sirpiyin kanavukal – 11

sirpiyin kanavukal – 11

அத்தியாயம் – 11

வானம் செவ்வனமாக மாறிட குயில்களின் இன்னிசை மனதை நனைக்க மழைநிலா சீக்கிரமே எழுந்து மாமா, அத்தை, சுரேஷ் தாத்தாவிற்கு மூவருக்கும் காபியை கலந்து கொடுத்துவிட்டு கணவனை எழுப்ப எழில் அறைக்குள் சென்றாள்.

அவன் இன்னும் நித்திரையில் ஆழ்ந்திருப்பதை கண்டவள், “இஞ்சிருங்கோப்பா கெதியா எழுந்து ஓபிஸ்க்கு கிளம்புங்கோ” என்று அவனை தட்டி எழுப்பினாள்

அவனோ அவளின் கையைப்பிடித்து அருகே இழுக்க நிலா அவனின் மார்பில் போய் விழுந்தாள். அவளை இறுக்கியணைத்துகொண்டு மீண்டும் அவன் நித்திரையைத் தொடரந்தான்.

அவளை துளிகூட நகர முடியாமல் போக கணவனின் முகத்தை நோக்கினாள். அலையலையான கேசத்துடன் ஏதும் அறியாத மழலை போல இருந்த அவனின் முகத்தை வருடியவள், “எழில்..” என்றாள் மெல்லிய குரலில்.

“ம்ம்.. சொல்லுங்கோ..” என்றான் அவன் விழியைத் திறக்காமல்.

“மாமி வந்தா என்னைத்தான் எசுவாங்கோ” என்றதும் அவன் பட்டென்று  விழிதிறந்து அவளைப் பார்த்தான்.

“இதுக்கெல்லாம் பயந்துதான் நீங்க அமைதியா இருக்கிங்கோவன்” அவன் கேட்க இவளோ மௌனமாக இருக்க அவளின் முகத்தை வருடிய எழிலன் எழுந்து சென்றுவிட்டான்.

அவனுக்கு கொண்டு வந்த காபி ஆறிவிட மீண்டும் அதை சூடு செய்து அவள் எடுத்து வரும் பொழுது அவன் குளித்துவிட்டு கண்ணாடி முன்னாடி நின்று தயாராகிக் கொண்டிருந்தான். தன் பின்னே நின்ற மனைவியின் உருவத்தைக் கண்ணாடியின் வழியாக பார்த்தான் எழிலன்.

காலையில் மழையில் குளித்த பனிமலர் போன்ற தோற்றத்தில் நின்றவளின் முகத்தில் என்றும் இல்லாத ஒரு தெளிவைக் கண்டவனின் விழிகளில் தாபம் பிறக்க அதைக் கண்டுகொண்ட பெண்ணவள் அவனிடம் காபி கப்பை கொடுக்காமல் அங்கிருந்த டேபிளின் மீது வைத்துவிட்டு நகர்ந்தாள்.

அவளின் கரம்பிடித்து தடுத்த எழிலன், “எனக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்துவிட்டு போங்கோவன்” அவள் பட்டென்று நிமிர்ந்து அவனை பார்த்தாள்.

அவளின் இடையோடு கரம்பற்றி அருகே இழுத்தவனின் பார்வை தெரிந்த மோகம் அவளை வாயடைக்க வைத்துவிட்டது. மெல்ல அவளின் பார்வையோடு தன் பார்வையை கலக்கவிட்ட எழிலன் அவளின் இதழோடு இதழ் பொருத்தினான்.

அதுவரை இருவரும் ஒரு நண்பர்கள் போலத்தான் அந்த அறைக்குள் இருந்தனர். எழிலன் அவ்வளவு சீக்கிரம் அவளை நெருங்க மாட்டான். அவளின் படிப்பை கருத்தில்கொண்டு அவன் விலகி இருந்தான்.

ஆனால் இன்று அவனால் அப்படி இருக்க முடியவில்லை. தன்னிடம் கூட அவள் மனதை வெளிபடுத்தவில்லை என்ற ஆதங்கமும் எப்போதும் தான் உன்னோடு இருப்பேன் என்ற ஆறுதலையும் ஒரே நேரத்தில் அவளுக்கு கொடுக்க நினைத்தான்.

தன்னை அவள் மூன்றாம் நபராக நினைத்திருக்கிறளோ என்ற எண்ணமே அவர்களின் இடையே நிலவிய அந்த இடைவெளியைக் குறைக்க காரணமாக மாறியது. அதன் முதல் அத்தியாயம் தான் இந்த இதழ் முத்தம்.

இருவருக்கும் மூச்சு முட்டும் வரையில் முத்தயுத்தம் தொடர்ந்தது. அவன் இதழை விட்டதும் அவள் வேகமாக மூச்சிழுத்து தன்னை சீர்செய்ய நினைக்கும்போது மீண்டும் அவளின் இதழோடு இதழை இணைத்து அடுத்த யுத்தத்தை சத்தம் இல்லாமல் தொடர்ந்தான்.

அவன் மீண்டும் இதழ் பிரிக்க, “என்ன எழில் காலையில் இப்படி அல்சாட்டியம் பண்றீயேள்” என்றவள் சிணுங்க அவனோ எதுவும் அறியாத பையன் போல பாவமாக முகத்தை வைத்துகொண்டு, “நான் என்ன செய்தனான்” என்றான் அவளின் மூக்குடன் மூக்கை உரசியபடி கொஞ்சலாக கேட்டான்.

அவள் அவனை முறைத்துவிட்டு அங்கிருந்து நகர, “கெதியா தயாராகி வாரும். உன்னை கேம்பஸில் இறக்கிவிட்டுவிட்டு போறான்” என்றான் சீரியசான முகத்துடன்.

அவனின் சிந்தனை முகம் கண்டு தலையசைத்துவிட்டு அவள் வேகமாக கேம்பஸ்க்கு கிளம்பி வெளியே வர சரளா வேண்டுமென்றே, “நிலா இண்டைக்கு நீ கேம்பஸ் போக வேணாம். நம்ம இருவரும் கோவிலுக்கு போகோணும்” என்றார் அதட்டலாக.

எழிலன் அமைதியாக அங்கே நடப்பதைக் கவனித்தபடி சாப்பிட்டவன் மனைவியின் முகத்தை நோக்கினான். என்றும் இல்லாத திருநாளாக அவனின் அருகே அமர்ந்த மழைநிலா இரண்டு ஆப்பத்தை தட்டில் வைத்து சாம்பாரை ஊற்றிவிட்டு சாப்பிட அமர்ந்தாள்.

“நான் என்ன சொல்றன். நீ என்ன செய்யற நிலா” என்றவர் கண்டிக்கா அவளோ கடமையே கண்ணாக சாப்பிடுவதை தொடர சரளாவின் கோபம் மெல்ல அதிகரித்தது.

அப்போது அங்கே வந்த ரமணன், “சரளா சாப்பாடு எடுத்து வை. ஓபிஸ்க்கு லேட் ஆகுது” என்று சொல்ல சுரேஷ் கதிரையில் அமர்ந்தபடி மருமகளையே பார்க்க சரளாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

அதெல்லாம் கவனிக்காமல் சாப்பிட்டுவிட்டு எழுந்த மழைநிலா, “மாமா நான் கேம்பஸ் கிளம்பறன்” என்றதும் அவரும் புன்னகையுடன் சரியென்று தலையசைக்க எழிலன் தன் பைக் சாவியை எடுத்துகொண்டு முன்னே நடந்தான்.

“தாத்தா நான் போயிட்டு வாறன்” என்று தன் பேக்குடன் வாசலை நோக்கி நடந்தாள்.

“நான் சொன்னதை மீறி வாசலைத் தாண்டின இனிமேல் நீ வீட்டிற்குள் வாறக்கூடாது” என்றதும் நிலாவின் நடை நின்றுபோனது. அவள் மீண்டும் அவரின் எதிரே வந்து நின்று அவரின் முகத்தை நேருக்கு நேர் பார்த்தாள்.

ரமணன் இருவரையும் கேள்வியாக நோக்க, “இத்தனை கிழமையும் நீங்க கொடுத்த வேலையை அமைதியாக செய்தனான். அதுக்கு காரணம் இது என்ர குடும்பம், அது என்ர கடமை. உங்களுக்கு நான் மருமகளாக வந்ததில் துளியும் விருப்பமில்ல எண்டு எனக்கு நல்லாவே தெரியும். இப்போ நீங்க வேண்டுமென்றே என்னை கேம்பஸ் அனுப்பாமல் வீட்டிலேயே நிறுத்த நினைப்பது என்னை பழிவாங்க தான் என்ற உண்மையையும் நான்  அறிவேன்”அழுத்தத்துடன் கூற சரளாவின் முகம் வெளுத்து போனது.

அவளிடம் இப்படியொரு பதிலை எதிர்ப்பார்க்காத சரளா சிலகணம் தன்னை மறந்து நின்றார். அதன்பிறகு தன்னை சமாளித்து நிமிர்ந்த சரளாவின் பார்வை வீட்டின் மற்றவர்கள் மீது திரும்பியது. அவரின் கணிப்பு சரிதான் என்பது போல அவரின் மாமானார் சுரேஷ், கணவன் பார்வை அவரை எரித்து கொண்டிருந்தது.

அவளுக்காக வாசலில் பைக்குடன் எழிலன் காத்திருந்தவனுக்கு ஒரு முக்கியமான பைலை எடுக்க மறந்ததுவிட்டது ஞாபகம் வர மீண்டும் வீட்டிற்குள் நுழைந்தான்.

தாயின் எதிரே நிலா நிற்பதைப் பார்த்தவன் எதுவும் சொல்லாமல் மீண்டும் தன் அறைக்குள் நுழைய, ‘இவள் இன்றாவது வாய் திறந்து பேசட்டும்’ என்று நினைத்தபடி அந்த ஃபைலை தேட கடைசியாக கிடைத்தது அந்த பிரவுன் கலர். அவன் அதை சரிபார்க்காமல் அறையைவிட்டு வெளியே வரும்போது நிலா பேசுவது அவனின் காதில் தெளிவாக கேட்டது.

“படிப்பு என்ர கடமை. கல்யாணம் கட்டிக்கொண்டு வந்த பெண்கள் எல்லாம் மாமியின் சொல்லுக்கு அடிபணிந்து போவதால் அவர்கள் முதுகெலும்பு இல்லாத கோழைகள் எல்லோ. மாமிக்கு அடிபணிந்து வேலை செய்பவள் பொறுமைசாலி எல்லோ. மருமகளை அடக்கிவிட்டேன் எண்டு இறுமாப்புடன் இருப்பவர்கள் எல்லாம் தைரியசாலியும் எல்லோ” கூறியவள் நிற்காமல் வாசலை நோக்கி செல்ல எழிலன் தாயை முறைத்துவிட்டு அவனும் அவரை கடந்து சென்றான்.

தன் மகனை கரம்பிடித்து தடுத்த சரளா, “எழில் உன்ர மனைவி கதைப்பது சரியேல்ல. நீ அவளிடம் சொல்லி வை..” என்றார் மிரட்டலாக.

தன் தாயை இமைக்காமல் பார்த்த எழிலன் ஒரு முடிவுடன், “அப்பா இந்த வீட்டின் மருமகள் என்ற கடமையிலிருந்து நிலா எண்டும் தவறேல்ல. என்ர மனைவியை குறை சொல்லாமல், அவைய வேலையை பார்த்தால் பிரச்சனை யாருக்கும் வராதென்று நினைக்கிறன்” என்று பொதுப்படையாக கூறிவிட்டு அங்கிருந்து அகன்றான்.

அவன் வந்து பைக்கை எடுக்க அவனின் பின்னோடு ஏறியவள், “ஒரு கணம்” என்ற மழைநிலாவை அவன் கேள்வியாக நோக்கிட, “மாமி நான் கேம்பஸ் போயிட்டு வறான்.”என்று வாசலில் இருந்து குரல்கொடுக்க சரளா உள்ளிருந்து எட்டிப் பார்த்தார்.

அவரைப் பார்த்து புன்னகைத்த மழைநிலா உதடுகுவித்து முத்தமிடுவது போல செய்து, ‘ஸாரி மாமி’ என்று இதழசைத்து செல்லம் கொஞ்ச, அவளின் குறும்பு செயலைக் கண்டு, ‘மனதில் பயமில்ல’ என்ற சரளாவின் மனதில் மூண்ட கோபக்கனல்  சட்டென்று தணிந்தது.

அவர் அடிப்பது போல செய்கை செய்ய அவரே எதிர்ப்பாராத நேரத்தில் கண்ணடித்த மழைநிலா, “பாய் மாமி” என்று சொல்லிவிட்டு கணவனின் தோளைப் பிடித்துகொண்டு, “ம்ம் வண்டியை எடுங்கோ” என்றாள்.

அதுவரை அவர்களின் நடுவே நடந்த பேச்சு வார்த்தையை கவனித்த எழிலன், “புருஷனுக்கு ஒரு முத்தம் கொடுக்காமல் மாமிக்கு மட்டும் வீட்டு வாசலில் இருந்து முத்தத்தை பார்சல் பண்ற” என்றவன் வம்பிழுக்க கணவனின் தலையில் நறுக்கென்று கொட்டிய நிலா,

“கண்ணு வைக்காதீங்கோ இஞ்சாருங்கோப்பா..” என்று சிணுங்கினாள் பெண்ணவள்.

“யாரு நான் உங்க இருவரையும் பார்த்து கண்ணு வைக்கிறேனோ? இது உனக்கே கொஞ்சம் ஓவராக தெரியேல்ல” என்றவன் கதைத்தபடி கேம்பஸ் முன்னே வண்டியை நிறுத்த அவளும் இறங்கி சென்றாள்.

அவளின் கரம்பிடித்து தடுத்த எழிலன், “என்னிட்ட அம்மாவோட விஷயத்தை நீ ஒருநாளும் சொல்லவே இல்ல. உன்ர புருஷன் நான் என்பதையே மறந்துவிட்டாயோ” அவனின் பார்வை தீர்க்கமாக அவளை துளைத்தெடுக்க அவளோ மெல்ல தலைகுனிந்தாள்.

“ம்ம் பதில் சொல்லும் நிலா” என்றவன் மீண்டும் கேட்க,

“உங்க குடும்பத்தில் என்னால் தேவையில்லாத பிரச்சனை எதுக்கென்று” என்றவள் முடிக்கும் முன்னே அவளின் கையை உதறிவிட்டு கோபமாக வண்டியை ஸ்டார்ட் செய்து கிளம்பிவிட்டான் எழிலன்.

“எழில்.. எழில்..” அவள் கத்தி கூப்பிட அவனோ அவளின் பார்வையைவிட்டே மறைந்துவிட கண்ணீரோடு கேம்பஸ் உள்ளே நுழைந்த சட்டென்று தன்னை நிலைபடுத்திகொண்டு வகுப்பிற்கு சென்றாள்.

மேகாவை கேம்பஸில் இறக்கிவிட வந்த முகிலன் முதலில் இருவரையும் பார்த்தவன், “மேகா அங்கே பாரும் நம்ம எழிலன் நிலா இருவரும் பேசிக்கொண்டு இருக்கிறாவே” என்றதும்,

“இருவரையும் நேரில் கண்டு எவ்வளவு நாளாயிற்று. இருங்கோ முகிலன் நான் கதைத்துவிட்டு வருகிறன்” அவள் வண்டியைவிட்டு இறங்கி அவர்களை நோக்கி சென்றாள்.

அப்போது எழிலன் கோபத்தோடு சென்றதையும், நிலா கண்ணீரோடு நின்றதையும் பார்த்த முகிலனும், மேகாவும், “இப்போ என்ன பிரச்சனையோ” என்று இருவரும் புலம்பிட மேகாவின் மனதில் அந்த எண்ணம் தோன்றியது.

“முகில் நம்ம அப்பா, அம்மாவிடம் சொல்லி ஒரு மாறுதலுக்காக இவர்களை இந்தியா அழைத்துச் சென்றால் என்ன” என்று யோசனை சொல்ல அவனும் சிந்தனையில் ஆழ்ந்தான்.

அவனுக்கும் அதுவே சரியென்று தோன்றியது..

மழைநிலா சென்ற பிறகு மனைவியின் பக்கம் திரும்பிய ரமணன், “சரளா  ஒண்டை மட்டும் தெளிவாக நினைவில் வையும்..” என்ற கணவனை அவர் ஏறிட்டுப் பார்க்க,

“அவள் நம்ம வீட்டிற்கு வாழ வந்த பிள்ளை . அவளை உன்ர பிள்ளையாக பாவித்து பழகும் சரளா. திருமணம் என்பது நல்ல விடயம் என்றபோதும் அது அவளின் மறுபிறப்பு. பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த மனிதர்களை விட்டுவிட்டு இன்னொரு ஊரில் கணவனின் குடும்பம், புதிய உறவுகள் எண்டு அவள் தன்னையே தொலைத்துவிட்டு வாழ்கிறள். அவளை நோகடிக்காதே..” என்றவர் சாப்பிட்டுவிட்டு எழுந்து வேலைக்கு கிளம்பினார்.

கணவன் பேசியபிறகு தன் தவறை உணர்ந்த சரளாவின் முகத்தில் ஒரு தெளிவு பிறப்பதைக் கண்ட சுரேஷ் மனம் மகிழ்ந்தது. அவரின் நெஞ்சில் விதைக்கபட்ட வன்மம் என்ற முள்ளை தன் மகன் எடுத்துவிட்டான் என்பது புரிந்துவிட அவரும் எழுந்து அவரின் அறைக்கு சென்றார்

அன்றைக்கு மாலை வீடு திரும்பிய மழை நிலாவின் முகம் வாடியிருக்க கண்டு, “என்ன ஒரு மாதிரியாக இருக்கிறவ..” என்ற மாமியின் குரல்கேட்டு தன்னை நிதானத்திற்கு கொண்டு வந்தவள்,

“ஒண்டும் இல்ல மாமி” என்று கூறிவிட்டு அவள் அறைக்குள் நுழைய அவளின் செய்கையே அவரின் மனதை பாதித்தது.

தன் மகனுக்கு அழைத்து, “ஏண்டா பிள்ளையை என்ன சொன்னே. பிள்ளையின் முகமே சரியில்லே..” என்று மகனைக் கோபத்தில் ஒரு பிடி பிடிக்க அடுத்த அரைமணி நேரத்தில் வீட்டில் இருந்தான் எழிலன்.

அவன் வீட்டின் உள்ளே நுழையும்போதே, “என்னவாம் அவளுக்கு. எப்போதும் அவளிடம் பிழைகண்டு அவளை வதைப்பவருக்கு இண்டைக்கு என்ன திடீரெண்டு ஞான உதயம்” என்றான் மகன் சிடுசிடுப்புடன்.

“அது எங்க பிரச்சனை. நீ என்ன தம்பி அவளிடம் கதைத்தாய்? சாயங்காலம் வீட்டிற்கு வந்த பிள்ளை ரூமைவிட்டு வெளியே வரல. நீ அவளோடு சண்டையிட்டுவிட்டு இப்போ என்னிடம் எதற்கு தம்பி எரிந்து விழுகிறே” என்று கேட்க அவனின் தவறு புரிந்தது.

ஆனால் அவள் சொன்ன வார்த்தை அர்த்தம்?

‘உங்க குடும்பத்தில் பிரச்சனை வரக்கூடாது எண்டு அவள் கதைத்த வார்த்தைக்கு என்ன அர்த்தம். அவளும் இந்த குடும்பத்தில் ஒருத்தி என்பதையே மறந்து கதைத்து இருக்கிறள்.” என்று அவனின் உள்ளம் கொதித்தது.

அவன் அதே கோபத்துடன் அறைக்குள் செல்ல அங்கே எந்த சலனமும் இல்லாமல் வீட்டு பாடங்களை எழுதிக்கொண்டு இருந்தவளை கண்டு அவனின் கோபம் இன்னும் அதிகரிக்க, “நிலா” என்றான் அதட்டலாக.

அவள் நிமிர்ந்து அவனைப் பார்க்க, “உன்ர மனசில் என்னதான் நினைச்சிட்டு இருக்கறவ” அவன் கோபத்துடன் அவளை நெருங்க அவனின் விழியை நேருக்கு நேர் சந்தித்த நிலா பொறுமையாக இருந்தாள்.

அவளின் சலனமில்லா பார்வை  அவனுக்குள் மாற்றத்தை கொடுக்க, “காலையில் அப்படி கதைக்கிற. ஏன் இது உன்ர குடும்பம் என்ற எண்ணம் உனக்கு வரவில்லையா? இல்ல நான் அந்த எண்ணத்தை வரவிடாமல் செய்துவிட்டேனோ” என்று கேள்விகளை எழுப்பினான்.

அதுவரை அமைதியாக இருந்த நிலா, “இது என்ர குடும்பம் என்ற எண்ணமும் எனக்கும் மறக்கதில்ல. நீங்கதான் என்னை தவற புரிஞ்சி வெச்சிருக்கிங்கோ” என்றதும் அவனின் கோபம் உர்ரென்று உச்சிக்கு ஏறியது.

“என்ன கதைச்ச திரும்ப கதை” என்றான் அவன் உக்ரமான பார்வையுடன்.

“நான் காலையில் கதைத்தது தவறு தான். ஆனால் நேற்று வந்த எனக்காக நீங்க உங்க அம்மா, அப்பாவிடம் சண்டை போடுவதை நான் விரும்பல்ல. எனக்கு என்ர புருஷன் வேணும் என்றாலும் அவன் ஒரு சுயநலவாதியாக இருக்கக்கூடாது என்ற எண்ணத்தில் கதைச்சேன்.” என்றவள் பேச அவனோ அமைதியானான்.

“மாமி செய்ததை எல்லாம் உங்களிடம் சொல்லாமல் மறைக்க காரணம்.  அவங்களை நீங்க எசுவதால் அவங்க கோபம்  அதிகமாகுமே தவிர குறையாது. அதே நேரத்தில் நான் தணிந்து போவதால் அவங்க கோபம் கொஞ்சநாளில் மாறிபோகும்..” நிறுத்தி அவனின் முகம் பார்க்க அவனோ சிந்தனையுடன் புருவம் சுருக்கினான்.

அவளோ புன்னகையுடன், “இதோ இண்டைக்கு நீங்க இங்கே வர காரணம் என்ர மாமிதான். நான் வந்தும் என்ற முகம் சரியில்லை எண்டு கணபொழுதில் கணித்துவிட்டார்.” அவள் விட்டுகொடுக்காமல் பேச அவளின் வார்த்தைகளில் இருந்த அழுத்தம் அவனின் கோபத்தை குறைத்தது.

தன்னைப்பற்றியும், தன் தாயைப் பற்றியும் தெளிவாக புரிந்து வைத்திருக்கும் மனையாளின் புத்திசாலி தனத்தைக் கண்டு வியக்காமல் அவனால் இருக்க முடியவில்லை.

அவனின் கரம்பிடித்து அழுத்தம் கொடுத்த நிலாவின் தலையை அவன் செல்லமாக வருடிவிட, “எண்டைக்கு எதிர்த்து சண்டை இடுவது புத்திசாலித்தனமில்ல. அதே நேரத்தில் நீங்க அமைதியாக கடந்து போய் பாருங்கோ. அவங்க கோபம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து காணாமல் போய்விடும்” என்றவள் தெளிவாக கூற,

“நீ மனதளவில் நொறுங்கி போனாய் எண்டு நினைத்தேன் நிலா, ஆனா நீயோ தெளிவாக இருக்கிறவ” என்று அதுவரை இருந்த கோபம் மறைந்து மனைவியின் நெற்றியில் முத்தமிட்டு அவன் நிமிர அவளின் கதுப்பு கன்னங்கள் வெக்கத்தில் சிவக்க,

“தம்பி பிள்ளையை கூட்டிட்டு சாப்பிட வாரும்” என்றார் சரளா.

அவரின் குரல்கேட்டு, “உங்க மாமிதான் என்னை லெப்ட் அண்ட் ரயிட் வாங்கிவிட்டார். நீ வந்து சொன்னால் தான் இண்டைக்கு எனக்கு சோறு கிடைக்கும் நிலா.. கெதியா வாரும்” அவன் பாவமாக முகத்தை வைத்துகொண்டு சொல்ல அவளோ கலகலவென்று சிரித்தாள்.

இருவரும் பேசி சிரித்தபடி வருவதை கண்ட சரளாவின் மனம் நிம்மதியடைய, “வாங்கோ மாமி நம்ம இருவரும் சாப்பிடலாம்” என்ற நிலா கணவனையும், மாமியாரையும் அமர வைத்து சாப்பாடு பரிமாற அன்றே அவர்களின் குடும்ப பிரச்சனை ஒரு முடிவிற்கு வந்தது.

இதையறியாத மேகாவும், முகிலனும் என்ன திட்டம் தீட்டுகிறார்களோ?

 

error: Content is protected !!