ரகசியம் 03 💚

eiHVMBX65883-e027adee

ரகசியம் 03 💚

“அம்மா, இதை சாப்பிட்டுட்டு மருந்தை சாப்பிடுங்க” மேசையில் உணவையும் மருந்தையும சத்யா அம்மாளுக்கு நேரே வைத்த கயல், அமைதியாக தள்ளி நின்றுக்கொள்ள, அவரும் எந்த மறுப்பும் சொல்லாது உணவை உண்ண ஆரம்பித்தார்.

அவரும் மெல்ல மெல்ல உணவை விழுங்கி மருந்தையும் சாப்பிட்டு முடியவே ஒருமணி நேரம் ஆகிவிட்டிருந்தது. மருந்தின் வீரியத்தில் உண்டான தூக்கத்தில் அப்போதுதான் கட்டிலில் சரிந்து விழிகளை மூடச் சென்றவர், பெரிய சத்தத்தொடு கேட்ட ஆங்கில பாடல் ஒலியில் சடாரென விழிகளை திறந்தார் என்றால், சாப்பிட்டு வைத்த உணவுத்தட்டை கையிலெடுத்து வெளியேறச் சென்ற கயல், கேட்ட ஒலியில் “அய்யோ அம்மா!” என்று கத்தியேவிட்டிருந்தாள்.

அவளுடைய நல்லநேரத்திற்கு தட்டை இறுகப்பிடித்திருந்தமையால் அது கீழே விழாமல் பாதுகாக்கப்பட, கயல் அலறலில் பெரியவரின் இதழில் லேசாக சிரிப்பு எட்டிப் பார்த்தது.

அவளோ அரண்ட முகத்துடன் அவரைத் திரும்பிப் பார்த்தாள். விழிகளை மூடியிருந்தவரின் புருவங்கள் கேட்கும் பாடல் ஒலியால் உண்டான லேசான எரிச்சலில் சுருங்கியிருக்க, அதை உணர்ந்த கயல், வேகமாக வெளியேறி அங்கிருந்த வேலைக்கார பெண்ணிடம் கையிலிருந்த தட்டுக்களைக் கொடுத்துவிட்டு விறுவிறுவென பாடலொலி கேட்கும் அறையை நோக்கிதான் சென்றாள்.

கதவை அவள் வேகமாக தட்ட, பாடலொலியில் உள்ளே இருந்தவனுக்கு அது கேட்கவில்லை போலும்! இருந்தும் அவள் விடாது கதவைத் தட்டிக்கொண்டே இருக்க, சில கணங்கள் கழித்து “வாட்?” என்ற கத்தலோடு கதவைத் திறந்தான் அவன்.

அவனின் கத்தலில் விழி விரித்தவள், மேல் சட்டையில்லாது காற்சட்டையுடன் நின்றிருந்தவனின் தோற்றத்தில் பதறிப்போய் பார்வையை தாழ்த்திக்கொண்டாள். அவனோ உதட்டைச் சுழித்துக்கொண்டு தொல்லை செய்துவிட்ட கடுப்பில் எதிரேயிருந்தவளை முறைத்தவாறு நிற்க, தன் சங்கடம் புரியாது அப்போதும் அதேபோல் நின்றிருந்தவனின் மேல் கயலுக்கு கோபம்தான் வந்தது.

தரையை முறைத்துக்கொண்டே, “அம்மா தூங்குறாங்க. சத்தத்தை கம்மி பண்ணுங்க” அவள் அழுத்தமாகச் சொல்ல, அவனுடைய புருவங்கள் யோசனையில் சுருங்க, கையிலிருந்த ரிமோட்டால் எட்டி பாடலை நிறுத்தினான் அவன்.

கயலும் வந்த வேலை முடிந்ததென தரையைப் பார்த்தவாறே நகரப்போக, சொடக்கிட்டு அவள் நடையை நிறுத்தியவன், “கயல்விழி ரைட்?” என்று கேட்டான் கூர்மையாக.

கயலும் அவனின் கேள்வியில் சடாரெனத் திரும்பி அவனை நேருக்கு நேராகப் பார்த்தவாறு மெல்ல தலையசைக்க, “பார்த்து! தலைய ஆட்டுற ஆட்டல்ல முண்டத்தை விட்டு தலை கழண்டுற போகுது” என்றான் அவன் கேலியாக. அவனின் கேள்வியில் உண்டான கடுப்பில் எதுவும் பேசாது நகரப்போனவள், “யுகன், என்னாச்சு?” என்ற குரலில் நின்று திரும்பிப் பார்த்தாள்.

அவளுக்கு பின்னே ரேவதிதான். அவர் அழைத்த பெயரிலேயே கயலுக்கு நேற்றிரவு பெரியவர் அவருடைய இரண்டாவது மகனின் பெயர் யுகனென சொல்லி அவனைப் பற்றி ரேவதியிடம் பேசியது ஞாபகத்திற்கு வந்தது.

“நத்திங் அத்தை. சும்மா பேசிக்கிட்டு இருந்தோம்” யுகன் சாதாரணமாகச் சொல்ல, ‘என்ன உளறுறான் இவன்!’ என்றுதான் நினைக்கத் தோன்றியது கயலுக்கு. இரண்டு வசனங்களுக்கு மேல் கூட அவனைப் பார்த்து அவள் பேசியிருக்க மாட்டாள். ஆனால், ஏதோ அரைமணி நேரமாக நின்று அவனுடன் அவள் வளவளத்தது போல் யுகன் பேசியதில் சற்று முறைப்பாகவே அவனை நோக்கினாள்.

ரேவதியோ கயலை கூர்ந்துப் பார்த்து, “வாட்எவர்! அன்னி இப்போ தூங்கியிருப்பாங்க. அவங்க எழுந்துக்குறதுக்குள்ள நீ போய் சாமியறைய கொஞ்சம் சுத்தம் பண்ணு. இன்னைக்கு ஒரு முக்கியமான பூஜை பண்ண வேண்டியிருக்கு” அவர் பாட்டிற்கு படபடவென சொல்லிக்கொண்டே போக, “முடியாதும்மா” என்றாள் கயல் அழுத்தமாக.

அவருக்கோ சற்று அதிர்ச்சி!

“முடியாதா? அப்போ மேடம் இங்க எதுக்கு வந்திருக்கீங்க?” அவர் ஒற்றை புருவத்தைத் தூக்கி அடக்கப்பட்ட கோபத்தோடுக் கேட்க, கீழுதட்டைக் கடித்து உணர்வுகளை அடக்க முயன்றவாறு, “எனக்கு கடவுள் சன்னிதானதுக்கு போக பிடிக்கலம்மா. இப்போ நான் எல்லாத்தையும் இழந்து நிக்கிறேன்னா அதுக்கு காரணம் கடவுள்தான். என் வாழ்க்கைய…” அதற்குமேல் அவளால் பேச முடியவில்லை.

விழிநீர் கன்னத்தை தடவிச் செல்ல, அதை அழுந்தத் துடைத்தவள், “மன்னிச்சிடுங்கம்மா” என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்திருக்க, புருவத்தைச் சுருக்கி அவளையே பார்த்துக்கொண்டிருந்தார் ரேவதி.

ஏனோ அவளுடைய கண்ணீர் அவருக்குள் சுள்ளென்ற வலியை ஏற்படுத்த, ‘யார் இந்த கயல்?’ என்று அவர் மனம் அவரிடமே தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது. அவள் பக்கத்தில் வரும் போது அவர் உணரும் படபடப்பு, இந்த வலி எதையும் இதுவரை அவர் யாரிடமும் உணர்ந்ததில்லை.

சிலைபோல் அவர் அப்படியே நிற்க, இங்கு “அத்தை, இந்த பொண்ணு ரொம்ப பாவம்ல!” கயல் சென்ற திசையையே பார்த்தவாறுக் கேட்டான் யுகன். ரேவதியும் அவன் குரலில் நடப்புக்கு வந்து எதுவும் பதிலளிக்காது தனதறைக்குள் அடைந்துவிட, மாடியிலிருந்து கயலை எட்டிப் பார்த்த யுகனின் விழிகளில் ஒரு ஆர்வம்.

அடுத்தநாள் காலை, பதறியபடி சத்யா அம்மாளின் அறைக்குள் நுழைந்த ரேவதி, “அன்னி… அன்னி…” என்று அவரை  எழுப்ப முயற்சிக்க, விழிகளை பட்டென்று திறந்தவர், வேகமாக எழுந்தமர்ந்து பதட்டமான முகத்துடனிருந்த தன் கணவரின் தங்கையை திகைப்பாக நோக்கினார்.

“என்னாச்சு?” அவருடைய கேள்வி அதிர்ந்துப்போய் வர, “அபி வந்திருக்கான்” என்ற ரேவதியின் வார்த்தைகளில் சத்யாவின் விழிகள் சட்டென்று கலங்கிவிட, கதவைத் திறந்துக்கொண்டு வந்து நின்றவனைப் பார்த்ததும், “அபிமன்யு…” என்று ஒரு மூச்சு அழுதேவிட்டார் அவர்.

அதேநேரம், காலை வழக்கம் போல் வரும் கனவால் அலறியடித்துக்கொண்டு எழுந்த கயல், வேகவேகமாக மூச்சு வாங்க, அவளுடைய இதயத்துடிப்பின் சத்தமோ அவளுக்கே கேட்டது.

அவனுடைய வார்த்தைகளும் குரலும் அவளுக்குள் ஆழமாக பதிந்து போனவை. அது மீண்டும் மீண்டும் ஞாபகத்திற்கு வரும் போது அவளுக்குள் உண்டாகும் தாக்கத்தை அவள் மட்டுமே அறிவாள்.

இப்போதும் அவன் நினைவுகள் சிந்தனை முழுவதையும் ஆக்கிரமித்திருக்க, முகத்தை மூடி விசும்பி விசும்பி அழுதவளுக்கு, கடவுள் மீதுதான் அத்தனை ஆத்திரமும்.

நம்முடைய முட்டாள்தனத்தால் ஏற்படும் வினைகளை நம்முடைய தவறாகக் கொள்ளாது அதை கடவுள் மீது பழிபோட்டு நம்மை நாமளே சமாதானப்படுத்திக்கொள்வது இயல்புதானே! அதைதான் கயலும் செய்தாள். வாழ்க்கையில் அடுத்தடுத்து இழந்த இழப்புக்களுக்கு கடவுளையே காரணமாக்கி கடவுளிடமிருந்து ஒதுங்கி வாழும் மகா முட்டாளாகிப் போனாள் அவள்.

மனதின் தவிப்பை அடக்க குளியலறைக்குள் புகுந்து குளித்து, உடை மாற்றி முடிந்தும் அவளுடைய மனம் படபடத்துக்கொண்டே இருந்தது. என்றும் இருந்திராத தவிப்பு, தேடல்.

அவளுக்கே ஏனென்று தெரியவில்லை. மனதின் கவனத்தை திசைத்திருப்ப சத்யாவுக்கான கசாயத்தை வேகவேகமாக செய்த காதுகளுக்கு, பக்கத்திலிருந்த வேலைக்காரப் பெண்கள் பேசிக்கொண்ட விஷயமும் கேட்காமல் போய்விட்டது.

கசாயத்தை எடுத்துக்கொண்டு சத்யாவின் அறைக்குச் செல்லவென ஹோலுக்கு வந்த கயலின் மனமோ எதையோ உணர்த்தி, அவளவனை அதிகமாகத் தேட, “வீர்… வீர்…” அவளுடைய இதழோ தன்னை மீறி முணுமுணுத்தன.

‘என்னாச்சு எனக்கு? ஏன் என்னால சாதாரணமா இருக்க முடியல. மனசு ஏன் இப்படி அடிச்சிக்குது? அய்யோ! வீர்….’ மனம் உள்ளுக்குள் கதற, விழிகள் அவளையும் மீறி இல்லாத ஒருவனின் முகத்தை நிதர்சனம் தெரிந்தும் தேடிக்கொண்டிருந்தன. கயலால் நிலைக்கொள்ளவே முடியவில்லை.

ஒருகட்டத்தில் மனதின் படபடப்பு அதிகரித்ததில் அவளுக்கு மூச்சுத் திணற ஆரம்பிக்க, கையிலிருந்த கசாயத்தை அப்படியே கீழே போட்டவள், இடுப்பினோரத்தில் சேலையோடு சிறு துணியில் கட்டி சொருகி வைத்திருந்த இன்ஹலரை எடுக்க முயன்றாள். ஆனால், அவளுடைய துரதிஷ்டம் துணியின் முடிச்சைக் கூட அவிழ்க்க முடியாது பதட்டத்தில் அவளுடைய விரல்கள் தடுமாற, சரியாக ஒரு கரம் அவளிடையை தொட்டு அங்கிருந்த துணியின் முடிச்சை அவிழ்த்து இன்ஹலரை கையிலெடுத்தது.

அந்த நிலையிலும் தன்னிடையில் உணர்ந்த ஸ்பரிசத்தில் திகைத்துவிட்டாள் கயல். அவளுக்கு நன்றாக பழக்கப்பட்ட ஸ்பரிசம் அது. அவனவளின் ஸ்பரிசம். ஆனால், அது எப்படி சாத்தியம்?

இருந்தும், “வீர்…” என்று இதழ்கள் அழைத்தவாறு அவள் நிமிரப் போக, அதற்குள் அந்த ஆண்மகன் அவளை அணைத்தாற் போன்று நின்று அவள் பின்னந்தலையைப் பற்றி தன் கையால் அவளுக்கான மருந்தைக் கொடுத்தான். அவனுடைய பிடியில் அத்தனை இறுக்கம்.

மருந்தை எடுத்துக்கொண்டவாறு கலங்கிய விழிகளின் நடுவே தன்னெதிரே நின்றிருந்தவனை அவள் காதலோடு நோக்க, ஆனால் முகத்தைப் பார்த்த அடுத்தகணம் ஊற்றெடுத்த காதல் மொத்தமும் வழிந்தோடியது. அவளை தாங்கியிருந்த அந்த இறுகிய முகம் கண்டிப்பாக அவளுடைய வீரஜ் அல்ல. ஆனால், அந்த தொடுகை,  உணர்வு, ஸ்பரிசம் அவனிடம் அவள் உணர்ந்தவை!

மனம் ஏற்க, மூளை மறுக்க, வேகவேகமாக மருந்தை எடுத்து தன் திணறலை அடக்கியவாறு அவனை பார்த்துக்கொண்டிருந்தவளின் விழிகள் அவனுடைய விழிகளில் தெரிந்த தவிப்பில் திகைத்து விரிந்தன. சிலகணங்கள் அவனுடைய கரங்களில் அடங்கியவாறு சிலைப்போல் நின்றிருந்தவள், காலையிலிருந்து ஏற்பட்ட படபடப்பு, தவிப்பில் அப்படியே மயங்கி சரிந்திருக்க, எதிரே இருந்தவனின் முகமோ இறுகிப் போயிருந்தது.

சில மணி நேரங்கள் கழித்து, பட்டென்று விழிகளை திறந்தவள், சுற்றும் முற்றும் பார்க்க, அது அவளுடைய அறைதான். சுவரில் தொங்கிக்கொண்டிருந்த கடிகாரமோ நேரம் பண்ணிரெண்டு என காட்ட, தூக்கி வாரிப்போட்டவளாக எழுந்தமர்ந்தவள், முகத்தை நீரினால் அடித்துக் கழுவிவிட்டு எதிரேயிருந்த கண்ணாடியைப் பார்த்தாள்.

இந்த ஆண்மகன் தொட்ட ஸ்பரிசத்தை அவளால் ஒதுக்கவே முடியவில்லை. தன்னவனின் தொடுகையை தன்னவனை உணர்த்திய ஸ்பரிசத்தை அவளால் அவ்வளவு இலகுவாக விலக்கி வைக்க முடியவில்லை.

அவளுடைய நினைவுகளோ தன்னவனின் ஸ்பரிசத்தை முதல்தடவை உணர்ந்த தருணத்தை நினைத்துப் பார்த்தது.

அன்று ராகவனின் ஊரில் கயலைப் பார்த்த பிறகு அடுத்த இரண்டுநாட்கள் வீரஜ் கயலை சந்திக்கவே இல்லை.

காலை ஆறு மணிக்கே எல்லோரையும் எழுப்பவென வீட்டில் ஒலிக்கும் சாமி பாடல்களில்தான்  சற்று எரிச்சலாகுபவன், மற்ற நேரங்களில் விதவிதமான உணவுகள்,  அழகுப் பெண்களின் தரிசனத்தில் உற்சாகமாகிப் போவான்.

அன்று காலையிலேயே ராகனின் வீட்டில் பூஜை நடக்க, எழுப்பிவிட்ட கடுப்பில் பற்களைக் கடித்தவண்ணம் மாடியிலிருந்து இறங்கி வந்தவனை ராகவனின் பாட்டி விசாலட்சுமி சாமியறையின் முன் இழுத்து நிறுத்த, ‘சோதிக்காதீங்கடா என்னை!’ உள்ளுக்குள் புலம்பியவாறு கைக்கட்டி நின்றிருந்தான் அவன்.

சில நிமிடங்கள் அவனை கவனித்திருந்த ராகவனின் அப்பா வைகுண்டம், “ஏன்ப்பா, கையில கட்டியா என்ன? கையெடுத்து கும்பிட்டு சாமிய வணங்க மாட்டியோ?” ஏளனம் கலந்த கோபத்தோடுக் கேட்க, வீரஜ் பதில் சொல்லும் முன், “அதில்லைப்பா, அவன் கிறிஸ்டியன். அவன் எப்படி…” என்று தயக்கமாக இழுத்தான் ராகவ்.

“ஓஹோ!” அவனை மேலும் கீழும் வைகுண்டம் ஒரு பார்வை பார்த்து வைக்க, தன் நண்பனை முறைத்துவிட்டு, “அது காரணமில்லை அங்கிள். எல்லா மதத்து கடவுள்களுமே கடவுள்தான். ஆனா, எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது” வீரஜ் சாதாரணமாகச் சொல்ல,  ஆரம்பத்தில் அவன் பேசியதில் கனிவாகப் பார்த்தவர், கடைசியாக அவன் சொன்ன வசனத்தில் ‘க்கும்!’ என்று நொடிந்துக்கொண்டார்.

அதேநேரம், “இன்னைக்கு ராத்திரி கோயில்ல பெரிய பூசை நடக்க போகுது. சாக்கு போக்கு சொல்லாம எல்லாரும் வரணும். ஏன்ப்பா, வீரா நீயும்தான். நம்பிக்கை இல்லைன்னாலும் பரவாயில்லை. கடவுள் சன்னிதானத்துக்கு சும்மாவாச்சும் வா!” என்ற விசாலட்சுமி, “இன்னைக்கு கோயில்ல கயலோட பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்குமாமே…” என்று பக்கத்திலிருந்தவளிடம் பேசியவாறு அங்கிருந்து நகர்ந்தார்.

முதலில் கடுப்பாகி, ‘இந்த தாய்க்கிழவி சொல்லிட்டா நாம வந்துறணுமா? நெஹிஹே’ உள்ளுக்குள் நினைத்து அவர் பேசுவதை சலிப்பாகக் கேட்டுக்கொண்டிருந்த வீரஜின் விழிகள், இறுதியில் அவர் சொன்ன வார்த்தைகளில் மின்னியது.

‘அந்த பாப்பா வர்றாளா, அப்போ நாம போயே ஆகணுமே! உனக்கு அதிர்ஷ்டம்டா வீரா’ உள்ளுக்குள் உற்சாகமாக நினைத்து, இரவு செல்ல வேண்டிய பூஜைக்கு இப்போதே ஆடை தெரிவு செய்ய ஓடிவிட்டான் அவன்.

அன்றிரவு, அந்த ஊர் பெரிய கோயில் சாமிபாடல்களுக்கிடையே விளக்குகளாலும் மலர் அலங்காரங்களாலும் மின்ன, கோயிலுக்குள்ளேயும் வெளியேயும் பயபக்தியோடு நின்றிருந்தனர் ஊர் மக்கள். ஒருவனைத் தவிர.

அங்கு ஆண்கள் கூட்டத்தின் நடுவே ராகவனுடன் நின்றிருந்த வீரஜின் விழிகள் அந்த ஒருத்தியை தேடி அலைப்பாய, சரியாக கோயிலுக்குள் சில ஆட்களோடு நுழைந்தார் ஒருவர்.

அவருக்கு கிடைத்த வரவேற்பையும் புரோகிதரே அவருக்கு கொடுக்கும் பணிவையும் வீரஜ் யோசனையோடு பார்த்துக்கொண்டிருக்க, மெல்ல அவன் காதருகே நெருங்கி, “வீரா, இதுதான் மிஸ்டர்.பார்த்திபன். நீங்க கண்ணு வச்சீங்களே, அந்த சொத்துக்கு வன் என்ட் ஒன்லி ஓனர். ஆழம் தெரியாம காலை விட்டுறாத மாப்பு” கேலி கலந்து மிரட்டினான் ராகவன்.

ஒருநிமிடம் வீரஜ்ஜே ராகவனின் வார்த்தைகளிலும் பார்த்திபனின் தோற்றத்திலும் எச்சிலை விழுங்கிக்கொண்டான். பெரிய முறுக்கு மீசையுடன் நெஞ்சை நிமிர்த்திய கம்பீரத் தோற்றத்துடன் நின்றிருந்த பார்த்திபனுக்கு பதினெட்டு வயதில் ஒரு மகள் இருக்கிறாளென்றால் யாருமே நம்ப மாட்டார்கள்.

‘இவருக்கிட்ட நம்ம விளையாட்ட வச்சிக்க கூடாதோ?’ உள்ளுக்குள் சற்று பயந்தபடி நினைத்துக்கொண்டாலும் வெளியில்,  “நாமெள்ளாம் யாரு? அர்னால்ட்டுக்கே டஃப் கொடுப்போம்ல!” விறைப்பாக சொல்லிக்கொண்டு நிற்க, அவனுடைய விழிகள் மீண்டும் கயலின் தந்தை முன்னாலேயே கயலை தேடி அலைந்தன.

சில நிமிடங்கள் கழித்து ஒலித்துக்கொண்டிருந்த பாடல் அணைக்கப்பட்டு, ஓம் நமச்சிவாய என்ற வரிகளோடு புதுப்பாடல் ஒலிக்கப்பட, கோயில் மேடையில் பெண்களுக்கு நடுவேயிருந்து நமஸ்காரம் செய்து நாட்டியத்தை ஆரம்பித்தாள் கயல்.

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா… நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா… நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…

ஹர ஹர சிவனே அருணாசலனே அண்ணாமலையே போற்றி… சிவ ஓம் நமச்சிவாயா…

சிவ சிவ ஹரனே சோனாச்சலனேஹர ஹர சிவனே அருணாசலனே… அண்ணாமலையே போற்றி ஹர ஓம் நமச்சிவாயா…

வீரஜோ மங்கலகரமான அவளின் தோற்றத்தில் இமை சிமிட்டாது சிலை போல் உறைந்துப்போய் நிற்க,  அவனை ஏற்கனவே மேடையிலிருந்தே கண்டுவிட்டிருந்தவள், உள்ளுக்குள் பொங்கிய வெட்கத்தை அடக்கி பயபக்தியோடு ஆட ஆரம்பித்தாள்.

பாடல் முடிய நாட்டியமும் முடிய, அடுத்த சில நிமிடங்கள் அந்தக் கூட்டத்தில் வீரஜ் கயலை பார்க்கவே இல்லை. ஆனால், அவளை சந்திக்க வேண்டுமென்ற ஆர்வம் அவனுக்குள்.

ராகவனையும் விட்டுவிட்டு கயலை தேடி சுற்றும் முற்றும் வீரஜ் அலைய, சரியாக கோயிலுக்கு பின்வளாகத்தில் சுவருக்கு பின்னே சிரிப்பு சத்தம். “அதே சிரிப்பு…” வாய்விட்டேச் சொன்னவாறு அங்கு எட்டிப் பார்த்தவன், தன் தேடலின் விடை கிடைத்துவிட்ட நிம்மதியில் “ஊஃப்…” வாயைக் குவித்து நிம்மதி மூச்சுவிட, அதில் திடுக்கிட்டு திரும்பினர் கயலும், தேனுவும்.

அவனைப் பார்த்ததும், “அண்ணே நீங்களா? ஃபோட்டோ அனுப்புறேன்னு எங்களை ஏமாத்திபுட்டீங்கல்ல!” தேனு குறைபட, ‘நிலைமை தெரியாம குறுக்க நின்னு இந்த கரடி வேற’ உள்ளுக்குள் எரிச்சலாக நினைத்துக்கொண்டு, “ஹிஹிஹி… அனுப்புறேன் தங்கச்சி” என்று பற்களைக் கடித்த வண்ணம் சொன்னவன், கயலை அப்பட்டமாக மேலிருந்து கீழாக ரசித்தான்.

அந்த பார்வையில் உள்ளுக்குள் ஜிவ்வென்று இருக்க, கயல் பார்வையை தாழ்த்திக்கொள்ள, வீரஜின் நல்ல நேரத்திற்கு தேனு கையில் வைத்திருந்த டப்பா அலைப்பேசியில் அவளை அவசரமாக வரச் சொல்லி ஒரு அழைப்பு!

“கயலு, அண்ணா கூட பேசிக்கிட்டு இரு. வந்துடுறேன்” என்றுவிட்ட தேனு சிட்டாகப் பறந்திருக்க, இப்போது அந்த இடத்தில் இவ்விருவர் மட்டுமே.

‘பாப்பா தனியா சிக்கிருச்சு. அதிர்ஷ்டம்டா வீரா’ உற்சாகமாக நினைத்து கயலை பார்த்தவாறே அவளை நோக்கி ஒரு அடி வைத்தான் வீரஜ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!