WhatsApp Image 2020-08-17 at 10.30.47 AM

அத்தியாயம்-11

 

 

தன்னந்தனி காட்டில்

தத்தளிக்கிறேன்..

சுற்றி இத்தனை ஜீவன்கள்

இருந்தும்..

ஏனோ தனித்துவிடப்பட்ட உணர்வொன்று

மனதோடு வந்து ஒட்டிக்கொண்டதைப்போல..

என்னை அதனுள் அமிழ்த்திக்கொள்ள..

நினைவுகளின் அழுத்தத்தில்..

திடுக்கிடும் நிதர்சனத்தில்..

மேலெழும்பும் குழப்பங்களுடன்

அமிழ்கிறேன்..

 

தனக்கெனவே கீழே காரிடாரில் காத்துக் கொண்டிருந்த சாத்வதனிடம் கிளம்பலாம் கிளம்பலாம் என்பதாய் வலது கையை ஆட்டி சைகை செய்தபடி நொடிப்பொழுதும் நிற்காமல் விறுவிறுவென படியிலிருந்து இறங்கியவளாய் நடந்து வந்து கொண்டிருந்தாள் ஆஹிரி.

 

அவள் வருவதை  கண்டு  கொண்டவனோ வேக எட்டுக்களுடன் முன்னேறினான் பின் வாசலை நோக்கி.

 

அந்த ஃபார்ம் ஹௌஸின் பின்புறத்தில் வீட்டின் உள் வழியாகவே பிரிந்துச் சென்ற குறுகிய பாதையினுள் நுழைந்தவர்கள் அது சிறிய கதவிடம் வந்து முடியவும் நின்றுவிட, ஏற்கனவே சாவியை தயார் நிலையில் வைத்திருந்ததால் உடனே அந்த தடிமனான கதவை திறந்திருந்தான் சாத்வதன்.

 

உள்ளே நுழைந்தவளின் பார்வையை முதலில் கவர்ந்தது அந்த சாம்பல் நிற உறையை உடுத்தி நின்ற கார்! அதைச்சுற்றி ஆங்காங்கே சில பொருட்கள் தென்பட்டாலும் வெகு சுத்தமாகவே காட்சியளித்தது அந்த கார் ஷெட்.

 

ஷீட்டை விலக்கியவனின் முன் மிளிராவிட்டாலும் சற்று  பளபளக்கத்தான் செய்தது அந்த கறுப்பு நிற கார்.

 

சாத்வதனின் கண்ணசைவின் பொருள் உணர்ந்த ஆஹிரியோ  சாத்வதன் வீசிய சாவியை பிடித்தவளாய் சில வேக எட்டுக்களுடன் அந்த ஷெட்டின் கதவிடம் விரைந்திருந்தாள்.

 

பூட்டை திறந்தவளுக்கு அப்பெரிய கதவை மேலே இழுப்பது சற்று கடினமாய் இருந்தாலும் பின் மூச்சை பிடித்தவளாய் முழுபலத்தையும் திரட்டி இழுக்க சுலபமாகவே இழுபட்டிருந்தது அக்கதவு.

 

பழைய வீடென்பதாலோ இல்லை அடிக்கடி உபயோகிப்பதில்லை என்பதாலோ என்னவோ அந்த கதவு இன்றைய காலத்திற்குறிய மாற்றங்கள் எதையும் கண்டிருக்கவில்லை.

ஆனால் வெளிக்கதவு அதற்கு நேரெதிராய் இருந்தது. சாத்வதன் காரை கிளப்பிக் கொண்டு வருவதற்கு முன்னராகவே கதவை திறந்தவள் அவன் காருடன் வெளியேறியதுமே கதவைடைத்தவளாய் வண்டியிடம் விரைந்தாள்.

 

சுற்றுமுற்றும் பார்த்தவளாக அந்த குளிரில்  வேர்க்காவிட்டாலும் சிறு படபடப்புடனே வண்டியில் அவனருகில் ஏறி அமர்பவளைக் கண்ட சாத்வதனோ..

 

“அச்சு..?” என்றுத் தொடங்க

 

“ஹீ இஸ் சேஃப்!” என்றவளின் வார்த்தைகள் என்னவோ சாத்வதனுக்கானதாய் அமைந்தாலும் பார்வை மட்டும் அரணின் அறை சன்னலையே பார்த்திருந்தது.

 

கைகளிரண்டும் பின்னால் கட்டப்பட்டிருக்க சுழட்டும் கண்களும் தப்பும் நினைவுமாய் பார்வையை சுற்றத்தில்  பதிக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தான் அரண்.

 

“நோ..நோ..போகாத ஆரி..” என்றவனின் குரல் மெல்ல மெல்ல தேய்ந்து கொண்டிருந்தது.

 

“இருந்தாலும்..” என்று தொடங்கிய சாத்வதனை இடைமறித்தவளோ,

 

“அரண் என்ன வெளில அவ்ளோ ஈஸியா விட்றுவான்னு உங்களுக்கு தோணுதா வதன்?” என்றிருந்தாள் சற்று அழுத்தமாகவே.

 

“ம்ம்..” என்று அவளது கேள்விக்கு ஒப்புதலாய் தலையசைத்த சாத்வதன் வண்டியை கிளப்பியிருந்தான். அவனுக்கு ஏனோ இன்னும் இதை  சரியென ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவனும் பார்த்தானே அந்த காட்டுக்குள் நடந்த சண்டையை.  தானே இவளின் உயிரை பணயம் வைக்கிறோமோ என்ற சந்தேகமும் எழாமல் இல்லை. ஆனால் அவனுக்கு ஒன்று நிச்சயம்! இங்கிருந்து வெளியேறும் வழி மட்டும் தெரிந்திருந்தால் நிச்சயம் ஆஹிரி அவனை இதில் இழுத்திருக்கமாட்டாள். ஏன் இவ்வளவு தாமதித்திருக்கவும் மாட்டாளோ..?! என்று தான் எண்ணத் தோன்றியது.

 

“பட்..அச்சுக்கு உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு” என்ற சாத்வதனின் குரலுக்கு

 

“ஐ நோ..” என்று முணுமுணுப்பாய் பதிலுரைத்தவளோ தலையை அப்படியே பின்னால் சாய்த்து கண்களை மூடிக்கொண்டாள்.

 

 

“நிலவூர்னா.. ஊட்டிக்கு பக்கத்துல இருக்கதா?” என்ற வகுளாவின் சந்தேகத்திற்கு

 

“இதுவேற வகி.. திருநெல்வேலி போற வழில இருக்கு.. குட்டி கிராமம்..” என்ற ஜீவரத்னத்தின் பதில்  குரலும் இப்பொழுதும் ஆஹிரியின் செவிப்பறையினுள் அழியாமல்.. ரீங்காரமிடுகின்றன.

 

“இந்த ஒரு வாட்டி.. போய் பாத்துட்டு வந்துடலாம்டா..” என்று நிரூபா மறுபடியும் தொடங்கியிருந்தார்.

 

இன்னும் இளையவளுக்கு ஆச்சர்யம் விலகியிருக்கவில்லை.. அதெப்படி அம்மாவால் இப்படி ஒரு முடிவு..அதுவும் எப்படிப்பட்ட சூழ்நிலையில்..!?? கணவன் கோமாவில்.. இளைய மகளை காணவில்லை.. மூத்த மகளான அவள் இன்னும் அந்த சம்பவத்தைவிட்டே வெளியே வந்திருக்கவில்லை. அந்த விபத்திற்கு பின்.. ஏன் அவள் கண்விழித்து வீட்டிற்கு வந்ததிலிருந்தே.. என்று அவள் நிம்மதியாய் கண்ணயர்ந்திருப்பாள்?!! கண்ணை மூடிய சில மணித்துளிகளுக்கெல்லாம் என்னவாகுமோ..அவளறியாள் ஆனால் பதறியடித்துக்கொண்டு விழிப்பாள்.. அரற்றுவாள்.. தினம் தினம் நரகமாய் தானே கழிந்தது அவளது இரவுப்பொழுதுகள் அனைத்தும்?  இது போதாதென்பதுபோல தன்னை யாரோ பின்தொடர்வதைப்போலொரு உணர்வு வேறு!..கூடவே மாயமாய் மறைந்த  டைரிக்களும்.. ஏனோ சொந்த வீட்டிலேயே பாதுகாப்பற்ற உணர்வொன்று எழுந்துவிட்டதோ!? அதனால்தான் முதலில் வேண்டாம் என்றவள் பிறகு நிரூபா “அம்மாவுக்காக ஆருமா” என்றதும் மௌனமாய் தலையாட்டிவிட்டாளோ?!!..

 

எதிலிருந்தோ தப்புவதாய் நினைத்து இதில் மாட்டிக் கொண்டாளா? இல்லையே! பிரச்சனைகளில் இருந்து தப்ப முயற்சிப்பவள் அல்லவே ஆஹிரி. எதுவாகினும் தனது பிரச்சனைகளைத் தானே நின்று முடிக்க வேண்டும் என்றுதானே நினைப்பாள். அதனால்தானே இப்பொழுதும் கிளம்பியிருக்கிறாள்.. பிறகு ஏன் நிலவூர் பயணத்திற்கு சரியென்றாள்??

 

 

இதில் சித்தப்பா வேறு!

 ஏனோ அம்மாவும் சித்தப்பாவும் இன்னும்கூட  கொஞ்சம் விசாரித்திருக்கலாமோ?!

நடு நடுவில் வகுளா சித்தியின் பாசமான பராமரிப்பும்.. வெகுளித்தனமான செயல்களும்..அது  பாதியே அவளை குற்ற உணர்வில் குறுக வைத்தது.

 

“பாப்பா.. இந்த மெரூன் கலர் லெஹங்கா நல்லாருக்கும்..” என்றபடி கண்ணாடி முன் அதில் பட்டுத் தெறித்த தனது பிம்பத்தையே வெறித்தபடி அமர்ந்திருந்த ஆஹிரியை கலைத்திருந்தார் வகுளா.

 

மெத்தையில் கிடந்த கறுப்பு நிற பலாஸோவையும் அதற்கேற்றார்போல அடர்ரோஜா நிறத்திலான லாங் டாப்பையும்  சுட்டிக் காட்டியவளோ..

 

“இல்ல சித்தி.. இது போட்டுக்கறேனே..” என்றாள்.

 

அதை முழுமனதாய் மறுத்திருந்தார் வகுளா, “என்ன பாப்பா?! நல்ல காரியத்துக்கு கிளம்பற கறுப்புலயா போடறது? அது மட்டுமில்லாம அது கொஞ்சம் மங்கின கலர்.. இது உனக்கு எடுப்பா இருக்கும்..” என்று சொல்லிக் கொண்டிருந்தவரையே பார்த்திருந்தவளின் விழிகளிரண்டின் விளிம்பில் கசிந்தது ஓர் துளி.

 

தன் மகள் உயிரோடிருக்கிறாளா..இல்லையா என்றுக்கூடத் தெரியாத நிலையில் இருப்பவரைக் காணக் காண உள்ளுக்குள் எழுந்தது உணர்வுகளின் பேரலை!!

 

ஆதாரத்தோடு முடிவாகும்வரை துளஜாவைப் பற்றிய எந்தவித செய்தியும் வகுளாவை எட்டாதவண்ணம் பார்த்துக் கொண்டனர் நிரூபாவும் ஜீவரத்னமும்.

 

“அவ தாங்கமாட்டாடா..” என்ற கண்ணீர் குரல் இன்னும் வலிக்திறது ஆஹிரிக்கு.

 

என்ன தெரியும் இந்தத் தாய்க்கு தன் மகளைப்பற்றி? எங்கோ தொலைதூரத்தில்..வேற்றுநாட்டில் இருக்கும் உறவினரின் வீட்டில் மகள் பத்திரமாய் இருப்பதாக எண்ணி நிம்மதியாய் உலாவி வரும் இந்த அன்னையின் மனம் உண்மையை அறிந்தால் என்னவாகும்??

 

தன் மகள் இருக்கிறாளா இல்லையா என்றுக்கூட தெரியாத நிலையில்.. ஆஹிரியால் வகுளாவை அப்படியொரு நிலையில் எண்ணிப் பார்க்கவே முடியவில்லை. சுக்கு நூறாய் உடைந்துபோவார்! ஒட்ட முடியாதளவு உடைந்துவிட்டால்??!! அந்த பயமே பிடித்தாட்டியது எல்லாரையும் அதுவே பொய்யுரைக்கவும் வைத்திருந்தது.

 

ஆக்ஸிடென்டால் மனதளவில் பயந்திருக்கும் மகளை வெளிநாட்டில் உள்ள தனது உறவினனின் வீட்டில் விட்டிருப்பதாய் ஜீவரத்னம் சொல்லிய  பொழுது இது எத்தனை நாள் என்ற சந்தேகமே அனைவரிடமும்.. ஒரே ஒரு  ஃபோன் கால்! எல்லாம் தெரிந்துவிடுமே.. என்றிருக்க அவர் அதற்கும் வழி செய்திருக்கவே கொஞ்ச காலத்திற்கு சமாளிக்க முடிந்தது.

 

“பாப்பா..” என்றழைக்கும் சிறிய அன்னையை இதழ்விரிய ஏறிட்டவளோ அவர் கையில் இருந்ததை வாங்கிச் சென்று மாற்றி வரவே அவர் முகத்திலும் அத்தனை மகிழ்ச்சி!

 

“பாரு! நீ சொன்னா கேட்டுக்கற..ம்ஹூம்! அவளும்தான் இருக்காளே!  உன் பொறும அவளுக்கு வரதேயில்ல பாப்பா!..” என்று சொல்லிக் கொண்டேப் போக இளையவளுக்குத்தான் வெடித்துச் சிதறத் துடிக்கும் அழுகையை கட்டுக்குள் வைப்பது பிரம்ம பிரயத்தனமாய் இருந்தது. கண்களை இறுக மூடியும் கலங்கி கசியத் தொடங்க பட்டென எழுந்தவிட்டவளோ முழுத் தெம்பையும் திரட்டி..

 

“ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வரேன் சி..சித்தி” என்றுவிட்டு குளியலறைக்குள் புகுந்திருந்தாள்.

 

கதறியழத்துடித்த மனதை அடக்கியவளுக்கு ஏனோ வழியும் கண்ணீரை மட்டும் அடக்க இயலவில்லை. நிற்காமல் வழியும் கண்ணீரை முகத்தில் நீரை வேகமாய் அடித்து கழுவியவள் அழுந்த துடைத்தவளாய் வெளியேறினாள்.

 

ஆனால் வகுளாதான் இதை போட்டுக்கொள் அதை பாரு என படுத்தியெடுத்துக் கொண்டிருந்தார்.

 

மற்ற அனைத்தையும் மறுத்தவள் அங்கிருந்த ஐலைனரை கையிலெடுத்தாள். இமைகளுக்கு மேல் மெல்லிய கோடாய் வளைந்து நின்ற ஐ லைனரும்.. இதழ்களில் பளபளக்கும் கோகோ பட்டர் ஃப்ளேவர்ட் லிப் பாமுமாய் கிளம்பியிருந்தாள்.

 

இங்கு வகுளாவென்றால் அங்கு நிலவூரிலோ வேறுவிதமாய்..

 

ஜீவரத்னமும் நிரூபாவும் ஆஹிரியும் மட்டும் கிளம்பியிருந்தனர். வகுளா ஜனார்த்தனனை தான் பார்த்துக் கொள்வதாக சொல்லிவிட கொஞ்சம் நிம்மதியாகவே கிளம்பியிருந்தார் நிரூபா. ஆனால் அங்கு நிலவூரிலோ அவர்கள் மூவரின் மனநிம்மதியிலும் கல்விட்டெறியும் சம்பவங்களே பல நடந்தன..

 

 

நிலவூர்..

 

அழகிய கிராமம் என்றுதான் சொல்ல வேண்டும்.. கிராமங்களுக்கே உண்டான தனி வாசம் அவள் நாசியை நிறைத்ததென்றால்  வண்ண வண்ண பெயிண்ட்டுகளின்றி சுண்ணாம்பால் வெள்ளையடிக்கப்பட்டிருந்த வீட்டுச் சுவரும்.. மச்சறைகளும் அவளை ரொம்பவே கவர்ந்திழுத்திருந்தது.

 

இத்தனை ரம்மியமாய் இருக்கக்கூடுமென அவள் நினைத்திருக்கவில்லை.. எல்லாம் அந்த வீட்டை அடையும்வரைதான். அங்கு இறங்கியதும் காரை நிறுத்தி  வருவதாக ஜீவரத்னம் ஓட்டுனருடன் சென்றுவிட இறங்கிய இருவரையும் கடந்து சென்றவளின் பார்வை ஆஹிரியை  நிற்க வைத்தது. இன்னதென்று வரையறுக்க முடியாத ஒரு பார்வையுடன் அவர்களை ஏறிட்டவளோ அத்தனை அலட்சியமாய் தோளை குலுக்கியிருந்தாள். முதலில் அவளது செயலில் கோபம் துளிர்த்ததென்றால் பிறகோ ஏன்?? என்ற கேள்வியே ஆஹிரியை  குடைந்தது. பக்கத்திலிருந்த நிரூபாவைப் பார்த்தால்..அவரோ வேறெங்கோ வெறித்திருந்தார்.

 

“உள்ள போலாமா?” என்றபடி ஜீவரத்னம் வந்துவிட மற்ற இருவரும் அவருடன் இணைந்தவர்களாய் வீட்டினுள் நுழைந்தனர்.

 

“பொண்ணு பாக்கறது மாதிரிக்கூட இல்லடா..சும்மா பாத்து பேசி..பிடிச்சிருந்தாதான் அடுத்த வேலையெல்லாம்..” என்று நிரூபா சொன்னது நினைவிலாடின..

 

இவர்கள் உள்ளே நுழையவும் அதே பெண்தான் எழுந்து வந்தாள் முதல் ஆளாக.

 

“மிஸ்டர்.அரண்..?” என்று ஜீவரத்னம் தொடங்க அவளோ

 

“அப்பாயிண்மெண்ட் இருக்கா?” என்றாள் அதே பாவனையில்.

 

பல குழப்பங்களுக்கு நடுவில் தத்தளித்துக்கொண்டிருந்தவளுக்கு இது பெரிய விஷயமில்லை என்றாலும் ஏனோ இதையெல்லாம் இந்நொடியே நிறுத்திவிடலாம்.. எல்லாவற்றையும் தூக்கியெறிந்துவிடலாம்.. என்று தோன்றாமல் இல்லை..ஆனால் ஏனோ அவள் அதை செய்திருக்கவில்லை.

 

“சார் மேல இருக்காங்க..நீங்க உக்காருங்க” என்றவள் அங்கு கிடந்த இறும்புக் கட்டிலை சுட்டிக் காட்ட மூவரும் அமர்ந்தனர்.

அவள் அழைத்து விவரம் சொல்ல மறு நொடியே அவன் கீழிறங்கி வந்துவிடுவான் என்று ஆஹிரி எண்ணியிருக்கவில்லைதான். ஆனால் மருந்துக்கும் வந்து உபசரிக்காமல்  அவளை மட்டும் மேலே வரச் சொல்வதென்பது எந்த வகையில் சரியாகும்?! 

 

வேண்டாம் போக வேண்டாம் என்று ஒருபக்கம் பிடித்திழுத்தாலும் மச்சுப் படிகளில் ஏறியிருந்தாள்.  

 

ஏறியவளின் கண்களில் முதலில் விழுந்தது அவன்..அரண்!! அதற்குப்  பின்னரே உரைத்தது அவ்வறையில் இருந்தவர்கள். அவனது நண்பர் கூட்டம்போலும்..

 

“ஹே!!! வாங்க வாங்க!!” என்று உற்சாகமாய் வரவேற்றவர்கள் அவளை அமர வைத்தவர்களாய் தங்களது கேலி கிண்டல்களை தொடர்ந்திருக்க அவளுக்குத்தான் என்னவோப் போலானது. முதல் முறை சந்திக்கிறார்கள்..அதற்குள் இவர்கள் எல்லாம் என்னவோ நாளைக்கே இவர்களுக்கு கல்யாணம் என்பதைபோல கேலி பேசினால்?

 

இதழ்களில் சிரிப்பை ஃப்ரீஸ் செய்ததுபோல வைத்திருக்கவே வாயெல்லாம் வலியெடுக்கும் உணர்வு.

 

பொறுத்து பொறுத்து பார்த்தவள்.. இதற்கு மேல் தாமதித்தால்.. வந்தக் காரியம் கெட்டுவிடுமென்று தோன்றவே அவனிடம் பேசவேண்டுமென கேட்டிருந்தாள். ஏனோ அவன் தன்னிடம் பேசுவதை தவிர்க்கவே இவர்களை உபயோகிக்கிறானோ என்ற சந்தேகம் வேறு எழுந்திருந்தது.

 

அதற்கு பிறகு நடந்தவையெல்லாம் இப்பொழுதும் ஏதோ கற்பனை உலகிற்குள் வந்துவிட்டதைப்போலத்தான் தோன்றுகிறது ஆஹிரிக்கு.

 

இன்னும் நினைவில் இருக்கிறது அவள்  முகத்தில் அந்த கர்சீஃபை வைத்து அழுத்தியபடி அரண் அவள்  தோளில் அவன் முகத்தை புதைத்து, “ஸாரி ஆரி..” என்றது.

ஆனால் அவள்தான் சுயநினைவை அன்று மெல்ல மெல்ல இழந்து கொண்டிருந்தாளே.

 

ஆஹிரி அறிந்திருக்கவில்லை அதற்கு பின்னான அரணின் செயல்களை.. அவளது தாவணியை உருவியவனோ அதன் நுனியில்.. ‘அவன் அங்கிருந்து செல்வதை யார் தடுக்க முயன்றாலும் விளைவுகள் விபரீதமாக இருக்குமென’ கிறுக்கி சன்னல் வழியாய் வெளியே வீசியிருந்தான். கண்ணுக்கு முன்னே நடந்தும் கையறு  நிலையில் நின்றனர் மற்ற இருவரும்.  நடந்த கலவரத்தில் அவனுடன் வந்தவர்களை தேடினால் அவர்களும் மாயமாகியிருந்தனர்.

 

இருண்டிருக்கும் சாலையில் விளக்கொளியை பாய்ச்சியபடி அந்த கார் சீறிப்பாய்ந்துக் கொண்டிருந்தது.

 

கண்களை மூடி தலையை ஸீட்டில் சாய்த்து பழைய நினைவுகள் அனைத்தையும் அசைப்போட்டபடி இருந்தவளை நித்திரா தேவி தழுவியிருந்தாள்.

 

அங்கு அரணோ போராட்டங்கள் அனைத்தையும் கைவிட்டவனாய் கண்ணயர்ந்திருந்தான்.

 

இரவின் இருள் அனைத்தும் மெல்ல மெல்ல கரைந்து வானம் முழுதும் மஞ்சள் நிற ரேகைகளாய் படரத் தொடங்கி இருந்தது. விடியலின் சாயல்..!!

 

“ஆஹிரி..ஆஹிரி” என்ற சாத்வதனின் குரலில் துயில் கலைந்தவளின் முன் வெளுக்கத் தொடங்கியிருந்தது வானம். வண்டி ரோட்டோரமாய் நிறுத்தப்பட்டிருக்க சாத்வதன்தான் அவளை எழுப்பிக் கொண்டிருந்தான் கையில் டீ க்ளாஸுடன்.

 

“தாங்க்ஸ் அ..வதன்” என்றவளையே ஒருகணம் பார்த்தவன் பின் புன்னகைத்தவனாய் தனது டீயை பருகத் தொடங்கியிருந்தான்.

 

அவர்களிருந்தது சிட்டி  ஔட்டர் என்பதை யாரும் சொல்லத் தேவை இருக்கவில்லை ஆஹிரிக்கு. டீயை குடித்தவர்கள் க்ளாஸை கொடுத்துவிட்டு கிளம்பியிருந்தனர்.

 

முப்பது முப்பத்தைந்து நிமிடங்களில் ஊருக்குள் நுழைந்திருந்தனர்.

 

சாத்வதன் அவளிடம் கேட்ட முதல் கேள்வியே, “இப்போ எங்க போனும்?” என்றுதான்.

 

“ஹாஸ்பிட்டல்” என்றவளின் முகம் முழுக்க சிந்தனையும் தெளிவும் மாறி மாறி வந்துச் சென்றது.

 

அவள் சொல்ல வருவதை புரிந்துக் கொண்டவனாக வண்டியை மருத்துவமனையை நோக்கி விட்டிருந்தான்.

அதே மருத்துவமனை.. அவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை.

 

ஆஹிரியை வண்டியினுள்ளயே இருக்கும்படி உரைத்த சாத்வதன் மருத்துவமனையினுள் நுழைந்திருந்தான். செல்வத்திற்காக.. அவனது  முகவரிக்காக..

 

உள்ளேச் சென்றவன் நேரம் சென்றும் வராமல் போகவே.. தானும்  இறங்கலாமா வேண்டாமா? என்றிவள் யோசித்தபடியிருக்க அதற்கெல்லாம் அவசியமே இல்லை என்பதுபோல் வேக எட்டுக்களுடன் வந்துக் கொண்டிருந்தான் சாத்வதன்.

 

அவனது உடல்மொழி ஏனோ யாரிடமோ இருந்து தப்புவதைப்போல.. பின்னால் திரும்பி பார்த்துவிட்டு தலையை குனிந்து வேக எட்டுக்களுடன் அவன் வந்துக் கொண்டிருந்தான்.

 

உள்ளே வந்தமர்ந்தவன் முதல் வேலையாக வண்டியைக் கிளப்பியிருந்தான். ஆஹிரி அவனைப் புரியாமல் பார்த்திருக்க சட்டை பையிலிருந்து துண்டுச் சீட்டு ஒன்றை அவளிடம் நீட்டியவனோ அங்கிருந்து முதல் வேலையாக கிளம்பியிருந்தனர்.

 

“என்னாச்சு?” என்றவளிடம்

 

“தெரிஞ்சவங்க..” என்றவன் ஒருமுறை பின்னால் பார்த்துக்கொண்டான்.

நல்ல வேளையாக அவன் வாசலிலேயே நின்றிருந்தான் சாத்வதனின் பள்ளி காலத் தோழன். அவனை இங்கு எதிர்ப்பார்த்திருக்கவில்லை.

 

“இந்த அட்ரஸ்ல அவங்க இருப்பாங்கனு தோணுதா?” என்ற சாத்வதனின் கேள்வியில் சிலக்கணங்கள் அமைதி காத்தவளோ..

 

“இல்ல.. ஆனா வேறெதாவது க்ளூ கிடைக்கலாம்” என்றுவிட்டு சாய்ந்தமர்ந்துக் கொண்டாள்.

 

வண்டி அந்த அட்ரஸை நோக்கி பறக்க இங்கு இவளுள்ளமோ எங்கெங்கோ பறக்க துடித்தது.

 

“இங்கதான்..” என்ற சாத்வதனின் அழைப்பில் சுற்றிலும் கவனம் பதித்தவளோ.. ஹூடியை தலையில் போட்டவளாய் இறங்கியிருந்தாள்..அவளுடன் சாத்வதனும்..

 

அவர்கள் நினைத்ததைப்போலத்தான் நடந்திருந்தது. செல்வத்தின் குடும்பம் சில வாரங்களுக்கு முன்னரே வீட்டை காலி செய்திருந்தனர். எங்கு  சென்றிருக்ககூடும் என்ற கேள்விக்கு வழமைபோல வந்து விழுந்தன ‘எங்கட்ட சொல்லல’ என்ற பதில்களே.

 

“பாவம் அந்த பொண்ணு.. ரெண்டு புள்ளைங்கள வச்சிட்டு எங்க என்ன பாடுபடுதோ..” என்று சேலைத் தலைப்பில் அவர்களது பக்கத்து வீட்டு  பெண்மணி மூக்குச் சிந்த அதற்கு மேலும் அங்கு நிற்பது அர்த்தமற்றதாகவேபட்டது இருவருக்கும்.

“ஆமா..நீ யாருமா?” என்றவரின் கேள்வி ஆஹிரியிடம் திரும்பிட

 

“சின்ன வயசு ஃப்ரெண்டுங்க” என்றுவிட்டு அடுத்த கேள்வி வருமுன் விடைபெற்றிருந்தனர் அப்பெண்மணியிடமிருந்து.

 

ஜன நெருக்கடி சற்று அதிகமாக இருக்கும் சாலைக்கு அருகில் வண்டியை நிறுத்தியவனோ தலையை கையில் பிடித்தபடி அமர்ந்திருக்கும் ஆஹிரியையே பார்த்திருந்தான்.

 

தேவையில்லாமல் இவள் உயிருடன் விளையாடுகிறோமோ? என்ற எண்ணம் மறுபடியும் எழாமல் இல்லை.

 

ஏனெனில் அவனைத் தொடர்ந்து காட்டுக்குள் வந்தவர்களால் இப்பொழுது இங்கு வரமுடியெதன என்ன நிச்சயம்?

 

“ஆஹிரி சாப்பிடலாமா?” என்ற வதனின் கேள்வியில் பட்டென உயர்ந்தது அவளது பார்வை.

 

யெஸ்!!!.. பரபரவென அவளது பார்வை சுற்றத்தில் சுழல விரல்களால் எதையோ கணக்கிடுவதைப்போல் ஒரு பாவனை..

 

“வதன்.. ஆக்ஸிடென்ட் எப்படி நடந்துச்சு??!!”  படபடப்பாய் கேட்டிருந்தவளையே பார்த்தவன்..

 

“மலைல இருந்து கீழ..” என்றவன் முடித்திருக்ககூடயில்லை.

 

“யெஸ்!!! இட் வாஸ் அ  ரோட் ஆக்ஸிடென்ட்!!” என்ற ஆஹிரியையே அதிர்ந்து பார்த்திருந்தான் சாத்வதன்.

 

“என்.. என்ன சொல்றீங்க?”

 

“ஆமா வதன்!அது ரோட் ஆக்ஸிடென்ட்!! நீங்க சொன்னதுபோல மலைல இருந்து கீழ விழல..”

 

முகத்தில் விழும் கதிரொளியில் கண் திறக்க முயன்றுக் கொண்டிருந்தான் அரண்.

கொஞ்சம் கொஞ்சமாய் கண்ணைத் திறந்தவனுக்கு பிறகே நினைவு வந்தது நேற்றைய நிகழ்வுகள் அனைத்தும் புகைபடலமாய்..!!

 

ஆஹிரியின் வார்த்தைகளும்..

 

ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்ததாலோ என்னவோ உடல் மரத்திருந்தது. சற்று நிதானித்தவனாய் அவ்வறையை பார்வையால் ஆராய்ந்தான். தாமதமாகவே உரைத்தது அவள் அவனை கட்டியிருந்த விதம்.

 

தாமாய் மலர்ந்தன இதழ்கள் இரண்டும் அவளது திட்டத்தில்..

 

சரியாய் சூரிய ஒளி படும் திசையில் அவன் முகம் இருக்கும்படி கட்டிப் போட்டிருந்தாள். அவளுக்கு தெரிந்திருக்கிறது இந்த இரண்டு நாட்களிலேயே எத்தனை மணிவரை எப்படியிருக்குமென..

 

ஸோ இந்த நேரம் நான் முழிச்சுக்கனும்னு நினைச்சிருக்கா..

கையை கட்டியிருந்த விதம்கூட அப்படிதான் இருந்தது தளர்வாய்..

 

“ஆனா.. “ என்று தொடங்கிய சாத்வதன் என்ன சொல்ல வருகிறான் என்று புரிந்துவிட..

 

“உண்மைலயே வதன்! ரோட் ஆக்ஸிடென்ட்ட யாரோ மலைல இருந்து கார் விழுந்ததா மாத்திருக்காங்க! “

 

“ஓஹ் நோ..”  என்ற சாத்வதனின் குரல் நம்பவியலாத அதிர்ச்சியை பிரதிபலிக்க

 

“நம்ம கேள்விக்கான பதில் செல்வத்துக்கிட்டதானிருக்கு..” என்றாள் தீர்மானமாய்.

 

“இப்போ என்ன பண்ண ஆஹிரி? அந்த செல்வத்தோட ஃபேமிலிய எங்க போய் தேட?” என்று அயர்வாய் ஒலித்தது சாத்வதனின் குரல்.

 

மெல்ல ஜன நெரிசலில் வண்டியை ஓட்டியபடி அவன் கேட்டுக் கொண்டிருக்க மற்றவளிடம் பதிலில்லாமல் போகவே அவன் அவள்புறம் திரும்ப அவளோ ரியர்வ்யூ மிரர் வழியாய் பின்னால் யாரையோ உன்னிப்பாய் கவனித்திருந்தாள்.

 

திடீரென முகத்தில் பரவிய பிரகாசத்துடன்.. “நாம தேட வேணாம்..” என்றவள் பட்டென கதவைத் திறந்தவளாய் இறங்கி  ஜனத்திரளோடு கலந்திருந்தாள்.

 

சட்டென அவள் இறங்கி ஓடிய விதத்தில் அவன் அதிர்ந்துப்போனான்.

 

என்ன இவள்? சிறுப்பிள்ளைத்தனமாய்.. வண்டி ஏதாவது வந்திருந்தால்..

 

அவள் அணிந்திருந்த ஸ்வெட்ஷர்ட்டின்  ஹூடி அவளது முகம் முழுதையும் தழுவி மறைத்து நிற்க எதிரில் வருபவர்களுக்கோ அவள் இதழ்கள் மட்டுமே தெரியும்படி இருந்தது  அவள் முகம். எதற்கும் ஹூடியை வலக்கையால் லேசாய் பிடித்தபடி தன் முன்னால் சென்றவரையே பின்தொடர்ந்துக் கொண்டிருந்தாள் ஆஹிரி.

 

சாத்வதனுக்கோ எங்கு இவளை யாரேனும் அடையாளம் கண்டு  கொள்வரோ என்ற பயமே பெரிதாய் நின்றது.

 

அவள் முன்னாடி சென்றுக் கொண்டிருந்த நபரை நெருங்கவுமில்லை அதே சமயம் பார்வை வட்டத்தினுள்ளும்  வைத்தபடி சில அடிகள் தொலைவில் பின்தொடர்ந்துக் கொண்டிருந்தாள்.

 

ஒருவரை ஒருவர் இடித்துக் கொள்ளும் அளவு இல்லாவிட்டாலும்  உடைகளும் உடைமைகளும் உரசும் அளவு மக்கள் கூட்டம்.. கூட்ட நெரிசலில் கிடைத்த ஒன்றையும் நழுவ விடக்கூடாதே என்ற எண்ணத்தில்தான் அவள் காரில் இருந்து வேறெதையும் யோசிக்காமல் சட்டென இறங்கியிருந்தாள்.

 

அங்கிருந்த ஒரு முடுக்கினுள் நுழைய ஆஹிரிக்கும் வேறு வழியில்லாமல் போகவே தானும் நுழைந்தவளாய் மற்றவரின் சந்தேகப் பார்வைக்கு ஆளாகாதவாறு பின்தொடர்ந்தாள்.

 

கடைசியில் அவள் வந்து நின்றதென்னவோ ஒரு பழைய பஸ் ஸ்டாண்டில்தான்.

 

அந்தப் பக்கம் இருக்கற ஸ்டாப்ப விட்டுட்டு இங்க ஏன்..?? என்ற கேள்வி எழ சுற்றிலும் பார்வையை ஓட்டினாள் ஆஹிரி.

அவர்கள் கடந்து வந்த அந்த கூட்ட நெரிசலுக்கு நேரெதிராய் இருந்தது அந்த சாலை.. வெகு சில மனிதர்களே அங்காங்கே காட்சியளித்தனர். அந்த பஸ்டாண்டிலும் அவ்வாறே.

 

இவள்  அங்கு வரவும்  அதே சமயம் ஒரு பஸ் வந்து நிற்கவும் சரியாய் இருக்க மற்றவள் அந்த பஸ்ஸில் ஏறிவிட்டதை கவனித்த ஆஹிரி அதில் ஏற நினைக்க பட்டென நினைவிலாடியது..

 

தனது பாண்ட் பாக்கெட்..ஸ்வெட்ஷர்ட் என கையால் துழாவியப் பிறகே உரைத்தது அவளிடம் ஒரு பைசாக்கூட இல்லையென.. இதில் அவள் பஸ்ஸிலேறினாள் என்றால்.. தேவையில்லாத கவனத்தை தன்பக்கம் திருப்பியதைப்போல் ஆகிவிடும்.. என்றுரைக்க பஸ் நகருவதைக் கண்டவளோ முன்னால் ஓரெட்டு எடுத்து வைத்தாளென்றால் அவளை உரசிக்கொண்டு வந்து நின்றது அந்த கறுப்பு நிற கார்.

 

“ஆஹிரி!!” என்ற சாத்வதனின் குரலில் திரும்பியவள் பின் பஸ்ஸையும் காரையும்  ஒரு பார்வை பார்த்தவளாய் விறுவிறுவென வண்டியில் ஏறியமர்ந்திருந்தாள்.

 

“அந்த பஸ்ஸ ஃபாலோ பண்ணுங்க வதன்!! சீக்கிரம்..” என்றவளின் குரல் தீவிரமாய் ஒலிக்க வண்டியை கிளப்பியிருந்தான் சாத்வதன்.

 

“யாரது?” என்றவனின் கேள்விக்கு பதிலில்லாமல் போக  அவளையே கேள்வியாய் பார்த்தவனோ..

 

“தெரிஞ்சவங்களா?” என்றான் மறுபடியும்.

 

“இல்ல..” என்றவளின் பதிலில் அவன் குழப்பமாய் ஏறிட அதை உணர்ந்தவளோ..

 

“தெரிஞ்சிக்க வேண்டியவங்க..” என்றுவிட்டு மறுபடியும்  பாதையில் கவனமாகிவிட வதனும் அந்த பஸ்ஸையே கவனிக்கலானான்.

 

கொஞ்ச நேரத்திற்கெல்லாம் ஆள் அரவமில்லாத பொட்டல்காட்டைப்போல் இருந்த ஒரு பழைய நிறுத்ததில் பஸ் நின்றது. அதில் இருந்து இறங்கி கிட்டத்தட்ட காய்ந்த காடாய் கிடந்த இடத்தினுள்  நடந்தவளையே கவனித்திருந்த ஆஹிரியோ..

 

“வதன் கொஞ்சம் நிறுத்துங்க..” என்றாள் பார்வையை எங்கோ பதித்து.

 

சுற்றுமுற்றும் பார்த்தவனுக்கோ அது சரியான இடமாய் தோன்றவில்லைதான் இருந்தும் நிறுத்தியிருந்தான்.

 

வண்டியிலிருந்து இறங்கியவள் இவனிடம் கண்ணசைத்துவிட்டு முன்னேறினாள்.

முன்னால் நடந்துக் கொண்டிருந்தவளுக்கு தன்னை யாரோ பின் தொடர்கிறதைப்போல  உணர்ந்தாளோ என்னவோ.. நடையில் வேகம் கூடியிருந்தது கூடுதலாய் ஒரு முறை பின்னால் திரும்பி பார்த்துக் கொண்டாள். யாருமில்லாமல் போகவே விறுவிறுவென வீட்டை நோக்கி நடையை கட்டினாள் நித்யா.

 

“ஏன்ட்டீ இவளோ லேட்டு?” என்று வந்த அண்ணியிடம்

 

“இல்லண்ணி.. பஸ்ஸு கிடைக்க நேரமாகிட்டு..” என்று எதையோ சொல்லியவளாய் நித்யா வீட்டினுள் நுழைந்துவிட அவர்களின் உரையாடலோ இங்கு  இவர்களுக்கு முணுமுணுப்பாய்..

 

“நான் நெனச்சது சரிதான்!” என்ற ஆஹிரியின் குரலில் அவளிடம் திரும்பியவனோ..என்ன என்பதாய் பார்த்திருந்தான்.

 

“அவங்க செல்வத்தோட சிஸ்டர்..நித்யா!” என்ற அஹிரியின் வார்த்தைகளில் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் போட்டிப்போட்டது சாத்வதனின் கண்களில்.

 

“உங்களுக்கு..?”என்றவனிடம்,

 

“இன்னும் பர்ஸ்ல ஃபோட்டோ வைக்கற ஆட்கள் இருக்காங்க வதன்!” என்றிருந்தவளுக்கு இப்பொழுதும் நினைவிருக்கிறது செல்வம் தன் தங்கையைப் பற்றி பெருமையாய் மற்றவர்களிடம் பேசிக் கொண்டிருந்ததெல்லாம்.

 

“வாங்க வதன்!” என்றவளாய் மறைந்திருந்த மதில் சுவரின் மறுபுறமிருந்து எழுந்திருந்தாள் ஆஹிரி.

 

டொக் டொக் என்ற கதவு தட்டப்படும் ஓசையில் வீட்டிலிருந்த அனைவருள்ளும் அதிர்வலைகளே!! மற்றவர்களிடம் ஆதரவாய் இமை மூடித்திறந்த செல்வத்தின் மனைவி சுகன்யா கதவிடம் விரைந்தாள்.

 

கதவு தாழில் கை வைத்தவளுக்கும் பயமிருக்கத்தான் செய்தது. ஏனெனில் அவ்வளவாய் ஆள் நடமாட்டமில்லாத இடம் அவர்களது. இன்னும் சில நாட்களே என்ற ஒரே காரணத்திற்காகத்தான் பல்லைக் கடித்தவர்களாய் அங்கு தங்கியிருந்தனர். அப்படிப்பட்ட இடத்தில் இந்த நேரத்தில் யார் கதவைத் தட்டுவது?? என்ற அச்சம் எழாமல் இல்லை.

 

முழு தைரியத்தையும் திரட்டியவளாய் கதவைத் திறந்தவளின் விழிகள் இரண்டும் பயங்கரமாய் விரிந்தன அதிர்ச்சியில்.

 

தனது முழு பலத்தையும் திரட்டி அந்த நாற்காலியை கீழே தள்ளியிருந்த அரணுக்கு அதை உடைப்பது ஒன்னும் அத்தனை கஷ்டமாய் இருக்கவில்லை.. அதற்கேற்ப..வசதியாய்தான் அவள் கயிற்றை கட்டி வைத்திருக்கிறாளே!

 

தன் முன்னாலிருந்த கட்டிலில் படுத்துக்கிடந்தவனையே நம்ப முடியாமல் பார்த்திருந்தான் சாத்வதன்.

இன்னும் அவனுக்கு அதிர்ச்சி விலகியிருக்கவில்லை.. பின்னே இறந்துவிட்டான் என்று சொல்லப்பட்டவனோ அவனது கண்ணெதிரிலேயே கட்டிலில் கிடக்கிறான்.

 

விபத்து அவனது ஒரு காலை கொண்டு சென்றிருந்தது..கூடவே அவர்களது நிம்மதியையும்.

 

“ சொல்லுங்க செல்வம்” என்ற ஆஹிரியின் குரலில் மட்டுமின்றி அவளை நேரில் பார்த்ததிலேயே பேயறைந்தார்போல விழித்திருந்த  செல்வத்துக்கோ  அவளது கேள்வியில் எதையுமே கிரஹித்துத்கொள்ள இயலவில்லை.

 

கணவனின் நிலையுணர்ந்த சுகன்யாவும் கையாலாகாத நிலையில் நின்றிருக்க ஆஹிரியோ..

 

“ரைட்! யாரும் வாயத்திறக்க போறதில்ல இல்லையா?” என்று எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தவள் வதனிடம்.. “வதன் போலிஸுக்கு இன்ஃபார்ம் பண்ணிடுங்க” என்றுவிட

 

“அய்யோ! போலீஸெல்லாம் வேணாம்மா! இப்போதான் நிம்மதியா இருக்கோம்.. எங்கள தயவுசெஞ்சு விட்றுங்க!” என்று பதற்றமாய் தொடங்கி கலங்கிய  குரலில் முடித்த சுகன்யாவை பார்த்திருந்தவளோ..

 

“நிம்மதி.. ம்ஹ்ம்! நிம்மதி..அதில்லாமதானே இத்தனநாள்.. ஏன் எதுக்குனே தெரியாம ஓடிட்டிருக்கேன்” என்றவளின் இதழோரம் எட்டிப் பார்த்தது கசந்த முறுவல் ஒன்று.

 

“தயவு செஞ்சு உங்களுக்கு தெரிஞ்சத மட்டும் சொல்லுங்க..அது போதும்!” என்ற ஆஹிரியின் குரல் கெஞ்சலாய் ஒலித்தது.

 

“செல்வம்ண்ணா..ப்ளீஸ்!! துஜியோட லைஃப் என்னோடது..வதனோடது எல்லாமே நீங்க சொல்றதுலதானிருக்கு..” என்றவளுக்கு அதற்குமேல் எப்படி கேட்க என்றுதான் புரியவில்லை.

ஏற்கனவே காயப்பட்டிருப்பவர்களை அதட்டி உருட்டவும் மனமில்லை. தலையை இரு கைகளாலும் தாங்கிப் பிடித்தவளாய் அமர்ந்துவிட்டாள் அவள்.

 

“ஆக்ஸிடெண்ட்ல இவர்.. இவர் போயிட்டதா சொல்ல சொன்னாங்க.. இல்ல மொத்த குடும்பத்தையும்..” என்ற சுகன்யாவின் பேச்சு அவளது எட்டு வயது மகன் புரண்டு படுத்ததில் தடைப்பட்டது.

 

“எங்களுக்கு வேற வழி தெரியலமா.. இந்த வருசம் இவ பன்னெண்டாவது..கடைசி பரிட்ச்சைக்கு இன்னும் இரண்டு நாள்கூட இல்ல..இத்தன வருசம் இவர் கஷ்டப்பட்டதெல்லாம் இவ நல்லா படிச்சு முன்னுக்கு வரனும்னுதானே.. இது மட்டும் முடிஞ்சிட்டுனா மொத்தமா இங்கருந்து கிளம்பிருவோம்.. தயவு செஞ்சு எங்கள தொல்ல பண்ணாதீங்கமா.. அன்னைக்கு காரோட்டுனத தவிர இவர் எந்த தப்பும் செய்யலமா..”

 

“எந்த தப்புமில்லன்னா ஏன் ஓடி ஒளியனும்?” என்றவள் எவ்வளவு முயன்றும் கேள்வி வெளியே வந்துவிட்டது.

 

“உண்மையவிட உசுரு முக்கியம்! எங்கள நம்பி ரெண்டு புள்ளைங்க இருக்குதுங்க..அதுங்க என்ன பாவம் பண்ணுச்சு??கட்டு கட்டா பணத்தை எங்கட்ட வீசிட்டு வெளில பொணத்த மாத்தி காமிச்சு நாடகமாடறளவு எங்களுக்கு வசதியில்லமா! தயவுசெஞ்சு போயிருங்க!!” என்றாள் கதறலாய்

 

“ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லுங்க நான் போயிடறேன்..” என்றவளை வெறித்துப் பார்த்திருந்த சுகன்யாவிடம்,

 

“பணம் குடுத்தது யாரு?” என்றிருந்தாள் ஆஹிரி அடுத்து வரயிருக்கும் பூகம்பத்தை அறியாமல்..

 

சுகன்யா அதிர்ந்து விழிக்க..”உங்கம்மா..” என்று தீனமாய் ஒலித்த செல்வத்தின் குரலில் மற்ற இருவரிடத்திலும் அதிர்வு.

 

ஆஹிரியினுள் எரிமலையொன்று வெடித்துச் சிதறிய உணர்வு!!

 

“என்ன??..செல்வம்ண்ணா.. இங்க பாருங்க!” என்று சோர்வாய் கிடந்தவனிடம் அவள் விசாரித்த விதத்தில்..

 

“அவர் சொன்னது உண்மைதான்” என்று அதைவிட உறுதியாய் ஒலித்தது சுகன்யாவின் குரல்.

 

அதிர்ந்து நின்றவளோ மொழியென்பதே மறந்தவளாய்.. செல்வத்தையே வெறித்து நோக்கிக் கொண்டிருக்க சாத்வதன் அதை மறுத்துக் கொண்டிருந்தான்.

 

“அவங்க ஏங்க சொந்தப் பொண்ணையும் ஹஸ்பண்டையும் கொல்லப்போறாங்க??!!” என்றான் அழுத்தமாய். அதற்கு ஏளனமாய் புன்னகைத்தவளோ..

“அதான் ஊரே பேசுதே.. அவங்க லட்சணத்த..தன்னோட ரெண்டாவது புள்ளையவே கொன்னவங்கதானே!?” என்று  சுகன்யா பேசிக்கொண்டேப் போக

 

“நிறுத்துங்க!!!!” என்று அந்த அறையே அதிரும்படி  கத்தியிருந்தாள் ஆஹிரி.

 

“இன்னொரு வார்த்தை பேசுனா.. நான் சும்மா இருக்க மாட்டேன்!!” என்று எச்சரித்தவள் பின் விடுவிடுவென வெளியேற சுகன்யாவோ..

 

“கண்ண கட்டிட்டு பாத்தா எப்படி  தெரியும்?!” என்று முணுமுணுத்தது தெளிவாகவே இவள் காதில் விழுந்து வைத்தது.

 

இது என்ன புதுக்கதை?! என்று பார்த்திருந்த சாத்வதனோ ஆஹிரியை பின்தொடர்ந்தான்.

 

எவ்வளவு தைரியமிருந்தா அம்மாவபத்தி இப்படி பேசுவாங்க??..தைரியம்??!! அது இருக்கப்போய்தானே அப்படி பேசறாங்க.. சம்பந்தமேயில்லாம இதுல அம்மா எங்கருந்து வந்தாங்க? அவங்கள யாராவது மாட்டிவிடப்பாக்கறாங்களா? இல்ல.. என்று விரிந்த கற்பனையில் உள்ளம் நடுங்கியது ஆஹிரிக்கு.

 

இல்ல..இல்லவேயில்ல!! இவங்க சொல்ற மாதிரி அம்மா பணத்த குடுத்தேயிருந்தாலும்.. அதுக்கு வேற காரணமிருக்கும்.. என்று தன்னைத் தானே சமாதானம் செய்ய முயன்றவளின் செவியில் இன்னமும் ஒலித்தது சுகன்யாவின் குரல்.

 

‘கண்ண கட்டிட்டு பாத்தா எப்படி தெரியும்?!’

 

நோ வே! எப்படி பாத்தாலும் அம்மா மேல தப்பிருக்க முடியாது! இது அவங்க  பொண்ணா இல்ல.. மூணாவது மனுஷியா யோசிச்சாலுமே இதுதான் சொல்லுவேன்! இதுல அவங்களுக்கு என்ன லாபம்? அந்த சுகன்யா சொன்ன ரெண்டாவது பிள்ளை அதாட்சன் என்பதை உணர்ந்தவளுக்கோ அழுவதா சிரிப்பதா என்றுதான் புரியவில்லை. உடல்நிலை பாதிக்கப்பட்டு கொஞ்ச காலத்தையும் மருத்துவமனையில் செலவழித்து இறந்திருந்தான் அதாட்சன்.

 

பாதிக்கப்பட்டவரையே பழிசொல்வதா?!!  

 

ஏதேதோ சிந்தனைகள் வலைபின்ன ட்ரைவர் ஸீட்டில் வந்தமர்ந்திருந்தவளை கலைத்தது சாத்வதனின் கேள்வி,

 

“டூ யு ட்ரைவ்?” என்ற கேள்வியில் உதட்டோர வளைவொன்றுடன் நிமிர்ந்து அமர்ந்துக் கொண்டாள் அவள்.

ஸீட்டை அவள் உயர்த்திற்கு ஏற்றார்போல் முன்னே தள்ளிக்ககொண்டு.

 

“இல்ல நீங்க ஒரு மாதிரி..டிஸ்டர்ப்டா.. இருந்தீங்க” என்ற  சாத்வதன் என்ன சொல்ல வருகிறான் என்பது புரிந்துவிட

 

“உக்காருங்க வதன்..” என்றுவிட்டு ஸீட் பெல்ட்டைபோட்டுக் கொண்டாள்.

 

ஆஹிரியின் குரலே அவளது மனநிலையை வெளிப்படையாய் எடுத்துரைத்தது.. அந்த உக்காருங்க வதனில் ஒளிந்துக் கிடந்த.. எதுவும் கேக்காதீங்க-வை  அவனும் உணர்ந்தேதான் இருந்தான் அதனால்தானோ என்னவோ அவளது எண்ணவலை எதையுமே அறுத்தெரியத் துணியாமல்.. தனதில் அமிழ்ந்துப்போனான்.

 

மிஸஸ்.நிரூபா ஏன் இத செய்யனும்? அவங்களுக்கு இதுல என்ன லாபம்? என்றோடிக்கொண்டிருக்க, அவன் அவர்களது குடும்பத்தை பற்றி விசாரித்தவரையிலுமே நிரூபாவை பற்றி  பலர் பேசாததே  நினைவுக்கு வந்தது. யாருக்கும் நிரூபாவைப் பற்றி அவ்வளவாக தெரிந்திருக்கவில்லைபோலும்.. ம்ஹூம்… என்றவனிடம் இருந்து பெருமூச்சொன்றே வெளியேறிட ஸீட்டில் சாய்ந்தமர்ந்துக் கொண்டான் சாத்வதன்.

 

ஏன்?? என்ற கேள்வியே பூதாகரமாய் எழுந்து நின்றது ஆஹிரியின் முன். அதை தொடர்ந்த யார்? எப்படி? என்றதெல்லாம் துணைக் கேள்விகளாய்..

 

அம்மா.. என்னம்மா நடக்குது இங்க? ஏன் அந்த ஆக்ஸிடெண்ட் நடக்கனும்? அதுல ஏன் நான் மட்டும் மீண்டு வீட்டுக்கு வரனும்? இந்த அரண ஏன் நான் மீட் பண்ணனும்? அவன் எதுக்கு என்ன கடத்தினான்? கடத்தினவன் எதுக்கு என்ன அப்படி பாத்துக்கிட்டான்?இந்த வதன் ஏன் அங்க வரனும்? வதனோட சஸ்பெக்ட் லிஸ்ட்ல நான் ஏன் மொதல்ல இருக்கனும்?.. என்று உள்ளுக்குள் புலம்பிக்கொண்டிருந்தவளுள் திடீரென பொறிதட்டியது!

 

யெஸ்! இத நான் பண்ணேன்னு வதன் நினைச்சா.. நான் இத எதுக்காக பண்ணியிருந்திருப்பேன்..? பணம்! சொத்து!!!! கேவலம் சொத்துக்காக நான் இத செஞ்சிருப்பேன்னு நினைச்சானா?!!  ஹூம்.. இந்த சொத்துல இருந்து சல்லிபைசாக்கூட வேண்டாம் துஜிய மட்டும் குடுத்துருங்கனு சொன்னா இவன் நம்புவானாமா?!! என்ன தெரியும் இவனுக்கு என்ன பத்தி.. என்று சீறிக்கொண்டு எழுந்த உணர்வோ பிறகு.. இவனுக்கு என்ன பத்தி என்ன தெரியும்? எதுவுமே தெரியாது. துஜிக்கு நான் யாருனு வேணா தெரிஞ்சிருக்கும்..ஆனா எனக்கு துஜி யாருனு இவனுக்கு எப்படி தெரியும்?

 

அம்மூக்கா அம்மூக்கானு சுத்தி வந்த பொண்ண என்ன பண்ணீங்கனு கேட்டானே!? இவனுக்கென்ன தெரியும்..  அவ அவளோட துஜிய தொலைச்சிட்டு கொஞ்சம் கொஞ்சமா குற்ற உணர்ச்சில சாகறது..

 

துஜி.. அம்மு வந்துடுவேண்டா.. என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவளின் தொண்டைக்குழியில் எழுந்தது வலி!

 

இல்ல ஆரி! எமோஷனல் ஃபூல் ஆகாத! பொறுமையா யோசி.. அந்த சுகன்யா சொல்றத போல அம்மாதான் அவங்களுக்கு பணம் குடுத்தாங்கன்னா.. ஒருவேளை..இது அவங்களுக்கான ட்ராப்பா?!!  யாரோ அவங்கள தப்பா ப்ரொஜெக்ட் பண்ண ட்ரை பண்றாங்களா? ஏன் அன்னைக்கு அம்மா கடைசி நேரத்துல வரல? இத மேலோட்டமா பாத்தா…

 

ஆஹிரியின் ஆழ்மனம் அடித்துரைத்தது நிரூபா செய்திருக்க முடியாதென..

 

அம்மா பாசமா..!?

 

வண்டியின் வேகம் கூடியிருக்க கண்விழித்த சாத்வதனின் பார்வை சுற்றிலும் சுழண்டது அதிர்வை பிரதிபலித்தபடி.

 

“ஆஹிரி..நாம எங்க போறோம்?” என்றவனின் குரல் ஆழ்ந்து ஒலிக்க பாதையில் இருந்து பார்வையை அகற்றாதவளோ,

 

“தொலைச்ச எடத்துக்கு..” என்றிருந்தாள்.

 

அவள் குரலில் இருந்தது என்ன?!

 

அரண் அவ்வறையின் ஒருபக்க மூலையை ஆக்கிரமித்திருந்த சாதனங்களிடம் விரைந்திருந்தான். அவன் காதில் அந்த ஹெட்ஸெட்டை  மாட்டவும் அதில் அவன் கேட்க நேர்ந்த செய்தியோ அவனது மனநிலையை அப்படியே புரட்டிபோட்டிருந்தது.

‘நோ..நோ..’ தான் கிளம்பியாக வேண்டுமென்ற கட்டாயத்தை உணர்ந்தவனோ  படிகளில் விரைந்திருந்தான்.

 

ஆஹிரியின் மனதில் ஏனோ படபடவென பறவை ஒன்று தன் சிறகிரண்டையும் அடித்துக் கொள்வதைப்போல உணர்ந்தாள்.

 

உடல் முழுதும் அடைமழையொன்றில் சிக்கிய கோழிக்குஞ்சாய் வெடவெடத்தது. அவளது தடுமாற்றம் அவள் உடல்மொழியிலேயே அப்பட்டமாய் தெரிந்தது.

 

 

கார் அந்த ரோட்டினில் சீறிப்பாய்ந்துக் கொண்டிருக்க சாத்வதனோ, “ஆஹிரி?..ஆர் யூ ஆல்ரைட்?!” என்று விசாரிக்க அவளிடமோ அவன் பேசியதற்கான தடயம்கூட இல்லை. ஏன் தன்னருகில் ஒருவன் அமர்ந்திருக்கிறான் என்ற பிரக்ஞையே இன்றி சாலையை வெறித்தவளாய் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தாள்.

 

வெளிர் நிற சேலையில் திட்டு திட்டாய் படிந்த கறையைப்போல.. புகைப்படலமாய் மனதினுள் எழும் நினைவுகளில் சிக்கியிருந்தவளின் தோளை யாரோ வேகமாய் பற்றி உலுக்கிட.. அதிர்ந்து விழித்தவளின் கண் முன் விரிந்த காட்சியில் முழுத் தெம்பையும் திரட்டி ப்ரேக்கை அழுத்தி மிதித்திருந்தாள்.

 

க்ரீஈஈஈச்ச்!!! என்று பேரொலியை எழுப்பியபடி சிறு குலுங்கலுடன் நின்றிருந்தது அந்த கறுப்பு நிற கார்.

 

வண்டியில் இருந்து இறங்கியவளோ தலையை இரு கைகளாலும் தாங்கியப்படி கார் கதவில் சாய்ந்து நின்றுவிட  நடந்ததை ஜீரணிக்க முயன்றவனாய் ஆஹிரியிடம் விரைந்திருந்தான் சாத்வதன்.

 

“ஆஹிரி என்னாச்சு??” என்றவன் விசாரித்துக் கொண்டிருக்க ஆஹிரிக்கோ வார்த்தைக்குப்  பஞ்சமானது.   எதையோ சொல்லிவிட துடித்தவளால் வார்த்தைகளை கோர்க்க முடியாமல் போக பிறகு பெருமூச்சொன்றை இழுத்துவிட்டவளாய்..

 

“ஃபோன்..” என்றாள்.

 

பாக்கெட்டிலிருந்த ஃபோனை எடுத்து அவளிடம் கொடுத்தவனோ அமைதியாய் அவளையே பார்த்து நின்றிருந்தான்.

 

நம்பரை அழுத்தியவள் காத்திருக்க ஒருசில ரிங்கிலேயே ஏற்கப்பட்டிருந்தது மறுபுறத்தில்.

 

“ஹலோ” என்றவரின் குரலில் தான் எப்படி உணர்கிறோம் என்றே புரியாமல் போனது ஆஹிரிக்கு..

 

அந்தப் பக்கத்தில் இருந்தவரோ  மறுபடியும் “ஹலோ?” என்றழைக்க சுதாரித்தவளாய்..

 

“மா..” என்றழைத்திருந்தாள் மகள்.

 

“ஆருமா!!?? நீ எப்படிடா..எங்கடா இருக்க?? எப்படி..” என்று படபடப்பாய் தொடங்கியவரின் குரல் விட்டுவிட்டு கேட்க

 

“எங்க இருக்க?” என்றுக் கேட்டிருந்தாள் சந்தேகம் மேலிட..

 

“நா..இங்..ர்ர்ர்ர்..ந..ஃபார்ம் ஹௌஸ்..” என்றவரின் குரல் தடைப்பட்ட விதத்திலேயே புரிந்துவிட்டது அவர் இருக்குமிடம்..அவர் மட்டும் உள்ளே சென்றுவிட்டால்  சிக்னல் என்பது மருந்துக்கும் இருக்காது என்பதை உணர்ந்தவளோ..

 

“அங்க போகாத!!..ம்ஆ..” என்று கிட்டத்தட்ட ஆஹிரி கத்திக்கொண்டிருக்க கடைசியில் அந்தப் பக்கத்தில் அழைப்பு  துண்டிக்கப்பட்டிருந்து.

 

“நோ!!!!!” என்ற கதறலுடன்  அவள் அப்படியே தரையில் மடிந்தமர்ந்துவிட.

 அவள் செயலில் பதறியபடி, “அம்மு என்னாச்சு??!! ஜஸ்ட் ரிலாக்ஸ்!! கொஞ்சப் பொறுமையா…என்னாச்சும்மு?” என்ற சாத்வதனின் அம்மு என்ற அழைப்ப அவளை நிமிரவைத்தது.

 

“கொஞ்சம் தண்ணி வேணும்..” என்றுவிட்டு மறுபடியும் தலையை பிடித்துக்கொள்ள பாட்டிலை தேடியவனுக்கோ வெற்று பாட்டிலே காட்சியளித்தது சுற்றுமுற்றும் பார்வையால் ஆராய்ந்தான். வலப்புறம் முழுக்க பரந்துக் கிடந்தது ஏரி..

 

தூரத்தில் பார்வையை பதித்தவனோ பின், “ஒரு நிமிஷம்!” என்றுவிட்டு நகர அதற்காகவே காத்திருந்தவளைப்போல வண்டியில் ஏறிய ஆஹிரி வண்டியை கிளப்பியிருந்தாள். பின்னால் கொஞ்ச தூரம் சாத்வதன் ஓடி வந்தது நன்றாகவே தெரிந்தது.

 

‘ஸாரி வதன்!’என்றாள் முணுமுணுப்பாய்.

 

உயிரானவங்கள இழக்கற வலி..அரணுக்கு வேண்டாம்..

 

கண்களை மறைத்த நீரைத்  துடைத்தெறிந்தவளின் கைகளில் கார் சீறிப்பாய்ந்தது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!