ரகசியம் 22 💚

eiIRGZ286404-35beb707

ரகசியம் 22 💚

நிகழ்காலத்திலகயலமயக்கத்தாலவிழிகளை மூட, கடந்தகாலத்தில் மயக்கத்திலிருந்து “அப்பா…” என்ற அலறலோடு எழுந்தமர்ந்தாள் கயல்.

வீரஜோ அவள் பக்கத்திலமர்ந்து அவளையே பார்த்திருந்தவன், தன்னவள் அலறியதும் அதிர்ந்து, “பாப்பா…” என்று அவளை நெருங்க, “வீர், எனக்கு அப்பாவ பார்க்கணும். அவர் என்னை விட்டு போன மாதிரி கனவு கண்டேன். எனக்கு ரொம்ப பயமா இருக்கு. தயவு செஞ்சி கூட்டிட்டு போங்க” கயல் கத்த, வீரஜோ பயத்தில் எச்சிலை விழுங்கிக்கொண்டான்.

கனவென்று நினைத்துக்கொண்டிருப்பவளுக்கு மீண்டும் உண்மையை சொல்ல, ஏதாவது நேர்ந்துவிடுமோ என்ற பயம் வேறு அவனுக்குள். “பாப்பா அது…” வீரஜ் தடுமாற, வேகமாக அவனை நெருங்கி அவன் சட்டையைப் பிடித்துக்கொண்டவள், “வீர், இது கனவுதானே? அப்பா என்னை விட்டு போன மாதிரி கனவுதானே நான் கண்டேன். அவர் நல்லாதானே இருக்காரு?” என்று அழுதுக்கொண்டே கேட்க, வீரஜின் விழிகளோ கலங்கிப் போயிருந்தன.

என்ன சொல்லி சமாதானப்படுத்துவான் அவளை? ஆனால், உண்மையை சொல்லிதானே ஆக வேண்டும்!

ஆழ்ந்த மூச்செடுத்தவன், “மாமா, இப்போ இல்லை கயல். அவர் இப்போ உயிரோட இல்லை” திக்கித்திணறிச் சொல்லிவிட்டு அவளை கூர்ந்து நோக்க, தன்னவனின் வார்த்தைகளைக் கேட்டுவிட்டு அவனை சிறிதுநேரம் வெறித்துப் பார்த்தவள், அடுத்தகணம் அவன் கன்னத்தில் பளாரென அறைந்திருந்தாள். இதை வீரஜ் கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவில்லை.

“ஏன்டா என் வாழ்க்கைக்குள்ள வந்த?   உன்மேல இருந்த காதலால அவரை விட்டு வந்து அவரோட கடைசி நிமிஷத்துல கூட அவர பார்க்க முடியாம பண்ணிட்டியே, பாவி! உன்னை நம்பி வந்ததுக்கு என் வாழ்க்கைய அழிச்சிட்டியே! எனக்கு அப்பாக்கிட்ட போகணும். எனக்கு போகணும். அப்பா… அப்…” தன்னை மீறி மொத்த ஆத்திரத்தையும் அவன் சட்டைக் கோலரைப் பிடித்துக் கத்தியவள், கோபத்தில் அவனை அடித்து பின் மூச்சுக்காகத் திணற, இத்தனைநேரம் அழுகையை அடக்கிக்கொண்டு கேட்டுக்கொண்டிருந்த வீரஜ், அவள் மூச்சுக்காக திணற ஆரம்பித்ததும் பதறிவிட்டான்.

“பாப்பா… பாப்பா இன்ஹலர் எங்க?” பதறியபடி கேட்டுக்கொண்டு இன்ஹலரைத் தேடியவன், அவள் எப்போதும் சேலையோடு சொருகி வைத்திருப்பது ஞாபகத்திற்கு வந்ததும் அவளிடையிலிருந்த பையில் தேட, அவன் விழிகளில் சிக்கியது அது. உடனே வேகமாக எடுத்து அவளுக்கு அவனே மருந்தைக் கொடுக்க, ஆனால் அதனுள்ளேயிருந்த மருந்து தீர்ந்துப் போய்விட்டிருந்தது.

கயலோ அப்படியே தரையில் திணறியவாறு அமர்ந்துவிட, நெற்றியில் வெளிப்படையாக அடித்துக்கொண்டவன், வேகவேகமாக அவளுடைய பொருட்களில் தேட ஆரம்பித்தான். என்ன செய்வது ஏது செய்வதென்று கூட அவனுக்குத் தெரியவில்லை. ஒருகட்டத்தில் தேடியும் கிடைக்காது, “பாப்பா… பாப்பா…” என்று பதறிக்கொண்டு அவளை இழுத்து தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டவன், “ஒன்னுஇல்லைடா, உனக்கு ஒன்னுஇல்லை. அப்பா எப்போவும் உன் கூடதான் இருக்காரு. நீ இப்படி வீக்கா இருந்தேன்னா, அப்பாவுக்கு பிடிக்குமா என்ன? நான் இருக்கேன் உன் கூட. ரிலேக்ஸ் ரிலேக்ஸ்…” ஆறுதலாகச் சொன்னவாறு அவள் முதுகைத் தட்டிக்கொடுக்க, மெல்ல மூச்சுத் திணறல் குறைந்து ஆசுவாசமடைந்தவள், அப்படியே விழிகளை மூடி அவன் நெஞ்சிலேயே சாய்ந்துக்கொண்டாள்.

அடுத்தகணம், தன்னவளை நெஞ்சில் போட்டுக்கொண்டு சத்தம் வராது வாயைப் பொத்தி அழுக ஆரம்பித்தான் வீரஜ். “ஐ அம் சோரி பாப்பா, நான் ரொம்ப தப்பு பண்ணிட்டேன். ச்சீ! நான் இவ்வளவு கேவலமா உன்கிட்ட நடந்துக்கிட்டதை நினைக்கும் போது எனக்கே வெறுப்பா இருக்கு. அதனாலதானோ என்னவோ, என் வாழ்க்கையும்…” என்று நிறுத்தி, அழுதவாறே அவளை தன்னுள் மேலும் புதைத்துக்கொண்டான்.

அடுத்து வந்த நாட்கள், கயல் இறுகிய முகமாகவே இருந்தாள். ஒரு இடத்தை வெறித்துக்கொண்டு அவளிருக்கும் தோற்றத்தை வேதனையுடன் பார்ப்பது வீரஜ்தான். ‘தன்னவள் அவளுடைய இயல்பைத் தொலைக்க நானே காரணமாகிவிட்டேன்’ என்ற குற்றவுணர்ச்சி அவனுக்குள்.

உணவு உண்ண கூட அறையிலிருந்து வராது அறைக்குள்ளேயே கயல் அடைந்துக் கிடக்க, அவளுக்கான உணவிலிருந்து எல்லாவற்றையும் அவளவன்தான் பார்த்துப் பார்த்து செய்தான். ஆனால், ருபிதாவுக்குதான் அத்தனை எரிச்சல்.

“சாவு என்ன உன் அப்பனுக்கு மட்டுமா வந்திச்சு. என் அப்பாவுக்கும்தான் வந்திச்சு. நான் என்ன இப்படி மூலைய பிடிச்சிட்டு உக்கார்ந்துட்டா இருந்தேன். வா, வந்து வேலை பாரு!” ருபிதாவின் வஞ்சகம் நிறைந்த வார்த்தைகள் அடுத்து வீரஜ் பார்த்த பார்வையில் அப்படியே நின்றன. அவனுடைய அந்த பார்வை எப்போதும்போல் அவருக்கு வரதராஜனை ஞாபகப்படுத்த, அதன் பிறகு பேசுவாரா என்ன?

இதனிடையில் ஏன்ஜல் வேறு ஆடவனுடன் இரவோடு இரவாக ஓடியிருக்க, தன் மகள் செய்த காரியத்தில் ருபிதா நெஞ்சில் அடித்து சாபம் விட்டார் என்றால், மனோஜன் தலையிலேயே கை வைத்துவிட்டார். ஏன்ஜலுக்கு ஒரு ஐம்பது வயது பணக்கார கிழவனுக்கு திருமணம் செய்துக்கொடுக்க அவர் செய்த ஏற்பாடுகளை சுக்கு நூறாக்கி விட்டல்லவா அவள் ஓடியிருந்தாள்!

ஆனால், வீரஜோ இதிலெதுவும் கலந்துக்கொள்ளவில்லை. கண்டுக்கொள்ளவும் இல்லை. அவன் பாட்டிற்கு அவனின் முக்கிய வேலையான கயலை கவனிப்பதிலேயே குறியாக இருந்தான்.

இவ்வாறு நாட்கள் நகர்ந்து அன்று, சிரிப்போடு வீட்டுக்குள் நுழைந்த வீரஜ், அறைக்குள்ளிருந்த தன்னவளிடம் ஓடிச் சென்று, “பாப்பா… பாப்பா இங்க பாரு!” என்றுக்கொண்டே கையிலிருந்த திரைப்படத்திற்கான இரு நுழைவுச்சீட்டுக்களைக் காட்ட, எப்போதும்போல் அவள் முகத்தில் எந்த பாவனையும் இல்லை. நுழைவுச்சீட்டையும் அவனையும் மாறி மாறி ஒரு பார்வைப் பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டாள் அவள்.

இதில் வீரஜிற்குதாத் ஆயாசமாக போய்விட்டது. “பாப்பா, உனக்குதான் தியேட்டர் போகணும்னு ரொம்ப ஆசைல்ல, அதான்…” தயக்கமாக அவன் இழுக்க, அடுத்து கயல் பார்த்த பார்வையில் பொதிந்திருந்த அர்த்தம் அவள் சொல்லாமலேயே அவனுக்கு புரிந்தது.

இதற்குமுன் அவள் ஆசையாக செல்வோமென கேட்ட சந்தர்ப்பத்திலெல்லாம் அதை கண்டுக்கொள்ளாது மறுத்தவன், இப்போது அவனாக வந்து கேட்டால், ‘இத்தனைநாள் இல்லாத பாசம் இப்போது என் தந்தையை இழந்த பின் மட்டும் எங்கிருந்து வந்தது?’ என்றுதானே கேட்பாள்! அதேதான் அவள் பார்வையிலும் அவனுக்குத் தெரிந்தது.

ஒருவித குற்றவுணர்ச்சியில் தலைகுனிந்துக்கொண்டவன், “சோரி பாப்பா, ப்ளீஸ் என் கூட வா! உனக்கும் வெளியில போன கொஞ்சம் மனசுக்கு ரிலேக்ஸ்ஸா இருக்கும்” மீண்டும் அவளை திக்கித்திணறி அழைக்க, சிறிதுநேரம் அவனையே வெறித்த கயல், பின் என்ன உணர்ந்தாளோ? சரியென தலையசைக்க, “அப்போ, நான் வெளியில வெயிட் பண்றேன். சீக்கிரம் வா” பளிச்சென்ற புன்னகையோடு சொல்லிவிட்டு வெளியில் ஓடினான் அவன்.

அடுத்த சில நிமிடங்களில் கயலும் தயாராகி வர, ருபிதாவின் வயிற்றெரிச்சல் பார்வையெல்லாம் கண்டுக்கொள்ளாது தன் வண்டியில் தன்னவளை அழைத்துச் சென்றான் வீரஜ். சில நொடிகளில் பக்கத்திலிருந்த சினிமா தியேட்டரின் முன் அவன் வண்டி நிற்க, பாப்கார்ன் மட்டும் வாங்கிக்கொண்டு உள்ளே சென்று தங்களுக்கான இருக்கையில் அமர்ந்துக்கொண்டனர் இருவரும்.

திரைப்படமும் பெரிய திரையில் ஒளிபரப்பப்பட, கயலோ அதையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் என்றால், வீரஜின் பார்வையோ தன்னவள் மீதுதான் படிந்திருந்தது. ஆரம்பத்தில் பணத்திற்காக காதலிப்பதுபோல் நடித்தவன், இப்போதுதான் அவள் குணத்தை உணர்ந்து அவளை அவளுக்காக காதலிக்கிறான். ஆனால், இது கண்டிப்பாக குற்றவுணர்ச்சியால் உருவான காதல் அல்ல என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும்.

திரையை பார்த்திருந்த கயலுக்கோ மனதில் ஏதோ ஒரு உந்துதல். மனம் சொன்ன தன்னவனின் திசைக்கு அவள் திரும்ப, வீரஜோ பார்வை திரையின் முன் திருப்பிக்கொண்டான். அதை கயல் அறியாமலில்லை. சிறிதுநேரம் அவனைப் பார்த்தவள், “அன்னைக்கு நான் சொன்னப்போவே கூட்டிட்டு போயிருந்தா என் அப்பாவ நான் பார்த்திருப்பேனே வீர், இப்போ மட்டும் ஏன் நடிக்கிறீங்க? ஒருவேள, என்கிட்ட ஏதாச்சும் முடிக்க வேண்டிய தேவையிருக்கோ?” தன்னை மீறி அவள் கேட்டுவிட, இதயத்தை குத்திக் கிழிக்கும் வலி அவனுக்குள்.

இப்படியான வார்த்தைகளை அவளிடத்தில் அவன் கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவில்லை. அவன் விழிகளில் தெரிந்த வலியை அவள் உணர்ந்தாளோ, என்னவோ? அதற்குமேல் அங்கிருக்காது கயல் எழுந்து வெளியே சென்றுவிட, வேகமாக அவள் பின்னே ஓடியவன், “பாப்பா…” அழைத்தவாறு அவள் கையை பிடித்துக்கொண்டான்.

அவனை சிவந்த விழிகளோடு கயல் நோக்க, “பாப்பா…” மெல்ல அவன் அழைக்க, அவளுடைய இதழ்களோ விரக்தியாக புன்னகைத்துக்கொண்டன. அதிலேயே உள்ளுக்குள் முழுதாக இறந்துவிட்டான் அவன். அன்று கயல் தன்னவன் கண்டுக்கொள்ளாது அவளின் துன்பங்களை பார்த்தும் பார்க்காததுபோல் இருந்தபோது அனுபவித்த வலிகளை விட இப்போது அவளின் வார்த்தைகளில் வலியை அனுபவித்தான் வீரஜ்.

“பாப்பா என் கூட கொஞ்சம் வா” அவன் ஓரிடத்திற்கு அழைக்க, இறுகிய முகமாக மறுப்பாக கயல் தலையசைக்கவும், “ப்ளீஸ்…” என்று கெஞ்சியவன், அவள் கரத்தைப் பற்றி அழைத்துச் சென்றது என்னவோ அந்த ஊரிலிருந்த பெரிய மருத்துவமனைக்குதான்.

கயலுக்கு இங்கு வந்ததற்கான காரணம் கொஞ்சமும் புரியவில்லை. தன்னவன் அழைத்துச் செல்லும் திசைக்கு அவள் செல்ல, வீரஜோ ஒரு வாட் அறைக்கு முன் சென்று நின்றான். சரியாக, அங்கு கதிரையில் அமர்ந்திருந்த பெரியவரொருவர் அரவம் உணர்ந்து சட்டென்று நிமிர்ந்துப் பார்த்து, வீரஜை கண்டதும் “தம்பி…” என்றழைத்தவாறு அவனை வேகமாக வந்து அணைத்துக்கொள்ள, “எப்படி இருக்கீங்க ஐயா?” மென்மையாகக் கேட்டான் அவன்.

“எனக்கென்னப்பா, அன்னைக்கு நீ என் கூட இருக்கப்போய் இப்போ தெம்பா இருக்கேன்” என்ற பெரியவர், தன்னையும் வீரஜையும் மாறி மாறி புரியாது பார்த்தவாறு நின்றிருந்த கயலை கேள்வியாக நோக்க, அவர் பார்வையின் கேள்வி புரிந்து, “ஐயா, இவதான் என்னோட மனைவி, கயல்விழி” என்றான் வீரஜ் கயலை ரசித்துக்கொண்டே.

அவரின் இதழ்களில் அத்தனை புன்னகை. “எப்படிம்மா இருக்க? அன்னைக்கு உன் புருஷன் இல்லைன்னா இதோ இவ பொழச்சிருக்க மாட்டா, அவள கூட்டிட்டு வந்து சேர்த்தது மட்டுமில்லாம அவளுக்கு இரத்தமும் கொடுத்திருக்கான். ரொம்ப நல்ல பையன்ம்மா” என்ற பெரியவர், “நீங்க இருங்க, உங்களுக்கு குடிக்க ஏதாச்சும் எடுத்துட்டு வர்றேன்” என்றுவிட்டு நகர, கயலோ தன்னவனை விழிகளை விரித்து நோக்கினாள்.

அவளை விழிகள் கலங்க நோக்கியவன், வாட் அறையின் கண்ணாடி வழியே அறைக்குள் படுத்திருந்த யுவதியைக் காட்டி, “இந்த பொண்ணு ராமர் அனாதை இல்லத்துல குழந்தைகளை பார்த்துக்குறதுக்குன்னு இருக்குற பொண்ணு. அன்னைக்கு உன்கிட்ட இரண்டு மணி நேரத்துல வந்துடுவேன்னு என் ஃப்ரென்ட்ட பார்க்க போனேன். அப்போதான் ரோட்ல இவளுக்கு ஆக்சிடன்ட் ஆகிருச்சு. அன்னைக்கு ஆசிரமத்துல பார்த்த நியாபகம் இருக்கு. அதான், உடனே ஹாஸ்பிடல்ல சேர்த்தேன். கூடவே, இவள பார்த்துக்கவும் யாருமில்லை. ஐயாக்கிட்ட சொல்ல, செய்திய கேட்டதும் அவருக்கு நெஞ்சு வலி வந்துடுச்சு. நான்தான் எல்லாத்தையும் பார்த்துக்க வேண்டியதா போச்சு. இதையெல்லாம் முடிச்சிட்டு வரவே லேட்டாகிருச்சு கயல். அப்றம், அம்மா ஏன்ஜல காணோம்னு அழுந்ததும் என்னால வேற எதையும் யோசிக்க முடியல” என்றுவிட்டு, “நான் அன்னைக்கு அம்மா பேச்சை கேட்டு போகாம இருந்திருக்கலாம்” என்று சொல்லி முடிக்க, கயலோ அவனையே பார்த்திருந்தாள்.

‘தவறாக நினைத்துவிட்டோமோ?’ என்று அவளுக்குள் தோன்ற ஆரம்பிக்க, “நான் வேணும்னு எதுவும் பண்ணல கயல். அன்னைக்கு நானே எதிர்ப்பார்க்காம இதெல்லாம் நடந்துடுச்சு. என்னை மன்னிச்சிக்கோம்மா” மனதால் வருந்தி வீரஜ் மன்னிப்பு வேண்ட, எதுவும் பேசாது வேறு எங்கோ பார்வையை திருப்பிக்கொண்டவளுக்கு இப்போது கோபம் முழுக்க, அவனிடம் காதலென்ற பெயரில் ஏமாந்ததை நினைத்துதான்.

அமைதியாக அவளிருக்க, வீரஜிற்கு அவளின் அமைதியை தாங்கவே முடியவில்லை. இதற்கு முன்னெல்லாம் அவள் பேச அவன் கேட்டுக்கொண்டிருப்பான். இப்போது அவள் வாயை திறந்தால்தானே!

ஆழ்ந்த பெருமூச்சுவிட்டவன், “போகலாம் பாப்பா…” என்றுவிட்டு முன்னே செல்ல, அவளும் அமைதியாக அவன் பின்னே சென்றாள். ஆனால், அடுத்து வீட்டுக்குதான் என்ற அவளின் நினைப்பு வீரஜ் பூங்காவிற்கு முன் வண்டியை நிறுத்தியதும் மாறிவிட்டது.

“இங்க எதுக்கு?” அவள் புரியாமல் கேட்க, “அட வா பாப்பா…” புன்னகையோடு அவள் கரத்தைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றவன், மரத்தோடு ஒட்டியிருந்த நீண்ட கதிரையில் அமர்ந்து அவளையும் பக்கத்தில் அமரச் செய்தான்.

கயலுக்கும் ஏனோ அந்த சூழல், இதமான காற்று பிடித்தது போலும்! இத்தனைநாள் அறையிலேயே அப்பாவின் நினைவில் அடைந்துக் கிடந்தவளுக்கு இப்போது இது தேவைப்பட, மனதிலிருந்த மொத்த கவலைகளையும் விலக்கி ஊஞ்சலில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமிகளை ரசனையாகப் பார்த்துக்கொண்டிருந்தாள். வீரஜும் அவளை விழிகளில் காதலோடு நோக்கியவன், அவள் கரத்தோடு தன் கரத்தைச் சேர்க்க, அந்த ஸ்பரிசத்தில் பட்டென்று திரும்பியவள், அவன் பார்வையையும் அவன் கரத்தையும் மாறி மாறி பார்த்துவிட்டு வெடக்கென்று கோபமாக கரத்தை இழுத்துக்கொண்டாள்.

அந்த செய்கையில் வீரஜின் முகம் சோர்ந்துவிட, எதிரியை கூட நண்பனாக பார்க்கும் கயலின் இளகிய மனமோ அவனின் சோர்ந்த முகத்தை பார்த்ததும் தன்னைத்தானே கடிந்துக்கொண்டது. ஆனாலும், எதுவும் பேசாது அவனை கண்டுக்கொள்ளாததுபோல் அவள் பாவனை செய்ய, வீரஜே மீண்டும் அவளை நெருங்கினான்.

அவள் கன்னத்தை ஒரு விரலால் அழுத்திப் பார்த்து, “பாப்பா, உன்னை முதல் தடவை பார்க்கும்போது கொழுக்கு மொளுக்குன்னு தக்காளிப்பழம் மாதிரி கன்னம் இருந்துச்சுல்ல, இப்போ எங்க போச்சு?” உதட்டைப் பிதுக்கிக்கொண்டு அவன் கேட்க, “இதுக்கு பதில் உங்களுக்கே தெரியும்” அழுத்தமாகச் சொன்னவள் தன் கரத்திலிருந்த வடுக்களை அவன் முகத்துக்கு நேரே நீட்டினாள்.

அதைப் பார்த்ததும் அவன் நெஞ்சே அடைத்துவிட்டது. ‘அன்று, அவள் வலியில் சொல்லும் போது தான் கண்டுக்கொள்ளாது இருந்த காயங்களா இவை?’ என்றிருந்தது அவனுக்கு. அத்தனை பெரிய தீக்காயங்கள் அவள் இரு கரங்களிலும். கூடவே, அன்று ருபிதா அறைந்த அறையில் இதழ் பக்கத்தில் காயத்தின் வடு வேறு.

அத்தனையையும் பார்த்தவனின் விழிகளிலிருந்து விழிநீர் வெளியேறி அவள் கைகளில் பட்டுத் தெறிக்க, கயலுக்கு ஒருபக்கம் ஆச்சரியம்.

தன்னவனையே அவள் விழிகளை விரித்து நோக்க, “எனக்கு என்னை நினைச்சே வெறுப்பா இருக்கு பாப்பா, பணத்துக்காக ச்சீ… கண்டிப்பா இப்போ அப்படி ஒரு எண்ணமே எனக்கில்லைடா. என்னை மன்னிச்சிரும்மா! ப்ளீஸ், என்னை மன்னிச்சிருடா” மீண்டும் மீண்டும் அதையே சொல்லிக்கொண்டு அவள் கரங்களை பிடித்தவாறு கெஞ்சிய வீரஜின் அழுகையைப் பார்க்க அவளுக்காக பொய்யாகத் தெரியவில்லை.

கூடவே, அன்று அவளிடமிருந்து எடுத்து ஈடு வைத்த மோதிரத்தை பாக்கெட்டிலிருந்து எடுத்தவன், “இது அன்னைக்கு நான் உன்கிட்ட எடுத்தது. டோலர இப்போ என்னால எடுக்குற அளவுக்கு காசில்லை. கண்டிப்பா அதையும் உனக்கு மீட்டி தந்துடுறேன்” என்றுவிட்டு அவள் உள்ளங்கையில் அதை வைக்க, சிவந்து அழுது வீங்கிய முகத்தோடு தன்னெதிரே மன்னிப்பு யாசித்துக்கொண்டிருந்தவனை புதிதாகப் பார்த்தாள் கயல்.

மனதிலிருந்த கோபம் மெல்ல மெல்ல நீங்க, தனக்குத் தெரிந்த உண்மையை இப்போதே சொல்ல வேண்டுமென்று, “வீர்…” அழைத்தவாறு ஏதோ சொல்ல வந்தவள், வீரஜிற்கு வந்த அழைப்பில் வாயை மூடிக்கொண்டாள்.

அவனும் விழிகளை அழுந்தத் துடைத்து, தொண்டையை செறுமிவிட்டு, “ஹெலோ…” என்க, மறுமுனையிலிருந்த ருபிதா என்ன சொன்னாரோ, கயலை அழைத்துக்கொண்டு வேகமாக வீட்டை நோக்கி பறந்தான் வீரஜ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!