பூந்தளிர் ஆட… 15
பூந்தளிர் ஆட… 15
பூந்தளிர்-15
மதுரைக்கு மிக அருகில் உள்ள திவ்யதேசம், ‘திருமோகூர்.’ துவாபரயுகத்தில் புலஸ்திய முனிவர் தவமிருந்து வேண்டிக் கொள்ள, கூர்ம அவதாரத்தின் போது தான் எடுத்த மோகினி அவதாரத்தை அவருக்கு காட்டியருளினாராம் பெருமாள். அதனாலேயே இந்த ஊர் மோகூர் எனப் பெயர் பெற்றது.
அத்தோடு இங்குள்ள உற்சவருக்கு, ‘திருமோகூர் ஆப்தன்’ என்றும் பெயர். தெய்வம் என்ற நிலையிலிருந்து நண்பனாய் நம் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து நம்மோடு வழித்துணையாய் வரும் பெருமாள், இவர் என்பதால், ‘ஆப்தன்’ என்ற திருநாமத்தாலேயே அழைக்கப்படுகிறார்.
திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவிலில் அன்றைய தினம் அரவிந்தனின் உபயத்தில் சிறப்பு பூஜைகளும் அன்னதானமும் ஏற்பாடாகி இருந்தது. மொத்தக் குடும்பத்தாருமே அங்கே கூடியிருந்தனர்.
தங்களது முதல்வருட திருமணநாளினை கொண்டாடும் விதமாக இந்த ஏற்பாட்டினை செய்திருந்தான் அரவிந்தன். யாரிடமும் கலந்தாலோசிக்கவில்லை. முன்னறிவிப்பாக சொல்லவும் இல்லை. திடீர் ஏற்பாடு என்று சொல்லியே அனைவரையும் அழைத்து வந்திருந்தான்.
தன் குடும்பம், தமக்கைகள் குடும்பத்தினர், இரட்டை பிள்ளைகளோடு கிருஷ்ணாவின் பிறந்த வீட்டினருக்கும் சேர்த்தே புதுத் துணிமணிகளை வாங்கி முடித்தான். முன்தினம் மனைவியை அழைத்துக் கொண்டு கதிரவன், முகிலன், சுதர்சன் மூவருக்கும் விசயத்தை சொல்லி அழைத்து விட்டு வந்திருந்தான்.
கிருஷ்ணாவின் பிறந்த வீட்டிற்கும் அலைபேசி வாயிலாக தனித்தனியாக பேசி அழைப்பு விடுத்திருக்க, அவர்களும் கோவிலுக்கு வந்து சேர்ந்திருந்தனர்.
“இந்த கொண்டாட்டத்துக்கு வீட்டுல கேக் வெட்டி, விருந்து போடுவாங்க மாப்புள! நீ என்ன கோவில், பூஜை, அன்னதானம்னு அலப்பறை பண்ணிட்டு இருக்கே?” முன்தினம் கதிரவன் கேட்க, மாறாத சிரிப்பில் பதிலளித்தான் அரவிந்தன்.
“தெய்வம் துணை நின்னா தானே மாமா, அடுத்ததெல்லாம் சிறப்பா செய்ய முடியும்? அதான் மொத அவரை காக்கா புடிக்கலாம்னு ஏற்பாடு பண்ணிட்டேன்!”
“காரணமில்லாம காரியம் செய்யுறவன் நீ இல்லயே மாப்புள! ஆனா நீ சொல்ற இந்த சப்பைக்கட்டு காரணந்தான் எனக்கு சரியாப் படல!” என்றபடியே தனது குடும்பத்திற்காக அளித்த புதுத் துணிகளை மனமகிழ்வோடு வாங்கி வைத்துக் கொண்டார்.
“இப்படி கோவில் குளம்ன்னு சுத்திட்டே இருந்தா, எப்படா புள்ளகுட்டி பெத்துக்கப் போற?” ஆதங்கமாக கேட்டார் சுதாமதி
“அதான் வயசிருக்கே க்கா… இப்ப என்ன அவசரம்?”
“சரிதான், பேரன் பேத்தி எடுக்கிற வயசுல நீ புள்ளைய ஸ்கூலுக்கு அனுப்பிட்டு இருக்க போறே!” குறைபாட்டுக் பாடியே ஒய்ந்தார் சாருமதி
“நீ ஒருத்தன் தான் மாப்ள என் டேஸ்ட் என்னன்னு தெரிஞ்சுகிட்டு உடுப்பு வாங்கிட்டு வந்துருக்கே! உன் அக்காளும் இருக்காளே… சிவப்பு கலர்னு சொன்னா, லைட்டா டார்க்கா, எதுல இருக்கிற சிவப்புன்னு மாதிரிப் படம் போட்டு விளக்கம் சொல்லச் சொல்லுவா!” சிரித்த முகத்தோடு வாங்கி வைத்துக் கொண்டார் முகிலன்.
“நானும் இந்த ஃபார்மேட்ட(format) கத்துக்கணும் ண்ணே… சேலை வாங்குறதுக்கு கூட என்னை கூட்டிட்டு போகல… உங்களுக்கு எப்படி கொண்டு வந்து கொடுத்தாரோ, அப்படியே தான் எனக்கும் வாங்கிட்டு வந்திருக்காரு!” குறையாகப் சொன்ன கிருஷ்ணாவின் பேச்சில், ‘என்னை தவிர்த்து விட்டு காரியாமாற்றுகிறான்!’ என்னும் சுணக்கம் தெரிந்தது.
“அவேன் அப்படித்தான்! இங்கே கேட்டுட்டு இருக்கிற நேரத்துக்கு, நானே பார்த்து வாங்கிட்டு வந்துருவேன்னு போயிடுவான். யாருக்கு என்ன கலர் பொருந்திப் போகும்னு தெரியுறது அவேன் கண்ணுக்கு மட்டுமே தெரிஞ்ச ரகசியம்.” தம்பியை தாங்கிப் பேசினாள் சாருமதி.
எந்தவொரு குற்றம் குறையும் சொல்லாமல் வழக்கம் போல அரவிந்தனின் வேனில் அனைவரும் கோவிலுக்கு கிளம்பி வந்திருந்தனர்.
இதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னரே சுமதியை மதுரைக்கு அழைத்து வந்து குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சையும் முடித்து தாய் வீட்டிற்கே அழைத்து வந்து விட்டனர். சந்திராம்மா, மருமகள் பேத்தியை அருகில் இருந்து கவனித்து கொள்வதற்கென்றே அரவிந்தனின் வீட்டில் தங்கிவிட, பரிமளத்திற்கும் வேலைப்பளு பெருமளவு குறைந்து போனது.
தற்போது சுமதியின் பக்கத்தில் இரண்டு பேரை அமர்த்தி விட்டு சந்திராம்மாவையும் இழுத்துக் கொண்டு வந்திருந்தான் அரவிந்தன்.
“உங்க பேத்தி தூங்குற அரைநாள்ல நீங்க கோவிலுக்கு வந்துட்டு போயிடலாம் அத்தே!”
“எம் மருமவ நேத்துதான் வலி கொறஞ்சு எழுந்து உக்கார ஆரம்பிச்சுருக்கா தம்பி! அதுக்குள்ளாற தனியா விட்டுட்டு வர சங்கடமா இருக்கு.” சந்திராவின் மறுப்பினை எல்லாம் தனது சாதூரியப் பேச்சில் மறுக்க வைத்திருந்தான் அரவிந்தன்.
அவருக்கும் ஒரு கல்யாணி காட்டன் சேலையை எடுத்துக் கொடுத்திருக்க, அத்தனை சந்தோசத்துடன் வாங்கிக் கொண்டார். “கத்துக்கோடா மவனே!” என சுதர்சனை இழுத்து பேசவும் தவறவில்லை.
“மாமியா, மருமவளா பொறக்க வேண்டியவங்க, தவறிப் போயி அம்மா, புள்ளையா பொறந்து தொலைச்சுட்டோம் ஆத்தா! ஒன்னும் சொல்றதுக்கு இல்ல…” நொடித்துக் கொண்ட சுதர்சனின் கைகளில் நறுக்கென்று கிள்ளினாள் சுமதி.
“இவ ஒருத்தி, நான் எங்கம்மாகிட்ட வாயை தொறந்திடக் கூடாது. அராஜத்துல இறங்கிடுறா!” மனைவியிடமும் சலித்துக் கொண்டான்.
“வரவர ரொம்ப பண்றாரு அத்தே! என்னை ஊருக்கே கூட்டிட்டுப் போயிடுங்க… எப்பப் பாரு, மூஞ்சிய தூக்கி வைச்சுட்டு பேசினா, எப்படிதான் இவரோட குப்பை கொட்டுறது?”
“குடும்பம் நடத்துறதும் குப்பை கொட்டுறதும் ஒன்னுதான் த்தா… அப்பப்போ பேசி தீர்த்துக்கலன்னா குடும்பமே நாறிப் போயிடும். இந்த பொல்லாபுள்ளக்கு என்ன கொறை வந்துச்சுன்னு சலிச்சுக்கற?” இருவர் பக்கமும் சார்ந்து பேசி சூழ்நிலையை சமன் செய்து விடுவார் சந்திரா.
“இதுவரைக்கும் இப்படியொரு தேரை, நான் இழுத்ததே இல்ல!” கேலி பேசியபடி சந்திராம்மாவை வேனில் ஏற்றிக் கொண்டான் அரவிந்தன்.
சிறப்புப் பூஜை முடிந்து காலைநேர அன்னதானமாக புளியோதரை, சக்கரை பொங்கல் அனைவருக்கும் வழங்கப்பட, கோவில் மண்டபத்தில் குடும்பத்தினர்களுக்கு பந்தி போடப்பட்டது. அது முடிந்த பத்து நிமிடத்தில் அடுத்த நிகழ்விற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன.
“இன்னும் என்ன வேலை இருக்கு மாப்புள? அதான் எல்லாம் முடிஞ்சுதே!” கதிரவன் கேட்க,
“இன்னைக்கு முழுக்க நீங்க என்கூடத்தான் இருக்கணும்னு நேத்தே சொல்லிட்டேன் மாமா! கொஞ்சம் பொறுங்க… எல்லாம் விளக்கமா சொல்லிடுறேன்!” என்றவன் கோவில் மண்டபத்தில் குடும்பத்தினரை ஒன்று சேர்த்து அமர வைத்தான்.
“டெண்ட்டு கொட்டாயில படம் போட்டு காட்றவனாட்டம் எல்லாரையும் ஒன்னு சேர்த்துருக்க… என்ன விசயம் மாப்புள?” முகிலன் கேலியாக கேட்க,
“அடடா… மணல் முட்டையை தூக்கிட்டு வரவா ண்ணே? உசரத்துல உக்காந்து படம் பாப்போம்!” பதிலுக்கு கேலி பேசினான் சுதர்சன்.
“உன் பொஞ்சாதி இல்லைங்கற தைரியத்துல ஏகத்துக்கும் வாயில கல்லா கட்டுற தம்பி, நீ பொழைச்சுப்ப…” கதிரவன் தான் இவர்களின் கேலி பேச்சினை கண்டித்தார்.
இவர்கள் இங்கே வார்த்தையாடிய நேரத்தில் அக்னிக் குண்டமும் பூரணகும்பமும் வைக்கப்பட்டு ஹோமம் நடப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்திருந்தனர்.
இரட்டையர்களை ஆளுக்கு ஒன்றாக அரவிந்தனும் கிருஷ்ணாவும் கையில் பிடித்தபடி, ஜோடியாக மனையில் வந்து அமர, ‘என்னடா இது?’ என்ற பார்வை தான் எல்லோரிடத்திலும்!
“நான் பொதுவாவே பேசிடுறேன் மாமா, தனித்தனியா சொல்ல இப்ப நேரமில்லை. சில குழப்பங்களை தவிர்க்கணும்னு தான் முன்கூட்டியே யாருகிட்டயும் எதை பத்தியும் கலந்துக்கல… பெரிய மனசு பண்ணி என்னை புரிஞ்சுக்கோங்க… என் பொண்டாட்டிகிட்ட கூட இன்னைக்கு காலையில தான் இந்த ஏற்பாட்டை பத்தி சொல்லி இருக்கேன்.” என்றவன்,
தங்களிடம் இருந்த குழந்தைகளை காட்டி, “இந்த ரெண்டு பிள்ளைகளையும் மனப்பூர்வமா நான் தத்தெடுத்து வளர்க்கிறதா முடிவு பண்ணி இருக்கேன். குழந்தைங்க தெய்வத்துக்கு சமானம். தெரிஞ்சோ தெரியாமலோ எங்க வீட்டு வாரிசா இந்த புள்ளைங்க என் வீட்டுல அடியெடுத்து வைச்சுடுச்சு. அதுங்களை விலக்கி வைச்சு நானும் பாவத்தை சம்பாதிக்க நினைக்கல… ரொம்பவே யோசிச்சு பார்த்து எடுத்த முடிவுதான் இது. சாஸ்திரப்படியும் சட்டப்படியும் இவங்க ரெண்டுபேரும் என் குழந்தைங்க தான்னு இன்னக்கு உறுதிப்படுத்திக்கப் போறேன்!” என்றவனை இடைமறித்தார் சுதாமதி.
“ஏண்டா தம்பி, எங்களை எல்லாம் யோசிக்க மாட்டியா? இதுங்க இருக்கப் போயிதானே எங்களால சகஜமா அம்மா வீட்டுக்கு வந்து போக முடியல!”
“முறையில்லாம வந்ததால தானே அப்படி தள்ளி நிக்கிறீங்க… அதான், இவங்களுக்கு ஒரு அடையாளத்தை நான் கொடுக்குறேன். இந்த பிரச்சனையை இன்னையோட முடிச்சிப்போம் க்கா… எனக்காக என் புள்ளைக்காக நீ வரமாட்டியா? எனக்கு எல்லா சொந்தமும் வேணும் அதுவும் எனக்கு பக்கத்திலேயே இருக்கணும்.” மீறமுடியாத குரலில் சொன்னவனை மறுத்துப் பேச யாரும் முன்வரவில்லை.
இத்தனை பேச்சுகளில் பரிமளம் பேசாமல் அமைதியாக இருந்தார். அவரது உடலும் உள்ளமும் யாருமறியாமல் நடுங்கிக் கொண்டிருக்க, மனோன்மணியின் கைகளை ஆதரவாகப் பிடித்துக் கொண்டார்.
மனோன்மணி எதையோ சொல்ல வந்ததையும் தடுத்து விட்டார். ‘இப்போது பேச வேண்டாம், சிறியவர்களே பேசி முடித்துக் கொள்ளட்டும்.’ என்று கெஞ்சுதலாய் பார்த்து அவரின் கைகளை அழுத்தமாய் பிடித்துக் கொண்டார்.
“அம்மா தனியா நின்னு இந்த புள்ளைங்கள வளத்துக்கறேன்னு சொன்னதால நீ இந்த முடிவுக்கு வந்தியா தம்பி?” சாருமதியின் கேள்வி இது.
“அப்படி இல்லன்னா கூட இந்த முடிவு எடுத்திருப்பேன் க்கா! என்ன, அதுக்கு இன்னும் கொஞ்சநாள் ஆகியிருக்கும்.” என்றவாறு மனைவியின் முகத்தைப் பார்த்தான்.
“உன் பெரிய மனசு புரியுது மாப்புள… ஆனா உன் பொஞ்சாதி மனப்பூர்வமா இந்த ஏற்பாட்டுக்கு ஒத்துகிட்டாளா? அவகிட்ட தெளிவா பேசி சம்மதம் வாங்கினியா? புள்ளைங்க வளர்ப்புல உன் பங்கை விட தங்கச்சி தான் அதிகமா மெனக்கெடணும். இன்னும் உங்களுக்குன்னு ஒரு குழந்தை இல்லாத சமயத்துல திடுதிடுப்புன்னு நடக்கிற இந்த தத்தெடுப்பு பல அனுமானுத்துக்கும் அடிபோடும்.” கதிரவன் நிதர்சனத்தை எடுத்துரைக்க, கோவர்த்தனும் அதையே ஆமோதித்தார்.
“குடும்பத்துல குழப்பம் வரக்கூடாதுன்னு நினைச்சு, எங்க பொண்ணோட மனசை சங்கடப் படுத்திடாதீங்க தம்பி!” கிருஷ்ணாவின் தாய் பங்கஜம் சொல்ல,
“எனக்கும் இதுல மனப்பூர்வமான சம்மதம் தான்மா! கொஞ்சநாள் கழிச்சு நான் சொல்லி வேண்டியதை இப்பவே புரிஞ்சு இவர் ஏற்பாடு பண்ணிட்டாரு!” கணவனின் முகம் பார்த்து பேசிய கிருஷ்ணாவின் வாய்மொழி, அனைவரையும் வாயடைக்க வைத்தது.
“என் பொண்டாட்டி எனக்கு ஒரு ஆஃபர் குடுத்தா மாமா… நான் அதை பல்கா யூஸ் பண்ணிக்கிட்டேன்!” என்று சிரித்தவன்,
“இந்த பிள்ளைங்க வீட்டுல இருக்கிற வரைக்கும் இதுகளோட பொறுப்பு உன்னோடதுன்னு எங்கம்மா, மருமககிட்ட சொன்ன நாள்ல இருந்து குழந்தைகளை கண்ணுக்குள்ள வச்சு பார்த்துக்க ஆரம்பிச்சுட்டா… இனியும் அதுதான் தொடரும். கொஞ்சம் கோபம், கண்டிப்பு எல்லாம் வரத்தான் செய்யும். ஆனா பொறுப்பை தட்டிக் கழிக்கமாட்டா, அது உறுதி!” எனக் கூற அனைவருக்கும் மேற்கொண்டு என்ன கேட்பதென தெரியவில்லை.
தன்னிடம் யோசனையாகக் கூட சொல்ல முடியாமல் தயங்கிப் பின்னடைந்த மனைவியின் மனதினை ஒருவாறாக கணித்துக் கொண்டே பேசினான் அரவிந்தன். பண்பான பணியின் மகத்துவம், வயதின் பக்குவம், குடும்பப் பாரம்பரியம் என எல்லாம் சேர்ந்து கணவன் மனைவி இருவரையும் ஒரே நேர்கோட்டில் சிந்திக்க வைத்திருந்தது.
உறுதியான முடிவெடுத்து விட்டு தகவலாக சொல்பவனிடம் என்னவென்று கேள்வி கேட்டு எதிர்ப்பினை காட்டிவிட முடியும்.? முறுக்கிக் கொண்டு சென்றால் உறவுமுறை விட்டுப் போகும் சங்கடங்கள் தான் அரங்கேறும்.
குற்றம் குறைகளை சொல்லி வீம்பு பிடித்தாலும் மாமானார் வீட்டு உறவை எந்த மாப்பிள்ளையும் முறித்துக் கொள்வதற்கு தயாராக இருப்பதில்லை. குறைகளை அடுக்கி வைத்து பேசினாலும் பிறந்த வீட்டு உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்பதில் மகள்கள் உறுதியாக நின்று விடுவார்கள்.
அதனால்தான் அரவிந்தன் முறையாக தாம்பூலம் வைத்து அழைத்து விடவும் மறுபேச்சு பேசாமல் ஏற்றுக் கொண்டு இன்றைய விசேஷத்திற்கு வந்து விட்டனர்.
ஆக எந்தவொரு சச்சரவும் இல்லாமல் சாஸ்திர முறைப்படி இரண்டு குழந்தைகளையும் தத்தெடுத்துக் கொண்டான் அரவிந்தன். அதற்கான சாங்கியங்கள் முறையாக நடைபெற பரிமளம் தத்து கொடுக்க, கதிரவனிடம் இருந்து குழந்தைகளை வாங்கி தாய் தந்தையராக பெற்றுக் கொண்டனர்.
அன்றைய தினமே பதிவு அலுவலகத்திற்கு சென்று சட்டப்படியாக தத்தெடுப்பை பதிவும் செய்தனர். அதற்கான ஏற்பாடுகள் முன்னரே செய்து முடிக்கப்பட்டு இருந்தது. இளையமகன் குடும்பத்தை வெறுத்து விட்டு சென்றபடியால் அவனது குழந்தைகளை அவனது சார்பில் மனப்பூர்வமாக தான் தத்துகொடுப்பதாக பரிமளத்திடம் எழுதி வாங்கப்பட்டு தத்தெடுப்பு பதிவும் செய்யப்பட்டது.
எதிர்காலத்தில் இந்த விஷயம் யாருடைய பார்வைக்கும் ஆராய்ச்சியாக பார்க்கப்படாமல் இருப்பதற்காகவே குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழில் கூட தங்களை பெற்றோராக பதிவு செய்து வாங்கி இருந்தான் அரவிந்தன். அதன்படி அவர்களின் திருமணநாள் இரண்டு வருடத்திற்கு முன்னர் பதிவு செய்யப்பட்டு, குழந்தைகளின் பிறப்பு அதற்கடுத்த வருடம் அதேநாளில் பதியப்பட்டு இருந்தது.
“எல்லாம் பக்காவா பிளான் பண்ணி முடிச்சிருக்க மாப்புள! ஆக மொத்தம் உங்களுக்கு கல்யாணம் ஆகி இன்னையோட ரெண்டு வருஷம் முடிஞ்சிருக்கு. உங்க புள்ளைகளுக்கு இன்னைக்கு மொத வருஷ பிறந்தநாள்னு சட்டம் சொல்லுது!” கதிரவன் அனைத்தையும் வாசித்துப் பார்த்து, அனைவருக்கும் விளக்கம் கூறி முடித்த நேரத்தில் கோவிலில் சாஸ்திர சம்பிரதாயம் முடிந்து, தேனும் பாலும் குழந்தைகளுக்கு பெற்றோர்களின் கையால் ஊட்டி விடப்பட்டது.
“இன்னைக்கு சாயந்திரம் வீட்டுல நீங்க சொன்ன மாதிரியே கேக் வெட்டி புள்ளைங்க பொறந்தநாளை கொண்டாடிவோம் மாமா!” அரவிந்தன் அன்றைய நாளின் அடுத்த நிகழ்வினை கூறி முடிக்க,
“அப்ப சீக்கிரம் கிளம்புவோம் ண்ணே!” என்றபடி எழுந்து நின்றான் சுதர்சன்.
“ஏன் தம்பி, அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டு நிக்கிற?” முகிலன் காரணம் கேட்க,
“அண்ணே… கல்யாணப் பரிசுதான் வாங்கி இருக்கோம்… மச்சான் புள்ளைகளுக்கு பொறந்தநாள் பரிசு வாங்க வேணாமா?” பொறுப்பானவனாகப் பேச,
“வருங்கால சம்மந்தி ஆகுறதுக்கு பத்து பொருத்தமும் பக்காவா உனக்கு பொருந்தி இருக்கு. நீ நடத்து தம்பி… பொண்ணு ஒன்னு, பையன் ஒன்னுன்னு ரெடிமேடா நம்ம மாப்புள இறக்குமதி பண்ணியிருக்காரு!” அடுத்தடுத்த கேலிப்பேச்சுகள் தொடர்ந்திட மதிய உணவினை கோவிலில் முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
நடந்த விசேசத்தில் சுதாமதி சாருமதிக்கும் ஒருவித நிம்மதி உணர்வே மேலிட்டது. இனி எந்தத் தடையோ குழப்பமோ இல்லாமல் அம்மா வீட்டிற்கு வந்து செல்லலாம் என்ற நினைவே அவர்களை பூரிப்பாக்கியது.
பிரச்சனை உண்டாக்க வேண்டுமென்றால் குரலை உயர்த்தி சலசலப்பை ஏற்படுத்தி விடலாம். ஒன்றுமில்லை என்று நினைத்து விட்டால் கலகலப்பை துணைக்கழைத்து கொண்டாடி விடலாம். வீட்டுக்கு வீடு வாசற்படியின் தாத்பரியம் இதுதான்.
கிருஷ்ணாவின் பிறந்த வீட்டினருக்கும் ஒருவகையான நிம்மதி. தங்கள் வீட்டுப் பெண்ணை நிந்திக்கவும் இப்போது யாருக்கும் அத்தனை சுலபத்தில் மனம் வராதே! அவர்களுக்கு அந்த பெருமை ஒன்றே போதும்.
அழுத்தமாய் அமைதியாய் வலம் வந்த பரிமளத்தின் மனம் ‘எந்த நேரத்திலும் வெடித்து விடுவேன்’ என்று பயம் காட்டிக் கொண்டிருந்தது. கேட்கும் கேள்விக்கும் பதில் சொல்ல வார்த்தை வராமல் தவித்துக் கொண்டிருந்தவர், வீட்டிற்கு வந்ததும் தனதறையில் சென்று முடங்கிக் கொண்டார்.
“தம்பி எல்லாம் சரி பண்ணிட்டான்மா… நீ பேசினதை மனசுல வச்சுக்காதே!” மகள்கள் எத்தனையோ விதமாய் சமாதானப்படுத்தியும் அவரால் இயல்பிற்கு திரும்பவே முடியவில்லை.
‘தனிக்குடித்தனம் சென்று விடு!’ என்று சொன்ன நாளில் இருந்து மகன், மருமகள் இருவரிடமும் வெகுவாக பேச்சினைக் குறைத்துக் கொண்டிருந்தார் பரிமளம்.
தனது முடிவிற்கு மாற்றுக் கருத்து சொல்லி மகன் தன்னிடம் வந்து நிற்பான் என எதிர்பார்த்தார். ஆனால் இன்று வரையில் அப்படி நடக்கவே இல்லை. மருமகளும் தன்போக்கில் வீட்டுப் பொறுப்பினை தனதாக்கிக் கொண்டு காரியங்களில் இறங்கிவிட, பரிமளத்தின் கவனமெல்லாம் இரட்டையர்களை மட்டுமே சுற்றி வந்தது.
சுமதிக்கு பிரசவம் முடித்து இங்கே அழைத்து வந்த பிறகும் அமைதியாகவே வீட்டினில் இருந்தார். அந்தந்த நேரத்து ஏற்பாடுகளை அரவிந்தன் மேற்கொள்ள, அதை சரியாகச் செய்து முடித்ததில் முழுப்பங்கும் கிருஷ்ணாவை மட்டுமே சாரும்.
நேற்று வந்தவளின் தலையில் குடும்ப பாரத்தை, நிர்வாகத்தை சுமத்திவிட்டு இவர் சுலபமாய் ஒதுங்கிக் கொண்டதை நினைத்து, இப்பொழுது மனம் முள்ளாய் குத்தத் தொடங்கி இருந்தது. அதிலும் வீட்டில் இருந்து கொண்டே மகன், தன்னிடம் கூட குழந்தைகள் தத்தெடுப்பு விஷயத்தை சொல்லாமல் இருந்ததில் வெகுவாக மனமுடைந்து போனார்.
‘அந்தளவிற்கு அன்னியமாகப் போய்விட்டேனா நான்?’ தாயாக புலம்ப, ‘நீ, உன் முடிவை மகனிடம் கூறி ஆலோசித்தாயா?’ மனசாட்சி கேள்வி கேட்டது.
“அன்னைக்கு சபையில உன் முடிவை போட்டு உடைச்ச மாதிரி, அரவிந்தனும் எல்லார் முன்னாடியும் அவனோட முடிவை சொல்லிட்டான். விட்டுத் தள்ளு பரிமளம், வீணா சங்கடப்பட்டுட்டு இருக்காதே! உன்கிட்ட சொல்லாம உன் பாரத்தை உன்புள்ள இறக்கி வைச்சுருக்கான். பெத்தவளோட அருமை தெரிஞ்சவன், ஆர்வத்துல சொல்லாம சாதிச்சுட்டான். அதை நினைச்சு சந்தோசப்படுறதை விட்டுட்டு என்னத்துக்கு இத்தன வெசனத்தோட கண்ணு கலங்கிட்டு இருக்கறவ?”
பலவிதமாய் மனோன்மணி சமாதானம் சொன்னாலும் உடைப்பெடுத்து வரும் கண்ணீரை பரிமளத்தால் தடுத்து நிறுத்த முடியவில்லை.
மகன் மருமகளின் முகம் பார்த்து பேசுவதற்கே பெருத்த சங்கடம் வந்திருந்தது அவருக்கு! அன்றைக்கு நிமிர்ந்து பேசிய கம்பீரம் இன்று எங்கோ காணாமல் போயிருந்தது. என்னவென்று சொல்லி தன்னை சமாதானப்படுத்திக் கொள்வதென அவருக்கே புரியவில்லை.
மாலைநேர பிறந்தநாள் விழாவும் அதைத் தொடர்ந்த கலாட்டாவும் வீட்டினை இரண்டாக்கியது. அனைவருக்கும் அத்தனை மகிழ்ச்சி. இரட்டையர்களை ஒருவர் மாற்றி ஒருவர் என தூக்கிக் கொஞ்சியதில் பிள்ளைகள் பயந்து கிருஷ்ணாவிடம் ஒட்டிக் கொண்டனர்.
“உங்கம்மா தான்… யாரு இல்லன்னு சொன்னா? இப்ப என்கிட்டே வா!” அத்தைகள் இழுக்கும் நேரத்தில் அரண்டு, அடுத்த நிமிடம் அரவிந்தனிடம் தாவி விடுவர்.
“எங்க மாஸ் மாமாடா… உங்கப்பா இல்ல!” அக்கா பிள்ளைகள் போக்கு காட்டினால், “ப்பா!” என அழைத்து உதட்டினை பிதுக்கி விடுவர்.
இப்படியாக சீண்டலும் கொஞ்சலுமாய் இரவு விருந்து வரை ஆர்பாட்டம் செய்து, அவரவர் வீட்டிற்கு கிளம்பிச் சென்றனர்.
அன்றைய சந்தடிகள் எல்லாம் அடங்கி இரவும் வந்துவிட, குழந்தைகளை இரண்டு தோள்களிலும் தூக்கிக்கொண்டு தங்களின் அறைக்கு வந்து விட்டாள் கிருஷ்ணா.
“ஹேய்… என்ன இன்னைக்கு புதுசா இங்கே கூட்டிட்டு வந்துருக்க?” அரவிந்தன் புரியாமல் கேட்க,
“இன்னைக்கு என் பிள்ளைகளுக்கு அவங்க அப்பாவோட ஃபர்ஸ்ட் நைட்… உங்களை ஒழுங்கா இன்ட்ரடியூஸ் பண்ணி வைக்க வேணாமா?”
“ஏன் இத்தனை நாள்ல அவங்க தெரிஞ்சுக்கலயா? இல்ல, நீதான் சொல்லி கொடுக்காததா?” புருவம் உயர்த்தி கேட்ட விதத்தில், ‘உன் செயல்களை எல்லாம் நான் அறிவேன்!” பாவனையை மனைவியிடத்தில் தந்தான்.
“அப்படி என்ன பேசிடுவேன்னு நீ மறைச்சு வச்சு இந்த புள்ளைகள அடக்கி வச்சே? உன்னை விட்டு விலகிடுவேன்னு பயமா இல்ல சந்தேகமா?” கேட்டவனை ஆனந்தமாய் பார்த்தாள்.
“பயப்படுற அளவுக்கு பூச்சாண்டியோ, கெத்து காமிக்கிற அப்பாடக்கரோ நீங்க இல்ல மாஸ்டர்!”
“போச்சுடா! டீச்சர் கிட்ட எப்போதான் நல்லபேரு வாங்கப் போறேனோ?” கேலி பேசியவனின் கைகளில் அம்முவை மாற்றி இருக்க, குழந்தை அவனது மீசையை பிடித்து இழுத்தது.
“அம்மு அப்படியே சுமதி ஜாடைதான், இல்ல?” அரவிந்தன் கேட்க,
“எனக்கு அவ்வளவா ஒற்றுமை தெரியல, அப்புதான் உங்க ஜாடையா தெரியுது!” என்றாள் கிருஷ்ணா.
“இரு வர்றேன்!” என்றவன் பீரோவில் இருந்து பழைய ஆல்பத்தை எடுத்தான். அந்த நேரத்தில் அப்புவும் அம்முவும் சேர்ந்து அறைக்குள் இருப்பதை கலைத்துப் போட ஆரம்பிக்க, “கட்டிப் போட்ருவேன் குட்டீஸ்!” கண்டிப்பு காட்டினாள் கிருஷ்ணா.
“இதோ பாரு!” என சிறுவயது ஃபோட்டோவினை காண்பித்தான் அரவிந்தன்.
அதில் ஒன்று போலவே இரண்டு குழந்தைகள். வளர்ந்த பெரிய பையனான அரவிந்தன், பெண் குழந்தையை ஏந்தி இருக்க, தாவணியில் இருந்த சுதாமதியின் கைளில் ராம்சங்கர் இருந்தான். இவர்களின் மத்தியில் பெரிய பெண் தோற்றத்தில் புது தாவணியில் சாருமதி வயரால் பின்னப்பட்ட கூடைச்சேரில் அமர்ந்திருந்தாள்.
“சாருக்கா சடங்கானப்போ எடுத்தது. அப்ப இவங்களுக்கு ரெண்டு வயசு… அவ்வளவு சுட்டி ரெண்டு பேரும். ரியல் எஸ்டேட் ஆரம்பிச்ச சமயம். அப்பா ரொம்ப அமோகமா இருந்தாரு. இந்த வீடு, பின்னாடி ஃபாக்டரி இருக்கிற இடம் எல்லாமே அப்போ வாங்கினதுதான். அப்புறம் என்ன ஆச்சோ தெரியல? ஒருநாள் ரொம்ப சோர்வா வந்தாரு… அதுக்கடுத்த ரெண்டுநாள்ல நெஞ்சுவலி வந்து தவறிட்டாரு! கூட இருந்த பிசினஸ் பார்ட்னர்ஸ் ஏமாத்திட்டதா அத்தை சொன்னாங்க… அவங்களுக்கும் சின்ன வயசுலேயே கல்யாணம் முடிச்சு, கொஞ்ச வருஷம்தான் மாமாவோட வாழ்ந்தாங்க… பிள்ளை இல்லன்னு இவங்களை தள்ளி வைச்ச கொஞ்சநாள்ல மாமாவும் தவறிட்டதா சொல்வாங்க!” என்று அன்றைய நாளின் நினைவில் கண் கலங்கினான் அரவிந்தன்.
இனிமையான நினைவுகளை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்து வருத்தத்தில் முடித்ததில் கிருஷ்ணாவும் வேதனை அடைந்தாள். இவர்களின் பேச்சில் பிள்ளைகளை மறந்து போக ஆல்பத்தை தூக்கி கீழே வீசி இருந்தனர் குழந்தைகள்.
“பசங்களா, உங்கம்மா சத்தம் போட்டே அடங்கலையா நீங்க?” அரவிந்தன் வாய்மொழியாக வந்ததில் முகம் மலர்ந்து சிரித்தாள் கிருஷ்ணா. உரிமையான அங்கீகாராம் கிடைத்த திருப்தி அவளுக்குள்!
“அம்மாவை பார்த்தா பயப்படக் கத்துக்கணும்ன்னு அப்பா சொல்லி கொடுத்தாத் தானே, அவங்க ஃபாலோ பண்ணுவாங்க ரவி?” சிரிக்காமல் கேலி பேசினாள்.
“சொல்லிட்டாப் போச்சு!! என்றவன் பிள்ளைகளை மடியினில் அமர்த்தி,
“அம்மாவை பார்த்து பயப்படனும் பிள்ளைகளா… ஏன்னா அம்மா பின்னாடி பூச்சாண்டி இருக்கு!” என்றதும் கிருஷ்ணாவும் கை விரலை தலைக்கு மேல உயர்த்தி பூதம் போல காண்பிக்க, அப்பு சிரித்துக் கொண்டு சென்று கிருஷ்ணாவின் விரலை இறக்கி விட, அம்முவோ “ம்ஹூம்! என தலையைத்து மறுத்து அரவிந்தனின் கழுத்தை கட்டிக் கொண்டது.
“ஏண்டா அம்மு?”
“ம்மா!” என உதடு பிதுக்கி அழ,
“குட்டிக்கழுத… உங்கப்பா புருடா விட்டா என்னைப் பார்த்து பயப்படுவியா?” செல்ல முறைப்பில் தன்னுடன் இழுத்துக் கொண்டாள்.
“எப்பவும் டீச்சர் மூடுலயே இருக்காதே சாலா! பாவம் புள்ளைங்க பயப்படுதுல்ல?” அரவிந்தன் சொன்ன நேரத்தில் அவர்களின் அறைக்கதவு தட்டும் சத்தம் கேட்டு திறந்து பார்க்க, பரிமளம் நின்றிருந்தார்.
“என்னம்மா இந்த நேரத்துல?” சகஜமாய் கேட்டபடி அரவிந்தன் எழுந்து வர,
“என்ன செய்யணும் அத்தே… பாப்பா ரொம்ப அழறாளா?” சுமதியின் குழந்தையைப் பற்றி விசாரித்தாள் கிருஷ்ணா.
புது பேத்தியின் வரவால் தினம்தினம் தீபாவளியாக அந்த வீடு இரவு நேரத்தில் ஜெகஜ்ஜோதியாக ஒளிர்கின்றது. புதிதாய் ஒளி, ஒலிகளை அறிந்து கொள்ள ஆரம்பித்திருந்த குழந்தை ஊரடங்கும் நேரத்தில் தான் சுறுசுறுப்படைந்து ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பிப்பாள்.
ஒருவர் மாற்றி ஒருவரென கைகளில் வைத்துக் கொண்டு இரவுப் பொழுதினை எளிதாகக் கடந்து விடுவர். அதை யூகித்தே கிருஷ்ணாவும் கேட்க, “பாப்பாவை அவங்க பாட்டி வச்சிருக்காங்க!” தேவைக்கு பேசிய பரிமளத்தின் பார்வை இரட்டையர்களிடம் சென்றது.
“இவங்க இங்கேயே இருக்கட்டும்மா… நீ போயி தூங்கு!”
“நான் பேசணும் அரவிந்தா!” நெடுநாட்களுக்கு பிறகு பரிமளம் மகனிடம் பேச அனுமதி கேட்க, அந்த சூழலையே வெறுத்தான் மகன்.
“என்னம்மா இப்படியெல்லாம் கேட்டுட்டு? உள்ளே வா!”
“உன்னை ரொம்ப கஷ்டபடுத்திட்டேனா தம்பி?” என பேச ஆரம்பித்தார் பரிமளம்
“அத்தே… எதையும் மனசுல போட்டு உருட்டாதீங்க!”
“உன்னையும் தள்ளி நிறுத்தி பார்த்துட்டேன் கிருஷ்ணா!” என்றவரின் பேச்சை தடுத்து நிறுத்த முடியவில்லை.
“என்ன பாவம் செஞ்சேனோ? சின்னவயசுல புருஷனை இழந்து நான் கஷ்டப்பட்டதும் இல்லாம எனக்கு பொறந்த பாவத்துக்கு என் பிள்ளைகளும் கஷ்டப்பட்டு போச்சு! அதை நினைச்சு தவிக்காத நாளில்ல… உன் தம்பி இப்படியொரு பாவம் பண்ணி, இப்ப இந்த குழந்தைகளை ஆசிரமத்துல கொண்டு போய் விடணும்னு பேச்சு வரவும் என் ஈரக் கொலையே ஆடிப் போயிடுச்சுய்யா…
தெரிஞ்சே இந்த சின்னதுகளை அனாதையாக்கப் போறோமே… இந்த பாவத்தை எங்கே போயி எப்பிடி தொலைக்கன்னு கலங்கிப் போயிட்டேன். ஒருவேளை இந்த பாவம் முழுக்க என் புள்ள தலையில விடிஞ்சிட்டா… எங்கே போயி பரிகாரம் தேடி, எப்படி நான் சரி பண்ணுவேன்?
இதை யோசிச்சுதான்யா புள்ளைங்கள வளக்கிற பொறுப்பை நான் ஏத்துக்கிறேன்னு சொன்னேன். இதுகளால உனக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது அரவிந்தா! அந்த விஷயத்துல நான் திடமா நின்னேன். அதுக்காக தான் மாப்பிள்ளை, பொண்ணு உறவெல்லாம் தள்ளி வைக்க தயாரா இருந்தேன். அம்மாவை தப்பா நினைக்கதேய்யா…” பரிமளம் அமைதியாக கரகரத்து கூறிய நேரத்தில் இரண்டு பிள்ளைகளையும் தட்டிக் கொடுத்து உறங்க வைத்திருந்தாள் கிருஷ்ணா.