லவ் ஆர் ஹேட் 01

ei4L7EF68494-b2f6dfbe

லவ் ஆர் ஹேட் 01

காடு, அருவி, குளம் என்று டோரா சொல்வது போல் இருக்கும் இயற்கை வளங்கள் நிறைந்த இலங்கை நாட்டின் மாத்தளை மாவட்டத்திலுள்ள அந்த வளர்ச்சியடைந்து வரும் கிராமத்தில் அந்த ஒரு வீடே அவனின் கத்தலில் அல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது.

“ஏய் மரியாதையா என் முன்னாடி வந்துருங்க. நானே தேடி கண்டுபிடிச்சேன்னு வைங்க, அவ்வளவு தான்.” என்று அந்த பெரிய வீட்டில் ஒவ்வொரு அறையாக அந்த மூன்று பேரை தீவிரமாக வலைப் போட்டு தேடியவாறு நடந்தான் சந்திரன்.

அவன் முகம் முழுவதும் சிவப்பு சாயம் பூசப்பட்டது போல் கறை அப்பியிருக்க, கடுங்கோபத்தில் பற்களை கடித்தவாறு தேடியவனை சுவருக்கு பின்னால் மறைந்திருந்து பார்த்தவாறு நின்றிருந்தான் அவன். சந்திரனின் இரட்டை சகோதரன் இந்திரன். இருவருக்கும் உருவத்தில் வித்தியாசமே இல்லை. ஆனால், குணத்தில் மலையளவு வித்தியாசம்.

“ஆத்தாடி ரோஸ்மில்க்! முரட்டு பீஸு நம்மள தான் வலைப் போட்டு தேடிக்கிட்டு இருக்கு. கையில கிடைச்சோம் சட்னிதான்.”  என்று தன் பக்கத்தில் தன்னை போலவே சந்திரனை எட்டி எட்டி பார்த்தவாறு இருந்த தன் அத்தை மகளிடம் அவன் சொல்ல, “ரோஸ்மில்க்காமே ரோஸ்மில்க்கு… தொலைச்சிருவேன் பார்த்துக்க! முட்டாப்பயலே, ரித்வி எங்க டா?” என்று கேட்டவாறு கண்களை சுழலவிட்டு அந்த ஒருத்தியை தேடினாள் வைஷ்ணவி.

சரியாக, “திருட்டுக் கழுதைகளா! உங்கள…” என்று பின்னால் கேட்ட சந்திரனின் குரலில் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்த வைஷ்ணவி, “ஆத்தீ! இவன் எப்போ பின்னாடி வந்தான்? ஓடிரு டா கைப்புள்ள!” என்று அலறியவாறு ஓட, “அடிப்பாவி! விட்டுட்டு ஓடுறியே… துரோகி!” என்று கத்தியவாறு அவள் பின்னாலே ஓடினான் இந்திரன்.

“இன்னைக்கு பஞ்சாயத்துல என் மானத்தையே வாங்கிடீங்கல்ல… என் கையால உங்க மூஞ்சுல இரண்டு அப்பு அப்பினா தான் என் ஆத்திரம் அடங்கும். எங்கலே அந்த சோடாபுட்டி?” என்று கத்தியவாறு மெர்சல் பட விஜய் பாணியில் பாய்ந்து வேட்டியை தூக்கிக் கட்டிக்கொண்டு சந்திரன் அவர்களை துரத்த,

அதேநேரம் முன்னால் ஓடிக் கொண்டிருந்த இருவரின் முன்னால் வந்த உருவம், தன்னை மோதுவது போல் வந்து நின்றவர்களை பார்த்து, “முருகா!” என்று கத்தியவாறு பயத்தில் கண்களை மூடிக்கொண்டது.

அவளை எழுப்புவது போல், “அடியேய் ரித்வி! நடு வீட்டுல கண்ணை மூடி நின்னுக்கிட்டு கனவு கண்டுக்கிட்டு இருக்கியா என்ன? தப்பிச்சி ஓடு டி!” என்ற வைஷ்ணவியின் குரல் வர, தன் மான்விழிகளை பட்டென திறந்தாள் ரித்விகா.

கண்களை திறந்தவளின் முன் ஒற்றை புருவத்தை உயர்த்திய வண்ணம் மார்புக்கு குறுக்கே கைகளை கட்டியவாறு முறைத்துக்கொண்டு சந்திரன் நின்றிருக்க, அவன் பார்வையில் ஜெர்க்கானவள், “அய்யோ சந்து! நான் இல்லை.” என்று ஓடப்போக, அவளை எட்டிப் பிடித்தவன், “ஏய் சோடாபுட்டி! என்கிட்டயே உன் தில்லுமுல்லு தனத்தை காமிக்கிறியா? ஃப்ராடு! ஃப்ராடு!” என்று திட்டியவாறு அவள் கத்த கத்த அவளின் காதுமடலை பிடித்து திருகிவிட்டான்.

ஆவேசமாக அவனின் கையை தட்டிவிட்டவள் தனது பெரிய மூக்குக்கண்ணாடியை சரிசெய்துவிட்டு கால் பெருவிரலால் எம்பி அவனின் முகத்துக்கு நேராக முகத்தை கொண்டு வந்து உதட்டை சுழித்தவாறு, “அடேய் சந்து நெட்டைப்பையன், சோடாபுட்டின்னு சொன்னா அப்றம் நான் உன்னை…” என்று இழுக்க, “என்ன டி பண்ணுவ சோடாபுட்டி?” என்று அந்த சோடாபுட்டியில் அழுத்தம் கொடுத்து தெனாவெட்டாக கேட்டான் சந்திரன்.

“ஆஹான்!” என்று கேலியாக கேட்டவாறு பின்னால் ஒற்றை கையில் மறைத்து வைத்திருந்த கோலமாவை அவனின் முகத்தில் அப்பியவள், மின்னல் வேகத்தில் தாவணி பாவாடையை தூக்கிப் பிடித்தவாறு ஓட, “அடிங்க…” என்று அவளை துரத்த ஆரம்பித்தான் அவன்.

இங்கு இந்திரனோ, “உடன்பிறப்பே! அவள விடாதீஹ… வெட்டி கொல்லுஹ…” என்று மேலும் உசுப்பேற்றி விட, “துரோகி!” என்று அவனை உக்கிரமாக முறைத்த ரித்வியின் கண்களுக்கு தெய்வமாக வந்து நின்றான் அவன். “தெய்வமே… தெய்வமே…” என்று தலைமேல் கையெடுத்து கும்பிட்டு பாடியவாறு அவன் பின்னால் ஒழிந்தவள், அந்த ஆடவனின் பின்னாலிருந்து சந்திரனை எட்டிப் பார்த்தாள்.

“அதிபா, அந்த கல்ப்ரிட்ட என்கிட்ட ஒப்படைச்சிரு! இன்னைக்கு பஞ்சாயத்துல அவ பண்ண வேலையால என் மானமே போச்சு!” என்று சந்திரன் கத்த, பின்னால் கையைவிட்டு தன் பக்கத்தில் ரித்வியை இழுத்தெடுத்த அதிபன், இடுப்பில் கைகுற்றி முறைத்தவாறு, “என்ன வில்லத்தனம் பண்ண?” என்று கேட்டான்.

தன் மூக்குக்கண்ணாடியை சரி செய்தவள், “நான் ஒன்னும் பண்ணலயே… எனக்கு எதுவும் தெரியாதே…” என்று அப்பாவி போல் கைகளை விரித்துச் சொல்ல, “அய்யோ! அய்யோ! அய்யோ! பொய்யு பொய்யு! வாய திறந்தாலே பொய்யு!” என்று எகிறிவிட்டான் சந்திரன்.

அதிபனோ அங்கு ஓரமாக நின்றிருந்த மற்ற இருவரையும் நோக்க, வைஷ்ணவியோ திருதிருவென விழித்தவாறு நின்றாள் என்றால், பாக்கெட்டுக்குள் கையை விட்டு விசிலடித்தவாறு அங்குமிங்கும் வேடிக்கை பார்ப்பது போல் பாவனை செய்தவாறு நின்றிருந்தான் இந்திரன்.

அவனை பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்த அதிபன், “சுமார் ஆறுமாதங்களுக்கு முன்னால்…” என்று ஆரம்பிக்க, அதிர்ந்து அதிபனை பார்த்த இந்திரன், ‘ஆத்தாடி ஆத்தா! இவன் நம்மள விட மாட்டான் போலயே…’ என்று மானசீகமாக புலம்பியவாறு, “நானே சொல்றேன். சொல்லித் தொலையிறேன்.” என்று கடுப்பாக சொன்னான்.

அதிபனோ அடக்கப்பட்ட சிரிப்புடன் அவனை பார்க்க, ‘சுமார் ஆறு மாதமா? கொஞ்சநாளா இவனும் இதையே சொல்லி மிரட்டுறதும், இவன் என்னடான்னா அவன் அப்படி மிரட்டினதோட பம்முறதும்… என்ன தான் நடக்குது?’ என்ற ரீதியில் அதிபனையும், இந்திரனையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தனர் மற்ற மூவரும்.

“இங்க பாரு அதிபா! ப்ளேன் எக்ஸ்கியூட்டர் நான் தான். ஆனா, ப்ளேன்னர் அவ தான்.” என்றவன், “அதோ இருக்காரே சந்திரன்… அவருக்கு பெரிய அரிச்சந்திரன்னு நினைப்பு! உண்மைய தான் பேசுவாரு. நேத்து மாமா கேக்கவும் அன்னைக்கு நாம படத்துக்கு போனதை போட்டுக் கொடுத்துட்டான் பாவி! அதான்…” என்று அடுத்து பேச வர, அவனை இடைவெட்டினான் சந்திரன்.

“இதுலயிருந்து நான் சொல்றேன். அதுக்காக இந்த நாயுங்க என்னை பழிவாங்கிருச்சி அதிபா! இன்னைக்கு பஞ்சாயத்துல இருக்கும் போது ஒரு பாக்ஸ் வர, நானும் என்ன? ஏது?ன்னு தெரியாம அதை திறக்க, அதுக்குள்ள என்ன கருமமோ? பாக்ஸ் வெடிச்சி முகம் பூரா ஆகி, மொத்த கூட்டமும் என்னை பார்த்து குபீர் சிரிப்பு தான்.” என்று பல்லைக்கடித்துக்கொண்டு அவன் சொல்லிமுடிக்க, நெற்றியை நீவி விட்டவாறு முட்டிக்கொண்டு வந்த சிரிப்பை அடக்கினான் அதிபன்.

சரியாக அதேசமயம், “இங்க என்ன சத்தம்?” என்ற குரலில் ஐவருமே திரும்பிப் பார்க்க, ஐவரையும் மாறி மாறி பார்த்தவாறு நின்றிருந்தார் மஹாதேவன். அவரின் பக்கத்தில் அவரின் தம்பிய சகாதேவன் மற்றும் சகாதேவனின் மனைவி ஆண்டாள் நின்றிருக்க, அங்கிருந்த ரித்வியை எரிச்சலாக பார்த்தவாறு நின்றிருந்தார் மஹாதேவனின் தங்கை சகுந்தலா.

மஹாதேவன் மற்றும் அவரின் மனைவி சாருமதியின் மூத்த மகனே நம் நாயகன். இரண்டாவது பிறந்தவனே அதிபன். சகாதேவன் மற்றும் ஆண்டாளின் இரட்டைப் புதல்வர்கள் தான் சந்திரனும், இந்திரனும். சகுந்தலாவின் புதல்வியே வைஷ்ணவி. அவரின் கணவர் பிரபாகரன் லண்டனின் வேலைப் பார்க்க, இவரோ தன் அண்ணன் வீட்டிலே தன் மகளுடன் இருந்து விட்டார்.

பெரியவர்களை பார்த்த இளசுகள், “ஹிஹிஹி…” என்று அசடு வழிந்தவாறு நிற்க, சந்திரன் இருந்த கோலத்தை ஏற இறங்க பார்த்த மஹாதேவன், “என்ன டா இது?” என்று அதிர்ந்து போய் கேட்க, மற்ற நால்வரையும் முறைத்துப் பார்த்தவன், “க்கும்! அதுவா இன்னைக்கு ஹோலி பண்டிகையாமே… அதான்.” என்று சலித்தவாறு சொன்னான்.

“எத?” என்று சகாதேவன் புரியாது கேட்க, ஐவரையும் மாறி மாறி சந்தேகமாக பார்த்த மஹாதேவன், அங்கு திருதிருவென விழித்தவாறு நின்றிருந்த ரித்வியிடம், “ரித்விமா, என் கூட வா!” என்றுவிட்டு அறையை நோக்கி செல்ல, மற்ற நால்வரும் அவளை அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்க்க, நாக்கை துருத்தி பழிப்பு காட்டியவள் அறையை நோக்கி ஓடினாள்.

அறையில் மஹாதேவனோ சுவரில் மாலையிடப்பட்டிருந்த தன் மனைவியின் புகைப்படத்தை பார்த்தவாறு நின்றிருக்க, மெல்ல அடியெடுத்து சென்றவள், “சோரி மாமா… சும்மா விளையாட்டுக்கு தான்.” என்று தயக்கமாக சொல்ல, “பத்தாயிரத்து பத்து…” என்று ஒரு கணக்கை சொன்னவாறு திரும்பினார் அவர்.

அவளோ புரியாது பார்க்க, அவளின் பாவனையில் சிரித்தவர், “இந்த வசனத்தை அத்தனை தடவை சொல்லியிருக்க நீ…” என்று கேலியாக சொல்ல, அவளோ, “மாமா…” என்று சிணுங்கியவாறு பொய் கோபம் கொண்டாள்.

மென்மையாக சிரித்தவாறு அவளின் தலையை வருடியவர், “ரித்விமா, மாமா உனக்காக ஒரு வரன் பார்த்திருக்கேன். உனக்கு சம்மதம்னா…” என்று ஒன்றை மனதில் வைத்து கேட்க, அவளோ அவரை அதிர்ந்து பார்த்தாள்.

“அது வந்து மாமா… அது எனக்கு இப்போ கல்யாணம் வேணாம்.” என்று அவள் தயக்கமாக சொல்ல, “சரி ம்மா, எனக்கு தெரிஞ்ச பையன் ஒருத்தன் கொழும்புல வேலை பார்க்குறான். அவன் வேலை பார்க்குற கம்பனியில நீ படிச்ச கம்ப்யூட்டர் படிப்புக்கு வேலை இருக்குன்னு சொல்றான். படிப்பு முடிஞ்சி ஒரு வருஷம் ஆகிருச்சி. என்ன பண்றதா உத்தேசம்?” என்று அவளை ஆழ்ந்து பார்த்தவாறு கேட்டார் மஹாதேவன்.

“மாமா, எனக்கு வேலைக்கு போகவே இஷ்டம் இல்லை. நான் இப்படியே வீட்ல ஜாலியா இருக்கேன். ப்ளீஸ் வேலைக்கெல்லாம் என்னை போக சொல்லாதீங்க!” என்று அவள் பாவமாக முகத்தை வைத்துச் சொல்ல, அதில் சிரித்தவர் சட்டென அமைதியாகி, “உன் அம்மா அப்பா ஆசைப்பட்ட படி உனக்கு ஒரு நல்ல வாழ்க்கைய கடவுள் அமைச்சிக் கொடுக்கனும். சீக்கிரமே எல்லாம் நல்லதா நடக்கும்.” என்றவரின் பார்வை ஏனோ அங்கு ஒருபக்க சுவர் முழுக்க மாட்டியிருந்த அந்த ஒருவனின் சிறுவயது புகைப்படங்களில் பதிந்தது.

அவரின் பார்வை மட்டுமல்ல, ரித்வியின் பார்வையும் தான். அந்த புகைப்படத்தில் இருப்பவனை பார்த்தவளது உடலில் ஒரு சிலிர்ப்பு!

அந்த குழந்தை முகத்தை பார்த்தவாறே, “இன்னும் உங்க மேல கோபத்துல தான் இருக்காரா?” என்று அவள் கேட்க, அவள் எதை கேட்கிறாள் என்பதை புரிந்துக் கொண்டவர், “ச்சே! ச்சே! அதெல்லாம் போயிருக்கும். அவன் அப்படியே என் அப்பா மாதிரி. ரொம்ப அழுத்தக்காரன். ஆனா, நேர்ல பார்த்ததும் உருகிடுவான். பத்து வருஷத்துக்கு அப்றம் கூடிய சீக்கிரமே அவன பார்க்க போறேன்.” என்று அத்தனை சந்தோஷத்துடன் சொன்னார்.

அவரை சட்டென ஏறிட்டு பார்த்த ரித்வி, “கூடிய சீக்கிரமா? அவர் வர போறாரா?” என்று ஒருவித ஆர்வத்துடன் கேட்க, “ஆமா டா, என் மச்சான் அதான் வைஷூவோட அப்பா  பிரபாகரன் சொல்லி தான் எனக்கு தெரியும். கிட்டதட்ட எல்லா ஏற்பாடும் பண்ணிட்டான். ஆரம்பத்துல என் மேல இருந்த கோபத்துல அவன் ஃபோட்டோ கூட அனுப்ப மாட்டான், பேச மாட்டான். இந்து பையன் தான் ஏதோ இன்ஸ்டாக்ராம் பொட்டியாமே அதுல என் பையன் ஃபோட்டோவ காமிச்சான். நீ கூட பார்த்தல்ல? ராசா கணக்கா இருக்கான்.” என்று தன் மகனை நினைத்து கர்வமாக சொன்னார் அவர்.

அவளுக்கோ அவன் வருவதாக சொன்னது மட்டுமே மீண்டும் மீண்டும் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது. சில மாதங்களுக்கு முன்னால் தான் இந்திரன் இன்ஸ்டக்ராமில் நம் நாயகன் பதிவு செய்திருந்த புகைப்படங்களை மொத்த குடும்பத்தினரிடமும் காட்டியிருக்க, அதுவரை அவனைப் பற்றி மட்டுமே கேட்டு அவனைப் பார்க்கும் ஆர்வத்தில் இருந்தவளுக்கு அந்த புகைப்படத்தை தானும் பார்க்க ஆர்வம் மேலோங்கியது.

இந்திரனின் அலைப்பேசியை எட்டி எட்டி பார்த்தவளுக்கு திரையில் தெரிந்த அவனின் முகம் மனதில் ஆழமாக பதிந்து போனது. இது ஈர்ப்பா? காதலா? என்று தெரியாது அவளுக்கு! ஏனோ அவள் இந்த வீட்டிற்கு வந்த பத்து வருடங்களில் எல்லார் வாயிலும் அடிக்கடி வரும் அவனின் பெயர் மற்றும் அவனை பற்றி இவள் கேட்கும் தகவல்கள் அவளுக்கே தெரியாது அவனின் மேல் ஒரு ஈர்ப்பை உருவாக்கியிருந்தது எனவோ உண்மை தான். இதற்கு அவளின் வயதுக் கூட காரணமாக இருக்கலாம்.

சுவற்றில் மாட்டியிருந்த அவனின் சிறுவயது புகைப்படத்தை பார்த்துவிட்டு தன் நண்பர்களை தேடி மொட்டை மாடியிலுள்ள அவர்களின் சங்கத்தின் அலுவலகமான மாடித்தோட்டத்திற்கு வர, அங்கு,

“இது கண்களா இல்லை வானில் மிதக்கும் இரண்டு விண்மீன்களா?” என்று அப்பட்டமாக தன் அத்தை மகளிடம் இந்திரன் வழிந்துக் கொண்டிருக்க, வைஷ்ணவியோ, “முட்டா பயலே! போதும் டா. முடியல.” என்று புலம்ப, “நான் தான் தரவே இல்லையே… அதுக்குள்ள போதும்னு சொல்ற.” என்று மீண்டும் அவன் பதிலுக்கு பேச, சந்திரன் தான் இருவரையும் கடுப்பாக பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஏய் பஞ்சுமிட்டாய்! மரியாதையா என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா? இல்லை… மண்டபத்துல வச்சே உன்னை தூக்கவா?” என்று சந்திரன் மிரட்டலாக கேட்க, “ஆத்தீ! நீயும் இந்த வீட்டு பிள்ளை தான் டா. அதூவாச்சும் நியாபகம் இருக்கா? இந்த அபூர்வ சகோதரர்களோட ரோதனைய தாங்க முடியல கடவுளே…” என்று வாய்விட்டே கத்திவிட்டாள்.

‘இதற்கும், தனக்கும் சம்மதமே இல்லை’ என்பது போல் அதிபன் இருக்கையில் சாய்ந்திருந்து அலைப்பேசியை நோண்டியவாறு இருக்க, அவனை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்த வைஷ்ணவிக்கு மனதில் சுருக்கென்ற ஒரு வலி!

சரியாக ஏதோ யோசனையில் வந்த ரித்வி அதிபனின் பக்கத்தில் அமர்ந்தும் தீவிரமாக ஏதோ யோசிக்க, அவளை புருவத்தை நெறித்து பார்த்தவன் அவளின் நடுமண்டையில் ஓங்கி கொட்டி, “பார்த்து மெதுவா… ஏன்னா, மூளை கரைஞ்சிரும்.” என்று கிண்டலாக சொல்ல, அவனை முறைத்தவள், “கலாய்ச்சிடாராமா டோக்டெர் சார்.” என்று அங்கலாய்த்துச் சொல்லி பதிலுக்கு கேலி செய்தாள்.

ஆம், அதிபன் மருத்துவம் படித்து வெளியூரில் வேலை செய்ய பிடித்தமில்லாது அவர்களின் கிராமத்திலே சிறிய மருத்துவமனையில் வைத்தியராக பணி புரிகிறான். அதுவும், ரித்வி தான் அவனுக்கு எல்லாமே… அதற்கு காரணம் கூட உண்டு.

“அதி அது வந்து… உன் அண்ணா வர்றாராமே…” என்று ஆர்வத்தை மறைத்தவாறு அவள் கேள்வியாக இழுக்க, மெல்லிய சிரிப்புடன் தலையசைத்தவன், “ஆமா… சீக்கிரமே” என்று சொல்ல, அவளுக்கோ என்னவென்று சொல்ல முடியாத உணர்வு!

“அய்யய்யோ! அந்த ஹிட்லர் வர்றானா? பத்து வருஷத்துக்கு முன்னாடி வோட்டர் கன் வச்சி அவன் மேல தண்ணீர் அடிச்சி விளையாடினதுக்கே சின்னபிள்ளைன்னு கூட பார்க்காம பொளீர்னு ஒன்னு விட்டான் எனக்கு! அதை இப்போ நினைச்சாலும் கன்னம் ஜிவுஜிவுன்னு எரியுது.” என்று வைஷ்ணவி அன்று நடந்த சம்பவத்தை நினைத்து கன்னத்தை தேய்த்தவாறு சொல்ல,

“அச்சோ ரோஸ்மில்க்! அம்புட்டு வலியா டா? மாமன்கிட்ட காட்டு?” என்றவாறு இந்திரன் அவளின் கன்னத்தை தொட வர, அதற்குள், “ஏய்! அவன் மட்டும் உன் கன்னத்தை தொட்டா, அவன வெளுக்க மாட்டேன். உன் அடுத்த கன்னமும் ஜிவுஜிவுன்னு எரியும். பரவாயில்லையா?” என்று மிரட்டலாக கேட்டான் சந்திரன்.

“ஆத்தாடி ஆத்தா! சுத்தி பைத்தியங்களா இருக்குதுங்க!” என்று வைஷ்ணவி தலையிலடித்துக்கொள்ள, இதெல்லாம் கண்டுக்காத ஆத்வியோ, “நிஜமாவே அவருக்கு அவ்வளவு கோபம் வருமா?” என்று சந்தேகமாக கேட்டாள்.

“ரொம்பவே… அந்த பதினாறு வயசுலயே கிராமத்துல மினி ரவுடிஸம் பண்ணிக்கிட்டு திரிஞ்சான். எப்போ பாரு சண்டை, களவரம், அடிதடி தான்.” என்று அதிபன் தன் அண்ணனை நினைத்து சொல்ல, “ஆமா ஆமா… அதுவும் அந்த தாய்க்கிழவி வீடு இருக்குல்ல…” என்று ஆரம்பித்த சந்திரன் பின் ரித்வியின் முறைப்பை பார்த்து, “சரி… சரி… அந்த தேவகி கிழவியோட வீட்டுல இருக்குற பையன் கூட பிரச்சினை பண்ணிக்கிட்டே தான். சும்மாவே அவங்க வீட்டுக்கும் எங்க வீட்டுக்கும் பல வருஷ பகை! நம்ம ஆளு பண்ற வேலையால அந்தக்கிழவி அதை சாக்கா வச்சி பழைய பகையெல்லாம் சேர்த்து ஏதோ குழாய் சண்டை போடுற பொம்பளைங்க மாதிரி வீட்டு வாசல்ல வந்து கத்திட்டு போகும். ஸப்பாஹ்…” என்று சலிப்பாக சொன்னான்.

“ஆனா, அவனோட கெத்து வேற லெவல் தான். அந்த வயசுலயும் அத்தனை மாஸ்! கடைசியா அந்த ஆரனோட மூக்குலயே அவன் குத்தி, அதுக்கப்றம் பெரியப்பா பயந்து இதோ இருக்காளே! இவளோட அப்பா இருக்க அந்த இத்துபோன லண்டன்க்கு பார்சல் பண்ணி அனுப்பி விட்டுட்டாரு.” என்று இந்திரன் சொல்ல, “பட், ஆரன் செம்ம ஸ்மார்ட் தானே!” என்ற வைஷ்ணவியின் பதிலில் அலைப்பேசியை நோண்டிக்கொண்டிருந்த அதிபன் ஒருகணம் விழிகளை மட்டும் உயர்த்தி அவளை பார்த்துவிட்டு மீண்டும் குனிந்துக் கொண்டான்.

வைஷ்ணவியை முறைத்த இரட்டை கதிரைகளோ ஒருசேர, “கூடவே, அவனோட மாமா பொண்ணுங்க, பேரு கூட ரா ரா னு முடியுமே… சூப்பர் பிகருங்க.” என்று சொல்லி, “முறைப்பொண்ணு அம்சமா அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம்…” என்று வராத கண்ணீரை துடைத்தவாறு பாட, “க்கும்!” என்று நொடிந்துக் கொண்டவள் ரித்வியிடம், “ஏய் ரித்வி, உனக்கு ஆரன் அ தெரியும் தானே? பஸ் ஸ்டேன்ட்ல கூட உன்னை பார்த்துட்டே இருப்பானே… ஐ திங் அவனுக்கு உன் மேல ஒரு கண்ணு!” என்று சொல்ல, சட்டென ரித்வியின் புறம் திரும்பிய அதிபன் ‘அப்படியா?’ என்ற ரீதியில் பார்த்தான்.

‘வாய விட்டுட்டியே பரட்ட!’ என்று வைஷ்ணவியை முறைத்தவள், “அப்படி எல்லாம் இல்லை அதி, அந்த பையன் சும்மா தான் பார்க்குறான். இதுவரைக்கும் என்கிட்ட பேச கூட ட்ரை பண்ணது கிடையாது.” என்று சொல்ல, மூக்கிலிருந்து இறங்கியிருந்த அவளின் பெரிய மூக்கு கண்ணாடியை சரிசெய்தவன், “அவன் வம்பு பண்ணா என்கிட்ட சொல்லனும். புரியுதா?” என்று சற்று கண்டிப்பாகவே சொன்னான்.

அவளோ பூம் பூம் மாடு போல் எல்லா பக்கமும் தலையாட்ட, இருபக்கமும் சலிப்பாக தலையாட்டியவாறு அவன் எழுந்துச் செல்ல, மாடியிலிருந்து இறங்கப் போன இந்திரனை ஓடிச் சென்று நிறுத்தி பிடித்த ரித்வி, “இந்து, அந்த பாட்டி வீட்டுக்கும் நம்ம வீட்டுக்கும் என்ன டா பகை? நானும் இங்க வந்ததிலிருந்து பார்க்குறேன். என்னன்னு தான் தெரிய மாட்டேங்குது.” என்று சந்தேகமாக கேட்டாள்.

“அதுவா…” என்று தீவிரமாக ஏதோ சொல்ல வந்தவனை பார்த்து அவளும் ஆர்வமாக காதுகளை தீட்ட, “அது… அப்போ சண்டை போட்ட பெருசுங்களுக்கே தெரியாது. இளசுங்க எங்களுக்கு எப்படி தெரியும்?” என்று சப்பென்று முடித்தவன், “தெரியலன்னாலும் அந்த ஆரன் எங்களுக்கு எதிரி தான்.” என்றுவிட்டு செல்ல, அவள் தான் அவனை ‘ஙே’ என ஒரு பார்வை பார்த்து வைத்தாள்.

ஊரில் இந்த இரண்டு குடும்பங்களுக்கும் தான் பல வருட பகை! அந்த ஊரின் பல பஞ்சாயத்துக்கள் மற்றும் பொலிஸ் பிரச்சினைகள் இந்த இரு குடும்பங்களால் தான் இருக்கும். ஊரில் நடக்கும் ஒவ்வொன்றிலும் இரு குடும்பத்து இளசுகளுக்கும் ஏட்டிக்கு போட்டி தான்.

இந்திரன் சொல்லிவிட்டு சென்றதும் இருபக்கமும் சலிப்பாக தலையாட்டியவளுக்கு ஏனோ மீண்டும் அவனின் நினைவு தான். ‘அவருக்கு என்னை தெரியுமா? மாமா சொல்லியிருப்பாரா?’ என்று அவளவன் பற்றிய யோசனையில் அவள் மூழ்க,

லண்டன் நகரத்தில் மக்களை மூழ்கடிக்கும் அந்த இரவின் குளிருக்கு இதமாக, தன் அறை மஞ்சத்தில் ஒருத்தியுடன் அவன் சல்லாபித்துக் கொண்டிருக்க, இலங்கைக்கு திரும்ப செல்வதற்கான விமான நுழைவுச்சீட்டானது டீபாயின் மேல் அலைப்பேசிக்கு அடியிலிருந்துக் கொண்டு அங்குமிங்கும் அசைந்து அவனுக்கு தன் இருப்பிடத்தை காட்டிக் கொண்டிருந்தது.

 

ஷேஹா ஸகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!