KKRI – 14

KKRI – 14

அத்தியாயம் – 14

அவனை ஊருக்கு அழைத்துச் செல்வதில் மும்பரமாக இருந்தவளின் மன வருத்தத்தை உணராமல் அவனும் அமைதியாக இருந்தான்.

ஆனால் ஊருக்குச் செல்லும் நாள் நெருங்க நெருங்க அவளின் வயிற்றில் பயபந்து உருண்டது.

கிருஷ்ணாவை ஏமாற்றிவிட்டு அந்த வீட்டைவிட்டு வந்தாள் என்ற நினைவெல்லாம் அவளின் கண்முன்னே வந்து சென்றது.

அந்த ஒரு வாரத்தில் நடந்த அனைத்து நிகழ்வுகளும் அவளின் மனதில் பேயாட்டம் போட்டது. இரவு படுத்தால் தூக்கம் வராமல் அங்கும் இங்கும் புரண்டபடியே படுத்திருந்தவளின் மனதில் நிம்மதி என்பது மருந்துக்கும் இல்லை.

அவன் உறங்கிவிட்டானா என்று பார்க்க எழுந்து அமர்ந்த மது கிருஷ்ணாவின் முகம் பார்த்தாள்.

அவனோ விழிமூடிப் படுத்திருக்க அவனின் மார்புகள் ஏறி இறங்குவதைப் பார்த்து அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை உணர்ந்து அவளின் விழிநீர் பெருகியது.

அவனின் ஊருக்குச் சென்றதும்  குடும்பத்தின் பேச்சைக்கேட்டு தன்னை வேண்டாம் என்று சொல்லிவிடுவானோ என்று நினைத்தவளின் மனதில் பாரம் ஏறிக்கொண்டே செல்ல அவளின் அழுகை அதிகரித்தது.

அவள் யாருக்காகவும் எதற்காகவும் இதுவரை அழுததில்லை. தனக்கு பேச்சு போய்விட்டதே என்று ஒருமுறை அழுதாள். அடுத்து கிருஷ்ணா லண்டன் வந்த அன்று அழுதது. அந்தபிறகு இன்றுதான் தன்னை மீறி அழுகிறாள்.

ஏனோ கிருஷ்ணா தன்னை வேண்டாம் என்று சொல்லி விடுவானோ என்று அவளுக்குள் ஒரு பயம் வந்து போனது. இப்படியே எவ்வளவு நேரம் அழுதலோ?

அவனிடம் அசைவை உணர்ந்து திரும்பியவள், ‘அவனை எழுப்பிக் கேட்கலாமா.. ’ என்றவள் அவனின் அருகே சென்று  ‘கிருஷ்ணா.. கிருஷ்ணா..’ என்ற மது அவனின் தோளைத்தட்டி எழுப்பவிட விழிதிறந்து பார்த்தான்.

மதுவின் முகம் நிலவோடு போட்டிபோட அவளை இழுத்து மார்பில் போட்டுக்கொண்டவன் மீண்டும் தன்னுடைய தூக்கத்தைத் தொடர்ந்தான்.

அவனின் முகத்தை சிறிதுநேரம் மௌனமாக பார்த்தவள் மீண்டும் அவனை எழுப்ப, “என்ன மது நடுராத்திரியில் எழுப்பற. காலையில் ஊருக்குப் போக எல்லா ஏற்பாடும் ரெடி பண்ணிட்டேன். அதை உன்னிடம் ஆயிரம் முறை சொல்லியாச்சு. ஆனால் நீ கேட்ட பாடில்லை..” என்றவன் எழுந்து அமர்ந்தான்.

அவனின் கேள்விகளுக்கு அவளிடம் பதில்லை என்று உணர்ந்த கிருஷ்ணா ஒருவிரலால் அவளின் முகத்தை நிமிர்ந்தி விழிகளைப் பார்க்க விடிவிளக்கின் ஒளியில் கூட அவளின் கண்கள் கலங்கியிருப்பது கண்டு, “மது என்னாச்சுடா..” என்று பதட்டத்துடன் வினாவினான்.

அவனின் கைகளைத் தட்டிவிட்டு அவனின் மார்பில் புதைந்தவளின்  மனவருத்தம் புரியாமல் குழப்பத்துடன் அவளின் முதுகை வருடி ஆறுதல் அளித்தான் கிருஷ்ணா.

சிறிதுநேரம் சென்றபிறகு நிமிர்ந்த மதுவின் விழிகளிரண்டும் சிவந்திருக்க “மது எதுக்கு இப்போ அழுகிற..” என்று மெல்ல அவளிடம் கேட்டான்.

‘அங்க ஊருக்குப் போனதும் உன்னோட குடும்பத்தில் இருப்பவர்களின் பேச்சைக்கேட்டு என்னை நீ வேண்டான்னு ஒதுக்க மாட்டல்ல கிருஷ்ணா. எனக்கு குரல் மட்டும்தான் வரல. ஆனா எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு..’ என்று கண்களில் கண்ணீர் வழிய உதடுகள் துடிக்க கூறியவளை இழுத்து மார்புடன் அணைத்துக்கொண்டான் கிருஷ்ணா.

அவள் தன் காதலை இப்படியொரு சூழ்நிலையில் சொல்வாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.

அந்தநொடி அவளின் காதல் மனதைத் துல்லியமாக உணர்ந்த கிருஷ்ணாவின் கண்களிலும் கண்ணீர் பெருகியது.

ஆண்கள் அழுகக்கூடாது என்ற கட்டுப்பாட்டை மறந்து அவனின் கண்களும் கண்ணீர் பெருகியது.

“என்ன லூசு மாதிரி உளற. உன்னை வேண்டான்னு சொல்ல எனக்கு என்ன பைத்தியமா” என்று அவளை சமாதானம் செய்ய நினைத்தான்.

‘நீ என்னை வேண்டான்னு சொல்லிட்டா..’ என்றவள் பயத்துடன் கேட்டாள்.

“மது என்னடா இப்படி பயப்படற. என்னைப்பற்றி உனக்கு தெரியாதா?” என்றவன் அவளின் விழிகளை ஊடுருவிய வண்ணம் கேட்க மறுப்பாக தலையசைத்த மது, ‘கிருஷ்ணா என் பயம் உனக்கு புரியல..’ என்றாள்.

அவளின் இதழசைவை உணர்ந்த கிருஷ்ணா, “மது இங்கே பாரு..” என்று அவளின் முகத்தை வலுக்கட்டாயமாக நிமிர்த்தியவன், “யார் என்ன சொன்னாலும் சரி. என் மதுவை நான் விட்டுக்கொடுக்க மாட்டேன் போதுமா.. இப்போ நீ தூங்கு..” என்று அவளை இழுத்து மார்புடன் சாய்த்துக் கொண்டான்.

அடுத்த சிலநொடியில் மது தூங்கிவிடவே, ‘இவ்வளவு குழப்பத்தை மனசில் வெச்சுகிட்டு தூங்காமல் இருந்திருக்கிற..’ அவளைப்பற்றிய சிந்தனையுடன் விடியும் வரையில் தூங்காமல் விழித்திருந்தான் கிருஷ்ணா.

அவனின் கன்னத்தை பிடித்து நறுக்கென்று கிள்ளிவைக்க,”ஆஆஆ..” என்ற சத்தத்துடன் கண்விழித்தவன், “மது ஏன் இப்போ கிள்ளி வைக்கிற..” என்று புரியாமல் கேட்டான்.

அவளின் முகத்திலிருந்த வருத்ததை உணர்ந்து அருகிலிருந்த ரோஜாபூ மற்றும் சாக்லேட்டை அவளிடம் கொடுத்தவன் “என்னோட பப்ளிமாசிற்கு என்ன கவலை. உன் முகமே சரியில்ல என்ன விஷயம்..” என்று விரலால் அவளின் முகத்தில் கோலம்போட்டுக் கொண்டே கேட்டான் கிருஷ்ணா.

அவனை இமைக்காமல் பார்த்தவளோ, ‘நான் ஊருக்கு வந்தா அங்கிருக்கிறவங்க என்னை ஒரு காட்சி பொருள் மாதிரி பார்க்க மாட்டாங்க இல்ல..’ அவனிடம் சந்தேகம் கேட்ட மதுவின் மனம் அவனுக்கு புரிந்துவிட்டது.

“நோ பப்ளிமாஸ். நான் இருக்கும் போது நீ ஏன் கவலைப்படற..” என்று புன்னகையுடன் கூறியவனின் கன்னத்தில் முத்தமிட்டவளோ ‘ரொம்ப தேங்க்ஸ் கிருஷ்ணா..’ என்று அவனின் கன்னத்தில் முத்தமிட்டு ஓடிய மதுவின் மீது அவனின் பார்வை நிலைத்தது.

“மது மெதுவா போ.. கீழே விழுந்து காலை உடச்சுக்காதே..” என்று கண்டித்த கிருஷ்ணாவின் உதட்டில் புன்னகை அரும்பியது.

“மதுமதி சின்ன வயதில் எதிர்பாராமல் கீழே விழுந்து கழுத்தில் கல் குத்தியதால் அவள் பேசாமல் போனது. அவளைப் பரிசோதித்த டாக்டரும்  அவள் சீக்கிரமே பேசிவிடுவாள் என்று தான் சொன்னாங்க. ஆனா அவ பேசவே இல்ல. நாங்களும் அவளை அப்படியே விட்டுவிட்டோம்..” என்ற நிர்மலாவின் குரல் அவனின் காதில் ஒலித்தது.

அவனின் ஊருக்குச் செல்வதை நினைத்து அவள் சந்தோஷத்தில் ஓடுவதைக் கண்டு அவனின் மனம் சிந்தனையில் ஆழ்ந்தது. கொஞ்சநேரத்தில் தயாராகி வந்த மது அவனின் தோளில் கைவைத்து, ‘கிருஷ்ணா..’ என்றழைத்தாள்.

அவளை நிமிர்ந்து பார்த்த கிருஷ்ணா அவளின் இடையோடு கைகொடுத்து அனைத்து அவளின் வயிற்றில் முகம் புதைத்தான். சிறிதுநேரம் ஒன்றும் புரியாமல் அவனின் கூந்தலை வருடிவிட்டாள் மதுமதி.

சிறிதுநேரத்தில் அவனே எழுந்து குளிக்க குளியலறைக்குள் சென்று மறைய மற்ற வேலைகளைக் கவனித்தாள் மது. அதன்பிறகு ஜானுவை பிரீத்தியிடம் ஒப்படைத்துவிட்டு இருவரும் ஊருக்குக் கிளம்பினர்.

பேருந்தின் ஜன்னலோரம் அமர்ந்த மதுவின் அருகே அமர்ந்த கிருஷ்ணாவின் தோளில் சாய்ந்த மது தன்னை மறந்து உறங்கிவிட்டாள்.

நேற்று இரவு தூங்காமல் இருந்தவளின் விழிகளை இப்போது தூக்கம் தழுவியது.

அவளைப் பற்றியசிந்தனையுடன் அமர்ந்திருந்தவனின் மனம் மீண்டும் அலைபாய்ந்தது.

மறுநாள் பொழுது விடியும் முன்னரே வீட்டிற்கு சென்ற கிருஷ்ணா காலிங்பெல்லை அடிக்க தாரிகா வந்து கதவைத் திறந்தாள்.

தங்கையின் முகம் பார்த்ததும் அதுவரை இருந்த கோபமெல்லாம் சென்ற இடம் தெரியாமல் சென்று மறைந்தது.

“என்ன குட்டிமா நீ இன்னும் தூங்காமல் இருக்கிற..” என்று அவனின் கேள்விக்கு புன்னகைத்தாள் தாரிகா..

“என்ன அண்ணா இந்த நேரத்தில் வந்து நிற்கிற..” என்ற கேள்வியுடன் அவன் வீட்டிற்குள் நுழைய வழிவிட்டு நின்றாள்.

“முதல்ல நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு” என்றவன் பாசத்துடன் தங்கையின் கூந்தலை வருடிவிடவே,

“எனக்கு தூக்கம் வரல அண்ணா..” என்று சொல்லிவிட்டு அவனிடமிருந்து பேக்கை வாங்கி சோபாவில் வைத்தாள்.

“காபி சாப்பிடுகிறாயா?” என்று கேட்டுகொண்டே சமையலறைக்குள் நுழைய, “குட்டிம்மா அப்பா பார்த்த பொண்ணு பற்றி நீ என்ன நினைக்கிற..” என்றவன் அவளை பின் தொடர்ந்தான்..

அவனின் கேள்வியில் நின்று திரும்பிப் பார்த்த தாரிகா, “என்னன்னா ஒரு முடிவுடன் தான் வந்திருக்கிற போல..” என்று குறும்புடன் புன்னகைத்தாள்.

“எனக்கு இந்த பெண்ணைப் பிடிக்கலன்னு சொன்னா அம்மாவுக்கு பதில் சொல்ல முடியாது..” என்று நிறுத்திவிட்டு தங்கையை நிமிர்ந்து பார்த்தான் கிருஷ்ணா.

“அப்போ அப்பாவோட முடிவுக்கு நீ கட்டுப்படுகிறாயா என்ன?” என்று கேள்வியாக புருவம் உயர்த்தினாள்.

தன்னைக் கண்டுகொண்டாள் என்பதை புரிந்துகொண்ட கிருஷ்ணா, “நான் வேற என்ன பண்றது..” என்று கேட்டுகொண்டே அங்கிருந்த சமையல்திட்டில் ஏறியமர்ந்தான்.

“அப்போ இந்த பொண்ணு ஓகே..” என்றவள் நிறுத்தி தமையனின் முகத்தை பார்த்துவிட்டு மீண்டும் தொடர்ந்து,

“அவங்க பார்க்க அழகாக இருக்காங்க. ஆனால் அவளோட கேரக்டர் எப்படின்னு தெரியல அண்ணா. நம்ம சங்கீதா அண்ணி மாதிரி இருந்தால் வீடு அழகாக இருக்கு..” என்றவள் தமையனுக்கு காபி போதுவதில் கவனம் செலுத்தினாள்.

“அண்ணாவின் குணத்திற்கு அந்த பொண்ணு செட் ஆவாளா?” என்ற கேள்விக்கு அவளிடம் பதில் இல்லை. அவனின் கோபமறிந்து அவள் மெளனமாக இருக்கிறாள் என்று உணர்ந்தவன் தங்கையிடம் ஒரு விஷயத்தை பகிர்ந்தான்.

அவனின் பேச்சில் ஏற்பட பாதிப்பால் முதலில் கலங்கிய தாரிகாவின் விழிகள் அதன்பிறகு அவன் சொன்ன விசயத்தில் அவளின் விழிகள் வியப்பில் விரிந்திட, “சரியான கேடி..” என்ற அவளின் உதட்டில் புன்னகை அரும்பியது.

இருவரும் சேர்ந்து சிறிதுநேரம் கலகலப்பாக பேசி சிரிக்க இரவு நேரம் பஸில் அமர்ந்தவண்ணம் வந்தவன் களைப்பில் சோபாவில் உறங்கிவிட அண்ணனுடன் பேசியபடியே எதிர் சோபாவில் சாய்ந்து உறங்கிவிட்டாள்.

காலை விடிந்ததும்செந்தாமரையும், சங்கீதாவும் சமையலறைக்கு வர சோபாவில் உறங்கிக் கொண்டிருந்த மகனைப் பார்த்தும், “இவன் எப்பொழுது வந்தான்..” என்ற கேள்வியுடன் அவனை எழுப்பினார் தாமரை.

அவன் கண்விழித்ததும், “கண்ணா நைட் எத்தனை மணிக்குப்பா வந்த?” என்று கேட்க, “விடியற்காலை மூணு மணி இருக்கும்மா..” என்றவன் சோம்பல் முறித்தான்.

“இவதான் வந்து கதவை திறந்தாளா?” என்ற சங்கீதாவின் கேள்விக்கு தலையசைத்த மகனிடம் எப்படி பேச்சை தொடங்குவது என்று தாமரை மனதிற்குள் தடுமாறிக் கொண்டிருக்க சங்கீதா எப்பொழுதும் போலவே சமையலைக் கவனிக்க சென்றாள்.

“அந்த பெண்ணைப் பார்க்க எப்பொழுது போறதுனு சொல்லுங்க.. நான் ஆபீஸிற்கு லீவ் சொல்லணும்..” என்று திருமணத்திற்கு மறைமுகமாக சம்மதம் சொல்லிவிட்டு தன்னுடைய அறைக்குள் சென்று மறைந்தான்.

அவனிடம் இவ்வளவு சீக்கிரம் சம்மதம் கிடைக்கும் என்று எதிர்பார்க்காத தாமரை, “இவனா சம்மதம் சொன்னது?” என்ற அதிர்ச்சியுடன் அமர்ந்திருந்தார்.

அவன் சம்மதம் சொன்னதே போதுமென்று அவர்கள் அடுத்தடுத்த வேளைகளில் ஈடுபடவே, கிருஷ்ணாவோ தனக்கும் அதற்கும் எந்தவிதமான சம்மதமும் இல்லை என்பது போல இயல்பாகவே இருந்தான்.

அலைபேசியின் சத்தத்தில் அவனின் கவனம் கலந்துவிட அதன் திரையைக் கண்டவன், ‘ஊருக்கு போனதும் போன் பண்ண சொன்னான்.. நான் மறந்துவிட்டேன் என்று திட்ட போகிறான்..’ என்று நினைத்தவன் போனை எடுத்தான்.

“ஹலோ ராகவ் சொல்லுடா..” என்றான்

“ஏண்டா ஊருக்கு போய் இரண்டு வாரம் ஆச்சு. நீயா போன் பண்ணுவ என்று நினைத்தால் அது நடக்கவே நடக்காது போல..” என்றவனின் குரலில் அவனின் கோபம் வெளிப்பட்டது..

“ஸாரி ராகவ்.. ஊருக்கு வந்த பிறகு என்னோட மனசு ஒரு நிலையில் இல்ல..” பெண் பார்க்க போகும் விஷயத்தை அவனிடம் சொல்லாமல் மறைத்துவிட்டான்.

அவனின் குரலில் இருந்தது வெளிப்பட்ட சோர்வை உணர்ந்து, “கொஞ்சம் நிதானமா யோசிச்ச ஏதாவது தீர்வு கிடைக்கும் கிருஷ்ணா. உன்னோட கோபம்தான் உன்னோட முதல் எதிரி அதை மட்டும் மறந்துவிடாதே..” என்று அவனுக்கு நினைவுப்படுத்தினான்.

அவன் சொல்வதில் இருந்த உண்மை உணர்ந்து அமைதியாக இருந்தான் கிருஷ்ணா.

அதே நேரத்தில் சோகத்தின் மொத்த ரூபமாக அமர்ந்திருந்த மதுவைப் பார்த்ததும், “இவளுக்கு என்னாச்சு..” என்றவனின் கேள்வி மறுபக்கம் இருந்த கிருஷ்ணாவின் கவனத்தை ஈர்த்தது.

“என்னடா சொல்ற..” என்றவன் புரியாமல் கேட்ட அவனின் குரல்கேட்டதும் மீண்டும் அவனின் மனம் மாறிவிட, “நம்ம மதுதான்.. ரொம்ப சோகமாக உட்கார்ந்திருக்கிற..”என்றவன் கைகடிகாரத்தைப் பார்த்தான்.

“ஓ மணி ஆறு ஆகிருச்சா.. அதன் மேடம் இப்படி உட்கார்ந்திருக்காங்க..” என்று ராகவ் அர்த்தத்துடன் புன்னகைக்க கிருஷ்ணாவிற்கு முதலில் அவனின் பேச்சு புரியவில்லை. அதற்கான காரணத்தைக் கேட்கவும் அவனின் மனம் இடம் தரவில்லை.

மறுப்பக்கம் அமைதி நிலவிட, “ஒரு குரலுக்கு அடிமையான நெஞ்சமது..”என்று ராகவ் மீண்டும் அவளிருக்கும் திசையைத் திரும்பிப் பார்க்க அவன் சொன்னதை கவனிக்காமல் காற்றில் விட்டான் கிருஷ்ணா.

“அவளை விடு ராகவ். உன்னோட வேலை எப்படி போகுது..” என்றவன் பேச்சை திசைதிருப்பினான்.

“இன்னும் ஒரு மாதத்தில் ப்ராஜெக்ட் விஷயமாக லண்டன் போக வாய்ப்பு வரும் என்று டீம் லீட் மது சொல்லிட்டு இருந்தா. அவ போகமாட்டேன்னு சொன்ன எங்களுக்கு போக ஒரு சான்ஸ் இருக்கும். எல்லாம் மதுவோட முடிவில் இருக்கு..” என்றான்.

அதன்பிறகு சிறிதுநேரம் பேசிவிட்டு அவன் போனை வைத்துவிட்டான். அதற்குள் விஷ்ணுவிடமிருந்து போன் வரவே மாடியிலிருந்து கீழிறங்கிச் சென்றாள் மது.

மேற்கே சிவந்த வானத்தை நோக்கியபடியே நின்றிருந்த கிருஷ்ணாவின் மனம் சிந்தனையில் ஆழ்ந்தது. மறுநாள் காலை பொண்ணு பார்க்க போய்த்தான் ஆகவேண்டும் என்ற முடிவிற்கு வந்தவன் ஆழ மூச்செடுத்து தன்னை சமநிலைக்கு கொண்டு வந்தான்.

இரவு உணவுகளை செய்து முடித்த மது தாயின் அருகில் வந்து, ‘அம்மா நான் அப்பாக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு வருகிறேன்..’ என்று அவரின் தனியறைக்குள் நுழைந்தாள்.

கட்டிலில் படுத்திருந்த தந்தையின் அருகில் சென்ற மதுமதி மெல்ல அவரின் கையைத் தொடவே அதில் உணர்வு பெற்றவர், “குட்டிம்மா..” என்று செல்லமாக மகளை அழைத்தவர் அவளை இழுத்து அருகில் அமரவைத்தார்.

“சாப்பிட்டியா?” என்ற கேள்விக்கு புன்னகையுடன் தலையசைத்தாள் மகள். அவள் அவரின் கையில் சாப்பாட்டைக் கொடுத்து, ‘சாப்பிடுங்க..’ என்றதும் அவரும் மகளின் பேச்சிற்கு மறுப்பு சொல்லாமல் சாப்பிட்டார்.

அவளை இப்படியொரு நிலையில் காணும் பொழுதெல்லாம் அவரின் மனம் வலித்தது. இனிவரும் நாட்களில் தன்னோட மகள் பேசுவாள் என்று தன்னை தானே சமாதானம் செய்து கொண்டது அவரின் மனம்!

“பஸ் கொஞ்சநேரம் நிற்கும் ஏதாவது வாங்கணுன்னா இறங்கி வாங்கிகோங்க..” என்ற கண்டேக்டர் குரல்கேட்டு நிஜத்திற்கு திரும்பியது கிருஷ்ணாவின் மனது.

error: Content is protected !!