Kathal Diary – 5

e2fc235cae29b7d4f7005a717ec84563

தென்றலின் மனம்

அன்று மாலை கல்லூரி வேலை முடிந்து வீடு திரும்பிய கதிர் ரிப்ரெஷ் ஆகிவிட்டு வந்து காபி போட்டு எடுத்துகொண்டு தன்னறைக்குள் சென்றான். அன்று இன்டெர்னல் எக்ஸாம் பேப்பர் திருத்திவிட்டு அவன் நிமிரும் போது மணி எட்டு. கைகளை தூக்கி சோம்பல் முறித்துவிட்டு இரவு உணவை தயார் செய்தான்.

இதற்கிடையே தென்றல் வீட்டிலிருந்து போன் செய்ய அவளோடு பேசியபடியே தோசை செய்து சாப்பிட்டுவிட்டு மீண்டும் பால்கனியில் வந்து அமர்ந்தான். அவள் சிறிதுநேரம் பேசிவிட்டு போனை வைத்துவிட வானத்தை பார்த்தான் ஐந்தாம் பிறை வானில் சுடர் ஒளி வீச தன் மெல்லிய கானம் எங்கிருந்தோ கேட்டது..

“ஒரு வரி நீ.. ஒரு வரி நான்

திருக்குறள் நாம் உன்னை சொன்னேன்

தனி தனியே பிரித்து வைத்தால்

பொருள் தருமோ கவிதை இங்கே” என்ற வரிகள் அவனின் மனதில் அவளின் நினைவுகளைத் தூண்டிவிட்டது. தன்னறைக்குள் சென்று அவளின் டைரியை எடுத்து வந்தான்.

அவள் எழுதிய முதல் டைரி…

அவன் முதல் பக்கத்தை புரட்டிட அவளின் ஏழு வயது புகைப்படம் முதல் பக்கத்தில் இருந்தது. அடுத்த பக்கத்தில் குண்டு குண்டாக மணி மணியாக இருந்த அவளின் எழுத்துகளை வருடியது அவனின் விரல்கள்.

இந்த வீட்டிற்கு நான் வந்தபோது எல்லோரும் என்னோட பேசினாங்க கதிர்மாமாவைத் தவிர. அவருக்கு நான் வந்தது பிடிக்கல. கதிர் செழியன் மாமாவின் மகன். எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும். நான் பேச போன விலகி போயிருவாங்க. எல்லோரும் தானா வந்து என்னுடன் பேசறாங்க. அதுக்கு நான் என்ன பண்றது?

அவர் மட்டும் தனியா ரூமில் இருப்பதைப் பார்க்கவே மனசு கஷ்டமா இருக்கு. தென்றல் கூட அவரிடம் பேசறது இல்ல. ஆன அவரு என்னை திட்டவே இல்ல. என்னிடம் சண்டை போடல. அதே நேரத்தில் என்னோட இயல்பா பேசல. நான் என்ன பண்ணேன்?’ என்று ஏக்கத்துடன் எழுதியிருந்தாள்.

‘பக்கி அந்த வயசில் என்ன எல்லாம் எழுதி வெச்சிருக்கு பாரு’ என்று நினைத்தவனுக்கு சிரிப்புதான் வந்தது. அந்த டைரி அவளிடம் எப்படி வந்தது என்று அவன் நினைக்கும்போது இப்போதும் உடல் சிலிர்த்தது.

அவள் வீட்டிற்கு வந்த நாளில் இருந்து தந்தை – தாய் இருவருக்கும் அவள் செல்லமாகிவிட தனிமையை உணர்ந்தான் கதிர். தென்றல் கூட அவனோடு பேசுவதை நிறுத்தி இருந்தாள். அந்த அளவிற்கு இனியா அவர்களின் மனதில் இடம்பிடித்தாள். அவனின் நினைவுகள் கடந்த காலம் நோக்கிச் சென்றது.

அதன்பிறகு அவர்கள் நால்வரும் இருக்கும் இடத்தில் கதிர் இருக்க மாட்டான். அவன் சாப்பிடும் நேரம் தவிர பள்ளிக்கூடம், மாலை ப்ளே கிரவுண்டு இதெல்லாம் நேரத்தை செலுத்திவிட்டு அவன் வீடு வரும்போது இரவு ஆகிவிடும்.

ஒரு வழியில் நண்பர்கள் பட்டாளம் அவனுக்கு தனிமையை கொடுக்காமல் இருக்க அவனும் அவளின் வரவில் ஏற்றப்பட்ட சிறு விரிசலை மறந்தான். அந்த வயதில் தாய் தந்தையை இழந்துவிட்டு வந்தவளின் மீது பொறாமை வந்தது. அவள் எந்தநேரம் ஏதோவொரு மூலையில் சாய்ந்து சோகமாக இருப்பதை பார்க்கும்போது அவனுக்கு பாவமாக இருக்கும்.

தன்னுடைய தங்கையைவிட கொஞ்சம் பெரியவள் என்று நினைத்தவன் விருப்பத்துடன் தாய் தந்தையிடம் இருந்து சிறிதுநேரம் விலகினான். அவள் தன் எதிரே வரும்போது வேண்டுமென்றே பேசாமல் செல்வது இந்த மாதிரி செய்து அவளின் கவனத்தை திசை திருப்பினான்.

கொஞ்சம் கொஞ்சமாக அவள் புன்னகைக்க ஆரம்பிக்க இவனுக்குள் காதல் என்ற விதை விழுத்தது. அவள் பள்ளிக்கூடம் சென்றுவர தொடங்கினாள்.

ஒருநாள் மாலை ஸ்கூல் முடிந்து வீடு திரும்பியதும் இவன் வழக்கம்போல படிக்க சென்று அமர்ந்தான். அப்போது வாசலில் நிழலாட கண்டு அவன் நிமிர்ந்து பார்க்க, “எனக்கு இந்த கணக்கு புரியல. அம்மா கிட்ட கேட்டேன் உங்ககிட்ட கேட்க சொன்னாங்க” என்றாள் மெல்லிய குரலில்.

“வா” என்றவன் அவளின் புத்தகத்தை வாங்கிப் பார்த்துவிட்டு அருகில் இருந்த நோட்டை வைத்து அவன் சொல்லிதர அவள் கவனமாக கவனித்தாள். சில குழந்தைகள் படிப்பு என்று அமர்ந்தாலே விளையாட்டைப் பற்றி யோசிக்கும் இவளின் கவனம் முழுவதும் அவன் சொல்லி தருவதில் இருந்தது.

அவன் கணக்கு சொல்லிக் கொடுத்துவிட்டு இன்னொரு கணக்கை காட்டி, “இதுக்கு விடை எழுது” என்றதும் சரியென தலையசைத்துவிட்டு வேகமாக கணக்கை போட்டு அவனின் கையில் கொடுத்தாள்.

“என்ன அதுக்குள்ளே போட்டுட்டியா?” அவன் நம்பாமல் கேட்டபடி நோட்டை வாங்கி அவள் போட்ட கணக்கு சரியா என்று பார்த்தான். அவன் சொல்லிக் கொடுத்த ஸ்டெப்ஸ் எதுவும் மாறாமல் கணக்கின் விடையை தெளிவாக கொண்டு வந்திருந்தாள்.

“சூப்பர்” என்று அவன் அவளை பாராட்ட அன்றைய நாளில் இருந்தே இருவரும் சேர்ந்து படிக்கும் நிலை ஏற்பட்டது. தென்றலும் இவர்களுடன் இணைந்தாள். மூவரும் சேர்ந்து படிக்க நேரம் செல்வதே தெரியாது.

நாட்கள் ரெக்கைகட்டி பறக்க கதிர் ஒரு நாள் இனியா மற்றும் தென்றல் இருவருக்கும் டைரி எழுத கற்றுகொடுக்க, “போ அண்ணா இதெல்லாம் யாரு எழுதுவா” என்று அவனின் பேச்சை அலட்சியம் செய்தபடி அவள் எழுந்து சென்றுவிட்டாள்.

ஆனால் இனியா மட்டும் நகராமல் இருக்க, “நீ ஏன் இங்கே உட்கார்ந்திருக்கிற” என்றான் எரிச்சலோடு.

“நீங்க எனக்கு டைரி எழுத சொல்லித்தாங்க” என்றாள் மெல்லிய குரல் என்றபோதும் அதில் அழுத்தம் கூடியிருந்தது.

அவனும் டைரி எழுத கற்றுத்தர அதற்கு மறுநாளே தந்தையிடம் சொல்லி டைரியை வாங்க நினைக்கும்போது அவனின் கையில் இருந்த டைரி கண்டு, “இதை எனக்கு தாங்க” என்றாள்.

“உனக்கு எதுக்கு கொடுக்கணும் நான் தரமாட்டேன்” அவன் கோபத்துடன் முகத்தில் அடித்தாற்போல சொல்லிவிட்டு சென்றான். அன்று இரவு அவனின் பையில் இருந்து டைரியை எடுத்து தன்னுடைய நோட்டில் இருந்த சில குறிப்புகளை அந்த டைரியில் இணைத்தாள்.

அதை அவனின் பையில் வைத்துவிட்டு வந்து படுப்பதை கவனித்த கதிர் அவளையும் அறியாமல் அந்த டைரி அவளின் கையருகே வைத்துவிட்டு போய் தூங்கிவிட்டான். மறுநாள் காலை எழுந்தும் தன்னருகே இருந்த டைரியைப் பார்த்து துள்ளி குதிக்காத குறையாக சந்தோஷத்தில் சுற்றி வந்தாள்.

அவன் டைரியின் அடுத்த பக்கத்தை நிதானமாக புரட்டினான்..

அதில், ‘அம்மா கையில் சாப்பிட்ட பிறகு இன்னைக்குதான் திரும்ப ஒருத்தர் ஊட்டிவிட வயிறார சாப்பிட்டேன். ஏனோ தெரியல கதிர்மாமா ஊட்டி விடும்போது அம்மா நினைவுதான் வந்துச்சு’ என்று கண்ணீருடன் எழுதியிருந்தாள். அவளின் சின்ன சின்ன ஏக்கங்கள் கூட அவரின் டைரி பக்கங்கள் கூறியது.

அவனின் நினைவுகள் பின்னோக்கி சென்றது.

தென்றலுக்கு எப்போதும் கதிர் ஊட்டிவிட்டால் தான் பிடிக்கும். அவனும் தங்கைக்கு ஊட்டிவிடாமல் ஒருநாளும் சாப்பிட்டது கிடையாது. அன்றும் அதுபோலவே காலைபொழுது விடிந்தும் செழியன் கடைக்கு சென்றுவிட சுப்புவும் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு அவரின் பின்னோடு கடைக்கு கிளம்பிவிட மற்ற மூவரும் வந்து சாப்பிட அமர்ந்தனர்.

கதிர் தன்னுடைய தட்டில் சாப்பாட்டை போட்டு பிசைந்து தங்கைக்கு ஊட்டிவிட இவள் ஏக்கமாக பார்த்தாள். அவன் கண்டும் காணாமல் தங்கைக்கு ஊட்டி விட்டுவிட்டு இவளின் பக்கம் திரும்பி பார்க்க சாப்பாட்டை சாப்பிடாமல் எங்கோ பார்த்தவளின் கண்கள் தானாக கலங்கியிருக்க, “அண்ணா இனியா அழுகிறா” என்றாள் தென்றல்.

அவளின் கலங்கிய கண்களைத் துடைத்துவிட்டு, “இனியா அழுவது கோழைத்தனம். நீ நிமிர்வா இருக்கணும். உனக்கு ஊட்டிவிட வேண்டும் என்றால் நீதான் வாய்விட்டு கேட்கணும். உன்னோட செயலை வைத்து புரிந்து கொள்ள இங்கே யாருமே இல்ல” என்று சொல்லிவிட்டு சந்தோசமாக அவளுக்கு ஊட்டிவிட்டான்.

அதன்பிறகு அவள் இதை எழுதி இருப்பாள் என்று இப்போது படிக்கும்போது புரிந்தது. இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்களை அவனின்  நினைவுகளை தூண்டிவிட்டது. அவன் வழக்கம்போல கல்லூரிக்கு சென்று திரும்பிட நாட்கள் அதன்போக்கில் சென்றது.

அந்த வாரத்தின் இறுதியில் வழக்கம்போல தன் குடும்பத்தைப் பார்க்க சேலம் சென்றான். அவன் வீட்டிற்குள் நுழையும்போதே, “தென்றல்” என்றான்.

அவனின் குரல்கேட்ட மறுநொடி படித்துக்கொண்டிருந்த புத்தகத்துடன் ஓடிவந்தவள், “வாங்க அண்ணா” என்றவள் புக்கை அங்கிருந்த மேஜையின் மீது வைத்துவிட்டு காபிபோட சென்றாள்.

“தென்றல் அம்மா எங்கே” என்ற கேள்வியுடன் சேரில் அமர்ந்தான்.

“இன்னைக்கு ஞாயிறு கிழமை அண்ணா. மதியம் வரைதான் கடை..” என்றவள் அவனோடு பேசியபடியே காபி போட்டு எடுத்து வரவே, “படிப்பு எல்லாம் எப்படி போகுது?” அக்கறையுடன் விசாரிக்க அவளும் புன்னகையுடன், “நல்ல போகுது அண்ணா” என்றாள்.

அப்போது தென்றலின் செல்போன் அடிக்கும் சத்தம் கேட்க அவளோ எழுந்து சென்று போனின் திரையைப் பார்க்க, “சஞ்சீவ்” என்று காட்டிட அண்ணனையும் போனையும் மாறி மாறி பார்த்தாள்.

அவளின் பார்வை உணராத கதிர் எழுந்து வீட்டிற்கு பின்னே செல்ல அங்கே இனியாவிற்கு என்று அவன் வாங்கிப்போட்ட ஊஞ்சலின் சங்கிலியை பிடித்தபடி சிலநொடி நின்றிருந்தான். இனியாவிற்கு ஊஞ்சல் ஆட பிடிக்கும் என்று அவன்தான் தந்தையிடம் உண்மையைச் சொல்லி வாங்கி வந்து வீட்டின் முற்றத்தில் கட்டிவிட்டான். கதிர் வீட்டிற்கு வரும் நேரமெல்லாம் இனியா ஊஞ்சலில் தான் இருப்பாள்.

சிலநேரங்களில் ஊஞ்சலில் படுத்து தூங்கிவிடுவது அவளின் வழக்கமாக இருக்கும். அவளுக்கு மட்டும் அந்த ஊஞ்சல் என்று சொல்லும் அளவிற்கு அவள் அதிகமாக உறவாடினாள். அவளின் நினைவுகளில் மூழ்கியபடி நின்றிருந்த கதிரின் கவனத்தை ஈர்த்தது தென்றலின் குரல்.

“சஞ்சீவ் பிளீஸ் புரிஞ்சிக்கோ. அண்ணா ஊரில் இருந்து வந்திருக்கான். நீ போனை இப்போவே வை” என்றவள் போனில் பேசுவதைக்கேட்டு அவன் வீட்டிற்குள் செல்ல நினைத்தான்.

“……………………” என்று மறுப்பக்கம் அவன் என்னவோ சொல்ல, “நான் இனிமேல்தான் சாப்பிட போறேன். நீ போய் சாப்பிடு சஞ்சீவ்” என்றதும் தங்கையின் காதல் மனம் இவனுக்கு உண்மை புரிந்து போனது.

அவன் ஊஞ்சலின் அருகே நின்றிருக்க சஞ்சீவ் மறுநிமிடமே போனை வைத்துவிட பெருமூச்சுடன் அண்ணனைத் தேடிக்கொண்டு பின் வாசலுக்கு வர அங்கே ஊஞ்சலில் அமர்ந்திருந்தவனைப் பார்த்தும்,

“என்ன அண்ணா இங்கே வந்து உட்கார்ந்து இருக்கிற” என்ற கேள்வியுடன் அவன் அவளை நெருங்கினாள்.

“இங்கே பக்கத்தில் வந்து உட்காரு” என்றதும் அவளும் இயல்பாக அவனின் அருகே அமர்ந்தாள். அவளின் முகத்தில் இருந்த தெளிவும், உதட்டில் படர்ந்திருந்த புன்னகையும் அவளின் மனதை அவனுக்கு படம்பிடித்துக் காட்டியது.

“போனில் யாரு பேசினாங்க” என்றதும் திடுக்கிட்டு அண்ணனை திரும்பிப் பார்த்தாள். அவன் பார்வையில் மாற்றத்தை உணர்ந்து தென்றலுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது.

அண்ணனின் பார்வையில் கண்டிப்பு கண்டு, “சஞ்சீவ்” என்றாள் மெல்லிய குரலில் தைரியமாகவே.

“யாரது?” என்றவனின் அடுத்தகேள்வியில் அவளின் உதட்டில் இருந்த புன்னகை உறைந்து போனது. ‘அண்ணாகிட்ட உண்மையை சொன்னால் என்ன சொல்வானோ’ என்ற பயத்தில் அவனையே இமைக்காமல் நோக்கினாள்.

“ம்ம் கேட்டதுக்கு பதில் இன்னும் வரல” என்றான் உறுமலாக.

“அண்ணா.. சஞ்சீவ்.. இனியா..” என்றவள் கோர்வை இல்லாமல் கூறவே, “தென்றல் பயப்படாமல் பேசு. நீ பேசுவதே புரியல” என்றான் மீண்டும் மிரட்டலாகவே.

“அண்ணா நான் சஞ்சீவை காதலிக்கிறேன். அவனுக்கு அப்பா, அம்மா யாருமே இல்ல. ஆசரமத்தில் தான் வளர்ந்தார்” என்றவள் அவனைப்பற்றி முழு விவரத்தையும் அழுதபடியே சொல்லிவிட்டு அண்ணனின் தோளில் சாய்ந்தாள்.

“அவர் என்னைக் காதலுக்கும் விஷயம் இனியாவிற்கு தெரியும் அண்ணா” என்றவளை அவன் கேள்வியாக நோக்கிட, “அவரும் இனியாவும் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். அவருதான் என்னிடம் முதலில் காதல் சொன்னாரு” என்றவள் தேம்பி அழுதபடி கூறிய தங்கையின் தலையை வருடினான்.

“இதுக்கு எல்லாம் கண்ணைக் கசக்காமல் போய் முகத்தை கழுவிவிட்டு வா” என்றவன் இனியாவிற்கு அழைக்க நினைத்தான். அதற்குள் வாசலில் வண்டி வந்து நிற்கும் சத்தம்கேட்டு வாசலுக்கு விரைந்தான்.

“வா கதிரு.. எத்தனை மணிக்கு வந்தப்பா” செழியன் மகனை பாசத்துடன் விசாரிக்க, “தென்றல் காபி போட்டு கொடுத்தாளா?” என்ற கேள்வியுடன் சமையலறைக்குள் நுழைந்தாள் சுப்பு.

“இப்போ வந்து அரைமணிநேரம் ஆச்சும்மா” என்று தகப்பனுக்கு பதில் கொடுத்துவிட்டு, “இப்போதான் தென்றல் காபிபோட்டு கொடுத்தா” என்றான். அதன்பிறகு செழியன், சுப்பு இருவரும் கதிருடன் பேசிக்கொண்டிருக்க தென்றல் அறைக்குள் பயத்துடன் அமர்ந்திருந்தாள்.

“அண்ணா மிரட்டி கேட்டதும் உண்மையை உளறிட்டேன். இப்போ அண்ணா என்ன பண்ண போறானோ? சஞ்சீவ் வேண்டான்னு சொல்லிவிடுவானோ” என்று யோசித்த தென்றலின் மனம் படபடவென்று அடித்துக் கொண்டது.

“அம்மா அப்பாவிற்கு உண்மை தெரிந்தால் என்ன சொல்வாங்களோ?” என்றவள் அறைக்குள் புலம்பிட, “அம்மா தென்றலுக்கு வயசாகுது. அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டீங்களா” என்று கேட்டதும் கணவனும், மனைவியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

“டேய் இனியா தென்றலைவிட பெரிய பொண்ணுடா. அவளையே படிக்க வெளிநாடு அனுப்பிட்டு இப்போ தென்றலுக்கு மாப்பிள்ளை பார்க்கும் விஷயத்தைப்பற்றி பேசற” என்று சுப்புலட்சுமி கேட்க தங்கையின் அறையைப் பார்த்தான் கதிர். திடீரென்று மகன் திருமண விஷயம் பற்றி பேசியதும் செழியனின் பார்வை மகளின் அறையின் மீது கேள்வியாக படர்ந்தது.

“எல்லாம் காரணமாகத்தான் பேசறேன்” என்று எழுந்து சென்ற கதிர் தென்றலின் செல்லிலிருந்து நம்பரை எடுத்து அதிலிருந்து சஞ்சீவிற்கு அழைத்துப் பேசிவிட்டு போனை வைத்தான்.  இனியாவின் நினைவில் அவனின் உதட்டில் புன்னகை அரும்பியது.

ஏழு கடல் ஏழு மலை கடந்து

பூமியின் மறுப்பக்கம்

இருக்கும் பெண்ணே!

உன் நினைவில் என்றும்

நீங்காமல் இருப்பது நானும்

என் குடும்பத்தின் நலனும்

என்று நினைக்கும் நினைவே

தித்திப்பாக இருக்குதடி” என்று டைரியில் எழுதிவிட்டான்.