Aahiri-9

WhatsApp Image 2020-08-17 at 10.30.47 AM

அத்தியாயம்-9

 

நட்சத்திர கூட்டத்தினுள்

மினுமினுப்பாய் ஒரு துளிக் காதலுடன்..

கரைந்த பின்பே விளங்கியது

நழுவியது உயிரின் பாகமென..

கணப்பொழுதில் புரண்டுபோகும் வாழ்வில்..

நிதமும் தேடலுடன்..

மணித்துளிகள் ஒவ்வொன்றையும்..

தன்னவளை கண்டுவிடும் தவிப்பில் கடக்கிறான்..

ஒதுக்கவியலாத குற்ற உணர்வுடன்..!!

 

“அம்மூவும் உன்ன மாதிரிதான் தெரியுமா? ரொம்ப நல்லவ! என் அக்கா”

ஒருவரின் பெயரை உச்சரிப்பதிலேயே அவர்கள் மீதான பிரியத்தை வெளிக்காட்டிட முடியுமா..?! என்ற ஆச்சர்யமே சாத்வதனிடம்.

 

தன்னை துஜி என்று அறிமுகம் செய்துக்கொண்டவளின் வார்த்தைகளினால் ஏற்ப்பட்ட உணர்வது!

பார்த்தறியாத அந்த அம்முவின் மீது தனியார்வமே கிளம்பியது விழிகளிரண்டும் வானவில்லாய் விரிய இதழோர வளைவின் மென்மையும் தாமாய் வந்து தொற்றிக்கொண்டதைப்போல மலர்ந்து மகிழ்ந்திருந்தவளின் முகத்தையும் காண.. கை காயமெல்லாம் சில நொடிகளுக்கு அவளது உணர்விலேயே இல்லைபோலும்.. சுருக்கென அடுத்த வலி வரும்வரை!

 

ப்ச்! என்ற மெலிந்த ஒலியுடன் மிக மெலிதாய் சுருங்கியது அவளது  புருவமத்தியில்.. வலியினால் வந்துச் சென்ற சுருக்கமென்றதை அவனுள்ளம் உணர்த்திட நடையின் வேகத்தை கூட்டினான்.

 

சாத்வதனது நடையின் வேகம் கூடியிருக்க அதை துளஜாவோ வெகு தாமதமாகவே கவனித்தாள்.. அவனுக்கும் அவளுக்குமிடையில் விழுந்துவிட்ட ஐந்தடி தொலைவில்.

 

“சாத்வா.. சாத்வா! கொஞ்சம் மெல்ல நடயேன்..” என்று சிறு மூச்சுவாங்கலுடனான குட்டி ஓட்டத்துடன்  தன்னருகில் நடந்து வந்தவளின் செயலில் தாமாய் விரியத்துடித்த புன்னகையை கட்டுப்படுத்தவெல்லாம் அவன் கனவிலும் நினைத்தானில்லை! சுதந்திரப்பறவையாய் புன்சிரிப்பொன்று அவனிதழில்..!!

 

மொத்தமாய் இல்லையென்றாலும் ஓரளவு வேகத்தை குறைத்திருந்தான்.

 

நினைவு வந்தவனாய் தலையை மட்டும் அவள் புறம் திருப்பியவன், “என்ன உனக்கு முன்னாடியே தெரியுமா?” என்று வினவிய கணம் மற்றவளின் முகம் பிரதிபலித்த பாவத்தை என்னவென்று அவனால் பிரித்தறிய முடியாவிட்டாலும்.. பிடித்திருந்தது.. இரசிக்கத்தான் செய்தான் அவளது விழி தீட்டும் பாவங்களனைத்தையும்.

 

“தெரியுமே!” என்றவளின் குரல் உற்சாகத்தின் பிடியில்.

 

“எப்படி??!” இப்பொழுது அவனையும் தொற்றிக்கொண்டது இனம்புரியாத படபடப்பும் ஆர்வமும்.

 

“நீ டூலிப்ஸ்க்கு வருவேல..?”என்றவளின் ராகத்திற்கேற்ப அவனும் “ஆமா..” என்றான்.

 

‘இவளை அங்கே பார்த்திருக்கிறோமா?’ என்றவனது மூளை அளவுக்கு அதிகமாகவே உழைத்தது.

பார்த்ததாய் அவன் நினைவில் இல்லை!

 

‘இது என்னதிது? இவள முதல் தடவ பார்க்கிறப்போலவுமில்ல! ஆனா.. அதே சமயம் ஏற்கனவே பார்த்த ஞாபகமும் இல்ல..’

 

டூலிப்ஸ்..

 

நேற்று துளிர்த்த தளிரிலிருந்து சிறுவர் சிறுமியர் மட்டுமின்றி வயது முதிர்ந்தும் பிள்ளைகளாய் அன்புக்கும் அரவணைப்பிற்கும் மட்டுமே ஏங்கும் சராசரி உணர்வுகளின் பிடியில் சிக்கியிருக்கும் மனிதர்கள்!!

 

சிலரை ஒதுக்கினரென்றால் சிலர் தாமாகவே ஒதுங்கிவிட்டவர்கள்.. ஒருபுறம் பிள்ளைகளற்ற முதியவர்களென்றால் மறுபுறம் தாய் தந்தையின் ஸ்பரிசத்திற்கு ஏங்கும் குழந்தைகள்.. விருப்பத்துடன் சிலர்.. விருப்பமின்றி பலரென தனிமையின் ஆக்கிரமிப்பில் தவித்தவர்களை இருக்கரம் நீட்டி அணைத்திருந்தது  ‘டூலிப்ஸ்’

 

இங்கு யாருமே யாருக்கும் அந்நியரில்லை.. அன்பெனும் அற்புதம் துளிர்த்துவிட்டால்.

 

வாழ்க்கையை அதன்போக்கில் வாழ கற்றுக்கொண்டனர்.. வலியில்லாமல் இல்லை நினைவுகளினால்..அச்சூழலுக்கு பழகிவிடுவர் எவராயினும்!

 

மற்றவர்களின் பார்வையில் எப்படியோ! ஆனால் சாத்வதனுக்கு அது சொர்க்கலோகம்!! இப்புவியில் அவன் காணும் சொர்க்கம் டூலிப்ஸ்! டாக்டராக அவனது  விஸிட்டைவிட சாத்வதனாய் கிடைத்த நேரத்திலெல்லாம் அங்குதான் அவன்.

 

அங்குள்ள அனைவரையும் அவனுக்குத் தெரியும். அனைவருக்கும் அவனையும் நன்றாகவே தெரியும். அப்படியிருக்கையில்..

 

“நான் உன்ன அங்க பாத்ததில்லையே..” என்று கேள்வியாய் இழுத்தவனை தடுத்தது அவளது தலையாட்டல்.

 

மறுப்பாய் தலையசைத்தவளோ, “அங்க இல்ல! டூலிப்ஸ்க்கு பக்கத்து காட்டேஜ்!” என்றிருந்தாள்.

 

டூலிப்ஸின் வலப்பக்கத்தில் பரந்த நிலமும் உயர்ந்த கட்டிடமுமாய் நிற்கும் அந்த வீட்டை அவன் பார்த்திருக்கிறான்தான். ஆனால் அதிகம் கவனித்ததில்லை.

 

“ஓ.. ஓகே!” என்றவன் பின்

 

“நாம பாத்திருக்கோமா?” என்று கேட்க

 

“ப்ச் பச்! நான் பாத்துருக்கேன்” இடவலமாய் தலையாட்டியவளாய் அவள் சொல்லிக் கொண்டிருக்க அதற்குள் க்ளீனிக்கை நெருங்கியிருந்தனர் இருவரும்.

 

அவளை உள்ளே அழைத்துச் சென்றவனோ காயத்தை கவனித்தவனாய் கேள்வியெழுப்பியிருந்தான்.

 

“எப்படி?”

 

“லஹரி” என்றவளின் புன்னகை அவனையும் தொற்றிக் கொண்டது.

 

“ஒட்டு கேட்டியா?” என்றவனுக்கு விரியத்துடித்த புன்னகையை மறைப்பது சற்று கடினமாய்த்தான் இருந்ததுபோலும். முதல் முறை சந்தித்து பேசுபவளிடம் ஏன் இத்தனை உரிமையாய் பேசுகிறோம் என்று அவனுக்கும் புரியவில்லை.. இருந்தும் அவளுடனான பேச்சில் ஒன்றிவிட்டான்.

 

“இல்லையே..” என்று அவள் இழுத்த விதமே சொல்லியது அவள் அனைத்தையும் கேட்டிருக்கிறாளென..

 

“ஓய்..” என்று சாத்வதன் கேலியும் கேள்வியுமாய் இழுக்க அவளோ,

 

“சீரியஸ்லி!! சாத்வா.. நாங்கல்லாம் விளையாடிட்டிருந்தோமா.. ஹைட் அண்ட் ஸீக். நான் அங்கதான் ஒளிஞ்சிட்டிருந்தேன். அந்த காம்பௌண்ட் ஸைட்..” என்று சொல்லிக் கொண்டிருந்தவளின் பாவனையில் அடக்கி வைத்திருந்த புன்னகை விரிந்தது.

 

“லக்கிக்கு என்னவாச்சு?” என்ற கேள்வியுடனே அந்த லானின் வெள்ளை நிற இருக்கையில் வானை நோக்கி வெளிப்புறம் பார்த்தென திரும்பி அமர்ந்திருந்த லக்கியென்று அவர்களால் அழைக்கப்படும் லஹரியிடம் வந்தான் சாத்வதன்.

 

எப்பொழுதும் உள்ளே நுழையும்பொழுதே “வதுண்ணா!” என்றோடி வரும் லக்கி இன்று வெகு நேரமாகியும் வராமல் போக முதலில் விளையாடுகிறாள்போலும் என்று நினைத்திருந்தவன் அவள் மற்ற பிள்ளைகளுடனும் இல்லாமல் போகவே தேடியவனாய் அங்கு வந்திருந்தான்.

 

அவள் அமர்ந்திருந்த விதமே சொல்லியது எதுவோ சரியில்லை என.

 

இவன் வந்தும் அவள் திரும்பாமல்போக குழம்பியவனோ அவள் முன் வந்து மண்டியிட்டமர்ந்த நொடி உள்ளம் பதறியது லஹரியின் ஓசையற்ற கண்ணீரில்.

 

“என்னாச்சுமா?” என்றவன் கேட்டதுதான் தாமதம் அடுத்த நொடியே அப்படியே வாகாய் அமர்ந்திருந்தவனின் கழுத்தை கட்டியிருந்தாள் விசும்பலுடன்.

 

என்னவென்று காரணம் தெரிந்திராவிட்டாலும் ஒரு கை அவள் முதுகை ஆதரவாய் வருடியதென்றால் அவனோ.. “இங்கப்பாரு.. “ என்றவள் முகம் பார்க்க முயன்றவனாய்..

 

“அண்ணாட்ட சொல்லக்கூடாதா?.. எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம்டா” என்க லஹரியோ கண்களை துடைத்தவளாய் புன்னகைக்க முயன்று தோல்வியை தழுவினாள்.

 

“என்னடா..?” என்றான் அந்தக் குரலில் பெயருக்கும் அதட்டலோ அழுத்தமோ இல்லை. அத்தனை இதமாய் ஒலித்த குரலில்  ஒளிந்திருந்த இடத்திலிருந்து எழுந்து லஹரியிடம் செல்லத்துடித்த மனதை மாற்றிக்கொண்டாள் துளஜா.

 

உள்ளங்கையால் கண்களை அழுந்த துடைத்தவள், “ஸ்க்..ஸ்கூல்ல..கி..கிண்டல் பண்றா..ங்கண்ணா” திணறலாய் வந்து விழுந்தன வார்த்தைகள் ஒவ்வொன்றும்.

 

இயல்பிலேயே பேசும்பொழுது சற்று திணறினாலும் இந்த திணறல் அதிகப்படியான அழுத்தத்தினாலென அவனுக்கும் புரியவே செய்தது.

 

“ஏண்டா? என்னாச்சு?” என்றவனின் கேள்விக்கு கிடைத்த பதிலில் அவனுக்கே ஒருமாதிரியாகிப்போனது.

 

வகுப்புகளுக்கிடையேயான போட்டிகளுக்கு பெயரெடுத்தப்பொழுது பாட்டு போட்டியிற்கு லஹரி என்று கத்தியதும் அதற்கு மற்ற சிலர் சிரித்ததுமே இந்த அழுகையின் தொடக்கமென்று தெரிய வந்தப்பொழுது சாத்வதனுக்குமே வலிக்கத்தான் செய்தது.

 

செய்தவர்களும் சிறுபிள்ளைகளே! அதன் வீரியம் தெரிந்திருக்கவில்லையோ? இல்லை உணர்ந்தும் செய்தார்களோ.. அந்நொடி வெறும் கேலியென அவர்கள் எண்ணியது அடுத்தவருக்கு எத்தனை வலியைக் கொடுக்ககூடும் என அறியவில்லைப்போலும்..

 

“நான் அசி..ங்கமா வ..வதுண்ணா?” என்ற சிறியவளின் கேள்வியில் பேச்சற்று விழித்தவனின் உள்ளத்தில் போர்க்களமே வெடித்தது.

 

“ஏண்டா இப்படியெல்லாம் பேசற? நீ எவ்ளோ அழகு தெரியுமா?”

 

“அப்பற..ம் ஏன் என்..னை சே..சேத்துக்கல ஸ்ஸ்..ஸ்கிட்ல?” புரிந்துவிட்டது சாத்வதனுக்கு என்ன நடந்திருக்ககூடுமென..

 

பெருமூச்சொன்றை இழுத்துவிட்டவனாய்..

“உன் ஃபேவ்ரெட் கலரென்ன?” என்றான் சம்பந்தமின்றி

 

“பீச்” என்றவளின் பதிலில் முகம் சுழித்தவனோ..

 

“அய்யே! வ்வேக்!! அதெல்லாம் கலரா?” என்ற சாத்வதனின் முகம் அஷ்டகோணலாக லஹரியோ..

 

“ஏ..ஏன்? என..க்கு பிடிக்குமே!” என்க சட்டென தனது பாவத்தை மாற்றியவனோ..

 

“பாத்தீயா?!!” என்றபடி அந்த பெஞ்சின் மேல் ஏறியமர்ந்தான்.

 

என்னவென்பதாய் அவள் விழிக்க அவனோ.. “உனக்கு அழகுனு தோணறது எனக்கு தோணாது லக்கி.. அதே போலதான்! இங்க யாருமே அசிங்கம் கிடையாது! பாக்கறவங்க பார்வைதான்!!” என்றவன் அவள் முகம் மாறாமல் இருப்பதைக் கண்டு..

 

“உனக்கு சைனீஸ் ஃபுட்  பிடிக்கும்ல?” என்றான் கேள்வியாய் அவளும் ஆமென தலையாட்ட

 

“இனி லைஃப் முழுக்க அதான் சாப்பிடனும்னா?” என்றவன் முடித்திருக்ககூட இல்லை

 

லஹரியின் முகம் மாறியதில்.. “அதே மாதிரிதான்டா! எல்லாமே ஒன்னுபோல இருந்தா நல்லாவா இருக்கும்? சொல்லு.. அதனாலதான் கடவுள் எல்லா மனுஷங்களையும் வேற வேற மாதிரி யுனிக்கா க்ரியேட் செஞ்சிருக்காங்க!

நம்மள நாமளே அக்ஸப்ட் செய்யலன்னா எப்படி லக்கிமா?” என்றவன் பின் சிந்தனையாய்..

 

“ட்ராயிங் காம்படிஷன்ல கலந்துக்கறல?” என்றிழுக்க மற்றவளின் முகத்திலோ கலக்கமொன்று எட்டிப்பார்த்து.

 

“லைஃப் குட்டி ஸ்ட்ரீம் மாதிரி லக்கி.. ஓடிட்டே இருக்கனும் இவங்கல்லாம் கேலி செய்றாங்கனு அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்காம விட்டுட்டா தேங்கிடுவோம்டா!”

 

லஹரியின் முகம் தெளிவாக சாத்வதனோ அவளது சின்ன சிரிப்பைக் கண்டவனாய்.. “என் தங்கச்சியா இருந்துட்டு இதுக்கெல்லாமா கலங்குவ!? சர்தான் போங்கடா நான் சாத்வதன் தங்கச்சிடானு!! வர வேண்டாமா?” என்று தீவிரமாய் சொல்லிக் கொண்டிருக்க பக்கென சிரித்துவிட்டவள் அவனைப்போலவே  அணிந்திருந்த போலோவின் காலரை தூக்கிவிட இம்முறை இருவரின் சிரிப்பு சத்தமும் அவ்விடத்தை நிரப்பியிருந்தது.

 

சாத்வதனை இறுக்கமாய் ஒருமுறை கட்டியணைத்து விடுவித்தவளாய்  ஒரு தாங்க்ஸ்  அண்ணாவுடன் அவள் வாசலை நோக்கி ஓட இங்கு சாத்வதனோ..

 

“செல்லாது செல்லாது!! ஒழுங்கா என்ன வரைஞ்சு குடுத்துரு!!” என்று போலியாய் மிரட்டிவிட்டு கீழிறங்கி வாகாய் சாய்ந்திருந்தான் இருக்கையில்..

அவனறியாமலேயே அவன் தடத்தை மற்றவளின் மனதினில் பதித்து..!!

 

“ம்ம்.. போட்டாச்சு” என்றவனாய் அவன் எழுந்துக்கொள்ள துளஜாவோ கையிலிருந்த கட்டையே ஆராய்ந்தவளாய்..

 

“போலாமா?” என்றவனிடம் என்ன சொல்லவென்று தெரியாமல் அவளிருக்க அவள் விழிகளில் வழிந்தோடிய கலக்கத்தை கண்டுக்கொண்டவனாய்..

 

“என்னாச்சு துஜா?” என்று கேள்வியெழுப்ப அவளோ கொஞ்சமும் பாவனையை மாற்றாமல் அதே கலக்கத்துடன் கட்டையும் அவனையுமாய் பார்த்து..

 

“கேட்டா.. என்ன சொல்ல?” என்றாள் குழப்பத்துடன்.

 

“நடந்தத சொல்லு..” அவன் முடித்திருக்ககூட இல்லை அதை வேகமாய் தலையசைத்து மறுத்தவளோ..

 

“ம்ஹூம்! பாட்டி திட்டுவாங்க.. அப்புறம்..” என்றவள் சொல்லிக்கொண்டேப் போக அவள் கலக்கத்தின் காரணம் புரிந்துவிட்டது அவனுக்கு.  

 

“அவ்வளோதானே? நானும் வரேன் கூட” என்றுவிட  அவனையே சிந்தனையாய் ஒரு பார்வை பார்த்தவள் பின்.. “சரி..ஓகே!” என்றவளாய் உயரமாய் இருந்த பெஞ்சிலிருந்து குதித்திறங்கியிருந்தாள்.

 

முன்னே சென்றவளில் கவனம் பதித்தவனோ..”இரு! சொல்லிட்டு வந்துடறேன்” என்று வெளியில் செல்ல இருப்பதாகவும் தான் வரும்வரை கவனித்துக்கொள்ளுமாறும் அழைத்து கூறிவிட்டு  கிளம்பியிருந்தான் துளஜாவுடன்.

 

“டெய்லி வாக் போவியா?” என்றவனின் கேள்வியில்

 

“ப்ச் பச்! எப்பவாது” என்றவள் என்ன நினைத்தாளோ

 

“நீ டெய்லி போவல்ல..” என்று தொடங்கி பின் “இனி நானும் ஜாய்ன் பண்ணிக்கவா?” என்று கேட்க அவனுக்கும் இன்றைய சம்பவத்தில் அதுவே சரியெனப்பட்டது.

 

“பண்ணிக்கலாமே!” என்றான் அவளைப்போலவே. அவள் வார்த்தைகளை உச்சரிக்கும் விதம் ஏனோ வித்தியாசமாய் இருந்தது அவனுக்கு. அவள் உச்சரிக்கும்பொழுது அதில் தென்படும் ஏற்ற இறக்கங்கள் ஆகட்டும்.. இல்லை சில இடங்களில் அழுத்தமாய் ஒலிக்கும் அவளது குரலாகட்டும்.. அம்மு என்ற பெயரை அவள் அம்மூ என்றிழுப்பதும் சாத்வா என்று அவள் அவன் பெயர் உச்சரிக்கும் ஒவ்வொரு முறையும் அதில் அமிழ்ந்தான்.. அந்த உச்சரிப்பிலும்..குரலிலும்.. குரலுக்கு சொந்தக்காரியிடமும்..!!

 

“சாத்வா!!” என்றவளின் குரலில் அவன் கவனம் அவள்புறம் திரும்பவே புரிந்தது அவள் தன்னை இதோடு இரண்டாவது முறை அழைக்கிறாளென.

 

பார்வை முழுதும் எதிரில் நின்ற வீட்டில் நிலைத்திருக்க இரு கைகளாலும் அவள் பக்கத்தில் நின்றிருந்தவனின் கையைப் பற்றி இழுத்துக் கொண்டிருந்தாள்.

 

“என்னடா?” என்றவனின் குரலில் சட்டென திரும்பியவள்

 

“டென்ஷனாவாங்களோ??” என்றாள் வருத்ததுடன்

 

“ப்ச்”என்றவன் நானிருக்கேன்ல? என்பதாய் தன் கைப்பற்றியிருந்தவளின் கரத்தை அழுத்தினான் இமை மூடித்திறந்து.

 

அத்தனை நேரம் இவளுக்கென வெளியிலேயே காத்திருந்தனர்போலும். வீட்டினுள் இவர்கள் இருவரும் நுழைய முதலில் தென்பட்டது  துளஜாவின் பாட்டிதான்.

 

நவரத்தினத்தின் முகத்திலேயே தெரிந்தது அவரது பயமும் பதட்டமும். அதுவும் இவள் எத்தனை மறைத்தும் கையில் இருந்த கட்டை கண்டுவிட்டவரோ அருகில் புதியவன் ஒருவன் இருப்பதையே மறந்துவிட்டார்.

 

“எவ்ளோ நேரம்..” என்று தொடங்கிய கேள்வியோ “என்னாச்சு??!” என்று பதட்டத்தில் வந்து நின்றது.

அவரது பதட்டம் புரிந்தவனோ.. “ஒன்னுமில்லமா! சின்ன காயம்தான்! மருந்து போட்றுக்கேன்” என்ற  பின்னரே அவனை கவனித்தார்.

 

குழப்பமாய் நெற்றிச் சுருங்கினாலும் வாய் என்னவோ முதலில் வரவேற்கத்தான் செய்தது.

 

“நான் சாத்வதன். இங்கதான் பக்கத்துல க்ளீனிக் வச்சிருக்கேன். சின்ன காயம்தான்மா கொஞ்சம் ஆழமா முள்ளு கிளிச்சிருச்சு.. பயப்படரளவுக்கு ஒன்னுமில்ல..” என்றுவிட தன்னையே கேள்வியாய் பார்க்கும் துளஜாவிடம் குனிந்தவனோ

 

“இப்படி பாத்தா பாட்டி நம்ப மாட்டாங்க!” என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்.

அவளும் முகத்தை அதற்கேற்றார்போல வைத்துக்கொள்ள ரத்தினத்தால் மட்டும் ஏனோ அமைதிகாக்கவே இயலவில்லை. உள்ளம் ஏனோ படபடவென அடித்துக் கொண்டது.

 

“உங்கப்பா கேட்டா என்ன சொல்ல?” என்று  தொடங்கியவரின் கேள்விகள் பின் திட்டுக்களாய் மாற

 

“நவி..” என்ற குரல் அவரை தடுத்திருந்தது.

 

அவ்வறையினுள் நுழைந்த பெரியவரிடம் சாத்வதனின் கவனம் திரும்ப அவன் கையை தன் முழங்கையால் தட்டியவளோ “தாத்தா” என்றாள் முணுமுணுப்பாய்.

 

“இவ செஞ்சிருக்கத பாருங்க மனோ..” என்றவர் ஆரம்பிக்க மனோ என்று அவரால் அழைக்கப்பட்ட மனோஹரோ

 

“சின்னப்பிள்ளதானேமா..” என்றார் பேத்திக்காக

 

“சின்னப்பிள்ளையா இவ? இப்ப இவ அப்பா வந்து குதிக்கப்போறாரு..”

 

“நான் பாத்துக்கறேன்மா.. “ என்றுவிட ரத்தினமோ, “என்னவோ போங்க! தாத்தாக்கும் பேத்திக்கும் வேற வேலையில்ல..” என்று புலம்பியவராய் உள்ளே சென்றுவிட  மனோஹரின் கவனம் புதியவனிடம்.

 

அதை உணர்ந்தவளாய், “தாத்தா என் ஃப்ரெண்ட்” என்றிவள் அறிமுகம் செய்துவிட்டு சாத்வதனிடம் “இதோ வந்திடறேன்..” என்றுவிட்டு அவள் பாட்டியிடம் ஓடியிருந்தாள். சொல்லாமலே புரிந்தது அவனுக்கு அது சமாதனப்படலமென.

 

பெரியவரின் பார்வை தன்னில் இருப்பதை உணர்ந்தவனோ..

 

“நான் சாத்வதன்.டாக்டர், இங்க பக்கத்துலதான் க்ளீனிக் வச்சிருக்கேன்” என்ற மறுகணமே மற்றவரின் முகம் பிரகாசமானது.

 

“ஓ.. நிறையவே கேள்விபட்றுகேன்! நிறைய ஆஃபர்ஸ்.. எல்லாத்தையும் விட்டுட்டு இங்க சாதாரணமா ஒரு க்ளீனிக்! விழிப்புணர்வு முகாம்னு” என்றார் விரிந்த புன்னகையுடன்.

அதை சின்ன சிரிப்புடன் கடந்தவனை கண்டவரோ “எப்படி?” என்று கேட்க அவனோ “எப்படினு கேட்டா.. சொல்ல தெரியல.. பட் ஏன்னு கேட்டா.. இங்கதான் எனக்கு ஸாட்டிஸ்ஃபாக்ஷன் கிடைக்குது” என்றான்

 

குறுநகையொன்றுடன் இடவலமாய் தலையசைத்தவருடன் சற்று நேரம் உரையாடியவன் பின் அவரிடம் விடைபெற்றவனாய் அவ்வறையிலிருந்து  வெளியேற.

 

திடீரென யாராலோ பிடித்து  இழுக்கப்பட்டிருந்தான்.

 

அவன் அதிர்ந்து பார்க்க துளஜாதான் அவனை அந்த மாடிப்படிகளின் அடியில் பிடித்திழுத்திருந்தாள்.

 

நிம்மதி பெருமூச்சொன்றை அவன் வெளியிட அவளோ “ஷ்!!” என்றாள் அவளுதட்டில் ஒற்றை விரல் வைத்து.

 

“என்ன?” என்றவனின் குரலும் காற்றாய் வெளிவர சுற்றுமுற்றும் ஒரு முறை பார்த்தவள் பின்

 

“டாக்டர் ஃபீஸ் சொல்லவேயில்லயே?” என்றாள் கையில் கவனம் பதித்து.

 

அவனிடம் பதிலில்லாமல் போக நிமிர்ந்தவளின் பார்வை அவனிடம் கேள்வியாய் உயர்ந்தது.

 

“ஃபீஸ் வேண்டாம்” என்றுவிட

 

அவளோ, “அப்பறம்?” என்றாள் குழப்பத்துடன்.

 

அவள் மூக்கை பிடித்து லேசாய் ஆட்டியவனோ, “அதுக்கு பதிலா அடுத்த தடவ ஹைட் அண்ட் ஸீக்ல சேத்துக்கோ!” என்றுவிட்டு சென்றிருந்தான்.

 

அன்று தொடங்கியதுதான். சின்னச் சின்ன கேலி கிண்டல்களும்.. சிரிப்புச் சத்தங்களும்.. இரசனை பரிமாற்றங்களுமென அழகிய நீரோடையாய் சென்றுக்கொண்டிருந்தன நாட்கள்.. அதில் முதல் தடையாய் அந்த விபத்து நிகழும்வரை..!!

 

கிடைத்த நேரத்திலெல்லாம் டூலிப்ஸுக்கு வந்துக் கொண்டிருந்த சாத்வதனோ இப்பொழுதெல்லாம் நேரத்தை ஏற்படுத்தியவனாய் அங்கு வந்துக் கொண்டிருந்தான். கல்லூரி நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்கள் அனைத்தும் துளஜாவிற்கு டூலிப்ஸிலேயே கழிந்தது என்பதே உண்மை.

 

அன்றும் அப்படிதான். இருவரும் தங்களது வழக்கமான  வாக்கை தொடங்கியிருந்தனர். வெகு தூரம் வந்துவிட்டதை உணர்ந்த சாத்வதன்  திரும்பிச் செல்லலாம் என்றிருந்தான்.

 

வாட்சையும் வானையும் பார்த்தவனோ அவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்தவள் திடீரென மௌனமாகியிருக்க, “ என்னாச்..”

 

“ஷ்!” என்று தடுத்தவள்  பின் மெல்ல  அங்க பாரு! என்பதாய் கை நீட்ட அவள் கை நீண்டிருந்த திசையில் பார்த்தவனின் இதழ்களோ தாமாய் மலர்ந்தன.

 

பிறந்து சில நாட்களே ஆன பூனைக்குட்டியொன்றைக் கண்டு. சுற்றிலும் அதன் அம்மாவை காணவில்லை. இவர்கள் நின்றிருந்ததோ வளைந்து செல்லும் சாலையில். வலப்பக்கம் நிலமென்றால் இடப்பக்கமோ பள்ளம். ஆபத்தான பகுதியும்கூட! அதுவும் இவர்கள் நின்றது வளைவில். பக்கவாட்டில் வளைந்துச் சென்ற சாலையில் அந்த பூனைக்குட்டி தென்பட ஏனோ அதை அங்கு விட்டுச் செல்ல மனமில்லை இருவருக்கும்.

 

“இரு வரேன்!” என்றவன் மெல்ல அடியெடுத்து வைத்தவனாய் பூனையிடம் நெருங்கிக் கொண்டிருந்தான்.

 

திடீரென மனம் ஏனோ படபடவென அடித்துக் கொண்டது. எதனால்? தெரியவில்லை. இருந்தும் நின்றுவிட்டவனின் பார்வை சுற்றத்தில் கவனமாய் படிய  உள்ளத்தை உறைய வைத்தது அவன் கண்ட காட்சி.

 

துளஜாவின் பின் வேகமாய் வந்துக் கொண்டிருந்த கார் அது!! ட்ரைவர் ஸீட் வேறு காலியாய்..

 

நொடிப்பொழுதில் அவளிடம் பாய்ந்தவன் அவளையும் தன்னோடு சேர்த்து இழுத்துக் கொள்ள  கட்டுபாடின்றி அந்த வாகனம் பள்ளத்தாக்கில் சரியத்தொடங்கியது.

 

இவன் இழுத்திருக்காவிட்டால் நிச்சயம் அது துஜியையும் சேர்த்து தள்ளியிருக்கும் என்பதில் அவனுக்கு துளியளவும் சந்தேகம் இருக்கவில்லை.

 

நொடிப்பொழுதில் நடந்துவிட்டதில் அதிர்ந்து நின்றவளோ பின் தன்னை ஆதரவாய் அணைத்திருந்தவனை பயத்தில் இறுக்கியிருந்தாள். விழிகளிரண்டும் ஏனோ பள்ளத்தில் இருந்து அகல மறுத்தது.

 

உள்ளே யாரும் இல்லாததாலோ.. யாருக்கும் காயப்படாததாலோ.. அந்த விபத்தொன்னும்  பெரிய விஷயமாகவில்லை. சாதாரண விபத்தாகவே பார்க்கப்பட்டது சாத்வதனை தவிர்த்து.

 

உள்ளுக்குள் முணுமுணுப்பாய் உறுத்திக் கொண்டிருந்தது  அவனுக்கு.

ஏனெனில் அந்த காரை கடந்துதான் வந்திருந்தனர் இருவரும். காருக்கடியில் கல்லை வைத்து முட்டுக் கொடுத்திருந்ததாகத்தான் அவனுக்கு நினைவிருந்தது. அப்படியிருக்கையில் திடீரென எப்படி கல் உருளும்? அப்பொழுது சிறு பொறியாய் இருந்தததோ துஜா இனி இல்லை என்று மற்றவர்கள்  சொல்லிக் கேட்டதும் காட்டுத்தீயாய் பற்றியது.

 

‘ச்சே! அப்பவே அத சீரியஸா எடுத்திருக்கனும்!!’ என்றெண்ணியவனுக்கு இப்பொழுதும் உள்ளம் அவனையே குத்திக் கொன்றது குற்ற உணர்வில்.

 

வானில் நட்சத்திரக் கூட்டத்தில் தொலைந்துப்போவதாய் ஓரெண்ணம்..

 

“இங்க என்ன பண்ற?” என்றவனின் குரலில் ஒரு நொடி அதிர்ந்தவளோ பின் சாத்வதன்தான் என்று உணர்ந்து..

 

“எனக்கு அங்க போனும்..” என்றாள் அவள் வீட்டின் மேற்கூரையை சுட்டிக்காடியவளாய்.

 

அன்று டூலிப்ஸிற்கு வந்திருந்தவன் கிளம்பவே சற்று தாமதமாகியிருந்தது. தோட்டத்துப் பக்கமாய் வந்தவனின் பார்வையில்தான்  அவள் விழுந்தாள்.

 

அவள் வீட்டுத் தோட்டத்தில்.. அதாவது அவன் நின்றிருந்த இடத்திலிருந்து ஒரு குட்டி வேலிக்கு அந்த பக்கத்தில் சற்று தள்ளியிருந்த பெஞ்சில் அமர்ந்து வானை வெறித்திருந்தாள்.

அவளது குரலில், அந்த குட்டி வேலியை தாண்டிக் குதித்தவனோ அவளிடம் சென்றிருந்தான்.

 

அமர்ந்திருந்தவளின் கைப்பற்றியவனாக, “வா” என்றழைக்க அவள்தான் நம்ப முடியாமல் பார்த்திருந்தாள் “உண்மையாவா?” என்று.

 

ஆமா என்பதாய் அவன் தலையசைக்க அவளும் எழுந்துக்கொண்டாள். அவளிடம் வீட்டின் உள் வழியாய் சென்று அவள் அறை பால்கனிக்கு வரும்படி உரைத்தவனோ சற்று உயரம் குறைவாய் இருந்த அவளறை பால்கனிக்கு ஏற முயல அதற்குள் அவளறை வழியாய் வந்திருந்தவளோ கை கொடுக்க மேலேறியிருந்தவன் பின் அவளையும் அழைத்துக் கொண்டு சத்தமெழாதவாறு கூரை  மேலேறினர் இருவரும்.

 

ஓட்டுக் கூரையின் மேல்  வாகாய் முழங்கால்களை கட்டிக்கொண்டு  அமர்ந்திருந்தனர் இருவரும்.

 

அங்கு வந்தப்பின்னும் அவள் பார்வை வானிலேயே இருக்க அவனும் முதலில் கலைக்கவில்லை பின் இரவு வெகு நேரமாகிவிட்டதை உணர்ந்தவனோ..

 

“இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே உக்காந்துருக்கதா உத்தேசம்?” என்றான் கேலியாய்

 

ஆனால் அவளோ அதற்கு நேர்மாறாய்.. “இங்கயே.. இப்படியே..இந்த வானத்தையே பாத்துட்டு இருந்துட்டா நல்லாருக்கும்ல..?” என்றாள்

 

துஜியின் குரலில் இருந்த மாறுபாட்டை உணர்ந்தவனோ, “ஹே! என்னாச்சுடா?” என்று கேட்க அருகிலிருந்தவனின் கையை  தன்னிரு கைகளாலும் கட்டிக்கொண்டு அவன் தோள் சாய்ந்திருந்தாள்.

 

“அம்மூ..” என்று முணுமுணுத்தவளாய்.

 

“என்னடா? ஏதாவது பிரச்சனையா?” என்றவனிடம் இல்லையென்பதாய் தலையசைத்தவளோ,

“தெரியல.. ஆனா பாக்கனும்போலருக்கு..” என்றாள்.

 

இடது கையை அவள் அணைத்திருக்க தன் வலது கையால் அவள் தலையை ஆதரவாய்க் கோதியவன்..

 

“துஜாமா..” என்றழைக்க தலையை மட்டும் திருப்பி அவனை பார்த்தவளிடம்

 

“நாளைக்கு வெளிய போலாமா?” என்று கேட்க

 

“எங்க??” என்றவளிடம் மறுப்பாய் தலையசைத்தான்.

 

“அது சர்ப்ரைஸ்!” என்று.

 

அவள் தனதறையின் விளக்கை அணைக்கும் வரை காத்திருந்தவன் அதன் பின்னரே கிளம்பியிருந்தான்.  அவன் நினைத்தும் பார்த்தானில்லை அதுதான் அவர்களது கடைசி சந்திப்பென..

 

ஏனெனில் அடுத்த நாள் அவன் கிளம்பிய சமயத்தில் அவசர அழைப்பொன்று.. உயிருக்கு ஆபத்தில்லை எனினும் பலத்த காயங்களுடன் மலைச்சரிவில் விழுந்திருந்தவரை கவனிக்க அவன் சென்றுவிட திரும்ப சற்று தாமதமானாலும் அவன் முதலில் சென்றது துளஜாவை காணவே.

 

ஆனால் அவன் சற்றும் எதிர்பார்த்திராத விஷயம் அவள் அன்று காலையே ஊருக்கு கிளம்பியது.

 

டக் டக்..என்ற கதவை தட்டும் ஓசையில் தன்னுணர்வுக்கு வந்த சாத்வதனுக்கு அப்பொழுதே புரிந்தது அச்சுவிடம் சொல்லிக்கொண்டு வந்தவன் அப்படியே அமர்ந்துவிட்டது.

 

அரணிடம் பேசிவிட்டு தனதறைக்கு வந்த ஆஹிரியினுள்ளோ ஏதோ நமநமத்துக்கொண்டே இருந்தது. இன்னதென்று சொல்ல முடியாமல். தொண்டைக்குழியில் சிக்கியதுபோல..

 

அது என்னவென்றுதான் புரியாமல்போக தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டாள்.

 

அன்று காலையில் இருந்து நடந்தவை அனைத்தையும் ஒவ்வொன்றாய் நினைவில் கொண்டு வர முயன்றுக் கொண்டிருந்தாள்.

 

என்னதது?? என்னவோ ஒன்ன நான் மிஸ் பண்றேன். ஏதோ ஒன்னு.. ரொம்ப முக்கியமான ஒன்னு..

 

 முதல்ல இந்த வதன் எப்படி அங்க வந்தான்? வதன்  சொல்றது உண்மையாவே இருந்தாலும்.. அவனுக்கு மட்டும் எப்படி நாங்க இருக்கற இடம் தெரிஞ்சிது?

 

அரண்??!! ஓஹ் நோ! இத எப்படி மிஸ் பண்ணேன்?? அவங்களோட இங்க்லிஷ் ஆக்ஸெண்ட்.. அவங்களுக்குள்ள இருக்க நெருக்கம்..  என்றோடிய சிந்தனையில் தலை விண்ணென்று வலித்தது.

 

இல்ல.. கொஞ்சம் பொறுமையா யோசி ஆரி.. பொறுமையா.. ஏதோ ஒன்னு.. திங் ஆரி திங்!! என்றவள் விழிகள் இரண்டையும் மூடி தலையை பின்னால் சாய்த்தாள்.

 

தலைக்குள் பலக்குரல்கள் ஒலித்தன.. எந்த குரலின் அருகே செல்லவென்று தெரியாமல் விழித்து  நின்றவளைக் கலைத்தது அக்குரல்!

 

“இல்லாத ஒருத்தர..இருக்கறதா காட்றதும்..இருக்கறவங்களோட அடையாளத்த தடையமே இல்லாம அழிக்கறதும்.. ஒன்னும் அவ்வளோ கஷ்டமில்ல பேபி!” என்ற அரணின் குரல் அது!!

 

பட்டென நிமிர்ந்தமர்ந்தாள்.

“செல்வம்!!!”

 

கதவைத்திறந்த சாத்வதன் விழிகள் இரண்டிலும் கேள்விகளை தாங்கி நின்றான்.

 

“உங்கட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்” என்ற ஆஹிரியையே ஓர் நொடி ஆழப் பார்த்தவன் வழியில் இருந்து அகன்றான்.

 

உள்ளே நுழைந்தவளோ அவன் அமரும் வரை காத்திருக்க அவனோ..

 

“என்ன விஷயம் ஆஹிரி? இந்நேரத்துல?”

 

“அந்த ட்ரைவர் பேரு செல்வம்! அண்ட் அவர் சாகல..” என்றுரைக்க மற்றவனின் அதிர்வு அவன் முகத்திலேயே அப்பட்டமாய் தெரிந்தது.

 

“வாட்??!!”

 

“யெஸ்!! அவர் சாகல..” என்றாள் மறுபடியும்.

 

“நோ வே! அந்த ட்ரைவர் ஸ்பாட்லயே இறந்துட்டான்! பாடிய ஃபாமிலிக்கிட்ட ஒப்படைச்சு அவங்க கடைசி காரியமே பண்ணிட்டாங்க” என்ற சாத்வதனின் குரல் தேய்ந்தது சிந்தனையில்.

 

“கன்ஃபர்மா தெரியுமா??” என்றவளின் குரலில் அத்தனை தவிப்பு

 

“மலைல இருந்து கார் கீழ விழுந்ததுல.. அடையாளம் தெரியலனும்.. அவங்க ஃபாமிலிதான் உறுதி செஞ்சதா..” என்றவனுக்கும் இப்பொழுது உறுத்தியது இருக்குமோ? என்று.

 

“எப்படி இவ்வளோ உறுதியா சொல்றீங்க?” என்றவனின் கேள்விக்கு

 

“நான் அவர பாத்தேன்!”

 

“என்ன??!!”

“யெஸ்! அந்த ஆக்ஸிடெண்ட்க்கு அடுத்துதான்!” என்றவளின் குரலில் இருந்த தீவிரம் மற்றவனை உலுக்கியது.

“உயிரோடவே இருந்தாலும்.. அவன எங்க பாத்தீங்க?” என்றவனின் கேள்வியில் இவளது முகமாற்றத்தை கண்டவனோ இதற்கு மேல் இவள் அழுத்தம் கொடுப்பது நல்லதிற்கில்லை என்றுபடவே

 

“காலைல யோசிப்போம் ஆஹிரி. நீங்க ரெஸ்ட் எடுங்க” என்றிருந்தான்.

 

அவன் சொல்வதும் சரியென்று தோன்றிவிட ஆமோதிப்பாய் தலையசைத்தவள் வெளியேற இரண்டடிதான் எடுத்து வைத்திருப்பாள்,

 

“அரண உங்களுக்கு எப்படி தெரியும்?” என்றவளின் கேள்வியில் சற்றும் அலட்டிக்கொள்ளாதவன்,

 

“நாங்க ப்ரதர்ஸ்” என்றிருக்க

 

வதனின் பதிலில் உடல் முழுதும் பரவியது அதிர்வலைகள் ஆஹிரிக்கு.