நீயில்லை நிஜமில்லை 26(1) இறுதி பதிவு

IMG-20200630-WA0009

நீயில்லை நிஜமில்லை 26(1) இறுதி பதிவு

நீயில்லை நிஜமில்லை 26(1) (இறுதிபதிவு)

 

காற்றில் உன் சுவாச தேடல்கள்!

கனவில் உன் நேச தேடல்கள்!

விழியோர ஈரத்தில் நீ ஈந்த வலிகளின் மிச்சங்கள்…

 

அரண்மனை முழுவதும் வேதமந்திரங்கள் ஒலித்தப்படி இருக்க, வேள்வி புகை அந்த இடம் முழுவதையும் சூழ்ந்தது. அகால மரணமடைந்த அர்ச்சனா, அவர்கள் குடும்பத்தினர்களின் ஆன்மசாந்திக்காக இந்த யாகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

 

யாக குண்டத்தின் முன்பு அர்ஜுன் அமர்ந்து சாஸ்திரிகள் சொல்வது போல செய்துக் கொண்டிருந்தான். அவன் இதயம் இறுகி கிடந்தது. அவர்கள் குடும்பத்தினர் அனைவரின் புகைப்படங்களும் பூஜையில் வைக்கப்பட்டிருக்க, அவற்றை பார்க்க பார்க்க அவன் நெஞ்சமும் கண்களும் கலங்கி நின்றன. தன்னை இப்படி அனாதையாக கைவிட்டு தன்னை மாய்த்துக் கொண்ட அர்ச்சனா மீது ஆத்திரமும் ஆற்றாமையும் பொங்கியது.

 

நேற்று நடந்தவையும் அவனை பெரிதாக பாதித்து இருந்தது.

 

*

*

*

 

நேற்று தான் வெறுப்போடு அரண்மனைக்குள் வந்திருந்தான் அர்ஜுன். தங்கள் குடும்பத்திற்கு மறுக்கப்பட்ட இடம்! தன் அச்சுக்காவின் உயிர் குடித்த இடம்! உள்ளே வரும் போது இந்த எண்ணம் மட்டும் தான் அவனுக்குள் சுழன்றிருந்தது.

 

திரிபுரசுந்தரி, காதம்பரி, பிரபாகர் மற்றும் குடும்ப வக்கீல் அர்ஜுனை வரவேற்று அழைத்துவந்து அமரவைத்தனர். அங்கிருந்த யாரையும் அவனுக்கு பிடிக்கவில்லை என்பதைவிட ஒப்பவில்லை. வக்கீலின் அழைப்பினை மறுக்க முடியாது தான் வந்திருந்தான்.

 

பிரபாகர் பேச்சைத் தொடங்கினார். “ஏதேதோ நடந்து போச்சு, எல்லாமே நம்ம கைமீறி போச்சு, போனதை பத்தி பேசினா வீண் கஷ்டம் மட்டுந்தான் நமக்கு மிச்சம். இனி நடக்க போறதை பார்க்கலாம் அர்ஜுன்”

 

‘இன்னும் நடக்க என்ன மிச்சமிருக்கு’ என்று அர்ஜுன் வெறுப்பாக எண்ணிக் கொண்டான்.

 

“இதுவரைக்கும் உங்க குடும்பத்தை பத்தி எங்களுக்கு எதுவும் தெரியாது அர்ஜுன். ரொம்ப காலந்தாழ்ந்து இப்பதான் தெரிஞ்சிக்கிட்டோம்… எது எப்படி இருந்தாலும் நீயும் இந்த குடும்பத்தோட வாரிசு… இந்த குடும்பத்து சொத்து, தொழில்ல உனக்கும் சரிசமமான உரிமை இருக்கு… சட்டப்பூர்வமா அதை உன்கிட்ட ஒப்படைக்க வேண்டியது எங்க கடமை… மறுக்காம ஏத்துக்கோ” என்று

காதம்பரி தன்மையாகவே அவனுக்கு விவரம் சொன்னார். அவர் கண்முன்னால் நடந்த சம்பவங்கள் அவரையும் புரட்டிப் போட்டிருந்தது. அவரின் அதிகார தோரணையும் மாறி இருந்தது. மனமும் ஓய்ந்திருந்தது.

 

“எங்க குடும்பத்தை முழுசா அழிச்சிட்டு, இப்ப எனக்கு சொத்துல பங்கு கொடுக்கிறேன்னு எதுக்கு சீன் போட்டுட்டு இருக்கீங்க? உங்க சொத்தும் தேவையில்ல… உங்க உறவும் தேவையில்ல எனக்கு” அர்ஜுன் ஆத்திரமாக தன் மறுப்பை தெரிவித்தான்.

 

“உன் நிலைமை எங்களுக்கு புரியுது அர்ஜுன்… நடந்ததை மாத்தி மாத்தி பேசுறதால இங்க எதுவும் மாற போறதில்ல, வீண் கஷ்டம் தான் நமக்குள்ள புரிஞ்சுக்க பா” திரிபுரசுந்தரியும் தளர்ந்த குரலில் எடுத்து சொன்னார்.

 

“நான் புரிஞ்சிகிட்டு இன்னும் என்ன ஆக போகுது… எங்க குடும்பத்துக்கு நீங்க செஞ்ச பாவத்துக்கு சொத்துல பங்கு கொடுத்து பரிகாரம் தேடிக்க நினைக்கறீங்க… இத்தனை உயிரை பறிகொடுத்து தான் எனக்கு இந்த சொத்து வரனும்னா… இந்த சொத்து தேவையே இல்ல” அவனுக்குள் ஆற்றாமை மேலோங்க கோபமாக மறுத்தான்.

 

“அர்ஜுன்… முதல்ல ஒன்ன நல்லா புரிஞ்சிக்க, நாங்க யாரும் உனக்கு சொத்து கொடுக்கல… சட்டப்படி, உரிமைப்படி இது உனக்கு சேர வேண்டியது… நீ மறுத்தாலும் நீ இந்த குடும்பத்தோட வாரிசு தான்… அர்ச்சனா தான் கடைசி வரைக்கும் எங்களை புரிஞ்சிக்கல… நீயாவது வாழ பாரு…” காதம்பரியும் அவனுக்கு புரியவைக்க முயன்றார்.

 

“என் அக்கா வேணான்னு சொன்ன இந்த சொத்து எனக்கும் தேவையில்ல. எனக்கு எங்க அர்ச்சனாவ உங்களால திருப்பி தர முடியுமா? அர்ச்சனாவும் எங்க குடும்பமும் எந்த பாவமும் செய்யலயே… ஆனா அவங்களுக்கு ஏன் இத்தனை கொடுமையான சாவு?” அர்ஜுனின் முகம் சிவக்க உதடுகள் துடித்தன.

 

“புருசன் செய்ற துரோக்கத்தை தாங்க முடியாம எங்க அப்பத்தா துணிஞ்சு வெளியே போனது பெரிய தப்பா? எங்க அப்பாவும் அத்தையும், மாமாவும் என்ன தப்பு பண்ணாங்க? சின்ன பையன் முத்தாக்கு என்ன தெரியும்? நாங்க யாருமே உங்க வாழ்க்கையில குறுக்க வரலையே, எங்களுக்கு ஏன் இத்தனை பெரிய கொடுமை? 

 

எல்லாத்தையும் விட்டுட்டு எங்கம்மா ஒருநாள் கூட நிம்மதியா இருக்கல தெரியுமா? எங்களுக்காக மட்டுமே உழைச்சு கடைசியில அவங்களும் இல்லாம போயிட்டாங்க…! எனக்குன்னு இருந்த என் அர்ச்சனாக்காவும் இப்ப இல்ல… உங்களோட வாழ்க்கை, உங்களோட சந்தோசத்துக்காக எங்க குடும்பம் ஒன்னுமே இல்லாம சிதைஞ்சு போயிடுச்சு… 

 

எந்த தப்பும் செய்யாம நல்லவங்களா இருந்ததால மட்டுமே எங்களுக்கு இத்தனை கொடுமையா…! ச்சே இந்த பூமி சுடுகாடு… உங்க பொண்ணு தான் பிழைச்சிக்கிட்டாங்க இல்ல சந்தோசமா இருங்க. என்னை விட்டுடுங்க” தன் மனதின் ஆதங்கத்தை அழுத்தத்தை கொட்டி தீர்த்துவிட்டு அர்ஜுன் எழுந்து கொண்டான்.

 

“அர்ச்சனாவுக்கு அப்படி என்னடா ஆத்திரம், தன்னை தானே அழிச்சிக்கிற அளவுக்கு?” காதம்பரியின் ஆற்றாமை குரல் அர்ஜுனை நிறுத்தியது.

 

“நாங்க மட்டும் என்ன தப்பு செஞ்சோம் அர்ஜுன்? மனைவி ஓடிபோயிட்டானு சொன்ன பொய்ய நம்பி கல்யாணம் பண்ணிக்கிட்ட என் அம்மா மேல தப்பா? இல்ல அப்படியொரு அப்பாவுக்கு பொறந்ததால என்மேல தப்பா? இல்ல என் வயித்துல பிறந்ததால அஞ்சலி மேல தப்பா? சொல்லு அர்ஜுன்…

 

கடவுள் மேல சத்தியமா உங்க குடும்பத்தை பத்தியும், என் அப்பாவோட கொடூரமான புத்தி பத்தியும் எங்க யாருக்குமே தெரியாது… அப்படி தெரிஞ்சுக்காம இருந்தது மட்டும் தான் நாங்க செஞ்ச பெரிய தப்பு… அந்த தப்புக்கு தண்டனைய ஏன் அஞ்சலிக்கு கொடுக்க நினைச்சா உன் அர்ச்சனா? சொல்லு அர்ஜுன்… பதில் சொல்லிட்டு போ… 

 

அஞ்சலிக்கு எங்களை தாண்டி எதுவுமே தெரியாது… சின்ன ஈ, எறும்ப கூட அழிக்க நினைக்க மாட்டா, மரம், செடிய கூட உயிரா நினைக்கிறவ தெரியுமா? அவளைபோய்… இப்ப செத்து பொழைச்சி வந்திருக்கா, அதுகூட கஷ்டமா இருக்கா உனக்கு சொல்லு…

 

எந்த பாவமும் செய்யாம உங்க குடும்பம் அழிஞ்சதுன்னு, எந்த தப்பும் செய்யாத நாங்களும் அழிஞ்சு போகனும்னு அர்ச்சனா முடிவெடுத்ததை எந்த விதத்தில சரினு சொல்லுற நீ? நாங்களும் உங்களமாதிரி சராசரி மனுசங்க தான் பா, எங்களுக்கும் கஷ்டம், நஷ்டம், ஆசாபாசம் எல்லாம் இருக்கு…” என்று தங்கள் ஆதங்கத்தையும் காதம்பரி கொட்டி தீர்த்தார். 

 

“எங்கமேல அவ்வளவு ஆத்திரத்தை வளர்த்துக்கிறத்துக்கு முன்ன அர்ச்சனா ஒருமுறை கூட நாங்க தப்பானவங்களான்னு யோசிக்கலயே? அவ யாருன்னு எங்களுக்கு சொல்லி இருந்தாளே நாங்க உண்மை என்னனு விசாரிச்சு இருப்போமே பா… உங்க தாத்தா கொடுமையானவருன்றதால நாங்களும் கொடுமைக்காரங்கனு முடிவு பண்ணிட்டீங்களா?” என்று கலங்கிய திரிபுரசுந்தரி,

 

“உதவின்னு அரண்மனை வாசல் தேடி வந்த வெளியாளை கூட வெறுங்கையோட அனுப்பனதில்ல பா… இந்த குடும்பத்தோட வாரிசுன்னு தெரிஞ்சிருந்தா உங்கள கஷ்டப்பட விட்டிக்க மாட்டோமே பா” என்று மூச்சு வாங்க நிறுத்தினார்.

 

“எல்லா பாவத்துக்கும் பழிக்கு பழி வாங்கறது மட்டும் தீர்வில்ல அர்ஜுன்… அதை அர்ச்சனா தான் புரிஞ்சிக்கல, தயவுசெஞ்சு நீயாவது புரிஞ்சிக்க முயற்சி பண்ணு… நீ எங்கள நம்பலனா கூட பரவால்ல உங்க குடும்பத்துக்கான உரிமைய நீ எடுத்துக்க, தயவு செஞ்சு மறுக்காத” பிரபாகர் தன்மையாக சொல்ல, என்ன சொல்வது என்ற அலையாடல் அர்ஜுனுக்குள்.

 

மனிதர்களின் மறுப்பக்கம் இருளடைந்ததாக மட்டும் தான் இருக்கும் என்று எந்த விதியும் இல்லையே, சிலரின் மறுப்பக்கம் ஒளி பொருந்தியதாகவும் இருக்கும் என்ற நிஜம், முதல் முதலாய் இவனுக்கு விளங்குவதாய்.

 

அர்ச்சனாவின் பழிக்குப்பழி உயிருக்குஉயிர் என்ற மூர்க்கத்தனமான செயல் இவனுக்கு நெருடலாக தான் இருந்தது. இப்போது இவர்கள் பக்கம் யோசிக்கும்போது இன்னும் மனம் நைந்தது.

 

இவர்கள் கெட்டவர்களாக, சுயநல்வாதிகளாக இருந்திருக்கலாம். ஏன் இத்தனை நியாயவாதிகளாக நடந்துக் கொள்கின்றனர்? அவன் மனதில் வித்தியாசமான அசூசை உருவாகி மறைந்தது.

 

“இந்த சொத்தெல்லாம் நீங்க கொடுக்கறது உங்க பெருந்தன்மையா இருக்கலாம். ஆனா எனக்கு இதுல எந்த சந்தோசமும் வர போறதில்ல… விட்டுடுங்க” அவன் தன்பிடியில் நின்றான்.

 

“அர்ஜுன்… நீதான் அர்ஜுனா…?” என்ற மெல்லிய குரலில் அவன் திரும்பினான். அங்கே அஞ்சலி அவனை நோக்கி வந்தாள்.

 

அவளின் முகத்தை சற்று உற்று நோக்கிய அர்ஜுன் முகத்தில் திகைப்பு வந்து போனது.

 

பொலிவற்று கருத்து ஒடுங்கிய முகம், ஒற்றை முழு அங்கிக்குள் ஒருபக்கம் சாய்ந்து அசௌகரியமாக நடந்து வந்த அவளின் தோற்றத்தில் இவன் முகம் சுருங்கியது. அஞ்சலியை இந்த கோலத்தில் அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. 

 

காதம்பரி, பிரபாகர் அவளை இருபுறம் தாங்கி வந்து அமரவைத்தனர்.

 

“அரவிந்த் எப்படி இருக்கான்?” என்று அவள் கவலையாக அவனிடம் கேட்க,

 

”இல்லாம போனாலும் அர்ச்சனாவ மட்டும் தான் நினைச்சிட்டு இருக்காரு… உங்களுக்கு சந்தோசம் தானே, கடைசியில நீங்க நினைச்சமாதிரியே அவங்க ரெண்டு பேரையும் பிரிச்சிட்டீங்க…” அஞ்சலி மீது அவனுக்கிருந்த வெறுப்பு வார்த்தைகளில் காரமாகவே வெளிப்பட்டது.

 

“இல்ல அவங்க பிரியனும்னு நான் நினைக்கல… அர்ச்சனா சாகனும்னு கூட நான் நினைக்கல…” கோர்வையாக பேச முடியாமல் சற்று நிறுத்தி பேசினாள்.

 

“இதை நான் நம்பனும்?” அர்ஜுன் அலட்சியம் காட்ட,

 

“என்னை கொல்ல டிரை பண்றது அர்ச்சனான்னு எனக்கு முன்னவே தெரியும் அர்ஜுன்…! இன்ஸ்பெக்டர் என்னை அலர்ட் பண்ணி இருந்தாரு… என்னை கொன்னு அவ கொலைகாரியா ஆக வேணாம்னு தான் நானே சாக முடிவெடுத்தேன்… அன்னிக்கு என்னை காப்பாத்தலனா பிரச்சனை இவ்வளவு பெருசாகி இருக்காது…” அஞ்சலி சொல்லவும், அர்ஜுன் மட்டுமல்ல, அங்கிருந்த அனைவருக்கும் அதிர்ச்சி தருவதாய்.

 

அஞ்சலி மற்ற யாரையும் கவனிக்கவில்லை. “அவன் ரொம்ப எமோஷனல் டைப் நீ தான் அவனை பார்த்துகனும்னு அர்ச்சனாகிட்ட சொல்லி இருந்தேன்! அவ இப்படி பாதியிலேயே விட்டுட்டு போவானு நான் நினைக்கல…

 

அவனோட ஒட்டுமொத்த சந்தோஷமும், எதிர்காலமும் சனா மட்டும் தான்னு சொன்னான் தெரியுமா…! அவனோட சந்தோஷத்தையும் எதிர்காலத்தையும் பாழாக்குற அளவுக்கு அவளுக்கு ஏன் அத்தனை ஆத்திரம்?”

 

“எங்களை பழிதீர்க்க தான வந்தா, அரவிந்த் எந்த தப்புமே பண்ணலயே கடைசியில அவனை ஏன் பழி தீர்த்துட்டு போயிட்டா… அவ என்னை கொன்னிருந்தா கூட அரவிந்த் அவனோட சனாவ ஏத்துட்டு இருந்திருப்பான் தெரியுமா? அதை கூட புரிஞ்சிக்காம அவனோட காதலை சிதைச்சிட்டு போயிட்டா”

 

“ப்ளீஸ் நீயாவது நான் சொல்றதை கேளு அர்ஜுன்… அரவிந்த் இன்னசென்ட், ரொம்ப எமோஷனல் டைப், அவனால சனா இல்லாததை தாங்கிக்க முடியாது… டிப்ரஷன்ல தப்பு தப்பா ஏதாவது‌ செஞ்சுடுவான்… மேல தைரியமா இருக்கிறதா காட்டிக்கிட்டாலும் உள்ள முழுசா நொறுங்கி போய் இருக்கான்… நீயாவது அவன்கூடவே இரு… இருப்பல்ல?”

 

அர்ஜுன் எந்த எதிர்வினையும் இன்றி பேச்சற்று நின்றிருந்தான்.

 

“அவனால இனி இங்க இருக்க முடியாது, பழைய வேலைக்கே ஓடி போயிடுவான், நீயும் அவனோட போ, உன்ன நல்லா பார்த்துப்பான்… நீ அவன் கூட இருந்தாலே உனக்காகவாவது அவனை தேத்திப்பான்…” என்று யாசித்தவள், வக்கீலிடமிருந்த பத்திரங்களை வாங்கி, அர்ஜுன் கைகளில் வைத்தாள்.

 

“இதெல்லாம் உன்னோடது, உனக்கு சொந்தமாக வேண்டியது மறுக்காத அர்ஜுன்… சைன் பண்ணிடு, இனிமே உனக்காக நாங்க எல்லாம் இருப்போம்‌ மறந்துடாத…”

 

அர்ஜுன் அதற்குமேல் ஏதும் மறுக்கவில்லை. கேட்ட இடத்தில் இயந்திரத்தனமாக கையொப்பம் இட்டான். வக்கீல் அவனுக்கான சொத்து விவரங்கள் ஒவ்வொன்றாக படித்து விளக்கிச் சொல்ல, இவனுக்கு மலைப்பானது.

 

நிச்சயம் அழுவதா? சிரிப்பதா? என்று புரியவில்லை அவனுக்கு.

 

*

*

*

யாகம் இன்னும் நடந்துக் கொண்டிருந்தது. 

 

அர்ஜுன் ஒருமுறை சுற்றிப் பார்த்தான். அஞ்சலி அவள் அறையை விட்டு வெளிவந்திருக்கவில்லை. 

 

அங்கே அமர்ந்திருந்த அரவிந்தைப் பார்க்க, அவன் பார்வையோ அர்ச்சனாவின் புகைப்படத்தில் நிலைத்திருந்தது. அவனிடம் இதைப்பற்றி பேச வேண்டும் என்று நினைத்து கொண்டான்.தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆன்ம சாந்தி பெற, உளமார வேண்டிக் கொண்டான்.

 

****

 

“உன் சமையல் அறையில்

நான் உப்பா? சர்க்கரையா…?’

 

எஃப் எம் பாடலோடு, இவர்கள் சமையல் அறையில் நளபாகம் தயாராகிக் கொண்டிருந்தது.

 

“மாம்ஸ், இப்படி தினமும் காயும் தழையும் மட்டும் சமைச்சு போட்டீங்கனா, இன்னும் கொஞ்ச நாள்ல நான் நூடுல்ஸ் சைஸுக்கு மெலிஞ்சுடுவேன்” வெங்காயத்தை அரிந்தபடி, அர்ஜுன் நொந்து கொள்ள,

 

“யாரு நீ? நூடுல்ஸ் சைஸுக்கு மாறுவ?” அடுப்பில் குழம்பை கிண்டியபடி அரவிந்த் கிண்டலித்தான்.

 

“கண்ணு வக்காதீங்க மாம்ஸ். நீங்க என்ன சுத்த சைவமா இருக்கீங்க நான்வெஜ் பிடிக்காதா உங்களுக்கு, சாப்பிடமாட்டிங்களா?” அர்ஜுன் அசைவ சாப்பாட்டில் குறியாக இருக்க,

 

“அதெல்லாம் வெளுத்து கட்டிட்டு தான் இருந்தேன்… உயிரை கொன்னு சாப்பிடறது பாவம்னு ஒரு ராட்சசி வந்து முகம் சுருக்கிட்டு போனாளா… அப்புறம் அவளுக்கு பிடிக்காதத சாப்பிட எனக்கும் பிடிக்கல, அப்படியே விட்டுவிட்டேன்…” என்றான்.

 

அர்ஜுனுக்கு புரிந்தது. அர்ச்சனாவிற்காக இவன் தன் உணவு பழக்கம் முதற்கொண்டு மாற்றிக் கொண்டிருக்கிறான் என்று. இத்தனை ஆழமான காதலையும், இந்த வெள்ளந்தி மனிதனையும் ஏமாற்றி விட்டு செல்ல எப்படி மனம் வந்தது? என்று அர்ச்சனாவை மானசீகமாக குற்றம் சாட்டினான்.

 

சமையல் முடிந்து இருவரும் சாப்பிட அமர்ந்தனர். அர்ஜுன் பேச்சை வளர்த்தான.

 

“மாம்ஸ்… நிஜமா நீங்க அப்ராட் போறதா முடிவே பண்ணிட்டீங்களா?”  கேட்க,

 

“இங்க இருந்து என்னடா கிழிக்க போறேன் அங்க போனா… அது வேற வேல்ட் சும்மா அப்படியே லைஃப் போயிடும்…” அரவிந்த் ரசித்து பேசினான்.

 

“ம்ம் அது… அஞ்சலிக்கு என்ன பதில் சொல்ல போறீங்க மாம்ஸ்?” அர்ஜுனிடம் இந்த கேள்வியை அரவிந்த் எதிர்பார்த்திருக்கவில்லை. நிமிர்ந்து அவனை ஒரு கணம் கூர்ந்தான்.

 

“அஞ்சலி என்கிட்ட எந்த கேள்வியும் கேக்கலடா, நான் அவளுக்கு எந்த பதிலும் சொல்ல வேண்டியதும் இல்ல… அவளுக்கு என்னை நல்லா தெரியும் என்னை புரிஞ்சிப்பா…” என்றான்.

 

“உங்கள புரிஞ்சிக்கிட்டவங்களை நீங்க அவாய்ட் பண்றது தப்பில்லையா மாம்ஸ்? இதுவரைக்கும் நீங்க அவங்களை ஒருதடவை கூட போய் பார்க்கலயே?” அர்ஜுன் கேள்வி குற்றம் சாற்ற,

 

“நான் அவளை பார்க்காம இருக்கிறது தான் அவளுக்கு நல்லது… என்னை பார்த்தா இப்போல்லாம் ரொம்ப எமோஷனல் ஆயிடுறா… அவளோட‌ ஹெல்த்க்கு நல்லதில்ல” என்று விளக்கம் சொல்ல,

 

“இது மட்டும் தான் காரணமா?” அர்ஜுன் நம்பாமல் இழுத்தான்.

 

“டேய்… சனா அவளை கொல்ல டிரை பண்ணா, நீ அவளுக்கு சப்போட் பண்றீயா! நல்ல அக்கா தம்பி கிட்ட வந்து சிக்கிக்கிட்டேன் டா” அரவிந்த் ஆச்சரியமாக நொந்து கொள்ள,

 

“எங்க குடும்பத்தை அழிச்சது அஞ்சலி இல்லையே அவங்க தாத்தா தானே, ஐ மீன் எங்க தாத்தா தானே… இதுக்கும் அஞ்சலிக்கும் எந்த சம்மந்தமும் இல்ல. அப்புறம் ஏன் அவங்களை நான் வெறுக்கனும்?” அர்ஜுன் தெளிவாய் கேட்க,

 

“இந்த அறிவு ஏன் டா உன் அக்காக்கு‌ இல்லாம போச்சு…! பரவால்ல பாசமலர் அக்கா வழி நானும்னு துப்பாக்கி தூக்காம நீயாவது புரிஞ்சிக்கிட்டியே சந்தோசம் அர்ஜுன்” என்று அரவிந்த் நிம்மதியோடு சொன்னான்.

 

“எனக்கு முன்னவே உண்மை தெரிஞ்சு இருந்தா அச்சுக்கு சொல்லி புரிய வச்சிருப்பேன் மாம்ஸ்… இதெல்லாம் வேணாம்னு தடுத்து இருப்பேன்… இன்னைக்கு இத்தனை முறை தும்மினேன்னு கூட என்கிட்ட ஷேர் பண்ணிக்குவா… ஆனா இவ்வளவு பெரிய விசயத்தை என்கிட்ட சுத்தமா சொல்லாம மறைச்சிட்டா…” அர்ஜுன் மனம் வெதும்பி பேச, அரவிந்தின் மனதும் பாரமாகி கனத்தது. 

 

“என்கிட்டயும் எதையும் சொல்லல டா, நான் தான் பைத்திக்காரன் மாதிரி என்னைப்பத்தி எல்லாத்தையும் அவகிட்ட சொல்லிட்டு இருந்திருக்கேன்…” அவனும் விரக்தியாக சொல்ல,

 

“அச்சுக்கா மேல உங்களுக்கு கோபமில்லையா மாம்ஸ்?” அர்ஜுன் அவன் மனநிலை அறிய கேட்டான். 

 

“கோபமெல்லாம் நிறையவே இருக்கு, என் காதலை வெறும் துருப்பு சீட்டா பயன்படுத்திக்கிட்டான்ற ஆத்திரம்… அஞ்சலி உயிரைக் காப்பாத்த நான் போராடிட்டு இருக்கேன்னு அவளுக்கு நல்லா தெரிஞ்சும் எனக்கு எதிராதான் எல்லாத்தையும் செஞ்சு இருக்கா… என்கிட்ட ஒன்னுமே தெரியாத மாதிரி நடிச்சிருக்கான்ற ஆதங்கம்… இந்த கொஞ்சநாள் பழக்கத்துல ஒருநாள் கூட அவ எனக்கு உண்மையா இருக்கலையான்ற வலி…” அரவிந்த் முகத்தில் கசப்பு படர்ந்தது.

 

“இறந்தவங்களுக்கு உண்மையா இருக்கனும்ன்ற அழுத்தத்துல, அவளுக்காக இருந்த நம்ம யாருகிட்டயும் அச்சுக்கா உண்மையா இருக்கல மாம்ஸ்” அர்ஜுன் விரக்தியாக விளக்கம் தர, அரவிந்த் தலையாட்டிக் கொண்டான்.

 

இரு ஆண்களுக்கும் நடுவே வேதனையான மௌனம் அழுத்தியது. தட்டில் உணவு குறைவேனா என்றிருந்தது.

 

“என்னால மட்டும் இப்ப டைம் டிராவல் பண்ண முடிஞ்சா எல்லாத்தையும் மாத்தி வச்சிடுவேன் மாம்ஸ், அச்சுக்காகிட்ட இந்த பழிவெறி எல்லாம் வேணாம்னு சொல்லி இருப்பேன்… அக்காக்கு எதுவும் ஆகாம காப்பாத்திடுவேன்… உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் முடிஞ்சு என்கூடவே தூரமா கூட்டிட்டு போயிருப்பேன்…” அர்ஜுன் சொல்லிக் கொண்டு போக, அரவிந்த் மனம்‌ இளகியது. இன்னும் அவனால் சனாவின் இழப்பை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பது புரிந்தது.

 

“இல்ல மாம்ஸ், நேரா அப்பத்தாகிட்ட போவேன், எங்க தாத்தாகிட்ட போவேன்… எல்லாருக்கும் உண்மைய சொல்லி புரிய வைப்பேன்… எங்க குடும்த்தையும் மொத்தமா காப்பாத்தி மீட்டுட்டு வருவேன்… அப்புறம்‌ யாருக்கும் எந்த பிரச்சினையும் இருக்காது… பழியும் இருக்காது, பாவமும் இருக்காது…” என்று வெள்ளை சிரிப்போடு சொன்னான் அர்ஜுன்.

 

“டேய் போதும் டா, உன் கற்பனை ரொம்ப தான் நீளுது, சனா உன்ன அஜ்ஜுனு கூப்பிட்டதுல தப்பே இல்ல, இன்னும் ஸ்கூல் பையன் மாதிரி தான் யோசிக்கிற…” அரவிந்த் கலாய்க்க,

 

“மாம்ஸ் நான் வளர்ந்துட்டேன், டோட்ன் கால் மீ அஜ்ஜு ஓகே” அர்ஜுன் சிணுங்களால மிரட்ட, அவனின் குழந்தை தனத்தில் இன்னும் நன்றாக சிரித்து விட்டான் அரவிந்த்.

 

அரவிந்திற்கு அர்ஜுன் மீது பாசம் கூடியது. தாயை இழந்த குழந்தை தந்தையிடம் ஒட்டிக் கொள்வதைப்போல அவனும் தன்னிடம் ஒட்டிக் கொண்டான். என்று நெகிழ்ந்து கொண்டான்.

 

அவன் சிரிப்பை சில நொடிகள் பார்த்தவன், “மாம்ஸ் நான் நெக்ஸ்ட் வீக் காலேஜ் ஜாயின் பண்ணனும், இப்பவே அதிகமா லீவ் எடுத்தாச்சு” என்க,

 

“ஓஹ் போய் தான் ஆகனும் இல்ல… பட் உன்ன ரொம்ப மிஸ் பண்ணுவேன் டா” என்ற அரவிந்தை தாவி அணைத்துக் கொண்டான். “நானும் தான் மாம்ஸ்” என்று.

 

அர்ஜுனுக்கு தேவையான அனைத்தையும் கவனித்து, அரவிந்தும் பிரபாகரும் அவனுடன் தலைநகருக்கு  சென்று கல்லூரி நிர்வாகத்திடம் நிலையை எடுத்து கூறினர். அர்ஜுனின் கார்டியனாக பிரபாகர் தன்னை முன்னிருத்திக் கொண்டார். அர்ஜுன், அரவிந்த் இருவரும் அவருக்கு எந்த மறுப்பும் சொல்லவில்லை. இயல்பாகவே ஏற்றுக் கொண்டனர்.

 

“எதைப் பத்தியும் கவலைபடாம படிப்புல கவனம் செலுத்து அர்ஜுன்” 

 

“உனக்கு என்ன தேவைன்னாலும் தயங்காம எங்ககிட்ட சொல்லு சரியா” 

 

அரவிந்த், பிரபாகர் சொல்லவதற்கெல்லாம் சிரித்தப்படி தலையாட்டிக் கொண்ட அர்ஜுன், “நான் எப்பவுமே ரொம்ப லக்கி தெரியுமா? எங்க ஃபேமிலி போனதுக்கு அப்புறம் என் அம்மாவும் அச்சுக்காவும் என்னை அன்பா வளர்த்தாங்க, அம்மா போனதுக்கு அப்புறம் அச்சுக்கா எனக்கு ஃபுல் சப்போர்ட்டா இருந்தா, இப்ப அவளும் போனதுக்கு அப்புறம்… நீங்க இருக்கீங்க… எங்க குடும்பத்தில நான் மட்டும் வரம் வாங்கி வந்திருக்கேன் போல” அர்ஜுன் இயல்பாக சொன்னாலும் அதில் வருத்தமும் தொற்றி தான் இருந்தது.

 

“அவங்களோட ஆசிர்வாதம் எப்பவும் உன்கூட இருக்கும் அர்ஜுன். தைரியமா உன் கனவை நிறைவேத்திக்க பா” பிரபாகர் சொல்ல, நம்பிக்கையாக தலையாட்டிக் கொண்டான்.

 

அரவிந்த் அவனை ஒருமுறை அணைத்து விடுவித்து விடைபெற, பிரபாகர் தலையசைத்து விட்டு கிளம்பினர்.

 

அவர்கள் பார்வையில் மறையும் வரை பார்த்து நின்றவன், தன் செல்பேசியில் குறுஞ்செய்தியை தட்டி விட்டான்.

 

‘என்னோட படிப்பு, ஃபியூச்சர் பிளான் எல்லாம் வேற, சோ, என்னால அரவிந்த் கூட இருக்க முடியாது. சாரி’ என்று அஞ்சலிக்கு அனுப்பிவிட்டு, அவன் தோழர்கள் கையசைத்து அழைக்க, உற்சாகமாய் அவர்களுடன் கலந்துக் கொண்டான்.

 

****

 

நிஜம் தேடி நகரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!