ராகம் 11
ராகம் 11
ராகம் 11
பிரம்மாண்டம்!!!
இரவு நேரத்தையும் பகல் போல் காட்டிய, செயற்கை விளக்குகளின் ஒளிச் சிதறலில் தெரிந்தது அந்த இடத்தின் பிரம்மாண்டம். தேவலோகமே தோற்றுவிடும் அளவு, கண்ணை கவரும் அலங்காரத்தில் தெரிந்தது அந்த இடத்தின் பிரம்மாண்டம். மணமக்களின் உடை அலங்காரத்தில் தெரிந்ததும் பிரம்மாண்டம். அங்கு கூடியிருந்த திரையுலக நட்சத்திரங்களில் தெரிந்ததும் பிரம்மாண்டம்.
எங்கும் பிரம்மாண்டம்!!! எதிலும் பிரம்மாண்டம்!!! பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு அந்த இடமே சிறந்த உதாரணம்.
பணத்தை தண்ணீராக செலவு செய்து ஏற்பாடு செய்திருந்த, அந்த இடத்தின் பிரம்மாண்டத்தை பார்த்தால் தெரியவில்லையா? இது பெரும் செல்வந்தர்கள் வீட்டு விசேஷம் என்று!!! செல்வந்தர்கள் வீட்டு விசேஷம் என்றால் சும்மாவா? பணம் புகுந்து விளையாடி இருந்தது.
ஆம்! இன்று இரு ஜோடிகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி. ஈஸ்வர் ப்ரொடெக்ஷனுக்கு சொந்தமான ஸ்டூடியோவில், மாபெரும் மேடையமைத்து வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
ஒரு திரைப்படம் எடுக்கவே அத்தனை பார்த்து, பார்த்து செய்யும் ஈஸ்வரமூர்த்தி, தன் ஒரே மகனின் விஷேசத்தை சும்மா விடுவாரா? ஒரு சிறு குறை கூட இருக்கக் கூடாது என, ஒவ்வொன்றையும் மிகவும் கவனம் எடுத்து செய்தார்.
அந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டை, இதற்காகவே இயங்கும் சிறந்த காண்ட்ராக்டரிடம் ஒப்படைத்து விட்டார். அதன் மேற் பார்வையை கிரிதரன், மனோகரிடம் விட்டுவிட்டார்.
காண்ட்ராக்டரிடம் பொறுப்பை கொடுத்து விட்டதால், அங்கு மற்றவர்களுக்கு செய்வதற்கு பெரிதாக வேலைகள் இல்லை. அதனால் அனைவரும் தங்களை அழகாக அலங்கரித்துக் கொண்டு அந்த இடத்தில் வலம் வந்தனர். எந்த பரபரப்புமின்றி அந்த நிமிடங்களை ரசித்து மகிழ்ந்தனர்.
நுழைவு வாயிலிருந்து மேடை வரை அனைத்து அலங்காரங்களும் கண்ணை பறித்தது. சிடி பிளேயரில் கசிந்த, காதை கிளிக்காத மெல்லிசை செவியை நிறைத்தது. அங்கிருந்தவர்களின் ஒற்றுமை மனதை நிறைத்தது.
நம் நட்சத்திரங்கள் மேடை ஏறினார்கள். பிரம்மன் அதிக மகிழ்வோடு இருக்கும்போது படைத்த அழகோவியமாக நாயகிகள் மேடையிலிருக்க, அவர்களது அழகுக்கு சற்றும் குறைவில்லாத கம்பீரத்தோடு மணமகன்கள் நின்றார்கள்.
அவளுக்கென்றே வடிவமைத்த அழகான கரும்பச்சை லேகங்காவில் மித்ராலினி (அம்மு) ஜொலித்தாள். அதே நிற சர்வானியில் கம்பீரமாக ருத்ரேஸ்வரன் மனதை வசீகரித்தான்.
மாடர்ன் உடைகள் அணிந்து பழக்கமில்லாத பிருந்தா லேகங்கா அணிய மறுத்து விட, அழகான சிகப்பு நிற டிசைனர் புடவையில், பியூட்டிஷியனின் கைவண்ணத்தில் தேவதையென அவள் மிளிர, எப்போதும் போல் மாயக்கண்ணனின் புன்னகையுடன், தன்னவளின் உடைக்கு பொருத்தமான உடையில் ரிஷிவர்மா மனதை மயக்கினான்.
இரு ஜோடிகளில், ஒரு ஜோடி கண்ணை பறித்தது என்றால், மற்றொரு ஜோடி மனதை வசீகரித்தது.
கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் வர ஆரம்பிக்க அந்த இடம் சுறுசுறுப்பானது. வந்திருந்த அனைவரின் கண்களும், பாரபட்சமின்றி மணமக்கள் கண்டு பொறாமை கொண்டது. யாரைப் பார்த்து பொறாமை கொள்கிறார்கள் என யூகிக்க முடியாதளவு, ஆண் பெண் பேதமின்றி அனைவர் கண்களிலும் பொறாமை இருந்தது.
அந்த இடமே திரை நட்சத்திரங்களின் வருகையால் ஒளிர்ந்தது. திரைத்துறையில் உள்ள பல முன்னணி நடிகர்களும், இயக்குனர்களும் வந்து சென்ற வண்ணமிருந்தனர். ஈஸ்வர் ப்ரொடக்ஷனில் பணியாற்ற தங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்காதா, என காத்திருந்தவர்களுக்கு இந்த நிகழ்வு ஒரு வரப் பிரசாதமே. அந்த வாய்ப்பை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி ஈஸ்வரமூர்த்தியை நெருங்க முயன்றார்கள்.
கழுவும் மீனில் நழுவும் மீனாக ஈஸ்வரமூர்த்தி அனைவருக்கும் போக்குக்காட்டிக் கொண்டிருந்தார். ‘இந்த வாய்ப்பை தவறவிட்டால் மீண்டும் இப்படி ஒரு சந்தர்ப்பம் அமையாது.’ என்று தெரிந்த பலரும் தங்கள் அறிமுகத்தை, ஈஸ்வரமூர்த்தியுடன் நிறுத்தாமல் ரிஷிவர்மா மித்ராலினியிடமும் தொடர்ந்தனர்.
எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் ரிஷிவர்மாவை நெருங்க முடிந்தவர்களால், ருத்ரேஸ்வரனை அவ்வளவு எளிதாக நெருங்க முடியவில்லை. அவனிடம் பேச முயன்று, தோற்று, முகம் தொங்கி போக விடை பெற்று கிளம்புவார்கள்.
★★★
வரவேற்புக்கு வந்த அனைத்து பெரிய தலைகளையும் கண்ட பிருந்தாவின் கண்கள் பெரிதாக விரிந்தது. தான் காண்பது கனவா? நினைவா? என்ற சந்தேகம் தோன்றியது. சந்தேகம் தீர அருகில் நின்ற தன்னவனின் கரத்தில் கிள்ளினாள்.
அவள் கிள்ளிய இடம் வலிக்க, தேய்த்துக் கொண்டே, “என்னாச்சு பிந்துமா, ஏன் என்னை கிள்ளி வச்ச?”
“ஐயோ ரிஷி! பெரிய பெரிய ஸ்டார்ஸ்லாம் வராங்க. இது கனவா நிஜமான்னு எனக்கு சந்தேகம் வந்துருச்சு. அதுதான் உங்களை கிள்ளி டெஸ்ட் பண்ணினேன்.” என்றாள் அப்பாவியாக.
அவள் கண்களும் முகமும் காட்டிய வர்ணஜாலத்தை ரசித்துக்கொண்டே, “அதுக்கு உன்னோட கையை கிள்ளி டெஸ்ட் பண்ணனும். என்னோட கையை இல்லை. மனுஷனுக்கு வலிக்குதுல.” பொய்யாக முறைத்தான்.
அவன் சொன்ன பிறகே தான் செய்த காரியம் மண்டையில் உறைக்க, நாக்கை கடித்தவள், “அச்சச்சோ சாரிங்க. சந்தோஷத்தில் அப்படி பண்ணிட்டேன். ரொம்ப வலிக்குதா?” என கேட்டுக் கொண்டே அவள் கிள்ளிய இடத்தை தேய்த்து விட்டாள்.
“இப்படி சமாதானப்படுத்துறதா இருந்தால் எங்க வேணாலும் கிள்ளிக்கோ.” என கண் சிமிட்டினான்.
“எங்க வச்சு என்ன பேசுறீங்க?” என அழகாக முகம் சிவந்தாள்.
“இங்கென்றதால பேசுறதோட நிறுத்திட்டேன். ரூம்லயா இருந்தா…?” என வாக்கியத்தை சொல்லால் முடிக்காமல், விழுங்கும் பார்வையால் உணர்த்தினான்.
“நீங்க ரொம்ப மோசம்.” என அவன் தோள்களில் தன் தளிர்க்கரம் கொண்டு அடித்தாள்.
அவள் கரத்தை தடுத்து பிடித்தவன், “இந்த விஷயத்தில் எல்லா ஆம்பளைங்கலும், பொண்டாட்டி கிட்ட மோசமா தான் இருப்பாங்க” என்றான் தாப குரலில்.
“ச்சீ போங்க.” பெண் சிணுங்கினாள்.
அவள் இடையில் கையிட்டு தன்னிடம் நெருக்கியவன், “இன்னைக்கு நீ செமையா இருக்க. ஏற்கனவே நான் கஷ்டப்பட்டு கண்ட்ரோல் பண்ணிக்கிட்டு இருக்கேன். இப்படி சிணுங்காத, என் கண்ட்ரோல் மிஸாகிடும். அப்புறம் மேடைன்னு கூட பார்க்க மாட்டேன். ஏடாகூடமா ஏதாவது செஞ்சுடுவேன். அதுக்கு நான் பொறுப்பில்லை. என்னை தப்பு சொல்ல கூடாது.” என்றான் ரகசிய குரலில்.
முதலில் அவன் சொல்வது புரியாமல் அவன் முகத்தை பார்த்தாள். அவன் முத்தமிடுவது போல் உதடுகள் குவித்துக் காட்ட, அந்த வாக்கியத்தின் அர்த்தம் புரிந்தது. “அய்யய்யோ தள்ளிப் போங்க.” என அவனிடமிருந்து பதறி விலகி நின்றாள்.
“இப்படி பத்தடி கேப் விட்டு நின்னா, இந்த கேப்புக்குள்ள வேற யாராவது வந்துட போறாங்க.” என்றான் கள்ள புன்னகையுடன்.
“ம் வருவாங்க! வருவாங்க! ரொம்ப ஆசைதான்.” என நொடித்துக் கொண்டே அவன் அருகில் நின்றாள்.
“அப்படி வந்தா என்ன பண்ணுவ பிந்துமா?” அப்பாவியாக.
“அதை அப்பக் காட்டுறேன்.” என முறைத்தாள்.
‘இனி எனக்கு எப்பவும் நீ மட்டும் தான் பிந்து.’ என மனதில் நினைத்தவன், வந்தவருடன் புகைப்படத்திற்கு நின்றான்.
★★★
முகமெங்கும் புன்னகையை சுமந்திருந்த அம்முவின் முகம் தீடீரென சிரிப்பை தொலைத்தது. பெண்ணின் முகம் வெளிறி போனது. அவளது அனைத்து துன்பத்திலும் உடனிருந்த, தன் நண்பனின் துணையை இப்போதும் அவளது மனம் நாடியது. அவளது கரங்கள் அவளுக்கு வலது புறம் நின்ற ரிஷிவர்மாவின் கையை இறுகப்பற்றிக் கொண்டது. அவன் பின்னல் தன்னை மறைத்துக்கொள்ள முயன்றாள்.
அவள் கரத்திலிருந்த நடுக்கத்தை உணர்ந்த ரிஷி, கேள்வியாக அவளது முகம் கண்டான். அவள் பார்வை ஒரு இடத்தில் நிலை குத்தி நிற்க, முகம் உணர்வுகளை தொலைத்திருந்தது. பெண்ணின் பார்வை சென்ற திசையில் ஆண் அவனின் பார்வையும் பயணித்து அதன் இலக்கை அடைந்தது.
வந்த நபரை கண்டு, ‘வேண்டாத சில காட்சிகள் மனதில் தோன்ற’ அவனது முகமும் இறுகியது. கண்களை மூடி தன் கோபத்தை கட்டுப்படுத்தியவன், அவள் செவியோரம் குனிந்து அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில், “அது செத்துப் போன பாம்பு மிரு. அதைப் பார்த்து பயப்படத் தேவையில்லை.”
“???” கலக்கம் சுமந்த கண்களுடன் ரிஷியின் கண்களை சந்தித்தாள்.
“இத்தனை நாள் இருந்த உன் தைரியம் இப்போ எங்க போச்சு மிரு? இப்ப மட்டுமில்ல எப்பவும் உன் தைரியத்தை விட்டுடாத. இப்ப நீ ருத்ராவோட மனைவி. அவனை மீறி யாரும் உன்னை நெருங்க முடியாது.” என அவளது பயத்தை போக்க முயன்றான்.
அவளும் சற்று தெளிந்த முகத்துடன், தனக்கு இடது பக்கம் நின்ற ருத்ரேஸ்வரனிடம் நெருங்கி நின்றாள். அவள் நெருக்கத்தை உணர்ந்த ருத்ரா, அவளது கலக்கம் புரியாமலே, அவள் தோள் மீது கையிட்டு தன்னருகில் இழுத்துக் கொண்டான். அந்த அணைப்பு அவளுக்கு தைரியம் அளித்தது மறுக்க முடியாத உண்மை. ரிஷிவர்மாவின் கவனம் பிருந்தாவிடம் சென்றது.
ரிஷிவர்மா செத்துப்போன பாம்பு என சொன்னது உண்மையில் செத்துப் போய்விட்டதா?
இல்லை. நிச்சயமாக இல்லை. அது காலை சுத்திய பாம்பு. அதிலும் ரிஷிவர்மாவால் பலமாக அடி வாங்கிய அடிபட்ட நாகம், நிச்சயமாக கொத்தாமல் விடாது.
தன்னை வஞ்சித்தவர்களை, வஞ்சம் வைத்து கடிக்கும் ராஜ நாகம் அது, என தெரியாமல் போனது ரிஷிவர்மாவின் கெட்ட நேரமே.
ரிஷிவர்மாவும் மித்ராலினியும் பேசிக்கொண்டது சில நொடிகள் என்றாலும், சில கண்களில் அந்த நெருக்கம் பட்டது. இது அனைவருக்கும் நல்லவிதமாக தெரிய வேண்டிய அவசியம் இல்லையே? அதேபோல் சில வேண்டாத கண்களுக்கும் இது தவறாகவே பட்டது. ஏற்கனவே இருந்த வஞ்சத்துடன் இதுவும் இணைந்து கொண்டது. அவர்களது நெருக்கத்தை அதன் கைப்பேசியில் புகைப்படமாக சேமித்து கொண்டது. இனி வரும் நாட்களில், இந்த புகைப்படம் ஏற்படுத்த போகும் பூகம்பத்தை நினைத்து, மனதுக்குள் சிரித்து கொண்டது. அந்த நாகப் பாம்பு படம் அடுத்து ஆட தயாரானது.
★★★
ருத்ரேஷ்வரனின் தோள் வளைவில் நின்ற மித்ராவின் உடலில் சிறு நடுக்கம் தோன்றியது. அதை உணர்ந்த ருத்ராவின் கவனம் அவளிடம் செல்லும் முன், மணமக்களை வாழ்த்த வரிசையில் காத்திருந்த அவன் அவர்களை நெருங்கி இருந்தான்.
ஹீரோ தோற்றத்தில் இருந்தவன் வேறு யாருமில்லை, மித்ராலினி ரிஷிவர்மா இணைந்து நடித்த இரண்டாவது மற்றும் நான்காவது படத்தில் வில்லனாக நடித்த அஜய், அஜய் கண்ணா. தற்போது முன்னணியில் இருக்கும் வில்லன் நடிகன். அந்த நான்காவது படம் தான், சிறந்த நடிகர் நடிகைக்கான விருதை, ரிஷிவர்மா மித்ராலினிக்கு வாங்கி கொடுத்தது.
எப்போதும் அவனுக்கும், இந்த நண்பர்களுக்கும் ஆகவே ஆகாது. காரணத்தை சொல்லவும் வேண்டுமா?
அஜய்க்கு மித்ராவை ரொம்ப பிடிக்கும். அவளிடம் நெருங்கி பழக அவனுக்கு மிகுந்த ஆசை. ஆனால் அஜய், மித்ராவை நெருங்க தடையாக நின்றான் ரிஷிவர்மா. அதனால் எப்போதும் இருவருக்கும் முட்டிக் கொள்ளும்.
படத்தின் ஷூட்டிங், பட வெளியீடு நிகழ்ச்சி, செய்தியாளர்கள் பேட்டி, போன்ற பொதுவான நிகழ்வுகளில் மட்டுமே மித்ராவை அவனால் நெருங்க முடியும். அந்த வாய்ப்புகளை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் அஜய், அவளிடம் அதிக உரிமையை எடுத்துக்கொள்வான். அது பிடிக்காத ரிஷிவர்மா, எப்போதும் அவனை எச்சரித்துக் கொண்டும், முறைத்துக் கொண்டும் இருப்பான்.
அவன் பார்க்க கதாநாயகன் போல் இருந்தாலும், அவன் எடுத்து நடிக்கும் கதாபாத்திரங்கள் அனைத்தும் பக்கா வில்லன். அதனால் அவனைப் பார்த்தாலே மனதில் ஒரு பயம் தோன்றிவிடும். இன்னும் திருமணமாகாததால் தனியாகவே வந்திருந்தான்.
ருத்ராவிடம் கை கொடுத்து வாழ்த்தியவன், ரிஷிவர்மாவை அணைத்து, “என்ன ரிஷி! ரசகுல்லா மாதிரி பொண்ணை இப்படி கோட்டை விட்டுட்ட.” என சீண்டினான்.
“தேவையில்லாம பேசாத அஜய்.” என ரிஷி பல்லை கடித்தான்.
“எனக்குத் தேவைப்பட்டதால் பேசுறேன் ரிஷி. நீ விலகி போயிருந்தால், அவளை நான் கரெக்ட் பண்ணியிருப்பேன். இப்ப பார் உனக்கும் இல்லாம, எனக்கும் இல்லாம போச்சு.” என பரிதாபமாக உச்சு கொட்டினான்.
“வேண்டாம் அஜய்”
“எனக்கு வேணும் ரிஷி.” என்றான் அஜய் கூலாக. ரிஷியின் முகம் கடுகடுத்தது. ரிஷியை சீண்டிப் பார்ப்பதில் அஜய்க்கு அலாதி பிரியம்.
அதற்குள் புகைப்படக்காரர் புகைப்படத்திற்காக நிற்க சொல்ல, ரிஷிவர்மா மித்ராலினியின் நடுவில் நின்றவன், இருவர் தோள் மீதும் கையிட்டு அணைத்தவாரு போஸ் கொடுத்தான்.
அதை கண்டு ரிஷி அவனை முறைக்க, “ஒரு நிமிஷம்” என புகைப்படக்காரரிடம் சொல்லிய அஜய், ரிஷியிடம் திரும்பி, “இது என்ன நமக்கு புதுசா? ரொம்ப முறைக்கிற. உன்னோட ஆள் அந்த பக்கம் இருக்கு. இப்ப சிரிச்ச மாதிரி போட்டோக்கு போஸ் கொடு பார்க்கலாம்.” என மீண்டும் சீண்டினான். வேறு வழி இல்லாமல், ரிஷி முகத்தை சிரித்த மாதிரி வைத்துக் கொண்டான்.
புகைப்படம் எடுத்த பிறகு, “யூ லுக் சோ கார்ஜியஸ் இன் திஸ் டிரஸ், டார்லிங்.” என மித்ராவிடம் சொல்லி, சிறிதாக அணைத்து விடுவித்தான். ஏற்கனவே நடுங்கிக் கொண்டிருந்த பெண்ணுக்கு இப்போது உதறலெடுத்தது. அவளை சில நொடி கூர்ந்து பார்த்தவன் சிறு சிரிப்பை வழங்கிவிட்டு நகர்ந்தான்.
‘அப்பாடி போயிட்டான்.’ என ரிஷி மூச்சு விடும் முன். “ஏ பியூட்டி.” என பிருந்தாவை நெருங்கினான் அஜய் கண்ணா. எங்கு அணைத்து விடுவானோ என பயந்த பிருந்தா, ரிஷியின் பின் மறைந்தாள். ரிஷி அவளை அணைத்துக் கொண்டான்.
அஜய் கண்ணாவின் கண்கள் ரிஷிவர்மாவின் கண்களை நேற்கொண்டு சந்தித்தது. ‘இவள் தான் உனக்கானவள். இவளுடன் உன் பழக்கத்தை நிறுத்திக் கொள். தேவையில்லாத விஷயத்தில் தலையிடாதே.’ என எச்சரித்தது போல் ஒரு பார்வையை வீசி சென்றான்.
★★★
அஜய் கண்ணா மேடையிலிருந்து இறங்கவும், அடுத்ததாக மேடை ஏறினார்கள் அந்த தம்பதியர், இரண்டு வயது குழந்தையுடன்.
அவன் விஜேஷ். திரையுலகில் ரிஷிவர்மாவுக்கு அடுத்த நிலையில் இருக்கும் கதாநாயகன். மித்ராலினி ரிஷிவர்மா இணைந்து நடித்த முதல் படத்தில், இரண்டாவது நாயகனாக நடித்தவன். அந்தப் படத்தின் ப்ரொடியூசர் விஜேஷின் தந்தை.
இப்போது திரையுலகில் நல்ல இடத்தில் இருப்பவன். அனைவரின் மனம் கவர்ந்த நாயகன். மித்ராலினியுடன் நடித்த படம் முடியும் முன், தன் கிராமத்து அத்தை மகளை திருமணம் முடித்தவன். இப்போது அவர்களுக்கு இரண்டு வயது ஆண் குழந்தை உள்ளது.
முகமெல்லாம் புன்னகையுடன் அவர்களை வாழ்த்தியவன் விடை பெற்று சென்றான்.
இவர்கள் வாழ்க்கையை திசை திருப்ப, மனதில் வஞ்சம் வைத்து காத்திருந்த அந்த ராஜ நாகம், தன் கொடிய விஷத்தை யார் மீது, எப்போது கக்கலாம் என காத்திருந்தது.
தன்னவளிடம் நெருங்கி நிற்கும், தன் விரோதியின் மீது அதன் பார்வை பதிந்தது. தன்னவளுடன் இணைய முடியாமல் செய்த அவன் மீது கோபம் கொழுந்து விட்டெறிந்தது.
‘அவள் என்னவள். எனக்கே எனக்கானவள். நிச்சயம் அவளை உன்னிடம் இருந்து பிரிப்பேன். என்னோட ஆசையை கெடுத்த உன்னை சும்மா விடமாட்டேன். உன்னோட திருமண வாழ்க்கையை முடித்து வைப்பேன். என்னவளை கவர்ந்து செல்வேன். எனக்கே எனக்கானவளா அவளை மாற்றிக் கொள்வேன். இதற்கு நடுவில் யார் வந்தாலும் அவர்களது ஆயுள் அன்றுடன் முடிந்தது.’ என நினைத்துக் கொண்டவனின் பார்வை நால்வரையும் கண்டு பிருந்தாவிடம் தேங்கியது.
அந்த அழகு முகத்தில் வஞ்சப்புன்னகை தோன்றியது.
ராகம் இசைக்கும்.