Aahiri-6

WhatsApp Image 2020-08-17 at 10.30.47 AM

அத்தியாயம்-6

 

தாய்மையுணர்வில் தவித்தவள்

மீள முடியாத பழியில் தள்ளப்பட..

கண்ணெதிரே ஒருவன் நெஞ்சம் நிறைய நேசமும்..

கண்கள் நிறைந்த தேடலுமாய்..

 வஞ்சம் தீர்க்க காத்திருந்தான்..

 

பச்சிலை வாசம் நாசியை நிறைக்க அதைக்கூட உணராமல் உறைந்து நின்றாள் அஹிரி.

உள்ளுக்குள் இருந்த எச்சரிக்கை உணர்வால் அவனின் காலடி ஓசையிலேயே கலைந்தவளாய் பின்தொடர்ந்திருந்தாள்தான்,  ஆனால்..

அரண் யாருக்கூட பேசிட்டிருக்கான்?? அதுவும் இவ்வளவு கோவமா??.. அது அவனது உடல்மொழியில் பிரதிபலிக்க கூர்மையாய் படிந்தன அவள் விழிப்பார்வை அரணுக்கு எதிர்ப்புறம் அவன் மறைத்து நின்ற உருவத்தில். கையை ஆட்டியாட்டி பேசியவன் பின் தலையில் அடித்தவனாய் சுற்றுமுற்றும் பார்த்தபடி விலகவே தெளிவாய் விழுந்த பிம்பத்தில் முதலில் குழம்பி பின் அதிர்ந்து உறைந்தே போனாள்.

இவன்..இவன எங்கயோ பார்த்துருக்கேனே.. எங்க? இவன..இல்ல இவனபோலவே.. என்று ஓடிக்கொண்டிருந்த எண்ணங்களின் நடுவே வேகத்தடையாய் வந்து விழுந்தது விடை!!

யெஸ்!!! இவன..இல்ல இல்ல!! இவன் உருவத்த பார்த்துருக்கேன்! ஆனா எங்க?? ஆரி திங்க்!! திங்க் ஃபாஸ்டர்!! என்று  அதிகம் அழுத்தம் கொடுத்தவளின் முன் தெளிவற்ற காட்சிகள்..

துஜி குளியலறையினுள் தஞ்சமாகியிருக்க இவளோ வெளியில் கையில் ஒரு புத்தகத்துடன் அடைக்கலமாகியிருந்தாள் அந்த சன்னலோர இருக்கையில்.

சுவற்றில் அரைவட்டமாய் இருந்த சன்னலும் ஒரு ஆள் அமரும் அளவு நீண்டு அகலமாய் இருந்த அதன் திட்டில் சாய்ந்து அமர்ந்தவளாய் முதல் தளத்திலிருந்த அவ்வறையில் இருந்து அதற்கு நேர்கீழே விரிந்துக்கிடந்த தோட்டமும் அந்த பசுமை போர்த்திய வெளியில் வெள்ளை நிறத்தில் தனித்து நிற்கும் ஒற்றை ஊஞ்சலுமே அவள் கவனத்தை ஈர்த்திருந்தது பழைய.. பால்ய நினைவுகளை தூண்டி..

 

“அம்மூக்கா!! அம்மூக்கா!!!” என்ற துஜியின்  அழைப்பிலேயே நிகழ் காலத்திற்கு வந்தவள்  கையிலிருந்த புத்தகத்தை ஓரமாய் வைத்துவிட்டு அவசர அவசரமாய் எழுந்துக்கொண்டாள்.

 

“என்னடா??” என்றவளின் குரலில்,

 

“அம்மூ!! டாப் மாத்தி எடுத்துட்டு  வந்துட்டேன்.. எடுத்து தாயேன்..” என்றாள் துஜி.

 

“ம்ம்.. எது வேணும்?” என்ற அஹிரியின் முகபாவமோ முற்றிலும் மாறியிருந்தது காரணம் துஜி இப்படியெல்லாம் எதையும் மறக்கும் ரகமல்லவே!? அப்படிப்பட்டவள் மறப்பதென்றால்..

 

இதெல்லாம் சாதாரணமானவையே! ஆனால் துஜியிடமல்ல!! தங்கையை நன்கறிந்தவளால் அவளிடம் தென்படும்  சிறு மாறுதலைக்கூட நொடியில் கண்டுக்கொள்வாள். அப்படியிருக்கையில் இது அவளை சிந்தனையில் ஆழ்த்த துஜியின் குரலோ அவளை மீட்பதாய்..

 

“வேறெதாவது நீயே எடுத்துதாம்மூ..” என்றுவிட அவளும் தங்கையின் கபோடில் துழாவினாள்.

 

திடீரென ஓரெண்ணம் உள்ளுக்குள்.. அந்த லைம் எல்லோ ஸ்கர்ட் நல்லாருக்குமே!?..அது எங்க??.. என்று தோன்றிய மறுகணம் அதை அவள் பெட்டியில் கண்டது  நினைவில் வர பெட்டியை திறந்தாள்.

 

இந்த துஜிக்கு என்னாச்சு?? பெட்டியக்கூட பிரிச்சு அடுக்கல இன்னும்.. என்ற எண்ணங்கள் ஒரு புறமிருக்க கையோ தாமாய் அந்த லைம் எல்லோ  ஸ்கர்ட்டுக்காய் அலைந்தது. பெட்டியில் கடைசியில் ஒரு ஓரமாய் அதன் நுனி தென்பட பிடித்திழுக்க முயன்றவளின் முன் ஸ்கர்ட்டோடு சேர்ந்து மேழெழும்பி விழுந்தது அச்சிறு பொம்மை!!

 

இது யார்?? பையன் மாதிரி… என்று  கையில் ஸ்தெத்தஸ்கோப்பும் வெள்ளைக்கோட்டுமாய்.. நின்றவனிலேயே அவள் கவனம் நிலைத்திட மறுபடியும் அவளை கலைத்தது  துஜியின் குரலே குளியலறையில் இருந்து.

 

“அம்மூ!!! குளுருது..” என்றவளின் குரல் சிணுங்கலாய் வெளிவர மற்றதெல்லாம் பின்னுக்குச் சென்றுவிட கையில் சிக்கிய பொம்மையையும் இருந்த இடத்திலேயே பெட்டியில் அடியில் வைத்தவளாய் உடையுடன் விரைந்திருந்தாள்.

 

அன்று முழுக்க சிறு உறுத்தல் இருந்துக்கொண்டேதான் இருந்தது அவளுள். யாரவன்?? துஜியின் மனம் கவர்ந்தவர்கள் வெகுசிலரே!! அதுவும் அவள் மனதில் பதிந்து கையில் பொம்மையாவதென்றால்..  இதுவரை ஆஹிரியை தவிர்த்து வேறெவரையுமே அவள் இத்தனை துல்லியமாய் வடித்ததில்லை!!  

 

ஆனால் எல்லாவற்றையும் அவளிடம் கொட்டிவிடும் துளஜா இவனைப்பற்றி ஒருவார்த்தைக்கூட சொன்னாளில்லை!! இவன் நல்லவனா? கெட்டவனா?? என ஒன்றுமே..ஏன் இப்படியொருவனை சந்தித்ததாகவே சொல்லவில்லையே!!

 

ஒருவேளை அந்த அளவு..அதை சொல்லும் நேரம் வருவதற்குள்ளாகவே எல்லாம் நடந்துவிட்டதோ??  என்ற சந்தேகம் எழாமல் இல்லை..

 

துஜி வந்த சில நாட்களிலேயே எல்லாம் தலைகீழானது! ஒருவேளை இன்னும் சில நாட்கள் அவளுடன் இருந்திருந்தாள் சொல்லியிருப்பாளோ??

 

இல்ல.. துஜி ரொம்ப டிஸ்ட்டர்ப்டா இருந்தா!! அதுக்கு இவன்தான் காரணமா? இவன் எப்படி இங்க..அதுவும் அரண்கூட?? அப்போ இதுக்கெல்லாம் இவன்தான் காரணமா? என் துஜி இருக்கற இடம் இவனுக்கு தெரியுமா?..ஒருவேளை.. மறைச்சு வச்சதே இவன்தானா?

 

“அறிவிருக்கா வதன்!? உன்ன யாரு இங்க வர  சொன்னா? உனக்கெப்படி..” என்று  கடவாயில் வார்த்தைகள் ஒவ்வொன்றையும் கடித்து துப்பியவனின் வார்த்தைகள் தடைப்பட்டன எதிரில் நின்றவனின் பார்வை அவன் பின்னால் நிலைத்ததில்…

 

அவன் பார்வை சென்ற திக்கை வெறித்த அரணின் விழிகளோ ஓர் நொடி அதிர்ச்சியில் விரிந்தது.

 

“ஆ..” என்று அரண் தொடங்கியதெல்லாம் அவள் கவனத்திலேயே இல்லை அவள் பார்வை முழுதும் புதியவனின்மேல் படிந்திருந்தது..

 

இவன் பெயர் வதனா?? இல்லை.. அதில் வேறென்னவோ இருந்ததே.. ஆஹ்!! சாத்வா!! யெஸ் சாத்வாவேதான்! அப்போ அதுவும் பொய்யா?? அய்யோஹ் கடவுளே!! இவன் துஜிய என்ன செஞ்சான்??!! என்ற எண்ணம் எழுந்த நொடி..

 

இவளை எதிர்ப்பார்த்திராத இருவரின் முகபாவங்களும் இருவேறுவிதமாய் மாறியிருக்க இவளோ அந்த வதனையே வெறித்தவளாய்..

 

“யூ..யூ.. உன்ன நான் பாத்துருக்கேன்..” என்று இரண்டடி பின்னோக்கி வைத்தவள் மறுகணமே அவனிடம் பாய்ந்திருந்தாள்.

 

“என் துஜி எங்க?? நீதான் அவள என்னவோ பண்ணிட்ட!!” என்று தன் முழுபலத்துடன் உலுக்க அதில் நிலைத்தடுமாறியவனை பிடித்து நிறுத்திய அரணோ ஆஹிரியை அவனிடம் இருந்து பிரித்தெடுக்க முயன்றான்.

 

“நான் கேக்க வேண்டிய கேள்வி அது!! என் துஜா எங்க ஆஹிரி?? அவள என்ன பண்ணீங்க??” என்ற வதனின் குரலில் பட்டென நின்றுவிட்டாள்.

 

அவனையே அவள் பார்த்திருக்க அவனோ கசங்கிய தனது சட்டையை சரிசெய்தவனாய்.. அவளையே கேள்வியாய் நோக்கினான்.

 

அத்தனை உணர்ச்சிகளையும் கட்டுக்குள் வைத்திருந்த பார்வை அது!! அவன் அவனையே கட்டுப்படுத்தியபடி நின்றதை அவளால் உணர முடிந்தது!

 

வாட்!!?? நான்..நானா? என்ன சொல்ல வர்றான் இவன்?? நோ! நோ ஆரி!! யோசிக்காத இவன் உன்ன கன்ஃப்யூஸ் பண்றான்!!.. ஆனா அவன் நடிக்கறானு தோணலையே!.. என்ன இது? என்ன நானே கான்ட்றடிக்ட் பண்ணிட்டு.. ச்சே!!

வாட் எவர்!! இவன் எதோ ஒரு விஷயத்துல துஜிய பாதிச்சுருக்கான்.. அது நல்லவிதமா இல்லையானுதான் தெரியல… என்றவளின் மனம் தன்போக்கில் ஆற்று நீராய் அடித்துச்செல்ல அவளோ அவனையே வெறித்தப்படி நின்றிருந்தாள்.

 

“சொல்லுங்க ஆஹிரி!! என் துஜாவ என்ன பண்ணீங்க!!???” என்றவனின் உணர்வுகள் உடைப்பெடுத்திருந்தது. இன்னதென்று விளக்கிட முடியாத குரலொன்று.. அவள் மனதை பிசைந்தது! அவனது குற்றம் சாட்டும் குரலில் அவள் ஸ்தம்பித்து நிற்க அதை உணர்ந்தவனாய்..

 

“போதும் வதன்!!” என்று அதட்டலாய் வெளி வந்தது அரணின் குரல்.

அவனது அதட்டல் குரலில் வதன் என்று அழைக்கப்பட்டவன் மட்டுமின்றி ஆஹிரியும் தன் சுயத்திற்கு மீண்டிருந்தாள்.

 

வார்த்தைகளற்று..சூழ்நிலையை கிரஹித்துக்கொள்ள முயல்பவளாய் விழித்து நின்றவளை கண்ட வதன் சட்டென தன் பாவத்தை மாற்றியவனாய் சிறு மன்னிப்பு வேண்டலுடன்..

 

“ ஐ அம் சாரி ஆஹிரி.. ரியலி சாரி..” என்றிருந்தான்.

 

அதற்கு எந்தவித முகபாவத்தையும் பிரதிபலித்திராதவளோ உள்ளே அரித்துக்கொண்டிருக்கும் கேள்வியை வெளியே கொணர்ந்திருந்தாள்.

 

“நீ..நீங்க யாரு?? உங்களுக்கு எப்படி துஜிய தெரியும்??” என்றவளில் அவன் பார்வை நம்பாமல் படிய கண்களில் சிறு கெஞ்சலுடன்.. “ப்ளீஸ்! தயவுசெஞ்சு நீங்களாவது சொல்லுங்களேன்..” என்றாள் நெற்றிப்பொட்டை சுட்டுவிரலால் நீவியப்படி.

 

அதுவே அவள் அதிகம் அழுத்தம் கொடுக்கிறாள் என்று காட்ட அரணின் பார்வை அடுத்தவனில் படிந்தது.. புருவங்களிரண்டும் சுருங்கினாலும்,

 

“நான் சாத்வதன். டாக்டர்! ஊட்டில..” என்று தொடங்கியவன்  சிறு மௌனத்திற்கு பின், “க்ளீனிக் வச்சிருக்கேன்” என்றான்.

 

அவள் பார்வை முழுதும் அவனிலேயே..!!

 

அவளுக்கு இது போதாதே! அவனையே பார்த்திருந்தவளோ பொறுமையிழந்தவளாய்..

 

“துஜி..??” என்றாள் கேள்வியாய்

 

அவனுக்கு பதிலளிப்பதில் விருப்பமில்லை என்பது அவன் வெளியேற்றிய அந்த பெருமூச்சொன்றே சாட்சியாகிட, என்ன நினைத்தானோ..

 

“கொஞ்ச  மாசத்துக்கு முன்னாடிதான் நான் துஜாவ மீட் பண்ணேன்..” என்றவனின் மனம் எப்பொழுதோ ஊட்டியை நோக்கி பறந்துவிட்டது என்பது அவன் கண்களில் மின்னிய ஒளி பிரதிபலித்தது, அவன் அந்நாளுக்கே சென்றுவிட்டதை..

 

தேகம் தழுவி சிலிர்க்க வைக்கும் பனிக்காற்றில்.. அந்த மாலை மங்கும் நேரமும் மெல்ல மெல்ல வானை தழுவும் இருளுமென அணிந்திருந்த ஓவர்கோட்டை இழுத்துவிட்டவனாய்  அந்த குறுகலான சாலையில் நடந்துக்கொண்டிருந்தான் சாத்வதன்.

 

தன் வலப்புறத்தில் பரந்துவிரிந்துக்கிடந்த பசுமையை இரசிக்க தவறாதவனாய்..!!

எல்லாம் அந்த முனகல் சத்தம் அவன் செவிப்பறையை தீண்டும் வரைதான்.

 

திடீரென தாக்கிய சத்தத்தில் சட்டென தன் நடையை நிறுத்தியவனின் பார்வை கூர்மையாய் படிந்தது சுற்றுபுறத்தில்.

 

கூர்ந்து கவனித்தவனுக்கு சத்தம் தனது வலப்பக்க தோட்டத்துக்குள் இருந்து வருவது புரிய அடுத்த நொடியே விரைந்திருந்தான்.

 

செடிகளை விலக்கியவனாய் அவன் முன்னேறியப்பொழுது அவன் பார்வையில் விழுந்தாள் அவள்!!  ஐவரி நிற ஸ்கர்ட்டில்.. தரையில் மண்டியிட்டு அமர்ந்திருந்தவளின் கவனம் முழுக்க அவள் கைகளில்..

 

இடதுகையால் தனது வலக்கையை பிடித்திருந்தவளின் பார்வை முழுக்க அதிலேயே இருந்தது.. அவன் பார்வை அவளிலிருந்து அவள் உஃப் உஃப் என ஊதிக்கொண்டிருந்த கையில் படிய.. மறுகணமே அத்தனையும் மறந்தவனாய் அவளிடம் விரைந்திருந்தான்.

அவளெதிரே மண்டியிட்டு அமர்ந்தவன் அவள் எதிர்ப்பார்த்திராத தருணம் அவள் கையை  பிடித்திருந்தான். பிடித்தவன் அவள் கையில் இரத்தம் கசிந்தபடி இருந்த காயத்தின் ஆழத்தை ஆராய்ந்தான் ஒரு மருத்துவனாய்..!!

 

அவளிடம் அதிர்வை உணர்ந்தவனோ தன் பார்வையை கையில் இருந்து கண்களுக்கு  நிமிர்த்த அவனையே பார்த்திருந்தவளின் பார்வையில் நின்றுவிட்டன அவன் விழிகள். அவள் பார்வையில் தொக்கி நின்ற கேள்வியில் தன்னுணர்வு பெற்றவனோ

 

என்ன பண்ற நீ?? என்று தன் செயலையே நொந்தவனாய் தலையசைத்து ஆறுதலாய் புன்னகைத்தான்.

 

காயத்தை ஆராய்ந்தவனுக்கு சர்வநிச்சயம்! இது கத்தியால் தாக்கப்பட்ட காயமென்று.

 

“எப்படி ஆச்சு??” என்றவனின் முகபாவம் மாறியிருந்தது.

 

அவளோ, “கத்தியால குத்த வந்தான்.. நான் தடுக்க ட்ரை பண்ணேன்.. கைய கிழிச்சிடுச்சு..” என்றாள் என்னவோ பலகாலம் பழக்கம்போல வெகு இயல்பாய் வந்துவிழுந்த வார்த்தைகளில் அவன் புருவம் வளைந்தன..

 

“யாரு??” என்ற அடுத்த கேள்வி அவனிடம் இருந்து புறப்பட அவள் முகமோ சிந்தனையாய் சுருங்கியது.

 

“தெரியலயே..” என்றவளில்  ஓர் நொடி சந்தேகமாய் படிந்த பார்வை அடுத்த கணமே கனிந்தது.

 

இவளிடம் பொய்யில்லை!!  ஆனால்.. கத்தியால குத்தற அளவுக்கு.. ?? என்றெழுந்த கேள்வியில் அவனது பார்வை அவ்விடத்தையே ஒருமுறை சுற்றி சுழண்டது. அவர்களைத்தவிர வேறு யாரும் இருப்பதாக தெரியவில்லை.

 

நிலைமையை  உணர்ந்தவனாய் அவள் காயத்திற்கு முதலுதவி செய்தவனின் பார்வை ஓர்நொடி அவளில் தேங்கி பின் கைகளுக்குச் சென்றிருந்தது.

 

“என்னாச்சு??” என்று வினவியவனுக்கு பதிலில்லாமல் போகவே பார்வையை நிமிர்த்தியவன் எதிரில் இருந்தவளின் அமைதியில் மௌனமானான். அதற்குமேல் அவளை தோண்டித் துருவ அவனுக்கு விருப்பமில்லை.. ஏனோ அவளே மிரண்டு போயிருப்பதாக தோன்றியது.

 

“பெரிய காயமில்ல.. கொஞ்ச நாள்ல சரியாப்போயிடும்.. “ என்று சொல்லிக்கொண்டே போனவனின் பேச்சு அவளதில் தடைப்பட்டது.

 

“நீ எப்பவும் இங்க வருவியா? வாக்-க்கு..” என்றாள் கேள்வியாய்.

 

அவளது குரல் அத்தனை யதார்த்தமாய்.. எந்தவித பதட்டமுமின்றி ஏதோ நெருங்கிய நண்பனிடம் பேசுவதுபோல் இருக்க.. அவள் ஒருமையில் அழைத்தது எல்லாம் அவனுக்கு வித்தியாசமாகவோ மரியாதையின்மையாகவோ படவில்லை போலும்.

 

“ம்ம் ஆமா..”என்றான் சிறுபுன்னகையும் தலையாட்டலுமாய்.

 

“இதே நேரத்துக்கா?” என்றவளிடம் மறுப்பாய் தலையசைத்தவனோ, “எக்ஸாக்ட்டா இல்ல.. ஆனா கிட்டத்தட்ட இந்த நேரத்துலதான்.. பேஷன்ட்ஸ பொருத்து..” என்றவனிடம்

 

“இன்னைக்கு சீக்கிரம் வந்துருக்கலாம்ல?!” என்றாள் குறையாய்.

 

அவளது குரலின் மாறுபாட்டை உணர்ந்தவனின் புருவம் நெளிய “ஏன் என்னாச்சு??” என்றான் கேள்வியாய்.

“அந்த பொண்ணு மட்டும் தனியா மாட்டிக்கிட்டா தெரியுமா??.. நானும் வரலன்னா என்னவாயிருக்கும்?” என்று தன்போக்கில் பேசிக் கொண்டிருந்தவளை தடுத்தவனாய்..

 

“எந்த பொண்ணு??” என்றான் சாத்வதன் கேள்வியாய்.

 

“தெரியாதே!” என்று இதழ் சுழித்தவளோ “ஆனா.. அந்த ஆளுக்கிட்ட இருந்து தப்பிக்க ரொம்ப ட்ரை பண்ணிட்டு இருந்தாளா.. நானும் அப்போதான் வந்தேன்..”

அவனுக்கு இப்பொழுது  ஓரளவு புரிவதுபோல் இருந்தது.

 

“அந்தாள எங்க??” என்றவனின் பற்களுக்கிடையே கடிப்பட்ட வார்த்தையில் எதிரில் இருந்தவள் வெறித்து நோக்க தன் தவறை உணர்ந்தவனாய் “சாரி.. ஆனா அவனெங்க??எந்த பக்கம் போனான்??” என்றபடி எழுந்து நின்றவனின் பார்வை நாலாபுறமும் சுழன்றது.

 

“பிடிக்க ட்ரை பண்ணேன்..அப்போதான் கத்தியால கிழிச்சிட்டு ஓடிட்டான்..” என்றவளின் குரலோ முணுமுணுப்பாய்..!!

 

“ஓ.. அந்த பொண்ணு??” என்றான் கேள்வியாய்

 

“தெரியல.. ரொம்ப பயந்திருந்தா..ஓடிட்டாபோல..”  என்று உரைத்தவளின் குரல் என்னவோ அவள் தனக்குத்தானே சொல்லிக்கொள்வதுபோலிருக்க அவனுள்ளோ நெருடியது!!

 

அதெப்படி? உதவ வந்தவளை தனியே தவிக்கவிட்டு ஒருத்தி ஓடுவாள்?? ஏதோ சரியில்ல.. என்று தோன்றவே சுற்றுமுற்றும் பார்த்தவனாய் அவள் எழ கை நீட்டினான்.

 

அவனுடன் இணைந்து நடந்தவளிடம், “பக்கத்துலதான் க்ளீனிக்! மருந்துபோட்டு வீட்டுக்கு போகலாம்..” என்றவனின் குரலில் கனிவான அழுத்தமே நிறைந்து நின்றது. ஏனோ அவனாலும் அவளை வேற்றாளாய் பார்க்க முடியவில்லை.

 

அத்தனை நேரம் அமைதியாய் வந்தவளோ திடீரென நின்றுவிட அவன் பார்வை அவளிடம் கேள்வியுடன் படிந்தன..

 

“சாத்வா! பாட்டி திட்டுவாங்களே…” என்றாள் தன் கை காயத்தில் கவனம் பதித்து. சாத்வதனுக்கோ அவள் அவன் பெயரைச் சொல்லி அழைத்ததின் ஆச்சரியமே அதிகமாய் இருந்தது.

 

‘ என்ன தெரியுமா அப்போ??’என்ற கேள்வியை உள்ளே அமிழ்த்தியிருந்தான்.

 

“உம்பேரென்ன??” என்றவனிடம் அவள் தன் பார்வையைக்கூட திருப்பினாள் இல்லை. கவனம் முழுதும் காயத்திலே!!

 

விரித்துவிடப்பட்டிருந்த நீளக்கூந்தலும்.. அந்த ஐவரி நிற உடையுமாய் சராசரி உயரத்தில் இருந்தவளையே பார்த்திருந்த சாத்வதனோ தனது நினைவேடுகளை புரட்டினான் இவளை எங்காவது பார்த்திருக்கிறோமா? என்று. விடையென்னவோ இல்லையென்றுதான் வந்தது.

 

“துஜி.. அப்படிதான் அம்மூ கூப்பிடுவா.. துளஜா” என்றவளின் முகத்தில் தென்றலாய் வந்து ஒட்டிக்கொண்ட சிறு கீற்றுப்புன்னகையில் அவன் இதழும் மலர்ந்திட.. “அது யாரு அம்மூ??” என்றான் கேள்வியாய்.

 

“அம்மூவும் உன்ன மாதிரிதான் தெரியுமா? ரொம்ப நல்லவ! என் அக்கா” என்றவளின் குரலில்தான் எத்தனை பெருமை..!! அவளைப்போய் எப்படி இந்த ஆஹிரிக்கு..  என்றெழுந்த உணர்வு அலைகளில் அவன் ஒரு முழு நிமிடம் மௌனித்தான்.  அதற்குமேலும் அவனால் சாதாரணம்போல காட்டிக்கொள்ள முடியுமென்று தோன்றவில்லை. உணர்வுகள் எல்லாம் கரையுடைக்கும் நிலையில்.. கண்களை இறுக மூடி உடல் விறைத்து கை முஷ்டிகள் இறுக நின்றவனை பார்க்கவே என்னவோபோலானது ஆஹிரியினுள்.

 

இவன் சொன்னதில் பாதி அவளுக்கும் தெரிந்தவையே! கையில் இருந்த தழும்பை பார்த்துவிட்டு இவள் குதித்தப்பொழுது துஜி உரைத்தவைதான். ஆனால் அதில் சாத்வதன் என்ற பெயரே..ஏன் அப்படி ஒருவனை சந்தித்ததாகக்கூட துஜி சொல்லியிருக்கவில்லையே!!

 

அரண்  இருவரிடையே புகாதவனாய் அமைதிகாக்க சாத்வதனுக்குத்தான் பொறுமை பறந்துவிட்டிருந்தது.  அவனால் அதற்குமேலும் மற்றவளிடம் பேச்சு வார்த்தை நடத்தும் எண்ணம் துளிக்கூட எழவில்லை. அவனுக்கு தேவையானதெல்லாம் விபரங்கள் மட்டுமே! அவனுக்கான விடை ஆஹிரியிடம்தான் இருக்கிறதென்று அத்தனை ஸ்திரமான நம்பிக்கை அவனுள் எழுந்திருந்தது.

 

அத்தனை நேரம் பொறுமையாய் சொல்லிக்கொண்டிருந்தவன் ஏனோ எதிரில் குழப்பமாய் விழித்து நின்றவளைக் காணக் காண.. இனியும், நேரம் விரயம் செய்ய மனமில்லாதவன்போல அவளிடம்,

 

“சொல்லுங்க ஆஹிரி! துஜா எங்க?? தயவுசெஞ்சு நீங்களும் அவ இறந்துட்டானு சொல்லாதீங்க!! அத மத்தவங்க நம்பலாம்..ஆனா நான் நம்ப தயாராயில்ல!! சொல்லுங்க அவள என்ன பண்ணீங்க??” என்று தொடங்கியவன் எந்த கட்டத்தில் அவனை இழந்தான் என்பது அவனுக்கே தெரியவில்லை.. கிட்டத்தட்ட அவள் தோள்களை பற்றி உலுக்கிக் கொண்டிருந்தான் கேள்விகளுடன்.

 

நடப்பவை எதையும் கிரஹித்துக்கொள்ளக்கூட முடியாமல் அவனையே வெறித்துப்பார்த்தவளின் கண்களில் கலக்கம்.

 

‘என்ன சொல்றான் இவன்? நான்.. நான்.. துஜி..’ என்றோடிய எண்ணங்களூடே அவள் கடந்த காலத்தை நினைவில் கொண்டுவர முயன்றாள். ஆனால் இப்படிப்பட்ட சூழலில் அது சாத்தியமா என்ன? அவளது முயற்சி தோல்வியை தழுவிட தன்னை ஒருவன் பிடித்து உலுக்கிக்கொண்டிருக்கிறான் என்ற ப்ரக்ஞையே இன்றி நின்றிருந்தவளின் தேகம்  சில்லிடும் குளுமையை உணர உடல் முழுதும் வேர்வையில் நனைய எதிரில் நின்ற சாத்வதனே அவுட் ஆஃப் ஃபோகஸில் தெரியத்தொடங்கினான்.

 

நொடிப்பொழுதில் அவளின் மாற்றத்தை உணர்ந்த அரண் வதனை அவளிடம் இருந்து பிடித்து இழுத்தவனாய் அவளை ஆதரவாய் தாங்கியிருந்தான். பட்டென இழுபட்டதில் ஒரு நொடி சுதாரித்தவன் மறுபடியும்  அவளிடம் பாய்ந்தான்.

 

“சொல்லுங்க ஆஹிரி!! அம்மூ அம்மூனு சுத்தி வந்த பொண்ண என்ன பண்ணீங்க??” என்று கண்கள் சிவக்க கத்தினான் வதன்.

“வது!!” என்று அதட்டலாய் வெளிவந்த அரணின் குரலில் இன்னும் சினந்தவனாய்.

 

“உனக்கு தெரியாது அச்சு!! ஷீ  இஸ் மேக்கிங் ஃபூல் ஔட்  ஆஃப் அஸ்!!! எல்லாம் வெறும் ட்ராமா!!” என்றவனிடம் மற்றவனுக்கு புரியவைத்துவிடும் வேகம்.

 

“ஜஸ்ட் ஷட் அப்!!!!” என்ற அரணின் குரலில் அவன் கைக்குள் இருந்த ஆஹிரி மட்டுமின்றி அந்த வதனே அதிர்ந்து நின்றுவிட்டான். அத்தனை அதட்டலாய் உயர்ந்து ஒலித்திருந்தது அவன் குரல். சுட்டுவிரல் நீட்டி எச்சரித்தவனாய் அவளை அழைத்துக்கொண்டு சென்றிருந்தான் அரண்.