நுட்பப் பிழையவள்(11)

நுட்பப் பிழையவள்(11)

11

~ நித்திலன் ~

மனதினுள் ஏகப்பட்ட எண்ணங்கள் வலை பின்னிகொண்டிருக்க வீட்டினுள் நுழைந்த இமையா நேராய் தனது படுக்கையில் விழுந்தாள். அப்பொழுதுதான் பார்வையில் பட்டது, அவள் படுக்கையில் கழட்டி எறிந்துவிட்டு சென்றிருந்த டீஷர்ட்டை பொன்னம்மா அந்த அறையின் மூலையிலிருந்த அழுக்கு கூடையில் எடுத்து போட்டுவிட்டு அறையை சுத்தம் செய்திருந்ததை. இன்னும் சில மணி நேரங்களில் அந்த கூடையும் இவ்வறையில் இருந்து வெளியேறிவிடும் துவைக்கவென.

ம்ம்.. மனங்களுக்கும் இப்படியொரு பொன்னம்மா இருந்திருந்தால் எத்தனை சுலபமாய் இருந்திருக்கும் இவ்வாழ்க்கை! வலியையும் நினைவுகளையும் உடனுக்குடன் சுத்தம் செய்தவாறு.

ஒரு ‘ப்ச்!’ உடன் நிமிர்ந்து படுத்திருந்தவளின் பார்வை சீலிங்கில் இருந்து இறங்கி அவள் அறை திரைச்சீலையின் நீல நிறத்தில் விழுந்தது. இந்த ஆறு மாதங்களில் இன்றுதான் முதன் முதலாய் நாலு சுவரைத் தாண்டி உணர்வுள்ள மனிதர்களைப் பார்த்திருக்கிறாள்.

திரைச்சீலையையே பார்த்திருந்தவளுக்கு இப்பொழுதுதான் தோன்றவே செய்கிறது. அது அவள் இன்று பார்த்தது அந்த நீல விழியனைத்தான் ஆனால் நீலவிழியை அல்ல! ‘ஒரு லென்ஸ்க்கும் நிஜத்திற்குமான வித்தியாசத்தைக் கண்டுகொள்ள முடியாதளவா அன்று அவள் மனநிலை இருந்தது?’ ஜீவனுக்குத் தம்பி இருப்பதில் அவள் அதிரவேயில்லை ஏனெனில் அதைப் பற்றி அவன் முன்பே சொல்லியிருக்கிறான்தான். ஆனால் வீட்டைவிட்டு வெளியேறிய தம்பி இத்தனை வருடம் கழித்து இப்பொழுது திரும்பி வந்ததை அவனே எதிர்பார்த்திருப்பானோ என்னவோ.

ஆம். முதலில் கல்யாணப் பேச்சு எழுந்தபொழுதோ இல்லை பெண் பார்க்கவென வந்த பொழுதோ கூட அமிர்தனும் வத்சலாவும் தங்களுக்கு இன்னொரு மகன் இருப்பதாய் வாய் திறந்திருக்கவில்லை! ஏனெனில் அவனது அத்தனை புகைப்படங்கள் முதல் உடைமைகள் வரை தீயில் போட்டு கொழுத்திவிட்டு தலை முழுகிய அமிர்தனின் ‘இனி எனக்கு ஒரு பையன்தான்’ ஐ தாண்டி எதையும் செய்யும் துணிவு வத்சலாவுக்கும் இருந்திருக்கவில்லை. ஆனால் ஜீவன்தான் எல்லாம் நிச்சயமாகப்போகிறது என்ற நிலைக்கு வந்ததுமே அவர்களிடம் நிச்சயம் சொல்ல வேண்டும் என்று நின்றது. இல்லையெனில் நாளை நாம் ஏமாற்று காரர்களாய் காட்சிப்படுத்தப்படுவோம் என்று எங்கு அடித்தால் வலிக்குமெனப் புரிந்து அவன் சொல்ல அதன் பின்னரே அவர்கள் சொல்லியது.

முதலில் என்ன இது? என்று சற்றே பின்வாங்க நினைத்த அபியின் பெற்றோரும் பிறகு அவர்கள் மொத்த கதையும் ஒளிவு மறைவு இன்றி சொல்லவே அதனாலென்ன? என்று அவர்களுக்கு ஆறுதல் சொல்லும் இடத்திற்குத் தள்ளப்பட்டனர்.

இமையாவிற்கும் நன்றாய் நினைவில் இருக்கிறது. அபி இவளிடம் அந்த வீட்டைவிட்டு வெளியேறிய/வெளியேற்றப்பட்ட இரண்டாவது மகனைப் பற்றிச் சொல்லியிருக்கிறாள்தான். ஆனால் அது வெறும் தகவலாகவே போய்விடக் காலப்போக்கில் மற்ற கல்யாண வேலைகளில் அதை மறந்தே போயினர். அவன் கல்யாணத்திற்குக் கூட வராதது பெரியவர்களுக்குச் சற்று உருத்தலாகவே இருந்தாலும் அது மகளின் கல்யாணத்தில் மறைந்துபோனது.

ஜீவன் பெற்றவர்களின் எதிர்பார்ப்புகளிற்குள் வாழும் பிள்ளை. ஆனால் நித்திலன் அப்படியில்லை! அவன் எந்தவித எதிர்பார்ப்புகளிற்குள்ளும் அடங்காமல் தனது விருப்பு வெறுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பிள்ளை. பிரச்சனையே அங்கிருந்துதான் தொடங்கியது!

ஜீவனின் முதல் மதிப்பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட கவனம்கூட நித்திலனுக்கு கொடுக்கப்படாமல் போக, ஏற்கனவே வாலு பையனாய் வலம் வந்த நித்திலன் இன்னும் இன்னும் சேட்டைகள் பல செய்து அவர்களின் கவனத்தை தன் புறம் திருப்ப நினைத்தான். அவர்களது கவனமும் திரும்பியது தான், ஆனால் தப்பான விதத்தில். ஜீவன் அப்பா அம்மா சொல் பேச்சு கேட்டு நடக்கும், நன்றாய் படிக்கும், நல்ல பிள்ளையாகிட. நித்திலன் சொல் பேச்சு கேளாத, சுமாராய் கூட படிக்காத, வாலுத்தனம் செய்யும் தலைவலி ஆகிப்போனான். இந்த மதிப்பீடு வீட்டில் மட்டுமின்றி ஒரே பள்ளியில் படிப்பதாலோ என்னவோ அங்கேயும் ‘உன் அண்ணனைப் பார்!’ என்று இதே பாட்டுதான். நித்திலன் படிப்பில் ஆர்வமற்றவன் அல்ல! அவனும் முதலில் முடிந்தளவு படிக்கத்தான் செய்தான், ஆனால் எப்படி முயன்றும் அவனது மதிப்பெண்கள் ஒருகட்டத்திற்கு மேல் உயரவேயில்லை, முக்கியமாய் ஜீவனது மதிப்பெண்களைவிட உயரவே இல்லை! காலம் செல்ல செல்ல எல்லாவற்றுக்கும் தன்னை ஜீவனுடன் ஒப்பிட வெறுத்தே போனான். முதலில் முயற்சி செய்துகொண்டிருந்த அளவுகூட அதற்குப் பின் செய்யவில்லை. எல்லாம் அர்த்தம் அற்றதாய் பட்டது. ஏனோ தான் எவ்வளவுதான் முயன்றாலும் தனது முயற்சிகளை யாரும் மதிக்கப்போவதில்லை என்று உறுதியானது, தான் என்றுமே ஜீவன் ஆகப்போவதில்லை என்பதை உணர்ந்த கணம் சற்று கசப்பானதாய் தான் இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு சீக்கிரமே உணர்ந்தும்விட்டான் நான் ஏன் ஜீவனாய் இருக்க வேண்டும்? நான் நானாகத்தானே இருக்க வேண்டும் என. ஆனால் இது எல்லாத்துக்கும் நடுவிலும் அவன் ஒன்னும் ஜீவனை வெறுத்துவிடவில்லைதான். இன்னும் சொல்லப் போனால் அவ்வீட்டில் அவனுக்குப் பிடித்த, அவனைப் புரிந்துகொள்ளக் கூடிய ஒருவன் என்றால் அவன் ஜீவன்தான். அவன் பார்த்த வரையில் ஜீவன் மட்டும் ஒன்றும் பெரிய சந்தோஷ வாழ்வு வாழ்ந்துவிடவில்லைதான். இன்னும் சொல்லப்போனால் அவனுக்கு தன் நிலையைவிட ஜீவனின் நிலைதான் மிக மோசமானதாய் பட்டது. அவனால் அவனுக்குப் பிடித்த எதையுமே செய்ய.. ஏன்? எனக்கு இது பிடிக்கும் எனச் சொல்லக்கூட முடிந்திருக்கவில்லை! அவன் மேல் வைக்கப்பட்ட எதிர்பார்ப்புகள் அனைத்தும் அவனுக்கு மூச்சு முட்டின. ஜீவன் தனக்குப் பிடித்தது அனைத்தையும் விட்டுவிட்டு “பிடித்ததைச் செய்யுங்கள்!” என்று எழுதிக்கொண்டிருந்தான். அவன் மற்றவரின் எதிர்பார்ப்பை உடைத்துக்கொண்டு செய்த ஒன்றென்றால் அது அவன் மீயாழை தூக்கிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறியதாய் தான் இருக்க வேண்டும். அவனுக்குத் தம்பி என்றால் அத்தனை பிரியம். இவனுக்கும் அண்ணன் என்றால் அத்தனை அன்பு இருந்தது.

ஜீவன் இப்படியிருக்க நித்திலனோ வேறு மாதிரி இருந்தான். அவன், அவனுக்கு எது சரியோ அப்படியே செய்ய ஆரம்பித்துவிட்டான். ஜீவன் பத்தாவதில் பள்ளியிலேயே முதல் மாணவனாய் வர நித்திலனின் எழுபது சதவிகிதம் கண்டுகொள்ளப்படவே இல்லை. ஜீவன் பன்னிரண்டாவதில் அதைவிட அதிகம் எடுத்துவிட இங்கோ இவன் இன்னொரு முறை பரீட்சை எழுத வேண்டிய நிலை. அந் நாட்களில் எல்லாம் வீட்டில் நிம்மதியாய் ஒரு பிடி சோறு உண்டுவிட முடியாது அவனால். அப்படிப்பட்ட பேச்சுக்கள் அவனைச் சுற்றி. இருந்தும் வேண்டுமென்றே சாவதானமாய் உட்கார்ந்து உண்பான். ஆம்! அவனுக்கு அது மிகப்பெரிய அடியே! அவனே எதிர்பார்த்திருக்கவில்லை. அவனுடன் பயின்ற மற்ற மாணவர்கள் அனைவரும் அடுத்தடுத்து எனச் சென்றுவிட அவன் மட்டும் அடுத்த பரிச்சைக்குக் காத்திருந்தான். அந்த காத்திருந்த சமயம்தான் இருப்பதிலேயே நரகமாய் இருந்தது அவனுக்கு. இப்பொழுது தான் என்ன செய்ய வேண்டும்? என்பதே பூதாகரமாய் நின்று அச்சுறுத்தியது. தந்தை சற்று கரிசனமாய் இல்லாவிட்டாலும் குத்திக் காட்டாமல் பேசினால்கூட அவரிடம் சென்று ஆலோசனை கேட்டிருப்பான். ஏனோ தனக்கென்று யாருமே இல்லை என்ற உணர்வு பல காலமாகவே உள்ளுக்குள் படிந்துபோக அவன் அவர்களை நோக்கி ஓர் எட்டு எடுத்து வைக்கவே யோசித்தான். இப்படி ஏற்கனவே நொந்துபோய் கிடந்தவனை அவர் வேறு குத்திக் காட்டிக்கொண்டே இருக்க அவனோ தனக்கு வருத்தம் என்பதைத் துளியும் வெளியில் காட்டிவிடக் கூடாது என்பதில் திண்ணமானான். ஒரு நாள் இவன் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது வந்தவர் சோறு ஒன்னுதான் கேடு! எப்படிதான் வெக்கமின்றி உண்ண முடிகிறதோ என்பதைப் போலப் பேசிவிட உள்ளுக்குள் அப்படியொரு அடி! ஆனால் அதற்கு நேர்மாறாய் ‘இப்படிதான்’ என்பதைப்போல வேண்டுமென்றே காலை நீட்டிக்கொண்டு சௌகரியமாய் அமர்ந்துகொண்டு மூக்கு முட்ட

உண்ண ஆரம்பித்தான் அவர் பார்க்கவே. இப்படி ஏட்டுக்குப் போட்டியெனப் போய்க்கொண்டிருக்க அவர்கள் இடையேயான உறவெனும் மெல்லிய நூலும் இற்றுப்போகத் துவங்கியிருந்தது. அவர் இதைச் செய்! என்று ஒரு படிப்பைக் கொண்டு வர அவனோ அதற்கு நேரெதிராய் தனக்குப் பிடித்த ஒன்றைக் கொண்டு வந்தான். முதலில் மறுத்தவர் பிறகு எக்கேடோ கெட்டு போ என்று விட்டுவிட்டார். காலம் செல்ல செல்ல அவனோ அவரை கடுப்பேற்றவெனவே பல செய்தான். ஏனோ அவனுள் ஒரு பாதி, எனக்கு இவ்வளவு வலித்தது! வலிக்கிறது! நீதானே வலிக்க வைத்தாய்? ஆனால் என்னவோ நான் உனக்கு வலிக்க வைப்பதுபோல் பேசுகிறாயே! இந்தா இதை நீயே வைத்துக்கொள்! நீ எனக்கு என்ன செய்தாய் என்பதை நீயே தெரிந்துகொள்! என்று வேண்டுமென்றே பலதை செய்தான். நிறையச் சண்டை வந்தது. பல முறை அவன் வெறுப்பேற்றவென செய்யாமல் சாதாரணமாய் இருந்ததற்கும். ஒரு கட்டத்தில் பெரிய சண்டை ஒன்று வெடித்தது. இவன் வெளிநாட்டில் வேலை கிடைக்க இருப்பதாகவும் அங்கிருக்கும் நண்பனுடன் சென்று தங்கப் போவதாகவும் சொல்ல அவரோ, இவன் இங்கு ஊர் சுத்தியது பத்தாதென அங்கு போவதாகவும். நீ படித்த லட்சணத்திற்கு உனக்கெல்லாம் யார் வேலை கொடுக்க போகிறார்? என்பதை போல பேசிவிட அவனால் அதை ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை. அவன் ஜீவனை போல டாப்பராய் இல்லாமல் இருக்கலாம், ஆனால் அதனால் அவனெல்லாம் ஒன்றுமே இல்லை என்பதைபோல் பேசுவது என்ன நியாயம்? ஏன் அவன், அவன் வகுப்பிலேயே முதல் பத்து மாணவர்களில் இல்லாமல் போகலாம், ஆனால் அதற்காக அவனது உழைப்பெல்லாம் ஒன்றுமில்லை என்றாகிவிடுமா? பேச்சு வளர்ந்துகொண்டே போக ஒரு கட்டத்தில் அவர், அதான் முடிவு பண்ணிட்டல்ல என் வீட்ட விட்டு கிளம்பு! என்றுவிட அவனும் மறு பேச்சு பேசாமல் விடுவிடுவென உள்ளே சென்று பெட்டியை கட்டிக்கொண்டு கிளம்பிவிட்டான்.

அன்றுதான் அவன் இமையாவை முதன் முதலாய் சந்தித்தது.
இனி என்ன இருக்கிறது? என்ற மனநிலைதான் பலமும் அதே சமயம் எல்லாவிதமான கிறுக்குத்தனங்களையும் செய்ய ஒரு அசட்டுத்தனமான தைரியத்தையும் கொடுத்துவிடும் போலும்.

விட்டத்தை வெறித்தபடி படுத்திருந்த இமையா தலைக்கு மேல் நெற்றியில் இருந்த கரத்தை எடுத்து ஒரு முறை திருப்பி பார்த்தாள். நிறையவே வலித்தது. கையில் இருந்த கட்டையே பார்த்தவளினுள் ஏதேதோ நினைவுகள் வரிசை கட்டின. அது ஏழு வருடங்களுக்கு முன் அவள் சித்தப்பா குடும்பம் சொத்து பிரித்துச் சென்ற பிறகு நடந்தவை. அதாவது நீலவிழியனை சந்தித்த அடுத்த நாள்.

“ப்ச்!! இதெல்லாம் என்ன காயப்படுத்திட முடியுமா?? யு நோ ரைட்!? நத்திங் கேன் ஹர்ட் மீ!!” என்று லேசாய் தலையை உலுக்கிச் சொல்லியவளையே விழியெடுக்காமல் பார்த்திருந்த அபியின் பார்வையில் கூர்மை கூடியது. அதைக் கண்டவளோ,

“ஏன்!?” என்றிட

“நீ என்ன பொம்மையா?” என்றதின் உள்ளர்த்தம் உணர்ந்துவிட அவளையே இவளும் இவளை அவளுமாய் அழுத்தமாய் பார்த்திருந்தனர்.

“ஒத்துக்கோ மீ நீயும் காயப்பட்டனு! அதுலென்ன வந்துடப்போது?” என்றதுக்கு இவளிடம் பல பதிலிருந்தும் ஒன்றும் வார்த்தையுரு பெற்றிடாமல் போனதென்றால் மறுபுறம் அபியின் குரலில் இருந்த அழுத்தத்தில் “ஆமா” என்று மெல்ல அசைந்தது இவள் தலை.

நான் காயப்படுத்திவிட்டேன் என்று சுலபமாய் சொல்ல முடிந்தவளுக்கு தானும் காயப்பட்டோம் என்பதை ஏற்று வெளியில் சொல்ல முடியாது போனதேனோ? என்னை யாராலும் காயப்படுத்த இயலாது என்ற கேடயம் எந்த நொடியில் அவள் உணர்வுகளின் சிறையானது? பாதுகாப்பிற்கும் சிறைக்குமிடையிலான நூல் அறுந்ததே அறிந்திராமல் இருக்கப்போய் தான் அத்தனை உணர்வுகளிலும் இத்தனை இறுக்கமோ?

ம்ம்.. எப்படி அவளால் தனது வலி, சுகம், உணர்வுகளெனச் சொல்லாமலே உணர்ந்துகொள்ள முடிந்தது? இட் இஸ் டூ குட் டு பி ட்ரூ! எனப் பல முறை நினைத்திருக்கிறாள். ஒருவேளை அதனால்தான் அது எல்லாம் வெறும் கனவு என்பதைப் போலச் சட்டென மறைந்துவிட்டாளோ?

மூச்சு முட்டும் அவளது நிதர்சனத்துக்கு நடுவில் அதி அற்புதமான கனவு ஒன்றைத் தந்துவிட்டு அவள் அதை ஆசையாய் காண தொடங்கும்பொழுதே தூக்கத்தையும் கலைத்து விழிக்க வைத்துவிடுவது எவ்விதத்தில் சரி? இது எம்மாதிரியான குரூரம்.. பிடுங்கத்தான் போகிறாய் என்றால் ஏன் கொடுக்கிறாய்? ப்ச்.. உணராத விடயங்களை அவள் தேடப்போவதில்லையே.

மறுநாள்

வீட்டினுள் அங்குமிங்குமாய் நடந்தபடி வேலையில் ஆழ்ந்திருந்த ஜீவனில், அப்பொழுதே அறையில் இருந்து வெளியில் வந்தவனின் பார்வை படிந்தது.

எப்பேற்பட்டவன் இவன்? அவன் பார்த்து வளர்ந்த ஜீவன் எப்படியிருந்தான்? ஏன் இந்த அப்பா அம்மா என்னவோ அவர்களால் மட்டுமே சரியான முடிவு எடுக்க முடியும் என்பதைப்போல அவர்களே ஒன்றை நினைத்துக்கொண்டு அவர்களே ஒன்றைச் செய்தும் வைக்கின்றனர்? இவனிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே? ப்ச்.. நான்தான் வேண்டாத பிள்ளை.. ஆனால் இவன் செல்ல மகன் தானே! இவனிடம் கேட்பதில் என்ன வந்துவிடப் போகிறது?

இத்தனை வருடம் பொருத்துப் போனவன் இன்று தன் மகளென்று வரவும் வெளியேறிவிட்டான் என்று புரிந்தது.

ஏழு வருடங்களுக்கு முன் இவன் வீட்டை விட்டு வெளியேறும் பொழுதும் சரி! அதற்கு முன்னும் சரி, இவனுக்காய் இருந்தது ஜீவன் மட்டும்தான். இவன் வீட்டை விட்டு வெளியேறிய அன்று ஜீவன் வீட்டில் இருந்திருக்கவில்லை. இல்லையெனில் அன்று அவனை அப்படியே விட்டிருக்கமாட்டான் தான். வீட்டிற்கு வந்தவனுக்குத் தம்பியும் அப்பாவும் சண்டையிட்டு அவன் வீட்டை விட்டே சென்றுவிட்டான் என்று தெரியவும் இடிந்தே போனான். ஃபோனை எடுத்துப் பார்க்க அதில் அவனிடம் இருந்து இவனுக்காய் இவன் எதிர்பார்த்த ஒரு வரி குறுஞ்செய்தி கூட இருக்கவில்லை. ஜீவன் இப்படியொன்றை எதிர்பார்த்திருக்கவேயில்லை! தன்னிடம் ஒரு வார்த்தைகூட சொல்லாமல் அவன் கிளம்பிவிடக்கூடும் என்று அவன் நினைத்திருக்கவில்லை. நித்திலனின் நண்பர்களுக்கு அழைத்து விசாரித்தான். அவன் அடிக்கடி செல்லும் இடங்களுக்குச் சென்று தேடினான். அவன் மட்டும் கிடைக்கவேயில்லை. பார்க்கின் நடைபாதையில் அமர்ந்து ஓ வென அழுதது இப்பொழுதும் அவனுக்கு நினைவிருக்கத்தான் செய்யும். அதன் பிறகு மாதத்திற்கு ஒரு முறை ஜீவனிடமிருந்து ஒரு மெயில் வந்துவிடும் இவனுக்கு. வாசிக்கவேன், திறக்கக் கூட மாட்டான். எங்குத் திறந்தால் பதிலளித்துவிடுவோமோ என்ற பயம்! ஏழு வருடங்களாய் சரியாய் வந்துகொண்டிருந்த மெயில் கடந்த சில மாதங்களாய் வராமல் போக, எதுவோ சரியில்லை என்று உள்ளுணர்வு வேறு சொல்ல, முதல் முறையாய் அவனது மெயில்கள் அத்தனையையும் திறந்து வாசித்தான். தேதி படி வாசித்து வந்தவனுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச நிம்மதியும் பறிபோயிருந்தது. ஜீவன் எல்லாவற்றையும் எழுதியிருந்தான். அவன் கிளம்பிய மறு நாள் நடந்தவையில் இருந்து இமையா வரை எல்லாவற்றைப் பற்றியும்! கூடிய விரைவில் அவன் அப்பாவாகப் போகிறான் வரை! ஆனால் அதற்கு மேல் அவனிடமிருந்து ஒன்றுமே வராததுதான் நித்திலனை பயம்கொள்ள செய்தது. இவன் மெயிலை திறந்த நேரமோ என்னவோ, அத்தனை நாட்களுக்குப் பிறகு மீண்டுமொரு மெயில் வந்து விழுந்தது அவனது பெட்டிக்குள். அவசர அவசரமாய் திறந்தான். மற்றதைப் போல நீளமாய் இல்லாமல் நாலே வரிகள் தான் இருந்தது.

“அபி நம்மள விட்டு போயிட்டா நிலா.. நான் வீட்டைவிட்டு வந்துட்டேன். நீ கொஞ்சம் வரியா? எனக்கு என்னவோ போல இருக்கு”

அவ்வளவுதான். வேறு எதைப் பற்றியும் சிந்திக்காமல் கிளம்பிவிட்டான் நித்திலன். அந்நொடி தொடங்கி இங்கு வந்து ஜீவனை காணும் வரையிலுமே உள்ளுக்குள் ஆழிப்பேரலைகள் தான்!

இவனைக் கடந்து வீட்டின் மறு பக்கம் சென்றவன் ஒரு கணம் நின்று, “என்ன நிலா?” என்றான்

ம்ம்.. என்று மானசீகமாய் தலையை உலுக்கிக் கொண்டவன் மற்றவனிடம், “நான் வெளில போயிட்டு வந்துடறேன்” என்றுவிட்டுக் கிளம்பினான்.

அவன் கிளம்பிச் சென்ற சில மணி நேரங்களில் இமையா அவ்வீட்டின் வாசல் முன் அழைப்பு மணியை அழுத்த கை உயர்த்திவிட்டு பின் மீயாழ் நினைவு வரக் கதவை மட்டும் லேசாய் தட்டிவிட்டுக் காத்திருந்தாள்.

வெளியில் வந்த ஜீவனும் ‘வா’ என்று லேசாய் தலை அசைத்து, மென்குரலில் அழைத்துவிட்டு உள்ளே சென்றான், ஏதோ அவள் தான் வந்தது என்று அறிந்ததுபோல. அவன் பின்னால், அவனைத் தொடர்ந்து நடந்துவந்துக்கொண்டிருந்தவளின் பார்வை வீட்டினுள் அலைபாய, அதை உணர்ந்தவன் போல, “அவ தூங்கிட்டிருக்கா இமையா” என்றான் அதே மென் குரலில்.

பதிலுக்கு அதற்குச் சற்றும் சம்பந்தமின்றி, “ஏன் அந்த பேர் ஜீவா?” என்றாள் இமையா.

அதை எதிர்பார்த்ததுபோல லேசாய் மூச்சிழுத்துவிட்டவன் பிறகு, “அது அபி வச்ச பேர்” என்றான்.

இதை எதிர்பார்த்திருந்தவள்தான்! ஆனால் அது இது தான் என்று இன்னொருவர் வாயால் உறுதிப்படுகையில் சற்று அழுத்தமாய் தான் இருந்தது அவளுக்கு.

“அதான் ஏன்னு கேக்கறேன் ஜீவா?”

இம்முறை ஆழ மூச்சிழுத்துவிட்டவனுக்கு முன் புகைப்படலங்களாய் பழைய நினைவுகள் வந்துபோயின.

“ஜீவா! ஜீவா! இங்க வா வா! இதுல எந்த பேர்னு பாரு!” அலுவலகத்தில் இருந்து அப்பொழுதே வந்திருந்த ஜீவன் தங்களது அறையினுள் நுழையவும், படுக்கையில் அமர்ந்து கையில் ஒரு நோட்பேடையும் வைத்துக்கொண்டு எதையோ செய்துகொண்டிருந்த அபியின் ஆர்வக் குரலே அவனை வரவேற்றது.

பையை மேசையில் வைத்துவிட்டு அவனும் சென்று அவளெதிரில் அமர்ந்துகொண்டான்.

“இந்த பேர் எப்படி இருக்கு?” என்று நோட்பேடை அவனிடம் கொடுத்தாள். அதில் ஒரே ஒரு பெயர் மட்டும்தான் இருந்ததைக் கண்டு அவன் அவளைக் குழப்பமாய் பார்க்க அவளோ, “பொண்ணா இருந்தா என்ன பேர் வைக்கலாம்னு பார்த்துட்டிருந்தேன், மனசு இத தாண்டி போகல! அவ்ளோ பிடிச்சிட்டு” என்றாள் சிறுபிள்ளையாய்.

அந்த நோட்பேடில் ‘மீயாழ்’ என்று அபியின் கையெழுத்தில் இருந்த பெயரையே பார்த்திருந்தவனுக்கும் ஏனோ அப்பெயரைத் தவிர்த்து வேறு பெயர்கள் தோன்றவில்லை. இருந்தும் அவளிடம்,

“சரி.. ஒருவேளை பையனா இருந்தா?” என்றான் வேண்டுமென்றே வம்பிழுக்கும் குரலில்,

“அடுத்த பக்கத்த பாரு!” என்றுவிட அதிலும் இரண்டு மூன்று பெயர்கள், “மீனூரன், மீனன், மீகன்..” என்று வாசித்துக்கொண்டே போனவன், “என்ன எல்லாம் மீ வரிசையிலேயே இருக்கு?” என்றான் கிண்டலாய்.

அத்தனை நேரம் விளையாட்டுத்தனமாய் சிரித்துக்கொண்டிருந்தவளின் சிரிப்பில் சிறு முதிர்ச்சி மேலிட, கீழே மெத்தை விரிப்பை ஒருகணம் பார்த்தவள், தனது வயிற்றின் மீது மென்மையாய் இரு கைகளாலும் அணைத்துக்கொள்வதுபோல் வைத்து, “இந்த மீ குட்டிய பத்திரமா பாத்துக்க போறேன்” என்றாள்.

தன் முன்னால் அமர்ந்திருந்தவளின் பாதத்தை அவன் ஆறுதலாய் பிடித்துக்கொண்டான். அவனுக்குப் புரிந்தது. இமையா என்பவள் அபியின் மனதில் எப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறாள் என்று. எந்தளவு இவள் மனதில் பதிந்திருந்தால், எந்தளவு இவள் மனம் கையாலாகாத தனத்தை உணர்ந்திருந்தால் இப்படி ஒன்றை மாற்று வழியாய் நினைத்திருக்க வேணும்? இது அதுதானா என்று அவனுக்கு நிச்சயமாய் தெரியாதுதான்! இருந்தும் அதுவாய் கூட இருக்கலாம் என்றதன் சாத்திய கூறுகளை நினைத்துக்கொண்டான். காரணம் தெரியாமல் போகலாம்! ஆனால் அவனால் அபியை உணர்ந்துகொள்ள முடிந்தது. அது என்ன உணர்வு என்றே புரியாவிட்டாலும் அவனால் அதை உணர முடிந்தது. இதுவும் அப்பா அம்மா, தாத்தா பாட்டி, பெயர்களை வைப்பதுபோலத்தான். இந்த இரண்டிற்கும் இடையேயான அடிப்படை உணர்வுகள் ஒன்றே தான் என்று அவன் அறிவான்.

இவனது எண்ண அலைகளை உடைப்பதுபோல, “சரி சரி விடு! அடுத்த குழந்தைக்கு ஜீ-ல பேரே கெடைக்காட்டியும் ஜிகர்தண்டானாவது வச்சிடுவோம்!” என்றாள். அவளது கேலி உணர்ந்தவனோ “உன்ன!!” என்றவாறு பற்றியிருந்த அவள் பாதங்களைக் கூசச் செய்தான்.

அந்த அறை முழுதும் எதிரொலித்த அவளது சிரிப்பொலியின் மிச்சம் இவ்வறையில் தேய்ந்து மறைவதுபோல் ஒரு உணர்வு.

இமையா வெகு நேரம் தொட்டில் அருகில் அமர்ந்துகொண்டு தூங்கும் மீயாழை பார்த்துக்கொண்டிருந்தாள். திடீரென எழுந்துகொண்டவள், “நான் வரேன்” என்றுவிட்டு அந்த அறையிலிருந்து வெளியேறினாள். ஜீவன் தடுக்கவில்லை.

முதல் நாளைவிட இன்று சற்று அதிக நேரமே அங்கு இருந்திருந்தாள்.

அன்றைக்குப் போல் இன்றும் இவள் வாசலுக்கு வரவும் இவள் வழியை மறித்தவாறு ஒரு உருவம்! நிமிர்ந்து பார்த்தாள். அவனேதான்! அப்பொழுதுதான் அவனும் வீட்டினுள் நுழைந்துகொண்டிருந்தான்.

அவளைப் பார்த்ததும் கையிலிருந்த இரு பைகளையும் வீட்டின் உட் பக்கமாய் வைத்துவிட்டு நிமிர்ந்தவனின் இதழில் சிறு புன்னகை அவளுக்காய் மலர்ந்திருந்தது அதனுடனே சேர்ந்த ஆர்வம் மிகுந்த விழிகளும்.

“என்ன தெரியலையா?” என்றான் விழிகளில் அப்பட்டமாய் ஆர்வத்தைத் தேக்கி வைத்துக்கொண்டு. அவளை மீண்டும் சந்திக்கக்கூடுமென நினைத்திருக்கமாட்டான் போலும்.

அவள் பதிலேதும் இன்றி அதே வெற்று பார்வையுடன் நிற்க அவனே தொடர்ந்தான், “ஏழு வருஷம் முன்னாடி.. க்ளப்ல.. ம்ம்?” என்று தலையைச் சாய்த்துக் கேட்க இப்பொழுதும் அவளிடம் அதே பாவம் தான்.

“நாம கிஸ் கூட பண்ணோமே!” என்றுவிட்டு அவள் முகத்தையே பார்த்தவனுக்கு அதில் ஒன்றையும் கண்டுகொள்ள முடியவில்லை. அவளோ, அத்தனை நேரம் அசையாது நின்றவள், அதற்காகவே காத்திருந்தவள் போல அவனையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டே, அவன் எதிர்பாரா சமயம் சட்டெனக் கையை அறைவதுபோல ஓங்கவும் அதை எதிர்பார்த்திராதவன் பயத்தில் உடல் பதறக் கண்களை மூடிக்கொள்ளவும் சரியாய் இருந்தது.

திடீரென்று தன்னை கடந்து சென்ற வாகனம் அடித்துச் சென்ற ராட்சத ஹாரன் ஒலியில் ஒரு கணம் உடல் பதறி கண்களை மூடிக்கொண்டு நின்ற அபியின் தோற்றம் அவள் கண் முன் வந்து சென்றது. கையை இறக்கிவிட்டாள். அவன் கண்களை திறந்தபொழுது அவள் அவனைச் சுற்றிக்கொண்டு வெளியேறிவிட்டிருந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!