நுட்பப் பிழையவள் (6)

நுட்பப் பிழையவள் (6)

6

 

            ~ நலம் வாழ ~

 

 

ஹே இமையா!! என்னை ஞாபகம் இருக்கா!?” என்று புன்னகை முகமாய் தன் முன் கை நீட்டியவனையே பார்த்திருந்தாள் இவள். அபி வா என்றழைத்தப்பொழுதே ஓரளவு தெரியும்தான் இருந்தும் திடீரென ஜீவனை இங்கு ரெஸ்டாரெண்டில் பார்த்ததும் சிறு தயக்கத்துடனான உறைவு இவளிடம். 

 

சில மைக்ரோ மணித் துளிகளே ஆனாலும் தன்னை சுதாரித்துக்கொண்டவளாய் தன் முன் கை நீட்டி நின்றிருந்தவனுக்கு பதிலாய் சிநேகமாய் சிறு முறுவல் செய்து அழுத்தமாய் கைக்குலுக்கினாள் இவள்.

 

“உங்கள எப்படி மறக்க முடியும்!?” என்றவாரே. 

 

கைக்குலுக்கிய இருவரையும்விட விரிய புன்னகைத்து நின்றிருந்த அபி, “உக்காருங்க முதல்ல ஆர்டர் பண்ணிடலாம்!!” என்கவும் மூவரும் அங்கிருந்த மேசையில் அமர்ந்தனர்.

 

“என்ன சாப்பிடற மீ!?” – என்று மெனூவை வெகு கவனமாய் பார்த்தபடி விடை தெரிந்தும் கேட்ட அபிக்கு வழமைப்போல, “நீயே ஏதாவது ஒன்னு பார்த்து பண்ணிடு அபி” என்றுவிட்டு இருக்கையில் சாய்ந்துக்கொண்டவளிடம் என்னவோ பல வருடங்களாய் அதே பதிலை சொல்லி வந்த பாவம். வார்த்தைகள் இயற்கையாய் வந்து விழுந்ததுபோலிருந்தது.

 

அபியிடமும் அதே பாவமே! தலையை தூக்காமல் மெனூவையே பார்த்திருந்தவள் லேசாய் தலையை ஜீவன் புறம் திருப்பினாள்.

 

“உனக்கு ஜீவா!?” என்றபடி. அத்தனை நேரம் அபியையே பார்த்துக்கொண்டிருந்த ஜீவனின் இதழோரத்தில் சிறு புன்னகை..!!  அதனுடனே சேர்ந்த “நீயே பண்ணிடு அபி” என்ற பதிலும். சிறு ஆச்சர்யத்துடன் பார்த்த அபியிடம் லேசாய் கண்சிமிட்டி சிரிக்க அவளோ, “அப்போ நீங்க இருங்க நான் ஆர்டர் குடுத்துட்டு வந்திடறேன்” என்றுவிட்டு எழுந்துச் சென்றாள்.

 

அது ஒரு செல்ஃப் சர்வீஸ் ரெஸ்டாரெண்ட்!! அபி அந்த கௌண்ட்டரில் வரிசையில் நின்றுக்கொண்டிருந்தாள். ஆனால் அவள் பார்வையோ அவ்வப்பொழுது இவர்கள் அமர்ந்திருந்த மேசையையே வட்டமிட்டுக்கொண்டிருந்தது.

 

 

அங்கோ எதிரெதிர் இருக்கையில் அமர்ந்திருந்த இருவரிடத்திலும் மௌனமே நிலவியது. அப்படியொரு மௌனமழை கொட்டித் தீர்ப்பதுபோல.

 

அந்த மௌனம் முழுதிலும் யார் முதலில் ஆரம்பிப்பது? எதை ஆரம்பிப்பது? போன்ற தயக்கங்களே நிறைந்து நின்றன. அம் மழையிலிருந்து முதலில் தப்பியது ஜீவன்தான்.

 

 

“அபி ஏன் இப்படி பண்றானு தெரியுதா?” – ஜீவன்

 

“நாம ரெண்டு பேரும் பேச” – இமையா

 

“ரொம்ப ஆப்வியஸா இருக்குல…?” – ஜீவன்

 

“ம்ம்…” – இமையா

 

“அப்பறம் நாம ஏன் அதை பண்ணக்கூடாது?” – ஜீவன்

 

“…” – இமையா

 

“இந்த ரெண்டு வாரத்துல அபி அவளப்பத்தி பேசின ஒவ்வொரு விஷயத்திலும் நீங்க இருந்தீங்க… அவ அவ அப்பாம்மாவ பத்திக்கூட அவ்ளோ விவரம் சொல்லிருக்கமாட்டா… ஆனா எதையெடுத்தாலும் மீக்கு இது பிடிக்கும்… மீக்கு இது பிடிக்காது… மீயும் இப்படிதான் பண்ணானு என் ரெண்டு வார டேட்டிங்கும் மீ புராணம் கேக்கறதுலதான் பாதி ஓடுச்சு…” – ஜீவன்

 

“மீதி!?” – இமையா. சட்டென கேட்டவளையே குறும்பாய் பார்த்து சிரித்தவன் பிறகு,

 

“இப்பக்கூட பாருங்க!! மூனு மாசத்துல அவ கூடவே இருக்கப்போறவன்… ஆனா மொதல்ல மீக்கு என்ன சாப்பிட வேணும்னு தானே அவளுக்கு கேக்கத் தோணிருக்கு?” – ஜீவன்

 

 

“ஜீவாக்கு வருத்தமா?” – இமையா

 

“ப்ச் ப்ச்!! இல்லவே இல்லைனு பொய் சொல்ல மாட்டேன் இமையா. எனக்கு இங்க வர வரைக்கும்கூட யாருடா அது அபி மனசுல இந்தளவு இணைஞ்சிருக்கதுனு தான் தோணுச்சு… நெஜமா சொல்லப்போனா  முதல்ல கொஞ்சம் கஷ்டமாக்கூட இருந்தது. ஆனா இப்ப அப்படியில்ல இமையா. உள்ளே நுழைஞ்சதும் அபி பர்ஸை கீழ போட்டுட்டு எடுக்க குனிஞ்சப்போ நிமிரும்போது அவ தலை டேபிள்ல இடிச்சுடக்கூடாதுனு சட்டுனு அவ தலைக்கும் டேபிளுக்கும் நடுவுல கை வச்சிட்டு எடுத்தீங்கள… அபி அதை கவனிக்கல… ஏன் நீங்களே உணரல… அதை ஒரு தன்னிச்சையான செயலா தான் செஞ்சீங்க… எத்தனை பேர் இருந்தாலும்… எவ்ளோ முக்கியமான ஆட்களாவே இருந்தாலும் அபி முதல்ல பாக்கறது இமையாவோட பசிக்குதான்… இமையா முதல்ல பாக்கறது அபியோட பாதுகாப்புதான்… நான்கூட அபி ஒருத்தர்மேல ரொம்ப அப்ஸஸ்ட்டா இருக்காளோனு நினைச்சேன்… ஆனா இப்போதான் புரியுது… இது அப்ஸஷன் இல்லனு…” – ஜீவன்

 

அவன் பேசப் பேச கேட்டுக்கொண்டே இருந்தவளுக்கு வெளித்தோற்றத்தில் எந்த மாறுதலும் இருக்கவில்லை… மெல்லிய மௌனத்துடனான அதிர்வைத் தவிர்த்து.

 

 

“அபியோட மீக்கூட எனக்கும் ஃப்ரெண்டாகனும்… இமையாவ இன்னும் தெரிஞ்சிக்கனும்னு விருப்பபடறேன்…” – ஜீவன்

 

சில கணங்கள் அவ்விடத்தில் அமைதியின் சாயல்.

 

“அபிக்கு பிடிச்சா நிச்சயம் எனக்கும் பிடிக்கும்…” – இமையா

 

மெல்லிய முறுவலொன்று மலர்ந்தும் மலராமலும் தடுமாற்றம்கொள்ள குரலில் அதற்கு நேரெதிர் பேரமைதியுடன் உரைத்தவளையே பார்த்திருந்தவனின் இதழ்களிலும் அதே முறுவல்..!!

 

“வா போனே பேசுங்க ஜீவா” – இமையா

 

“நீங்களும்!!” – ஜீவன்

 

“சரி!!” – இமையா

 

 

இவர்கள் இங்கு பேசிக்கொண்டிருக்க அதற்குள் ரசீதையும் டோக்கனையும் வாங்கிக்கொண்டு ஆர்டர் வாங்கும் இடத்தில் கொடுத்துவிட்டு உணவிற்காய் காத்துக்கொண்டிருந்த அபியை கவனித்த ஜீவன்,

 

“ஏன் இவ்ளோ நேரமாகுது…” என்றான் சிந்தனையாக

 

“மேடம் இருக்கதுலயே லேட்டா எது வருமோ அதை ஆர்டர் பண்ணிட்டு நின்னுட்டிருக்கா… ” – இமையா

 

“உனக்கு எப்படி தெரியும்?” – ஜீவன் 

 

“அவ அப்படிதான்… எல்லாருக்காகவும் யோசிச்சு பண்ணுவா…”- இமையா

 

“அப்போ நீ!?” – ஜீவன்

 

“நான் அவளுக்காக மட்டும்தான் யோசிப்பேன்”  என்று பட்டென பதில் வந்தது இமையாவிடம் இருந்து.

 

அதை சொல்லியப்பிறகுதான் அவளே உணர்ந்தாள். அது, அவளால் ஜீவனிடம் வெகு சுலபமாகவே பேசிவிட முடிகிறதென… அவள் முகத்தில் அறைவதுபோல் உண்மையை பேசுபவள்தான் ஆனால் வெகு சிலரிடமே அந்த உண்மையையும் தாண்டி உணர்வுகளை பேசமுடியும்.

ஜீவனிடம் அது முடிந்தது. அவன் அவ்வுணர்வை கொடுத்தான். அவள் பேசினாள்.

 

ஆர்டர் செய்த மூன்று உணவு தட்டுக்களும் வந்துவிட்டது என்பது இங்கிருந்தபடியே அபியின் மீது பார்வையை பதித்தவாரே பேசிக்கொண்டிருந்த இருவரின் கவனத்திலும் பதிய  “ரெண்டு நிமிஷம் நான் வாங்கிட்டு வரேன்” என்று சட்டென இமையா எழுந்துவிட முதலில் மறுக்க நினைத்தவன் பிறகு எதுவும் சொல்லாமல் தலையாட்டினான்.

 

அங்கு மூன்று தட்டுக்களையும் தூக்க முடியாமல் அபி தடுமாறிக்கொண்டிருக்க அவள் கையிலிருந்து இரண்டு தட்டுக்களை பட்டென பிடிங்கியவாரே, “என்ன அவசரம்!? நான் கொண்டு வரேன் போ!” என்ற இமையாவை பார்த்தவள்,

 

“ப்ச்!! ஒரு நிமிஷம் கொட்டிருப்பேன்!!” என்ற அபியின் குரலில் சிறு கண்டிப்பு.

 

“அதுக்குதான் சொல்றேன் நான் கொண்டுவரேன் நீ போ!!” – இமையா

 

அதற்குமேல் இவளிடம் வாதம் செய்து எந்த பிரயோசனமும் இல்லை என்பதை உணர்ந்ததாலோ என்னவோ தலையை மட்டும் லேசாய் ஆட்டிவிட்டு அவர்களது மேசையை நோக்கி நடந்தாள் அபி.

 

“நீ ஆர்டர் பண்ணதுக்கு அப்பறம்தான் அவங்க நெல்லே விதைச்சாங்களோ?” – ஜீவன்

 

தங்களது டேபிளின் அருகினில் வந்ததும் ஜீவன் கேட்ட முதல் கேள்வியே இதுவாய் இருக்க மெல்லிய சிரிப்பொலி ஒன்றுடன் நிமிர்ந்தவளின் பார்வை வாசலில் உறைந்து சிரிப்பொலியும் மறைந்துப்போக அபியின் திடீர் மாற்றத்தையே புருவ சுளிப்புடன் ஜீவன் பார்த்திருக்க அபியோ அருகில் தன் கைகளில் இருந்த தட்டிலேயே கவனமாய் வந்து நின்ற இமையாவை தன் முழங்கையால் இடித்தாள். 

 

 

கைகளில் இருந்த தட்டிலிருந்து கிஞ்சித்தும் பார்வையை அகற்றாத இமையா அதை பத்திரமாய் மேசையில் வைத்துவிட்டே “என்ன அபி!?” என்ற கேள்வியுடன் அபியின் முகம் பார்க்க அவளோ பார்வையை வாசல்புறம் வைத்து இமையாவை இடித்துக்கொண்டிருந்தாள்.

 

 

யார அப்படி பாக்கறா!? என்று கேள்வியுடன் திரும்பவுமே இமையாவின் கண்ணிலும் ஜீவனின் பார்வையிலும் அவன் பட்டான்..!! இமையாவையே வெறித்துப் பார்த்துக்கொண்டு நின்றவன். அவள் பார்வை அவனில் படிந்ததும் அவள் இதழ்களில் சிறு ஏளன வளைவொன்று வழமைப்போல குடிகொள்ள வெறித்திருந்த அவன் பார்வையில் அதுவும் தப்பாமல் விழுந்தது. சற்றும் தாமதியாமல் திறந்த கண்ணாடிக் கதவை அப்படியே மூடிவிட்டு வெளியேறிவிட்டான் அவன். இங்கு இவளும் தோளை குலுக்கிவிட்டு தனது இருக்கையில் அமர்ந்தவளாய் அபியையும் பிடித்து இழுத்துக்கொண்டிருந்தாள்.

 

“உக்காரு அபி!! ஆறிடப்போது”- இமையா

 

சில நாட்களுக்கு முன் நடந்த அனைத்தும் மனதிற்குள் வந்து செல்ல தலையை உலுக்கி அதிலிருந்து விடுபட்டவாறு அமர்ந்தாள் அபி.

 

எல்லாம் ஐந்து நிமிடங்களுக்கு குறைவான நேரத்தில் நடந்துவிட்டாலும் எதுவுமே புரியாதலால் குழம்பியிருந்த ஜீவனோ,

 

“யாரது!?” என்கவுமே அத்தனை நேரம் இருந்த அர்த்தமற்ற அமைதி கலைந்தது.

 

கையில் ஒரு ஸ்பூனை எடுத்தவள் இமையாவை ஒரு கணம் பார்த்துவிட்டு பெருமூச்சொன்றை இழுத்துவிட்டவளாய் ஸ்பூனை கீழே வைத்தாள்.

 

“எங்க ஸ்கூல்மேட் ஜீவா… ட்வெல்த் வரை ஒன்னாதான் படிச்சோம்…” – அபி

 

“அப்பறம் ஏன் அப்படி பார்த்துட்டு போறாங்க?” – ஜீவா

 

“ஹ்ம்ம்… உன்கிட்ட சொல்லலைல… ரெண்டு மூனு வாரத்துக்கு முன்ன எங்க பேட்ச் பசங்களாம் சேர்ந்து சின்ன ரீயூனியன்போல ஒரு ரெஸ்டாரெண்ட்ல மீட் பண்ணோம்…” என்று தொடங்கிய அபி அன்றைய நாளை தூசித்தட்டினாள்.

 

 

முதலில் எல்லாம் நல்லாதான் போய்க்கொண்டிருந்தது அபியின் திருமண விஷயத்தைப்பற்றி மற்றொரு தோழி சொல்லாதவரை..!!

 

“ஓஹ்!!!!” என்றெழுந்த கூச்சலுடன் சிலர்  வாழ்த்துரைக்க அதை புன்னகை முகமாகவே ஏற்றுக்கொண்டிருந்த அபியின் செவிப்பறையில் “அப்போ நீ ஸ்ட்ரெய்ட்டா?” என்ற வார்த்தைகள் கிண்டல் த்வனியில் விழாதவரை.

 

“எக்ஸ்க்யூஸ் மீ!?”  என்று புரியாத பார்வையுடன் கேட்ட அபியின் அருகில் அமைதியாய் அமர்ந்து தன்னையே கூர்மையாய் பார்த்திருந்த இமையாவையே ஏளனமாய் பார்த்தவனோ,

 

“ப்ச்!! ரெண்டுபேரும் ஒட்டிட்டே திரிஞ்ச ரேஞ்ச்க்கு என்னமோனு நினைச்சேன்…” என்றுவிட்டு கையிலிருந்த பானத்தை ஒரு மிடறு பருகியவன், “யூ நோ ரைட்!? இப்போ ஸெக்ஷன் 377 கூட கிடையாது…” என்றுவிட்டு ஏதோ பெரிய ஜோக்கடித்துவிட்டதுபோல் சிரிக்க அவனது நோக்கம் புரியாது மற்றவர்களும் சேர்ந்து “ஓஹ்….” என்றவாறு சிரித்தனர். கூடவே சிலர் “ஆமாம்பா… நீங்க செம க்லோஸ்ல” என்க அதில் இன்னும் களிப்புற்றவனோ ஆழம் தெரியாது வாயை விட்டான்.

 

“அப்போ நீ நிஜமாவே லெஸ்பியனில்லையா?” என்றவன் அதே கிண்டல் பாவத்தை முகத்தில் ஒட்டவைத்தானே தவிர பார்வையில் வழிந்த விஷ(ம)த்தை மறைக்காமல் இமையாவிடம் கேட்க சட்டென அங்கு அமைதி நிலவியது. அப்பொழுதே உணர்ந்தான் அவன் அவசரப்பட்டுவிட்டதை.

 

கேட்ட அவனையே விழிகளில் ஏளனமும் இதழ்களில் சிறு மர்மப் புன்னகையுமாய் கைகளை கட்டி சாய்ந்தமர்ந்து பார்த்துக்கொண்டிருந்த இமையாவோ சற்றும் அலட்டாமல்.

 

“ஏன் எனக்கு பொண்ணு பாக்க போறீயா?” என்றுவிட அந்த நீள மேசையில் இருந்த சிலர் சிரிப்பை அடக்கியதில் சட்டென அவன் முகம் விழுந்துவிட்டது. கூடவே அத்தனை கோபம். விட்டால் அருகிலிருப்பவளின் கழுத்தை நெறித்துவிடுமளவு வெறி.

 

“ஜோக்ஸ் ஆன் யூ இமையா!! ஹ!!” என்று தலையை சிலுப்பியவன்

 

 “அப்பாம்மா இருந்து வளர்த்திருந்தா ஒழுக்கமா வளர்ந்திருப்பா…”  என்று சத்தமாகவே முணுமுணுக்க அத்தனை நேரம் அமைதியாய் இருந்த அபியின் பொறுமை பறந்துவிட்டிருந்தது. இதில் எங்கிருந்து ஒழுக்கம் வந்ததென.

 

” அப்பாம்மா இருந்து வளர்த்தும் நீ ஒழுங்கா வளர்லையே!?” – அபி

 

“யூ….” என்று அவன் தொடங்கவுமே,

 

 

“ஓகே!! அவ்ளோதான்!! இப்ப மட்டும் நீ சொல்ல வந்த வார்த்தைய கம்ப்ளீட் பண்ணா ரொம்பவே வருத்தப்படுவ!!” – என்று கையை தட்டிவிட்டு நிமிர்ந்தமர்ந்தாள் இமையா.

 

 

“என்ன மிரட்டறீயா!?” – அவன்

 

 

“இல்ல!! உப்பு சப்பு பெறாத நாலு கேஸ போட்டு வருஷக்கணக்கா  உன்ன கோர்ட்டுக்கு அலையவிடற அளவு என்ட்ட நேரமும் இருக்கு பணமும் இருக்கு…. ஆனா உனக்கு அப்படியில்லையே… நீ கோர்ட்டுக்கும் வக்கீலுக்கமா அலைஞ்சா…. ஹ்ம்ம்ம்…” என்று அங்கிருந்தபடியே கண்ணாடி வழியாய் வெளியில் எட்டிப்பார்த்தவள், “அது உன் கார்தான!? EMI ஆ!? வக்கீலுக்கு மொய் வைக்க ஆரம்பிச்சா இதை எப்ப கட்டுவ!?… உன் பேர்ல கேஸுனா… உன் ஒழுக்கமான பேரு என்னாகும்? ப்ச்… இன்னுமா அந்த வாக்கியத்த முடிக்கனும்னு தோணுது உனக்கு!?” – சற்றும் கண்ணிமையாமல் அவன் கண்களையே பார்த்து இதட்கடையோரத்தில் சிறு ஏளனப் புன்னகையோடு சொல்லிக்கொண்டிருந்த இமையாவையே வெறித்துப் பார்த்திருந்தான் அவன்.

 

 

உள்ளுக்குள் அத்தனை ஆத்திரம் அவனுக்கு. ஆனால் வாயை திறந்து சொல்ல ஒரு வார்த்தைக்கூட வராமல் போனது பாதி இன்னும் ஆத்திரமே!! அவன் பார்வையிலேயே கோபத்தின் உஷ்ணத்தை வெளியேற்றிக்கொண்டிருக்க இருக்கையிலிருந்து எழுந்துக்கொண்ட இமையாவோ, “போலாமா அபி!?” என்க அதற்காகவே காத்திருந்ததுபோல சட்டென எழுந்தவள் மற்றவர்களிடம் இன்னொரு நாள் சந்திப்பதாய் சொல்லிவிட்டு விடுவிடுவென வெளியேறினாள்.

 

வெளியில் வந்தவர்கள் பார்க்கிங் லாட்டை நோக்கி நடந்தார்கள்.

 

 

“நீ அவன இப்போ  எவ்ளோ ஹ்யுமிலியேட் பண்ணிட்டு வந்துருக்கனு தெரியுதா!?” – அபி

 

“தெரியும்” – இமையா

 

“தெரிஞ்சுமா பண்ண!?” – அபி

 

ஒருகணம் நின்றவள் அபியின் தோள்களை பற்றி அவள் விழிகளுக்குள் பார்த்தாள்.

 

“வார்த்தைகள் கொல்லும்னு உனக்கு தெரியாதா அபி?”  என்றவளின் ஆழ்ந்த குரலில் சற்று தடுமாறிய அபி பிறகு மெல்ல,

 

“அவன் பேசினது தப்புதான் அதுக்குனு இந்தளவு போகனுமா மீ?” – அபி

 

 

“டேஸ்ட் ஆஃப் ஹிஸ் ஓன் மெடிஸின்!!” – இமையா

 

“அப்போ அவ்ளோ நேரம் அவன் உன்ன பத்தி பேசினப்போ அமைதியாதானே இருந்த?” – அபி

 

“ஆமா” – இமையா

 

“விளையாடாத மீ!! ஒழுங்கா பேசு இப்போ!!” – அபி

 

இமையா நிதானித்தாள். அபியின் புறம் திரும்பினாள்.

 

“உன்ன பத்தி பேசினா நான் கேட்கத்தான் செய்வேன் அபி!!” – இமையா

 

“அப்போ உன்ன பத்தி பேசினது?” – அபி

 

“அதான் நீ கேட்டல…” – இமையா

 

அதற்குள் வண்டி அருகே அவர்கள் இருவரும்  வந்துவிட மௌனமாய் சென்றமர்ந்த அபியையே பார்த்திருந்த இமையா அதற்குமேல் எதுவும் பேசவில்லை.

 

அபி சொல்லியதை கேட்டுக்கொண்டிருந்த ஜீவனோ,

 

“அப்படியேவா கேட்ட நீ?”  என்றான் ஆச்சர்யமாய்

 

“ம்ம்…” – இமையா

 

“ஏன்!? ஒருத்தரோட ஸெக்ஷுவாலிட்டி ஒன்னும் இன்ஸல்ட் இல்லையே!? ஏன் அஃபன்ட் ஆகனும்?” – ஜீவன்

 

“ஹ்ம்… அதேதான் ஜீவா!! அவன்  என் செக்ஷுவாலிட்டிய கேள்விகேட்டதுக்கு  நான் அஃபன்ட் ஆகல!! ஆனா அதை அவன் கேட்ட விதம்!? அதொன்னும் கேலிக்குறியதில்லையே!! அவ்வளோ நக்கல் தேவையில்ல!! அதையே அவன் சாதாரணமா கேட்டிருந்தா நானும் சாதாரணமாவே பதில் சொல்லிருப்பேன். பட் அதை அவன் இன்சல்ட்னு நினைச்சான். ஒரு ஸெக்ஷுவாலிட்டி எப்படி இன்சல்ட்டா இருக்க முடியும்!? இவனுங்க மாதிரி ஆட்களாலதான் அவனவன் வாழ்க்கைய சாதாரணமா வாழக்கூட முடியாம திண்டாடுறான்… ப்ச்!!” – இமையா

 

சற்று பின்னால் சாய்ந்தமர்ந்தவள் மறுபடியும் நிமிர்ந்தமர்ந்தவளாய்.

 

“அவ்வளவு ஏன் ‘பொட்டை’ னா என்ன அர்த்தம்?” – இமையா

 

 சட்டென சிறு அதிர்வும் பின் குழப்பமுமாய்…

 

 “புரியலையே?” என்றான் ஜீவன்.

 

“பொண்ணுனு இல்ல பெண்தன்மைனு தானே அர்த்தம்?” – இமையா

 

 “ஆமா…கிட்டத்தட்ட” – ஜீவா

 

 இன்னும் குழப்பத்தின் சாயல் அவனிடம்.

 

 “I too respect woman okay!… பெண்கள் தெய்வம்! கொண்டாடப்படவேண்டியவர்கள்… தியாகப் பிறவிகள்னு டைலாக் அடிக்கவன்கூட யாராவது அவன ‘பொட்டை’னு கூப்பிட்டா ஒடனே ஓ அப்படியானு சும்மா விடுவானா? என்ன தைரியம் இருந்தா என்ன பாத்து அப்படி சொல்லுவனு துள்ளமாட்டான்!?… பேஸிக்கலி, பெண்… பெண்தன்மைனா பலவீனம்… கேவலம்… நம்மள ஒருத்தன் பொண்ணுனு கூப்பிட்டா அது அவமானம்னு ஆழமா பதியப்போய்தானே? நம்மள எவனாவது அப்படி கூப்பிட்டுருவானு பயந்து பயந்துதானே பிடிக்காத கன்றாவியெல்லாம் பிடிச்சா மாதிரியும் பிடிச்சதெல்லாம் பிடிக்காத மாதிரியும் பண்றாங்க? கலர்ல இருந்து ட்ரெஸ்… ஹேர்ஸ்டைல்… படிப்பு… ஏன் தன்னைத்தானே அழகுபடுத்திக்கறவரை…” – இமையா

 

“Toxic masculinity” – ஜீவா

 

“எக்ஸாக்ட்லி!!” என்றவளின் கண்களில் சிறு கீற்றாய் ஒளி.

 

 “நீங்க ரெண்டுபேரும் எப்போ இவ்ளோ க்லோஸ் ஆனிங்க!?” – அபி

 

அத்தனை நேரம் பேச்சிலேயே கவனமாய் இருந்தவர்கள் திடீரென அபியின் குரல் கேட்கவுமே நடப்பிற்கு வந்தனர்.

 

“உனக்குத் தெரியும்” – இமையா

 

அபி அசடுவழிய ஜீவனைப் பார்க்க அவனோ வரத்துடித்த சிரிப்பை கடவாயிலேயே அடக்கியவனாய் தன் முன்னிருந்த தட்டிலேயே கவனமாகினான்.

 

அபியின் மனதில் அப்படியொரு நிம்மதியுணர்வு ஆழியாய் படர்ந்தது.

 

அன்றைய தினம் அழகாகவே கடந்தது.

 

இவ்விரவில் அறையினுள் அடைந்த இமையாவிற்கு ஒன்று மட்டும் நன்றாகவே புரிந்தது. அது அவள் எப்படி பயந்தாளோ அந்தளவு இல்லையெனினும் அதைப்போலவே ஜீவனும் பயந்திருக்கிறானென்று. அது அவளைப்போலவே அவனும் தயங்கியிருக்கிறானென்று. அதற்கும் மேலாய் அபியின் வாழ்வில் முக்கியமான ஒருத்தியுடன் தானும் ஒட்டிப்போக… ஒத்துப்போக… நினைத்திருக்கிறானென… என்னவோ!  உள்ளுக்குள் உறைந்த பய வாசம் முழுதாய் அகலாவிடினும் ஓரளவு குறைந்தது போலொரு உணர்வு எழுந்தது. சற்று நேரத்திலெல்லாம் கண்ணயர்ந்தாள் இமையா.

 

 

நாட்கள் தேவதையின் சிறகுகளாய் படபடத்து பறந்தன…

 

அந்த நட்சத்திர ஹோட்டலின் லான் மின்மினி பிரதேசமாய் மிளிர்ந்துக்கொண்டிருந்தது. வெல்வெட் பின்னணியில் “அபிலாஷா  வெட்ஸ் ஜீவன்” என்றப் பெயர்கள் மினுமினுப்பதையே ஒருகணம் மென்மையாய் வருடியது இமையாவின் பார்வை. அங்கிருந்தபடியே  மேடையில் நின்றிருந்த இருவரையும் சேர்த்துதான்.

 

இதழில் சிறு மலர்வு… அகத்தில் சிறு தளர்வு…

 

ஒவ்வொருவராய் சென்று பரிசளித்து பின் அந்த நொடியை கேமிராவிலும் அடைத்துக்கொண்டனர். அபியின் பார்வை இமையாவையே தொட்டு மீண்டது. அவள் பார்த்தப்பொழுதிலெல்லாம் இவளும் இங்கிருந்து புன்னகைப்பாள்.

 

ஓரளவு கூட்டம் குறைந்ததும் மேடையேறியவளை இருவரும் பிடித்துக்கொண்டனர்.

 

“இப்போவாது வந்தியே” என்ற ஜீவனிடம் சிரித்தவள் அவர்களது கையில் சிறு பெட்டியொன்றை திணித்தாள். அவளையே சந்தேகமாய் பார்த்த இருவரும் அதை திறக்க அதனுள்ளோ கார் சாவியொன்று அவர்களைப் பார்த்து கண்சிமிட்டிக்கொண்டிருந்தது.

 

“என்ன மீ இது!?” – அபி

 

“நீதான இந்த கார் மாத்த சொல்லி சொன்ன” – இமையா

 

“அது உன்ன சொன்னேன்!!” – அபி

 

“உனக்கு பிடிச்சதுல…” – இமையா

 

“அதுக்குனு இவ்ளோவா!?” – அபி

 

“ரிஸப்ஷன் அதுவுமா மூஞ்ச அப்படி வைக்காத அபி!!” – இமையா

 

அபிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஒருபக்கம் என்றோ ஒரு நாள் அவள் பிடிக்குமென்று சொல்லியதை நினைவில் வைத்து வாங்கியிருக்கிறாளே என்று ஒரு புறம் நெகிழ்ந்தாலும் மறுபுறம் அதன் உண்மையான விலை தெரிந்ததாலோ என்னவோ அவளை முறைக்க மட்டுமே முடிந்தது.

 

“எனக்கெதுவும் கிஃப்ட் இல்லையா?” – ஜீவன்

 

சூழ்நிலையை சமன்செய்யும் பொருட்டு அவன் கேட்பது இருவருக்குமே புரிந்தது.

 

“அது ரெண்டு பேருக்கும்தான்” – இமையா

 

“எனக்கு வேற வேணும் இமையா” – ஜீவன்

 

“என்ன வேணும்!?” – இமையா

 

“ம்ம்…” என்று சிந்தனையாய் பார்வையை படரவிட்டவன் கடைசியில் அவர்களுக்கு எதிரில் வெகு அருகில் இருந்த குட்டி மேடையை சுட்டிக்காட்டி

 

“ஒரு பாட்டு?” – ஜீவன்

 

மென்முறுவலொன்றுடன் “டன்!!”  என்று இறங்கி சென்றவள் அங்கு ஏற்கனவே பாடிக்கொண்டிருந்தவர்களிடம் அனுமதியும் கிட்டாரும் வாங்கினாள்.

 

மைக்கை சரி பார்த்தவள் மற்றவர்களின் கவனம் அவள்புறம் திரும்ப மேடையில் நின்ற இருவரிலேயே கவனம் பதித்தவளாய் மெல்லிய முறுவலொன்றுடன் தனது மெல்லிசையை துவங்கினாள்.

 

“திஸ் இஸ் ஃபார் யூ!!”

 

 

நிழல் போல நானும் நடை போட நீயும்

 

தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்

 

கடல் வானம் கூட நிறம் மாறக்கூடும்

 

மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது

 

நான் வாழும் வாழ்வே உனக்காக தானே

 

நாள்தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே

 

எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே

 

 

 

உனைப்போல நானும் ஒரு பிள்ளை தானே

 

மலர் வந்து கொஞ்சும் கிளிப்பிள்ளை தானே

 

உனைப்போல நானும் மலர் சூடும் பெண்மை

 

விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை

 

நான் செய்த பாவம் என்னோடு போகும்

 

நீ வாழ்ந்து நான் தான் பார்த்தாலே போதும்

 

இந்நாளும் எந்நாளும் உல்லாசமே

 

 

என்று பாடி முடிக்க மெல்லிய கரகோஷம் ஒன்று பரவியது.

 

ஜீவனோ, “மேடம் கேட்டது நானு!!”- என்று போலியாய் சிணுங்க இவளோ

 

“ஹா..ஹா.. ரைட்!! இது உங்களுக்காக!!” என்றுவிட்டு 

 

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்

 

தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்

 

இளவேனில் உன் வாசல் வந்தாடும்

 

இளந் தென்றல் உன் மீது பண்பாடும்

 

இளவேனில் உன் வாசல் வந்தாடும்

 

இளந் தென்றல் உன் மீது பண்பாடும்

 

 நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்

 

தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்….

 

என்ற முதல் சில வரிகளை மட்டும் பாடிவிட்டு அவர்களை பார்க்க விரிய புன்னகைத்தவனாய் கட்டைவிரலை தூக்கி காட்டினான் ஜீவன். அவனருகில் விழிகளில் மையையும் தாண்டி தெரிந்த மெல்லிய நீர்த்திரையும் அதற்கு நேரெதிராய் வாய் நிறைய சிரிப்புமாய் நின்றிருந்த அபியையும் பார்த்திருந்த இமையாவிற்கு இமை தட்டி விழிப்பதற்கு கூட விருப்பமில்லை… அக்காட்சியை அப்படியே மனதில் நிறைத்துக்கொண்டாள். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!