Aahiri-2

அத்தியாயம்2

 

முரணாய் ஒரு அரண்..!!

 

முரணாய் ஒரு அரணிருக்க..

மிரளும் மனதில்..

பிறழும் நினைவுகளுடன் அவள்..

 

 

மேல மச்சுல..” என்ற குரலில் மென்மையாய் தலையசைத்தவள் கணத்த பாவாடையை இரு கைகளிலும் ஏந்தியவளாய் அடியெடுத்து வைத்தாள் மச்சை நோக்கி..!!

 

அவளது இத்தனை வருட வாழ்விலேயே துளியளவும் விருப்பமின்றி செய்யவிருக்கும்.. செய்யும் முதல் காரியம் அதுவாகத்தான் இருக்க வேண்டும்!!

 

முதன் முதலாய் முரண்டும் மனதை மதியாமல் முன்னேறுகிறாள்..

 

நிலவூரின்.. அந்த பழைய வீட்டின் மச்சு அறையை நோக்கி!!

 

அணிந்திருக்கும் உடைக்கு தோதாய் சிகப்பு நிறத்தில் மிளிராவிட்டாலும்.. மந்தமாய்.. இருந்த தரையின் குளிர்ச்சியை அவள் பாதம் உணர்ந்ததோ இல்லையோ.. அவள் பார்வை ஓர் நொடி அதற்கு பக்கத்து அறையின் இரும்பு கட்டிலில் அமர்ந்திருந்த இருவரை தொட்டு..நிலைத்து.. பின் மீண்டிருந்தது.

 

சாதாரண அறைப்போலில்லாமல்.. உத்தரத்தில் இரண்டுக்கு இரண்டு அடியில் மரத்தாலான கதவிருக்க அந்த கதவை அடைய அவள் முன் கம்பீரமாய் நின்றிருந்தது அந்த  திடமான மரத்திலான ஏணிப்படிகள்!!

 

அடர் நிறத்திலிருந்த ஏணியின் திடம் அதன் தரத்தை உணர்த்த அவள் பார்த்ததிலேயே அதுதான் அகலமான படிகளை கொண்டவையும்கூட!!

 

சில மில்லிமீட்டர் உயரத்திற்கு பாவாடையை தூக்கிப்பிடித்தவளின் பாதம் முதல் படியில் பதிந்தன.. இன்னிசையான அவளது கொலுசொலி ஏனோ இன்று அபஸ்வரமாய்!!

 

சம்பந்தமே இன்றி சற்று நேரத்திற்கு முன் நிகழ்ந்தவையெல்லாம் அவள் நினைவடுக்குகளில் நிரம்பின.. இப்படியே திரும்பிவிடலாம்தான்  இருந்தும்..

 

படியேறிவள் திறந்துக்கிடந்த அக்கதவை காண.. ஏனோ தன்னை விழுங்கிவிடுவதுபோலவே பிரமை ஒன்று..

 

அதற்கு மேலாய் அவள் செவியை தீண்டிய சிரிப்புச் சத்தமொன்றும்..அந்த கண்களும்..

 

தலையை உலுக்கியவளின் நயனங்களிலோ இன்னும் பல வினாக்களின் சாயல்!!

நிகழ்ந்தவையில் இருந்தவள் அப்பொழுதே நிகழ்வதை உணர்ந்தாள்போலும்.

 

தன்னில் கவனம் பதித்து நின்றவனில் உறைந்திட்ட விழியை விசுக்கென அகற்றியவளாய்.. திமிறினாள்.

 

அவள் திமிறலில் எந்தவித பாதிப்பும் அவனிடமில்லாததுபோல அவளிலேயே தன் பார்வையை பதித்திருந்தவனோ தன் பிடியை நெகிழ்த்தினான்.

 

அத்தனை நேரம் முயன்றவள் நெகிழ்ந்திருந்த அவன் பிடியில் இருந்து விடுப்பட்டவளாய்..!!

 

கட்டவிழ்த்த கன்றாய் கீழிறங்கிய மறுகணமே அவள் ஓட.. அதை பார்த்திருந்தவனோ நிதர்சனம் உணர்ந்தவனாய் விரைந்தான்.

 

எத்தனை ஓடி என்ன பயன்?? எங்கே ஓடுகிறோம் என்று தெரிந்தால்தானே? சுற்றிச் சுற்றி ஒரே இடத்தில் வந்து நிற்பதைபோலொரு எண்ணமெழுந்தது!!

 

கண் முன்னோ அதே மரவீடு!! ஆம் அத்தனை ஓட்டம் ஓடியவள் கடைசியில் வந்தடைந்தது அவ்வீட்டிற்கே!!

 

அயரும் மனதை அடக்க முடியாமல் அவள். தலையில் ஒற்றை கரத்தால் அறைந்தவளின் பார்வையில் ஆயிரம் தவிப்புகள்..

 

கடவுளே!! இது என்ன நிலை!?? என்று கதற தயாரான மனதை அடக்கினாள்.

 

சருகுகள் மிதிப்படும் சத்தம் அது!! மிக அருகாமையில்..  அவ்வளவுதானா?? என்றோடிய எண்ணங்களுடன் போராடியபடி அவள்.

 

இல்ல ஆரி!! சாகத்தான் வேணும்னா.. அதுக்கு நீ கண்விழிச்சிருக்க வேண்டியதே இல்ல!!’

 

பின்னால் வந்துவிட்டவனை உணர்ந்தவள் மறந்தும் அவள் பார்வையை திருப்பியிருக்கவில்லை.

 

சரியா இங்க வர்றான்னா..அப்போ.. நான் இங்கதான் இருப்பேன்னு அவனுக்கு அத்தனை உறுதியா??’ எழுந்த கேள்வியின் பதிலை தேடுவது இப்பொழுது முக்கியமல்ல என்றுபட  அந்த சுருண்டு நின்ற படிக்கட்டிடம் விரைந்திருந்தாள் ஆஹிரி.

 

சுருளாய் நின்ற படிகளில் தபதபவென ஓடியவளின் பாவாடையின் நுனி மரத்தின் சிறு பிசிறில் சிக்கி மீண்டது!!  மைக்ரோ செகண்டில் நடந்திருந்த பாவாடைக்கும் மரத்துக்குமான போராட்டத்தில் அவள் தடுக்கிவிடப்பட படிகளுக்கு நடுவில் நெடுநெடுவென வளர்ந்து நின்ற கம்பத்தை பிடித்தவளாய் தன்னை நிலைபடுத்தியிருந்தாள்.

 

நடந்தவற்றை அவள் கிரகித்து கொள்ளவே சில மணித்துளிகள் தேவையாய் இருக்க.. அத்தனை நேரம் பார்வையாளனாய் நின்றவனோ விறுவிறுவென ஏறியிருந்தான் படிகளில்.

 

அவ்வளவுதான் அவள் நினைவில்.. அடுத்த கணமே அவள் அப்பெரிய மர வீட்டில்.. மெத்தையில் அமர்ந்திருந்தாள்.

 

மருந்து டப்பாவுடன் அவ்வீட்டின் பரப்பளவை அளப்பதுபோல அங்குமிங்குமாய் எதையோ தேடி அலைந்தவனிலேயே அவள் விழிப்பார்வை கூர்மையாய்..!!

 

சிறு குடுவையில் இதமான வெண்ணீர் இருக்க கையில் மருந்து டப்பாவுடன் வந்தவனோ அவளருகில் சிறு முக்காலியை இழுத்துப்போட்டவனாய் அமர்ந்திருந்தான்.

 

தன் கைப் பற்றி இழுத்தவன் அதை  துடைக்க விண்ணென்று தெரிக்கும் வலியை அப்பொழுதுதான் அவள் உணர்ந்திருந்தாள்.

 

அத்தனை நேரம் அவனில் இருந்த தன் பார்வையை பிரித்தெடுத்தவளாய் அவள் கையில் பதிக்கத்தான் விளங்கியது இத்தனை நேரம் நடந்தவை ஏன் என..

 

ஆழமான காயமில்லை என்றாலும் அவளது உள்ளங்கையை சற்று அதிகமாகவே பதம்பார்த்திருந்தது போலும்.. மருந்து வைத்து  அவன் கட்டிக்கொண்டிருக்க இங்கு இவளுள்ளத்திலோ முன்தின நினைவுகள் தெளிவில்லாத புகைப்படங்களாய்..

 

அவள் மடியில் அமர்ந்து விளையாடியப்படியிருந்த குழந்தையில் அவன் கவனம் இருக்க.. தன்னெதிரே இருந்தவனில் பார்வை பதித்திருந்தாள் ஆஹிரி.

 அவள் பார்வை உணர்ந்தவனாய் தன்விழியை உயர்த்தினான் அவன்.

 அவர்களை தவிர்த்து அந்த உயரம் குறைவாக இருந்த மச்சு அறையில் சிலரே இருந்தனர்.

 

உங்க கிட்ட கொஞ்சம் பேசனுமே..” என்றவளின் குரலில் அவன் தலையசைக்க அவள் மடியில் இருந்த இரண்டு வயது குழந்தையை தூக்கியவளாய் கீழிறங்கினாள் நிஷ்சி.. அப்படிதான் அவன் அழைத்ததாக நினைவு.. அவளை தொடர்ந்து மற்ற மூவரும்!!

இறங்கியவர்கள் கதவை வெறுமனே அடைத்துவிட்டு சென்றிருக்க தன் பார்வையை அவனிடம் திருப்பி இருந்தாள் ஆஹிரி.

அவனும் அவளையே பார்த்திருக்க, “அரண்! நான் உங்கட்ட சிலது கேக்கனுமே..” என்றிழுத்தவளிடம்.

 

கேளேன்!” என்றான் சாதாரணமாய்.

 

கற்புனு நீங்க எத நினைக்கறீங்க??” என்றவளின் கேள்விக்கான அவனது பதிலில் அவளுள் பூகம்பமே வெடித்துச் சிதறியது!! 

 

எனக்கும் இவனுக்கும் எப்படி ஒத்துப்போகும்?? இதென்ன ஷார்ட் டெர்ம் பிஸ்னஸ் ப்ராஜெக்ட்டா?? வாழ்க்கையாச்சே!! அவளால் அப்படிப்பட்ட வாழ்வை கற்பனைக்கூட செய்துபார்க்க இயலவில்லை. வேண்டாம் ஆரி!!! என்ன வந்தாலும் பார்த்துக்கலாம்!! இது வேண்டாம்! என்ற எண்ணம் ஸ்திரமாக எழுந்துவிட்டாள் அச்சிறு மோடாவில் இருந்து.

 

ஐம் ஸாரி அரண்! உங்களுக்கும் எனக்கும் ஒத்துவராது..” என்றவள் ஓரெட்டுக்கூட எடுத்து வைத்திருக்க மாட்டாள்.  அழுந்தப்பிடித்திருந்த கை முரட்டுத்தனமாய் இழுக்கப்பட்டிருந்தது.

 

கைபிடித்திழுத்து சுவற்றில் சாய்த்திருந்தவனின் முகமோ அத்தனை பயங்கரமாய்!!

 

யூ காண்ட் டூ திஸ் ஆஹிரி!!! ஒன்னு ரெண்டு இல்ல..அஞ்சு வருஷமா காத்திருக்கேன்!! இப்போ நீ வேண்டாம் சொன்னா??!! அஞ்சு வருஷம் ஆஹிரி!!” என்று வெறிபிடித்தார்போல  ஒரு கையால் அவளை பிடித்திருந்தவன் மறுகையால் தன் பின்னந்தலையில் தட்டியபடி கர்ஜிக்க  ஆஹிரியினுள்ளோ அதிர்ச்சியின் அலைகள் சுனாமியாய் எழும்பின!!

 

கணநேரத்தில் அவனைப்பிடித்து தள்ளியவள் விறுவிறுவென கதவிடம் விரைந்தாள். இறங்குவதற்கு வாகாய் அமர்ந்தவள் கதவைத் திறந்துவிட்டு தன் கால்களை வெளியில் தொங்கப்போட்டவளாய் ஒற்றை காலை ஏணி படியில் பதிக்க.. சுதாரித்தவனாய் அமர்ந்தபடி இறங்கிக் கொண்டிருந்தவளை இடையோடு சேர்த்து  உள்ளே இழுத்துப்போட முயற்சிக்க அவள் திமிறினாள்.

 

ஒரு கட்டத்தில் வேறு வழியே இல்லாதவனைபோல பேண்ட் பாக்கெட்டில் இருந்து வெள்ளை நிற கை குட்டை ஒன்றை உருவியவனோ அதை அவள் முகத்தில் வைத்து அழுத்தினான்.

 

நொடிப்பொழுதில் அதை உணர்ந்தவள் அவன் கையை தட்டிவிட முயற்சித்தவளாய் போராடிக்கொண்டிருக்க..  கடைசியில் வெறும் போராட்டமாய்தான் அது முடிந்தது!!

 

அவள் சற்று தளரவும் அவளை அவன் உள்ளிழுக்க சத்தம் கேட்டு வந்தவர்களுக்கு அந்த அடர் மெரூன் நிற  பாவாடை பார்டருக்குள் திமிறி சோர்ந்திருந்த வெள்ளிக் கொலுசனிந்த இரு வெண்பாதங்களே காட்சியாகிட.. மற்றவர்கள் அனைவரும் வெறும் பார்வையாளர்களாய் இருக்க அவ்விருவர் மட்டுமே துடித்தவர்களாய் ஏணியை எட்டினர்..

 

அதற்குள் அவளை அந்த மச்சு விழுங்கியதுபோல கதவு அடைக்கப்பட்டிருந்தது!

 

பிடித்திழுத்து போடப்பட்டதும்.. மயக்கமும் சேர்ந்த நிலையில் கண்கள் இரண்டும் அந்த அறையையே சுழட்டுவதுபோல் உணர்ந்தவள் தட்டு தடுமாறினாலும்.. சுயநினைவை இழந்துவிடக்கூடாதென்பதில் தீவிரமாய்!!

பெரிய அளவிலான ட்ரங்க் பெட்டியை எடுத்து அந்த கதவின் மேல் வைத்தவன். அங்கு குவிந்துக்கிடந்த பழைய சாமான்களில் கவனம் பதித்தவனாய்.. இருப்பதிலேயே கனமான மரப்பெட்டியொன்றை இழுத்து அந்த கதவை முழுவதுமாய் அடைத்திருந்தான்.

 

தட்டுத் தடுமாறி அந்த சுவற்றோர மூலையில் கிடந்த மோடாவில் புறங்கையால் அழுத்தி ஏறி அமர்ந்தவளால் அதற்குமேல் முடியாததுபோல.. கண்கள் செருக தலையை சுவற்றில் சாய்த்திருந்தாள்.

 

அவளுடையிலே அனாவசியம்போல் உருத்திய அந்த பீஜ் நிறத்திலான டிஸைனர் தாவணியை.. அவள் ஒருபக்கமாய் போட்டிருந்ததை.. உருவியவன் அதன் நுனியில்  எதையோ கிறுக்கியவனாய் அதை தூக்கி அந்த சிறு சன்னல் வழியாக வெளியே வீசியெறிந்தான்.

 

அவள் முன் மண்டியிட்டமர்ந்தவன்  அவள் தோளில் முகம் புதைத்தவனாய்.. அவள்  நாசியில் அந்த துணியை வைத்தழுத்தியதே அவளின் நினைவுப்பெட்டகத்தின் கடைசி ஏடாய்!!

 

தோளில் புதைந்திருந்த அவனிதழ்  உதிர்த்த அவ்வார்த்தையை அவள்  நினைவிழக்கும் முன் கேட்டுவிட்டிருந்ததை அவனறியான்!!

 

ஸ்ஸ்ஆ.. என்றவளின் முனகலில் அவன் கவனம் இன்னும் கூர்மையாகிட அத்தனை மென்மையாய் கட்டியிருந்தான்.

 

தன் கையில் கட்டு போட்டுக் கொண்டிருந்தவனையே பார்த்திருந்தவளினுள் எழுந்த முதல் கேள்வி.. இவன் யார்??? என்பதே.

 

 

நீ யாரு??” என்றவளின் குரலில் ஓர் நொடி நிதானித்தவன் பின் தன் வேலைகளை தொடர்ந்தவனாய்..

 

இங்க உனக்கு நான்தான் அரண், நீ என்ன அப்படியே கூப்பிடலாம்என்றான் உணர்ச்சிகள்  துடைத்த முகத்துடன். 

 

உன் உண்மையான பேர கேட்டேன்!” என்றவளை மெச்சுதலாய் பார்த்தவனோ தோளை குலுக்கியவனாக, “அதான் சொன்னேனே! இங்க உனக்கு நான்தான் அரண்!! நினைவுல இருக்கட்டும்!!” என்று எழுந்துவிட்டான் கடைசி வரியில் சற்று அழுத்தம் கூட்டியவனாய்..

 

 உள்ளங்கையில் ஏற்பட்டிருந்த காயம் ஒன்றிலேயே பார்வை நிலைத்திருந்தாலும்.. எண்ணங்கள் மட்டும் ஏனோ எல்லா திசையிலும் பயணித்தன அவளுக்கு..

 

ஏனோ இப்பொழுதெல்லாம் எத்தனை யோசித்தும் பலது நினைவுக்கு வருவதே இல்லை.

 

உள்ளறையில் இருந்து வெளிப்பட்டவன் வாஎன்று அவள் கரம் பற்றி அழைத்துச் சென்ற இடம்..  அவ்வீட்டின் நேரெதிரில் நின்ற ஒற்றை அறைகொண்ட மரவீடு!!

 

காலையில் அவள் துயில் கலைந்த அதே மரவீடு!!

 

தொய்ந்து நின்ற பாலத்தில் அவளை கரம்பற்றி அழைத்து சென்றவன், அந்த அறையினுள் நுழைந்த மறுகணமே அவள் கையை விட்டிருந்தான்.

 

அந்த மெத்தையின் அருகில் சிறிதாய்  நின்ற கபோர்டை நெருங்கியவன் அதை திறக்க அதிலோ அவளுக்கானவை!!!

 

கடல்பாசி,பீச்(Peach),கோரல்,ஐவரி(Ivory),இளநீலமென வித்தியாசமான நிறங்களில்.. அவளுக்கேற்றார்போல கவுன்கள்!! உடலுக்கு இதமான துணிரகத்தில்!!

 

அவளுடையை சுட்டிக்காட்டியவனோ, “இதில இருக்கது எல்லாமே உன் அளவுக்குதான்! மாத்திட்டு வாஎன்று வெளியேறினான்.

 

அவள் அணிந்திருந்த ஆடையின் உறுத்தல் அவளை விரட்டியது. இன்னொரு முறை தடுக்கி விழ அவள் தயாராக இல்லை.

 

வகுளா சித்தி ஆசைக்காக போட்டுக்கிட்டது எவ்வளவு பெரிய தப்பு??..’

 

கடல்பாசி நிறத்திலான முழங்கைவரை நீண்டு.. அவளுக்கு சரியான அளவில் இருந்த உடையை அணிந்தவளுள்ளோ நிம்மதி உணர்வுக்கு பதிலாய் குழப்பங்களே பல!!

 

முழங்காலில் இருந்து நீண்டு..அதே சமயம் கணுக்காலில் இருந்து சற்று உயர்ந்து இருந்த உடையை அணிந்தவள் வெளியேறும் முயற்சியில் கதவில் கை வைக்க.. அதுவோ இறுக்கமாய் மூடப்பட்டிருந்தது.

 

 

தன் முட்டாள்தனத்தை எண்ணி நொந்தவளாய் அந்த அறையை அலசியவளுக்கு  புரிந்ததெல்லாம் ஒன்றுதான்.. அது அவன் வந்து திறக்காவிட்டால் அவளால் வெளியேற முடியாதென..

 

அறையில் பாதி கண்ணாடியென்றாலும்..அது எதிர்புறம்.. இயற்கையெனும் தேவதையின் தரிசனத்துக்காய் நிற்க..  குழப்பங்கள் அவளை அமிழ்த்த தொடங்க அவளோ அந்த மெத்தையில் அமிழ்ந்திருந்தாள்.

 

விட்டத்தை பார்த்திருந்தவளுள் பல வினாக்கள்.. கண்ணெதிரே விடை இருந்தும் ஒன்றுக்கொன்று முரணாய் அவளை முரண்டியது!!

 

இன்று இவனிடமிருக்கும் இந்த நிதானமும்.. மென்மையும்.. எதுவுமே நேற்று இருந்திருக்கவில்லை.. அவன் முற்றிலும் வேறாய்..நேரெதிர் துருவமாய் இருந்தான்.  இவன்தான் அவனா!?? என்ற சந்தேகமெழும் அளவு இருவரிடையிலும் அத்தனை வித்தியாசங்கள்!!

 

எதற்காக தன்னை கடத்தியிருப்பான்??? என்ற கேள்வியே பூதாகரமாய்..  நிச்சயம் கொல்ல துடிப்பவன் இச்சிறு காயத்திற்கு இப்படி கவனித்திருக்கமாட்டான்.. இத்தனை மென்மையாய்..!!  

அவன் பார்வையில் இருந்த கண்ணியம் அவளை வேறெதையும் சிந்திக்க அனுமதிக்கவில்லை.. பணம் என்ற கேள்விக்கு அவளிடம் வேறொரு பதிலிருக்க அதுவும் மறைந்திருந்தது!!

 

பின் எதற்காக???!!!

 

கடத்தியவனே அரண் என்றிட நினைவுகள் எதுவும் முழுதாய் மீளாப்பொழுதில்.. நிதர்சனத்தை உணர்ந்தும் உணராமலும்.. தத்தளிக்கும் மனதை தடுக்க முயன்றவளாய் அவளிருக்க

 

ஒன்று மட்டும் அவளுக்கு வானில் தோன்றும் நிலவாய்.. அது அவன் பெயர் அதில்லை.. அரணில்லை! அப்போ இவன் யார்???!!!!!

தொடங்கிய புள்ளியிலேயே முடித்திருந்தாள்..