விழிகள் இறுதி அத்தியாயம்

eiGJ81L16854-cc7df1e2

விழிகள் இறுதி அத்தியாயம்

அகஸ்டின் தன்னவளை காற்று கூட புக முடியாத அளவுக்கு அணைத்திருக்க, அவனுடைய அணைப்பில் இருந்தவளுக்கு விழிகள் சந்தோஷத்தில் கலங்கிப் போயிருந்தன.

“உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன்டி.” குரல் தழுதழுக்க சொன்னவன், அவளுடைய கன்னத்தைத் தாங்கி, “சோரிம்மா, சோரிம்மா…” என்றவாறு அவளுடைய முகம் முழுக்க ஒவ்வொரு மன்னிப்புக்கும் ஒவ்வொரு முத்த அச்சாரங்களை வைக்க, விழிகளை மூடி தன்னவனின் முத்தம் தந்த சுகத்தை அனுபவித்தாள் அவள்.

சிறிதுநேரம் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. தன்னவளின் நெற்றியோடு நெற்றி முட்டி சுவற்றில் சாய்ந்து விழிகளை மூடி அமைதியாக அகஸ்டின் நிற்க, “தினு…” முதலில்  மௌனத்தை கலைத்தது அலீஷாதான்.

அவனோ விழிகளை திறந்து அவளை அத்தனை காதலோடு நோக்க, “எல்லாமே எனக்கு கனவு மாதிரி இருக்கு. உன் கண்ணுல எனக்கான காதலை பார்க்குறேன். நம்பவே முடியல. எனக்கு புரியுது ஆனா…” அவள் தயக்கமாக நிறுத்த, தன்னவள் சொல்ல வருவது அகஸ்டினுக்கு புரிந்துப் போனது.

பட்டென்று அவளுடைய இதழில் அழுந்த முத்தமிட்டு விலகியவன், ஒரு விரலால் அவளிதழை வருடியவாறு, “உன்னை விட எனக்கு பொருத்தமானவ யாருமில்லை எலி. ஆனா, இந்த வாழ்க்கைதான் நீ எதிர்பார்க்குற, நீ ஆசைப்பட்ட வாழ்க்கையா இருக்காதோன்னு உள்ளுக்குள்ள தோனிக்கிட்டே இருக்கு. பணம் இருக்குற இடத்துல சந்தோஷம் இருக்கும்னு இல்லை. மீட்டியாவுக்கு கேமராக்களுக்கு பயந்து வாழணும். இது நம்மளோட காதலை அழிச்சிருமோன்னு பயமா இருக்கு. பிடிச்ச மாதிரி வாழ முடியாம நான் படுற அவஸ்தைய நீ அனுபவிக்கக் கூடாதுன்னு நினைச்சேன். ஆனா…” என்று நிறுத்த, “உன்னால என்னை விட்டு விலக முடியல. அதானே!” இடைவெட்டிக் கேட்டாள் அலீஷா.

விழிகளை வேறுபுறம் திருப்பி அவன் பாவமாக தலையாட்ட, உள்ளுக்குள் சிரித்தவாறு அவனுடைய கோலரைப் பற்றி அவனிதழோரத்தில் அழுந்த முத்தமிட்டு விலகியவள், “ஆமா, எப்போவும் நான் நானா இருக்கணும்னு நினைப்பேன். இந்த பணக்கார வீட்டு வாழ்க்கையில எனக்கு ஆர்வம் இல்லை. ஆனா, நான் உன் கூட இருக்கணும்னு ஆசைப்படுறேன் தினு. எதுவா இருந்தாலும் அதை ஏத்துக்க தயாரா இருக்கேன். உங்க அத்தையும் மாமாவும் ஒருத்தர் காயத்துக்கு இன்னொருத்தர் மருந்தா இருக்குற மாதிரி நான் உன்னை காதலிக்கணும்னு ஆசைப்படுறேன். கண்டிப்பா, நீ என்னை காதலிக்கிறதை விட அதிகமா உன்னை காதலிப்பேன்.” அத்தனை காதலோடு சொல்லி முடிக்க, தன்னனளை இமைக்காது பார்த்துக்கொண்டிருந்தான் அவன்

அவளோ பட்டென்று ஒற்றை கண்ணைச் சிமிட்ட, அதில் விழி விரித்து பக்கென்று சிரித்தவன், அவளிடையை மேலும் தன்னோடு நெருக்கி நெற்றியில் அழுந்த முத்தமிட்டான்.

“இப்போவே கல்யாணம் பண்ணிப்போம் எலி. இதுக்குமேல உன்னை தனியா விட நான் தயாரா இல்லை.” அவளை இழந்து விடக் கூடாதென அதிரடியாக சொல்ல, சாரசர் போல் விழிகளை விரித்து, “இப்போவேவா?” அதிர்ந்துக் கேட்டாள் அலீஷா.

அவளுடைய விரிந்த கண்களின் அழகை ரசித்துக்கொண்டே, “இப்போவேதான்.” என்ற அகஸ்டின் அதற்குமேல் கொஞ்சமும் தாமதிக்காது அவளிதழை தன்னிதழால் சிறைப்பிடித்திருக்க, முதலில் அவன் சொன்னதில் உண்டான அதிர்ச்சியிலிருந்து மீளாது நின்றவள், பின்னரே தன்னவன் செய்யும் மாயத்தில் விழிகளை மூடி அவனுக்கு இசைந்துக் கொடுக்க, அவனும் முத்தமிட்டவாறே சிரித்துக்கொண்டான்.

அடுத்து முதல்வேலையாக தன் ஆட்கள் மூலமாக தன்னவளுக்கென தாலி செய்தெடுத்த அகஸ்டின், தன்னவளை அவளுடைய வீட்டிற்குதான் அழைத்துச் சென்றான். சுற்றியிருப்பவர்கள் யாரையும் கண்டுக்கொள்ளாது அவளுடைய வீட்டிற்குள் அவன் நுழைந்திருக்க, மாதவியின் புகைப்படத்தின் முன் மலர்களோடு தாலியையும் வைத்து விழிகளை மூடி, கைக்கூப்பி நின்றவளுக்கு அழுகையை கட்டுப்படுத்தவே முடியவில்லை.

மாதவியின் நினைவில் அவளுடைய விழிகளிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வடிவதை வேதனையோடு பார்த்துக்கொண்டிருந்தான் அகஸ்டின். ஆழ்ந்த பெருமூச்சுவிட்டவன், “தேங்க்ஸ் அத்தை.” என்றவாறு புகைப்படத்தின் முன்னிருந்த தாலியை எடுத்து தன்னவளின் கழுத்தில் பூட்டிவிட, விழிகளைத் திறந்த அலீஷா, தன்னவனையே பார்த்திருந்தாள்.

தாலியை கட்டிவிட்டு அவளுடைய விழிகளில் அழுந்த முத்தமிட்டு விழிநீரை இதழாலே துடைத்துவிட்டவன், அடுத்து என்ன செய்வதென தெரியாது விழித்துக்கொண்டு நிற்க, அதைப் புரிந்துக்கொண்டவளோ, “நான் கண்ணை திறக்குற வரைக்குமாச்சும் வெயிட் பண்ண முடியல. அம்புட்டு அவசரம்.” சிரித்தவாறு சொல்லிக்கொண்டு சிறிய காகிதத்தில் சுற்றி மடித்து வைத்திருந்த குங்குமத்தை பிரித்து தன்னவனிடம் நீட்டினாள்.

அவனும் இரு விரலால் அதையெடுத்து அவளின் நெற்றி வகுட்டில் வைத்துவிட்டு தலை சரித்து தன்னவளை அழகு பார்க்க, இதுவரை வராத வெட்க உணர்வுகள் எல்லாம் குங்குமத்தை வைத்ததுமே போட்டி போட்டுக்கொண்டு அலீஷாவுக்கு வந்தது. அதில் அவள் கன்னங்கள் இரண்டும் செவ்வானமாய் சிவக்க, அகஸ்டினுக்கு அதற்குமேல் பொறுக்கவே முடியவில்லை.

மீண்டும் அவளிதழை அவன் முத்தமிட, மார்பில் கை வைத்து தள்ளியவள், “அத்தை, மாமாவோட ஆசிர்வாதம் வாங்கணும்.” என்றாள் பொறுப்பான மருமகளாய். அதில் இருபுருவங்களையும் உயர்த்தி அவளை ஆச்சரியமாக பார்த்துவிட்டு சிரித்த அகஸ்டின், “லவ் யூ திருட்டெலி.” கொஞ்சிவிட்டு அவளுடைய பொருட்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினான்.

அலீஷாவின் வீட்டிலிருந்து வெளியேறும் போது ஆர்வமாக கூடியிருந்து அவர்களையே பார்த்திருந்த அக்கம் பக்கத்தவர்கள்,  முகத்தை மறைத்திருந்த அகஸ்டினை பார்த்து ஏதேதோ கிசுகிசுத்துக்கொண்டார்கள் என்றால், அவன் பின்னால் உடைப்பையுடன் நெற்றி வகுட்டில் குங்குமத்தோடு வந்த அலீஷாவைப் பார்த்து அதிர்ந்துவிட்டனர்.

ஆனால், அலீஷாவோ யாரையும் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. தன்னவனின் பின்னாலேயே அவள் செல்ல, அங்கிருந்து தன்னவளை வீட்டிற்குதான் அழைத்துச் சென்றான் அவன். 

உள்ளே நுழைந்ததுமே நடந்தது தெரிந்து இருவருக்காக காத்திருந்த பெரியவர்கள், அவனையும் கழுத்தில் தாலியோடு நின்றிருந்த அலீஷாவையும் முறைத்துப் பார்க்க, அப்போதுதான் தன்னவளை ஓரக்கண்ணால் ரசித்தவாறு மாடியிலிருந்து இறங்கி வந்துக்கொண்டிருந்த மஹி, சட்டென ஆத்வி அதிர்ந்து நிற்பதைப் பார்த்து அவள் பார்வை செல்லும் திசையைப் புரியாதுப் பார்த்தான். அடுத்தநொடி அவனால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.

“அடப்பாவி!” வாயைப் பொத்தி அவன் சிரிக்க, அவனை முறைத்தவள், “ஒன்னு இரண்டு பைத்தியமா இருந்தா பரவாயில்லை. சுத்தியிருக்குற மொத்தமும் பைத்தியங்களா திரியுதுங்க.” என்றுவிட்டு சலிப்பாக தலையாட்டிக்கொண்டாள்.

கீர்த்தியோ அலைஸ்ஸைப் பார்த்துவிட்டு இருவரையும் மாறி மாறி பாவமாக நோக்க, தன் மகனை மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டி உக்கிரமாகப் பார்த்த அலைஸ், “என்ன இது?” அழுத்தமாகக் கேட்டார். அவனோ அலட்சியமாக, “பார்த்தா தெரியலயா என்ன?” என்றுவிட்டு வேறெங்கோ பார்ப்பது போல் பாவனை செய்ய, தன் மனைவியை அடக்கப்பட்ட சிரிப்போடு நோக்கினார் சஞ்சய்.

அலைஸ்ஸோ தன் மகனின் பதிலில் கடுப்பாகி, தன்னவனை முறைத்துப் பார்க்க, சட்டெனத் திரும்பி அகஸ்டினை போலியாக முறைத்த சஞ்சய், “ஏன்டா நாங்க உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க மாட்டோமா? ஆஃபீஸுக்கு அலீஷாவை அனுப்பி வைச்சதே உன் அம்மாவும் அத்தையும்தான்டா.” என்று சொல்ல, “சோரிப்பா, உங்க எல்லாரையும் கூப்பிட நேரமில்லை. அதான்…” தோளைக் குலுக்கிச் சொன்னான் அவன்.

எப்போதும் அதிரடியாக முடிவெடுக்கும் தன் தோழனைப் பார்த்து மஹி வாய்விட்டுச் சிரிக்க, ‘இவனையெல்லாம் திருத்தவே முடியாது!’ நெற்றியில் வெளிப்படையாக அடித்துக்கொண்டார் தருண்.

ஆனால், அலீஷாவுக்குதான் உள்ளுக்குள் அத்தனை பயம். பயத்தில் எதுவும் பேசாது அகஸ்டினின் கரத்தை இறுகப்பற்றியவாறு நின்றிருந்தாள்.

அலைஸ்ஸோ கோர்த்திருந்த அவர்களின் கரத்தை புருவத்தைச் சுருக்கிப் பார்த்தவர், ஆழ்ந்த பெருமூச்சுவிட்டு “ஐரா கம்பனீஸ்ஸோட சிஈஓவோட கல்யாணம் யாருக்கும் தெரியாம திருட்டுத்தனமா நடந்தது மட்டும் வெளியில தெரிஞ்சது அவ்வளவுதான். எனிவேய், சீக்கிரம் அலீஷா கூட மீடியா உன்னை பார்க்குறதுக்கு முன்னாடி நாங்களே ப்ரெஸ்மீட் வைச்சு விஷயத்தை அன்னௌன்ஸ் பண்ணிடுவோம். என்ட், ஒரு வாரத்துல ரிசெப்ஷன் வச்சிக்கலாம். ரைட்?” தன் அடுத்தடுத்த திட்டங்களைச் சொல்ல, அகஸ்டினோ இதழுக்குள் சிரித்துக்கொண்டான்.

தன்னவளை இழுத்துக்கொண்டு அவர்களெதிரே வந்தவன், “என் பொண்டாட்டிக்கு உங்க ஆசிர்வாதம் வேணுமாமே! சோ, ப்ளீஸ்.” சிரிப்போடுச் சொல்ல, ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக்கொண்ட பெரியவர்கள் புன்னகையோடு இணைந்து நிற்க, அலீஷாவுக்கு அவர்களின் புன்னகையைப் பார்த்ததும்தான் ‘அப்பாடா!’ என்றிருந்தது.

உடனே, “இவருதான் அத்தை நான் சொல்ல சொல்ல கேக்காம தாலிய கட்டிட்டாரு. சோரி மேடம், சோரி சார்.” என்றவாறு வேகமாக பெரியவர்களின் காலில் விழ, “அடிங்க! நீதானேடி தாலியே எடுத்து கொடுத்த.” பதிலுக்கு  போட்டுக்கொடுத்தவாறு தன்னவளோடு பெரியவர்களிள் காலில் விழுந்தான் அகஸ்டின்.

இவர்களின் பேச்சில் வாய்விட்டு சிரித்துக்கொண்டு அலீஷாவை எழுப்பிவிட்ட அலைஸ், “இனி அத்தை, மாமான்னு சொல்லணும். புரியுதா?” கண்டிப்பாகச் சொல்ல, பூம்பூம் மாடு போல் எல்லா பக்கமும் தலையாட்டி வைத்தாள் அவள்.

அதன்பின் அகஸ்டினோ, “போலாமா?” என்று கேட்டவாறு தன்னவளின் கரத்தைப் பிடித்து அறைக்குச் செல்வதற்காக ஒரு அடி முன்னே வைக்க, வேகமாக அலீஷாவின் மறுகரத்தை பிடித்துக்கொண்ட கீர்த்தி, “எங்க?” என்று கேட்டார் கேள்வியாக. ‘இது என்னடா விசித்திரமான கேள்வி!’ உள்ளுக்குள் நினைத்துக்கொண்டவாறு, “வேற எங்க? என் ரூமுக்குதான்.” அவன் சொல்ல, அவ்வளவுதான்!

அலீஷாவை தன் புறமாக இழுத்து நிறுத்தியவர், “கல்யாணத்தைதான் நல்லநேரம் பார்க்காம உன் இஷ்டத்துக்கு பண்ணிட்ட. அதுக்காக மத்த விஷயங்களையும் அப்படி பண்ணிட முடியாது. புரியுதா? நீ வாம்மா.” அவளை தோளோடு அணைத்தவாறு தனதறைக்கு அழைத்துச் செல்ல, ‘ஙே’ என திகைத்துப்போய் அகஸ்டின் சிலை போல் நின்றிருந்தான் என்றால், தன்னவனின் முகபாவனையில் முட்டிக்கொண்டு வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு கீர்த்தியோடு சென்றாள் அலீஷா.

மற்ற பெரியவர்களும் உள்ளுக்குள் சிரித்தவாறு அங்கிருந்து நகர, வேகமாக திரும்பியவனின் எதிரே வந்து நின்ற மஹி, “வெல்கம் டூ குடும்பஸ்தன்கள் சங்கம். ஆமா… என் கால்ல எல்லாம் விழ மாட்டியா?” என்றுகேட்டு பாதத்தை கேலியாகக் காட்ட, “அடிங்க…” என்றவாறு எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியது போல் உண்டான கடுப்பில் மஹியை அவன் அடிக்கத் துரத்த, அவனோ தன் தோழனின் கையில் சிக்காது வீட்டையே வட்டமடித்துவிட்டான்.

அடுத்து வந்த நாட்களில் பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி நிருபர்களை வரவழைத்து விடயத்தைச் சொல்ல, அதிரடியாக லட்டு போல் கிடைத்த செய்தியில் தங்களின் இஷ்டத்திற்கு எழுதி தள்ளிவிட்டனர் பத்திரிகையாளர்கள். ஆனால், எப்போதும் போல் அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை ஐரா நிறுவனத்தின் நிர்வாகிகள்.

அதேநேரம், அடுத்த ஒருவாரத்தில் நடக்கவிருக்கும் வரவேற்பு நிகழ்ச்சிக்காக வேலைகள் நடக்க, கூடவே புரோகிதரை வரவழைத்து அகஸ்டின், அலீஷாவின் சாந்தி முகூர்த்தத்திற்கான நாளையும் குறித்தனர் பெரியவர்கள். வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும் அன்றே சாந்தி முகூர்த்தமும் குறிக்கப்பட்டிருக்க, அகஸ்டினோ தன்னவளின் பின்னாலேயே குட்டி போட்ட பூனை போல் திரிந்துக்கொண்டிருந்தான் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால், கீர்த்தியோ அலீஷாவை தன் கூடவே வைத்திருக்க, அவனுக்குதான் கடுப்பாகிப்போனது. இதில் மஹியின் நிலையை விளக்கவே தேவையில்லை. தன்னவளின முறைப்பையெல்லாம் கண்டுக்கொள்ளாது அவளை சீண்டிக்கொண்டே இருந்தான்.

அன்று, வரவேற்பு நிகழ்ச்சிக்காக விலையுயர்ந்த ஆடைகள் வீட்டிற்கே வரவழைக்கப்பட்டிருக்க, வேலைப்பாடுகள் நிறைந்த அந்த புடவைகள், லெஹெங்காக்களின் விலையைக் கேட்டு ஆடிப்போய்விட்டாள் அலீஷா. ஏதோ ஒரு தயக்கம் அவளுக்குள் தோன்ற, எதையும் பார்க்காது கைகளை பிசைந்தவாறு அமர்ந்திருந்தவளை கவனித்த ஆத்வி, அங்கிருந்த பழுப்பு நிற கற்கள் பதிந்த வெள்ளைநிற லெஹெங்காவை அவள் மேல் வைத்து, “அகிக்கு வைட் கலர்னா ரொம்ப பிடிக்கும்.” என்றாள் சிரிப்போடு.

அதை மெல்ல வருடியவாறு “ஆனா, இது ரொம்ப விலை அதிகமா இருக்கு. எனக்கு இந்த மாதிரியெல்லாம் உடுத்து பழக்கம் இல்லை.” திக்கித்திணறிச் சொன்னாள். அவளுடைய தயக்கம் ஆத்விக்கு புரிந்துப் போனது.

மெல்ல சிரித்தவள், “யூ க்னோ வாட் அலீ? என் அம்மா என் அப்பா வீட்டு ட்ரைவரோட பொண்ணு. உன்னை மாதிரிதான் அவங்களும். ஆரம்பத்துல ரொம்ப தாழ்வு மனப்பான்மை. பட், அப்பாவோட காதல் அதை மாத்திட்டு. காதலை பணத்தால எடை போடக் கூடாது. உனக்குள்ள இந்த தயக்கம் தேவையில்லை. அதுவும், ஐரா சிஈஓவோட வைஃப் செம்ம கெத்தா இருக்க வேணாமா?” சிரித்தவாறுச் சொல்ல, அலீஷாவுக்கும் தயக்கம் விட்டுப்போன உணர்வு!

சிரித்தவாறு லெஹெங்காவை தன்மேல் வைத்து, “எப்படி இருக்கு அக்கா?” என்றுகேட்டுக்கொண்டு எதேர்ச்சையாக திரும்பிய அலீஷா, சற்று தள்ளி தன்னையே இமைக்க மறந்து பார்த்துக்கொண்டிருந்த தன்னவனின் பார்வையில் முகம் சிவந்து போனாள்.

அதேநேரம், தன்னவளின் முறைப்பிற்கு பயந்து தூரத்திலிருந்தே புடவைகளை தன்னவளுக்கு நேராகப் பிடித்து விழிகளைச் சுருக்கி தன்னவளுக்கு பொருத்தமானதை மஹி ஆராய, இதைப் பார்த்த பெரியவர்களோ சிறியவர்களின் விளையாட்டைப் பார்த்து சிரித்துக்கொண்டார்கள் என்றால், உள்ளுக்குள் சிரித்தாலும் வெளியில் பொய்யாக முறைத்தாள் ஆத்வி.

நாட்கள் நகர்ந்து விழாவுக்கு முந்தைநாள் இரவு, ஆத்வி குளித்து முடித்து தலையை துவட்டியவாறு அறைக்குள் நுழைய, கட்டிலில் அமர்ந்திருந்தவனுக்கோ தன்னவளைப் பார்த்ததுமே ஹார்மோன்கள் தாறுமாறாக சுரக்க ஆரம்பித்தன. ஆனால், அவளோ அவனைக் கண்டுக்கொள்ளவேயில்லை.

அவள் பாட்டிற்கு கட்டிலில் தனதிடத்தில் அமர்ந்து அலைப்பேசியை நோண்ட ஆரம்பிக்க, மஹியோ விடாது அவளையேதான் பார்த்திருந்தான். அதுவும், மனைவி என்ற உரிமை வேறு. பார்வை தாறுமாறாக அவளை மேய, உள்ளுக்குள் உணர்ந்த சில்லெண்ற உணர்வில் விருட்டென தன்னவனைப் பார்த்தாள்.

அவனுடைய பார்வை மாற்றம் அவளுக்கு நன்றாகவே புரிந்துப் போனது. ஒற்றைப் புருவத்தை உயர்த்தி முறைத்தவள், தலகாணிச் சுவர் எழுப்ப, அதில் அவனவளுக்கோ கோபம் உச்சத்தை தொட்டது. வேகமாக தலகாணிகளை தூர வீசி தன்னவளை கட்டிலில் தள்ளி அவள் மேல் படர்ந்தவன், “என்னடி ரொம்ப ஓவராதான் பண்ற. உன் புருஷன்டி நானு. நியாபகம் இருக்கா, இல்லையா?” முறைத்தவாறுக் கேட்டான்.

அவனை தள்ள முயற்சித்தவாறு, “ஹவ் டேர் யூ? என்னை தொடாதேன்னு சொல்லியிருக்கேன்! என்னை எப்படியெல்லாம் டோர்ச்சர் பண்ண, எழுந்துருடா மொதல்ல!” ஆத்வி கத்த, “அடிங்க! டான்னு சொல்ற. உன்னை…” என்றவாறு அவளுடைய கழுத்தில் முகத்தை புதைத்தவன், தன் மீசையைக் கொண்டு உரச, கூச்சத்தில் சிரிக்க ஆரம்பித்தவளுக்கு, ஒருபக்கம் உணர்வுகள் வேறு தாறுமாறாக வேலை செய்ய ஆரம்பித்தது.

“தீரா, ப்ளீஸ்…” ஒருமாதிரிக் குரலில் அவள் சொல்ல, இத்தனைநேரம் விளையாட்டாகச் செய்துக்கொண்டிருந்தவன் அவளுடைய குரல் மாற்றத்தில் விருட்டென நிமிர்ந்துப் பார்த்தான். ஆத்வியோ சிவந்த முகமாக அவனை பார்க்க வெட்கப்பட்டு பார்வையை தாழ்த்திக்கொள்ள, ஏற்கனவே கிறங்கிப் போயிருந்தவன், அவளுடைய சிவந்த கன்னங்களைப் பார்த்ததும் மயங்கித்தான் போனான்.

அவளுடைய நாடியைப் பிடித்து கன்னத்தில் அழுந்த முத்தமிட்ட மஹி, இதழால் கன்னத்தை வருடியவாறு அவளிதழை நெருங்கி முத்தமிடப்போய் சற்று நிறுத்தி அவளுடைய விழிகளை நோக்கினான். ஆத்வியோ ஆர்வமாக தன்னவனையே பார்த்திருக்க, “சோரிம்மா, உன்னை கஷ்டப்படுத்தியிருக்க கூடாது.” தேய்ந்த குரலில் சொல்லிவிட்டு அவன் எழுந்துக்கொள்ளப் போக, அடுத்தகணம் அவனின் சட்டையைப் பற்றி தன்னை நோக்கி இழுத்திருந்தாள் அவள்.

மஹியோ அதிர்ந்து விழிக்க, “எப்போப்பாரு தப்புத்தப்பாவே எல்லாத்தையும் பண்ண வேண்டியது!” கேலியாகத் திட்டிவிட்டு அவளே தன்னிதழால் தன்னவனின் இதழை சிறைப்பிடித்திருக்க, முதலில் விழி விரித்தவன், பின் அவள் விலகப் போவதை உணர்ந்து வேகமாக அவளை தன்னோடு இறுக்கி அவளிதழை சிறைப்பிடித்திருக்க, சந்தோஷமாக அவனோடு இணங்கினாள் ஆத்வி.

அதேநேரம், கீர்த்தியோடு உறங்கிக்கொண்டிருந்த தன்னவளை ஒரு அறைக்குள் கடத்தி வந்து அவள் முன் ஒரு விண்ணப்பத்தோடு நின்றிருந்தான் அகஸ்டின்.

அவளோ அவனையும் காகிதத்தையும் மாறி மாறி கேள்வியாக நோக்க, “ரிசெப்ஷன் முடிஞ்சதும் மேடம் பெயின்ட்டிங் க்ளாஸ் போக போறீங்க, அதுவும், மங்ளூர்ல இருக்குற பெஸ்ட் பெயின்ட்டிங்  கொலேஜ்ல.” சிரிப்போடுச் சொல்ல, ‘ஆ…” என வாயைப் பிளந்தாள் அலீஷா.

அவளால் நம்பவே முடியவில்லை. “நிஜமாவா, நானா? முருகா! எனக்கு கையும் ஓடல காலும் ஓடலயே…” உச்சக்கட்ட சந்தோஷத்தில் அவள் துள்ளிக் குதிக்க, அவளையே ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தவன், “எலி…” கிறக்கமாக அழைத்தவாறு தன்னவளை அணைத்து கழுத்தில் முகத்தைப் புதைத்தான்.

“ரசகுல்லா, யாராச்சும் பார்த்தா அம்புட்டுதான். அதான் நாளைக்கு ஏற்பாடு பண்ணிருக்காங்கல்ல, அதுக்குள்ள என்ன அவசரம்?” அலீஷா நெளிய, “அடப்பாவத்த! நீதானேடி என்னை வர சொன்ன, இப்போ இப்படி பேசுற. நானும் பார்த்துட்டே இருக்கேன், ஆரம்பத்துலயிருந்து எல்லாத்தையும் பண்ணிட்டு எதுவும் தெரியாத பச்சபுள்ளையாட்டம் ஆக்ட் பண்ணிக்கிட்டு இருக்க.” உதட்டைச் சுழித்தான் அவன்.

அதில் குறும்பாகச் சிரித்தவள், “ஆமா, அப்படிதான் சொல்வேன், என்னடா பண்ணுவ என் ரசகுல்லா?” என்று கேட்டு புருவங்களை ஏற்றி இறக்க, “என்ன பண்ணுவேனா? எலி பிடிக்க பூனை என்ன பண்ணும்னு இப்போ காட்டுறேன்டி.” என்றவாறு அவளிடையை அழுந்தப் பற்றி கன்னத்தை அவன் கடித்து வைக்க, அடுத்து நடந்த சம்பவங்களுக்கு இருவருமே பொறுப்பு.

இப்படியே நாட்கள் சென்று, வரவேற்பு நிகழ்ச்சிக்கான நாளும் வந்தது.

பல வியாபார நண்பர்கள், தொழிலதிபர்கள் என விழாவுக்கு வந்திருக்க, அலீஷாவுடன் வேலைப் பார்த்த வேலையாட்களோ ‘அட இவளா?’ என்ற ரீதியில் பார்த்தார்கள் என்றால், ‘இந்த பொண்ண பார்க்கும் போதே தெரியுது, அவளோட அப்பா பெரிய பிஸ்னஸ் மேக்னட்டா இருக்கணும்.’ தங்களுக்குள்ளேயே பேசி கிசுகிசுத்துக்கொண்டனர் சில தொழில்துறை நண்பர்கள்.

இதில் யூடியூப் காணொளிகள், இணையத்தின் மூலமாக அலீஷாவின் புகைப்படத்தை ஏதேதோ பொய்யான தகவல்களோடு பலர் வதந்திகளைப் பரப்ப, ‘இந்த திருடிக்கு கிடைச்ச வாழ்வைப் பாருங்களேன்.’ உள்ளுக்குள் கருவிக்கொண்டனர் அலீஷாவைத் தெரிந்தவர்கள்.

ஆனால், இதையெல்லாம் கண்டுக்கொள்ளாது மேடையில் தன் பக்கத்தில் நின்றிருந்தவளை ரசித்துக்கொண்டிருந்தான் அகஸ்டின். அவளின் இடையைப் பற்றி அவன் தன்னோடு அணைத்திருக்க, அலீஷாவின் நிலைதான் பரிதாபம்.

இதற்குமுன் இது போன்ற ஆடைகளை அணிந்ததில்லை அவள். அந்த வேலைப்பாடுகள் நிறைந்த லெஹெங்காவை சுமந்துக்கொண்டு நிற்பதே அவளுக்கு அத்தனை கஷ்டமாக இருக்க, அகஸ்டினின் செயலில் நெளிந்துக்கொண்டு நின்றிருந்தாள். ஆனால், உள்ளுக்குள் அவளுக்கு ஒரு ஏக்கம். ‘நீ ஆசைப்பட்ட மாதிரி எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைச்சிட்டும்மா. என் தினு என் பக்கத்துல இருக்கான்ம்மா. ஆனா நீ…’ வானத்தைப் பார்த்து விரக்தியாகச் சிரித்துக்கொண்டாள்.

சரியாக, அகஸ்டின் அவளுடைய விழிகளை பொத்திக்கொள்ள, அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. “தினு, என்ன பண்ற?” அலீஷா தடுமாற, “வெயிட் எலி!” என்றவன், “சைத்து…” என்று குரல் கொடுக்க, “ஆல் ஓகே அகஸ்த்து!” என்ற மஹியின் குரல் அவளுக்குக் கேட்டது.

“இரண்டுபேரும் என்னதான் பண்றீங்க? கைய எடு ரசகுல்லா! கண்ணை பொத்துறன்னு பேருல என் மேக்கப்பையே கலைச்சிட்ட. முருகா…” புலம்பிக்கொண்டேச் சென்றவளின் வார்த்தைகள் அப்படியே நின்றன. இப்போது அகஸ்டின் கையை எடுத்திருக்க, கூடவே அவளுக்கென செய்த அவளெதிரே வைத்திருந்த மெழுகு பொம்மையையும் அவள் பாத்தாயிற்று.

அவளால் நம்பவே முடியவில்லை. அழுகை தொண்டையை அடைக்க, “அம்மா…” அந்த மெழுகு பொம்மையைப் பார்த்து அழுக ஆரம்பித்துவிட்டாள் அலீஷா. அவளுடைய அம்மாவின் உருவத்தை அப்படியே மஹி மெழுகால் வடிவமைத்திருக்க, மாதவியே நேரில் உயிரோடு நிற்பது போல் காட்டிசியளித்தது அது.

தன்னவளை ஆறுதலாக அணைத்துக்கொண்ட அகஸ்டின், “பிடிச்சிருக்கா எலி? இப்போ அம்மாவே நம்ம முன்னாடி நிக்கிறாங்க.” என்றுவிட்டுச் சிரிக்க, கொஞ்சமும் யோசிக்காது அகஸ்டினின் கழுத்தைக் கட்டி அவனிதழில் முத்தமிட்டாள் அலீஷா. அவனுக்குமே அதிர்ச்சிதான். மெல்ல அவளை விட்டு விலகியவன், “அம்மா பார்க்குறாங்கடி.” என்றுவிட்டு வெட்கப்பட்டுச் சிரிக்க, தன்னவனின் வெட்கம் இத்தனை அழகா? என்றுதான் அவளுக்கு தோன்றியது.

அடுத்து எல்லோரும் மேடையில் நடனமாட, மஹிக்கும் ஆத்விக்கும் நேற்று நடந்த நிகழ்வில் உண்டான தாக்கம் குறையவேயில்லை. மஹி அவளுடைய இடையை தன்னோடு அணைத்திருக்க, தன்னவனின் விழிகளைப் பார்க்க வெட்கப்பட்டு விழிகளை தாழ்த்தியவாறு ஆத்வி நடனமாட, அவளின் வெட்கத்தை ரசித்தவாறு விழிகளை அழுந்த முத்தமிட்டு மேலும் அவளை சிவக்க வைத்தான் மஹி.

இங்கு, அகஸ்டினும் தன்னவளோடு நடனமாட, அவனின் கழுத்தைக் கட்டிக்கொண்டிருந்த அலீஷாவுக்கு விழிகள் கலங்கிப் போயிருந்தன. அவளின் நெற்றியோடு நெற்றி முட்டியவன், “என்னாச்சுடி?” ஹஸ்கி குரலில் கேட்க, “லவ் யூ தினு.” பட்டென்று சொன்னாள் அலீஷா.

எப்போதும்போல் நடனமாடியவாறு அலீஷா முதல்தடவை காதலைச் சொன்ன தருணம்தான் அவனுக்கு நியாபகத்திற்கு வந்தது.

அவளுடைய இதழில் அழுந்த முத்தமிட்டவன், “பூனையோட எலிப்பொறிக்குள்ள எலி சிக்கிச்சோ, இல்லையோ? உன் பொறிக்குள்ள இந்த பூனைய சிக்க வச்சிட்ட.” கேலியாகச் சொல்லி, “இன்னைக்கு நைட் யார் பொறிக்குள்ள யாரு சிக்குறாங்கன்னு பார்க்குறேன்.” கிறக்கமாகச் சொல்லி அவளிடையை அழுந்தப் பற்ற, அவனுடைய பேச்சில் குப்பென்று சிவந்துவிட்டாள் அவள்.

இரண்டு வருடங்கள் கழித்து, லண்டனில்,

பல்லாயிரம் பேர் கூடியிருக்கும் அந்த பிரம்மாண்ட அரங்கத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் விழாவில் தொழில்துறையில் சாதித்தவர்கள், பல முண்ணனி திரைப்பட நடிகர்கள், இயக்குனர்கள் என பலபேர் வீற்றிருந்தனர்.

ஒவ்வொரு துறையிலும் சாதனை செய்தவர்களுக்கு விருது வழங்கப்படும் விழாவே அது!

சரியாக, சிறந்த இளம் தொழிலதிபருக்கான விருது அறிவிக்கப்பட, எத்தனையோ பேரின் பார்வைகள் மேடையில் ஆர்வமாக படிந்திருந்தன. ஒவ்வொரு தொழில் புரியும் ஆடவர்களும் ‘தாமாக இருக்கக் கூடாதா?’ என்ற ரீதியில் மேடையையே பார்த்திருக்க, “த அவார்ட் கோஸ் டூ அகஸ்டின் சஞ்சய்” என்று அறிவிப்பாளர் அறிவித்ததும், அங்கிருந்தவர்களின் பார்வை, அணிந்திருந்த கோட்டை சரிசெய்தவாறு மேடையிலேறியவனைப் பார்த்ததும் ஆச்சரியமாக விரிந்தன.

இரண்டு வருடங்கள் வியாபாரத்தில் ஈடுபட்டு பல முகங்களை சந்தித்ததன் விளைவாக அவனுடைய விழிகளில் ஒரு அழுத்தம் இருக்க, விருதை புன்னகையோடு வாங்கிக்கொண்ட அகஸ்டினுக்கு சிரிப்புதான் வந்தது.

நான்கு வருடங்களுக்கு முன் எவரது பேச்சையும் கேட்காது, எதிலும் ஈடுபாடின்றி, இஷ்டம் போல் வாழ்க்கையை வாழ்ந்தவன், இப்போது ஒரு விருதை கையிலேந்தியிருக்கிறான். அவனால் நம்பவே முடியவில்லை.

அலீஷாவோ தன் நிறைமாத வயிற்றை தள்ளிக்கொண்டு தன்னவன் விருது வாங்குவதை அலைப்பேசியில் படம் பிடித்துக்கொண்டு வாய்கொள்ளாப் புன்னகையுடன் அமர்ந்திருக்க, விருதைப் பார்த்தவாறு ஆழ்ந்த பெருமூச்செடுத்தவன், “ஐ டெடிகேட் திஸ் அவார்ட் டூ மை வர்க்கர்ஸ் என்ட் மாயா மஹேஷ்வரி. மை அம்மு.” என்றுவிட்டுச் சிரித்தான்.

அதேநேரம், இத்தாலியில் தன் தாத்தாவுடைய தோட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மர வீட்டில் தன்னவனின் தோளில் சாய்ந்தவாறு ஒருபக்கம் முழுக்க பூத்திருந்த வெள்ளை ரோஜாக்களை ரசித்தவாறு மாயா அமர்ந்திருக்க, தன் மனைவியின் காதோடு ஒரு வெள்ளை ரோஜாவை வைத்த ரோஹன், “வயசானாலும் என் பொண்டாட்டி அழகு குறையவே இல்லை.” கேலியாகச் சொன்னார்.

அதில் உதட்டைச் சுழித்தவர், “அப்போ சார் மட்டும் இருபத்தைஞ்சு வயசு பையனோ?” பதிலுக்குக் கேட்க, “இப்போவும் என்னை மஹியோட அண்ணன்னுதான் சொல்வாங்க.” கோலரை தூக்கி விட்டுக்கொண்டார் அவர்.

வாயைப் பொத்திச் சிரித்தவாறு, “நினைப்புதான் பொழப்பை கெடுக்குமாக்கும்!” மாயா தன்னவனின் காலை வார, அவரோ “அடிங்க…” என்று முறைக்க முயன்று பக்கென்று சிரித்து மாயாவின் நெற்றியில் அழுந்த முத்தமிட்டார்.

அந்த வயதிலும் குறையாத அவ்விருவரின் காதலைப் பார்த்து அந்த சூரிய அஸ்தனமன நேரத்தில் பூக்கள் கூட பொறாமைப்பட்டு தன்னிதழ்களை சுருக்கிக்கொண்டன.

                  
               ****சுபம்****

-ஷேஹா ஸகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!