மோகனம் 21

மோகனம் 21

மோகனம் 21

அன்று சீனியர்களுக்கு ஃபேர்வல் வைத்திருக்க, அதற்காக அருவியையும் அழைத்தான்.

“இல்ல பா.நான் வரலை அப்பா விடமாட்டாரு” தந்தைக்கு பயந்து பின்வாங்க,

“உனக்கு வரணும்னு ஆசை இருக்கா ஆரு மா?”

“இல்லன்னு சொல்லிட முடியாது. ஆனாலும் வேணாம்”என்றவளை எப்படியாவது அங்கே அழைத்து செல்ல ஆசைக்கொண்டான்.

“சரி, நீ வீட்டுக்கு போன பிறகு கால் பண்ணி அகல் மா கிட்ட கொடு. நான் அவ கிட்ட பேசிக்குறேன்” சொல்ல, அவளும் சரியென்று அங்கிருந்து கிளம்பினாள்.

விஷ்வா சொன்னபடியே வீட்டிற்கு வந்ததும், அவனுக்கு அழைப்பு விடுத்தவள் விழியிடம் கொடுத்தாள்.

“சொல்லுங்க…”

“அருவிக்கு ஃபேர்வெல்ல கலந்துக்கணும்னு ஆசைப்படுறா. ஆனா பயந்து வரமாட்டேன்னு சொல்றா. நீ தான் ஏதாவது செய்யணும் அகல் மா. அதுவும் உங்க அப்பாவோட பர்மிஷனோட அவ வரணும்” உதவி கேட்க,

“என்கிட்ட சொல்லிட்டீங்கள நான் பார்த்துக்கிறேன். அகல் இருக்க பயமேன்”இல்லாத காலரை தூங்கிவிட்டாள்.

சிறிது நேரம் பேசிவிட்டு இருவரும் வைத்தனர்.

“என்னடி பேசுனீங்க?” ஆர்வம் கொண்டு வினவ,

“சீக்ரெட் க்கா… வா வா அப்பாகிட்ட போகலாம்.ஒரு சின்ன வேலை இருக்கு” சொல்லி அருவியை இழுத்து கொண்டு தந்தையையின் முன் நின்றாள்.

“என்ன?”அசட்டையாக கேட்க,

“கொஞ்சம் பேசணும்”என்றாள் விழி.அவளுடன் அருவி.

சமையலறையிலிருந்து இதனை ஒரு பார்வையாளராக பார்த்திருந்தார் சந்திரா.

“சொல்லித்தொல”

“அக்காக்கு நாளைக்கு ஒரு இடத்துல என் ப்ரெண்ட் மூலமா வேலைக்கு கேட்டு வச்சிருக்கேன். அதுக்கு அவளை வர சொல்லியிருக்காங்க” விழி புருடா விடவும் மூர்த்தியின் கண்கள் டாலடித்தது.

“அப்படியா?” நம்பாது பார்வை பார்க்க,

“உண்மை தான். அக்கா சுயமா உங்க முன்னாடி வாழ்ந்து காட்டனும்னு நினைக்கிறேன்” சொல்ல, புகைந்தது மூர்த்திக்கு.

“சரி, ஆனா வேலையோட தான் வரணும்” சொல்லவும்,” கிடைச்சா தான் கிடைக்கும். நிறைய பேர் வேலை கேட்டு நாளைக்கு வருவாங்க. சோ சரியா சொல்லிட முடியாது” என்கவும், புருவமுடிச்சிட்டது.

மூர்த்தியின் சம்மதத்தை பெற்றுக் கொண்டு உள்ளே வந்த விழியை,” நீ என்ன பண்றன்னு தெரிஞ்சு தான் பண்றீயா?”வினவினாள் அருவி.

“நீ ஆசைப்பட்டல. அதான் அதை நிறைவேத்த ஒரு குட்டியா பொய் சொன்னேன். நல்லபடியா என்ஜாய் பண்ணு”என்க, பெண் தயங்கினாள்.

அகல்விழி தான் தைரியம் சொல்லி,அவளை அடுத்தநாள் அனுப்பி வைத்தாள்.

ஃபேர்வல் நன்முறையில் ஆரம்பமானது.

ஜூனியர்கள் சீனியர்களுக்காய் பாட்டு, நடனம்,ஃபன் கேம் என நிறைய செய்திருந்தனர்.

பீஜிக்கும் யூஜிக்கும் ஒரே இடத்திலே வைத்திருந்ததால், அருவி கூடவே விஷ்வா இருந்து கொண்டான்.

மதியம் போல் தான் ஆரம்பித்ததால், மாலை ஆறு மணியை கடந்து சென்றது.

“மணி ஆகுது சீனியர்? வீட்டுக்கு போகணும்” சொல்ல, அவர்களின் நண்பர்கள் கூட்டம் விடவே இல்லை

ஜின்சியும் அருவி கூடவே தான் இருந்தாள். இப்போதெல்லாம் அவள் கூட இருப்பதற்கு காரணமே விஷ்வாவாகி போனான்.

‘தன்னை வேணாம் ‘என்று நிராகரித்தவனை ஏதேனும் செய்து கலங்கடிக்க வேண்டும் என வஞ்சம் வைத்தவள் அதற்கான வேலையில் இறங்கியிருந்தாள்.

அவனை பற்றி முழுதும் அறிந்து கொண்டாள். எங்கே அடித்தாள் அவனுக்கு வலிக்கும் என்று பார்த்தப்போது நினைவில் வந்தாள் அருவி.

“இரு டி இன்னும் கொஞ்ச நேரத்துல முடிஞ்சிடும். அப்புறமே போவியாம்” ஜின்சி வறுபுறுத்த, அதற்குமேல் அவளாலும் எதுவும் பேச முடியவில்லை. விஷ்வா அருவிக்கு ஜூஸ் குடுக்க, குடித்தவள் அமைதியாய் ஜின்சியுடன் அமர்ந்திருந்தாள்.

இதற்கிடையில், விஷ்வாவிற்கு போன் வர, அருவியிடம் சொல்லிவிட்டு வெளியே வந்தவனுக்கு எதிர்புறம் சொன்னதில் அதிர்ச்சியடைந்து விட்டான்.

நேராக அருவியிடம் வந்தவன்,” அருவி! அப்பாக்கு நெஞ்சு வலின்னு ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிருக்காங்க டா. இது முடிஞ்சதும் நீ வீட்டுக்கு கிளம்பி போ டா” சொல்லி அவசரமாய் அங்கிருந்து கிளம்பினான்.

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில், அனைத்தும் முடிந்து விட மெதுவாய் எழுந்துக்க முயற்சி செய்த அருவியால் அது முடியவில்லை.

அடுத்து என்ன நடந்தது என்றெல்லாம் அவளுக்கு தெரியவில்லை. மயங்கிவிட்டிருந்தாள்.

மருத்துவமனையை அடைந்த விஷ்வா தந்தையின் பெயர் சொல்லி கேட்டு அவ்விடம் விரைய, மகனை கண்ட மஞ்சுளா” விஷ்வா, பாரு டா உன் அப்பாவ” சொல்லி அவன் மார்பில் சாய்ந்து கரைந்தார்.

“அப்பாக்கு ஒன்னும் ஆகாது ம்மா” தைரியம் சொல்லி அன்னையை அமர வைத்து விட்டு தமயனிடம் சென்றான்.

“என்ன ஆச்சி அருண்?”

“தெர்ல டா. நல்லா தான் இருந்தாரு அப்டியே மயங்கி விழுந்துட்டாரு” என்கவும், கவலை மூண்டது.

மூன்று மணி நேரத்திற்கு மேல், ஆப்ரேஷன் நடக்க, அதுவரை அங்கிருந்த அனைவரும் பதட்டத்திலே இருந்தனர்.

ஒன்பது மணி போல் மருத்துவர்கள் வெளி வர, குடும்பம் மொத்தமும் அவரை சூழ்ந்துகொண்டது.

“டாக்டர் இப்போ அப்பாக்கு?” அருண் கேட்க,

“நல்லா இருக்காரு.இன்னைக்கு மட்டும் அப்செர்வேஷன் இருக்கட்டும். நாளைக்கு வார்டுக்கு மாத்திடுவாங்க” சொல்லி சென்றார்.

மஞ்சுளா தளர்ந்து போய் அமர்ந்து விட,இந்திரா மாமியாரை தாங்கிக்கொண்டாள்.

“மாமாக்கு ஒன்னும் இல்ல அத்தை. பாருங்க இன்னும் ஒருவாரத்துல எழுந்து நம்மளை மிரட்ட போறாரு ” தைரியம் மூட்ட, அப்டியே தலையை சுவற்றில் சாய்த்தார்.

பின்னர் ஒவ்வொருவராய் சென்று கங்காதரனை பார்த்துவிட்டு வெளி வந்து சோர்வுடன் அமர்ந்தார்கள்.

அப்போது தான் விஷ்வாவிற்கு அருவியின் ஞாபகம் வர, உடனே மொபைலை எடுத்து பார்க்க அதுவோ கீச் கீச்சென சத்த மிட்டு அடங்கியது.

‘என்ன இது இத்தனை மிஸ்ட்கால்ஸ்” சிந்தனையுடே அந்த எண்ணிற்கு அழைத்தான்.

உடனே அது ஏற்கப்பட,”ஹலோ” சொல்லி முடிக்கவுமே விழியின் அழுகை சத்தம் கேட்டது.

“அகல் ம்மா, என்ன ஆச்சி ஏன் அழுகுற?” ஒரு வித நெருடலுடன் கேட்டான்.

“அக்கா இன்னும் வீட்டுக்கு வரலை” என்ற குண்டை அதிராமல் அவனின் மேல் இறக்க,” என்ன?” அதிர்ச்சியுடன் எழுந்தேவிட்டான்.

“இன்னும் வரலையா?” பதறியவனாய் கேட்க,

“ம்ம்ம். அப்பா கேட்டுட்டே இருக்காரு. எனக்கு பயமா இருக்கு” என்றதும் நெற்றியை நீவியவன்” பதறாத அகல் மா. நான் அவ எங்கேன்னு பாக்குறேன்” சொல்லவுமே அந்த புறம் மூர்த்தியின் கத்தல் சத்தம் இங்கே வரை கேட்டது.

ஒரு நொடி கூடே தாமதிக்காது கிளம்பிவிட்டான்.

ஒரு இடம் விடாமல் தேடியவனுக்கு அருவி எங்கே இருக்கிறாள் என்று அறியமுடியவில்லை.

நேரம் செல்ல செல்ல பதற்றம் கூட, தலையை பிய்த்து கொண்டான்.

இங்கே அகல்விழியை ஒரு வழி செய்து கொண்டிருந்தார் மூர்த்தி. ஒருகட்டத்திற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாமல் போக, உண்மையை வீட்டில் சொல்ல பள்ளாரென்று கன்னம் சிவக்கும் அளவிற்கு அடிவிழுந்தது.

“மூடிட்டு உங்களால வீட்ல இருக்க முடியாதா, இப்போ இதை காணோம்னு தெண்டம் அழுவணுமா” கருவியவர் வெளியில் சென்று தேடினார்.

விஷ்வாவிற்கு உலகமே இருண்டது போல் இருக்க, யோசித்தான். பொறி தட்டியது.

ஜின்சி மீது ஆத்திரமாக வந்தது. கையில் கிடைத்தால் கொன்றேவிடுவான்.

கல்லூரியில் இருந்த பழைய பங்களாவிற்கு வந்தவனுக்கு, முனங்கல் சத்தம் கேட்டது.

சத்தம் வந்து இடம் நோக்கி ஓடினான்.அது ஒரு சிறிய அறையிலிருந்து வர, உடைக்க முயன்றான். அதற்குள் அடியாட்கள் வர, கைகளப்பானது.

அசுரன் போல் அவர்களை அடித்தவனின் தலையில் கட்டையால் பலமாய் அடித்து விட்டு தப்பினர்.

அவர்கள் அடித்த அடியில் கண் மங்கலாய் தெரிய, தட்டு தடுமாறி அறையை அடைந்தவன் அருவியின் நலனை கண்களால் அழசிய விஷ்வா, அகல்விழிக்கு தானிருக்கும் லொகேஷனை ஷேர் செய்தவன் அருவி பக்கத்திலே மயங்கி சரிந்தான்.

அகல் விழிக்கு வந்த லொகேஷனை வைத்து தந்தையுடன் செல்ல, விரைவாகவே அவ்விடத்தை அடைந்தனர்.

வாட்ச்மேன், பிரின்சிபால், அவள் தோழியான ஜின்சி இன்னும் சிலரோடு அங்கே சென்றார்கள்.

கதவை உடைத்து கொண்டு உள்ளே போனால்,இருவரும் மயக்க நிலையில் ஒருவரையொருவர் தாங்கிய நிலையில் இருந்தனர்.

பார்த்த மூர்த்திக்கு பத்திக்கொண்டு வந்தது.அப்போது விஷ்வா கண் விழிக்கவும் தலையில் சுர்ரென்று வலி.

அதை உணர்வதற்குள், மூர்த்தி அவனை இழுத்து கன்னத்தில் அடித்திருந்தார்.

“என் பொண்ணை என்ன பண்ண இருந்த?” ஆக்ரோஷமாக கேட்க,

“சார் முதல பொண்ணை பாருங்க” ப்ரின்சிபால் சொல்லவும் ஜின்சியும் விழியும் அருவிக்கு தண்ணீர் தெளித்து எழுப்பிவிட்டார்கள்.

அருவி கண் விழித்த நொடியே, மூர்த்தி வார்த்தையால் அவளை கதற வைத்தார்.

“விழி… இங்க நான் எப்படி” புரியாது கேட்க,

“இந்த வயசுலே உனக்கு உடல் ஆசை கேக்குதோ” அமிலமாய் வார்த்தைகளை விட,

“அப்பா…” அதிர்ந்தாள்.

“அப்படி கூப்பிடாத.ச்சீ உன்னைய பெத்ததுக்கு… அப்படி என்ன அவசரம்னு இவனோட இருந்திருக்க” விஷ்வாவை காட்டி அருவருப்புடன் கேட்கவும், காதை இறுக மூடினாள்.

“அங்கிள், உண்மை தெரியாம பேசாதீங்க”

“என்னடா உண்மை அதான் என் கண்ணாலே எல்லா கருமத்தையும் பார்த்தேனே” என மூக்கில் குத்து விட, “பிரசாத்” என கத்தினாள்.

“பொறுமையா இருங்க சார். என்ன நடந்துச்சின்னு கேட்போம்” பிரின்சிபால் தன்மையாக பேச, அமைதியானார் மூர்த்தி.

“சொல்லுங்க எப்படி இங்கே வந்திங்க?” கேட்க,

“தெரியல சார்”என்றாள் அருவி அழுகையுடன்.

குடைந்து குடைந்து கேள்வி கேட்டும் பதில் வராது போக, போலீஸ் கிட்ட போக வேண்டியது தான் வந்திருந்த ஒருவர் சொல்ல, ஒரு நொடி யோசித்த விஷ்வா பேசினான்.

“நான் தான் அருவியை இங்க கூட்டிட்டு வந்தேன்.எனக்கு அவளோட வாழ ஆசை. அவளுக்கு அவ அப்பனா ரொம்ப பயம் எங்க அருவி எனக்கு கிடைக்காம போய்டுவாளோன்னு இப்படி செய்துட்டேன்” உயிரற்ற குரலில் சொல்ல, விழியும் அருவியும் அதிர்ந்தனர்

விழிக்கு தான் உண்மை தெரியுமே, இங்கே ஏதோ நடந்திருக்கு எதையோ மறைக்க பார்க்கிறான் புரிந்துகொண்டாள்.

“இல்ல என்னோட பிரசாத் அப்டி எல்லாம் இல்ல. அவங்க இப்டி ஒன்னு செய்ய மாட்டாங்க” அவனுக்காய் பேசினாள்.

“நான் சொல்றது உண்மை தான் அருவி” இறுகிய குரலில் சொன்னான்.

“நாயே! உன் ஆசைக்கு என் பொண்ணு தான் கிடைச்சாளா” அவன் சட்டை பிடித்து விட்டார் மூர்த்தி.

எழுந்திரிக்க முடியாமல் விழியின் உதவியுடன் எழுந்து கொண்ட அருவி, விஷ்வாவை நெருங்கினாள்.

“உண்மையா என்ன நடந்துச்சு சீனியர்? நீங்க இப்படி எல்லாம் செய்ய கூடிய ஆள் கிடையாது. சொல்லுங்க என்ன நடந்துச்சின்னு? நாம எப்படி இங்க?” அடுக்கடுக்காய் கேள்விகள் வந்தன.

சொன்ன பதிலை தான் திரும்ப திரும்ப சொல்லி,” என்னை மன்னிச்சுடு அருவி” கைகூப்ப, ஓங்கி அறைந்திருந்தாள் அருவி.

“நான் உங்களை எத்தனை நம்பிருப்பேன். இப்படி பண்ணிட்டீங்களே” கொந்தளித்தவள்,” இனி என் மூஞ்சுளையே முழிக்காதிங்க. உங்களை பார்க்கவே அசிங்கமா இருக்கு” சொல்லி அழுகையில் கரைந்தாள்.

இதையெல்லாம் ஓரத்தில் நின்று பார்த்திருந்த ஜின்சிக்கு நிம்மதியாய் இருந்தது. அவனின் கசங்கிய முகம், அவளுக்கு அத்தனை ஆனந்தத்தை தந்தது.

அனைவரும் கிளம்பிவிட, போகும் போது விஷ்வாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டு சென்றிருந்தார் மூர்த்தி .

ஜின்சி மற்றும் விஷ்வா மட்டுமே அங்கே இருக்க, அவனை நெருங்கியவள்,” என்னை வேணாம்னு சொன்னால அதுக்கான தண்டனை தான் இது. உன்னை இப்படி பார்க்க எனக்கு அப்டியே குளுகுளுன்னு இருக்கு” சொல்லி அந்த இடமே அதிரும் அளவிற்கு வெடித்து சிரித்தாள்.

உதட்டில் கசிந்த உதிரத்தை துடைத்தவன்,” இப்போ என் முன்னாடி பேசிட்டு இருக்கன்னா, அதுக்கு காரணம் நீ அருவியோட தோழின்றது தான். இல்லனா இன்னேரம் உனக்கு பரலோகத்தை காட்டிருப்பேன்” அருவருத்து போய் நகர்ந்துவிட்டான்.

அவன் சொன்னதை கேட்டவள் ஆத்திரம் தாளாது,ஆவென கத்தி பங்களாவை அதிர வைத்தாள்.

இந்த சம்பவத்திற்கு பின் அருவியும் விஷ்வாவும் சந்தித்துகொள்ளவே இல்லை.

இங்கே விஷ்வா தந்தை உடல்நிலை தேறி வரும்வரை அமைதிகாத்தவன், அதன் பின் தான் வெளிநாடு செல்ல போவதாக அறிவித்தான்.

முதலில் திடுக்கிட்டாலும், இப்போதெல்லாம் மகனின் முகம் உணர்வுகளை முற்றிலுமாக தொலைக்கப்பெற்று பாறைபோல் இறுகி இருப்பதை கண்டு ஒரு அன்னையாய் கவலையுற்றார்.

மகன் அங்கு சென்றாவது மாறுவான் என்றெண்ணி சம்மதம் தெரிவிக்க, அதற்கான வேலையில் விஷ்வா இறங்கினான்.

படிப்பை முடித்த அருவிக்கு அடுத்து வேலைக்கு போவதை பற்றி கேட்க கூட பயம். முதலிலே அமைதியானவள், இப்போது முற்றிலுமாக தன்னை ஒடுக்கிக்கொண்டாள்.

இப்டியே நாட்கள் நகர்ந்திட, அருவியை தேடி ஒரு பணக்கார வரன் வரவும் அதனை பிடித்துக்கொண்டார்.

அதிலும் கோவையில் பெரிய ஜவுளி கடை வைத்திருக்க, மாமனாரின் பென்ஷனில் வாழ்பருக்கு ஜாக்பாட் அடித்தது போல் இருந்தது.

இத்திருமணத்தை முடித்தே தீர வேண்டும் என தீர வேலை செய்தார்.

தான் பெற்ற மூத்த தண்டத்தை வர சொன்னவர்,” உனக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கு. பேரு விக்ராந்த்.தேடி வந்து பொண்ணு கேட்ருக்காங்க” சொல்லவுமே பெண் திகைத்தாள்.

“அப்பா,இப்போ எனக்கு எதுக்கு கல்யாணம்?”

“எதுக்கு கல்யாணம் பண்ணுவாங்க, உனக்கு இருபத்தியொரு வயசாகிடுச்சி. உனக்கு அடுத்து இன்னும் ரெண்டு தண்டங்கள் இருக்கிறதை ஞாபகம் வை” அதட்டலுடனே வார்த்தைகள் வெளிவந்தது.

“அப்பா ப்ளிஸ், எனக்கு இப்போதைக்கு கல்யாணம் வேணாம் பா. நான் வேலைக்கு போகணும்னு ஆசைப்படுறேன்” தந்தையிடம் கெஞ்சலான குரலில் கூற,

“இங்க பாரு, இந்த கல்யாணத்தை வச்சி எனக்கு நிறைய கனவுகள் இருக்கு.அதை உடைக்க நினைச்ச அப்புறம் நான் மனிசனா இருக்க மாட்டேன் பார்த்துக்க. நீ செஞ்ச வேலைக்கு உன்னை கொன்னு போடாம இருக்கேன்னேன்னு சந்தோஷப்படு.ஏதும் செய்ய நினைச்ச இங்க உள்ள யாரும் உயிரோட இருக்க மாட்டாங்க” கண்டன குரலில் எச்சரிக்கை விடுத்தார் மூர்த்தி.

தந்தையின் பேச்சு அவர் பெற்ற செல்வங்களுக்கு அருவருப்பை தான் கொடுத்தது.

பெற்ற பிள்ளையையே பணத்திற்காக பேரம் பேசி கல்யாணம் என்ற பந்தத்தில் மகளை விற்க பார்க்கிறார்.

அதன் பின் அருவி ஏதும் பேசாது சம்மதம் கூறிவிட, எல்லா ஏற்பாடுகளும் வேகமாய் நடந்தேறியது.

ஆனந்திக்கு அருவியை ரொம்பவே பிடித்து விட, கல்யாண வேலையில் மும்முரமாய் இறங்கினார்.

இங்கே விஷ்வாவிற்கு லண்டன் செல்வதற்கான அனைத்து வேலைகளும் முடிந்து இறுதி கட்டத்திற்கு வந்தது.

அப்டி இப்டி என ஓடி திருமணநாளில் வந்து நிற்க, கோலாகலமாய் அரங்கேறியது விக்ராந்த் மற்றும் அருவியின் திருமணம். திருமணத்தை ஓரமாய் நின்று பார்த்த விஷ்வா அடுத்து வந்த நாட்களில் லண்டன் பறந்து விட்டான் .

நடந்த நிகழ்வுகளை எல்லாம் நினைவடுக்கில் படமாய் ஓட்டியவனுக்கு,மனம் கனத்தது. குழந்தையென உறங்கும் மனைவியை பார்த்தவன் மென்மையாய் அவளின் நெற்றியில் முத்தமிட்டான்.

பின்,மணியை பார்த்தவன் ஐந்தரை என காட்ட, மெல்ல எழுந்து குளியலறை சென்று தன்னை சுத்தப்படுத்தி கொண்டு வெளியேறினான்.

விஷ்வா வெளியேறிய சிலநிமிடத்திலே இமைகளை பிரித்த அருவி, நேற்றுபோல் இல்லாது இன்று பொறுமையாய் இருந்தாள். ஜின்சியுடனான சந்திப்பை பற்றி சிந்திக்கலானாள். சிந்தித்தவள் சொற்ப நேரத்திலே ஒரு முடிவை எடுத்திருந்தாள்.

அதற்குள், விஷ்வா இரு காப்பி கப்புகளுடன் உள்ளே வருகை தந்தான்.

“எழுந்துட்டியா அருவி? உன்ன எழுப்பலாம்னு தான் காப்பியோட வந்தேன்” சொல்லி புன்னகை புரிந்தான்.

“பிரெஷப் ஆகிட்டு வந்து குடி அருவி” சொல்ல,

“உங்கிட்ட நான் ரெண்டு விஷயம் சொல்லணும்” என்க,அவனோ கேள்வியோடு அவளை காப்பி அருந்தியபடியே பார்த்திருந்தான்.

Leave a Reply

error: Content is protected !!