நேரம் பார்த்து நெற்றி சுருக்கினான்.

 

“நைட் எட்டு மணிக்கெல்லாம் அஞ்சலி தூங்க மாட்டாளே?” அவளை தெரிந்தவனாக இவன் வினவ,

 

“ஆமா பா, என்னவோ நேத்து வந்ததுல இருந்து ஒரு‌ மாதிரியாவே இருந்தா, இன்னைக்கு ஆறு மணிக்கெல்லாம் பசிக்குதுன்னு‌ கேட்டா, என்னை ஊட்டி விட வேற சொன்னா, சாப்பிட்டதும் தூக்கம் வருதுன்னு சொல்லிட்டு போய் படுத்துக்கிட்டா, இப்ப தான் நான் போய் பார்த்துட்டு வரேன், நல்லா அசந்து தூங்குறா… அவ இப்படி தூங்கி ரொம்ப நாளாச்சு…” என்றவர் பெருமூச்செறிந்தார். மகளின் கவலையில் அவரும் தளர்ந்து தெரிந்தார்.

 

அவர் சொன்னதை எல்லாம் கோர்த்து பார்த்த அரவிந்திற்கு ஏதோ நெருடியது. அவன் மறுபடி அவள் அறை நோக்கி நடந்தான்.

 

“டேய் அவளை டிஸ்டர்ப் பண்ண வேணா நீ வந்து சாப்பிடு முதல்ல” காதம்பரி பேச்சை காதில் வாங்காமல் அவள் அறைக்கு சென்று பார்த்தான்.

 

அஞ்சலி ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது தெரிந்தது. அவளருகே வந்தவன் அவள் நெற்றியில் கைவைத்து பார்க்க, உடலின் சூடு குறைந்து சில்லிட்டிருந்தது. அவளை எழுப்பியவன், “ஜெல்லி ஆர் யூ ஓகே?” என்று கேட்க, அவளிடம் எந்த அசைவும் இல்லை.

 

“அரவிந்த் என்ன செய்ற…” தூங்கும் மகளை தொந்தரவு செய்கிறானே என்று காதம்பரி குரலில் கண்டனம் ஒலித்தது.

அவர் கண்டனத்தை காதில் வாங்காமல், அவள் கன்னத்தை வேகமாக தட்டி எழுப்ப முயன்று கொண்டிருந்தான்.

 

அஞ்சலியிடம் சிறு அசைவு கூட இல்லாமல் போக, காதம்பரியும் பதறி போனார். “அஞ்சு மா என்னாச்சு டா உனக்கு? கண்ணை திறந்து பாரு அஞ்சு…” அவரும் பதறி எழுப்ப‌ முயல, அவளிடம் எந்த எதிர்வினையும் இருக்கவில்லை.

 

அரவிந்திற்கும் பதட்டம் கூடியது. மொடாவில் இருந்த தண்ணீரை எடுத்து அஞ்சலியின் முகத்தில் வீசி ஊற்றினான். அப்போதும் அவள் எழவில்லை. காதம்பரி கலங்கி விட்டார்.

 

அவளின் நாடியை பிடித்து துடிப்பை ஆராய்ந்து பார்த்தான். “ஆன்ட்டி உடனே டாக்டருக்கு போன் பண்ணுங்க” என்று உத்தரவிட்டவன், அந்த அறையை சுற்றி ஏதாவது தென்படுகிறதா என்று தேடினான்.

 

கட்டிலுக்கு அடியில் தென்பட்ட மாத்திரை அட்டையை எடுத்து பார்த்து, “ஆன்ட்டி, இதென்ன டேப்ளட்ஸ் உங்களுக்கு தெரியுமா?” என்று அவரிடம் கொடுக்க,

 

“இது சிலிப்பிங் டேப்ளட்ஸ்! மொத்த அட்டையும் காலியாகி இருக்கே…” என்றார். அவர்கள் உணர்ந்த விசயம் இருவர் மனதையும் கிடுகிடுக்க செய்தது.

 

அவன் முகம் கோபத்தில் கருத்து போக, “அஞ்சலி கேட்அப்… கெட்அப் அஞ்சலி…” அவள் தோளைப் பற்றி தூக்கி வேகமாக உலுக்கி அவளை சுயநினைவுக்கு கொண்டு வர முயன்றான்.

 

வேகமாக சமையற்கட்டுக்கு வந்த காதம்பரி உப்பு கரைசலை எடுத்து கொண்டு, மேலே வந்தார். அப்போதைய பதற்றத்தில் அவருக்கு வேறெதுவும் தோன்றவில்லை.

 

“அரவிந்த் இதை அவளை குடிக்க வை, உப்பு தண்ணி” என்று அவனிடம் தர, அவனுக்கும் அவளுக்கு சுயநினைவு வந்தால் போதும் என்றிருந்தது.

 

அஞ்சலியின் கன்னங்களை அழுத்தி பிடித்து வாயை திறந்து கரிக்கும் உப்பு கரைசலை சிறிது சிறிதாக புகட்டினான்.

 

சிறிது நேரத்திற்கு பிறகு தான் அவளிடம் அசைவு தெரிந்தது. முகம் கசங்க, வயிற்றைப் பிடித்து கொண்டு அனிச்சையாக எழுந்தவள், அப்படியே கவிழ்ந்து வாந்தி எடுக்க ஆரம்பித்தாள்.

 

சரியான நேரத்தில் மருத்துவரும்  வந்துவிட, அவளுக்கு சிகிச்சைகள் தொடங்கின. அடுத்த இரண்டு மணிநேர கண்காணிப்பிற்கு பிறகு, அஞ்சலிக்கு ஆபத்தில்லை என்றார் மருத்துவர். 

 

“அவங்க சிவியர் டிப்ரஷன்ல இருக்காங்க, அதான் சூசைட் அட்டம்ப்ட் பண்ற‌ அளவுக்கு போயிருக்காங்க, இப்ப   கேள்வி கேட்டு அதிகமா‌ டென்ஷன் பண்ணாதீங்க. கவனமா பார்த்துக்கோங்க” மருத்துவர் அறிவுருத்தி விட்டு சென்றார்.

 

தாமதமாக வீடு திரும்பி இருந்த பிரபாகர் மகளின் செயல் எண்ணி அதிர்ந்து அமர்ந்து விட்டிருந்தார். தன் மகள் இத்தனை கோழை செயல் செய்ய துணிவாளென்று நம்புவது அவருக்கு இப்போதும் கடினமாக இருந்தது. அவரை மீறியும் அவரின் கண்கள் கலங்கின.

 

திரிபுரசுந்தரி அவரின் அறைக்குள் முடங்கி கிடந்தார். காதம்பரி அவரின் உடல்நிலை கருதி அவரிடம் இதைப்பற்றி தெரிவிக்கவில்லை. வேலையாட்களுக்கும் பெரிதாக விசயம் கசியவில்லை. சின்ன அம்மாவிற்கு ஏதோ உடம்புக்கு முடியல என்பது மட்டுமே அவர்களுக்கு தெரிந்து இருந்தது.

 

இப்போதெல்லாம் அரண்மனையில் நடக்கும், கேள்விப்படும் விசயங்கள் அந்த வேலையாட்களுக்கும் புதிராக இருந்தன.

 

அரவிந்த் முகம் கருத்து இறுகி போய் அமர்ந்து இருந்தான். அர்ச்சனாவிடம் இருந்து குறுஞ்செய்திகள் வந்தபடியே இருந்தன. எதையும் படிக்கவில்லை. அவனின் மனநிலையில் தம் கைப்பேசியை உயிர் இழக்க செய்து தூர வைத்து விட்டான்.

 

அஞ்சலி விழிக்கும் வரை அங்கேயே இருந்தவன், இவனை அடிப்பட்ட பார்வை  பார்த்தவளிடம் கண்டன பார்வையை வீசிவிட்டு வெளியேறி விட்டான்.

 

****

 

அந்த பிரபல மருத்துவமனைக்கு காற்றென விரைந்து வந்திருந்தார் நெடுமாறன். மனைவியிடமிருந்து‌ கைப்பேசி அழைப்பு வந்திருக்க பதறி ஓடி வந்திருந்தார். அவசியமின்றி அவரின் மனைவி அழைப்பவளல்ல என்பதை நன்கு அறிவார்.

 

காக்கிச்சட்டை இன்றி இயல்பான சுடிதாரில் ஆய்வாளர் குறிஞ்சி ராணி கணவருக்காக காத்து நின்றிருந்தாள்.

சாதாரண பெண்களை விட சற்று கூடிய உயரம், கம்பீரமான நிமிர்ந்த தோற்றம் அவளுடையது. 

 

“என்னாச்சு குறிஞ்சி, அவசரமா ஹாஸ்பிடல் வான்னு சொன்னதும் பயந்து ஓடி வந்தேன்” வியர்த்து மூச்சிறைக்க தன் முன் நின்ற கணவனை காதல் பொங்க பார்த்து புன்னகை சிந்தினார் குறிஞ்சி ராணி.

 

“நான் பதறி வந்திருக்கேன் நீ‌ சிரிக்கிற?” அவர் முறைக்க,

 

“ஓய் காக்கிச்சட்டை, அடிப்பட்டு இருந்தா மட்டும் தான் ஹாஸ்பிடல் வருவாங்களா?” அவள் குறுக்கே கைகட்டி ஒற்றை புருவம் உயர்த்தி கேட்க,

 

“உனக்கு எதுவும் இல்லனா என்னை ஏன்டி சீக்கிரம் வர சொன்ன?” நெடுமாறனுக்கு கடுப்பு ஏறியது. அத்தனை பதறி போயிருந்தார் இங்கு வந்து சேரும் மட்டும்.

 

“ம்ம் என் போலீஸ்காருக்கு புருசன்ல இருந்து அப்பாவா பிரோமோஷன் கிடைக்க போகுதுன்னு சொல்ல தான்” குறிஞ்சி ராணி அதே தோரணையில் சொல்ல,

 

“என்ன விளையாறியா நீ, என்ன அப்ப்… அப்பாவா?” சற்று நேரம் பொறுத்து தான் அவருக்கு புரிந்தது. உச்சக்கட்ட சந்தோசத்தில் நெகிழ்ந்து போனார்.

 

“ஹே குறிஞ்சி நிஜமா?” அவர் பரவசமாக கேட்க, குறிஞ்சி ராணியும் அதே பரவசத்துடன் தன் கையில் இருந்த ரிப்போர்ட்டை அவரிடம் நீட்டினாள்.

 

அதை பார்த்தவர் முகம் சட்டென வாடியது. “இன்னும் டூ இயர்ஸ் பேபி வேணாம்னு முடிவு பண்ணி இருந்தோமே… அது…” அவர் தயங்கி நிறுத்த,

 

கணவன் தோளை தட்டியவள், “என் முட்டாள் போலிஸ்கார், நமக்கு பாப்பா வருதுன்னு சந்தோசபடாம ரூல்ஸ் பேசிட்டு…” என்று கடிந்த மனைவியை அப்படியே அணைத்து கொண்டார்.

 

“தேங்க்ஸ் குறிஞ்சி, எங்கே நீ இப்ப வேணானு சொல்லிடுவியோனு பயந்துட்டேன்” அவரின் அணைப்பு இறுகியது.

 

“எனக்கு மட்டும் குழந்தை வேணும்னு ஆசை இருக்காதா?” என்றவள், “முதல்ல விலகு, பப்ளிக் நியூசன்ஸ் பண்ணிட்டு” என்று கடிய, நெடுமாறன் விலகி சுற்றும் பார்த்து அசடு வழிந்தார்.

 

“போதும் வழிஞ்சது வா, டாக்டர் பார்க்கனும்” என்று இழுத்து சென்றாள். மருத்துவரிடம் ஆலோசனை பெற்று இருவரும் வெளியே வந்தனர்.

 

“முதல்ல கோயிலுக்கு போகனும், அப்புறம் அம்மா வீட்டுக்கு கூட்டிட்டு போகனும் சரியா” குறிஞ்சி ராணி கேட்க, “ம்ம் சரி போலாமே” நெடுமாறன் சிரித்தபடி சொல்லவும், அவர் அலைபேசி அழைக்கவும் சரியாக இருந்தது.

 

எடுத்து காதில் ஒற்றினார். “சொல்லுங்க தொரை”.

 

“அந்த டிரைவரோட ஃபிரண்ட பிடிச்சாச்சு சார். கஸ்டடியில வச்சிருக்கேன். அவன் சொல்ற விசயம் ரொம்ப ஷாங்கிங்கா இருக்கு…” என்று துரைசாமி மறுமுனையில் விளக்கி சொல்ல, நெடுமாறனும் பரபரப்பானார்.

 

“ஓகே ஐ வில் கம் தேர் டேன் மினிட்ஸ்…” என்று சொன்னவர், மனையாளின் முறைப்பை பார்த்து, “ம்க்கும் ஒன் ஹவர்ல வந்திடுறேன், நீ பாத்துக்கோ தொரை, யாருக்கும் விசயம் லீக் ஆக கூடாது” என்று எச்சரித்து வைத்தார்.

 

“லவ் யூ சோ மச் பொண்டாட்டி, நம்ம பேபி வந்த நேரம் ரெண்டு மாசமா ஜவ்வு மாதிரி இழுவையில இருந்த கேஸ் இப்ப முடிய போகுது” என்று நெடுமாறன் உற்சாகமாக,

 

“ஹலோ இந்த கேஸ்ல நீங்க தான் ஸ்லோனு சொல்லுவேன். நான் விசாரிச்சு இருந்தா இந்நேரம் கேஸ‌ முடிச்சிட்டு வேற கேஸ்‌ பார்த்து இருப்பேன்” குறிஞ்சி வம்பிழுக்க, அவர் சத்தமாக சிரித்தபடியே வாகனத்தை கிளப்பினார்.

 

****

 

அரவிந்த் தந்த ஆதாரங்களை ஆராய்ந்து பார்த்து, “இது‌ மட்டும் போதாது அரவிந்த்… இன்னும் ஸ்ட்ராங் சாட்சி வேணும்…” என்றார் ஆய்வாளர் நெடுமாறன்.

 

“என்ன நினைச்சுட்டு இருக்கீங்க சார் நீங்க? நாம காலந்தாழ்த்துற ஒவ்வொரு நாளும் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு அதிகமாயிட்டே இருக்கு… இந்த பிரஷர்ல அஞ்சலி சூசைட் அட்டர்ன் பண்ற அளவுக்கு போயிட்டா… பாத்தீங்கல்ல” அரவிந்த் கொந்தளித்தான்.

 

அவன் தனக்குள்ளேயே போராடிக் கொண்டிருந்தான். அது கோபமாக வெளிப்பட்டது.

 

“இல்ல அரவிந்த், அஞ்சலி தற்கொலை முயற்சி பண்ணதுக்கு காரணம் அந்த கொலைக்காரன் இல்ல… நீ! உனக்காக அஞ்சலி உன்மேல வச்சிருக்க காதல் தான் காரணம்! அது உனக்கும் தெரியும்… தைரியமானவங்கள ஒன்னுமே இல்லாம சுழட்டி போடுற யுக்தி காதலுக்கு மட்டும் தான் இருக்கு… அதுக்கு அஞ்சலியும் விதிவிலக்கில்ல… இப்ப அஞ்சலி ஒரு கம்ப்ளெயின்ட் கொடுத்தா நான் உன்னையும் அரெஸ்ட் பண்ணலாம்” என்றார் அவர் சாதாரணமாக.

 

அரவிந்த் அவரை வித்தியாசமாக பார்த்தான். “குற்றவாளி யாருன்னு தெரிஞ்சும் நீங்க இவ்வளவு அசமந்தமா இருக்கீங்கனா, எனக்கு உங்க மேலையும் சந்தேகம் வருது சார்… என்ன ப்ளான் வச்சிட்டு இருக்கீங்க?” ஆத்திரமாக கேட்க, நெடுமாறன் சிரித்து விட்டார்.

 

“குட் ஜோக் அரவிந்த்… நீ எல்லாத்தையும் சேஃப்டி ஜோஃன்ல முடியனும்னு அவசரபடுற… பட் இந்த கேஸ் ரொம்ப சென்ஸிடிவ், கொஞ்சம் மிஸ்ஸானாலும் எல்லாமே கெட்டு போகும்… நீ இப்ப ரொம்ப ரெஸ்ட்லெஸ்ஸா இருக்க போய் ரெஸ்ட் எடு, மத்ததை நான் பார்த்துக்கிறேன்” நெடுமாறன் அவன் தோளை தட்டி சொல்ல, அவரின் கையை தட்டி விட்டவன், அங்கிருந்து வேகமாக வெளியேறினான்.

 

“ஏன் சார் பாவம் அரவிந்த்” துரைசாமி அவனுக்காக இறக்கப்பட, நெடுமாறன் தலையசைத்தார்.

 

“இப்ப பாவம் பார்க்கிறதால எதுவும் மாற போறதில்ல தொரை… குற்றவாளிய கையும் களவுமா பிடிச்சா தான் இந்த கேஸ் முழுசா முடியும். அவனை போல அவசரபட முடியாது… நீங்க அலார்ட்டா இருங்க, எல்லா சைடும் நம்ம கண்ணு இருக்கட்டும் யாருக்கும் சந்தேகம் வராம…” என்று உத்தரவிட, துரைசாமி விரைப்பான சல்யூட் வைத்து நகர்ந்தார்.

 

****

 

நிஜம் தேடி நகரும்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!