லவ் ஆர் ஹேட் 04

eiWRJ7C62372-8b604a37

லவ் ஆர் ஹேட் 04

யாதவ் ரித்வியை துளைத்தெடுக்கும் பார்வை பார்த்தவாறு நின்றிருக்க, அவனை சற்றும் எதிர்பார்க்காத ரித்வியோ முதலில் அதிர்ந்து பின் திருதிருவென விழித்தவாறு நின்றிருந்தாள்.

“இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க நீ?” என்று யாதவ் கேட்ட விதத்திலே பயத்தில் எச்சிலை விழுங்கியவள் வார்த்தைகளை கோர்த்து, “ரூம்… ரூம் அ க்ளீன் பண்ண…” என்று திக்கித்திணறி சொல்லி முடிக்க, “நோ நீட்.” என்றவன் அறைக்குள் நுழைந்து கதவை அறைந்து சாத்தினான்.

கண்களை அழுந்த மூடித் திறந்து, ‘நமக்கு நேரமே சரியில்லை போல…’ என்று நினைத்து வெளிப்படையாக தலையில் அடித்துக் கொண்டவளுக்கே அவளின் நடவடிக்கையை நினைத்து சிரிப்பாகத் தான் இருந்தது.

இங்கு சமையலறை வாசலில் நிலையில் சாய்ந்தவாறு சுவற்றுக்கே வலிக்காதது போல் தூசி துடைத்துக் கொண்டிருந்த இந்திரன், தேநீர் தயாரித்துக் கொண்டிருந்த வைஷ்ணவியை குறும்பாக பார்த்தவாறு, “உன் சமையலறையில் நான் உப்பா? சக்கரையா?” என்று பாட, “செருப்பு! மூடிக்கிட்டு துடை டா!” என்று பல்லைக்கடித்துக் கொண்டு வைஷ்ணவி சொல்ல, வாயைப்பொத்தி சிரித்து கேலி செய்தான் இத்தனை நேரம் இந்திரனை கடுப்பாக பார்த்துக் கொண்டிருந்த சந்திரன்.

மஹாதேவன் கொடுத்த தண்டனையை சிறப்பாக செய்து முடித்து மூவரும் குளித்து உடை மாற்றி வர, சரியாக உணவு மேசையில் மொத்த குடும்பமுமே அமர்ந்திருந்தனர். பத்து வருடம் கழித்து வீட்டின் மூத்த மகன் வந்திருக்கிறான். சமையலை பற்றி சொல்லவா வேண்டும்? காலை உணவையே தடல்புடலாக செய்திருந்தனர் வீட்டின் பெண்கள்.

உணவு மேசையில் யாதவ்வை பார்த்த ரித்விக்கோ என்றும் இல்லாத ஒருவித சங்கடமான உணர்வு! அதிபனுக்கு நேராக இருந்த இருக்கையில் அமரச் சென்றவளை தள்ளிவிட்டு வைஷ்ணவி அமர்ந்துக்கொள்ள, ரித்விக்கோ இப்போது யாதவ்வின் எதிரே அமர வேண்டிய கட்டாயம்!

ஒருவித வெட்கம் கலந்த சங்கடத்துடன் அமரச் சென்றவளை கடுப்பாக பார்த்த சகுந்தலா, “ஏம்மா, எல்லாருக்கும் பரிமாறிட்டு நீ அப்றம் பொறுமையா சாப்பிடலாம் தானே, உனக்கென்ன அவசரம்?” என்று நாக்கில் நரம்பில்லாது பேசி, “கண்டகண்டவங்க எல்லாம் நம்ம குடும்பத்தோட சேர்ந்து சாப்பிட வேண்டியது!” என்று முணுமுணுக்க, ரித்விக்கோ அவமானத்தில் முகமே கறுத்துவிட்டது.

அவளின் கண்கள் கலங்கிவிட, யாதவ்வை தவிர மற்ற ஆண்களுக்கு கோபம் உச்சத்தை தொட்டது. “சகுந்தலா…” என்று மஹாதேவன் கண்டிப்பாக அழைக்க, “ரித்விமா, நீ உட்காரு!” என்று அவளை அமரச் செய்தார் ஆண்டாள். யாதவ்வோ இதையெல்லாம் கண்டுக்காது இருக்க, அதிபனோ சகுந்தலாவை ஒரு பார்வை பார்த்து வைஷ்ணவியை தான் உக்கிரமாக முறைத்தான்.

‘இந்த அம்மா பண்றதுக்கெல்லாம் இவர் எதுக்கு நம்மள முறைக்கிறாரு? ச்சே! நம்ம அம்மாவுக்கு வாயடக்கமே இல்லை.’ என்று அதிபனை பார்க்க முடியாது குனிந்தவாறு தனக்குள்ளே வைஷ்ணவி புலம்பிக்கொள்ள, ‘மறுபடியும் பேய் வேஷத்தை போட்டுர வேண்டியது தான்.’ என்று தங்களுக்குள்ளே திட்டத்தை போட்டனர் இந்திரனும், சந்திரனும்.

முட்டிக்கொண்டு வந்த கண்ணீரை அடக்கியவாறு ரித்வி தலைகுனிந்து அமர்ந்திருக்க, அவளை வலிநிறைந்த பார்வையுடன் நோக்கிய மஹாதேவனுக்கு அவளின் வாழ்க்கையை நினைத்து அத்தனை கஷ்டமாக இருந்தது. கூடவே, மனதிலுள்ள எண்ணத்தை எப்படி நிறைவேற்றுவது என்ற குழப்பம் வேறு!

யாதவ்வை பார்த்தவர், “கார்த்தி, இது தான் ரித்விமா. புள்ள ஏதோ பெரிய கம்ப்யூட்டர் படிப்பெல்லாம் படிச்சா. ஆனால் என்ன? புள்ளைக்கு வேலைக்கு போக தான் இஷ்டம் இல்லை. கொஞ்சம் சோம்பேறி. மத்தபடி நல்ல திறமையான புள்ள. என் மருமகளாச்சே!” என்று கடைசி வசனத்தில் அழுத்தத்தை கூட்டி சொல்ல, விழிகளை மட்டும் உயர்த்தி அவளை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தவன் மீண்டும் குனிந்து சாப்பிட, ரித்விக்கு தான் ‘அய்யோ!’ என்றிருந்தது.

‘என்னை பத்தி கேட்டாங்களா? இல்லை கேட்டாங்களான்னு கேக்குறேன்.’ என்ற ரீதியில் அவள் தன் மாமாவை நோக்க, அவருக்கோ எப்படியாவது தன் மகன் மனதில் ரித்வியை பற்றி நல்ல எண்ணத்தை விதைத்துவிட வேண்டுமென்கின்ற உணர்வு! ஆனால், கூடவே அந்த உண்மை தெரிந்து விடுமோ என்ற பயமும்!

அதிபனோ தன்னெதிரே இருந்து தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தவளை சற்றும் கண்டுக்காது ‘சோறு தான் முக்கியம்’ என்ற ரீதியில் தட்டிலே முகத்தை புதைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்க, அதில் சலிப்படைந்த வைஷ்ணவி பின் நமட்டுச் சிரிப்புடன் மேசையின் கீழே பாதத்தால் அவன் பாதத்தை வருடிவிட, விழிவிரித்தான் அவன்.

விழிகளை உயர்த்தி அவளை அவன் பார்த்ததும் அவளோ காலை உள்ளிழுத்துக்கொண்டு பாவம் போல் முகத்தை வைத்துக்கொள்ள, அவளின் இதழுக்குள் மறைந்திருந்த சிரிப்பை உணர்ந்து இறுகிய முகமாக அதிபன் தலைகுனிந்து சாப்பிட ஆரம்பிக்க, அவனை கூர்ந்து பார்த்தவளுக்கோ ஏமாற்றம் தான்.

‘ச்சே!’ என்று சலித்துக் கொண்டவள் மீண்டும் தனது திட்டத்தை செயற்படுத்த அவனின் பாதத்தை தேட, அது சிக்கினால் தானே! இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்து காலை நீட்டியவளுக்கு அவள் எதிர்ப்பார்த்தது கிடைத்துவிட உள்ளுக்குள் சிரித்தவாறு மீண்டும் தன் வேலையை ஆரம்பித்து சாப்பிடுவது போல் பாவனை செய்துக் கொண்டிருந்தாள் அவள்.

ஆனால், அடுத்த சில நொடிகளில் “நீ வருடுற என் கால… அதுல என் மனசு விழுது உன் பாதத்துக்கு கீழ…” என்று கேட்ட இந்திரனின் குரலில் சட்டென நிமிர்ந்தவள் எதிரே இருந்த இந்திரனை பார்த்து அதிர்ந்தேவிட்டாள். இந்திரனோ வெட்கப்பட்டு சிரித்தவாறு வைஷ்ணவியை பார்க்க, மேசையின் கீழ் சட்டென குனிந்து பார்த்து வெளிப்படையாக தலையிலடித்துக் கொண்டவள், சற்று முன் வருடியது என்னவோ காலை நீட்டி அமர்ந்திருந்த இந்திரனின் காலை தான்.

“வானவில்ல இருக்கு ஏழு கலரு… நீ தான்டி எனக்கேத்த ஃபிகரு…” என்று இந்திரன் குறும்பாக சொல்ல, அதிபனோ அடக்கப்பட்ட சிரிப்புடன் அமர்ந்திருக்க, இருவரையும் மாறி மாறி பார்த்த சந்திரனோ, “இப்போ உங்கள கொல்ல போற நான் கில்லரு… எல்லாருக்கும் இருக்க போகுது த்ரில்லரு…” என்று கடுப்பாக சொல்ல, அதிபனோ கத்தி சிரித்துவிட்டான்.

இவர்களின் சத்தத்தில் பெரியவர்கள் இளசுகளை சந்தேகமாக நோக்க, இந்திரனும், சந்திரனும் எப்போதும் போல் ‘ஹிஹிஹி…’ என்று அசடுவழிய சிரித்து வைக்க, வைஷ்ணவியோ எதுவும் அறியாதது போல் தலைகுனிந்து சாப்பிடுவது போல் பாவனை செய்தாள் என்றால், இரட்டை சகோதரர்களின் கூத்தில் அதிபன் தான் சிரிப்பை அடக்க படாதபாடுபட்டான்.

யாதவ்விற்கு கூட இவர்களின் கூத்தில் இதழில் லேசாக சிரிப்பு எட்டிப் பார்க்க, அவனையே அடிக்கடி நோட்டம் விட்டுக் கொண்டிருந்த ரித்விக்கு அவனின் சிறிய இதழ் விரிதலும் கண்களில் சிக்கியது. பாறை போன்ற இறுகிய அவனின் முகத்தில் தோன்றும் இந்த சின்ன சிரிப்பை பார்த்தவள் தன்னையும் மீறி அவனுடைய சிறு அசைவுகளையும் ரசிக்க ஆரம்பித்தாள்.

சாப்பிட்டு முடித்து தனதறைக்கு வந்த ரித்வி மடிக்கணினியை உயிர்ப்பித்து அந்த குறிப்பிட்ட நாவல் தளத்தில் தன் தேடலை ஆரம்பிக்க, அதிலிருந்த ‘மீரா கிருஷ்ணன்’ என்ற பெயரை பார்த்ததும் அவளின் இதழ்கள் தானாகவே புன்னகைத்தன.

மீரா கிருஷ்ணன் என்ற அந்த எழுத்தாளர் எழுதியிருந்த ‘புதைந்தாலும் விதையாய் இருப்பேன் உன் இதயம் எனும் நிலத்திலே…’ என்ற காதல் வார்த்தைகளை வாசித்தவளுக்கு ஏதோ இனம் புரியாத உணர்வு! இதுவரை உணராத ஒரு புது உணர்வு!

ரித்வி அவரின் எழுத்துக்களை ரசித்து படித்துக்கொண்டிருக்க, தன் மாமாக்களிடமிருந்து தப்பித்து ஓடி வந்து கதவை தாழிட்ட வைஷ்ணவி, “ஹப்பாடா!” என்று கதவின் மேலேயே சாய்ந்து நின்று நிம்மதி பெருமூச்சுவிட்டுக் கொள்ள, அவளை நிமிர்ந்து முறைத்துப் பார்த்தாள் ரித்வி.

அவளின் முறைப்பின் காரணம் உணர்ந்து, “சோரி… நாவல் வாசிச்சிக்கிட்டு இருக்கியா?” என்று காதுமடல்களை பிடித்து மன்னிப்பு கேட்ட வைஷ்ணவி, ரித்வியின் பக்கத்தில் சென்று அமர்ந்து திரையை எட்டிப் பார்த்தாள். அதிலிருந்த மீரா கிருஷ்ணன் என்ற பெயரை பார்த்த வைஷ்ணவிக்கும் இதழ்கள் தானாக விரிந்தன.

“ஏய் மீரா கிருஷ்ணனோட புதுக் கதையா? வாவ்! பட், ஃபோன்ல ரீட் பண்றதை விட புத்தகத்தை கையில வச்சி வாசிக்கிற சுகமே தனி தான். அதுவும், கடைசியா வெளியான இவங்களோட நாவலை படிச்சியா ரித்வி? ரொம்ப எமோஷனலான ஸ்டோரி. அழுது அழுது என் தலகாணி நனைஞ்சு போச்சி.” என்று வைஷ்ணவி சொல்ல,

மென்மையாக சிரித்துக் கொண்டவள், “ஆமா… ஆமா… அவங்களோட எழுத்துநடை கூட ரொம்ப அழகு. கதைய முழுசா படிச்சதுக்கு அப்றம் கூட அடுத்த கொஞ்ச நாளைக்கு அந்த கேரக்டர்ஸ்ல இருந்து வெளில வரவே முடியாது.” என்று புன்னகையுடன் சொல்லி, “அவங்களோட நாவல் புத்தகத்தை நீ வாசிச்சு முடிச்சிடேன்னா அதை எனக்கு கொடு!” என்று ஆர்வமாக கேட்டாள்.

“அதெல்லாம் கொடுக்குறேன். ஆனா, இந்த மீராவோட கிருஷ்ணன் எப்போ வருவாங்க?” என்று வைஷ்ணவி கேலியாக கேட்க, அவளுக்கோ சட்டென்று யாதவ்வின் முகம் தான் கண்முன் தோன்றியது.

‘ச்சே! என்ன திங்கிங் இது ரித்வி?’ என்று தன்னைத் தானே கடிந்துக் கொண்டவள் நிஜமாகவே அவனது சன்னிதானத்தில் இத்தனை வருடமாக  அவனுக்காக காத்திருந்த மீரா தான்.

இங்கு ரித்வி யாதவ்வின் நினைப்பில் இருக்க, தனதறையில் கையில் வைத்திருந்த புத்தகத்தின் இறுதி பக்கத்தை வாசித்து முடித்தவனின் இதழில் மெல்லிய புன்னகை. அந்த அட்டையின் மேலிருந்த ‘மீரா கிருஷ்ணன்’ என்ற பெயரை மென்மையாக வருடியவனின் இதழ்கள் அந்த பெயரை புன்னகையுடன் முணுமுணுத்தன.

மீரா மட்டும் தான் காத்திருப்பாளா? தனக்காக காத்திருக்கும் மீராவுக்காக ஏங்கும் கண்ணன் தானே அவன்!

அந்த பெயரை ஒருவித பரவசத்தில் வருடியவனுக்கு அந்த ஒருத்தியின் விம்பம் கண்முன் தோன்ற, அடுத்தநொடி அவனுக்குள் ஒரு அதிருப்தி! இதுவரை இருந்த இதமான உணர்வு வடிந்து போக, அவனுக்குள்ளேயே ஒரு குழப்பம்!

அன்று மாலை,

“வெல்கம் டூ அவர் சட்டசபை மன்றம். உன்னை என்ன வெத்தலை பாக்கு வச்சி அழைக்கனுமா? நாங்க எல்லாம் இந்த டைம்ல ஊரார் கதை, உள்ளூர் கதை பேச இங்க ஒரு மீடிங் அ போட்டுருவோம்.”  என்று யாதவ்வை மாடித்தோட்டத்திற்கு அழைத்து வந்தவாறு சந்திரன் சொல்ல, தன்னவனை எதிர்ப்பார்க்காத ரித்விக்கோ ஒருவித படபடப்பு!

வந்ததிலிருந்து அறையிலேயே கிடந்தவனை இவர்கள் வலுக்கட்டாயமாக அழைத்து வந்திருக்க, யாரும் பார்க்காதவாறு தனது அலைப்பேசியை முகத்துக்கு நேராக கொண்டு வந்தவள், ‘தான் அழகாக இருக்கிறோமா?’ என்று மூக்குக்கண்ணாடியை சரிசெய்தவாறு பார்க்க, அவள் பக்கத்திலிருந்த அதிபன் தான் ‘ஙே’ என அவளை ஒரு பார்வை பார்த்து வைத்தான்.

“ஹோஸ்பிடல் போகல்லையா அதிபா?” என்று கேட்டவாறு அதிபனுக்கெதிரே யாதவ் அமர, “இல்லை யாதவ், கௌத்தம் கூட இன்னும் இரண்டு டாக்டெர்ஸ் இருக்காங்க. ஏதாச்சும் எமெர்ஜென்சின்னா நான் போவேன்.” என்று அதிபன் சொல்ல, ‘ஓ’ என்று மட்டும் சொன்னவன் தன்னையே விழுங்குவது போல் பார்த்துக் கொண்டிருந்த ரித்வியை புருவத்தை சுருக்கி பார்த்தான்.

அவளோ அவன் பார்த்ததும் பயந்து முகத்தை திருப்பிக் கொள்ள, சலிப்பாக தலையாட்டியவாறு திரும்பிய யாதவ்வின் கண்ணில் சிக்கியது என்னவோ நெற்றியை நீவி விட்டவாறு அமர்ந்திருந்த வைஷ்ணவி தான்.

“நான் தான் டா ரோஸ்மில்க் பக்கத்துல உட்காருவேன்.” என்று இந்திரன் வைஷ்ணவி அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகில் அமர போக, அவனைப் பிடித்து இழுத்த சந்திரன், “நான் விட மாட்டேன் டா.” என்று பதிலுக்கு அவனை பிடித்து தள்ள என மாறி மாறி சண்டையிட்டுக் கொள்ள, வைஷ்ணவிக்கோ தலைவலியே வந்துவிட்டது.

யாதவ்வோ இருவரையும் மாறி மாறி பார்க்க, இருபக்கமும் தலையாட்டி சிரித்த அதிபன், “எவன் வைஷுவோட பிறந்தநாள் திகதிய கரெக்ட் ஆ சொல்றானோ அவனுக்கு தான் முதல் உரிமை. இது எப்படி?” என்று ஒரு போட்டியை வைத்துவிட, அவளோ அவனை உக்கிரமாக பார்த்து வைத்தாள்.

திருதிருவென விழித்த இருவருமே, “அதான் கேக்குறாங்கல்ல, நீங்க சொல்லுங்க.”, “ஏன் நீங்க சொல்ல மாட்டீங்களா?” என்று கல்லூரி பட நண்பர்கள் பாணியில் மாறி மாறி சொல்ல, யாதவ்வோ பக்கென்று சிரித்துவிட்டான்.

அவனின் சிரிப்பை புன்னகையுடன் பார்த்த ரித்வியோ தானே எழுந்து சென்று வைஷ்ணவியின் பக்கத்தில் அமர்ந்து, “நானே இங்க இருக்கேன்.” என்று அதிபன் பக்கத்திலிருந்த இருக்கைகளை கைகளால் காட்ட, வைஷ்ணவியோ ‘ஹப்பாடா!’ என்று நிம்மதி பெருமூச்சுவிட்டுக் கொண்டாள் என்றால், இந்த இரட்டை கதிரைகளோ, “உன்னால தான்.” , “உன்னால தான்.” என்று மாறி மாறி சொன்னவாறு அதிபன் பக்கத்தில் அமர்ந்துக் கொண்டனர்.

இவர்களின் கூத்தில் வாய்விட்டு சிரித்துக் கொண்டிருந்த யாதவ்வின் முகமோ அதிபன் கேட்ட, “யாதவ், இனி எப்போவும் இங்க தானா?” என்ற கேள்வியில் இறுகிப்போக, ‘ஆம்’ என்று தலையசைத்தவன், “லண்டன்ல வேலை பார்த்த கம்பனியோட கொழும்பு ப்ரான்ச்ல வேலை கிடைச்சிருக்கு. கூடிய சீக்கிரம் போயிருவேன்.” என்று சொன்னான்.

“இப்போ தானே வந்திருக்க. அதுக்குள்ளயே போக ப்ளேன் பண்ற. சரி விடு, நம்ம ஊர் எப்படி? ரொம்ப வருஷம் கழிச்சி வந்திருக்க. என்ன தான் நீ இருந்த ஊருல அத்தனை வசதி இருந்தாலும் நம்ம சொந்த ஊருல இருக்குற சுதந்திரம் மாதிரி இருக்காது தானே?” என்று சந்திரன் பெருமையாக சொல்ல,

“அப்படி எல்லாம் இல்லையே… இங்க இருந்ததை விட ரொம்ப ஃப்ரீடம் ஆ அங்க இருந்தேன். தினமும் க்ளப், பார்ட்டி,  என்ஜோய்மென்ட் தான். அதுவும் பல பொண்ணுங்க நம்ம மேனரிசம் அ பார்த்து டேட்டிங் கூட வர ரெடியா இருந்தாங்க. அங்க எல்லாமே சகஜம். யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க. அங்க இருக்குறதும் தனி சுகம் தான்.” என்று யாதவ் அடுத்தடுத்தென்று இத்தனை வருடங்கள் அவன் வாழ்ந்த சூழலை பெருமையாக சொல்ல, ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர் சந்திரனும், இந்திரனும்.

“என்னென்ன சொல்றான் பாரு! கிடைச்ச கேப்ல மேனரிசம்னு எல்லாம் சொல்றான் டா.” என்று சந்திரன் இந்திரனின் காதில் கிசுகிசுத்து சிரிக்க, “ஆமா டா, கம்பி கட்டுற கதையெல்லாம் எடுத்து விடுறான்.” என்று இந்திரனும் சொல்லி சிரித்துக் கொண்டான்.

இருவரும் கிசுகிசுவென பேசி சிரித்துக் கொண்டதை பார்த்த யாதவ் கொடுப்புக்குள் சிரித்தபடி, “இரண்டு பேரும் என்னை கலாய்ச்சது இருக்கட்டும். எத்தனை நாளைக்கு டா இப்படியே இருக்க போறீங்க? மேல்படிப்பு படிக்காம வயல், தோப்பு கவனிச்சிக்கிறேன்னு பேருல ரவுடிசம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க.” என்று சொல்ல,  “இன்னுமா இந்த உலகம் நாம பண்ணுறதை ரவுடிசம்னு நம்புது?” என்று கேலியாக கேட்டான் சந்திரன்.

அவனை முறைத்த யாதவ், “அப்போ லைஃப்ல எந்த ப்ளேனும் இல்லை. ஏதோ மோகம் ஏதோ ராகம் தான்.” என்று கேட்க, இருகைகளையும் நீட்டி சோம்பல் முறித்த இந்திரன் வைஷ்ணவியை பார்த்து, “ஏன் இல்லை? ப்ளேன் இருக்கே. முறைப்பொண்ண கட்டிக்கிட்டு செட்ல் ஆக வேண்டியது தான். ஏலே ரோஸ்மில்க், மாமா கூட வர்றீயா ஹாயா… நான் உனக்கு வாங்கி தரேன் சாயா…” என்று கேலியாக சொன்னான்.

“அப்போ நாங்க என்ன பண்ணுவோமாக்கும்? ஏய் பஞ்சுமிட்டாய், இவன கட்டிப்ப நீனு?” என்று சந்திரன் பதிலுக்கு மிரட்டலாக கேட்க, அவளோ வாயைப்பொத்தி சிரித்துக் கொண்டிருந்த அதிபனை முறைத்தவள் யாதவ்விடம் திரும்பி “யாதவ் மாமா, நான் உங்களுக்கு முறைப்பொண்ணு தானே? நீங்களே என்னை கட்டிக்கோங்க.” என்று வெறுப்பேற்றவென சொன்னாள்.

அவனோ முகத்தை சுழித்து, “அய்ய…” என்றவாறு, “அதெல்லாம் முடியாது.” என்று பட்டென்று சொல்லிவிட, பக்கென்று சிரித்துவிட்டான் அதிபன்.

சரியாக சந்திரனுக்கு ஒரு அழைப்பு வர, அழைப்பை ஏற்று பேசியவனின் முகம் கடுகடுவென மாறியது. அதை கவனித்த யாதவ் கேள்வியாக நோக்க, அழைப்பை துண்டித்தவன், “ஆரன்” என்று சொன்னதும் தான் தாமதம் இப்போது இறுகிப்போனது என்னவோ யாதவ்வின் முகம் தான்.

அந்த தேவகியின் குடும்பத்தை நினைத்தாலே அவனுக்கு அத்தனை வெறுப்பு! அவனுடைய அத்தனை பெரிய இழப்புக்கு காரணமான குடும்பம் அல்லவா அது!

“நாளைக்கு பஞ்சாயத்து இருக்கு. முருகன் குடும்ப பிரச்சினையை தீர்க்க நம்மள கூப்பிட்டிருக்காங்க. கண்டிப்பா குட்டைய குழப்ப ஆரன் வருவான்.” என்று சந்திரன் சொல்ல, “நானும் வரேன்.” என்ற யாதவ்வின் பதிலில் மற்றவர்கள் பதறினார்களோ இல்லையோ? ரித்விக்கு தான் திக்திக் என்று இருந்தது.

ஷேஹா ஸகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!