நெஞ்ச தாரகை 3
நெஞ்ச தாரகை 3
கசங்கிய மலர் போல கட்டிலில் அமர்ந்து இருந்தாள் எழில் மதி.
அவள் இதயத்தை கசக்கி போட்டவனோ உணர்ச்சி துடைத்த முகத்தோடு அவளைப் பார்த்தான்.
“நந்தவனம் மாதிரி இருக்கிற இந்த வீட்டை கட்டி ஆளலாம்னு தானேடி என் மேலே பொய் பழி போட்ட… நீ இனி இந்த வீட்டோட எஜமானி கிடையாதுடி… வேலைக்காரி” என்றான் அவள் முடியை கொத்தாக பிடித்தபடி.
அவன் எத்தனை வதம் செய்தாலும் அவள் சிரித்த வதனத்தோடே அவனை எதிர் கொண்டாள்.
“உன் பக்கத்திலே நான் இருந்தா போதும் மாமா. அது வீட்டுக்காரியா இருந்தாலும் சரி வேலைக்காரியா இருந்தாலும் சரி” என்றவளோ தன் கன்னத்தை முன்பு அவன் எப்படி இழுத்து குவித்து பிடித்தோனா அதே போல் பிடித்துவிட்டு அவன் எதிர்வினையாற்றுவதற்குள் வேகமாய் குளியறைக்குள் புகுந்து கொண்டாள்.
தன் கன்னத்தில் மேல் பட்ட அவள் கைரேகைகளை அழுத்தமாய் தேய்த்து அழித்தபடியே, “ஹே இந்தா பாருடி… என்னமோ நான் உன் அத்தை மகன் மாதிரி மாமானு கூப்பிட்டு வெச்ச வாயை பிளந்துடுவேன்… என் மேலே மட்டும் உன் விரல் படட்டும்… வெட்டி விறகு அடுப்புலே போட்டுடுவேன் ஜாக்கிரதை” என்றான் கோப உருவெடுத்து.
“மாமா நீங்க இதே மாதிரி டயலாக் பேசிட்டு நின்னுட்டு இருந்தீங்க. அப்படியே பாவடையோட பாத்ரூம்லே இருந்து வெளியே வந்துடுவேன்… ஜாக்கிரதை” என்று எழில் மதி உள்ளிருந்து மிரட்ட அதற்கு மேலும் அங்கே நிற்பானா அந்த சாமியார்!
மிரண்டு வெளியே ஓடி விட்டான்.
அவன் சென்றதை காலடி வைத்து உணர்ந்தவள் மெல்ல சிரித்துக் கொண்டாள்.
“மாமா நீ வெளியே தான் கோவக்காரன் மாதிரி. ஆனால் உள்ளுக்குள்ளே பூ போல மனசு காரன்… இந்த புயலை பூவா மாத்தலை நான் எழில் இல்லை” என்று முடிவு எடுத்தவள் தண்ணீரை தலையில் மீது கொட்டி தன்னை குளிர்வித்து கொள்ள முயன்றாள்.
இங்கோ அறையில் முகில் நந்தன் தூங்கும் தன் மனைவியையே வெறித்து பார்த்தபடி இருந்தான்.
கூட்டிற்குள் ஒடுங்கும் நத்தைக்குட்டியாய் அந்த கட்டிலில் சுருண்டு படுத்துக் கொண்டு இருந்தாள் அவள்.
முகில் திரும்பி மணியைப் பார்த்தான். நேரம் எட்டரையை தாண்டி இருக்க ஒரு பெரு மூச்செடுத்து மெல்ல அவள் தோளை தொட்டான்.
அவன் தொட்ட அடுத்த கணமே அந்த நத்தை மேலும் சுருண்டு கொண்டு மருண்டு போய் கண் விழித்தது.
தன்னை பார்த்தவுடன் சடாரென எழுந்து அமர்ந்து உடையை சரி செய்தவாறே நடுங்கிய மேகாவைக் கண்டு முகில் தலையில் அடித்துக் கொண்டான்.
“ஏன்டி, இப்போ எதுக்கு என்னைப் பார்த்து மிரள்ற?” என்றான் அதட்டலாக.
ஏற்கெனவே அரண்ட கோழியாய் மிரண்டு போய் இருப்பவள் அவன் அதட்டலில் கட்டிலில் ஓரம் ஒடுங்கிக் கொண்டு “பயமா இருக்கு உங்களை பக்கத்துலே பார்க்க” என்றாள் திக்கி திணறி.
அந்த பதில் அவன் முகத்தில் விரக்தியை வர வைத்து இருந்தது.
“இதே வார்த்தையை நீ, நேத்து சொல்லியிருக்கலாம்லே. எனக்கு இவரைப் பார்த்தா பயமா இருக்கு. கல்யாணம் கட்டிக்க முடியாதுனு… ஏன்டி சுத்தி இருக்கிறவங்க சொன்ன வார்த்தையை கேட்டு பூம்பூம் மாடு மாதிரி தலையாட்டிட்டு நின்ன?” என்று படபட பட்டாசாய் பொறிய அவள் கண்களில் மேலும் மிரட்சி.
“அது அப்பா அம்மா நமக்கு தெய்வம் மாதிரி… அவங்க என்ன சொன்னாலும் சரியா இருக்கும்னு தான் உங்க கையாலே தாலி வாங்கிக்கிட்டேன்” என்றவளை என்ன செய்வது என்று அவனுக்கு புரியவில்லை.
‘பச்சை புள்ளையை பஞ்சு மிட்டாய் காட்டி ஏமாத்தி எனக்கு கல்யாணம் பண்ணி கொடுத்துட்டாங்களோ’ அவன் புருவ முடிச்சு பலத்த யோசனையை காட்டியது.
“இங்கே பாரு பாப்பா” என அவளை நோக்கி போக, அந்த பாப்பாவோ மேலும் தனக்குள் குறுகிக் கொண்டது.
“ப்ச்ச் சும்மா சும்மா என்னைப் பார்த்து நத்தைக்குள்ளே சுருண்டுக்காதே டி… அம்மா அப்பாவை மட்டும் தெய்வம்னு சொல்றியே… அப்போ உன்னை கட்டின புருஷன் நான் தெய்வம் இல்லையா? எதுக்கு என்னை பார்த்து மிரள்ற?” என்று கேட்ட அடுத்த நொடி படபடத்தது அந்த பட்சி.
“அச்சோ என்ன இப்படி சொல்லிட்டிங்க… நீங்க தாங்க இனி எனக்கு தெய்வம்… என்ன சொன்னாலும் நான் யோசிக்காம செய்வேன்” என்றாள் கணக்கு ஆசிரியர் முன்பு நிற்கும் மாணவியைப் போல்.
அதைப் பார்த்து கடுப்பான முகில், “என்ன சொன்னாலும் செய்வியா… அப்போ போ போய் அந்த பால்கனியிலே இருந்து எகிறி குதி” என்று அவன் சலிப்பாக சொல்லி விட்டு திரும்பிப் பார்க்க அவன் கண்கள் உருண்டு திரண்டது.
உருளாமல் இருந்தால் தான் தவறு… பின்னே அவன் பார்த்த காட்சி அப்படி!
இவன் விளையாட்டாக செய் என்று சொன்னதை அவள் வினையாற்ற சென்று விட்டால் அவன் இதயம் பதற தானே செய்யும்.
வேகமாக பால்கனியிலிருந்து கீழே குதிக்க போனவளை கண்டு, “ஹே வேண்டாம் டி” என பதறி ஓடியவன்
அவள் பாதங்கள் எம்பி கீழே விழ எத்தனித்த அந்த நொடி அவள் இடையை சுற்றி கொடியாய் படர்ந்தது அவன் கரம்.
திகைத்து திரும்பியவள், “ஐயோ தெய்வமே… என்ன பண்றீங்க?” என கேட்க அவன் இதயத்தில் இன்னும் படபடப்பு அடங்கவில்லை.
“சும்மா இரு டி” என்றவனின் கைகளோ அவள் இடையை விட்டு இம்மி அகலாமல் அச்சாய் பதிந்து கிடக்க அவன் உதடுகளில் மௌனத்தின் பேரலை.
வீசிய தென்றல் காற்று அவள் சிகையை கலைத்து விளையாடி இவன் கன்னத்தின் மீது பட வைக்க, அவன் மோன நிலை கலைந்து தலையை உலுக்கிக் கொண்டு பால்கனியிலிருந்து கீழே எட்டி தரையைப் பார்த்தான்.
ஒரு நொடி இவன் தவறி இருந்தால் அவள் தலை இந்நேரத்திற்கு சில்லு தேங்காயாக சிதறி இருக்கும்.
பரிதவிப்போடு திரும்பியவன் தன் கைக்குள் கோழிக் குஞ்சாய் ஒடுங்கி கிடந்த மேகாவை இன்னும் தனக்குள் நெருக்கிக் கொண்டான்.
“நீ என்ன பைத்தியாமா டி நான் என்ன சொன்னாலும் அப்படியே செஞ்சுடுவியா…” என்றான் சீற்றமாக.
“இனி நீங்க தானே எனக்கு தெய்வம்… இந்த தெய்வம் என்ன சொன்னாலும் நான் செய்வேன்… என்னை விடுங்க நான் பால்கனியிலே இருந்து குதிக்கணும்” என்று சிறுபிள்ளையாய் சிணுங்கிக் கொண்டு சொல்ல அவன் அரண்டு பின்வாங்கினான்.
அவன் முகம் முழுக்க மரண பீதி…
‘எங்கே வந்து எப்படி சிக்கி இருக்கே டா முகிலு’ என மிரண்டு போய் அவளைப் பார்த்தான்.
முகிலு முதல் வாட்டியே இப்படி சொல்லிட்டா எப்படி? இனி அவள் கிட்டே நிறைய முறை இனி சிக்க வேண்டி வரும்… பீ ரெடி மேன்…