ரகசியம் 07 💚

eiC367A31529-27207a9a

ரகசியம் 07 💚

“நாளைக்கு நான் ஊருக்கு கிளம்புறேன்” வீரஜ் சட்டென்று சொன்னதும் கயலுக்கு தூக்கி வாரிப்போட்டது. விழிகள் கலங்க கீழுதட்டைக் கடித்துக்கொண்டவள், என்ன சொல்வதென்று தெரியாது தலையை குனிந்து கண்ணீரை மறைக்க முயல, அவளுடைய கலங்கிய விழிகளை தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்டான் அவன்.

வேகமாக அவளை நெருங்கி அவள் நாடியை தன் முகம் நோக்கி நிமிர்த்தியவன், “பாப்பா, எனக்கு தெரியும், உனக்கும் என்னை பிடிச்சிருக்குன்னு. ஆனா, அதை வார்த்தையால சொல்ல மாட்டேங்குற. ப்ளீஸ், ஒரு தடவை என்னை பிடிச்சிருக்குன்னு சொல்லு. அது போதும் உனக்காக ஏங்குற இந்த மனசுக்கு” வரவழைக்கப்பட்ட காதல் குரலில் பேச, வேகமாக முகத்தை திருப்பிக்கொண்டு திரும்பி நின்றவளுக்கு அவனுடைய வார்த்தைகளில் மனம் பாகாய் உருகத்தான் செய்தது.

உள்ளிருந்து எழுந்த அழுகையுடனான விம்மலை அடக்கியவாறு, “அப்படியெல்லாம் இல்லைங்க. நாளைக்கு மறுநாள் எனக்கு நிச்சயதார்த்தம். நீங்களா ஏதும் நினைச்சிக்கிட்டு ஆசைய வளர்க்காதீங்க” என்ற கயலுக்கு ஏனோ தன் தந்தைக்கு தெரிந்தால் வீரஜிற்கு ஏதும் நேர்ந்துவிடுமோ என்ற பயம்.

அந்த பயத்தின் காரணமாகவே அவள் தன் மனதை மறைக்க, ஆனால் இங்கு வீரஜிற்கு சப்பென்றானது. ‘நிச்சயதார்த்தமா? அப்போ அவ்வளவுதான். உள்ளூர் பிரியாணி எவனோ ஒரு நாய்க்குதான் கிடைக்கணும்னு இருந்திருந்தா அதை யாரால மாத்த முடியும்? இது அவ்வளவுதான். இவ வாய திறந்து ஏதும் சொல்ல போறதில்லை. நானும் இவ அப்பன்கிட்ட எதுவும் பேச போறதில்லை. அடைறவன் கொடுத்துவச்சவன்!’ உள்ளுக்குள் பொறாமையாக நினைத்துக்கொண்டவனுக்கு ‘இனிமேல் இது வேலைக்காகாது’ என நன்றாகவே புரிந்தது.

சலித்தவாறு திரும்பி போக எத்தனித்தவன் என்ன நினைத்தானோ? சட்டென்று நின்று, “ஆனாலும், உனக்காக நான் எப்போவும் காத்திருப்பேன் பாப்பா. நாளைக்கு பதினோனரைக்கு ட்ரெயின். ஊருக்கு போறதுக்கான கடைசி ட்ரெயின் அது. ஸ்டேஷன்ல ட்ரெயின் கிளம்புற கடைசி செக்கன் வரைக்கும் உனக்கான டிக்கெட்டோட உனக்காக காத்திருப்பேன். உன் மனசுக்கு நான் வேணும்னு தோனிச்சின்னா என்னை தேடி வா! வாழ்க்கைன்னா என்னன்னு நான் உனக்கு காமிக்கிறேன்” வாயிற்கு வந்த பொய்யை கடைசிப் பந்தாக அடித்துவிட்ட வீரஜ் அங்கிருந்து நகர்ந்திருக்க, ஓவென்று அழுதேவிட்டாள் கயல்.

அடுத்தநாள் காலை, கயல் தேனுவின் மடியில் விழுந்து விடாது அழுதுக்கொண்டிருக்க, தேனுவுக்கு அவளை எப்படி சமாதானம் செய்வதென்று கூட தெரியவில்லை.

“அழாத கயலு, எல்லாம் ஒரு காரணத்துக்காகதான் நடக்கும். கொஞ்சநாள்தான் பார்த்திருப்ப, அதனால அவங்கதான் உன் வாழ்க்கைன்னு ஆகிருமா?” தேனு புரிய வைக்க முயல, வேகமாக எழுந்தமர்ந்து, “என்னடீ பேசுற? எனக்கு மனசெல்லாம் வலிக்குது தேனு. அவங்கள கொஞ்சநாளாதான் தெரியும். ஆனா, அவங்கள எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இன்னைக்கு ராத்திரி அவங்க கிளம்புறாங்க. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல” கண்ணீரை கூட துடைக்க மனமின்றி செய்வதறியாது கதறியழுதாள் கயல்விழி.

தேனுவுக்கும் தோழியின் கண்ணீரைக் காண சகிக்கவில்லை. கயலின் தலையை வருடியவாறு அவள் யோசனையோடு அமர்ந்திருக்க, சட்டென்று அழுகையை நிறுத்தி தேனுவை ஆர்வமாக பார்த்தாள் அவள்.

“தேனு, எனக்கு அவர் கூட வாழணும்னு தோனுது. நான் மொதல்லையே தடுத்திருந்தேன்னா இந்நேரம் அவர் மனசுல ஆசைய வளர்த்திருக்க மாட்டாரு. நானும் அவர் என்னை காதலிக்க ஒரு காரணம்தான். அவருக்கு என் மேல ரொம்ப பாசம்டீ, எனக்கு தெரியும். நானும் அவர் கூட போயிடலாம்னு…” கயல் இழுக்க, திகைத்துவிட்டாள் தேனு.

“கயல்!” அவள் அதிர்ந்து விழிக்க, “எனக்கு உன்னை விட்டா வேற யாருடீ இருக்கா? எனக்கு உதவி பண்ணு தேனு, என்னை அவர் கூட சேர்த்து வை!” கயல் ஒரு முடிவு எடுத்தவளாக அதற்கு உதவிக்கோரி தேனுவிடம் அழ ஆரம்பிக்க, ‘கடவுளே! என்ன சொல்றா இவ?’ அரண்டுப்போய் தன் தோழியையே பார்த்திருந்தவளுக்கு அவளின் அழுது சிவந்து வீங்கிய முகத்தைப் பார்க்க பாவமாக இருந்தது போலும்.

தேனுவின் மனம் இதுவரை  திரைப்படங்களில் பார்த்த காதலர்கள் சேர்வதற்கு நண்பர்கள் உதவும் காட்சிகளை நினைத்துப் பார்க்க, கயலிடம் புத்திமதிச் சொல்லி அவளை தடுப்பதற்கு தவறிவிட்டாள் அவள். இரு பதினெட்டு வயது பாவைகளும் பேதையாகித்தான் போனர்.

தேனு சம்மதித்ததும்தான் கயலுக்கு வீரஜ் பற்றிய பாரம் குறைந்தது. விழிநீரை துடைத்துவிட்டு சிறுபையில் தேவையான ஆடைகளை மட்டும் அவள் எடுத்து வைக்க ஆரம்பிக்க, “கண்ணம்மா…” என்ற பார்த்திபனின் அழைப்பு.

கயல் பதறிப்போய் தேனுவை நோக்க, விழிகளை அழுந்த மூடித் திறந்து அவளை ஆசுவாசப்படுத்தியவள், “போய் ஐயாக்கூட பேசு கயலு, அவர் முன்னாடி பதறி திட்டத்தை காட்டிக் கொடுத்துறாத, புரியுதா?” அழுத்தமாகச் சொல்லி கயலை பார்த்திபனைச் சந்திக்க அனுப்பி வைக்க, அழுத தடம் தெரியாது முகத்தை அடித்துக் கழுவி பவுடர் போட்டுக்கொண்டவள், கண்ணாடியில் தன்னைப் பார்த்து திருப்திப்பட்ட பிறகே தந்தையை சந்திக்கச் சென்றாள்.

அறையில் பார்த்திபனோ ஒரு சேலையை கையில் வைத்து வருடிக்கொண்டிருந்தார். அவரும் அழுந்திருப்பார் போலும். முகம் இறுகி, லேசாக விழிகள் சிவந்திருந்தன. அதை உணர்ந்ததும் வீரஜை கூட மறந்து “அப்பா, என்னாச்சுப்பா?” பதறியபடி அவரிடம் ஓடினாள் கயல்.

இமைகளை வேகமாக சிமிட்டி விழிநீரை உள்ளிழுத்துக்கொண்ட அந்த முரட்டு மனிதர், “கண்ணம்மா, இப்படி வந்து உட்காரு” என்றவாறு மகளை இழுத்து தன்னருகே அமர வைத்து அவள் தோளில் கையிலிருந்த புடவையை வைத்துப் பார்த்து திருப்தியாக புன்னகைக்க, அப்பாவின் செயலில் மகளுக்குதான் ஒன்றும் புரியவில்லை.

“அப்பா…” அவள் புரியாது விழிக்க, அவள் பார்வையிலிருக்கும் கேள்வியை உணர்ந்து மென்மையாக புன்னகைத்த பார்த்திபன், “இது யாரோட புடவைன்னு தெரியுமா கண்ணம்மா? உன் அம்மாவோடது. அவ நம்மள விட்டு போகுறதுக்கு முன்னாடி அவளோட பொறந்தநாளைக்குன்னு அவளுக்காக நான் ஆசைஆசையா வாங்கினது. ஆனா அவ…” கோபத்தில் பற்களைக் கடிக்க, கயலுக்கே மனம் கனத்துப்போனது.

பார்த்திபனின் தோளில் சாய்ந்துக்கொண்டு புடவையை லேசாக வருடியவள், “ரொம்ப அழகா இருக்குப்பா” வலி நிறைந்த குரலில் சொல்ல, தன் மகளின் நெற்றியில் முத்தமிட்டு பக்கத்திலிருந்த இன்னொரு புடவையை எடுத்து, “நாளைக்கு நிச்சயதார்த்தத்துக்கு அப்பா உனக்காக எடுத்த புடவைடா, நல்லா இருக்கா?” பார்த்திபன் ஆர்வமாக கேட்க, பட்டென்று அவரிடமிருந்து விலகியமர்ந்தவளுக்கு இப்போது தந்தையின் விழிகளில் தெரிந்த ஆர்வத்திலும், பாசத்திலும் குற்றவுணர்ச்சி மேலோங்கியது.

“அது ப்பா… நல்லாயிருக்கு” கயல் புடவையை கூட பார்க்காது தடுமாறியபடிச் சொல்ல, “என்னடா சேலைய பார்க்காமலேயே சொல்ற, ஒருவேள அப்பா உனக்காக எதை தெரிவு செஞ்சாலும் அது நல்லாதான் இருக்கும்னு சொல்ல வர்றியோ?” சொல்லிவிட்டு வாய்விட்டுச் சிரித்தவர், “கல்யாணம் வரைக்கும்தான் அப்பா. அப்றம் உனக்கு எல்லாமே உன் புருஷனாதான் இருப்பான்” என்க, மகளை பிரிய நேரிடுமோ என்ற வேதனை அவர் குரலில் அப்பட்டமாகத் தெரிந்தது.

அதை கயலும் உணரத்தான் செய்தாள். ஆனால், இத்தனை சீக்கிரம் தன் மகளை பிரிந்துவிடுவார் என்று பார்த்திபனும் நினைத்திருக்க மாட்டார். இன்றைய நாள்தான் தன் தந்தையின் முகத்தை தான் பார்க்கும் கடைசி நாளென்று கயலும் எதிர்ப்பார்த்திருக்க மாட்டாள்.

இரு புடவைகளை கையில் ஏந்தியவாறு அறைக்குள் நுழைந்தவளுக்கு மனம் குழப்பமெனும் கடலில் மிதந்துக்கொண்டிருந்தது. இருபுடவைளையும் கட்டிலில் தூக்கிப்போட்டவள், மீண்டும் தேனுவின் தோளில் சாய்ந்து ஒரு மூச்சு அழுது தீர்த்தாள்.

தேனுவின் சமாதானம் எதுவும் கயலிடம் எடுபடவில்லை. அவளுடைய விழிநீரில் மூழ்கிய பார்வை இரு புடவைகளையும் மாறி மாறிப் பார்த்தது.

ஒருபக்கம் “பாப்பா…” என்ற வீரஜின் அழைப்பு. இன்னொருபக்கம் “கண்ணம்மா…” என்ற பார்த்திபனின் அழைப்பு.

தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தவளின் மனதை கடைசியில் வென்றது வீரஜின் அழைப்புதான். நிச்சயதார்த்தத்திற்காக பார்த்திபன் கொடுத்த புடவையை விட்டு மனைவியின் புடவையென பார்த்திபன் கொடுத்த புடவையை பையில் திணித்தவள், தன்னவனை சந்திக்கச் செல்லும் நேரத்திற்காக காத்திருந்தாள்.

கிராமமென்பதால் ஏதேனும் விசேஷத்தை தவிர்த்து சாதாரண நாட்களில் பத்து மணிக்கே ஊர் கும்மிருட்டாகிவிடும். இதற்கு முன்னர் இரவு நேரங்களில் கயல் வீட்டிலிருந்து வெளியேறுவதற்கு இதுவே சாதகமாக அமைய, இப்போதும் வீரஜ்ஜை சந்திக்கச் செல்வதற்கு இதுவே சாதகமாக அமைந்தது.

அன்றுமாலை, “தேனு, நீ உன் வீட்டுக்கு போயிடு, நான் தனியா இங்கயிருந்து போயிடுவேன்.  நீதான் உதவி பண்ணன்னு தெரிஞ்சா உன்னை சும்மாவே விட மாட்டாங்க. அப்பா உன்கிட்ட என்ன கேட்டாலும் உனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லைன்னு சொல்லிடு, புரியுதா?” கண்ணீரோடு கயல் சொல்ல, “இல்லை கயலு, நானும்…” தேனு மறுத்து ஏதோ சொல்ல வர, கயல் அவள் வார்த்தைகளை கொஞ்சமும் கண்டுக்கொள்ளவில்லை.

எங்கு தன் தந்தையால் தன் தோழிக்கு பிரச்சினை வந்துவிடுமோ என்ற பயம் அவளுக்குள்.

எப்படியோ தேனுவிடம் அழுது கெஞ்சி, பிரிவின் துயரில் அவளை அணைத்து சமாதானம் செய்து மாலையே தேனுவை அவள் வீட்டுக்கு அனுப்பிவிட்டிருந்தாள் கயல். ஏற்கனவே வீரஜ் ரயிலுக்கான நேரத்தை சொல்லியிருக்க, அரைமணி நேரத்திற்கு முன்னதாகவே யாருக்கும் தெரியாது வீட்டின் பின்வாசல் வழியாக வெளியேறியவள், பையை நெஞ்சோடு அணைத்துப் பிடித்து முகத்தை முந்தானையால் லேசாக மறைத்துக்கொண்டு ரயில் நிலையத்திற்கு வேகமாகச் சென்றாள்.

அங்கு ரயில் நிலையத்தில், “அந்த ராகவனுக்கு மனசாட்சின்னு ஒன்னு இருக்கா, அப்படி நான் என்ன பண்ணிட்டேன்னு என்னை கழுத்தை பிடிச்சி தள்ளாத குறையா வெளியில போக சொல்லிட்டான்? அதுவும் வழியனுப்ப கூட வராம வீட்டுக்கு வந்த விருந்தாளிய கால்நடையா ஸ்டேஷனுக்கு அனுப்பி விட்டுட்டான். இருங்கடா, இந்த வீரஜ் கோடீஸ்வரனானதும் உதவின்னு தேடி வருவீங்கல்ல, அப்போ விளக்குமாத்தாலயே அடிச்சி விரட்டுறேன். ச்சே!” வாய்விட்டு புலம்பிக்கொண்டிருந்தான் வீரஜ்.

இன்னும் ரயில் செல்வதற்கு பதினைந்து நிமிடங்களே இருக்க, காத்திருக்கும் இருக்கையில் அமர்ந்திருந்தவனுக்கு மனதில் ஏதோ ஒரு உந்துதல். அவனுடைய தலை தானாக மனம் சொல்லும் திசைக்குத் திரும்ப, விழிகள் அங்கு ஓடி வந்துக்கொண்டிருந்தவளைப் பார்த்து சாரசர் போல் விரிந்தன.

அதிர்ச்சியோடு அவன் எழுந்து நிற்க, முகத்தை பாதி மறைத்துக்கொண்டு அவனெதிரே மூச்சு வாங்கியவாறு ஓடி வந்து நின்று, “ஏங்க, வாங்க சீக்கிரம் கிளம்பலாம். அப்பாவோட ஆளுங்களுக்கு தெரியுறதுக்கு முன்னாடி போயாகணும்” கயல் பதற, வீரஜிற்கு ஒருநிமிடம் எதுவுமே புரியவில்லை.

அவளையே இமைக்காது அவன் திகைத்துப்போய் பார்த்துக்கொண்டிருக்க, அவனின் அசையாத பாவனையில், “ஏங்க…” என்று அவனை உலுக்கியவள், “என்னங்க பெக்கபெக்கன்னு முழிச்சிசிக்கிட்டு இருக்கீங்க? யாராச்சும் என்னை அடையாளம் கண்டுட்டாங்கன்னா அவ்வளவுதான், இரண்டு பேரையும் வெட்டி போட்டுடுவாங்க” என்க,

“எதே?” நடப்புக்கு வந்து கத்திய வீரஜின் முகம், கயல் வருவாளென கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவில்லையென்பதை அப்பட்டமாகக் காட்டியது.

“நீ… நீ இங்க என்..என்ன பண்ற?” அவன் அதிர்ச்சியாகக் கேட்க, “என்ன பண்றேனா?” புரியாதுக் கேட்டவள், “ஏங்க, நீங்கதானே சொன்னீங்க, இப்போ என்ன இப்படி பேசுறீங்க? விளையாடாதீங்க, வாங்க போகலாம்” என்று பதட்டப்பட, வீரஜிற்கு அப்போதுதான் அவன் அவளிடம் பேசியதே புரிய, அவனுக்கு தலையே சுற்றிவிட்டது.

‘ஓ ஷீட்! நேத்து ஏதோ பேச்சுக்கு கடைசியா வாய்க்கு வந்த வார்த்தைய அடிச்சுவிட்டேன்னா இவளும் அதை நம்பிட்டு ஓடிப்போகலாம்னு வந்து நிக்கிறாளே… நான் வலை வீசினதே அவளோட பணத்துக்குதான். இவள மட்டும் வச்சி நான் என்ன பண்ண?’ உள்ளுக்குள் ஏதேதோ சிந்தனைகள் போக, அப்படியே தலையைத் தாங்கியவாறு இருக்கையில் தொப்பென்று வீரஜ் அமர்ந்துவிட, ‘என்னாச்சு இவருக்கு?’ புரியாது நினைத்தவாறு சுற்றிமுற்றி பதட்டமாக பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் கயல்.

‘வீரஜ் யோசி! ஏதாச்சும் பண்ணுடா! இவள மட்டும் எந்த இலாபமும் இல்லாம கூட்டிட்டு போனோம்னா அவ்வளவுதான் அம்மா கொன்னுடுவாங்க’ வீரஜிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சிறிதுநேரம் நெற்றியைத் தட்டி யோசித்தவன், பின் ஆழ்ந்த பெருமூச்செடுத்து விழிகளை மட்டும் உயர்த்தி கயலை நோக்கினான்.

அவளும் அவனையே பார்த்துக்கொண்டு நிற்க, எழுந்து அவளெதிரே நின்றவன், “இங்க பாரு பாப்பா, நான் யாரு உனக்கு, என்னை எத்தனைநாளா தெரியும்? நான் சொன்னதும் கிளம்பி வந்துடுவியா? நானும் உன்மேல் ரொம்ப பாசம்தான். ஆனா இப்போ, உன்னை உன் அப்பாக்கிட்டயிருந்து பிரிச்சி கூட்டிட்டு போறோம்னு ரொம்ப குற்றவுணர்ச்சியா இருக்கு. இட் ஹர்ட்ஸ். சோ, நீ அப்பா பார்க்குற பையன கல்யாணம் பண்ணு. உன்கூட இருந்த இந்த நினைவுகளே போதும். அதை நினைச்சி நான் வாழ்ந்துடுவேன்” முயன்று வரவழைத்த சோகக்குரலில் பேசி அவளை விரட்ட முயற்சிக்க, கயலோ அவனுடைய வார்த்தைகளில் மேலும் உருகிப்போனாள்.

‘நான் என்ன தவம் செய்தேன், இப்படிபட்ட ஆண்மகன் கிடைக்க?’ உள்ளுக்குள் பெருமையாக நினைத்துக்கொண்டவள், “இல்லைங்க, நாம கல்யாணம் பண்ணிப்போம். அப்றம் அப்பாக்கிட்ட வந்து பேசுவோம். அவர் என்மேல அவ்வளவு பாசம். அதுவும், தேனு சொன்னாங்க, ஒரு குழந்தை பெத்துட்டா எல்லாம் சரியாகும், ஏத்துக்குவாங்கன்னு” சிறு வெட்கத்தோடுச் சொல்ல, ‘ஙே’ என அவளை மேலும் கீழும் பார்த்தவனுக்கு தலையை எங்கேயாவது முட்டிக்கொள்ளலாம் போலிருந்தது.

ஆனால், அடுத்தகணமே அவன் மூளையில் மின்னல் வெட்டியது. ‘வீட்டுக்கு ஒரே வாரிசு. அவ்வளவு பாசமான அப்பா. கண்டிப்பா ஏத்துக்குவாரு. நமக்கு செட்ல் ஆகினா போதும். அதுக்கு கொஞ்சம் பொறுமையா இருக்குறது ஒன்னும் தப்பு இல்லையே! இவ சொல்றது பழைய ஐடியாவா இருந்தாலும், ஓல்ட் இஸ் கோல்ட் மேன். ஏத்துக்கிட்டா அவ்வளவுதான், மொத்த சொத்துக்கும் ஐயாதான் ராஜா’ உள்ளுக்குள் வில்லத்தனமா திட்டத்தைத் தீட்டியவனின் பார்வை இப்போது கயல்மேல் விஷமமாக படிந்தது.

இதழுக்குள் சிரித்தவாறு, “கல்யாணம்தானே, பண்ணிடலாமே பாப்பா!” வீரஜ் சொல்ல, அவனின் மனம் புரியாது சந்தோஷமாக தலையாட்டியவாறு, “ஏங்க டிக்கெட் கொடுங்க!” ஆர்வமாக கயல் கேட்க, அப்போதுதான் அதை உணர்ந்தவன், நெற்றியில் வெளிப்படையாக அடித்துக்கொண்டு “ஓ ஷீட்! வெயிட் பாப்பா” கத்திவிட்டு தலைத்தெறிக்க ஓடினான்.

அடுத்த சில நிமிடங்களில் வீரஜின் ஊரை நோக்கி ரயில் செல்ல, தலையைத் தாங்கிக்கொண்டு பக்கத்தில் மூச்சு வாங்கியவாறு அமர்ந்திருந்த தன்னவனுடனான புது வாழ்க்கையை நினைத்து பெண்களுக்கே உரித்தான பதட்டத்தோடு அமர்ந்திருந்தாள் கயல்.

அதேநேரம் ரயில் சென்ற அடுத்த அரைமணி நேரத்திலேயே விடயத்தை தெரிந்துக்கொண்ட பார்த்திபனோ, கயலை திருப்பி அழைத்து வருவதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அவருடைய இதழ்கள் தன் மனைவி செய்த காரியத்தையே தன் மகளும் செய்ததை எண்ணி விரக்தியாக புன்னகைத்துக்கொண்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!