Aahiri-8

WhatsApp Image 2020-08-17 at 10.30.47 AM

Aahiri-8

  • Yagnya
  • August 19, 2020
  • 0 comments

அத்தியாயம்-8

 

“கலைந்த சித்திரமாய்

அவளின் மனமிருக்க

அதில் கல்விட்டெறிந்து..

அவள் கலங்கி நின்ற தருணங்களிலெல்லாம்..

கதகதப்பாய் அரவணைத்தவனின்

நலம் நாடி..

பாம்போ.. பழுதோ..

பிரித்தறியும் விருப்பமற்றவளானாள்..

அகத்தில் பல அதிர்வலைகளுடன்..

வளர்நிலவிற்கும் தேய்பிறைக்கும் இடையில்..”

 

‘சிலீர்!!!’ என்ற பேரொலியுடன் அவ்வறையில் மாட்டப்பட்டிருந்த நிழற்படத்தின் கண்ணாடி சட்டமொன்று சுக்குநூறாய் உடைந்துச் சிதறியது மூவரிடமும் அதன் தாக்கத்தை அதிர்ச்சியாய் பிரதிபலித்து.

 

‘அரண் மட்டும் கவனிக்கலன்னா??’ என்று போன ஆஹிரியின் எண்ணவோட்டம் வதனால் தடைப்பட்டது.

 

“அவங்க இங்கயும் வந்துட்டாங்க!!” என்ற சாத்வதனின் குரலில் மற்ற இருவரிடத்திலும் கேள்வியின் சாயல்.

 

“யாரு?” என்ற அரணிடம்

 

“அதான் தெரியல.. ஆனா கொஞ்ச நாளாவே யாரோ ஃபாலோ பண்ற ஃபீல்!” என்றான் சிந்தனையாய்.

 

ஆஹிரியின் முகத்திலோ அப்பட்டமான அதிர்ச்சி!

 

ஏனெனில் கொஞ்ச காலமாகவே அவளுள் இருந்து வரும் அதே குழப்பம்!! யாரோ தன்னை பின்தொடர்வதைப்போல..கண்காணிப்பதைபோல.. உணர்ந்தாளே!

 

‘அப்படின்னா.. இவங்கல்லாம் யாரு??’

 

“இவங்க என்ன ஃபாலோ பண்ணிதான் வந்துருக்கனும்!” என்று அனுமானித்தான் சாத்வதன்.

 

“இருக்கலாம்..”  என்றதோடு எதையோ முணுமுணுத்த அரணின் மறுப்பில் இருவரும் குழம்ப அவனோ அவர்களை அப்படியே கீழே தணிந்த வாக்கில் இருக்கும்படி உரைத்தவனாய் மேசையிடம் விரைந்தான்.

 

மெலிதான சத்தமொன்றை எழுப்பியபடி அடுத்த தோட்டா ஆஹிரியின் காலருகில் இருந்த மேசையின் பூக்குவளையை பதம்பார்த்திருந்தது.

 

அடுத்து வந்த ஒரு நொடியைக்கூட அரண் வீணடிக்கவில்லை! விறுவிறுவென செயல்பட்டான். மேசையினடியில் இருந்ததை எடுத்து தன் வலக்கரத்தினுள் அடக்கியவனாய் பார்வையை சுழலவிட்டப்படி மற்றவர்களிடம் விரைந்தான்.

 

“என்ன?” என்று கேள்வியாய் தொடங்கிய சாத்வதனிடம்,

 

“இப்ப அதுக்கான  நேரமில்ல!” என்றுவிட்டு சுற்றிலும் ஒருமுறை பார்வையை சுழற்றியவன்,

 

“வாங்க!” என்ற சைகையுடன் பூனைப்பாதம் வைத்தவனாய் முன்னேற மற்ற இருவரும் அவனை தொடர்ந்தவர்களாய் நகர்ந்தனர் அந்த அறையின் மூலைக்கு.

 

அந்த சாக்லேட் நிற கால்மிதியை நகர்த்தியவன் லேசாய் துறுத்திக்கொண்டிருந்த மரத்தின் துரும்பை பிடித்து இழுத்தான். பார்ப்பதற்கு சாதாரண துரும்பாய் காட்சியளித்ததோ அவன் இழுக்க இழுக்க பிரிந்துவர அதன் அடியில் படுத்துறங்கிக் கொண்டிருந்த கொண்டியைப் பார்க்கும் வரையிலுமே அது வெளியேறுவதற்கான இன்னொரு பாதையென்று அவள் நினைத்தும் பார்த்திருக்கவில்லை. ஒரு ஆள் நுழையும் அளவிற்கு இருந்தது அந்தப் பாதை.

 

கிட்டத்தட்ட அந்த மச்சறையின் கதவைப்போல.. அதன் கீழே செங்குத்தாய் நின்ற தடிமனான மரக்கம்பம்!!

 

வெறும் மரக்கம்பத்தைப்போல காட்சியளித்தாலும் உற்று கவனித்தப்பொழுதே தெரிந்தது கால் வைத்து இறங்குவதற்கு வாகாய் கம்பத்தைச் சுற்றி ஸிக்ஸாக்காக செதுக்கப்பட்டிருந்தது.

 

முதலில் வதனை இறங்கும்படி உரைத்தவன் அவன் இறங்கியப்பின் ஆஹிரியும் பாதி கம்பத்தை கடந்த கணம் மெலிதாய் அதே கோரச்சத்தம்!!

 

“சீக்கிரம் ஆரி!! க்விக் க்விக்!!” என்ற அரணின் குரலில் அவள் அவனையே பார்த்திருக்க அவனோ அதன் காரணத்தை உணர்ந்தவனாய்.. “நானும் வரேன்” என்றுவிட மறுகணமே கீழே ஒரே குதியாய் குதித்திறங்கியிருந்தாள்.

 

இறங்கவதற்கு தயாராய் நின்ற அரண் ஏனோ விறுவிறுவென அறையினுள் சென்றதும் மறுகணமே தொப்பென எதுவோ விழும் சத்தமும் அவளை திடுக்கிடச்செய்ய அதில் பதறியவளாய் அவள் ஏற நினைக்கயிலேயே அரண் இறங்கியிருந்தான்.

 

இறங்கியவன் அவள் கையை இறுகப்பற்றியவனாய் சாத்வதனையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து அகலும் முயற்சியில்..!!

 

துப்பாக்கிச் சத்தங்களும்.. பூட்ஸ் அணிந்த கால்களின் அடியில் மிதிப்படும் சருகுகளின் கதறல்களும் அவர்களை பின்தொடர..அதில் துரத்தப்பட்டவர்களாய் ஓடிக்கொண்டிருந்தனர் மூவரும்.

 

அது காலையில் அவர்கள் வந்த அருவிக்கரையைப் போலவே  காட்சியளித்தது. ஒருவேளை அந்த அருவிக்கரையின் தொடர்ச்சியாய் இருக்கலாம். நீரோட்டம் அவ்வளவாய் இருக்கவில்லை. ஒரு பாறையின் பின் பதுங்கினர் மூவரும்..!!

 

வதனும் ஆஹிரியும் பதுங்கியவர்களாய் அமர்ந்திருக்க அவர்களுக்கெதிரில் தயார் நிலையில் அமர்ந்திருந்த அரணோ மற்ற இருவரையும் பார்த்தவனாய்..

 

“ரௌண்ட் அப் பண்ணிட்டாங்க!! இங்க இருந்து மொதல்ல வெளியப்போனும்..” என்று சொல்லிக்கொண்டேப்போக ஆஹிரியினுள்ளோ ஆயாசமே!

 

“யாரிவங்க?? என்னதான் வேணும் இவங்களுக்கு??” என்றவளின் குரல் அயர்ந்து ஒலிக்க அரணோ..

 

“தெரியலடா.. ஆனா நிச்சயம்! இவங்க யாரும் பேச வரல!” என்றவனாய்  மற்றவனிடம் திரும்பினான்.

 

தொலைவில் சருகுகளின் ஒலியெழும்ப இங்கு அரணோ காரியத்தில் துரிதமானான்.

 

“…”

 

ஏதோ ஒரு இடத்தின் பெயரை உச்சரித்தவன் “நீங்க இரண்டுப்பேரும்  அங்க போயிருங்க!!  ஐ வில் பீ தேர்!” என்றுவிட்டு எழ முயன்றவனின் கரம்பற்றி தடுத்திருந்தாள் ஆஹிரி அவனது திட்டம் புரிந்தவளாய்..!!

 

அவ்விடத்தின் பெயர் பாதி பாதியாய் காதில் ஒலித்து வைத்தது அவளுக்கு.. பார்வை முழுதும் சுற்றத்தில் கூர்மையாகிட..

 

அரணின்  புரியாத பார்வைக்கு அவள் வேண்டாமென தலையை இடவலமாய் ஆட்ட அவனோ தன் கரம் பற்றியிருந்த அவள் கையில் அழுத்தம் கூட்டியிருந்தான்.

 

“நான் வந்துருவேன் ஆரிமா..” என்றவனின் இமை மூடித்திறக்க அதில் உள்ளெழுந்த ஆசுவாசத்தில் தலையசைத்து பிடியை தளர்த்தினாள்.

அவளது கன்னத்தில் லேசாகத் தட்டியவன் சாத்வதனிடம் கிளம்பும்படி கண்ணால் பேசியபடி திரும்பி நடந்தான்.

 

ஓவர் கோட்டின் பாக்கெட்டில் இருந்து அவன் வெளியே எடுத்த வஸ்துவில் ஆஹிரியின் கவனம் நிலைக்க அவளை கலைத்தவனாய் வதன் அவள் கைப்பிடித்து இழுக்க மறுகணமே பாதையில் கவனம் பதித்திருந்தாள்.

 

அவன் கையில் பளபளத்த அந்த பிஸ்டல் மட்டும் ஏனோ அடிக்கடி அவள் கவனத்தில் வந்துச் சென்றது.

 

மூச்சிரைக்க ஓடியவளினுள்ளோ எண்ணக்கலவைகள் ஒன்றோடு ஒன்று ஒட்ட மறுத்துக்கொண்டிருந்தன..

 

யாரிவங்க?? யார தொரத்தறாங்க? என்னையா.. இந்த சாத்வதனையா? இல்ல அரணையா??.. உள்ளுணர்வு ஏனோ நமநமத்தது அவளைத்தான் என.

 

என்னதான்னா.. ஏன்????

 

தொரத்தரவங்களையும் தெரியல.. கூட ஓடறவனையும் தெரியல.. ஏன் ஓடுறேன்னுக்கூட தெரியலையே!! என்ன ஆரி இது??!! இப்படியே எவ்வளவுதான் ஓடுவ?  என்று கலங்கிய மனதில் முதன் முதலாய் ஒன்று உறுத்தியது.

 

இப்ப துரத்துரவங்க என்ன கொல்ல ட்ரைப்பண்றாங்கன்னா.. ஓஹ் காட்!! அப்போ எதுவுமே தற்செயல் இல்ல!! ஏன் அந்த ஆக்ஸிடெண்ட்கூட.. என்ற முடிவுக்கு வந்த  மனதைக் கண்டு அவளுள்ளோ நிலநடுக்கமே வந்துப்போனது.

 

அதிர்ந்து நிமிர்ந்தவளின் முன் அழகும் கம்பீரமுமாய் உயர்ந்து நின்றது அந்த பெரியளவிலான  ஃபார்ம் ஹௌஸ்!!

 

அத்தனை குழப்பங்களிலும் அவள் மனம் அதற்கு அந்த ‘வாவ் லுக்’ குடுக்காமலில்லை.

 

அவர்கள் நின்றிருந்தது பின்புறமென்பது குறுகலாய் அதே சமயம் உயரமாய் நின்ற அந்த க்ரிள் கேட்டே உணர்த்திட சாத்வதன் அதை திறந்துக்கொண்டிருந்தான்.

பார்வைக்கு வெகு சாதாரணமாய் காட்சியளித்தாலும் அவ்வளவு சுலபத்தில் அக்கதவை கடந்துவிட முடியாது என்பது அவளுக்கு நிச்சயம்.  

 

மற்ற நேரம் என்றால் இத்தனை செக்யூரிட்டி சிஸ்டம் இந்தக் காட்டுக்குள் எதற்கு? என்று எண்ணியிருக்க கூடும். ஆனால் கடந்து வந்த சம்பவங்கள் அப்படி எண்ணவிடவில்லை.

 

சாத்வதனைத் தொடர்ந்து உள்ளே நுழைந்தவளின் கவனம் சுற்றிலும் படர்ந்தது.

 

வீட்டைச்சுற்றி அழகாய் வளர்ந்து நின்ற பூச்செடிகளும்.. மற்றொருபுறம் பராமரிக்கப்பட்டு வந்த அந்த தட்பவெப்பநிலைக்கு ஏற்ற காய்கறி வகைகளுமென இருந்தன.. தூரத்தில் மாட்டப்பட்டிருந்த பூவாளியும்.. தோட்ட வேலையை நினைவுறுத்த சுற்றிப்பார்த்தால்.. அவர்களைத் தவிர்த்து வேறெவரும் அங்கிருப்பதாய் தெரியவில்லை.

 

ஏன் முன்வாசல் வழியா வரல? என்ற வினா எழுந்தாலும் அதை அவள் கேட்டிருக்கவில்லை சாத்வதனிடம். பொறுமைகாத்தவளாய் அவனை பின்பற்றி வீட்டினுள் நுழைந்தாள்.

 

நுழைந்த நொடி உடலும் உள்ளமும் அத்தனை கதகதப்பை உணர்ந்ததென்றால் மிகையாகாது. அத்தனை இதமான உணர்வு வீட்டினுள்.. ஏனோ அவள் வீட்டிற்கே வந்ததைப்போல. அவ்வளவு தூரம் ஓடியதாலோ என்னவோ உடல் அந்த சோஃபாவினுள் புதைந்திட துடித்தது.

 

அவள் சாத்வதனை தேடினால் அவனோ இவளை அந்த முதல் தளத்தின் மூலையிலிருந்த அறையில் விட்டதோடு சரி! அதன் பிறகு திரும்பியும் பாராமல் சென்றிருந்தான்.

 

“ரெஸ்ட் எடுங்க ஆஹிரி” என்றவன் போகிறபோக்கில் முணுமுணுத்துவிட்டு விடுவிடுவென படிகளில் இறங்கியது நினைவில் ஆடியது.

 

அப்படியே அந்த ஒருவர் மட்டும் அமரும் சோஃபாவில் சரிந்திருந்தாள்.  சரிந்தவள் விழிகளிரண்டையும் மூடி தலையை பின்னால் சாய்த்திருக்க கால்கள் இரண்டையும் குறுக்கி கைகளால் கட்டியிருந்தாள்.

அந்த அறையின் ‘கோஸி’ லுக் அத்தனை நேரம் ஓடியதிலும் பதட்டத்திலும் களைத்திருந்த உடலும் உள்ளமும் சற்றே அந்த இதத்தில் அமிழ்ந்தாலும் திடுமென கண்முன் வந்துச் சென்ற அரணில் அவள் அயர்வு அகன்றுவிட்டதுபோலும்.. அதற்குபின்னான ஒவ்வொரு மணித்துளியும் அந்த காரிடாரின் பரபரப்பளவை நடையால் அளந்துக்கொண்டிருந்தாள். அவ்வப்பொழுது அங்கிருந்தபடியே வெளியில் எட்டிப்பார்த்தவளாய்..

 

ஒருவேளை சாத்வதன் அவளுடன் சற்றுநேரம் அமர்ந்திருந்தால் இவ்வளவு படபடத்திருக்க மாட்டாளோ?

 

அவன் வந்துவிடுவான் என்பதில் அவளுக்கு துளியளவும் சந்தேகமில்லைதான்! ஆனால் எந்த நிலையில் வருவான் என்பதே அவளை பிடித்து ஆட்டியது.

 

“சாப்பிடலாமா ஆஹிரி?” என்ற சாத்வதனின் குரல் அவளுக்கு பின்னால் ஒலித்தது.

 

அதில் அவன்புறம் திரும்பியவளோ, “நீங்க சாப்பிடுங்க வதன்.. எனக்கு பசியில்ல!” என்றுவிட அவனோ..

 

“மதியம் சாப்பிட்டது ஆஹிரி! பரவால்ல நான் வெய்ட் பண்றேன்” என்றுவிட அப்பொழுதே அவளும்  பசியை உணர்ந்தாள். உணவிற்காக வயிறு ஏங்க மனமோ உண்ணும் நினைப்பே இல்லாமல் அவளை  அலைக்கழித்தது.

 

அவளையே கவனித்திருந்தவனோ பெறுமூச்சொன்றை வெளியிட்டவனாய்.. “அஸ் யூ விஷ்! ஆனா சீக்கிரம் சாப்ட்றுங்க” என்றவனாய் நகர அவளும் ஒப்புதலாய் தலையசைத்து தன் நடையை தொடர்ந்தாள்.

 

“ஏன் இவ்ளோ ரெஸ்லெஸ்ஸா இருக்கீங்க??” என்றக் குரலில் அஹிரியின் நடை மீண்டும்  தடைப்பட்டது.

 

கண்களில் கேள்வியைத்தாங்கி சிறு புருவச்சுழிப்புடன் நின்றவனில் கவனம் பதித்தவள் பின் ஒன்றுமில்லை என்பதாய் தலையசைத்து மறுபுறம் திரும்பிட,

 

“ஹீ வில் பி சேஃப்!” என்ற வதனின் வார்த்தைகள்  அவளை நகரவிடாமல் நிறுத்திவிட்டன..

 

“கடத்தினவன் மேல என்ன இவ்ளோ கரிசனம்??” என்றவனின் குரலில் அவளுள் அதிர்வலைகள்..!!

 

சட்டென அவள் திரும்பிய நொடி மற்றவன் விடுவிடுவென படிகளில் இறங்கி மறைந்தான்.

 

“கடத்தினவன் மேல என்ன இவ்ளோ கரிசனம்??” என்ற கேள்வியே அவளைச்சுற்றி ரீங்காரமிட்டது.

அவள் அதிர்ந்ததெல்லாம் சில நொடிகளே.. அவளுள் ஏன்? என்ற வினா எழும்ப அதற்கு கிட்டிய விடைகளில் எழுந்த அதிர்வும் கரைந்திருந்தன.

 

இரண்டே நாட்கள் என்றாலும்.. அவளுக்கு பரிச்சயமானவன் அரண்! அவளுடன் இருந்திருக்கிறான்.. அதனால்தானோ என்னவோ அவள் சாத்வதனைவிட அரணையே தேடினாள்போலும்.. அவன்  நல்லவனோ கெட்டவனோ அவளறியாள். அவனை நம்பலாமா வேண்டாமா என்ற கேள்வியெல்லாம் எப்பொழுதோ அடியில் அமிழ்ந்துவிட்டன.. இன்றைய அவளது நிலையில் யாரையும் முழுமனதுடன் நம்பவும் இயலாது.. அதே சமயம் நம்பாமல் இருக்கவும் முடியாது..  அவனால் தனக்கு பெரிய தீங்கெதுவும் வந்துவிடாது என்றவளது மனம் அடித்துரைக்க அவள் மேலும் அந்த ஆராய்ச்சியில் இறங்கவில்லை.. இறங்குமளவிற்கு நேரமும் இருக்கவில்லை.

 

நல்லவனோ கெட்டவனோ.. அவன்  சேஃபா வந்தா போதும்!! என்றதே அவளின் ப்ரார்த்தனையானது.

 

உயிரும் உடலுமாய் தன்னருகில் இருந்த ஒருவனின் நலம்நாடும் சராசரி மனிதாபிமானம் இது! என்றவளின் வாதம் ஒருபுறம்.

 

ஏனோ அவளால் இந்த தாக்குதலோடு அரணை சம்பந்தப்படுத்திப் பார்க்கத் தோன்றவில்லை! இது வேறு எவருடையதோ என்று உள்ளுணர்வின் குரலுக்கு செவி சாய்த்தவளாய் அமர்ந்துவிட்டாள் அப்படியே தரையில்.

 

மரத்தளத்தின் குளுமை அவளின் ஃப்ராக்கினுள் அடங்கியிராத கால்கள் உணரவே நிகழ் உலகிற்கு வந்தாள்.

 

விழித்துக்கொண்டவளின் நினைவில் முதலில் வந்தது சாத்வதனே! அவன் தன்னை சாப்பிட அழைத்தது நினைவில் வர அடுத்த கணம் படியில் இறங்கிக் கொண்டிருந்தாள் அவள்.

 

டேபிளில் தனக்காக காத்திருந்த சாலடில் அவள் கவனம் பதிய கைகளிரண்டையும் க்ளௌஸ் தழுவியிருக்க ஆவிப்பறக்கும்  சூப் பௌல் ஒன்றுடன் அடுக்களையில் இருந்து வெளிப்பட்டான் சாத்வதன்.

 

“ஆறிடுச்சு. அதான் ஹீட் செஞ்சேன்..” என்றான் மெலிதாய் புன்னகைத்து.

 

தான் கீழிறங்குவதை பார்த்துவிட்டு அவன் அதை ரீஹீட் செய்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்தவளோ..

 

“தாங்க்ஸ் ஃபார் தி டின்னர் வதன்!!” என்றாள் நன்றிப்புன்னகையுடன்.

 

“ப்ளஷர் இஸ் மைன்!” என்றுவிட்டு அவன் அகன்றுவிட தன்னைப் பார்த்து சிரிக்கும் ப்ராக்கொலியில் கவனமானாள் ஆஹிரி,

 

“இப்போதைக்கு இதுதான் இருந்தது ஆஹிரி” என்ற வதனிடம் தலையசைத்தவளாய்.

 

பசி தீர்ந்தப் பின்னர் இன்னும் சற்று தெளிவு பிறந்திருப்பதாய் உணர்ந்தாள் ஆஹிரி.

 

அரைகொறை பசியும் அதிகப்படியான உணவும் மூளையின் செயலை மழுங்கடித்துவிடக்கூடும் என்பதில் அவளுக்கு நம்பிக்கை அதிகம். அளவான உணவே தெளிவான மனம் என்பதில் நம்பிக்கை உடையவளுக்கு உணவு உள்ளேச் சென்றதில் உள்ளம் லேசாகியது.

 

சாப்பிட்டப்பின் சற்று ஒதுங்க வைத்தவள் பின் படியேறினாள் தனதறைக்கு. சாத்வதன் எப்பொழுதோ மாயமாகியிருந்தான் அவனறையினுள்.

 

வெளியே காரிருள் சூழ்ந்திருந்தது சிறு கீற்றாய் நிலவொளியே பரவலாய்..!!

 

அந்த கௌச்சில் சாய்ந்தமர்ந்தவளாய் அவ்வறையில் உத்தரமும் சுவரும் இணையும் இடத்தில் இரண்டிற்குமிடையில் அகண்ட பாலமாய்  செவ்வக வடிவில் அமைக்கப்பட்டிருந்த அந்த கண்ணாடியில் பட்டுத் தெறித்த நிலவின் பிம்பத்தையே வெறித்திருந்தாள்.

 

ஏதேதோ சிந்தனைகள்.. ஒன்றோடு ஒன்று ஒட்டாமல்.. அதை எதையுமே நினையாதவளாய் நிலவில் மட்டுமே கவனம் நிறைந்தவளாய்..!!

 

வளர்கிறதா இல்லை தேய்கிறதா என்று தெரியாத நிலையில் நிலா.. ஆஹிரியின் இதழோரங்கள் வளைந்தன..

 

நானும் உன்ன மாதிரிதான்!! உண்மைக்கும் பொய்க்கும் நடுவில.. எது எதுனு புரியாம..

 

கனவில் இருந்து கலைந்தவளைப்போல நிமிர்ந்து அமர்ந்தவளின் மனம் உந்தித்தள்ள மனதை மதித்தவளாய் அவ்வறையில் இருந்த டட்ச் விண்டோவிடம் விரைந்தாள்.

 

பனிக்காற்றில் வெண்மை பூசியிருந்த சன்னலை தன் பார்வைக்காய் கையால் துடைத்துப் பார்க்க அவள் பார்வை கூர்மையானது தூரத்தில் தெரிந்த உருவத்தில்.

 

அவள் நினைத்ததுபோல அவ்வுருவம் அரணே!! அது அவன் அந்த கதவை அனாயாசமாய் திறந்து உள்ளே நுழைந்ததிலேயே தெரிந்துவிட  அவன் அவள் பார்வையில் இருந்து மறைந்த மறுகணமே அவளும் விறுவிறுவென வெளியேறியிருந்தாள் அவ்வறையில் இருந்து.

 

அரண் லிவ்விங் ஏரியாவினுள் நுழையவும் இவள் கடைசிப்படியை கடக்கவும் சரியாய் இருந்தது. இவளைக் கண்டுக்கொண்டவனாய் ஆறுதல் புன்னகையொன்றை அவன் வீச அவளோ அந்த புன்னகையில் ஆசுவாசமாய்..

 

“இஸ் எவ்ரிதிங் ஓகே பேபி??” என்று பழைய பாணியில் தொடங்கியவனை சிறு தலையசைப்புடன் எதிர்கொண்டவள்,

 

“என்னாச்சு அரண்?? உனக்கு ஒன்னும் இல்லையே?!” என்று விசாரித்தாள் உண்மையான கரிசனத்துடன்.

 

அதை அவனும் உணர்ந்தேதான் இருந்தான்.

 

“ம்ம்ம்..”என்று தலையசைத்தவனோ பார்வையால் மற்றவனை தேடியவனாக, “உள்ள போலாம்..” என்றுவிட்டு நடக்க அவனுடன் நடந்தவளாய்..

 

“வதன்.. அவங்க ரூம்ல இருக்காங்க” என்றாள்

 

“ம்ம்” சின்னத்தலையசைப்புடன் நடையை தொடர்ந்தான் மற்றவன்.

 

ஏதேதோ சிந்தனைகள் சூழ நடந்தவளின் கவனம் பாதையில் இல்லாமல் போக ஒரு நொடி கார்பெட்டில் கால் தடுக்கி விழ இருந்தவள் சுதாரித்தவளாய் அவன் கையைப்பிடிக்க அவனும் அவளைத்தான் பிடிக்க முயன்றான். ஆனால் அவள் அவன் முழங்கையை பற்றிய கணம் அவன் முகம் பிரதிபலித்த வலியுணர்வை.. வெகு சில நொடிகளே என்றாலும் அதை அவள் கண்டுவிட்டாள் என்பது அடுத்து அவள் செய்த்ததிலேயே தெரிந்தது.

 

“என்னாச்சு? கைல..” என்றவள் அவன் ஓவர்கோட்டின் கைப்பகுதியை உயர்த்தும் முயற்சியில்.

 

அதை உணர்ந்தவனோ, “ஒன்னுமில்ல ஆரிமா! சின்ன காயம்தான்” என்று சொல்லிக்கொண்டேப்போக அப்பொழுதே அவன் கவனத்திலும் பதிந்தது முழங்கைப்பகுதியில் கிழிந்திருந்தது.

 

ஆஹிரியின் பார்வை அதில் படிந்து விழிகளிரண்டும் அதிர்ந்து விரிய அரண் தனது ஓவர்கோட்டை கழட்டியிருந்தான். முழங்கையிற்கும் கொஞ்சம்  கீழே இருந்த காயம் அவ்வளவு ஆழமானதாய் இல்லாவிட்டாலும் இரத்தக்கசிவு அதிகமாய்த்தான் இருந்தது.

 

“வதன்!!! சாத்வதன்!!” என்று தனதறையின் கதவை படபடப்பாய் தட்டிக்கொண்டிருப்பது ஆஹிரி என்று புரிந்துவிட அவளது பதட்டத்தின் காரணம் புரியாதவனாய் கதவை திறந்திருந்தான் சாத்வதன் குழப்பப்பார்வையுடன்.

 

“என்னாச்சு ஆஹிரி?”

 

“அரணுக்கு.. ஹீ இஸ் ப்ளீடிங் வதன்!! கொஞ்சம் சீக்கிரம் வாங்களேன்!” என்றாள் அதே படபடப்புடன். அவளது வார்த்தைகளில் அதிர்ந்தவனாய்

 

“இதோ வர்றேன்!” என்றுவிட்டு உள்ளே சென்றவன் பின் அவளுடன் அரணின் அறை நோக்கி நடந்தான்.

 

படபடப்பாய் அறையினுள் நுழைந்தவர்களை கண்டவனோ வாய்திறக்க அதற்கு முன்பே அவனை இறுக்கி அணைத்திருந்தான் சாத்வதன்.

 

“அச்சு!” என்று அணைத்திருந்த வதன் நொடியில் தன்னிலை மீண்டவனாய் விலகியிருந்தான்.

 

“என்னாச்சுடா?” என்றவாரே சாத்வதன் அரணின் கையை ஆராய்ந்தான்.

 

“நத்திங் சீரியஸ்! ஆரிதான் அவசரப்பட்டு உன்ன எழுப்பிட்டா..” என்றவன் சொல்லிக்கொண்டிருக்க வதனோ..

 

“தூங்கினாதான எழுப்ப!?” என்றான் கசந்த முறுவலுடன்.

 

அதில் அமைதிகாத்த அரணின் பார்வை ஆஹிரியில் நிலைக்க அவன் புறுவங்களிரண்டின் நடுவிலும் சிறு முடிச்சு ஒன்று தோன்றி பின் அதுவே அதிர்வாய் மாறியது.. மற்றவளின் முகம் வெளுத்தவிதத்தில்.

 

சாத்வதன் அரணின் கையை திருப்பி பார்த்தபடியிருக்க அவள் முகமோ கொஞ்சம் கொஞ்சமாய் மாறிக்கொண்டிருந்தது.

“ஆரி..ஆரி?” என்ற அரணின் அழைப்புக்கு பதிலில்லாமல் போக சாத்வதனோ அவள் தோள்தொட அதற்கும் பயணில்லாமல் போகவே சற்று வேகமாய் அசைத்திருந்தான்.

 

பட்டென கலைந்தவளாய்.. அரணின் காயத்திலிருந்து அவள் பார்வை விலகிட சாத்வதனோ,

 

“இஸ் எவ்ரிதிங் ஓகே ஆஹிரி?” என்றான் கேள்வியாய்.

 

மறுப்பாய் தலையசைத்தவளோ “எனக்கு ஒரு மாதிரியிருக்கு!” என்றவள் பின் “நான் வெளிய இருக்கேன்” என்றுவிட்டு எழ சாத்வதனோ “இரத்தத்த பார்த்தா சிலருக்கு தலைசுத்தற ஃபீல் வரும் ஆஹிரி” என்க அவளோ அதை தலையசைத்து ஏற்றவளாய் வெளியேறினாள்.

 

“ரப்பிஷ்!” என்ற அரணின் குரலில் சாத்வதன் அவன்புறம் திரும்பிட அவனோ, “பதினெட்டு வயசில இருந்து அவ டோனர்! ரெகுலரா ப்ளட் டொனேட் பண்ற ஆள்! அவளுக்கெப்படி..” என்றவன் சொல்லிக்கொண்டிருக்க அரண் உரைத்த விஷயத்தில் வதனுள் பல கேள்விகள் எழுந்தது. அதையெல்லாம் தற்சமயத்திற்கு நிறுத்தி வைத்தவனாய்..

 

“நிறையவே தெரிஞ்சு வச்சிருக்க..” என்றான் இதழ்கள் இரண்டும் ஏளனமாய் வளைய..

 

“நீ நிறைய மறைச்சு வச்சிருக்கியே..” என்ற அரணின் குரலும் அதே தொனியில் ஒலிக்க அதற்குமேல் அங்கு மௌனத்தின்  ஆட்சியே!!

 

தன் வேலையை செவ்வனே செய்தவனாய் எழுந்துக்கொண்ட சாத்வதன், “டின்னர் டேபிள்-ல இருக்கு.. டேக் கேர்டா!!” என்று வெளியேறினான்.

 

அவன் வெளியேறிய சில மணித்துளிகளிலேயே ஆஹிரி உள்ளே நுழைந்தாள். முந்தைய சம்பவத்தின் சாயல் கொஞ்சமுமின்றி மிக சாதாரணமாய்..!!

 

அவன் கை கட்டில் அவள் பார்வை பதிய அவனோ, “உக்காரு ஆரி..” என்றான்

 

தலையசைத்து மறுத்தவளோ, “சாப்பிடலையா?” என்றாள் கேள்வியாய்.

 

“சாப்பிடலாம்! இப்போ உக்காரு உன்கிட்ட கொஞ்சம் பேசனும்!” என்றவனின் கண்சிமிட்டலைக் கண்டவளோ “ஆஹான்!?” என்றவளாய் அவனுக்கு நேரெதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.

 

“ஸோ.. அரண்..ம்ம்??” என்றவளின் கேள்விக்கு

 

“யெஸ்” என்றான் அவன்.

 

“அப்போ அரண் க்ரூப் ஆஃப் கம்.. அதெப்படி?..” என்றவளின் குழப்ப பார்வைக்கு அவனோ வெகு இயல்பாய் இருக்கையில் சாய்ந்தமர்ந்தவனாய்

 

“இல்லாத ஒருத்தர..இருக்கறதா காட்றதும்..இருக்கறவங்களோட அடையாளத்த தடையமே இல்லாம அழிக்கறதும்.. ஒன்னும் அவ்வளோ கஷ்டமில்ல பேபி..” என்றான் வலது புருவம் மேலேறிட..

 

அதற்கு மறுப்பாய் அசைந்தது அவளது தலை. இடவலமாய் தலையசைத்தவள் நிமிர்ந்தமர்ந்தாள். ஏதோ ஒன்று உள்ளுக்குள் உறுத்தியது ஆனால் இன்னதென்று வரையறுக்க முடியவில்லை.

 

“உனக்கு இந்த கொலுசுன்னா ரொம்ப இஷ்டம்ல ஆரி??” என்றவனின் வார்த்தையும் அவனது கைகளில் மின்னிய அவளது கொலுசும்.. குப்பென உள்ளெழுந்த உணர்விற்கு எப்பெயரை சூட்டுவதென்று புரியாமல் நின்றாள் அவள்.

 

எல்லாம் சிலக்கணங்களே!.. வெகு சில மணித்துளிகளில் தன்னுணர்வு மீண்டிருந்தவளோ மறுப்பாய் தலையசைத்து..

 

“எனக்கு இப்போ உண்மைதான் ரொம்ப இஷ்டம் அரண்..” என்றாள் அர்த்தமாய் புன்னகைத்து.

 

மறுப்பாய் அவன் தலையசைந்தது..

 

“அரைகொற ஞானம் எப்பவுமே ஆபத்து ஆரி!!” என்றான் அவளைப்போலவே இதழோர வளைவுடன்.

 

நீண்டிருந்த அவன் கையின் விரல்களை உள்நோக்கி மடக்கியவள் அதை அவன்புறம் நகர்த்தி..

 

“எனக்கு என்மேல நம்பிக்கை அதிகம் அரண்!!” என்றாள்  அதே அழுத்தமான புன்னகையுடன்.. அதில் ‘முழுமனதாய் இதை பெறுவேன்!!’ என்ற அர்த்தம் ஒழிந்துக்கிடப்பதை அவனும் அறிவான்.

 

அதன் விளைவாய் உதித்த சிரிப்பை இதழ்களில் படரவிட்டவனோ..

 

“ஹோப் ஸூன்!” என்று தலையசைத்தவனாய் பின்னால் நகர்ந்தான்.

 

புன்னகை சிந்தியவளாய் சாப்பாட்டை எடுத்து வந்தவளோ அதை அவனறையில் வைத்தவிட்டு வெளியேறினாள்.

 

அப்பொழுது அவளும் அறிந்திருக்கவில்லை இன்னும் சில மணிநேரங்களில் அவள் மறுபடியும் கீழே  இறங்கி வரப்போவதை..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!