மனதோடு மனதாக – 10
மனதோடு மனதாக – 10
10
அனைவரும் கிளம்பியதுமே ஆர்யன் சோபாவில் அமர்ந்து, மொபைலை குடைந்துக் கொண்டிருக்க, கவின் அவன் அருகில் வந்து அமர்ந்தான்..
“மாமா.. வீட்டுக்கு போனதும் கேம் விளையாடலாம்ன்னு சொன்னீங்க தானே.. வாங்க விளையாடலாம்..” வழமை போல அவனை அழைக்க, விஷ்ணுப்ரியா அவனை உறங்க வைக்குமாறு சைகை செய்ய, தனக்கும் உறக்கம் கண்களைத் தழுவவும், அவனை சமாதானம் செய்து அவனையும் தூக்கி மடியில் வைத்துக் கொண்டவன்,
“கவின்.. மாமாவுக்கு ரொம்ப டயர்ட்டா இருக்குடா.. உங்க அத்தை எழுந்து வந்ததும் நாம அத்தை கூட சேர்ந்து விளையாடலாம் என்ன? இப்போ நான் உனக்கு கதை சொல்றேன்.. தூங்கு..” என்றவன், கதையைச் சொல்லி, அவனே அறியாத வண்ணம், தனது மடியில் கிடத்தி, மெல்லத் தட்டிக் கொடுக்க, சிறிது நேரத்தில் கவினும் உறங்கிப் போனான்..
அவனை சேகர், தனதருகில் தரையில் கிடத்திக் கொள்ள, சோம்பல் முறித்தபடி சோபாவிலேயே சாய்ந்து உறங்கிப் போனான்..
பூரணி தனித்து அமர்ந்திருக்க, “இங்க இந்த ரூம்ல கொஞ்சம் படுங்க பூரணி.. நீங்களும் ரொம்ப டயர்டா இருக்கீங்க…” என்ற பிருந்தாவும், பூரணியை அழைத்துக் கொண்டு மற்றொரு அறையில் படுக்கச் சென்றார்..
“அண்ணி.. நான் மறுபடியும் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன் அண்ணி.. ஜீவிதா இப்படி செய்வான்னு எங்களுக்குத் தெரியாது.. அவளைக் காணும்ன்ன உடனே எங்களுக்கு என்ன செய்யறதுன்னே ஒண்ணுமே புரியல.. உங்களுக்கு எல்லாம் ரொம்ப தர்ம சங்கடத்தை கொடுத்துட்டோம்..” தனது அக்காள் மகள் செய்த செயலுக்காக பூரணி வருந்திக் கேட்க, அவரது கையைத் தட்டிக் கொடுத்த பிருந்தா,
“எல்லாம் நேரம் தான்.. என்ன செய்யறது? விடுங்க பூரணி.. ஆரிக்கு வெண்ணிலாதான்னு கடவுள் முடிச்சு போட்டு வச்சிருக்கற பொழுது அதை யாரும் எதுவும் மாத்த முடியாது.. அது தான் நடந்து இருக்கு.. இனிமே ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கிட்டு சந்தோஷமா வாழனும்ன்னு கடவுள வேண்டிப்போம்..” என்று சொன்ன பிருந்தா, அப்படியே சிறிது நேரம் உறங்கியும் போனார்.
ஓய்வெடுத்த பிறகு எழுந்து வந்த பிருந்தா, சோபாவில் உறங்கிக் கொண்டிருந்த ஆரியனைப் பார்த்து, மனம் கனிய அவன் அருகில் சென்று அமர, அவரது அருகாமை உணர்ந்ததும் அவரது மடி மீது தலையைத் தூக்கி வைத்தவன், தனது உறக்கத்தைத் தொடரவும்,
அவனது தலையை கோதிக் கொடுத்தவர், “ஆரி.. அம்மா மேல உனக்கு வருத்தமாடா? உனக்கு இப்படி திடீர்ன்னு வேற பொண்ண பார்த்து கல்யாணம் செஞ்சு வச்சிட்டோம்ன்னு கோபமா? கஷ்டமா இருக்கா?” பிருந்தா கேட்கவும், அவரது குரலைக் கேட்டு விழித்திருந்த சேகர், அவன் அருகில் வந்து அமர்ந்து, பிருந்தாவின் கவலையைப் போக்க,
“ஏன்க்கா… உங்க மகன் மூஞ்சியைப் பார்த்தா அவன் கோபமா இருக்கறா போலவா இருக்கு? நீ தான் இங்க கவலைப்படற.. அவன் ஜாலியா தான் இருக்கான்..” சேகர் கேலி செய்ய,
“மாமா.. சும்மா இருங்களேன்..” கண்களைத் திறக்காமல் ஆர்யன் சேகரை அடக்கவும்,
“என்னங்கடா நடக்குது இங்க? என்னடா பேசிக்கறீங்க ரெண்டு பேரும்..” பிருந்தா இருவரையும் கேட்கவும், சிரித்துக் கொண்டே கண்களைத் திறந்த ஆர்யன்,
“ஒண்ணும் இல்லம்மா.. ஒண்ணுமே இல்ல.. நான் எல்லாருக்கும் டீ போடறேன்.” என்ற ஆர்யன் முகத்தை கழுவிக் கொண்டு, சமையலறைக்குள் நுழையவும், பிருந்தா அவன் பின்னோடு நுழைந்தார்..
“உனக்கு அவளை பிடிச்சிருக்காடா?” விடாமல் பிருந்தா பின்தொடர்ந்து கேட்க, அவர்களுடன் உள்ளே வந்திருந்த சேகர்,
“அவளைப் பிடிக்கலைன்னா உன் மகன் அவ கழுத்துல தாலியை கட்டி இருப்பான்னு நீ நினைக்கறியா?” சேகரின் கேள்வி புரிந்தவர், ஆர்யனை மகிழ்ச்சியுடன் பார்க்க, விஷ்ணுப்ரியாவும் எழுந்து வரவும், பேச்சு வேறு திசைக்குச் செல்ல, பிருந்தாவின் மனம் ஆர்யனின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியில் சிறிது ஆறுதலடைந்தது..
இருவரும் இரவு உணவிற்கு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்க, “அம்மா.. ராத்திரிக்கு எதுவும் செய்ய வேண்டாம்.. எல்லாருமே ரெஸ்ட் எடுங்க.. நான் ஆர்டர் பண்ணிடறேன்.. இப்போ நான் டீ போடறேன்.. இப்போ நீங்க ஹால்ல போய் உட்காருங்க..” என்றவன், பிருந்தாவை நகர்த்தி விட்டு, டீ போடத் துவங்க, அங்கு வந்து அவனைப் பார்த்த பூரணி பதறிப் போனார்..
“தம்பி.. நீங்க ஏன் இதை எல்லாம் செஞ்சிக்கிட்டு இருக்கீங்க? நான் போடறேன்..” என்று பதறிச் சொல்ல, அவரைப் பார்த்து புன்னகைத்தவன்,
“அதெல்லாம் பரவால்ல அத்தை.. நீங்க எல்லாரும் உட்காருங்க. நான் மண்டபத்துல சும்மா தானே இருந்தேன்.. அதனால இப்போ செய்யறேன்.. சரிங்க அத்தை.. வெண்ணிலாவுக்கு சமைக்கத் தெரியுமா?” ஆர்யனின் கேள்வியில், பூரணி விழிக்கத் துவங்கினார்..
“அவளா? காபி நல்லா போடுவா.. ஆனா.. சமை..ய..ல்..?” அவர் இழுக்க, பிருந்தா சிரித்து,
“இத்தனை நாளா ஸ்கூல் காலேஜ்ன்னு சுத்திட்டு இருந்திருப்பா.. இனிமே எல்லாம் மெல்ல கத்துப்பா.. அதான் இவன் நல்லா சமைப்பானே.. சமைச்சுத் தரட்டும்.. சரி பூரணி அவளுக்கு என்ன எல்லாம் பிடிக்கும்..” பிருந்தா கேட்க, அவர் பதில் சொல்வதற்குள்,
“ஸ்வீட்ன்னா ரொம்ப பிடிக்கும்.. கரக்ட்டா?” ஆர்யன் இடைப்புக, அவனது முதுகில் ஒரு அடி வைத்த பிருந்தா, அவன் போட்டுக் கொடுத்த டீயை அனைவருக்கும் கொடுத்தார்..
அனைவரும் அமைதியாக டீ குடித்துக் கொண்டிருக்கவும், பூரணியின் மனநிலையை மாற்றும் பொருட்டு, “வெண்ணிலா இன்னும் தூங்கிட்டு இருக்காளா பூரணி?” பிருந்தா கேட்கவும்,
“ஆமாங்க அண்ணி.. ஜீவிதாவை காணும்னா உடனே நல்லா தூங்கிட்டு இருந்தவளை எழுப்பிட்டோம். பாவம் அது..” அதற்கு மேல் சொல்ல முடியாமல் பூரணி தலைகுனிய, புரிந்ததன் அடையாளமாய் பிருந்தா அவரது கையைத் தட்டிக் கொடுத்தார்..
“நான் அவளை எழுப்பிட்டு வரேன் அண்ணி..” என்ற பூரணி அறைக்குள் செல்ல, ஆர்யன் பிருந்தாவைப் பார்த்தான்..
பிருந்தா பெருமூச்சு விடவும், “பாவம் அவ இதெல்லாம் கொஞ்சம் கூட எதிர்பார்த்தே இருந்திருக்க மாட்டா.. அவளுக்கு எல்லாம் மனசுல பதிஞ்சு நடப்புக்கு வர டைம் எடுக்கும்.. இனிமே ஜீவிதாவைப் பத்தி இந்த வீட்டுல பேச வேண்டாம்.. திரும்பத் திரும்ப அவ போனதுனால எங்களுக்கு கல்யாணம் ஆனது போல வெண்ணிலாவுக்கு இருக்க வேண்டாம்.. எனக்கும் அது பிடிக்கல..” சீரியசாக சொன்ன ஆர்யனின் தலையை வருட, அவனது பார்வை ஹாலில் தொங்கவிடப்பட்டிருந்த ஜோடிக் கிளிகளின் பொம்மையின் மேல் பதிந்தது..
‘ஒருவேளை நானே காலையில கல்யாணத்தை நிறுத்திட்டு, இவளை லவ் பண்ண பின்னால சுத்தி இருப்பேனோ என்னவோ? ஏன் தாலி கட்டற நேரத்துல இவளை இழுத்து தாலி கட்டி இருப்பேனோ என்னவோ?’ என்று யோசித்து, அங்கு அடுத்து நடக்கும் நிகழ்வுகளை யோசித்துப் பார்த்து, நக்கலாகப் புன்னகைக்க, சேகர் அவனது தலையைத் தட்டினார்..
ஆர்யன் நிமிர்ந்துப் பார்க்கவும், “உன் மைன்ட் வாய்சை நான் புரிஞ்சிக்கிட்டேன்.. ஒரு ரணகளத்த உருவாக்கி இருப்ப.. அப்படித் தானே..” என்று நக்கலடிக்க,
“அதே தான் மாமா.. நீங்க தான் என்னோட படைத் தளபதி..” ஆர்யன் கேலி செய்ய,
“நீ என் தலைவலி..” சேகர் பதிலுக்கு கவுன்டர் கொடுக்கவும், ஆர்யன் சிரிக்கத் துவங்கினான்..
“சரிடா.. நாளைக்கு நாங்க ஊருக்கு போகும்போது நீங்களும் வரீங்க தானே.. நீ எத்தனை நாள் லீவ் போட்டு இருக்க?” சேகர் கேட்க,
“மாமா.. நான் வெள்ளிக் கிழமை ஆபிஸ்க்கு ஜாயின் பண்ணனும்.. நாலு நாள் தான் லீவ் போட்டு இருக்கேன்.. அதோட அவளும் காலேஜ் எவ்வளவு நாள் லீவ் போட்டு இருக்கான்னு தெரியலையே.. அவளைக் கேட்டுட்டு டிசைட் பண்ணிக்கலாம் மாமா.. அதோட வந்தாலும் ஒரு நாள் தான் இருக்க முடியும்.. வந்து இங்க எல்லாம் செட் பண்ணிட்டு அவங்க வீட்டுக்கு போயிட்டு, அவளோட திங்க்ஸ் எடுத்துட்டு வர தான் டைம் சரியா இருக்கும் மாமா..” ஆர்யன் யோசனையுடன் சொல்ல, சேகர் ஆமோதிப்பாக தலையசைக்க,
“ஒரு நாளாவது வந்துட்டு போயேன்.. எனக்கும் ஆசையா இருக்கும் இல்ல..” பிருந்தா கெஞ்சலாகக் கேட்க, “ஹ்ம்ம்..” என்றவன், வெண்ணிலாவின் வருகையை எதிர்ப்பார்த்து, தனது அறை வாயிலைப் பார்த்தான்.
நன்றாக உறங்கிக் கொண்டிருந்த வெண்ணிலாவை பூரணி எழுப்ப, கண்களைக் கசக்கிக்கொண்டு எழுந்தமர்ந்தவளைப் பார்த்த பூரணிக்கு மனம் கனிந்தது..
“போய் முகத்தை கழுவிக்கிட்டு வா.. தலைப்பின்னி விடறேன்..” பூரணி சொல்லவும், முகத்தைக் கழுவிக் கொண்டு வெளியில் வந்தவளைப் பார்த்த பூரணி, அவளுக்கு ஒரு டவலை எடுத்துக் கொடுத்து,
“இந்தா முகத்தைச் துடைச்சிக்கிட்டு பொட்டு வச்சிக்கிட்டு உட்காரு…” என்ற பூரணி, அவளது தலையை பின்னலிட,
“அம்மா.. நான் இங்க இருந்துட்டா நீ எப்படிம்மா நம்ம வீட்டுல தனியா இருப்ப? பேசாம நீ இங்க எங்க கூடவே வந்திடேன்.. நான் இல்லாம நீ எப்படிம்மா இருப்ப? நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன்மா..” வெண்ணிலா பூரணியிடம் சொல்ல, அவளது முகத்தை நிமிர்த்திய பூரணி,
“என்ன நிலா இப்படி கேட்கற? எனக்கும் நீ இல்லாம கஷ்டமா தான் இருக்கும்.. ஆனா.. நீ இனிமே குழந்தை இல்ல.. அம்மா அங்க தனியாவா இருப்பேன்? நம்ம வீட்டு பக்கத்துல தான் பெரியம்மா இருக்காங்க.. திலீப் எப்பவுமே அங்கயும் இங்கயும் தானே இருப்பான்.. அதுனால ஒண்ணும் பிரச்சனை இல்ல.. என்னைப் பத்தி கவலைப்படாதே..
எப்படியும் உன்னையும் கல்யாணம் செய்து வேற ஒரு வீட்டுக்கு அனுப்பித் தானே ஆகணும்.. என்ன இது திடீர்ன்னு நடந்திடுச்சு அவ்வளவு தான்.. நீ இங்க மாப்பிள்ளை சொன்னப் பேச்சைக் கேட்டுக்கிட்டு சமத்தா இருக்கணும். மாப்பிள்ளை ரொம்ப நல்ல மாதிரி.. ஒருவேளை உனக்குன்னு கல்யாணம் பண்ண முடிவெடுத்து நாங்க மாப்பிள்ளை பார்த்திருந்தா கூட இவ்வளவு நல்லவரா இருப்பாரான்னு தெரியாது.. எனக்கு அந்த விதத்துல நிம்மதி..” பூரணி சொல்லவும், வெண்ணிலாவிற்கு ஆர்யனின் இதமான பேச்சுக்கள் நினைவு வந்தது..
“நீயும் மாப்பிள்ளையும் இங்க தனியா தான் குடும்பம் நடத்தப் போறீங்க.. உங்க அத்தை அப்பப்போ வந்துட்டு போவாங்க.. அதனால மெல்ல நீ தான் சமைக்க கத்துக்கணும்.. மாப்பிளையை செய்ய விட்டுட்டு வேடிக்கைப் பார்க்காதே என்ன? அது தான் ஆன்லைன்ல எல்லாமே அழகா சொல்லித் தராங்களே.. அதைப் பார்த்து செய் என்ன?” பூரணி சொல்லவும், வெண்ணிலா மெல்ல தலையசைத்தாள்..
“ஹையோ பாவம் அவரு..” வெண்ணிலா பூரணியிடம் கேலி சொல்ல, அவர்களது பேச்சுக் குரல் கேட்டு, வெண்ணிலாவிற்காக பூவை எடுத்துக் கொண்டு வந்த விஷ்ணுப்ரியா, அவள் சொன்னதைக் கேட்டு,
“வெண்ணிலா.. சமையல் எல்லாம் மெல்ல கத்துக்கலாம்.. ஆரி சூப்பரா சமைப்பான்.. அவனுக்கு வாரத்துல ரெண்டு நாள் ஆபிஸ் போனா போதும்.. மீதி மூணு நாள் வீட்டுல இருந்து தான் வேலை செய்வான்.. அதனால உனக்கு கவலை இல்ல.. அவன் உனக்கு கத்துத் தருவான்.. அதுக்கு எல்லாம் நீ டென்ஷன் ஆகிட்டு இருக்காதே..” சிரித்துக் கொண்டே சொல்ல,
“நிஜமாவா? அவரு நல்லா சமைப்பாரா?” அவள் விழிகளை விரிக்க,
“ஆமா.. வந்து அவன் போட்ட டீயை குடிச்சுப் பாரு..” என்றவள், தான் கொண்டு வந்திருந்த பூவை அவளது தலையில் சூட்ட, பூரணி தனது கைப்பையில் இருந்து வெண்ணிலாவிற்காக கொண்டு வந்திருந்த செயினை அணிவித்துவிட்டு,
விஷ்ணுப்ரியாவைப் பார்த்து, “இதெல்லாம் நான் வெண்ணிலாவுக்காக சேர்த்து வச்ச நகை.. இவளுக்கு டிரஸ் எடுத்துட்டு வரும்போது எடுத்துட்டு வந்தேன்.. இதை பத்திரமா எங்க வைக்கிறது?” அவளது நகைப்பெட்டிகளைக் காட்டிக் கேட்கவும், ‘ஆரி..’ ப்ரியா அழைத்தாள்..
“என்ன ப்ரியா?” கேட்டுக் கொண்டே ஆர்யன் உள்ளே வரவும்,
“வெண்ணிலாவுக்கு நகை எல்லாம் கொண்டு வந்திருக்காங்களாம்.. எங்க வைக்கிறதுன்னு அக்கா கேட்கறாங்கடா..” என்று சொன்ன ப்ரியா, பூரணியைப் பார்க்கவும்,
“இப்போ ரொம்ப அவசரமா இதை எல்லாம் எடுத்துட்டு வரணுமா அத்தை?” கேட்ட ஆர்யன், அவர் தயக்கத்துடனும், கெஞ்சுதலாகவும் பார்க்கும்பொழுதே, ஒரு பெரும்மூச்சுடன், “இதோ அத்தை.. இந்த கப்போர்ட்ல லாக்கர் இருக்கு.. அதுல வச்சுக்கலாம்..” என்ற ஆர்யன்,
“வெண்ணிலா.. இங்க வா..” அவளை அருகே அழைத்து,
“இதுல நம்பர் லாக் பாஸ்வர்ட் இருக்கு ****** தான் அதோட நம்பர்.. நியாபகம் வச்சிக்கோ.. ஒருவேளை மறந்துட்டேன்னா..” என்றவன், அவனது டேபிளில் இருந்த டைரியில், அதை எழுதி வைத்து,
“இங்க இருக்கு பார்த்துக்கோ..” எனவும், வெண்ணிலா தலையை அசைக்க,
“இந்த கப்போர்ட்ல இருந்து என்னோட ஃபார்மல் டிரெஸ்ஸை எல்லாம் நான் அந்த ரூம்ல வச்சிடறேன்.. உன்னோட டெய்லி யூஸ் திங்க்ஸ் இங்க வச்சிக்கோ.. நாம ஊருக்கு எல்லாம் போய்ட்டு வந்து மெல்ல அடுக்கிக்கலாம்..” என்றவன் அப்பொழுது தான் அறையில் இருவரும் தனியாக இருப்பது புரிய, தனக்குள் சிரித்துக் கொண்டு,
“நீ ரெடி ஆகிட்டன்னா வெளிய போகலாமா? இன்னும் நீ டீ குடிக்கல..” என்றபடி அவளை அழைத்துக் கொண்டு வெளியில் சென்றான்..
அவன் சோபாவில் அமர்ந்ததும், அவனது மடியில் கவின் ஏறி அமர, “டேய் அவனை பாலை குடிக்க வைடா.. கண்ணு முழிச்சதும் மாமா கூட கேம்ஸ் விளையாடறேன்னு ஆரம்பிச்சிட்டான்..” ப்ரியா குற்றப்பத்திரிக்கை வாசிக்க, அவளைப் பார்த்து கண்ணசைத்தவன்,
“இப்போ நீ பாலைக் குடிச்சன்னா நாம கேம் விளையாடலாம்.. ஓகே வா.. சீக்கிரம் குடி.” சிறியவனின் கப்பில் இருந்த பாலை கொடுக்கவும்,
“சரி மாமா..” என்றவன் வேகமாக பாலை குடித்து முடிக்க, அவனது கன்னத்தைத் தட்டி,
“நீ போய் வாயை துடைச்சிட்டு வா.. நான் நம்ம கேமை ரெடி செய்யறேன்..” என்றபடி, தனது ப்ளே ஸ்டேஷனை இயக்கவும், வெண்ணிலாவிற்கு உற்சாகம் தொற்றிக் கொண்டது..
“மாமா.. கேம் விளையாடுவீங்களா?” வெண்ணிலா கேட்க, அவளது ஆர்வத்தைப் பார்த்தவன்,
“ஓ.. விளையாடுவேனே.. நீ விளையாடுவியா?” அவனும் உற்சாகமாகக் கேட்கவும்,
“நானும் விளையாடுவேன் மாமா…” என்றவள், ஆவலாக அவனது அருகில் சென்று அமர, ஆர்யனுக்கு சிரிப்பு பொங்கியது.
“அப்போ எனக்கு ஜாலி தான்.. போர் அடிச்சா உன் கூட விளையாடலாம்..” அவன் சொல்லவும், ‘நானும்.. நானும்..’ என்று கவினும் வந்து அமர, கவினுக்கு பிடித்தமான வாத்து பிடிக்கும் கேமை இயக்கி, அதில் அவளது பெயரை பதித்துக் கொண்டிருக்க,
“அத்தை நீங்களும் விளையாடுவீங்களா? வாங்க நாம விளையாடலாம்.. இன்னைக்கு மாமா வேண்டாம்..” கவின் வெண்ணிலாவிடம் நட்புக்கரம் நீட்டவும்,
“வரேண்டா கண்ணா..” என்றவள் குழந்தையின் கன்னத்தைப் பிடித்து கொஞ்சிவிட்டு,
“இதை எப்படி விளையாடணும்ன்னு சொல்லித் தாங்க மாமா.. நானும் கவினும் விளையாடறோம்..” கண்கள் மின்னக் கேட்டவளை தனக்குள் ரசிக்கத்து அவளுக்கு சொல்லிக் கொடுக்கத் துவங்க, வெண்ணிலாவைப் பார்த்த பூரணி தலையில் அடித்துக் கொண்டார்.
“மாமா இருங்க. நான் அத்தைக்கு சொல்லித் தரேன்.” என்ற கவின் அவளுக்கு சொல்லித் தர, இருவரும் விளையாடத் துவங்கினர்..
“வெண்ணிலா.. இந்தா டீ குடிச்சுக்கிட்டே விளையாடு..” இருவரும் விளையாடுவதை பார்த்தவன், அவளுக்கு டீயை கொண்டு வந்துத் தரவும், பூரணி சங்கடமாக பிருந்தாவைப் பார்த்து வெண்ணிலாவை முறைக்க, அவனது முகத்தைக் கூடப் பார்க்காமல்,
“தேங்க்ஸ் மாமா..” என்றவள், டீயை குடித்துக் கொண்டே கவினுடன் விளையாடத் துவங்கினாள்..
“சரியா போச்சு.. இவனை கல்யாணத்துக்கு கிளப்பறதுக்கே இதை கையில இருந்து பிடுங்க வேண்டியதா போச்சு.. இப்போ நீயும் சேர்ந்துட்டு விளையாடறியா? இனிமே அவனை கையில பிடிக்க முடியாது.. நல்லா விளையாடுங்கடா..” கேலி செய்த பிருந்தா, வெண்ணிலா திருதிருவென்று விழிக்கவும்,
“சந்தோஷமா விளையாடு.. நான் சும்மா கேலி செஞ்சேன்..” என்றபடி அவளது தலையை வருடி, அவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அமர்ந்தார்.. அவள் அந்த வீட்டில் எந்த வித தயக்கமும் இன்றி பதிவதற்கு இதுவே ஒரு காரணமாக இருக்கும் என்று கருதியவர், பூரணியைப் பார்த்து கண்களை மூடித் திறந்தார்..
உணவை ஆர்டர் செய்ய தனது மொபைலை எடுத்த ஆர்யன், அதில் திலீபன் அனுப்பி இருந்த செய்தியைப் பார்த்து தனக்குள் புன்னகைத்துக் கொண்டான்..
உணவை ஆர்டர் செய்துக் கொண்டே, “உனக்கு ஃபலூடா பிடிக்குமா வெண்ணிலா?” என்று கேட்கவும், விழிகளை விரித்து அவனைப் பார்த்தவள்,
“ரொம்ப பிடிக்கும் மாமா.. ஏன் வாங்கித் தரப் போறீங்களா?” அவளது பதிலில், அதையும் ஆர்டர் செய்தவன், மற்றவர்களுக்கும் அவர்கள் கேட்ட உணவை ஆர்டர் செய்து விட்டு, சேகருடன் அமர்ந்து பேசத் துவங்கினான்.
ஆர்டர் செய்திருந்த உணவு வரவும், அனைவரும் உண்டு முடிக்க, பூரணியை அழைத்துச் செல்ல திலீபன் வந்து சேர்ந்தான். திலீபனைப் பார்த்ததுமே வெண்ணிலா பூரணியை கலக்கத்துடன் பார்த்தாள்.. அவளைத் தனியே அழைத்துச் சென்ற பூரணி,
“சொன்னது எல்லாம் நியாபகம் இருக்கு இல்ல.. மாப்பிள்ளையை படுத்தாதே.. சமத்தா இரு.. அவர் சொன்னதைக் கேட்கணும் என்ன? நாளானிக்கு மாப்பிள்ளை உன்னை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வருவார்..” என்று சொல்லிவிட்டு,
பிருந்தாவின் அருகே வந்தவர், “அண்ணி.. அவ சின்னப் பொண்ணு. என் கைக்குள்ளேயே வளர்ந்துட்டா.. அவ ஏதாவது தெரியாம பண்ணினா மன்னிச்சிருங்க அண்ணி.. அவ சொல்லிக் கொடுத்தா புரிஞ்சிப்பா..” கவலையுடன் சொல்லவும்,
“நான் பார்த்துக்கறேன் பூரணி. நீங்க கவலைப்படாதீங்க.. எனக்கு அவ இன்னொரு பொண்ணு மாதிரி..” எனவும், மனதில் தோன்றிய நிம்மதியுடன் பூரணி விடைப்பெற்றுக் கிளம்ப, வெண்ணிலா கண்ணீருடன் அவரைப் பார்த்து தலையசைத்தாள்.
“நிலாக்குட்டி உன்னோட போனையும் சார்ஜரையும் எடுத்துட்டு வந்திருக்கேன் பாரு.. இதுல மாமாவோட நம்பரை கேட்டு சேவ் பண்ணிக்கோ..” என்ற திலீபன், அவளைத் தோளோடு அணைத்து, ஆர்யனைப் பார்த்து தலையசைக்க, அவன் பதிலுக்கு கட்டை விரலைக் காட்டவும், திலீபனின் மனதினில் ஒரு நிம்மதி.. தனது மகளை புகுந்த வீட்டில் விட்ட, பூரணி அனைவரிடமும் விடைப்பெற்றுக் கிளம்பினார்.
சிறிது நேரம் கழித்து, அலுப்புத் தீர குளித்துவிட்டு வந்தவனை, சேகர் பால்கனிக்கு தள்ளிக் கொண்டு சென்றான்.. பிருந்தாவின் அருகில் தொலைந்த குழந்தையாக அமர்ந்திருந்த தனது மனைவியைப் பார்த்தவனுக்கு, அவளைத் தோளில் சாய்த்துக் கொள்ளும் ஆவல் எழ, அவளைப் பார்த்து பெருமூச்சு விட்டான்..
“டேய்.. ஆரி.. அக்காவோட ஆசைக்கு சும்மா ஏதோ பண்ணி இருக்காங்க.. அதுக்காக அவகிட்ட கோவிச்சுக்காதே.. பாவம்டா அவங்க..” நேரிடையாக, எச்சரிக்கையாக சேகர் சொல்லவும்,
“என்ன பண்ணி இருக்காங்க?” சந்தேகமாக ஆர்யன் கேட்க, உதட்டைப் பிதுக்கிய சேகர்,
“அதை விடு.. உனக்கு நான் சொல்லணும்னு இல்ல.. உனக்கே தெரியும். வெண்ணிலாக்கிட்ட நிறைய பேசு ஆரி.. அவக்கிட்ட நல்ல ஃப்ரெண்ட்டா பழகு.. மெல்ல மெல்ல உன்னோட காதலை அவளுக்கு உணர்த்து. அவளுக்கு எல்லாமே இப்போ கனவு போல இருக்கும்.. அதுவும் திடுதிப்புன்னு கல்யாணம் எல்லாம் எதிர்பார்த்து இருக்க மாட்டா.. நீ பொறுமையா தான் இருக்கனும்.. நான் சொல்ல வரது புரியுது இல்ல?” சேகர் இழுக்க,
“நானும் சின்னக் குழந்தை இல்ல மாமா.. எனக்கு அவளோட மனநிலை ரொம்ப முக்கியம்.. நானும் அவளும் எங்கயும் ஓடிடப் போறது இல்ல. எல்லாம் இயல்பா தான் நடக்கும். சரி ரொம்ப டயர்டா இருக்கு.. நான் போய் தூங்கப் போறேன்.. தூக்கம் வருது..” என்றவன்,
“அவளும் நானும் அமுதும் தமிழும்.. அவளும் நானும் அலையும் கடலும்” என்று பாடிக் கொண்டே சமையலறையை நோக்கிச் செல்ல, விஷ்ணுப்ரியா வெண்ணிலாவின் அருகில் சென்றாள்..
“வெண்ணிலா.. நீ உள்ள போய் படுத்துக்கோ.. மணியாகுது.. விட்டா இவன் விடிய விடிய விளையாடுவான்..” ப்ரியா கூறிக் கொண்டே கவினின் கையில் இருந்த கன்சோலை வாங்கி வைக்க, வெண்ணிலா அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தாள்..
அவளது திகைப்பு புரிந்தது போல அவளது கன்னத்தைத் தட்டிவிட்டு ப்ரியா உறங்கச் சென்றுவிட, “கவின் நாம தூங்கப் போகலாம் வா..” என்ற சேகர், ஆர்யனைப் பார்த்து விட்டு, கவினைத் தூக்கிக் கொண்டு உள்ளே செல்ல,
“காலையில சீக்கிரம் என்னை எழுப்பிடாதீங்க.. நான் தூங்கனும்..” என்றவன், அனைவரும் உறங்கச் சென்றிருக்கவும், விளக்குகள் அனைத்தையும் அனைத்துவிட்டு, அவன் ஆர்டர் செய்திருந்தது வரவும், அதை வாங்கிக்கொண்டு, ப்ரிட்ஜில் வைத்திருந்த ஃபலூடாவை எடுத்துக் கொண்டு அறைக்குச் சென்றான்..