அனல் பார்வை 21🔥
அனல் பார்வை 21🔥
தனது திருமண புகைப்படத்தை கையில் வைத்து மோகனா அழுதுக் கொண்டிருக்க, அவரருகில் சென்ற அருவி அவரின் தோளை தொட்டு, “அம்மா…” என்று முதன் முறை அழைத்ததும் தான் தாமதம், அருவியின் வயிற்றில் முகத்தை புதைத்து கதறியழுதார் மோகனா.
அருவியின் கண்களும் கலங்கிப்போய் இருக்க, “அரு, இந்த நாள் தான் உன் அப்பா இறந்ததாக சொன்னாங்க. அவரால என்னை விட்டு எப்படி போக முடிஞ்சது? என்னை பத்தி யோசிக்கவே இல்லைல்ல? ஒவ்வொரு நாளும் அவரில்லாம நான் எப்படி வாழ்ந்துக்கிட்டு இருக்கேன்? ஒரு வருஷ வாழ்க்கைன்னாலும் அவ்வளவு சந்தோஷமா என்னை பார்த்துக்கிட்டாரு அவரு. அவரையும் இழந்து, என் பொண்ணையும் கஷ்டப்படுத்தி நான் எல்லாம் ஏன் உயிரோட இருக்கனும்?” என்று கேட்டு மோகனா அழ, அருவிக்கு தான் அம்மாவை எப்படி சமாதானம் செய்வதென்றே தெரியவில்லை.
“அம்.. அம்மா அழாதம்மா!” என்று அருவியும் அழ, அவளை தன் பக்கத்தில் அமர வைத்த மோகனா அவளின் இரு கைகளையும் தன் கண்களில் ஒற்றி, “என்னை மன்னிச்சிடு டா!” என்று மன்னிப்பு யாசிக்க, அருவியோ பதறிவிட்டாள்.
தன் அம்மாவை தாவி அணைத்தவள், “அம்மா, என்ன ம்மா நீ? இதெல்லாம் வேணாம் மா.” என்று அழுதவாறு சொல்ல, அவளின் தலைமுடியை வருடியவர், “அப்பா பாசத்தை உணராத உனக்கு அம்மா பாசத்தையும் கொடுக்க தவறிட்டேன். நிச்சயமா உன் அப்பா என்னை மன்னிக்கவே மாட்டாரு.” என்று அழுத தன் அம்மாவை பார்த்தவளுக்கு ஒன்று மட்டுமே தோன்றியது.
‘தன் அப்பா ஏதோ ஒரு மூலையில உயிருடன் தான் இருக்கிறார்.’ என்று நம்பும் அவளுக்கு இப்போது தன் அம்மாவுக்காக சரி தன் அப்பாவை கண்டுபிடித்து அவரின் முன் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்ற உறுதி மட்டும் மனதில் பூண்டது.
சற்று நேரம் தன் மடியிலேயே அழுது களைத்து உறங்கியவரை ஆழ்ந்து பார்த்தவளுக்கு ஏனோ இப்போதே மதுவின் போதை அவசியம் தேவைப்பட, வெகுவாக தன்னவனை மறந்து தான் போனாள். தன் அம்மாவை மெத்தையில் படுக்க வைத்தவள், அடுத்த பத்து நிமிடங்களில் அந்த பப்பின் முன் தான் நின்றாள்.
கொஞ்ச நாட்களாகவே மதுவை நாடாதவள் சட்டென்று வந்து எப்போதும் அமரும் இருக்கையில் அமர்ந்ததும் அவளுக்கு பழக்கப்பட்ட அந்த ஸ்பானியன் பேரர் அவளை அதிர்ந்து நோக்க, அவளோ ஒரு மதுவின் பெயரை சொல்லிவிட்டு கண்களை மூடிக் கொண்டாள்.
அந்த பேரரும் தன் வேலையை செவ்வென செய்ய, அடுத்தடுத்தென்று தனது காயத்தை ஆற்ற மதுவை நாடியவளுக்கு ஏனோ அது மருந்தாக அமையவில்லை. ‘ச்சே!’ என்று சலித்துக்கொண்டவாறு வீட்டிற்கு செல்ல பழக்க தோஷத்தில் தாரக்கை அழைக்க தொலைப்பேசியை தேடி எடுத்தவள், அழைத்தது என்னவோ ராகவ்வின் எண்ணிற்கு தான்.
தனக்கு வந்த அழைப்பில் திரையை பார்த்த ராகவ், திரையில் தெரிந்த எண்ணை பார்த்துவிட்டு அக்னியிடம் தொலைப்பேசியை நீட்ட, அவனும் அழைப்பை ஏற்று காதில் வைத்தவன் மறுமுனையில், “தாரு, பப்ல இருக்கேன் டா. சீக்கிரம் வா!” என்ற அருவியின் குளறுபடியான பேச்சில் கோபத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டான்.
அடுத்தகணம் அவள் எப்போதும் செல்லும் பப்பிற்கு சென்றவன், அங்கு மேசையில் தலை வைத்து படுத்திருந்த அருவியை பார்த்து கொதித்து தான் விட்டான்.
அவளருகில் சென்றவன் அவளை முறைத்தவாறு நிற்க, “வன் மோர்.” என்றவாறு போதையில் குளறியபடி நிமிர்ந்த அருவி தன் முன் நின்றிருந்த அக்னியை பார்த்து நம்ப முடியாது மீண்டும் மீண்டும் கண்களை கசக்கி பார்த்தாள்.
தன்னவன் தனக்கெதிரே இருப்பதை உணர்ந்தவள், “ஹாஹாஹா…” என்று வாய்விட்டு சிரித்தவாறு, “மஹி, நான் தோத்துட்டேன் டா. நான் தோத்து போயிட்டேன். இந்த தீ அருவி ஒரு லூசர்.” என்று பைத்தியம் போல் சொல்லி சிரிக்க, அவனோ எதுவும் பேசாது அவளையே அழுத்தமாக பார்த்தவாறு இருந்தான்.
ஆனால் என்னவோ, அவன் கண்கள் அப்பட்டமாக வலியை பிரதிபலிக்க, “யூ க்னோ வட் மஹி? இன்னைக்கு தான் என் அப்பா செத்து போனாரு. அய்யோ இல்லை… இல்லை… செத்து போனதா தகவல் சொன்னாங்க. பட், இதை நான் நம்பல. அவர் இறந்ததா உலகமே நம்புதே…” என்று புலம்ப, அவனோ புரியாது புருவத்தை சுருக்கி பார்த்தான்.
தட்டுத்தமாறி எழுந்து நின்றவள் தன்னவனை நெருங்கி அவனின் ஷர்ட் கோலரை இறுகப்பற்றியவாறு, “மஹி, கல்யாணம் பண்ணிக்கிட்டு நீயும் என்னை விட்டு போயிருவியா? என் அப்பா என் பொம்பள ஹிட்லர விட்டுட்டு போன மாதிரி நீயும் என்னை விட்டு போயிருவல்ல? ஆமா… ஆமா… நீ போயிருவ. ஒரு வருஷம் வாழ்ந்த அவரே விட்டுட்டு போயிட்டாரு. நீயும் போயிருவ. போயிருவ.” என்று குளறியபடியே அவள் அடுத்த மது குவளையை தொட போக, அவளின் கையை தட்டிவிட்ட அக்னி, அந்த குவளையை தரையில் சுக்கு நூறாக உடைத்தான்.
என்றும் இல்லாது அவன் கண்கள் கோபத்தில் சிவந்து இருக்க, அவளின் தோளை பற்றி தன்னை நோக்கி இழுத்தவன், “நான் உன்னை விட்டுட்டு போவேனா? சொல்லு, விட்டுட்டு போவேனா?” என்று கத்திவிட்டு, “உனக்குள்ள இருக்குற காயத்தை இந்த போதை இன்னும் இன்னும் கிளறி ரணத்தை உண்டாக்குதுன்னு உனக்கு புரியல்லையா?” என்று கர்ஜனையாக கேட்டான்.
அருவியோ அதையெல்லாம் காதில் வாங்காது, கீழே நொறுங்கி கிடந்த மதுக்குவளையை பார்த்து உதட்டை பிதுக்கியவள், “ஏன் அதை உடைச்ச? ஐ நீட் இட்.” என்றவாறு தன்னை மறந்து அந்த நொறுகிய குவளையை எடுக்க போக, அவளை பிடித்து தடுத்த அக்னி, தரதரவென வெளியே இழுத்துக் கொண்டு வந்தான்.
வண்டியின் அருகே உச்சகட்ட கோபத்தில் அவளை இழுத்து வந்தவன், இடுப்பில் கை குற்றி தலைமுடியை அழுந்த கோதியவாறு தன்னை நிதானப்படுத்த முயற்சிக்க, அவளோ அப்போதும் விடாது தன் புலம்பலை ஆரம்பித்துவிட்டாள். ஆனால், அவள் சொன்ன விடயத்தில் உறைந்தே போய்விட்டான் அக்னி என்று தான் சொல்ல வேண்டும்.
“யூ க்னோ வெல், என் அப்பாவ நான் இதுவரைக்கும் ஃபோட்டோல மட்டும் தான் பார்த்திருக்கேன். அதுவும், பெத்த தாய் சொல்லி கிடையாது. என்னை வளர்த்தவங்க சொல்லி… மொத்த உலகமுமே அவர் இறந்துட்டதா நினைக்கும் போது நான் மட்டும் அவர் உயிரோட இருக்குறதா நினைச்சேன். அவரோட ஒரே தேடல் எல்-டெரேடோ… அந்த தங்க நகரம்…” என்று சொல்ல, அந்த பெயரை கேட்டதும் தான், அவள் சொல்வதை புருவ முடிச்சுகளுடன் கேட்க ஆரம்பித்தான் அக்னி.
“அந்த நகரத்தை பத்தின தேடல் அ போனவரு தான். அது உண்மையோ, பொய்யோ? எனக்கு அதுல நம்பிக்கை கிடையாது. பட், என் அப்பா உயிரோட தான் இருக்காரு. நான் அவரை கண்டுபிடிப்பேன்” என்றவளின் கடைசி வார்த்தைகளில் அத்தனை உறுதி.
சட்டென தன் பேன்ட் பாக்கெட்டுக்குள் கையைவிட்டு தேடியவள், ஒரு புகைப்படத்தை எடுத்து அவனிடம் நீட்டியவாறு, “என் அப்பா என்னை மாதிரியே இருக்காருல்ல?” என்று போதையில் குளறியபடி கேட்க, அந்த புகைப்படத்தை வாங்கி கூர்ந்து பார்த்தவனின் கண்கள் சாரசர் போல் விரிய, அத்தனை அதிர்ச்சி அவனுக்கு! அவன் நினைத்தது சரியே…
அவனின் சந்தேகம் உறுதி செய்யப்பட்டது. அவன் இத்தனை நாள் மனதில் போட்டு உருட்டிக் கொண்டிருந்த கேள்விகளுக்கான விடை சரியே… அவன் நினைத்தது சரியே… எந்த பதிலாக இருக்க கூடாது என்று நினைத்தானோ அதுவே கிடைத்து விட்டது.
அவனின் இதழ்கள் அந்த பெயரை முணுமுணுக்க, “ஆதி கேஷவன் த க்ரேட் எக்ஸ்ப்ளோரர்” என்று சத்தமாக சொன்னாள் அவள்.
இதன்பிறகு தன் வாழ்க்கை தலை கீழாக மாறும், தன்னவளின் மனதை தானே சுக்கு நூறாக உடைத்து அவளை விட்டு பிரிய போகிறோம் என்று அவன் கனவில் கூட நினைத்திருக்க மாட்டான்.
அடுத்தநாள்,
காலையில் எழுந்த அருவிக்கு தலைவலியுடன் சேர்த்து தான் எப்படி தன் அறைக்கு வந்தோம் என்ற கேள்வி வேறு மண்டையை குடைந்தது. டீபாயில் இருந்த எலுமிச்சை பழச்சாற்றை குடித்து நிதானமாக உட்கார்ந்தவளுக்கு அப்போது தான் நேற்று இரவு நடந்த சில நிகழ்வுகள் மூளையில் விம்பங்களாக ஓட, அதிர்ந்துவிட்டாள் அவள்.
‘அய்யோ! என்ன காரியம் பண்ணிட்ட தீ? மஹி உன்னை பத்தி என்ன நினைச்சிருப்பான். இப்போ எப்படி போய் அவன் மூஞ்சில முழிப்பேன்?’ என்று தனக்கு தானே அறைந்து புலம்பியவளுக்கு நிஜமாகவே தன்னவனை சந்திப்பதில் சங்கடம் தான்.
கட்டிலில் அமர்ந்து தலையை இரு கைகளால் தாங்கிய வண்ணம் அமர்ந்திருந்த அருவி, கதவை தட்டிவிட்டு உள்ளே வந்த மோகனாவை பார்த்து திருதிருவென முழித்தாள்.
அவரோ அவளை புன்னகையுடன் பார்க்க, தன்னை சுதாகரித்துக் கொண்டு, “ஆர் யூ ஓகே அம்மா?” என்று அவள் கேட்க, அருகில் வந்து அவளின் கன்னத்தை வருடியவர், “நீ நல்லா தானே இருக்க அருமா?” என்று கேட்டார்.
அதில் சங்கடமாக தலை குனிந்தவள், “ஐ அம் சோரி மா… நேத்து ஏதோ நான்…” என்று என்ன சொல்வதென தெரியாமல் தடுமாற, அதில் வலி நிறைந்த புன்னகையை சிந்தியவர், “எதுக்கு டா சோரி எல்லாம்? இது கூட என்னால தான்…” என்று சொல்ல, அவளோ அவரை ஏறிட்டு பார்க்க தயக்கப்பட்டு, “அப்படி எல்லாம் இல்லை மா, நான் தான்.” என்று தலைகுனிந்தவாறு சொன்னாள்.
அதில் லேசாக புன்னகைத்தவர் அவளின் நாடியில் விரல் வைத்து நிமிர்த்தி, “அரு, நான் இப்போ லோஸ் ஏன்ஜல்ஸ் கிளம்புறேன். நான் வந்ததும் முதல் வேலையா உனக்கும் உன் மஹிக்குமான கல்யாணத்தை பத்தி தான் பேச போறேன். அந்த பையனோட வீட்ல நானே போய் பேசுறேன். ஆர் யூ ஹேப்பி?” என்று கேட்க, கண்களை சாரசர் போல் விரித்தவள் அவரை தாவி அணைத்திருந்தாள்.
“நிஜமாவா? எனக்கு ரொம்ப ஹேப்பியா இருக்கு அம்மா.” என்று அவள் குதூகலிக்க, தன் மகளை இறுக அணைத்துக் கொண்டவர், “நீ ஹேப்பின்னா அம்மாவும் ஹேப்பி தான். சீக்கிரம் அம்மா வந்துருவேன். டேக் க்யார்.” என்று அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட்டு வெளியேற, அவளுக்கோ சந்தோஷம் தாளவில்லை.
தன் சங்கடம் மறந்து அவசர அவசரமாக தன்னவனை காண கண்ணாடி முன் அவள் தயாராகிக் கொண்டிருக்க, சரியாக அவளுடைய அலைப்பேசி அலறியது. திரையை பார்த்தவள், அதில் ராகவ்வின் எண்ணை பார்த்ததும் அவசரமாக ஏற்று காதில் வைத்தாள்.
“மஹி…” என்று அவள் உற்சாகமாக சொன்னதும் தான் தாமதம், “அரு, இன்னைக்கு நீ வீட்டுக்கு வராத! நானும் ஆகுவும் முக்கியமான வேலை விஷயமா வெளில கிளம்புறோம். மூனு நாள்ல வந்துருவோம்.” என்று சொல்ல, “உனக்கு போகனும்னா நீ போக வேண்டியது தானே மேன், என் மஹிய எதுக்கு கூட்டிட்டு போற?” என்று கோபமாக கேட்டாள் அருவி. ஆனால், மறுமுனையிலோ அமைதி தான்!
அதில் எரிச்சலானவள் தன்னை நிதானப்படுத்தி, “என் மஹிக்கிட்ட ஃபோன கொடு!” என்று சொல்ல, அதில் சற்று திடுக்கிட்ட ராகவ், “அது.. அது வந்து.. ஆகு தூங்குறான். எழுந்ததும் பேச சொல்றேன்.” என்று தடுமாறியபடி சொல்ல, உதட்டை பிதுக்கியவள், “சாகு, அவன் என் மேல கோபமா இருக்கானா? ஏன் டா என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல்ல?” என்று பாவம் போல் கேட்டாள்.
என்ன பதில் சொல்வதென தெரியாது திணறிய ராகவ், “அப்படி எல்லாம் இல்லை அரு, கிளம்புற அவசரத்துல அவனால பேச முடியல. அதான்… சீக்கிரம் வந்துருவோம்.” என்றுவிட்டு அழைப்பை துண்டிக்க, அருவிக்கோ கண்கள் கலங்கிவிட்டது.
‘என் மேல கோபமா இருக்கியா மஹி? நேத்து நான் ட்ரிங்க் பண்ணியிருக்க கூடாது தான். அதுக்காக ஒரு வார்த்தை கூட சொல்லாம போயிருவியா? உன்னை பார்க்காம எப்படி இருப்பேன்?’ என்று புலம்பியவளுக்கு நிஜமாகவே அடுத்த மூன்று நாட்களும் மூன்று யுகமாக தான் கடந்தன. ஒவ்வொரு நொடியும் தன்னவனின் நினைவே அவளை வாட்டி வதைக்க, இதில் ராகவ்வின் எண்ணை வேறு தொடர்பு கொள்ள முடியாமல் போனதில் நொந்து போய்விட்டாள் அவள்.
‘அய்யோ! சாகுவோட நம்பர் அ ரீச் பண்ண கூட முடியல்லையே… மஹி, சீக்கிரம் வா! ஐ நீட் யூ.’ என்று புலம்பவே ஆரம்பித்தவள், மூன்று நாட்கள் கழித்து நான்காவது நாள் காலையிலேயே ராகவ்வின் வீட்டின் முன் தான் ஆஜராகி இருந்தாள்.
கதவு தட்டப்படும் சத்தத்திலே யாரென்று புரிந்து கொண்ட ராகவ்விற்கு அவளை எப்படி சமாளிப்பது என்றே தெரியவில்லை. முயன்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கதவை திறந்தவன், தன் முன் தன்னை முறைத்தவாறு நின்றிருந்த அருவியை பார்த்து உள்ளுக்குள் பதறினாலும், வெளியில், “அரு, ஆகு இங்க இல்லை. நான் நேத்து மதியமே இங்க வந்துட்டேன். பட், அவன் அவனோட அம்மா கூட இருக்கேன்னு சொன்னான். ஐ திங் நாளைக்கு வந்துருவான்.” என்று சொல்ல, அருவிக்கோ கட்டுக்கடங்காமல் கோப எகிறியது.
“சரி, அவன் அம்மாவோட ஃபோன் நம்பர சொல்லு! நான் மஹிக் கூட இப்போ பேசியே ஆகனும்.” என்று அவள் அதட்டலாக கேட்க, “எனக்கு தெரியாது அரு.” என்ற ராகவ்வின் பதிலில் கடுப்பானவள், எதுவும் பேசாது வெளியேறி தன் கோபம் மொத்தத்தையும் வண்டியில் காட்டி மின்னல் வேகத்தில் செல்ல, போகும் அவளை பாவமாக பார்த்தான் ராகவ்.
அடுத்தநாள் மாலை,
சோஃபாவில் சோகமே உருவமாய் அருவி தொலைக்காட்சி சேனல்களை கை போன போக்கில் மாற்றியவாறு அமர்ந்திருக்க, ராகவ்வின் எண்ணிற்கு பிரத்யேகமாக போட்டிருந்த தொலைப்பேசி அழைப்பு பாடலில் அடித்து பிடித்து தொலைப்பேசியை தேடி எடுத்தவள், பதற்றமாக அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.
கொஞ்சநாட்களாகவே என்ன என்று சொல்ல முடியாத உடல் சோர்வு அவளை ஆட்கொள்ள, இன்று தன்னவனின் அழைப்பில் மொத்த சோர்வும் பறந்து போனது போன்ற உணர்வு!
“ஜானு…” என்ற தன்னவனின் குரலில் உற்சாகமானவள், “மஹி… மஹி… இதோ வரேன் டா.” என்று அழைப்பை துண்டித்த அடுத்தகணம் அவசர அவசரமாக தயாராகி ராகவ்வின் வீட்டின் முன் தான் நின்றாள்.
கதவை திறந்துக் கொண்டு உள்ளே சென்ற அருவி, அங்கு தன்னையே எதிர்ப்பார்த்தது போல் காத்திருந்த தன்னவனை கண்டதும் ஓடிச்சென்று தாவி அணைத்து நெற்றி, இதழ், கன்னம் என்று மாறி மாறி முத்த மழை பொழிய, அக்னியே சற்று திணறிவிட்டான்.
ராகவ்வோ அவர்களுக்கு தனிமை கொடுக்க எண்ணி அறைக்குள் சென்று அடைந்துக்கொள்ள, “என் மேல கோபமா மஹி? அதனால தான் சொல்லாம போனியா? ஐ மிஸ் யூ டா. என்னை விட்டு போகாத மஹி.” என்று அருவி அழும் குரலில் சொல்ல, தனக்குள்ளேயே மருகினான் அக்னி.
“மஹி, உன் வீட்ல பேசினியா? நம்ம விஷயத்தை சொன்னியா? உன் அம்மாவுக்கு சம்மதம் தானே?” என்று அருவி ஆர்வமாக கேட்க, “அது.. அது ஜானு…” என்று சற்று தடுமாறியவன், கண்களை மூடி திறந்து தன்னை நிதானப்படுத்தி, “நான் அம்மாகிட்ட சொன்னேன். பட், அம்மா ஏத்துக்கல அவங்ளுக்கு பிடிக்கல.” என்று சொல்ல, அருவியின் முகமே வாடிவிட்டது.
“ஏன் மஹி என்னாச்சு? அவங்களுக்கு என்னை பிடிக்கலையா? இல்லை, நீ காதலிக்கிறதே அவங்களுக்கு பிடிக்கலையா? ஏன் உன் அம்மா ஏத்துக்கல மஹி?” என்று அருவி பதட்டமாக கேட்க, அக்னிக்கு தான் என்ன சொல்லி சமாளிப்பது என்றே தெரியவில்லை.
தன்னவளை காயப்படுத்தவும் அவனுக்கு மனம் கேட்கவில்லை. முயன்று தைரியத்தை வரவழைத்தவன், “அது ஜா… ஜானு அம்மாகிட்ட உன்னை பத்தி சொன்னேன். அவங்களுக்கு உன்… உன்…” என்று எதை சொல்வதென தெரியாது நிறுத்த, அவன் சொல்லாமலே தானாக ஏதோ ஒன்றை புரிந்துக் கொண்ட அருவி, “ஒருவேள, உன் ஃபேமிலிக்கு நான் பொருத்தமில்லைன்னு நினைக்கிறாங்களா மஹி?” என்று கலங்கிய விழிகளுடன் கேட்க, அக்னிக்கு தான் பதில் சொல்லவே முடியவில்லை.
எந்த பதிலும் பேசாது அவளின் கண்களை பார்க்க முடியாது வேறுபுறம் திரும்பி இறுகிய முகமாக அவன் அமர்ந்திருக்க, அவன் கைகளுடன் தன் கைகளை கோர்த்துக் கொண்டவள், “மஹி, நீ எனக்கு வேணும். அதுக்காக நான் என்ன வேணா பண்ணுவேன். ஒருவேள, என்னோட கனவு தான் நாம சேருரதுக்கு தடையா இருக்குன்னா, உனக்காக அதை கூட விட்டுக் கொடுப்பேன்.
எனக்கு உன் கூட வாழனும். உன் பொண்டாட்டியா உன் கூட வாழ்ந்தாலே போதும் எனக்கு. லவ் யூ டா. இப்போ போய் உன் அம்மாகிட்ட பேசு! உங்க மருமக நீங்க சொல்ற மாதிரி நடந்துப்பா ஏன்னா, அவ உங்க பையன ரொம்ப காதலிக்கிறான்னு சொல்லு!” என்று கண்களில் மொத்த காதலையும் தேக்கி சொல்ல, அக்னி தான் ஆடிப் போய்விட்டான்.
அவளுடைய கனவு அவளுக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும். அத்தகைய கனவை தன் மீதான காதலுக்காக அவள் தூக்கியெறிய துணிவாள் என்று அவன் நினைத்திருக்கவும் மாட்டான்.
குற்றவுணர்ச்சி அவன் மனதை குத்திக்கிழிக்க, தன்னவளை இழுத்து அணைத்துக் கொண்டவன் மானசீகமாக, ‘என்னை மன்னிச்சிடு ஜானு. எனக்கு வேற வழி தெரியல. இதுவே கடைசியா இருக்கட்டும்.’ என்று நினைத்தவாறு அவளின் கன்னம் தாங்கி இதழில் அழுந்த முத்தமிட, அவளோ இன்பமாக அதிர்ந்தாள்.
ஏனோ இதன்பிறகு தன்னவளை முத்தமே இட போவதில்லை என்ற ரீதியில் மேலும் மேலும் அவளின் இதழை விடாது அவன் இதழ் தேன் பருக, ஒருகட்டத்தில் முடியாது மூச்சு முட்டினாலும் தன்னவனின் ஏக்கத்தை போக்க, அவனுக்கு சந்தோஷமாகவே இசைந்துக் கொடுத்தாள் அவள்.
–ஷேஹா ஸகி