aanandha Bhairavi 20
aanandha Bhairavi 20
ஆனந்த பைரவி 20
திருச்சியின் அந்த மிகப்பெரிய ஜவுளி மாளிகையில் அத்தனை பேரும் கூடி இருந்தார்கள். வாசுகியும், மங்கையும் முழு மூச்சாக ஒவ்வொரு புடவையாக அலசி ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். பைரவி அவர்களுக்குப் பக்கத்தில் பாவமாய் உட்கார்ந்திருக்க, புடவையை அவள் மேல் வைப்பதும், எடுப்பதும் என்று அவளை ஒரு வழி பண்ணிக் கொண்டிருந்தார்கள். சாதனாவும், ஐஷுவும் அவர்களுக்கு தேவையானவற்றை தெரிவு செய்வதில் முழு மூச்சாக இருக்க, ஆனந்தன் இன்னும் வந்து சேரவில்லை. அம்மாவும், அத்தையும் சேர்ந்தால் கடை ரெண்டு படும் என்று தெரிந்திருந்ததால் கொஞ்சம் தாமதமாக வருவதாக சொல்லி இருந்தான்.
நேற்று இரவு விருந்து முடிந்து ஹோட்டல் ரூமிற்கு போன பிறகு பைரவியை அழைத்திருந்தான்.
“பைரவி இந்த இடம் ரொம்ப அருமையா இருக்கு. நீ இப்போ பக்கத்தில இருந்தா எப்படி இருக்கும் தெரியுமா?”
“எப்படி இருக்குமாம்” வேண்டுமென்று வம்பு வளர்த்தாள்.
“ரொமாண்டிக்கா இருக்கும்.”
“இத்தனை வயசுக்கு மேலே எனக்கு லவ்வெல்லாம் வராதுன்னு ஒருத்தர் எங்கிட்ட சொன்னாரே! அவரை நீங்க பாத்தீங்களா ஆனந்த்?” ஆழ்ந்த குரலில் சிரித்தவன்,
“அவனைத் தான் நானும் தேடுறேன் பைரவி, ஆனா காணல்லையே“
“ஓ… ரொம்ப வருத்தப்படற மாதிரி தெரியுது.”
“இல்லையா பின்னே, சும்மா இருந்தவனை சீண்டி விட்டுட்டு நீ பாட்டுக்கு இருக்க. என் நிலமையை பாத்தியா. எல்லோரும் நிம்மதியா தூங்குறாங்க. நான் இந்தப் புல்லு மேல வானத்தை பாத்து படுத்துக்கிட்டு அம்மணி இப்போ இங்கே இருந்தா நல்லா இருக்குமேன்னு யோசிச்சிக்கிட்டு இருக்கேன்.” அவள் மெலிதாக சிரிக்க,
“ஏய் பட்டு, இன்னைக்கு நான் ரொம்ப ஹாப்பியா இருக்கேன் தெரியுமா?”
“ஏனாம்?”
“ரொம்ப நாள் கழிச்சு அம்மணியை பாத்தது, என்னமோ அப்படியே எனர்ஜி ஏறின மாதிரி இருக்கு?”
“ம்…”
“அதுக்கப்புறம்…” அவன் குறும்பாக இழுக்க,
“எங்க வீட்டுக்கு முதல் முதலா வந்திருக்கீங்க, அதால சந்தோஷமா இருந்திருக்கும்.” அவள் முந்திக் கொண்டு பதில் சொல்ல, வாய் விட்டு சிரித்தவன்…
“சமத்துடி நீ, ஆக்ஷ்னுக்குத்தான் தடைன்னு பாத்தா பேச்சுக்குமா? நடத்து, நடத்து. எல்லாம் இன்னும் ஒரு வாரத்துக்கு தான். அதுக்கப்புறம் என்ன பண்ணுறேன்னு பாக்கிறேன்.”
“நாளைக்கு வருவீங்க இல்லை ஆனந்த்?”
“கொஞ்சம் லேட்டாத்தான் வருவேன்டா. அம்மாவும், அத்தையும் சேந்தா கடையை ஒரு வழி பண்ணிடுவாங்க. அந்த நேரத்துக்கு நான் ரெண்டு வேலையை முடிச்சிருவேன்.”
“கல்யாணத்துக்கு அப்புறம் எனக்கும் இப்படித்தான் சொல்லுவீங்களா?”
“சான்ஸே இல்லை. ஏன்னா உனக்கு செலெக்ட் பண்ணப்போறது நான். ஸோ யூ டோண்ட் வொர்ரி பேபி!”
“ம்…”
“முகூர்த்த பட்டு கூட நான் ஏற்கனவே வாங்கியாச்சு. என்ன வெள்ளைப் பட்டு. சூப்பரா இருந்தது. பாட்டி ஒரே சண்டை. கல்யாணத்துக்கு அந்தக் கலர் உடுத்தக் கூடாதுன்னு. சரி நான் இதை வாங்குறேன். நீங்க வேற கலர் வாங்குங்கன்னு விட்டுட்டேன்.”
“அப்போ அதை என்ன பண்ணப் போறீங்க?”
“ஏய் பட்டு, கல்யாணத்துக்கு அப்புறமா நிறைய விஷயம் இருக்குடி” அவன் குரலில் பேதத்தை உணர்ந்தவள், பேச்சு அபாயகரமாக போவதை உணர்ந்து அத்தோடு முடித்துக் கொண்டாள்.
வாசுகி இன்னொரு புடவையை அவள் மேல் வைத்துப் பார்க்க சிந்தனை கலைந்தவள், மெதுவாக சிரித்துக் கொண்டாள்.
கண்கள் இரண்டும் ஆனந்தன் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தது.
**–**–**–**–**–**
காரை ஓரிடத்தில் நிறுத்தி விட்டு அமைதியாக இருந்தான் ஆனந்தன். குடும்பமாக அத்தனை பேரும் முகூர்த்த பட்டு எடுக்கப் போயிருந்தார்கள். கொஞ்சம் தாமதமாக வருவதாக சொல்லி விட்டு, அந்த நேரத்திற்குள் அரவிந்தனை அழைத்திருந்தான்.
சற்று முன்பு தான் அரவிந்தன் வந்து போயிருந்தான். அவன் வீடு வரை சென்று பத்திரிகை வைக்க ஆனந்தனுக்கு விருப்பம் இல்லை. ஆனால் நண்பனை புறக்கணிக்கவும் முடியவில்லை. பொது இடத்திற்கு அழைத்து பத்திரிகை கொடுத்தான். அரவிந்தனும் தப்பாக எடுத்துக் கொள்ளாமல் ஆனந்தனின் நிலையை புரிந்து கொண்டான்.
தூரத்தே உச்சிப் பிள்ளையார் கோவில் தெரிந்தது. அன்றொரு நாள் இதே கோவிலுக்கு சென்று ஆர்த்தியை சந்தித்தது ஏனோ ஞாபகத்திற்கு வந்தது. எத்தனை பெரிய கறையை அந்தப் பெண் தனக்கு ஏற்படுத்தி விட்டாள் என்று நினைக்கும் போது நெஞ்சு கொதித்தது.
சொல்லாமல் கொள்ளாமல் பைரவியின் குளிர் முகம் கண்ணில் தோன்ற, சீட்டில் சாய்ந்து உட்கார்ந்தான். ஏன் கடவுள் தனக்கு இந்தப் பெண்ணை முதலில் காட்டவில்லை. அதுவும் அவளோடான ஒவ்வொரு பொழுதுகளும் நினைவுக்கு வரும் போது சுகமாக இருந்தது. கண்களை மூடிக் கொண்டான்.
நேற்று அவளைக் காணும் ஆவலில் இருந்தவனை கலைத்தது என்ஜினியரின் குரல். டைல்ஸ் குறைந்து போய்விட்டதாக சொல்லவே, அதே டிஸைன் தேடி கொஞ்சம் அலைய வேண்டி இருந்தது. வேலையை முடித்து விட்டு ஓடி வந்து பார்த்தால்…
பால்கனியில் எழிலோவியமாக பைரவி!
அத்தனை தொலைவில் கூட அவனை வசீகரித்தாள் அந்தக் காரிகை. இவளைப் பார்க்கும் போதெல்லாம் தான் ஏன் கண்ணியத்தை கடன் கொடுத்து விடுகிறோம் என்பது இன்று வரை ஆனந்தனுக்குப் புரியவில்லை. கட்டுக் காவல்களை மீறி அவன் கண்கள் அவளை ரசித்தது. ஆனாலும் அது போதவில்லை. கீழே வரச்சொல்லி அழைத்து விட்டுத்தான் உள்ளே போனான்.
ஜூஸ் சிந்தியபோது கூட அவன் மேல் ஒன்றிரண்டு துளிகள் தான் தெறித்தது. அதற்கு ஏன் ஐஷு இத்தனை ஸீன் போடுகிறாள் என்று தான் முதலில் தோன்றியது.
பைரவி முன்னால் போக, இவன் அவளைத் தொடர்ந்தவன், சட்டென்று கதவு மூடும் சத்தம் கேட்கவே திரும்பிப் பார்த்தான். பைரவியையும், தன்னையும் தவிர யாரும் இல்லை. இந்தப் பெண்களின் கூத்து அப்போது புரிய சிரித்துக் கொண்டான்.
இருந்தாலும் கிடைத்த வாய்ப்பை தவற விட அவன் ஒன்றும் முட்டாள் அல்லவே!
எத்தனை மென்மை. தான் தொட்டபோது கூசிச் சிலிர்த்த அந்த மேனி இப்போதும் போதை ஏற்றியது ஆனந்தனுக்கு. அந்தக் கணம் அப்படியே உறைந்து போகக் கூடாதா என்று தான் தோன்றியது. விவரமாகப் பயன்படுத்திக் கொண்டான்.
**–**–**–**–**–**
அந்த இரண்டு பெரிய கோச்களும் (coach) பூஞ்சோலையை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. அருந்ததியின் சொந்தங்கள், சந்திரனின் சொந்தங்கள் என கூட்டம் நிரம்பி வழிந்தது. காலையிலேயே புறப்பட்டு விட்டார்கள். பின்னேரம் மண்டபத்தில் நிச்சயதார்த்தம், மறுநாள் காலையில் முகூர்த்தம் என நேரங் குறிக்கப்பட்டிருந்தது.
பைரவி அமைதியாக அந்த ஜன்னலோர சீட்டில் அமர்ந்தபடி வெளிப்புறத்தை நோட்டமிட்டுக் கொண்டிருந்தாள். ஆனால் மனம் மட்டும் முதன் முதலாக அந்த கிராமத்துக்கு வந்த நாளை அசை போட்டுக் கொண்டிருந்தது.
எத்தனை ஆசைகளை மனதில் சுமந்து கொண்டு, அது நிறைவேறுமா, நிறைவேறாதா? எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் தான் அந்த ஊரில் காலடி வைத்தாள். தன் காதல் மேல் வைத்த நம்பிக்கையை மட்டும் பற்றுக்கோடாகக் கொண்டு அம்மாவை எதிர்த்து, அப்பாவிடம் மறைத்து என எத்தனை வேதனைகள். ஆனால் இன்று…
அவள் உதடுகளில் புன்னகை நெளிந்தது. அந்த உணர்வு தந்த சுகத்தில் கண் மூடிக் கொண்டாள்.
கொடி வீடு ஆட்களால் நிரம்பி வழிந்தது. பெண் வீட்டார் போய்ச் சேர்ந்தது தான் தாமதம், அந்த இடமே கோலாகலமாகிவிட்டது.
வாசுகி தன் கையாலேயே தன் மருமகளுக்கு ஆரத்தி சுற்றினார். தன் நெடுநாள் கனவு நனவானதில் அத்தனை பூரிப்பு அவருக்கு. எல்லாம் இந்தப் பெண்ணின் ராசிதான் என்று நிச்சயமாக நம்பினார்.
மதியத்திற்கான விருந்து ஒரு புறம் தடபுடலாக ரெடியாகிக் கொண்டிருந்தது. பைரவிக்கு கொஞ்சம் களைப்பாக இருக்கவே, தனது ரூமிற்குள் புகுந்து கொண்டாள்.
அவள் விட்டுப் போன அத்தனை பொருட்களும் அந்தந்த இடத்தில் அப்படியே இருந்தது. அலமாரியில் கொண்டு வந்திருந்த பொருட்களை வைக்கத் திறந்தவள் அதில் புதிதாக குடிவந்திருந்த அந்த ஃபோட்டோவை கையில் எடுத்தாள்.
ரிசோர்ட்டில் ஆனந்தனின் மேஜை மேல் இருந்த அதே ஃபோட்டோ. சின்னதாக ஃப்ரேம் பண்ணி வைத்திருந்தான். புன்னகையோடு பார்த்திருந்தவளை கலைத்தது ஃபோன். யாரெனப் பார்க்க… அவள் சிந்னையின் நாயகன் அழைத்துக் கொண்டிருந்தான். அழைப்பை ஏற்க,
“என்ன பண்ணையாரம்மா, வந்து சேந்துட்டீங்களா?” என்றான்.
“ம்…”
“என்ன பண்ணுறீங்க அம்மணி?” அவன் குரலில் அத்தனை உற்சாகம்.
“என் ரூமுக்குள்ள யாரோ என்னோட பெர்மிஷன் இல்லாம வந்து, என்னென்னமோ பண்ணி இருக்காங்க. அதை பண்ணையார் கிட்ட சொல்லுறதா, வேணாமான்னு யோசனை பண்ணிக்கிட்டு இருக்கேன்.”
“ஹா… ஹா… ஏய் பட்டு, ஃபோட்டோ பாத்தியா?”
“ம்… இது யாரு எடுத்தா? எனக்குத் தேரியாதே?”
“வெயிட் அன்ட் சீ பேபி, உங்களுக்கு நிறைய ஆச்சரியங்கள் காத்துக்கிட்டு இருக்கு.”
“என்னன்னு தான் சொல்லுங்களேன்” அவள் குரல் கொஞ்சியது.
“மேடம் வெறும் ப்ளூ ப்ரிண்ட் தானே பாத்தீங்க. இப்போ முழுசா, உருவத்தோட நிக்குற என்னோட கனவை இன்னும் பாக்கலையே. பாத்துட்டு சொல்லுங்க, எப்பிடி இருக்குன்னு.”
“ம்…”
“சரிடா, ட்ராவல் பண்ணின டயர்ட் இருக்கும். கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு மண்டபத்துக்கு வந்து சேருங்க பொண்டாட்டி”
“ம்…” என்றாள் சிரித்துக்கொண்டே.
**–**–**–**–**–**
அந்த Black Audi மண்டப வாசலில் வந்து நின்றது. அத்தனை பேரின் கவனமும் அங்கு திரும்ப, ட்ரைவர் திறந்து விட்ட கதவைப் பிடித்தபடி இறங்கினாள் பைரவி.
அது ஆனந்தன் பைரவிக்கு விடுத்த உத்தரவு. அந்தக் கார் அவளுக்கும் எத்தனை பிடித்தம் என்பதை அறிந்ததால் இந்த ஏற்பாட்டை பண்ணி இருந்தான். சந்திரனுக்கு காரைப் பார்த்த பிறகு தான் மகளின் ஆசை புரிந்தது.
கண்களால் ஆனந்தன் எங்கேயாவது தென்படுகிறானா என்று துழாவியபடி காரை விட்டிறங்கினாள் பைரவி. மண்டபம் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. ஆனால் எந்தவொரு ஆடம்பரமும் இல்லாமல் அத்தியாவசியங்களே எங்கும் நிறைந்திருந்தது. அவள் ஏற்கனவே அந்த ஊருக்கு அறிமுகம் என்றாலும் புதுப்பெண்ணை பார்க்க எல்லோரும் ஆர்வம் காட்டினார்கள். அதுவும் ஆனந்தன் எல்லோரது அன்புக்கும், மரியாதைக்கும் உரியவன் என்பதால் ஆளாளுக்கு வந்து பார்த்து விட்டு போனார்கள்.
அடர்ந்த பின்க் நிறத்தில் ஒரு பட்டு உடுத்தி இருந்தாள். உடல் முழுவதும் தங்க ஜரிகைப் பூக்கள் நெய்யப்பட்டிருந்தது. பெரிய கோல்ட் போடரும் அதே நிறத்தில் ப்ளவுசுமாக ஒரு தாமரையைப் பார்ப்பது போல இருந்தது. அன்று நகைகளை கொஞ்சம் அதிகமாகவே அணிந்திருந்தாள். அருந்ததியின் உத்தரவு அது.
கழுத்தை ஒட்டி சின்னதாக ஒரு ஆரம், அதை அடுத்து சற்றுப் பெரிதாக ஒரு ஆரம், காதில் பெரிய குடை ஜிமிக்கி, கை நிறைய வளையல்கள் என்று அத்தனை அழகாக இருந்தாள். கண்களுக்கு லேசாக மையிட்டிருக்க, அந்த மைவிழி இரண்டும் தன் மனாளணைத் தேடிய வண்ணமே இருந்தது.
மாடியிலிருந்த தன் அறையிலிருந்து அத்தனையையும் பார்த்திருந்தான் ஆனந்தன். கண்களை அவளை விட்டுத் திருப்ப முடியவில்லை. அத்தனை அழகாய் இருந்தாள். இந்தப் பெண் தனக்குரியவள் என்று எண்ணும் போது கொஞ்சம் பெருமிதமாக இருந்தது. சிரித்துக் கொண்டான்.
பெண் மண்டபத்திற்கு வந்து சற்று நேரத்திற்கு பிறகு நிச்சயதார்த்தம் வைத்திருந்தார்கள். சபையில் அத்தனை பேரும் கூட, ஆனந்தனும் அமர்ந்திருந்தான். பட்டு வேட்டி சட்டையில் மாப்பிள்ளைக் கோலம் பார்க்க அமர்க்களமாக இருந்தது.
பெண்ணும் அழைத்து வரப்பட, சடங்குகளை ஆரம்பித்தார்கள்.
ஒரு கணம் ஆனந்தனின் இதயம் நின்று துடித்தது. அந்தக் கணப் பொழுதில் ஆர்த்தியின் முகம் மின்னலாய் வந்து போக, தன்னை சுதாரித்தவன், நிகழ்காலத்தை மட்டும் நினைத்துக் கொண்டான். இனி என்றைக்கும் இந்த பைரவி மாத்திரமே என்று எண்ணிய மாத்திரத்தில் மனதில் இருந்த அத்தனை சஞ்சலங்களும் மறைந்து போனது.
‘லக்னப் பத்திரிக்கை‘ படித்து திருமணத்தை இரு வீட்டாரும் நிச்சயப் படுத்தினார்கள். அது முடியவே, நலங்கு வைக்கிறோம் என்று சாதனாவும், ஐஷுவும் பைரவியை ஒரு வழி பண்ணிக் கொண்டிருந்தார்கள். சுமங்கலிகள் நலங்கு வைக்க, அந்த இடமே கலகலப்பாக இருந்தது. ஆனந்தன் அமைதியாக உட்கார்ந்து அனைத்தையும் பார்த்திருந்தான்.
“அத்தான், நீங்க கல்யாணப் பொண்ணுக்கு நலுங்கு வைக்கலியா? வாங்க வாங்க.” ஐஷ்வர்யா அவனை கைப்பிடியாக அழைத்துச் செல்ல, அங்கிருந்த அனைவருமே சிரித்தார்கள். ஆனந்தனுக்கு சங்கடமாகிப் போனது.
“ஐஷு, அதெல்லாம் வேணாம் டா” சொல்வதைக் கேட்டால் அது ஐஷு இல்லையே. விடாப்பிடியாக அவனை அழைத்துச் சென்றவள் சந்தனக் கிண்ணத்தை அவனிடம் நீட்ட…
அதை எடுத்தவன் பைரவியின் கன்னத்தில் பூசினான். அண்ணார்ந்து தன் முகம் பார்த்து சிரித்தவளை அள்ளிக் கொள்ளலாம் போல இருந்தது ஆனந்தனுக்கு.
அடுத்ததாக குங்கமத்தைக் கொடுக்க, அதையும் நெற்றியில் வைத்து விட்டான்.
“ஐயோ அத்தான்! சுத்த மண்டு நீங்க. எல்லாரும் நெத்தியில வைப்பாங்க. நீங்க மட்டும் தான் ஒரே ஒரு இடத்துல ஸ்பெஷலா வைக்க முடியும். அங்க வைங்க.” ஐஷ்வர்யா பிடிவாதம் பிடிக்க, ஆனந்தன் சிரித்தான்.
ஆவலாய் அவன் முகம் பார்த்தவளிடம் கண்ணாலேயே அனுமதி கேட்க, அங்கே ஆணையே பிறந்தது. சிரித்தபடி குங்குமத்தை சற்று அதிகமாகவே தன் பெருவிரலையும், சுட்டுவிரலையும் சேர்த்து எடுத்தவன், அவள் நெற்றி வகிட்டில் நீளமாகத் தீற்ற அந்தக் கணத்தை கண்மூடி அனுபவித்தாள் பைரவி. சுற்றியிருந்த இளையவர்கள் கைகொட்டி ஆர்ப்பரிக்க, பைரவிக்கு லேசாக கண்கள் பனித்தது. ஆனந்தனுக்குமே ஏதோ ஓர் புது விதமான நூதன உணர்வு உடலெங்கும் ஓடியது. தன்னையே பார்த்திருந்தவளை பார்த்து வசியமாகப் புன்னகைத்து, கண்ணடித்தவன் பன்னீரைத் தூவி விட்டுப் போனான். இமைக்க மறந்து பார்த்திருந்தாள் பைரவி.
**–**–**–**–**–**
கேளிக்கைகள் அனைத்தும் முடிந்திருக்க, டின்னரை முடித்துவிட்டு எல்லோரும் படுக்கைக்கு தயாரானார்கள. பைரவி தனக்குரிய அறையில் ஓய்வாக அமர்ந்திருந்தாள். நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்தவன் ஞாபகமாகவே இருந்தது. ஃபோனை எடுத்து அழைக்க, தாமதமாகவே ஆன்ஸர் பண்ணினான்.
“என்ன பண்ணுறீங்க ஆனந்த்?”
“பட்டு, ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் வந்திருக்காங்கடா. சின்னதா ஒரு பார்ட்டி அரேன்ஜ் பண்ணி இருந்தேன்.” அவன் பேசும்போதே பின்னணியில் சிரிப்புச் சத்தம் நன்றாகவே கேட்டது.
“பார்ட்டியின்னா?” அவள் கேட்க, சிரித்தவன்…
“பார்ட்டியின்னா… எல்லாம் இருக்கும்…” அவனுமே சிரித்தபடி இழுத்தான்.
“பார்ட்டியில எல்லாம் இருக்கும், அது புரியுது. பண்ணையார் வசதி எப்படி?”
“லைட்டா கொஞ்சம் பியர். அவ்வளவுதான் பட்டு. ஜஸ்ட் ஒரு கம்பனிக்காக.”
“எப்போதாவது ஒரு ‘சிகரெட்’ ன்னுதான் நினைச்சேன். இப்போ பியரா?”
“இதுவும் இல்லைன்னா ஃப்ரெண்ட்ஸ் கேலி பண்ணுவானுங்கடி. நீயே சாமியார் எங்கிற. பசங்க என்ன சொல்லுவாங்க. புரிஞ்சுக்கோடி.”
“என்ன ஃப்ரெண்ட்ஸோ?” அவள் அங்கலாய்க்க, சிரித்தவன்…
“செம மூட்ல இருக்கேன் பைரவி. ஸ்பொயில் பண்ணாதே. லெட் மீ என்ஜோய் திஸ் மொமன்ட் பட்டு“
“சரி சரி, சீக்கிரம் தூங்குங்க. காலைல சீக்கிரம் எழுந்திருச்சு வந்திடுவீங்களா? இல்லை…” சிரித்தபடியே இழுக்க…
“வைடி ஃபோனை” சிரித்துக் கொண்டே அழைப்பைத் துண்டித்தான்.
உதட்டில் புன்னகை உறைய விடியும் பொழுதிற்காக காத்திருந்தாள் பைரவி.
ஆனந்தனின் பைரவி!