Aahiri-FINAL(E12)

WhatsApp Image 2020-08-17 at 10.30.47 AM

அத்தியாயம்-12

 

அவள் வருகையை எதிர்ப்பார்த்ததுபோலவே திறந்துக்கிடந்தது அந்த ஃபார்ம் ஹௌஸின் வெளிக்கதவு.

 

சீறிப்பாய்ந்த காரோ அந்த வீட்டின் வாசலிலேயே ‘க்ரீச்ச்ச்’ என்ற சத்தத்துடன் டயரை தேய்த்துக் கொண்டு நின்றிருக்க அதிலிருந்து இறங்கியவளோ வீட்டினுள் விரைந்தாள்.

 

அரணது அளவுக்கு காட்டுக்குள் இல்லையென்றாலும் இதுவும் சற்று ஒதுக்குப்புறமான இடம் தான். அவ்வளவாய் ஆட்கள் நடமாட்டமில்லாமல்..

 

உயர்ந்து பரந்து நிற்கும் அந்த ஃபார்ம் ஹௌஸ் முன்பு அவர்கள் பயண்படுத்தியது.

வெள்ளித் தகடுகளாய் மின்னும் கர்டன்களும்.. வெளீர் நிறச் சுவரும் அதற்கு நேர்மாறாய்.. அடர் நிறத்திலான தரையுமென பளீரென கண் சிமிட்டிக் கொண்டிருந்து  அந்த வீடு.

 

வீட்டின் சுற்றமோ அழகாய் பசுமை மாறாமல் பூக்கள் பழங்களென பராமரிக்கப்பட்டு வந்திருந்தது.

 

விடுவிடுவென உள்ளே  நுழைந்தவளோ வீட்டின் ஒவ்வொரு அறையாய் சென்று தேட  வெகு தாமதமாகவே உரைத்தது..அவ்வீட்டின் எல்லா கதவுகளும் திறந்தே கிடந்ததும் பணியாட்கள் யாரும் அவள் கண்ணில் படாததும்.

 

பின் மனதை ஒரு நிலைப்  படுத்தியவளாக சுற்றுமுற்றும் பார்வையை சுழற்றினாள்.

 

மாடி அறைகளின் இருக்க வாய்ப்பில்லை..என்று  தோன்றிவிட கீழ் தளத்தில் திறந்துக் கிடக்கும் அறைக்கதவுகளையே சிந்தனையாய் பார்த்து நின்றவளினுள் மின்னல் வெட்டியது அந்த கடைசி அறையைக் கண்டு.

 

நிச்சயம் அங்குதான் இருக்க வேண்டும் என்று எண்ணியவள் அக்கதவை நோக்கி ஓடியிருந்தாள்.

 

அதற்கு முக்கிய காரணமே.. கதிரவனின் கரங்கள் அதிகம் படாமல் இருக்கும் அறையென்றால் அது அந்த கடைசி அறைதான்.  பகல் நேரத்திலேயே சற்று மந்தமாய்தான் காட்சியளிக்கும்..அப்படியிருக்கையில்..

 

கதவு வேறு சாத்திவைக்கப்பட்டிருக்க அதை பிடித்து தள்ளியவளாய் உள்ளே நுழைந்தவளின் பார்வையில் முதலில் விழுந்தது தலையிலிருந்து லேசாய் இரத்தம் கசிய தரையில் சுயநினைவற்று கிடந்த நிரூபா.

 

ஏனோ அன்னையை அந்நிலையில் கண்டவுடன் மூளை வேலை நிறுத்தம் செய்துவிட்டதோ.. உள்ளம் உதறித்தள்ள  நிரூபாவிடம் விரைந்தவள் மண்டியிட்டு அமர்ந்தவளாய் அவரது தலையை தன் மடியில் ஏந்தியவளாய் கன்னத்தைத் தட்டிக் கொண்டிருந்தாள்.

 

“மா..ம்ஆ!! இங்க பாருமா!! மா” என்றிவள் கண்களில் நீர்கசிய தட்டிக் கொண்டிருந்த சமயம்  அவளுக்கெதிரில் படிந்த நிழலைக் கண்டவளோ அவளுக்கு பின் நின்றிருந்த ஆளிடம் திரும்பிய மறுகணம் ‘னங்ங்!!’ என்ற சத்தத்துடன் அவள் தலையை பதம் பார்த்திருந்தது அந்த ராட்!

 

அவளது வலது காலைப் பிடித்து தரதரவென இழுத்துச் சென்ற அவ்வுருவம் அந்த அறையின் இருட்டிக் கிடந்த இன்னொரு மூலையில் போட..

 

“என்னடி??!! அம்மாவும் பொண்ணுமா சேந்து கேமா விளாடறீங்க??!!” என்ற வெறிபிடித்த குரலே அவள் கடைசியாய் கேட்டது.. மெல்ல மெல்ல அவள் வேறொரு உலகினுள் சென்று  கொண்டிருந்தாள்.

 

ஆரி மயங்கிராத! மயங்கிராத! என்று அவளுள்ளம் கதறிக் கொண்டிருக்க என்ன முயன்றும் அவளால் வேறெதையும் செய்ய முடியாமல் போனது. சூடாய் அவளது பின்னந்தலை பக்கமிருந்த ஹூடி நனைந்து கொண்டிருக்க கடைசியாய்.. கண்முன் வரிவடிவமாய் நின்றிருந்த உருவத்தையே பார்த்தவளாய் விழி மூடினாள் ஆஹிரி.

 

முன்னால்   ட்ரைவர் ஸீட்டில் செல்வம் அமர்ந்திருக்க அவருக்கு அருகிலேயே ஜனார்த்தனும் பின்னிருக்கையில் துளஜாவும் ஆஹிரியுமென இனிமையாகவே தொடங்கியது அப்பயணம்.

 

இறக்கிவிடப்பட்டிருந்த கண்ணாடி வழியாய் அவள் முகத்தில்  பட்டுத் தெறிக்கும் மஞ்சள் வெயிலை இரசித்தபடி வந்திருந்தவளுக்கு அடுத்த சில நிமிடங்களுக்கு என்ன நடந்தது என்றுதான் புரியாமல் போனது.

 

அந்த விபத்திற்கு முன்னான அந்த கடைசி நொடி.. அப்பொழுதுதான் அவள் கவனித்தாள் அவர்களுக்கு முன் சென்றுக் கொண்டிருந்த மற்றொரு காரை..

 

எல்லாம் நொடிப்பொழுதில் நடந்திருந்தது. சரியாய் மூன்று முறை கார் பிறண்டிருந்தது. நொறுங்கிச் சிதறிய கண்ணாடி துகள்களே அவளை சூழ்ந்திருக்க  வலியில் முனகலாக அவள் செவி தீண்டிய குரல்களில் கண்விழித்தவளின் தலையோ பாரமாய் கனத்தது கழுத்து வளைவிலிருந்து இரத்தக் கசிவு வேறு..

 

முன் ஸீட்டிலிருந்த தந்தையிடம் அசைவே இல்லை.

 

கார் குப்புற கிடந்ததில் வெளியில் நடப்பதை அவ்வளவு தெளிவாய் பார்க்க இயலாவிட்டாலும் தலையை நொறுங்கிக் கிடந்த சன்னல் வழியாய் சாய்த்துப் பார்க்க முயன்றாள்.. ஒன்றும் தெளிவாய் தெரியாமல் போக.. மிக அருகில் கேட்ட முனகலில் திரும்பிட அவளருகில் கிடந்த துஜியை யாரோ வெளியில் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தனர்.

 

‘துஜி..’

 

கையைக்கூட தூக்கும் திராணியற்றவளாய் கிடந்தவள் முயன்று இடது கையால் துஜாவை பிடித்திட முயல அதற்குள் அவளை முழுதாக வெளியில் இழுத்திருந்தான் அவன். கறுப்பு நிற உடையில்..

 

‘அந்த காட்டுக்குள்ள வந்தவங்கள மாதிரியே!!??’ என்று மனம் ஒப்பிட்டுப்பார்த்தது.

 

துளஜாவிற்கு தலையில் பலத்த அடி என்பது அவளது உடையின் காலர் பகுதிக்கு சாயம் பூசியிருந்த அவளது இரத்தமே சொல்லியது.

 

துளஜாவை அவன் வெளியில் இழுத்த விதமோ..இல்லை வேறெதுவோ.. ஆஹிரிக்கு  எதுவோ சரியில்லை என்பதை  உணர்த்த  அவளருகில் இருந்த சன்னல் வழியாய் வெளியேற முயன்றாள். ஆங்காங்கே கிழித்து வைத்த கண்ணாடித் துகள்களை அலட்சியம்  செய்தவளாய்  மெல்ல மெல்ல வெளியேறியவளுக்கோ எழுந்து நிற்க கூட முடியாமல் போனது.

 

வலியில் முகம் சுருக்கியவளுக்கு அவன் துளஜாவை தோளில் தூக்கிப் போட்டவனாய் செல்வதைப் பார்த்த பொழுது எங்கிருந்துதான் அவ்வளவு பலம் வந்ததோ.. புறங்கையை தரையில் ஊன்றியவளாய் எழுந்தவள் வலது கையால் துளஜாவை பிடிக்க முயன்றவளாய் முன்னேறினாள்.. 

சுயநினைவை இழக்கும்  முன் துஜியின் கையை பற்றிவிட வேண்டுமென்ற  தீர்மானத்துடன் ஒத்துழைக்காத இடது காலை இழுக்க முயன்றவளாய் அவள் முன்னேற அனாயாசமாய் துஜியை தூக்கிச் சென்றவனுக்கும் இவளுக்கும் சில அடிகள் தூரம் இருக்கும்பொழுது அவளது தலையில் ஏதோ ஒன்று பலமாய் மோதியது.

மோதிய வேகத்தில் கண்களிரண்டும் இருள கீழே விழுந்ததுதான் தெரியும்..

 

‘இதோ இப்ப விழுந்ததபோலவே..’

 

‘அவ எனக்கு உயிரோட வேணும்!’ என்றக் குரல் அவள் காதில் விழத்தான் செய்தது. ஆனால் ஏனோ கண்களை மட்டும் திறக்க முடியவில்லை ஆஹிரியால்.

 

அவள் கண்விழிக்க முயன்றப்பொழுது அவளையே வெறித்திருந்த அந்த உருவம் அவள் கவனத்தில் பதிந்து அது யாரென்று உரைக்கவே சற்று நேரம் பிடித்தது அவளுக்கு.

 

‘சித்தப்பாஆ!!??’

 

இருண்டுக் கிடந்த அறை ஒன்றில் அடைப்பட்டிருந்தாள் ஆஹிரி. விட்டத்தையே வெறித்திருந்தவள் பின் மெல்ல தலை திருப்ப விழிகளிரண்டும் விரிந்தது அவளுக்கு சில அடி தூரத்தில் துளஜா.. இரத்த வெள்ளத்தில் கிடந்தாள்.

 

பதறியடித்தவளாய் எழ முடியாமல் அப்படியே தவழ்ந்து துளஜாவை தொட முயல பட்டென யாரோ கால் பிடித்து தரதரவென இழுத்ததைப்போல துளஜாவை அந்த இருள் விழுங்கியிருந்தது.

 

‘துஜீஈஈஈ!!!!’ என்று அலறலாய் ஒலித்த ஆஹிரியின் குரலுக்கு சற்றும் சளைக்காமல் ஆங்காரச் சிரிப்புடன் ஜீவரத்னத்தின் முகம் அவள் முன் வந்து பின் அதே இருளில் மறைந்திருந்தது.

 

‘நோ!!!!!’ என்ற அலறலுடன் அவள் எழுந்தது ஏதோ மலைப் ப்ரதேசத்தில்.. வெட்டவெளியில்..என்றுதான் அவள் நினைத்தது.

 

கனவுபோலும் என்றெண்ணியவளின் கண்ணுக்கு முன்.. வெகு அருகில் சண்டையிட்டுக் கொள்ளும் வெண் மேகங்களும் அங்கிருந்து தெரிந்த மற்ற பிற மலை முகடுகளுமென.. இயற்கையின்  அழைப்பில் எழுந்தவளுக்கு பின்பே புரிந்தது அவள் நின்றிருந்தது கண்ணாடி பெட்டியன.. அதுவும் மலையுச்சியில்..

 

சரியாய் அவள் நின்றிருந்தது நிலத்தின் நுனியில்.. அந்தரத்தில் நின்றிருந்தவளை பயம் ஒரு புறம் உலுக்கியதென்றால்.. அப்படியே தரையில் அமர்ந்தவள் நிலத்தை நோக்கி நகர முயல கண்ணாடியிலோ விரிசல் விழுந்தது.

 

பட்டென எழுந்து நின்றுவிட்டாள். அவளுக்கு நன்றாகவே புரிந்தது அவள் இன்னொரு அடி எடுத்து வைத்தால் அந்த பெட்டி உடையக்  கூடுமென..

 

‘டப்ப்ப்!!!’ என்ற துப்பாக்கி வெடித்த சத்தத்தை தொடர்ந்து வந்த பறவை ஒன்றின் அலறலில் இவள் சத்தம் கேட்ட திசையில் திரும்பவும் இரத்தம் அவள் முகத்துக்கு நேராய் நின்ற கண்ணாடி திரையில் விழுந்து சிதறவும் சரியாய் இருக்க..

 

ஒருகணம் மூச்சுக்கூட எடுக்காமல்.. இதயமே நின்றுவிட்டதைப்போல் உணர்ந்தாள் ஆஹிரி.

 

அந்த கண்ணாடிப் பெட்டியின் இன்னொரு மூலையில் ஒட்டி அமர்ந்திருந்தவள் கடைசியாய் கண்விழித்தது  அந்த மருத்துவமனையில்தான்.

 

கேட்டதற்கு மலையில் இருந்து கார் கவிழ்ந்ததில்  இவளை அங்கிருந்த பழங்குடியினர் மீட்டு முதலுதவி செய்ததாகவும்  மூன்று  நாட்களுக்கு பிறகே இவளை அவர்கள் கண்டுபிடித்ததாகவும் சொல்லிச் செல்ல ஆஹிரிக்குதான் எதுவுமே புரியாமல் போனது.

 

ஏதோ ஒரு கெட்ட கனவொன்றின் மிச்சம் துரத்தி வருவதைப்போல..

 

அதிகம் யோசிக்கவும் முடியாமல் ஒன்றுமில்லையென ஒதுக்கிடவும் இயலாமல் இரண்டும்கெட்டான் நிலையில்.. தினம் தினம் பதறியெழுந்தாள்.

 

‘நிம்மதியா தூங்கியே வாரக்கணக்காச்சு..’ என்று நிரூபா யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தது இப்பொழுது நினைவுக்கு வருகிறது.

 

சித்தப்பா??!! இதெல்லாம் அவரா செஞ்சாரு?? ஏன்?? கூடப்பொறந்த அண்ணன.. என்ன..துஜிய??!! இப்போ அம்மாவ..’

எவ்ளோ நல்லவரா நடிச்சாரு..அந்த ஆக்ஸிடெண்ட்க்கு அப்பறம் அம்மாக்கூடவேதானே இருந்தாரு.. வீட்டுல எல்லாரையும் எப்படி பாத்துக்கிட்டு.. சொந்த பொண்ணயே ஏன் கொல்லனும்? இங்க என்ன நடக்குது??  நான் எழனும்..எழுந்தே ஆகனும்.. எழுந்துக்கோ ஆரி! உன் துஜிக்கும் அம்மாக்கும்.. உன்ன நீதான் காப்பாத்தனும்..

 

கண்விழித்த ஆஹிரியின் முன் இருள்..இருள்..இருள் மட்டுமே!!

 

அவளிருந்த இடம் முழுதும் இருளில் மூழ்கியிருந்தது. இருட்டில் பார்வையை பதித்து கவனிக்க முயன்றவளுக்கு தாமதமாகவே புரிந்தது அவளது கைகளை பின்னால் கட்டப்பட்டிருந்தது.

கைகளிரண்டையும் சேர்த்து தேய்த்தாள் அதில் கயிறு சற்று தொய்யுமென்ற நம்பிக்கையில் ஆனால் கயிறு தொய்யும்வரை தேய்க்கும் அளவிற்கு அவளிடம்தான் நேரமில்லையே. உடலை குறுக்கி முயன்று கைகளை கட்டுடன் முன்னே கொண்டு வந்துவிட்டவளின் கவனமோ காதில் விழுந்த குரல்களில் தடைப்பட்டன..

 

அத்தனை நேரமும் கேட்டுக்கொண்டிருந்தவைதான். ஆனால் இப்பொழுதே அவளது கவனத்தில் பதிந்தது.

 

சத்தமெழாதவாறு மெல்ல மெல்ல நகர்ந்து இருளிலேயே மறைந்து இருந்தாள் ஆஹிரி.

 

“வாங்க!! வாங்க!! அரண் என்கிற நவயுகன்!!!!” என்ற ஜீவரத்னம் ஏனோ ஒவ்வொரு வார்த்தையையும் கடித்து துப்பிக்கொண்டிருந்தார். அவரது கண்களை அவளால் பார்க்க முடியவில்லை.  இருந்தும் ஏனோ உள்ளுணர்வே சொல்லியது நிச்சயம் அது வெறியில் சிவந்திருக்குமென.. அதான் குரலே கூறுகிறதே!!

 

ஜீவரத்னத்தின் குரலில் கவனம் பதித்திருந்தவளுக்கு பின்பே உரைத்தது வந்திருப்பது யாரென..

 

‘அரண்..??!! இந்த அரண்தான் அந்த நவன்..நவயுகனா??!!’  புதிரின் பாகங்களில் சில அதனிடத்தில் சென்று அமர்ந்து கொள்வதைப்போல உணர்ந்தாள் ஆஹிரி.

 

“தப்புக்கு மேல தப்பு பண்றீங்க ஜீவரத்னம்!!” என்று எச்சரிக்கையாய் வந்தது அர..நவனின் குரல்.

 

எளக்காரச் சிரிப்புடன் அவனை ஏறிட்டவரோ.. “என்னடா!!?? என்ன பாத்தா உங்களுக்கு என்ன கிறுக்கனா தெரியுதா??  என்னையே ஏமாத்திட்டல்ல நீ!! இந்த ஜீவரத்னத்த ஏமாத்தினவனோட அழிவு எப்படியிருக்கனும் தெரியுமா!!?” என்றவர் ஓர் நொடி இமை மூடி ஆழ மூச்செடுத்தார்.

 

ஏனோ அவரை பார்க்கவே உள்ளுக்குள் பயமெழுந்தது.

 

“எல்லாத்தையும் சரியா செஞ்சேன்..ஆனா உன் விஷயத்துல சறுக்கிட்டேன்! உன் தம்பிக்காகத்தானே வந்த? இரண்டு பேரையும் சேர்த்து அனுப்பி வைக்கறேன்..ஹா..ஹா..ஹா..” என்றவர் வெறி பிடித்தாற்போல் சிரிக்க இங்கு ஆஹிரிக்கோ எதற்கு அவன் அவர் இவ்வளவு அருகில் இருந்தும் பேசிக்கொண்டிருக்கிறான் என்ற சந்தேகம் எழ அப்பொழுதே கவனித்தாள் அவர் காலுக்கருகில் மயங்கிக் கிடக்கும் சாத்வதனை.. வசதியாய் அவன் தலையை வேறு பிடித்திருந்தார்..மறுகையில் பளபளக்கும் அநத கடானா வகை வாளுடன்.

 

60-80cms அளவிருக்கும் ஜப்பானிய வாளுடன் நின்றிருந்தவரை காணவே புரிந்தது ஆஹிரிக்கு.

 

‘ச்சே! எதுக்காக இவன விட்டு வந்தேனோ இப்போ அதுவே..’

 

“ஈஸியா முடிய வேண்டியத இவ்ளோ கஷ்டமாக்கிட்டியே நவ-யுகன். உன் தம்பி தப்பு பண்ணிட்டான்.. முதல துளஜாவ தேடி கிளம்பியிருக்க கூடாது..இப்ப ஆஹிரிக்காக வந்திருக்ககூடாது!!!!” என்றவாரே அங்கிருந்த சோஃபாவின் புறம் பார்வையை திருப்பினார்.

 

“நீங்க தப்பிக்க முடியாது ஜீவரத்னம்!!” என்றவனிடம்

 

கேலியாய் சிரிந்தவரோ,”மாட்டப்போறது நானில்ல! நிரூபா! மிஸஸ்.நிரூபா ஜனார்த்தனன்!!” என்று முடிக்கையில் ஏனோ அவரின் வார்த்தைகள் கடிபட

 

“யூ கைஸ் ஜஸ்ட் டோன்ட் டிஸர்வ் டூ லிவ்!!!!” என்று அத்தனை நேரம் பேசிக்கொண்டிருந்தவரோ திடீரென தன்னிலை மறந்தவராய் ஏதேதோ புலம்பியவராய்  சாத்வதனை நிமிர வைத்து வாளை வீசுவதற்காய் மேல் நோக்கி எதிர் திசையில் உயர்த்த..

 

“நோ நோ!!” என்ற நவன் தடுக்க முயல்வதற்குள் மறைந்திருந்த இடத்தில் இருந்து பக்கவாட்டில் அப்படியே ஜீவரத்னத்தின் மேல் சென்று மோதி அவரையும் சேர்த்து கீழே தள்ளியிருந்தாள் ஆஹிரி.

 

நொடிப் பொழுதில் நடந்துவிட்டதில் முதலில் அதிர்ந்த ஜீவரத்னம் பின் சுதாரித்து எழ முயற்சிக்க  நவனின் கால் அருகில் கிடந்த வாளைப் பார்த்தவளோ..

 

“அரண்!! அரண் அத எடு!!” என்று கத்த இங்கிவரோ காலால் அதை எட்டி உதைத்தவராய் எழுந்து நிற்க மறுகணமே அவர் முன்  Y என்று பொறிக்கப்பட்டிருந்த அந்த வெள்ளி நிற பிஸ்டலுடன் நின்றிருந்தாள் ஆஹிரி.

 

கைகளிரண்டும் சேர்த்து கட்டப்பட்டிருக்க.. இரு கையாலும் பிஸ்டலை இறுகபிடித்தவளாய் அவர் முகத்துக்கு நேராய் அதை குறிவைத்தபடி நின்றிருந்தாள் அவள்.

 

“உங்க கிட்ட இருந்து நான் இத எதிர்ப்பார்க்கல..” என்றவளின் தலை மறுப்பாய் அசைய குரல் முழுதும் வழிந்தது வலி.

 

எந்தவித பாவமும் காட்டாமல் அவர் அவளையே பார்த்து நிற்க தன்னிலை மீண்டவளோ..

 

“சொந்தப்பொண்ண கொல்ல எப்படி உங்களுக்கு மனசு வந்துச்சு!!?? மிருகங்ககூட தன்னோட குட்டிய பாதுகாக்கும்..அப்பா அப்பானு இருந்த பொண்ண..ச்சே” என்றவள் அவரை கேவலமாய் பார்த்து கேட்க அவரோ..

 

“அவ என் பொண்ணேயில்ல!!!” என்று அந்த அறையே அதிரும்படி கத்தியிருந்தார்.

 

“என்ன முட்டாளாக்கின எல்லாரையும்.. சும்மா விடமாட்டேன்!! நீ பைத்தியம் பிடிச்சு அலையனும்.. குழப்பத்துலேயே நீ சாகறத உங்கம்மா பாத்து கொஞ்சம் கொஞ்சமா உயிரோட சாகனும்! நடுவுல இவனுங்க மட்டும் வராம இருந்திருந்தா..”  என்றவரின் பேச்சு புரியாமல் போனாலும் அவர் பழிவாங்க நினைத்தது உள்ளுக்குள் எதையோ உருவியது போலானது. இத்தனை காலம் உடனிருந்தவரினுள் இப்படி ஒரு எண்ணம் துளிர்க்ககூடுமா?? எத்தனை குரூரமான திட்டம் இவரது!?

 

பேசத்தொடங்கியவரோ பேசியபடியே சோஃபாவில் கிடந்த நிரூபாவிடம் செல்ல கண நேரத்தில்  அதை உணர்ந்தவளாய் அவரது காலுக்கு அருகில் சுட்டிருந்தாள்.

 

அதிர்ந்து விழித்தவரோ.. நொடிப்பொழுதில் மாறியவராய்..

 

“ஆருமா.. நான் உன் சித்தப்பாடா!..என்னையே கொன்னுருவியாடா?” என்று அவளை உணர்வுகளால் கட்டியிழுக்க முயன்றுக்கொண்டிருந்தார்.

 

நொடிக்கு நொடி அவர் மாறும்விதம் ஏனோ ஆஹிரிக்கு உறுத்திக்கொண்டிருக்க மறுகணமே இவர் நான் உன் சித்தப்பாடா என்று பரிதாபக் குரலில் கெஞ்சலாய் கேட்க..

 

ஏன் எதற்கு என்று புரியாவிட்டாலும் கண்களிலிருந்து தாமாய் கசியும் கண்ணீரை பொருட் படுத்தாதவளோ உடைந்த குரலுடன்..

 

“நீங்க வேணா எனக்கு அப்பாவா இருக்கலாம்..ஆனா துஜி எனக்கு குழந்தை!” என்றவள் இட வலமாய் தலையசைத்தவளாக..

 

“தப்பு பண்ணிட்டீங்க சித்தப்பா!! நீங்க துஜிய காயப்படுத்திருக்க கூடாது! என்ன இந்த நிலமைல நிறுத்தியிருக்க கூடாது..”

 

“ஆரி வேணாம்.. பிஸ்டல குடு..ஆரி..” என்று அவளது செயலை கணித்தவனாய் நவன் தடுக்க முயன்று  கொண்டிருக்க.. வெளியில் வண்டி வரும் சத்தத்தை உணர்ந்த ஜீவரத்னமோ நொடிப்பொழுதும் வீணடிக்காமல் அவள் மீது பாய்ந்தார்.

 

கடைசி நொடியில் கவனித்த நவன் நடுவில் வர கோரச்சத்ததுடன் பிஸ்டல் ஃபயராகியிருந்தது.. கூடவே வலியில் அலறும் சத்தமும்.

 

ஜவரத்னத்தின் நெற்றிப்பொட்டில் பிஸ்டலை வைத்து அழுத்தியபடி நின்றிருந்தாள் ஆஹிரி. தன் மேல் பாய்ந்தவரிடம் இருந்து தப்பும் முயற்சியில் துப்பாக்கி ஃபயராகியிருந்தது.

அதற்குள் வீட்டினுள் நுழையத் தொடங்கியிருந்தனர் காவலதிகாரிகள்.

 

“ஆஹிரி துப்பாக்கிய கீழ போடுங்க!” என்ற அந்நியமான குரலில் தலையைக்கூட திருப்பியிராதவளோ..

 

“ஏன் இப்படி பண்ணீங்க!?? துஜிய உங்களுக்கு எப்படி கொல்ல மனசு வந்துச்சு?? ஏன்..ஏன் ஏன்!!!!???” என்று வெறிபிடித்தவள்போல கத்த தொடங்கியிருக்க..

 

“ஆரி” என்ற நவனின் அழைப்போ..இல்லை அதிகாரிகளின் எச்சரிக்கையோ மனதில் பதியேவில்லை. மாறாய் தன் துஜி இனி இல்லை என்ற உணர்வே எழ பித்து பிடித்தவளைப்போல அரற்றியவளைக் கண்டவர்களோ எங்கு அவள் அவரை சுட்டுவிடுவாளோ என்றே அஞ்சினர். அதற்கு தோதாய் நேரம் செல்ல செல்ல அவளிடம் வேகம் கூடியிருக்க.. ஒருகட்டத்தில் ஜீவரத்னத்தின் இருபுறமும் சுட்டவளோ அந்த வெற்று பிஸ்டலை தூக்கி எறிந்துவிட்டு தரையில் மடிந்தமர்ந்துவிட. அவளிடம் விரைந்த நவனோ ஆறுதலாய் பற்றியிருந்தானென்றால் அவன் ஆறுதலாய் தோள் தொட்ட மறுகணமே அழுகையில் வெடித்துச் சிதறினாள் ஆஹிரி.

 

இப்படியொரு அழுகையை..அவள் அழுது அவன் பார்த்ததில்லை!

 

தேம்பித் தேம்பி அழுதவளோ மற்றவர்களின் உதவியோடு எழுந்துக் கொண்டிருந்த ஜீவரத்னத்திடம் படிய அவர் மேல் பாய்ந்தவளோ அவர் சட்டை பிடித்து உலுக்கியவளாக..

 

“உன்ன கொல்லக்கூட தோனலை!! நான் போட்டது பிச்சை!அதுவும் என் துஜிக்காக போட்ட பிச்சை! அவளக் கொல்ல உனக்கு எப்படி மனசு வந்துச்சு!!??  எப்படி வந்துச்சு!??” என்று முழுக்குரலிலும் கத்த அவளை அவரிடம் இருந்து பிரிக்க முயன்று  கொண்டிருந்தான் நவன்.

 

அவளை அவரிடம் இருந்து விலக்கியவனோ அவளை தன் இருகைகளுக்குள்ளும் இறுத்திவைக்க முயன்று  கொண்டிருக்க..

 

“இல்ல! இல்ல! அவள நான் கொல்லல!! துளஜாவ நான் கொல்லல!! நான் கொல்லல!!” என்று தனக்குத்தானே பேசத்தொடங்கியவரோ  மயங்கிச் சரிந்தார்.

 

நிரூபாவையும் சாத்வதனையும் ஆம்புலன்சில் எற்றியவர்களாய் மருத்துவமனைக்கு விரைய.. சட்டப்படி ஜீவரத்னத்தை அழைத்துச் சென்றிருந்தனர் காவல் துரையினர் மருத்துவமனைக்கு.

 

நிரூபாவையும் சாத்வதனையும் அவர்கள் உள்ளே  கொண்டு செல்லும்வரை பார்த்திருந்தவன் பிறகே கவனித்தான் அவளை..

 

“ஆரி..”என்றவன் அழைப்பில் எற்கனவே மங்கும் பார்வையை தடுக்க முயன்று கொண்டிருந்தவள் திரும்பிட..

 

“யு ஆர் ப்ளீடிங்!!” என்றவனாய் அந்த ஹூடியை விலக்கிப்பார்க்க..பின்னந்தலையில் கைவைத்துப் பார்த்தவளோ கை முழுக்க இரத்தமாகிட.. அதையே பார்த்திருந்தவளின் முகம் மாறியது. அவள் மயங்கிச்சரியும் முன் அவளை கைத்தாங்கலாய் பிடித்திருந்தான் அவன். மறுகணமே அவளும் அனுமதிக்கப்பட்டிருந்தாள் அதே மருத்துவமனையில்.

 

கண்களை திறந்த ஆஹிரியின் முன்.. அவள் படுத்திருந்த அந்த பெட்டுக்கு நேரெதிரே இருந்த சேரில் கையில் ஏதோ புத்தகத்துடன் அமர்ந்திருந்த பெண்ணில் இவள் கவனம் பதிய.. ஏனோ அவள் அமர்ந்திருந்த விதம் ஆஹிரிக்கு அரணையே ஞாபகப்படுத்தியது.

 

அதே நிமிர்வான தோற்றம்..கூர்ப்பார்வை..

ஆஹிரி விழித்துவிட்டதை கண்டுக்கொண்டவளோ புத்தகத்தை ஓரமாய் வைத்துவிட்டு மெத்தையிடம் விரைந்தாள்.

 

“ஹே!! ஹாய் ஹாய்!!” என்று வந்தவளையே கவனித்திருந்தவளோ..

 

“நிஷ்சி..?” என்றாள் கேள்வியாக.

 

“ப்ச் பச்!! நிராலி.. நவனோட சிஸ்டர்” என்றாள் மற்றவள் விரிய புன்னகைத்து.

 

இவள நிஷ்சியாய் அந்த மச்சறையில் அறிமுகமானப்பொழுது கவனிக்காத விஷயங்களெல்லாம் இப்பொழுது ஆஹிரியின் கவனத்தில் விழுகின்றன..

 

இருவரின் தோற்ற ஒற்றுமையிலிருந்து..

 

ச்சே எப்படி கவனிக்காம விட்டேன்.. என்று தொடங்கி கள்ளா!! குடும்பமா சேர்ந்து கடத்திருக்காங்க.. என்று தோன்றிவிட  நிராலியிடம் இளநகையொன்றை பரிசளித்தவளின் பார்வை தன்னால் அறையை அலச அதை உணர்ந்தவளோ..

 

“நவி டாக்டர பாக்க போயிருக்கான்” என்றாள் கேலியாய் புன்னகைத்து.

 

புன்னகையுடன் மறுப்பாய் தலையசைத்தவளோ ஏதோ சொல்லவென்று வாய்த்திறக்க அதற்குள் அறையினுள் நுழைந்திருந்தான் அவன்.

 

“என் தலையை உருட்றாப்ல  இருக்கே..” என்று உள்ளே நுழைந்தவனை கண்டதும் ஏனோ இன்னும் ஆறுதலாய் உணர்ந்தாள் என்றால்  மிகையாகாது.

 

“அம்மா..வதன்..?” என்றிவள் கேள்வியாய் தொடங்க அவனோ..

 

“எல்லாரும் சேஃப்! நல்லா இருக்காங்க.. பக்கத்து ரூம்ல..” என்றவன் சொல்லிக் கொண்டிருக்கும்பொழுதே அவள் படுக்கையில் இருந்து எழுந்துக்கொள்ள முயல அதை தடுத்தவனோ..

 

“ட்ரிப்ஸ் போயிட்டிருக்கு ஆரிமா! இப்ப எங்கயும் வேண்டாம்.. ரெஸ்ட் எடு” என்றுவிட அவளோ..

 

“பாத்துட்டு வந்துடறேனே.. எனக்கொன்னுமில்ல அரண்! பெர்ஃபெக்ட்லி ஆல்ரைட்!” என்றிவள் பதிலுக்கு கேட்க அவனோ

 

“அத டாக்டர்தான் சொல்லனும்..” என்று தொடங்கியவன் பின்..”கொஞ்ச நேரம்டா” என்று கெஞ்சல் குரலில் கேட்க நிராலியோ..

 

“அம்மாக்கும் உன்ன பாக்க வரனும்னு ரொம்ப ஆசை..மே பி இந்த வீக்லயே வந்துருவாங்க! அப்போ நீ தெம்பா இருக்க வேண்டாமா? அவங்கள ரிஸீவ் பண்ண” என்றாள் கண்சிமிட்டி.

 

“கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு ஆரி..” என்றவன் மறுபடியும் அதுக்கே வர ஆஹிரியோ.. ‘மான்ஸ்டர்’ என்று இதழசைத்தவளாய் விழிமூடிக்கொண்டாள்.

 

மறுமுறை அவள் கண்விழித்த  பொழுது அவள் அருகில் இருந்தது நிரூபாவே!

 

தலையில் கட்டுடன் மகளையே கண்களில் நீர்வழிய பார்ந்திருந்தார் அவர்.

 

“ம்மா…” என்ற மகளின் அழைப்பில் நிகழ் உலகிற்கு வந்தவரோ ஆஹிரியின் கையை இறுகப்பற்றிக்கொள்ள ஆஹிரியும் எழுந்தமர்ந்தாள்.

 

“ம்மா..இப்போ எப்படியிருக்கு?” என்றவளின் கேள்வியில் இன்னுமின்னும்தான் அழுகை வந்தது நிரூபாவிற்கு.

 

“தப்பு பண்ணிட்டேன்டா..தப்பு பண்ணிட்டேன் நான்..” என்றவரின் குரலில்

 

“ம்மா?” என்று கேள்வியாய் ஒலித்தது ஆஹிரியின் குரல்.

 

“வகுளாக்கு நிறைய தடவ மிஸ் கேரியேஜ் ஆகி.. கடைசிலதான் ஒரு குழந்தை தங்கிச்சு.. அதுவும் இல்லனு ஆனா..

நானும் வகுளாவும் ஒரே நாள்லதான் அட்மிட் ஆனோம்.. அத்தனை குழந்தைங்களுக்கு அடுத்து தங்கின அந்த குழந்தையும்..ஏன் இறந்தே பிறக்கனும்?? வகுளாவால அத தாங்க முடியும்னு எங்களுக்கு தோணல.. அந்த குழந்தை பொறக்கறதுக்கு முன்னாடியே ஒவ்வொன்னா பாத்து பாத்து செஞ்சவ அவ.. எங்களுக்கு அன்னைக்கு வேற வழி தெரியலடா.. ஜீவத்துக்கும் வகுளாக்கும் விஷயம் தெரியறதுக்கு முன்னாடியே.. எனக்கு பிறந்த இரட்டை குழந்தைங்கல்ல ஒன்ன மாத்திட்டோம்.. “ என்று சொல்லிக் கொண்டேப் போக அதிர்ந்து பார்த்திருந்த ஆஹிரியோ..

 

“அப்போ துஜி?” என்றிழுக்க ஆமோதிப்பாய் தலையசைத்த  நிரூபாவோ

 

“துஜி என் பொண்ணு” என்றிருந்தார்.

 

“நாங்க நல்லதுனு நினைச்சுதான் செஞ்சோம்.. ஆனா அது இப்படி வந்து முடியும்னு.. சத்தியமா நினைக்கல.. நிச்சயமா நாங்க ஜீவத்த ஏமாத்தனும்னு நினைக்கவேயில்ல..” என்றவர் அழ.

 

இத்தனை நாட்களாய் நிமிர்வுடனே பார்த்திருந்த அன்னை அழுவதை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

 

“ம்மா.. நீங்க நல்லது நினைச்சுதானே செஞ்சீங்க..அது போதும்..” என்றிவள் தொடங்க அதை இடைமறித்தவளாய்..

 

“எனக்கு அப்போ வேற வழி தெரியல ஆரு.. ஏதோ சுத்தி எல்லாமே தப்பா நடக்கற ஃபீல்.. அதான் அந்த ட்ராமா.. யாரு செய்றாங்கனு தெரிஞ்சாலாவது எதிர்க்கலாம்..ஆனா யார்னே தெரியாதப்போ?!”

 

“புரியுதுமா..”

 

“ஆனா..எத்தனையோ வருஷத்துக்கு முன்ன நடந்தது எப்படி இப்போ ஜீவரத்னத்துக்கு தெரிஞ்சிது?” என்றவர் குழப்பிக் கொள்ள..

 

“ம்மா..அதிகம் யோசிக்காத! அந்த டாக்டர்..நர்ஸ்..ஏன் பக்கத்து பெட்ல இருந்தவங்கனு.. நிறைய சான்ஸஸ் இருக்கு.. இவ்ளோ ஏன் உன் டைரியாக்கூட இருக்கலாம்..” என்றவளுக்கு அப்பொழுதுதான் புரிந்தது அவளது டைரி காணாமல் போனதன் காரணம். அதான் அவரே வாய்ப்பட சொன்னாரே.. அதெல்லாம் அவளை குழப்பத்தில் வைத்திருக்கவென்று.. சிறியதாய் தோன்றினாலும் அவள் அதனால் எந்தளவு பாதிக்கப்பட்டாள் என்பது அவளுக்குத்தானே தெரியும்.

 

“எனக்கு புரியல ஆருமா..இத்தன வருஷம் நல்லா இருந்த ஜீவத்துக்கு திடீர்னு என்னாச்சு? ஏன் இவ்ளோ கொடூரமா யோசிக்கனும்?” என்றவர் மறுபடியும் குழப்பிக் கொள்ள அவளுள்ளும் அதே கேள்விகள் இருக்கையில் அவள் மட்டும் என்னவென்று பதிலளிப்பாள்..?

 

“அவர் ஒரு ஸைக்கோபாத் ஆன்ட்டீ!” என்றவாறு உள்ளே நுழைந்தான் நவயுகன்.

இருவரும் அவனையே புரியாமல் பார்த்திருந்தனர்.

 

“அவர் மனசளவுல ரொம்பவே பாதிக்கப்பட்றுக்காரு.. இதுல உங்க தப்பு எதுவுமே இல்ல..இவ்வளவு நாள் கவனிக்காம விட்டத தவிர..” என்று அன்னையையும் மகளையும் சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கினான்.

 

 

உண்மைதானே!? இத்தனை காலமாய் உள்ளுக்குள் இருந்த மிருகம் வெளியே வந்திருக்கிறது.. பொதுவாகவே ஜீவரத்னம் சின்ன சின்ன விஷயத்தில்கூட.. யாரும் ஏமாற்ற முயன்றாலே உண்டு இல்லை என்று செய்துவிடும் ரகம்தான்.. அப்பொழுதெல்லாம் அது ஒன்னும் அவ்வளவு பெரிதாக தெரிந்திருக்கவில்லை.. இப்பொழுதுதானே புரிகிறது.. உள்ளுக்குள் எந்தளவு மனம் செல்லரித்து போயிருந்தால்.. சொந்த அண்ணன்..அதுவும் தனக்காகவும் தன் மனைவின் நலனுக்காகவுமென்று எண்ணி தங்களது ஒரு பிள்ளையையே தூக்கி கொடுத்தவர்களை.. பழிவாங்க மனம் வரும்.. என்றெண்ணியவளுக்கு ஒன்று இடித்தது. சாத்வதன் விஷயத்திலேயே அவள் கற்றுக்கொண்ட பாடம் அது. ஒரு கதைக்கு பல பக்கங்கள் இருக்ககூடுமென..  மனதளவில் பாதிக்கப்பட்டிருந்த ஜீவரத்னத்துக்கு..அத்தனை நாள் முழுதாக வெளியில் வராத சுபாவமும்.. அரக்கத்தனமும்.. அத்தனை நாள் தான் வளர்த்தது தன் மகளே இல்லை என்று தெரிய வந்தப்பொழுது பலத்த அடியொன்று மனதில் விழுந்திருக்கலாம்.. ஏதோ பெரியளவில் தான் ஏமாற்றப்பட்டுவிட்டதாய் அவர் உணர்ந்ததும் தன்னை கோமாளிபோல் தானே நினைத்து வஞ்சத்தை வளரவிட்டதும்.. இதற்கெல்லாம் காரணமான அண்ணனையும்..அண்ணியையும் பழிவாங்க சிறந்த வழி ஆஹிரி!!

 

எப்படி அவர் மகளை வைத்து அவரை முட்டாளடித்தார்களோ அதேபோல்..ஆஹிரி குழப்பத்தில் கரைவதைப் பார்த்துப் பார்த்து நிரூபா வருந்த வேண்டும்.. ஒருபக்கம் ஜனார்த்தனன் கோமாவில் கொஞ்ச கொஞ்சமாய் செல்ல..மறுபுறம் மகள் தவிப்பில் கரையவென நிரூபா கலங்குவதை கண்குளிர பார்க்கவேண்டும் என்பதே அவரது முதல் ஆசையாக இருந்திருக்க வேண்டும்.

 

திடீர் திடீரென இரவில் பதறியடித்துக் கொண்டு எழும் ஆஹிரியை நிரூபா சாமாதனாப் படுத்தி உறங்க வைத்துவிட்டு பின் நடு ராத்திரியில் கணவனையும் ஒருபார்வை பார்த்துவிட்டு கலங்கி தளர்ந்த நடையுடன் அறையினுள் நுழைந்ததெல்லாம் ஜீவரத்னம் கண்டு மகிழ்வுற்றார் என்றால்..

 

ஆஹிரியின் கதறல்களையே இரசித்திருக்கிறாரே!..

 

தெளிவான திட்டம் ஒன்றை தீட்டி வைத்திருந்தார்போலும்..

 

“சுகன்யாட்ட ஏன்மா பணம் குடுத்த?” என்ற மகளின் கேள்விக்கு..

 

“அதில்லடா.. செல்வம் புது ட்ரைவரா இருந்தாலும் கொஞ்ச காலம் நம்மளுக்கு ஓட்டுனவங்க..அதுமட்டுமில்லாம அந்த ஆக்ஸிடெண்ட்ல அவங்க குடும்பமும்தானே பாதிக்கப்பட்றுக்கு? அதனாலதான்..” என்றிழுக்க மகளுக்கு புரிந்துபோனது.

 

அன்னை எதையோ நினைத்து குடுத்திருக்கிறாரென.. நிரூபாவை கேடயம்போல முன்னிருத்தி பின்னிருந்து அத்தனை வேலைகளையும் ஜீவரத்னம் செய்திருக்கவேண்டுமென.. இதில் எங்கேனும் சிறு பிசகு நடந்தால்கூட மாட்டிக்கொள்வது நிரூபாவாய்தான் இருக்க வேண்டுமென நினைத்திருக்கிறார்..

 

அதான் சொன்னாரே..குற்ற உணர்விலேயே நிரூபா மீதி நாட்களை  கழிக்க வேண்டுமென..

மனிதனின் மனம் இத்தனை குரூரமானதா? என்று எழுந்த நினைவு உடனே அமிழ்ந்தது இல்லையென..

 

தன்மேல் முதலில் சந்தேகப்பட்டாலும்.. தனக்கு முடியவில்லை என்றதும் மருத்துவனாய் நின்று.. பின் அந்த ஃபார்ம் ஹௌஸில்கூட.. தன்னுடன் தனித்திருந்தவளை அவன் வார்த்தையால்கூட காயப்படுத்தவில்லையே!? மாறாய் அவளுக்கும் சேர்த்தல்லவா சமைத்து வைத்தான். போதாக்குறைக்கு  சீக்கிரம் சாப்பிடுங்க ஆஹிரி என்ற அறிவுரை வேறு! ஏன் இத்தனை நடந்தும்.. அவனை தான் நடுரோட்டில் இறக்கிவிட்டு விட்டு வந்தப் பிறகும் தன் நிலமை என்னவோ என்று அஞ்சியல்லவா அவனும் அங்கு வந்திருக்கிறான்.. அதனால் இப்பொழுது ஹாஸ்பிட்டலிலும் கிடக்கிறான்.. ம்ஹும்!

 

இப்பொழுது புரிகிறது எதனால் துஜிக்கு சாத்வதனை பிடித்ததென்று.. அவளை இரு முறை காத்தவனும்கூட.. ஒருவேளை ஜீவரத்னம் அதை எதிர்ப்பார்த்திருக்கவில்லைபோலும்.. துளஜாவின் காதலனை.. திட்டம்தீட்டி அவளை தனியாய் ஊட்டிக்கு அனுப்பி.. எவ்வளவு முயன்றும் தப்பினாள் என்றால்..? சாத்வதன் என்றொருவன் திடீரென குதித்தது போல..விசாரிக்கத் தொடங்கினால்.. அவனது பின்புலத்தை விசாரித்தவருக்கோ ஏதோ ஒன்று உறுத்த அதனால்தானோ என்னவோ அவனை பின்தொடரும்படி சொல்லியிருந்தார். அவரே எதிர்ப்பாராதது அவன் ஆஹிரியை தேடிச் சென்றது..

 

அத்தனை நேரம் பேசிக்கொண்டிருந்த அன்னை எழுந்துக்கொள்ளவும் ஆஹிரி கேள்வியாய் நோக்க நிரூபாவோ..

 

“பேசிட்டிருங்க..நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கறேன்..” என்றுவிட்டு தளர்ந்த நடையுடன் வெளியேறினார்.

 

“வதன் எப்படியிருக்காங்க?” என்ற கேள்வியில் ஆஹிரியின் புறம் திரும்பியவனோ..

 

“இப்போ பரவால்ல..பெருசா எதுவும் அடியில்ல..அவன் எழும்போதெல்லாம் ரொம்ப அரற்றானுதான் தூங்க வச்சிருக்காங்க..” என்றவனின் குரல் தேய்ந்தது.

 

“து..துஜிய பத்தி எதாவது தெரிஞ்சிதா?” என்றவள் குரலில் தன் முழு உயிரையும் தேக்கி கேட்க

தவிப்புடன் தன்னை பார்க்கும் விழிகளுக்கு எப்படி சொல்லவென்றுதான் புரியாமல் போனது நவனுக்கு.

 

ஆமென்று தலையசைத்தவன் பின் பெருமூச்சொன்றை இழுத்து விட்டவனாய்..

 

“கோடைக்கானல் பக்கத்துல.. அஸைலம்ல..” என்றவனின் வார்த்தைகள் மற்றவளின் பார்வை பயங்கரமாய் மாறியதில் தடைப்பட்டன..

 

“ஆரி..நம்ம துஜி நமக்கு உயிரோட கிடைச்சிட்டானு  நினைப்போம்டா!” சாமாதனாமாய் ஒலித்த குரலை சட்டை செய்யாதவளோ

 

“எப்படி..?” என்று கேட்பதற்குள் ஏழு மலையை கடந்த உணர்வு.

 

“ஆக்ஸிடென்ட்ல.. தலைல பலமா அடிப்பட்றுக்குபோல..” என்றவனின் குரலை தடுத்தது.

 

“இல்ல!!!” என்ற சாத்வதனின் அலறல்.

 

வாசலில் நின்று அலறியவனைக் கண்டு இருவரும் அதிர்ந்து நிற்க..

 

“இல்ல..இல்ல அச்சு..நீ சும்மாதானே சொல்ற? என் துஜாக்கு ஒன்னுமில்லதானே? அவ நல்லாதானே இருக்கா? அச்சு இங்க பாரு!! என்ன பாத்து சொல்லு அச்சு!!!!” என்ற சாத்வதன் நவயுகனின் தோளை பற்றிய உலுக்கியவனாய் கேட்க..

 

மறுப்பாய் அசைந்தது நவனின் தலை..”இல்ல வது..” என்றவன் தொடங்க சாத்வதனோ.. இடி விழுந்தைப்போல அப்படியே அமர்ந்துவிட்டான்.

 

திடீரென எழுந்துக்கொண்டவனோ மறுபடியும்..”எனக்கு துஜாவ பாக்கனும்!! இப்போவே!” என்றிருந்தான் ஸ்திரமாய்.

 

நவன் மறுப்பாய் ஏதேனும் சொல்வதற்கு முன் ஆஹிரியுமே அதையேதான் கேட்டுக் கொண்டிருந்தாள்.

 

“ப்ளீஸ் அரண்!! துஜிய பாக்கனும்..”

 

“இந்த நிலமைல..” என்றுத் தொடங்கியவன் பின்..”ஓகே! ஏற்பாடு செய்றேன்.. ஈவ்னிங் கிளம்பலாம்” என்றுவிட்டு கிளம்பியிருந்தான்.

 

“அம் ஸாரி ஆஹிரி..”என்ற சாத்வதனின் ஸாரி எதற்கென்று அவளுக்கு புரிந்துபோக..

 

“தட்ஸ் ஓகே வதன்.. நானும்தான் எல்லார் மேலயும் சந்தேகப்பட்டேன்.. “ என்றாள் புன்னகைக்க முயன்று.

புன்னகைக்க முயன்று தோற்றவனாய் அவனறையை நோக்கி நடந்திருந்தான் சாத்வதன்.

 

நிராலி நிரூபாவுடன் இருந்துவிட.. ஆஹிரி..சாத்வதன் மற்றும் நவன் மட்டுமே கிளம்பியிருந்தனர் கொடைக்கானலை நோக்கி..

 

முன்னிருக்கையில்.. ட்ரைவர் ஸீட்டில் நவனிருக்க அவனருகில் சாத்வதனும்..பின் ஸீட்டில் ஆஹிரியுமென தொடங்கியிருந்தது அவர்களது பயணம்.

 

ஒருமுறை குனிந்து தன் உடையை பார்த்துக்கொண்டாள் ஆஹிரி.. அதே வெள்ளை நிற முட்டியை தொட்டு நிற்கும் ஃப்ராக்!

 

நிராலிதான் கொண்டு வந்திருந்தாள் இவளுக்கென.. கூடவே கால்களில் கறுப்பு நிற வெட்ஜஸ்.. இந்த ஃப்ராக்..ம்ஹ்ம்!

 

என்றவள் தலையை பின்னால் சாய்த்தவளாய் அமர்ந்திருக்க எப்பொழுது உறங்கினாளோ..

 

காலை நேர குளுமையில்தான் எழுந்தாள். வண்டி டீக்கடையின் முன் நிற்க நவன்தான் டீ வாங்கிக் கொண்டிருந்தான். அவனுடன் சாத்வதனும்.

டீயைக் குடித்துவிட்டு கிளம்பினர். அங்கிருந்து சரியாய் ஒரு கால்மணிநேர பயணத்தில் அந்த அஸைலத்தை அடைந்திருந்தனர் மூவரும்.

 

வேறெதோ ஒரு பெயரில் அனுமதிக்கப்பட்டிருந்தாள் துளஜா.

 

முதலில் மருத்துவரை சந்தித்துவிட்டு வர… அவள் தூங்கிக் கொண்டிருப்பதாக உரைத்தவரோ.. எதற்கும் அவளாக எழுந்த பின்பே பார்க்க முடியும் என்றுவிட  காத்திருக்க தொடங்கினர்.

 

சாத்வதன் மருத்துவமனையை விட்டு அகல மறுத்துவிட.. ஆஹிரியை அதன் பின்னிருந்த தோட்டத்திற்கு அழைத்து வந்திருந்தான்  நவன்.

அந்த வெள்ளை நிற பெஞ்சில் எதிரெதிரே அமர்ந்திருந்தனர் இருவரும்..

 

நீண்ட நாட்களுக்குப்  பிறகு அவனை தனிமையில் சந்திக்கும் வாய்ப்பு.. இன்னும் தெளிய வேண்டியது சில இருந்தன அவளுக்கு.. அவனால் மட்டுமே பதலளிக்ககூடிய பதில்கள் அவை..

 

மௌனமாய் அமர்ந்திருந்தவள் திடீரென நினைவு வந்தவளைப்போல..”ஸோ.. நான் நினைச்சதுபோல எல்லாமே ட்ராமா.. அந்த அஞ்சு வருஷக் காதல்ல இருந்து..” என்றிழுத்தாள் கேள்வியாய்.

 

அதை தலையசைத்து மறுத்தவனோ..”முழு பொய்னு சொல்லிட முடியாது!” என்றான் கண்சிமிட்டி.

 

“நிரூம்மாவும் அம்மாவும் ஃப்ரெண்ட்ஸ்.. “ அவள் எதையோ கேட்க வாய்த்திறக்க அதை உணர்ந்தவனாய்.. “ஸ்கூல் டைம் ஃப்ரெண்ட்ஸ்டா!” என்றிருந்தான்.

 

“ம்ம்”

 

“மிஸ்டர்.ஜ..அங்கிள்ட்ட..இந்த ப்ரோபஸல நான்தான் கொண்டுவந்தேன்.. “ அவள் விழிகள் விரிந்ததை கவனித்தவனோ..

 

“எனக்கு மிஸ்டீரியஸான ஒரு ஜூனியர் இருந்தா.. யாருக்கிட்டயும் அவ்வளவா பேசாத.. ரொம்ப வித்தியாசமா.. நிறைய நேரம் தனியாதான் இருப்பா..  தனிமையின் காதலினு பலர் கிண்டலடிச்சிருக்காங்க!” என்க ஆஹிரியோ அவனையே நம்ப முடியாமல் பார்த்திருந்தாள்.

 

“அரண்..நீ என் சீனியரா??!!” என்றவள் பின்..”இல்லையே..உன்ன நான் பாத்ததேயில்லையே!” என்றிருந்தாள்.

 

“நான் உன்ன பாத்துருக்கேன் ஆரி.. நீ ஃப்ர்ஸ்ட் இயர் BBA.. நான் அப்போ MBA பண்ணிட்டிருந்தேன்..  அப்போ காதல்னுலாம் சொல்லமாட்டேன். ஆனா அங்கிள்ட்ட  கேட்டப்போ சரினு சொல்லிட்டாங்க.. பிடிச்சிது.. அப்போதான் எல்லாமே திடீர்னு நடந்துச்சு..

 

திடீர்னு சாத்வதன்ட்ட இருந்து எந்த தகவலுமில்ல.. எங்க போனான் என்ன ஆனானு புரியாம தேடிட்டிருந்தப்போதான் தெரிஞ்சிது அவனும்  துஜியும் காதலிச்சது.. எல்லா இன்ஸிடென்ட்ஸும் எதோ ஒரு பாய்ண்ட்ல் ஒத்துப்போன ஃபீல்.. நிரூம்மா கேக்கவும்  இதுதான் சரினுபட்டுச்சு..” என்றவனை இடைமறித்தவளாய்..

 

“எது என்ன கடத்தறது?” என்றிருந்தாள்.

 

“நீ ரொம்ப குழப்பத்துல இருந்த ஆஹிரி.. பஸிலோட பாதி உன்கிட்டதானே இருந்துச்சு!?”

 

“ம்ம்”

 

“அப்படியே விட்டிருந்தா விபரீதமா எதாவது நடந்துருக்கும்..”

 

அவளுக்கும் புரியத்தான் செய்தது இவன் இவனது தம்பிக்காகத்தான் இதை தொடங்கியிருக்கிறானென..

 

“அன்னைக்கு நைட் யாருட்ட அவ்ளோ கோவமா பேசிட்டிருந்த?” என்றவள் எதைபற்றி சொல்கிறாள் என்று புரிந்துவிட அவனோ..

 

“அந்த ஏஜென்ஸிய காண்டாக்ட் பண்ணி ஏதாவது விவரம் வாங்குனு சொல்லியிருந்தேன்.. ஆனா அப்படி எதுவும் பெருசா கிடைச்சிடல..” என்றிருந்தான்.

 

“அவங்களலாம் பிடிக்க முடியாதா?”

 

“அவங்கல்லாம் கொஞ்சம் பெரிய நெட்வர்க் ஆரி..”என்றுவிட சற்று நேரம் மௌனமே நிலவியது அங்கே.

 

“அந்த லவ் கேபின்..??” என்று தனது மிகப்பெரிய சந்தேகத்தை கேட்டிருந்தாள்.. ஏனெனில் உறுதியாய் தெரிந்துவிட்டது இவனுக்கும் அந்த மாயமாய் போன டைரிக்களுக்கும் சம்பந்தமில்லையென.. அன்று அவன் டைரியை அவளிடம் கொடுத்ததுகூட அவள் பொறுமையாய் யோசிக்கவேண்டும் என்பதற்காகத்தானோ!?.. அப்படி யோசிக்கபோய்த்தானே நினைவு வந்தது..இதைத்தானே ஜீவரத்னம் தடுக்க முயன்றிருக்கிறார்.

 

“அது முழுக்க முழுக்க கோ இன்ஸிடென்ஸ் ஆரி! எனக்குமே அச்சர்யம்தான்! என்றான் புன்னகைத்து.

 

“அன்னைக்கு ஏன் அப்படி பதில் சொன்ன? உன்ன பாத்தா அவளோ மட்டமான சிந்தனை இருக்கவனா தெரியல..” என்றாள் முதல் நாள் சம்பவத்தை நினைவில் வைத்து.

 

“எனக்குத் தெரியும்..ஆஹிரி ரொம்ப இன்டிபெண்டண்ட்! நீ கேட்ட கேள்விக்கு நான் அத சொல்லப்போய்த்தானே கோவம் வந்துச்சு?” எனவே புரிந்தது.. வேண்டுமென்றே அவன் செய்திருக்கிறானென.

 

“அதெப்படி நீ சரியா அங்க வந்த?” என்றவளுக்கும் அப்பொழுதே புரிந்தது இதை இத்தனை நேரம் எப்படி மறந்தோமென்று.

 

‘இப்படியே..கடைசிவர..அரணா இருக்க முடியும்னா நினைக்கற?’ என்ற ஆஹிரியின் குரல் அவன் காதுக்குள் இன்னும் ரீங்காரமிட்டன..

 

“அந்த ஸ்வெட்ஷர்ட்ல.. சிப் ஸெட் பண்ணியிருந்தேன் ஆரி.. நீ ஆக்ஸிடென்ட் நடந்த எடத்துக்கு கிளம்பறேன்னதுமே..அதுசரி நான் வருவேன்னு உனக்கு அவ்ளோ நம்பிக்கையா?” என்று கேட்க அவன் அவள் கட்டிப்போட்ட விதத்திற்கு கேட்கிறான் என்று புரிந்தது அவளுக்கு.

 

 

இவள் என்ன சொல்லியிருப்பாளோ அதற்குள் அவளை தடுத்து நிறுத்தியிருந்தது அப்பெண்மணியின் குரல்..

 

“உங்கள டாக்டர் கூப்பிறாரு!” என்றுவிட்டு தனது வேகநடையுடன் அவர் சென்றுவிட.. இருவரும் விரைந்திருந்தனர்.

 

தன்னெதிரில் நிற்பவனையே உடலைக் குறுக்கி மூலையில் ஒடுங்கியென.. முகத்தில் படர்ந்திருந்த கூந்தலின் நடுவே வெறித்துப் பார்த்திருந்தாள் துளஜா.

 

“துஜா..துஜாமா..?” என்று அழைத்தவாரே அவளை நெருங்கிக் கொண்டிருந்தான் சாத்வதன். அவன் நெருங்க நெருங்க அவள் சுவற்றோடு சுவராய் ஒட்டத் தொடங்கியிருந்தாள். அதை உணர்ந்தவனின் விழிகளில் வலி!!

 

“நான் சாத்வாடா!! உன் சாத்வா..” என்றவாரே அவள் கரம்பற்ற அவளோ சரமாரியாய் அவனை தாக்க துவங்கியிருந்தாள். அறைவாசலில் நின்றிருந்த ஆஹிரி உள்ளேச் செல்ல ஒரெட்டு எடுத்துவைக்க அவளை தடுத்திருந்தான் நவன்.

 

வேண்டாமென..

 

தன்னை அடித்துக் கொண்டிருந்தவளை இறுக்கி அணைத்தவனோ அவள் முதுகில் ஆதரவாய் நீவினான்.

 

“தப்புதான்டா! தப்புதான்! உன்ன இந்த நிலமைக்கு வர விட்டனே.. என்ன மன்னிச்சிரு துஜாமா..” என்றவனின் குரலிலேயே தெரிந்தது அவன் கண்ணீர்.

 

அடித்து ஒய்ந்தவளாய் அவன் அணைப்புக்குள் நின்றவளின் கண்களில் இருந்து தாமாய் கசிந்தது..

 

‘குழந்த தனத்தோட இருந்தவள..இப்படி குழந்தையாவே மாத்திட்டாங்களே..’

 

 

ஆஹிரி நின்றிருந்ததற்கு அருகில் பேப்பர் படபடக்கும் சத்தம் கேட்க பார்வையை திருப்பியிருந்தாள் அவளுக்கு அருகில் கிடந்த பெஞ்சில்..

 

அவளது கொலுசைத்தாங்கி நின்றது பேப்பர் ஒன்று.

 

கொலுசையும் பேப்பரையும் கையிலெடுத்தவளின் புருவங்கள் இரண்டும் முடிச்சிட்டுக் கொண்டன..  அதிலிருந்த வனமோஹினிக்கு, என்ற எழுத்துக்களில்..

 

பிரித்தவளின் முகமோ இன்னதென்று வரையறுக்க முடியாத ஒரு பாவனையில் மாறியது.

 

‘உனக்கிந்த கொலுச்சுன்னா ரொம்ப இஷ்டம்ல ஆரி’-யைக் கண்டு..

 

எதோ ஒன்று தன்னிடம் இருந்து நழுவிச்செல்வதைப்போல் உணர்ந்தாள்.. அது என்ன என்றுதான் சட்டென புரிபடாமல்போனது.. புரிந்த பின்போ.. அவளது பார்வை அவனுக்காய்ச் சுழல அதில் அவன் படவேயில்லை..

 

ஒருமுறை துளஜாவையும் சாத்வதனையும் பார்த்தவள் பின்பு விடுவிடுவென வாயிலை நோக்கி ஓடியிருந்தாள்.

 

தன்னை கடந்துச் சென்ற பெண்மணியை தடுத்து நிறுத்தியவளோ தன்னுடன் வந்தவனைப்பற்றி விசாரிக்க அவரோ அங்கு வெளிப்பக்கத்தில் இருந்த அடர்ந்த தோட்டத்தின்புறம் கைகாட்டி சென்றுவிட்டார்.

 

கொலுசை காலில் அணிந்தவளோ தோட்டத்தினுள் இறங்கி நடக்கத் தொடங்கியிருந்தாள்.. ஏனோ நேரம் செல்ல செல்ல அவளிடம் வேகம் கூடிக்கொண்டேப் போனது. ஒருவித தீர்மானத்துடன் இறங்கி நடந்தவளுக்கு சற்று தொலைவில் அவன் நடந்துக் கொண்டிருப்பது தெரிய.. அந்த ஆளரவமற்ற இடத்தில்..

 

“அரண்!!!” என்று கத்தியிருந்தாள்.

 

அவள் கத்திய விதத்தில் பட்டென நின்றவன் இவள்புறம் திரும்பிட இவளோ  இங்கிருந்தபடியே..

 

“அரணா இருப்பேன்னு சொல்லிட்டு பாதியிலேயே போற!?” என்றாள் கேள்வியாய்.

 

அவனோ, “உனக்குதான் மத்தவங்களோட பாதுகாப்பில இருக்கது பிடிக்காதே!” என்றுவிட

“அரணா இருக்க வேண்டாம்..மான்ஸ்டரா இருக்கலாம்ல?” என்றுவிட அதற்குமேல் பொறுமை காக்க முடியாதென்பதைப்போல கையை விரித்திருந்தான் நவன்..

எப்பவுமே..என்பதாய்.

 

விடுவிடுவென ஓடியவளோ சற்று குனிந்து நின்றவனின் கழுத்தை கட்டிக்கொள்ள அவளை அப்படியே பிடித்தவனாய் நிமிர்ந்து நின்றான்.. அவள் பாதங்கள் நிலத்தை ஸ்பரிசிக்காமல் போக..அவள் கால் கொலுசின் ஒலியே சங்கீதச் சாரலாய்..!!

 

அவன் முகத்தையே பார்த்திருந்தவளோ..”ஸோ..சொல்லுங்க மிஸ்டர்.நவயுகன்?” என்று கிண்டலாய் இழுக்க அவனோ..

 

“பச் பச்! நெருக்கமானவங்களுக்கு நவன்..அஃபிஷியலா யுகன்.. ஆஹிரிக்கு மட்டும் எப்பவுமே அரண்” என்றான் கண்சிமிட்டி.

 

“வனமோஹினி..” என்றான் அவளின் நெற்றியில் மெல்ல முட்டியவனாய்..

 

“என்னாச்சு??” என்று கேட்க அவளோ.. தீவிர முகபாவனையுடன்..

 

“முத்திப்போச்சு.. ஸ்டாக்ஹோம் ஸின்ட்ரோம்” என்று பாவமாய் சொல்லியவள் பின் சிரித்துவிட அதில் அவனது சிரிப்பொலியும் கலந்திருந்தது…

 

துஜி ஏன் டிஸ்டர்ப்டா இருந்தா..ஏன் அவளே போய் அப்பாட்ட போட்டிங் போகக் கேக்கணும்.. வதன் ஏன் காட்டுக்கு வரனும்.. இந்த நவன் ஏன் என் சீனியரா இருந்தும் அவ்வளவா ஞாபகமில்லை.. அம்மா ஏன் நவன்ட்ட உதவி கேக்கனும்.. இதெல்லாம்விட.. இத்தனை வருஷம் தெரியாத ஒன்னு இப்போ எதுக்கு சித்தப்பாக்கு தெரியவரனும்.. மனசளவுல அவருக்கு ஹெல்ப் தேவைங்கறத நாங்க யாரும் ஏன் கவனிக்காம விடனும்.. அன்னைக்கு கடைசி நிமிஷத்துல அம்மா ஏன் வராம போகனும்..அத்தனை நாள் என்மேல சந்தேகப்பட்ட வதன் ஏன் என்ன நம்பி வரனும்.. இந்த நவன் ஏன் அரணா இத்தன பெரிய ரிஸ்க் எடுக்கனும்.. இது எதுக்குமே என்கிட்ட பதிலில்ல.. ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம்.. எவ்ரிதிங் ஹாப்பன்ஸ் ஃபார் எ ரீஸன்!!

 

 

அவளின் அரணாய்

அவனும்..

அவனது வனமோஹினியாய்

அவளுமென..

காதலின் ராகமொன்று

நிறைவானது..!!

                                                 *******சுபம்******

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!