மென்சாரலில் நின்வண்ணமோ..!? (14)

IMG-20210507-WA0004-af1baadb

மென்சாரலில் நின்வண்ணமோ..!? (14)

சாரல்-14

“எனக்கென்னமோ.. நீ அவசரப்பட்டிட்டியோனு தோணுது அதி..”

“ப்பா..!?” அத்தனை நேரமும் தான் சொல்வதனைத்தையும் ஒன்றுவிடாமல் ஆழமாய் உள்வாங்கிக் கொண்டிருந்த அகிலன் இவ்வாறு உரைக்கவும் அதி அதிர்ந்துதான் போனான்.

“மேகாக்கு உன்ன பிடிச்சிருக்கு..” என்றவர் தொடங்க அதியோ,

“அதத்தான் அவளே சொல்றாளே” என்று முடித்தான். அவனிடம் மறுப்பாய் தலையசைத்த அகிலன்,

“இப்பவும் அவசரபடற!” என்று சிறு கண்டிப்புடன் தொடர்ந்தார்

“மேகாவுக்கு உன்னையோ உன் காதலையோ பிடிக்காம போகலை.. அப்படி இருந்திருந்தா இது இவ்வளவு தூரம் வந்துருக்காது..” என்க அவனோ “ம்ம்” என்று ஆமோதித்தான். இது அவனுக்கும் தெரிந்ததுதானே! ஆனால் ஏன் என்றுதான் தெரியவில்லை!

“அதி..?”  என்றவர் கேள்வியாய் இழுக்க அவனோ,

“எனக்கு சொல்ல தெரியலப்பா! ஏதோ நான் அவள தொல்லை பண்றதுபோல திடீர்னு ஒரு எண்ணம்.. இல்ல பயம்! அதே சமயம் மறுபடியும் அவ என்னைவிட்டு தூரமா போயிருவாளோனு பயம்! என்ன இருந்தாலும் மனசுக்கு பிடிச்சவங்கள பக்கத்துலேயே வச்சுக்கனும்னு நினைக்கற சராசரி மனுஷன் தானே நானும்… அவ அப்படி கோவப்பட்டு கத்தி நான் பார்த்ததேயில்ல… கோவப்படுவா.. ஆனா கத்தினதில்லை. எப்படிப்பட்ட சூழ்நிலையிலயும் நிதானத்த இழக்காம சமாளிப்பா.. அவ்வளோ தெளிவு, ஆனா அப்படிப்பட்டவளே நேத்து நிதானத்த இழந்து கத்தறளவுக்கு.. அதுக்கு நான்தான் காரணமோனு ஒரு குற்ற உணர்ச்சி! அவ சந்தோஷமா இருக்கனும்னு நினைச்சிட்டு அதை நானே கெடுத்திட்டேனோனு… சொல்லத் தெரியலப்பா” என்றவன் மறுபுறம் திரும்பிக்கொண்டான்.

மகனையே சில கணங்கள் பார்த்திருந்தவர் பின் ஆதரவாய் அவன் தோளில் கை பதித்தவாரே,

“பாத்தீயா? அங்க உதய்கிட்ட அவ்ளோ பேசிட்டு வந்த நீயே இப்போ இப்படி அவசரப்பட்டா என்ன அர்த்தம்?” என்றார் மென்குரலில் ஒரு பத்து வயது சிறுவனை கையாளும் மென்மையோடு.

“இல்ல ப்பா…” என்றவன் தொடங்குகையிலேயே கையசைத்து தடுத்த அகிலன்,

“இத்தனை வருஷம் பொறுமையாயிருந்த நீயே ஆசைப்பட்டவங்கள பக்கத்துல வச்சுக்க நினைக்கற சராசரி மனுஷன்தானேனு கேட்கும்போது, இத்தனை வருஷம் உனக்கு தெளிவானவளா தெரிஞ்ச மேகா இப்பொ குழப்பத்துல இருக்கக்கூடாதா?”

“ப்பா…”

“அதி… நட்புக்கு அடுத்த கட்டம் காதல்னு சொல்லுவாங்க.. ஆனா என்னைப் பொருத்தவரை ரெண்டுமே தனித் தனி… கிட்டத்தட்ட பாரலெல் யூனிவர்ஸ் மாதிரினு வச்சுக்கோயேன்! நீ எப்போவோ காதலுக்கு வந்துட்ட… ஆனா மேகா!? அவளால அப்படி முடியல! சொல்லப்போனா.. அவளால நட்புலயும் நிக்க தோணாம காதலுக்கும் வர தோணாம நடுவுலயே நின்னுட்டா! நடுவுல சிக்கியிருக்கற மேகா கைய பிடிச்சு நீதானே அதி காதலுக்குள்ள அழைச்சுட்டு வரனும்?… யோசிச்சு பாரு அதி, இத்தனை வருஷமாகியும் நீ அதே அதியாதான் இருக்க ஆனா மேகா அப்படியில்லடா… அவ ஒரு உறவுக்குள்ள போயிட்டு வந்துருக்கா… அதுவும் அவ மறக்க நினைக்கறளவுக்கான ரிலேஷன்ஷிப்!! அவ பொறுப்புல பவிமா வேற! அவ அதே மேகா இல்ல அதி! முதல்ல அதை புரிஞ்சுக்கோ… முன்னவிட இப்போதான் நீ இன்னும் பொறுமையா கையாளனும்… மேகாவுக்கு நீ அந்த நம்பிக்கைய குடுக்கனும் அதி… உன் காதல உணர்த்தினா மட்டும் போதாது!…” என்றவர் அதியை பார்க்க அவரையே கவனித்துக் கொண்டிருந்தவனோ தன்னையறியாமலேயே அவரிடம்,

“புரியல ப்பா..” என்க சின்னதாய் முறுவலொன்றுடன்

“மனுஷ மனம் அப்படிதான் அதி, சில சமயம் நீ மெனக்கெட்டு செய்யற பெரிய விஷயம்லாம் மனச தீண்டக்கூட செய்யாது… ஆனா உன்ன அறியாம, தன்னியல்போட நீ செய்ற சின்ன செய்கையாகட்டும்…  இல்ல ஏன்? ஒரு வார்த்தைக்கூட போதும் அதுக்கூட வேணாம் சின்ன தொடுகை? தேவையான நேரத்துல மௌனம்? ஆறுதலான அணைப்புனு… ரொம்ப சின்ன விஷயம் மனசுல பதிஞ்சு போயிரும்!! அன்பை உணர்த்தி நம்பிக்கைய விதைச்சிரும்! அதுக்காக நீ எதுவும் செய்ய வேணாம் அதி… நீ நீயா இரு! மேகாவும் அதைதான் விரும்புவா… அவ மனசு எதிர்ப்பார்க்கற ஏதோ ஒன்ன நீ எப்போவாவது உணர்த்துவ… எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு அதி!!” என்று அவன் தோள்தட்டி உரைத்தவரையே கண்கலங்க வெறித்தவனின் இதழ்களோ,

“அப்பா…” என்றழைப்பதை தவிர்த்து வேறெதுவும் நினைவில் இல்லாததைப்போல செயல்பட அவனை உணர்ந்து முகம் மலர்ந்தவரின் கண்களிலும் அவனதின் பிரதிபலிப்பு!

அவனை அணைத்து அவன் முதுகில் தட்டியவாறே, “இப்போ என்னடா அவசரம்? உனக்கென்ன இருபத்தி ஏழா? அவ்வளவுதானே!? மனசுக்கு தோணினத செய் அதிரூபா! அப்பா நானிருக்கேன்!! நீ நிச்சயம் தப்பு செய்ய மாட்ட!… ரெண்டாவது தடவை எல்லாருக்கும் கிடைக்காது அதி… தவறவிட்டிராத… திகட்டிப்போறவரை ட்ரை பண்ணு… உன்னால அவள காயப்படுத்த முடியாது அதி… அப்பா நம்பறேன்!” என்றவர் கண்களை துடைத்துக்கொண்டு நிமிர விழிகளிரண்டிலும் வெள்ளப் பெருக்குடன் நின்றிருந்த மகனைக் கண்டுவிட்டு அதை துடைத்தவராய்…

“கிளம்பலாமா அதி? அனு காத்திட்டிருப்பா…” என்க தன் முகத்தில் படிந்து கண்ணீரை துடைத்துக்கொண்டிருந்த தந்தையின் கைகளை பற்றி தடுத்து நிறுத்தியவனோ கலங்கியிருந்த கண்களுக்கு மாறாய் இதழ்களில் குறும்பு சிரிப்பொன்றை படரவிட்டு, “நான் வேண்டாம்னு சொன்னா…?” என்க அவன் கேலியுணர்ந்த அகிலனோ அவனைப்போலவே குறும்பு புன்னகையுடன் அவன் காதை திருகியபடியே,

“இப்படியே இழுத்துட்டு போக வேண்டியதுதான்!” என்றுவிட ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி கலகலவென நகைத்த இருவரும் அந்த காலை நேரப் பயணத்தை மீண்டும் தொடர்ந்தனர்… இம்முறை இனிமையாக!!

கண்ணாடி வழியாய் மகனைப் பார்த்த அகிலனுக்கு இப்பொழுது புன்னகைத் தவழும் மகனின் முகம் மன நிம்மதியை மீட்டியது.

வீட்டிற்கு அருகில் வரும்பொழுதே அகிலன்,

“அதி..”

“சொல்லுப்பா…” என்றவனின் குரலில் இருந்த நெருக்கம் அந்நேரத்திலும் அவருக்கு தித்தித்தது.

“அனுக்கிட்ட இப்போதைக்கு இதைப்பத்தி சொல்ல வேணாம்டா” என்றுவிட அவனோ குழம்பியவனாய்

“ஏன்பா?” என்றான்

“எல்லாம் நல்ல படியாத்தான் நடக்கும்…  அதுல எனக்கு நம்பிக்கை இருக்கு! அது நாலு மாசமோ இல்லை நாலு வருஷமோ… ஆனா அதுவரைக்கும் அனு எந்த விஷயத்துக்கும் வருத்தப்படவோ டிஸ்ஸப்பாய்ண்ட் ஆகவோ வேண்டாம் அதி… அனுகிட்ட நானே பெறுமையா சொல்றேன்…” என்றார்.

அதியினுள்ளோ அதிசயமே! இத்தனை வருடங்கள் ஓடியும் இவர் அம்மாவிற்காக ஒவ்வொன்றையும் பார்க்கிறாரே…

“என்ன அதி? அமைதியாகிட்ட?” அகிலனின் குரல் அவன் எண்ணவோட்டத்தை தடுக்க அவனோ,

“ம்ம்ம்… உங்களுக்கு ஏன் அம்மாவ பிடிச்சது?” என்று ஆர்வமாய் கேட்க இப்பொழுது அவர் புன்னகை விரிந்து மெல்லிய சிரிப்பானது.

“உனக்கு ஏன் உன் மேக்ஸ பிடிச்சது?… பதிலில்லைல.. அதேபோலத்தான் எனக்கும் என் அனுவ பிடிச்சது…” என்றவாரே வண்டியை பேஸ்மெண்டில் நிறுத்தியவர் அவன் பரபரப்பதை கண்டுவிட்டு

“என்ன அதி?” என்க அவனோ

“இல்லப்பா அடுத்த பஸ்க்கு டிக்கெட் பார்த்தேன்… கிடைக்கல…”

“சரி அப்போ ஒன்னு பண்ணு… பேசாம சாப்பிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு அப்பறம் ஈவ்னிங்கா காரெடுத்துட்டு போயிட்டுவா…” என்க அவனோ

“ஈவ்னிங்கா!? அது ரொம்ப லேட் ஆகிடும்ப்பா… மேக்ஸ் ஈவ்னிங் சீக்கிரம் வந்துருவா…” என்றவன் பரபரக்க அவருக்கோ அதியின் இந்த பக்கம் புதிது! வரத்துடித்த சிரிப்பை அடக்கியவாரே…

“அவ்ளோ யோசிக்கறவன் அங்கருந்து இப்படி அவசர அவசரமா கிளம்பிருக்க கூடாது!” என்று சிரிப்பை அடக்கியவாரே லிஃப்ட்டை நோக்கி நடந்தார். அவர் பின்னாடே ஓடியவனாக அதியும்,

“இங்க வந்தத நான் ரெக்ரெட் பண்ணவேயில்லையே! பேசாம ஃப்லைட்ல புக் பண்றேன்…” என்க அவனையே வெறித்தவரோ,

“சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்துட்டு கிளம்பு! இல்ல அனு வருத்தப்படுவா…” என்றவாரே லிஃப்டிலிருந்து வெளியேற அவரை பின்தொடர்ந்தவாரே அவனும்,

“உங்களோட இந்த ஸைட இத்தனை வருஷம் எப்படி பார்க்காம போனேன்?” என்றவாரே அவர் முன் வந்து அவர் முகத்தை குறும்பாய் பார்த்தவாரே பின்னோக்கி அவன் நடக்க அவரோ,

“ஐஸ் வைக்காத அதி! பெங்களூர் குளுருக்கு!” என்று சிரிக்க அடுத்து வந்த சில மணி நேரங்களும் பரபரப்பை வெளியேகாட்டாதவாறு சாப்பிடுவதில் மட்டுமின்றி தூங்குகிறேன் பேர்வழியென்று அதே பரபரப்புடன் அறையில் சற்று நேரம் அமர்ந்தவனுக்கு ஃப்லைட் ஏறியபின்புமே அந்த பரபரப்பு குறைந்தபாடில்லை! 

“இன்னைக்கேவா?!” என்று சுணங்கிய அனுவை ஆறுதல் படுத்துவதில் அகிலன் உதவிக்கரம் நீட்ட பின் முறுவலை இழுத்து பிடிக்க முயன்றவாரே அனுவும் டாட்டா காட்டினார். ஆனந்த பரபரப்பில் ஃப்லைட் ஏறியிருக்கும் இவனுக்கு நேரெதிர் பதமாய் இருந்தது அங்கு மேகாவின் வீட்டில்.

மற்றவர்களிடம் கொட்டிவிட்டதாலோ,இல்லை பல மணி நேரங்களை கடந்துவிட்டதாலோ என்னவோ அன்றைய சம்பவத்தின் தாக்கம் அன்றைவிட இன்று இருவருக்கும் சற்று மட்டுப்பட்டதாய் தோன்றியது.

அதுவரைக்கூட முணுமுணுவென உறுத்திக்கொண்டிருந்தவைக் கூட காலையில் கல்லூரி வாயிலில் மனோவை கண்டவுடன் தென்னலுக்கும், தென்னலைக் கண்ட மனோவுக்கும் முழுதாய் ஒதுக்கி ஒருவரை நோக்கி ஒருவர் புன்னகைக்க முடிந்தது. அது தயக்கங்களற்ற புன்னகை!!

வாயிலில் பார்த்துக்கொண்ட இருவரும் மற்றவரை நெருங்கினர் அதே முகமலர்வுடனே.

“ஹாப்பி மோர்னிங்!!” என்ற தென்னலுக்கு அதே உற்சாகத் த்வனியில்,

“ஹாப்பி மோர்னிங் தென்னல்!!” என்று பதிலளித்தவன், “என்ன இன்னைக்கு, ரொம்ப சீக்கிரம்!?” என்க

“அதுவா… சாக்லெட்ஸ் ஸ்டாக் தீர்ந்துப்போச்சு மனோ. அதான் கேண்டீன் போயிட்டு அப்படியே லைப்ரரில புக் ஒன்னு ரிட்டர்ன் பண்ணனும்..” என்று பேசியவாறே அவள் நடக்க அவளுடன் இணைந்து நடந்தவாரே மனோ கேட்டுக்கொண்டிருக்கவென அன்றைய காயங்களை முடிந்தளவு வடுக்களாய் மாற்றிவிட்டு பழைய நிலை திரும்பினர் இருவரும்.

கேண்டீனில் சாக்லெட்களை வாங்கி இவள் பையினுள் போட்டுவிட்டு கையில் ஒன்றை எடுத்து அதன் ராப்பரை பிரித்தவளாக மனோவிடம் பாதியை நீட்ட அப்பொழுதே அவன் திடீரென மௌனமானதை உணர்ந்தாள் தென்னல். அதன் காரணம் என்னவென்று அவளறியாமல் இல்லை!

அன்று க்ரௌண்டிலிருந்த ஒரு சிலரைத் தவிர வேறு யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான், ஆனால் பிரச்சனை ஹெச்.ஓ.டி வரை சென்றதில் சிறியளவில் பறவியிருக்க விஷயம் தெரிந்து இவர்களை தெரியாத சிலர் இவர்களை வெறித்து பார்ப்பதும் விஷயமறியா நண்பர்களிடம் கிசுகிசுப்பதுமாய் இருந்தனர். எல்லோரும் திரும்பி பார்க்கவில்லை என்றாலும் அந்த ஒரு சிலர் திரும்பி பார்ப்பதே ஒரு மாதிரியாய் இருந்தது.  மனோவோ எங்கு தென்னல் வருந்துவாளோ என்று வருந்த தென்னலுக்கோ மனோ வருந்துகிறானே என்றிருந்தது.

“மனோ!” என்றவளின் சத்தமான அழைப்பில் அவன் திரும்ப அவன் கையில் சாக்லெட்டை துண்டை திணித்தவளாய் தானும் ஒன்றை வாயிலிட்டபடி நடக்கத் தொடங்கினாள்.

“இப்போ ஏன் முகத்த இப்படி வச்சிருக்க நீ!?”  என்றவளின் கேள்வியில் அவன் பார்வை அவள் புறம் திரும்பிட அதன் அர்த்தத்தை உணர்ந்தவளோ,

“அடேய்!! சத்தியமா நான் ஃபீல் பண்ணல!!அவங்க பாக்கறதுக்கூட பரவால்ல… ஆனா நீ மூஞ்ச இப்படி வச்சிக்கறத பாக்கத்தான் நெஞ்சு வலிக்க மாதிரி இருக்கு…” என்று வலது பக்க நெஞ்சில் கை வைக்க அவனோ அவள் பாவனையில் சிரிப்பு வர அதை அடக்கியபடி,

“ஹார்ட் லெஃப்ட் ஸைட்ல இருக்கு” என்றுவிட்டு நகர்ந்தான்.  அவள் அதை அறியாமலா செய்தாள்?

“அட ஆமாம்ல!” என்று கையை இடது பக்கம் நகர்த்திவிட்டு, “அது.. இங்க ஆரம்பிக்கற வலி, இங்கவரை வருது மனோ” என்றாள் அசடு வழிய

அவள் எதற்காக செய்கிறாள் ஒன்று உணர்ந்த மனோவோ விரிய புன்னகைத்தவனாய் அவள் தலையில் லேசாய் குட்டி, “அதாவது உனக்கு தெரியல… அத நாங்க நம்பனும்?”  என்க

“அஃப் கோர்ஸ்!!” என்று அவளிடமிருந்து வந்த உடனடி பதிலில் இருவரும் சேர்ந்து சிரித்தனர்.

சிரிக்கும் அவனையே பார்த்தவளாய், “பாரு… இப்போதான் பாக்கறா மாதிரி இருக்கு… அப்போதேயும் இருந்தியே… ஏதோ… ஆஹ்! இஞ்சி ஈட்டன் மங்கி மாதிரி” 

“குரங்கு ஏன் இஞ்சி சாப்பிடப் போது?”

“யாருக்குத் தெரியும்!! அம்மா அடிக்கடி சொல்ற டைலாக் அது!”

“ஓ….” என்று சிரிப்பை அடக்கியவனை  கடந்து சென்ற இருவர் அவர்களுக்குள் பேசியது காதில் விழுந்து வைக்க மனோவை பார்த்துவிட்டு தலையில் அடித்துக்கொண்டாள் தென்னல்.

“ஏன் அடிச்சிக்கற?”

“உன்ன அடிச்சிறக்கூடாதுல.. அதான் என்னை அடிச்சிக்கிறேன்!” என்றவளின் கேலியை உணர்ந்தும் உணராதவனாய்

“ஏன்??” என்றான்.

“பின்ன என்னவாம்? எதுக்கெடுத்தாலும் மூஞ்சி தெர்ட் ஃப்ளோர்ல தூக்கி வச்சுக்க வேண்டியது! இவ்வளவு ஃபீல் செய்றவன் அன்னைக்கு அமைதியா போயிருக்கலாம்ல?” என்றவள் அதன் பின்பே அவள் சொன்னதை உணர

“ஸாரி மனோ… நீ ஃபீல் செய்றது பிடிக்காம சொல்லிட்டேன். இதெல்லாம் இன்னும் ரெண்டு நாளைக்குதான். மிஞ்சிப் போனா ஒரு வாரம்?”

“அப்படியா சொல்ற?”

“நீ வேணும்னா பாரேன்… இன்னைக்கு ஒரு நாள் மட்டும் தெரிஞ்சவங்கலாம் கப்பல் கவிழ்ந்த ரேஞ்சுக்கு ‘கேள்விப்பட்டேன்’ னு ஆறுதல் சொல்றேன் பேர்வழினு ஆரம்பிச்சு ‘என்ன இருந்தாலும் அவன் அப்படி பண்ணிருக்க கூடாதுனு’ முடிஞ்சுப்போன கேஸுக்கு வாதாடி கடைசில ‘எதுக்கும் நீயும் மனோவும் இனி தள்ளியே இருங்க’னு கேட்காமயே ஃப்ரீ அட்வைஸ அள்ளித் தெளிச்சிட்டு போவாங்க…” என்று ஒரே மூச்சில் பேசியவள் பின்பு,

“இதெல்லாம் இங்க க்ரெடிட் பண்ணி அங்க டெபிட் பண்ணிடனும் மனோ! மறுபடியும் எதாவது நடந்தா கவனமெல்லாம் அங்க திரும்பிடும்… பெரிய பெரிய விஷயத்தையே கொஞ்ச நாள் கொந்தளிச்சிட்டு விட்றுவோம் இதுல நான் நீயெல்லாம் எம்மாத்திரம்”  என்க என்றைக்கும்விட இன்று அவனுக்காக அவள் அதிகம் பேசுவதை உணர்ந்தவனாய் அவளது பேச்சுக்களை கேட்டு சிரித்தபடி  நடந்துவந்தவனின் நடை தடைப்பட்டது அவர்கள் எதிரில் வந்து நின்றவனை கண்டு.

உதயை அங்கு எதிர்ப்பார்த்திராத இருவரும் ஒரே போல் அவனை புருவம் உயர்த்தி கேள்வியாய் பார்த்து நிற்க உதயோ ஆழ மூச்செடுத்தவனாய் மனோவிடம்,

“கைய ஓங்கினது தப்பு… சாரி மனோ” என்றவன் தென்னலை நோக்கி ஓரெட்டு எடுத்து வைக்க மனோவின் பார்வை அவனை துளைப்பதை உணர்ந்தும் அவன் புறம் திரும்பாதவனாய் தென்னலை பார்த்தவன்,

“நான் எந்த எக்ஸ்க்யூஸும் சொல்ல வரல… எனக்கு உன்ன பிடிக்கும்… உனக்கும் என்னை பிடிக்கனும்னு நினைச்சேன்னே தவிர உன்ன காயப்படுத்தனும்னு நான் நினைக்கல தென்னல்… இப்போதான் புரியுது, என்னயறியாம நான் உன்ன எவ்ளோ ப்ரஷரைஸ் பண்ணிருக்கேன்னு… என்னை மன்னிச்சிடு தென்னல்” என்றுவிட்டு  ஒரு நொடி முழுதாய் அவள் முகம் பார்த்தவன் பிறகு திரும்பியும் பாராமல் சென்றுவிட்டான். அவன் செல்வதையே பார்த்திருந்த தென்னலின் இதழ்களிரண்டும் லேசாய் வளைந்தன.

தென்னலா? இல்லை அவன் காதலா? என்று வரும்பொழுது தென்னலே முக்கியம் என்றுபட உதய் அவன் காதலை அந்த இடத்தில் ஒதுக்கி வைத்துவிட்டான்.

காலிங் பெல்லை அழுத்திவிட்டு பொறுமையை கையில் பிடித்தவனாய் நின்றிருந்தான் அதிரூபன். கதவை படபடவென தட்ட உயர்ந்த கையை கட்டுப்படுத்தியபடி! எங்கு இவன் தட்டி அதில் அவள் என்னவோ ஏதோவென்று பதறிவிடுவாளோ என்றெண்ணியவன் இன்னொரு முறை அழைப்பு மணியை அழுத்திவிட்டு காத்திருக்கத் தொடங்கினான்.

அவனை அதிகம் காக்கவிடாமல் கதவு திறக்கப்பட்டது. எதிரில் தோள் பையுடன் நின்றிருந்தவனையே வெறித்தவளை கண்டவனோ “டேக் கேர் சொல்ல மறந்துட்டேன்” என்க மெல்லிதாய் மலரும் சோர்ந்த முறுவலொன்றுடன் உள்ளே வா என்பதுபோல் தலையசைத்துவிட்டு மேகா உள்ளே சென்றுவிட வீட்டினுள் நுழைந்த அதி கதவை சாத்தியவனாய் பையை அங்கிருந்த இருக்கையில் வைத்தவனின் பார்வை வீடு முழுதும் சுற்றி பின் கேள்வியாய் அவளை வந்தடையும் முன் அடுப்பில் எதுவோ பொங்குவதுபோல சத்தமெழுந்தது.

“ஒரு நிமிஷம்” என்றுவிட்டு அவள் அடுக்களையினுள் ஓடவும் படுக்கையறையிலிருந்து பவியின் முனகல் சத்தம் வரவும் சரியாய் இருந்தது.

அடுக்களையை ஒரு கணம் பார்த்தவன் பின் பவி இருந்த அறையினுள் நுழைய படுக்கையில் எழுந்தமர்ந்தவாறு கண்களை கசக்கிக் கொண்டிருந்த வைபவியை கண்டவனுக்கு அவளது சோர்ந்த தோற்றம் பதற்றத்தை பரிசளித்தது.

“பவிமா” என்றவாரே அவளை தூக்கிக் கொண்டவனுக்கு அவளுடலின் வெப்பம் இன்னும் பதட்டத்தை கொடுக்க

“மேக்ஸ்!! மேக்ஸ்..” என்றழைத்தவாரே அவளை தூக்கிக் கொண்டு ஹாலிற்கு வர அதே சமயம் அவனது  அழைப்பில் ஹாலுக்கு வந்தாள் மேகா.

“என்னாச்சு?? பவிமாக்கு ஏன் இப்படி சுடுது?” என்று பதறியவனை கண்டவளோ பவியை தொட்டுப் பார்த்துவிட்டு,

“இப்போ கொஞ்சம் குறைஞ்சிருக்கு… டென்ஷனாகாத அதி… நீ பதறினா அவளும் பயப்படுவா…  சாதாரண காய்ச்சல்தான். நல்லா ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்” என்றவள் என்னவோ அவனிடம் சொன்னாலும் அவளுக்கு அவளே சொல்லிக் கொண்டதைப் போலத்தான் இருந்தது.

“சாதாரண காய்ச்சலா? எப்போல இருந்து இருக்கு?? நீ ஏன் என்ட்ட எதுவும் சொல்லல?? ஹாஸ்ப்பிட்டல் போனியா?” என்று அடுக்கிக் கொண்டே போனான்.

“நேத்துல இருந்து…” என்றவள் நேற்று வைபவி கீழே விழுந்ததையும் அதற்குப் பின்னான அவளது அழுகையையும் சொல்ல சொல்ல அவனுக்கு அப்பொழுதே புரிந்தது… நேற்று அவள் எம்மாதிரியான மனநிலையில் இருந்திருக்கக்கூடுமென… தனது முட்டாள்தனத்தை எண்ணி அவன் நொந்துக் கொண்டிருக்க அவளோ,

“நேத்து நீ கிளம்பின கொஞ்ச நேரத்துலயே வாமிட் பண்ண ஆரம்பிச்சிட்டா டெம்ப்ரேச்சரும் அதிகாமாகவும்தான் நேத்து நைட்டே இங்க பக்கத்துல இருக்கற க்ளீனிக்கு கூட்டிட்டுப் போயிட்டு வந்தேன்.  நேத்து விழுந்ததுல பயந்துட்டாப் போல… அதோட அழுகை வேற… வேறொன்னுமில்லை… இப்போ சாப்பிட்டு மருந்து குடுக்கனும்” என்றாள்.  ஏதோ சாதாரணம்போல சொன்னாலும் நேற்றிலிருந்து ஒரு சொட்டு கண்மூடாமல் உள்ளுக்குள் பதற்றத்தை பதுக்கிக் கொண்டு அவளிருந்தது அவளுக்கு மட்டுமேத் தெரியும்.

அதியின் மேல் சாய்ந்திருந்த பவியையே பார்த்திருந்த அதிக்கோ அத்தனை அவஸ்த்தையாய் இருந்தது. அவன் அறையினுள் நுழைந்தவுடனே “அதிப்பா” என்று தூக்கிக்கொள்ளுமாறு கையை தூக்கிய பவியை நினைத்து.

திடீரென பவி வாயாலெடுப்பதுபோல செய்ய “அவள என்கிட்ட குடு அதி” என்று வந்த மேகாவை தடுத்தவனோ

“நீ அவளுக்கு சாப்பிட எடுத்து வை மேக்ஸ்” என்றுவிட்டு பவியை பாத்ரூமிற்கு தூக்கிச் சென்று அவள் வாந்தியெடுத்த பின் அவளை அங்கிருந்த குட்டி ஸ்டூலில் அமர வைத்தான்.

“இத கழட்டிடலாமா?” என்றவாரே அவள் அணிந்திருந்த டீஷர்ட்டை மட்டும் கழட்டி அங்கிருந்த வாளியில் போட்டவன் வெண்ணீர் குழாயை லேசாக திறந்து துண்டை நனைத்துவிட்டு பவியின் கை, கால், முகம், உடம்பென துடைத்துவிட்டு

“வேற ட்ரெஸ் மாத்துவோமா பவிமாக்கு?” என்க அதற்கு பவியும் சம்மதமாய் தலையசைக்க அவளை தூக்கிக்கொண்டவன் மேகாவிடம்.

“பவிமா ட்ரெஸ்லாம் எங்கருக்கு மேக்ஸ்?” என்று அங்கிருந்தே வினவினான்.

“சேர்ல நேத்து மடிச்சு வச்சது இருக்கும் அதி” என்று கிண்ணத்தில் கஞ்சியை வைத்தவளாய் அவளும் அடுக்களையில் இருந்தே  குரல் கொடுத்தாள்.

மடித்து வைத்ததிலிருந்து ட்வீட்டி படம் போட்ட மஞ்சள் நிற டீஷர்ட் ஒன்றை எடுத்தவன் பவியிடம் கேட்டுவிட்டு அதை அவளுக்கு போட்டு விடவும் மேகா கிண்ணத்துடன் ஹாலுக்கு வரவும் சரியாய் இருந்தது.

முதலில் வாயால் எடுத்தது உடல் அசதியென உண்ண மறுத்த பவியை கெஞ்சி கொஞ்சி போக்கு காட்டியென மேகா சாப்பிட வைத்து மருந்தையும் கொடுத்துவிட பவியை தோளில் போட்டு தட்டிக்கொடுத்தவாரே அங்குமிங்கும் அதி நடைபயிலவென நேரம் கரைந்தது.

கஞ்சி, மருந்து, அதியின் அணைப்பென மெல்ல மெல்ல சுகமானதொரு தூக்கத்தினுள் வைபவி பயணிக்க அவளை கட்டிலில் படுக்க வைத்து போர்வையை இழுத்துப் போர்த்தியவன் விடி விளக்கை போட்டுவிட்டு வெளியே வர அதற்காகவே காத்திருப்பவள் போல அமர்ந்திருந்த மேகாவின் பார்வை அவனையும் அவன் பையையும் கேள்வியாய் நோக்கியது.

அதற்கு சற்றும் சம்பந்தமின்றி, “அசந்து தூங்கறா மேக்ஸ்… ” என்றான் ஒரு அம்மாவின் நிம்மதியோடு.

அதற்கு தலையசைத்தவளோ தன் பிடியிலிருந்து விலகாதவளாய் அவனிடம் “இங்க என்ன நடக்குது அதி?” என்று நேரடியாய் கேட்டுவிட அதற்குமேல் எதையும் மறையாமல் நேற்று அவன் அங்கிருந்து கிளம்பியதில் இருந்து இன்று… இப்பொழுது… இங்கு வந்தது வரை ஒன்றுவிடாமல் அத்தனையும் சொல்லிவிட்டான். அவளிடம் இருந்து மறைக்கவோ பொய்யுரைக்கவோ தோன்றவில்லை.

சொல்லி முடித்தவன் அவள் முகம் பார்த்து நிற்க அவளோ அமைதியாய் தரையையே வெறித்திருந்தாள்.

அகிலன் சொன்னதில் ஒன்றென்னவோ அவளைப் பொருத்தமட்டில்  ஆணித்தரமான உண்மையே…

அதீத அன்பு ஒரு கட்டத்தில் எந்த உறவாக வேண்டுமானாலும் உருமாறலாம்… அது நட்போ, காதலோ இல்லை சகோதரத்துவமாகவோ இல்லை ஏதோ ஒன்றன் பெயரில் அதை அடக்கி அதன் அடிப்படையில் அந்த உறவை நகர்த்துவது இயல்பானவையே… ஆனால் மேகாவால் அப்படி செய்ய இயலவில்லை! அகிலன் சொன்னதுபோல அவள் அந்த உறவிற்கு எந்த உருவமும் கொடுக்க தயங்கினாள்… அதையே இப்பொழுது அதி வழியாக கேட்க நேரும்பொழுதுதான் புரிந்தது அவளுக்கு…

மௌனமாய் அவளிருக்க அவனோ, “மேக்ஸ்…?” என்றான் கேள்வியாய்

“இப்போ நான் என்ன சொல்லனும் அதி…” என்றவளின் குரலில் அமர்ந்திருந்தவளின் எதிரே மண்டியிட்டமர்ந்தவன் அவளது கைகளிரண்டையும் எடுத்து தன் கன்னங்களில் பதித்துக்கொண்டான்.

“இங்க பாரு மேக்ஸ்.. என்ன பாரு ஒரு நிமிஷம்.. இதோ! இப்ப உன் கைக்குள்ள இருக்கறதுதான் நான்.. நான் இவ்வளவுதான் மேக்ஸ்.. என்னோட அதிகபட்ச ஆசையே என் மேக்ஸ் என்கூட இருக்கனும்ங்கறது மட்டும்தான்! நீதான சொன்ன.. வாழ்க்கைப் பாதை  ரொம்ப நீளமானது அதினு.. அது எப்போ வேணா..யார வேணா நம்மக்கிட்ட கொண்டு வந்து சேர்க்கும்னு… இது சரிவராதுனா என்ன ஏன் உன்கிட்ட மறுபடியும் கொண்டு வந்துச்சு மேக்ஸ்… நான் இந்த பாதைய உங்ககூட சேர்ந்து கடக்க ஆசைபடறேன்.. என் மேக்ஸ்க்கூடயும் பவிம்மாக்கூடயும் கடைசிவரை கைப்பிடிச்சிக்கிட்டே நடந்திடனும்னு ஆசைப்படறேன் மேக்ஸ்…

பவிம்மா என்னை முதல்தடவை அதிப்பானு கூப்பிட்டப்போ… I could feel மேக்ஸ்… I could feel…  இதுதான் Fatherhoodஆனு தெரியாது.. ஆனா என்ன அது எதையோ உணர வச்சுது மேக்ஸ்… எனக்கு ரெண்டுபேரும் வேணும்… உனக்காக பவினோ இல்லை பவிக்காக நீன்னோ சத்தியமா என்னால கற்பனைக்கூட செஞ்சு பார்க்க முடியாது!

உன் கைக்குள்ள இருக்கற இவ்வளவுதான் என் உலகம் மேக்ஸ்.. என்கூட வாங்கனு சொல்லல உங்கக்கூட இருந்துக்கறேனுதான் கேட்கறேன்…” என்று தன் முன் மண்டியிட்டமர்ந்து தன் முகத்தையே பார்த்திருந்தவனின் முகத்தில் இருந்து தன் கையை அகற்றியவள் எழுந்துச் சென்றாள்.  அவள் எழுந்து சென்றதில் ஏதோபோல் ஆகிவிட அப்படியே அமர்ந்துவிட்டவன் முகத்தை அழுந்த துடைத்துக்கொள்ள சற்று நேரத்தில் அவன் முன் நீட்டப்பட்ட புத்தகத்தில் ஒரு கணம் புரியாமல் விழித்தவன் அவள் முகம் காண அவளோ,

“எப்பவோ குடுக்க வேண்டியது… இப்பதான் முடியுது…” என்றாள்

மெல்லவே அவள் உரைத்ததின் அர்த்தம் உரைக்க பட்டென நிமிர்ந்தான் “மேக்ஸ்?” என்றபடி

அமர்ந்திருந்தவனின் முன் மண்டியிட்டமர்ந்தவள் அந்த புத்தகத்தை அவன் கையில் வைத்துவிட்டு அவன் முகம் காண அங்கோ உணர்வுகளின் உத்சவம்!!

எந்த கன்னங்களில் இருந்து கையை விலக்கிச் சென்றாளோ அதே கன்னங்களில் அவளது கைகளை எடுத்து வைத்தவன் அவள் விழிகளில் தனதை நிறுத்தி, “நிஜமாவா?” என்பதுபோல் தலையசைத்து வினவ, அந்த கணம் எதை உணர்ந்தாளோ… ஏன் எதற்கு எப்படி போன்ற கேள்விகளை நிரப்ப இயலாத பதிலொன்றுடன் அவன் நெற்றியில் இதழ் பதித்தவள் லேசாக திரையிட்டிருந்த கண்ணீரையும் தாண்டி ‘ஆம்’ என்பதாய் முறுவலிக்க அவளை அப்படியே இறுக்கமாய் அணைத்துக் கொண்டான் அவன்.

அணைத்திருந்தவனின் பார்வையில் கண்ணீரையும் தாண்டி பதிந்தது அந்த Pride and Prejudice புத்தகம்.  அது அவன் கேட்டதுதான்!! ஆனால் கேட்ட, தேடிய அவனே மறந்துப்போன ஒன்று!

ஏழெட்டு வருடங்களுக்கு முன்பொரு நாள் மதிய இடைவேளையில் கையில் நாவலுடன் அமர்ந்திருந்தவளிடம் ஆர்வமாய் வந்தவன்,

“த்ரில்லர் தானே?” என்க திடீரென கேட்டக் குரலில் திரும்பியவள் அவனைக் கண்டு புன்னகைத்து “ஆமா” என்று தலையசைத்துவிட்டு நாவலை மூடி வைத்தாள்.

“நீ நாவல் வாசிப்பியா?” என்றவனிடம்

“ம்ம்ம் எப்போவாது… நீ?” என்க

“அதே தான்! எப்போவாது… எந்த ஜானர் பிடிக்கும்?”

“த்ரில்லர்”

“ஆத்தர்?”

“ம்ம்… அது நிறைய இருக்காங்களே”

“அதுவும் சரிதான்” என்றவன் திடீரென நினைவு வந்தவனாக

“நீ Pride and Prejudice வாசிச்சிருக்கியா?” என்று  ஆர்வமாய் கேட்டான்.

“இல்லையே ஏன்?”

“இல்லை… என் ஃப்ரெண்ட் ஒருத்தன் சஜ்ஜஸ்ட் பண்ணான்… நானும் தேடிப் பாத்தேன் கிடைக்கல இங்க… உங்க வீட்டுக்கிட்ட கிடைச்சா சொல்றீயா?” என்றவனிடம் “சொல்றேன்” என்றதோடு சரி, அதற்கு பின் அவள் அதைப்பற்றி அவனிடம் பேசவில்லை.. ஆனால் அதை வாங்கி வைத்திருந்திருக்கிறாள்..!!

ஏதோ தோன்ற வாங்கிவிட்ட மேகாவிற்கு அதை படிக்கவும் தோன்றவில்லை அதிரூபனிடம்  கொடுக்கவும் தோன்றவில்லை… இன்றுவரையிலும் அவள் அலமாறியில் உறங்கிக் கொண்டிருந்ததை இப்பொழுதுதான் வெளியே எடுத்திருக்கிறாள்.

கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தவன் அசதியில் அப்படியே கண்ணயர்ந்துவிட போர்வை ஒன்றை எடுத்து வந்து அவனுக்கு போர்த்திவிட்டு சில கணங்கள் உறங்கும் அதியையே பார்த்திருந்தவள் பிறகு விளக்கணைத்துவிட்டு அறைக்கு சென்றுவிட்டாள்.

இரண்டு நாட்கள் சரியாக உறங்காதது, தொடர்ந்து பயணம் செய்தது தேவையற்ற பரபரப்பு என்று எல்லாத்தையும் மீறி உள்ளுக்குள் உதித்த நிம்மதியுணர்வில் இதமாய் துயில்கொண்டான் அதிரூபன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!