ஆனந்த பைரவி 21
மண்டபத்தை நிறைத்திருந்தது நாதஸ்வர ஒலி. ஊர் மக்கள், உற்றார், உறவினர் என நிறைந்திருந்தது அந்த இடம். மணவறையில் ஆனந்தன் உட்கார்ந்து ஐயர் சொல்லிக் கொடுத்த மந்திரங்களை உச்சரித்துக் கொண்டு இருந்தான்.
சற்று முன்னர் கன்னிகாதானம் நடந்து முடிந்திருந்தது. சந்திரனும், அருந்ததியும் கண்கள் குளமாக தங்கள் மகளை தாரை வார்த்துக் கொடுத்திருந்தனர்.
மாப்பிள்ளை வீட்டார் கொடுத்த கூறைப் பட்டுடன் மணமகள் அலங்காரம் நடந்து கொண்டிருக்க, சபையில் கூடியிருந்த பெரியோர்களிடம் தாலி இருந்த தட்டத்தை எடுத்துச் சென்று ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டிருந்தாள் சாதனா.
எல்லோர் கண்களும் மணப்பெண் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தது. லியம் எல்லாவற்றையும் ஒரு லயிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான். தமிழர் கலாசாரத்தில் மோகங் கொண்டவனுக்கு இந்த இந்தியத் திருமணம் அத்தனை அற்புதமாக இருந்தது. ஒவ்வொரு சடங்கையும் தன் கமெராவிற்குள் சிறைப்பிடித்துக் கொண்டிருந்தான்.
மணமகளின் அறைக்கதவு திறக்கவே, எல்லோர் கண்களும் அங்கு ஆவலாகத் திரும்பியது.
அரக்கு நிறமும், மஞ்சளும் போட்டி போட ஜொலித்தது அந்த கூறைப்பட்டு. உடல் முழுவதும் மயில் கண்கள் ஜரிகைகளால் நெய்யப்பட்டிருக்க, அடர்ந்த சிவப்பில் பெரிய போடர் இருந்தது. ஒரு சாண் அகிலத்தில் இருந்த அந்த போடரில் சிறிதும் பெரிதுமாய்ப் பூக்களும், மாங்காய் டிசைனும் அள்ளித் தெளித்திருந்தது. ஹெட் பீஸ் தனியாக தங்க நிறத்தில் தக தகவென்று இருந்தது. அரக்கு நிற ப்ளவுஸ் பைரவியின் நிறத்திற்கு தூக்கி அடித்தது.
உடம்பில் ஓர் இடம் பாக்கி இல்லாமல் ஆபரணம் பூட்டி இருந்தார் அருந்ததி. மாப்பிள்ளை வீடு ஊரிலேயே மிகவும் செல்வாக்கானவர்கள் என்று அறிந்ததால், தான் மகளுக்கு ஏற்கனவே சேர்த்து வைத்திருந்த நகைகள் போக இன்னும் கொஞ்சம் வாங்கிக் கொண்டார். மாப்பிள்ளை வீட்டிற்கு தாங்கள் எந்த வகையிலும் குறைச்சல் இல்லை என்பதை பறை சாற்றுவதாகவே இருந்தது அவரின் ஒவ்வொரு செயல்களும்.
கழுத்து முழுவதும் வரிசையாக அணிகலன்கள் இருக்க, கை இரண்டிலும் வளையல்கள் குலுங்கியது. அவள் மெல்லிடையை தொட்டுத் தழுவியிருந்த தங்க ஒட்டியாணத்தின் பட்டுக் கயிறு அவள் இடை நெருக்க, அதில் தொங்கிக் கொண்டிருந்த முத்து மணிகள் லேசாக சத்தம் எழுப்பியது.
ஆனந்தனுக்கு மலர்ந்தும் மலராத மல்லிகை பூ நிரம்பவே பிடிக்கும் என்பதால் ஒரு கூடைப் பூவை விரும்பியே தலையில் வைத்திருந்தாள் பைரவி. நெற்றிச் சுட்டி, சூரிய சந்திர பிறைகள் என அவள் தலை வர்ண ஜாலம் காட்டியது.
பியூட்டி பார்லர் பெண்கள் தங்கள் கைவண்ணத்தை காட்டியிருக்க, பைரவியின் மூக்கில் புதிதாக இடம்பிடித்திருந்த அந்த ஒற்றைக் கல் வைர மூக்குத்தி ஆனந்தனின் ஆசையை கட்டியங் கூறியது.
சர்வலங்கார பூஷிதையாக அவள் நடந்து வர, அந்த மண்டபத்தின் அனைத்துக் கண்களும் அவள் மேல் மொய்த்திருந்தது.
ஒரு சில நொடிகள் இமைக்க மறந்து அவளைப் பார்த்திருந்தான் ஆனந்தன். வழமைக்கு மாறாக இன்று சற்று அதிகமாக தீட்டியிருந்த கண்மையும், லிப் க்ளொஸ்ஸும் அவனை மயக்கியது.
மணவறையை சுற்றி குடும்பத்தினர்கள் ஆண்கள் ஒரு பக்கமாகவும், பெண்கள் மறு பக்கமாகவும் நின்றிருந்தனர். தங்கள் பெண்ணை அந்தக் கோலத்தில் பார்த்த பெற்றோர் நெஞ்சு நிறைந்திருக்க, இவள் இனி எங்கள் வீட்டுப் பெண் என்ற புழகாங்கிதத்தில் இருந்தனர் மாப்பிள்ளை வீட்டார்.
பைரவி நேராக மணவறைக்குப் போகாமல் முதலில் சந்திரனிடம்தான் போனாள். அவர் கைகள் இரண்டையும் பிடித்து தன் கன்னத்தில் வைத்துக் கொண்டவள், அவரைப் பார்த்து சிரிக்க… நெகிழ்ந்து போனார் சந்திரன். கண்கள் இரண்டும் கலங்க,
“கண்ணம்மா… பைரவி…!” அதற்கு மேல் பேச அவருக்கு வார்த்தை வரவில்லை. சுற்றியிருந்த அனைவருக்குமே கண்கள் கலங்க, ஆனந்தன் அனைத்தையும் ஒரு புன் சிரிப்போடு பார்த்திருந்தான்.
“அப்பாவும், மகளும் என்னைக் கடுப்பேத்துறதுக்கே இப்படி ஸீனைப் போடுவாங்க” அருகில் நின்றிருந்த வாசுகியிடம் கேலியாக அருந்ததி சொன்னாலும், அந்தக் குரலில் பெருமையே மிஞ்சி நின்றது.
“பொண்ணை வரச் சொல்லுங்கோ” ஐயர் குரல் கொடுக்க, சந்திரனே தன் மகளைக் கைப்பிடித்து மணவறைக்கு அழைத்துச் சென்றார்.
அவள் பிறந்த போது முதன் முதலாக அவளை கையிலேந்திய அந்தப் பொழுது சந்திரனின் மனதில் நிழலாடியது. தான் லட்சம் லட்சமாக சம்பாதித்த போது கிடைக்காத சந்தோஷத்தை ஒரு நொடிப் பொழுதில் தன் மகள் தனக்குக் கொடுத்து விட்டதை நினைத்து மகிழ்ந்து போனார்.
சடங்குகளும், சம்பிரதாயங்களும் இன்னும் கொஞ்ச நேரம் நீடிக்க…
வேதியர் வேதம் ஓத, கெட்டி மேளம் முழங்க, நாதஸ்வரம் ஒலிக்க, பைரவியின் கழுத்தில் மூன்று முடிச்சுப் போட்டான் ஆனந்தன்.
‘பாக்கியவதியே! யான் சிரஞ்சீவியாக இருப்பதற்கு காரணமாக இந்த மாங்கல்யத்தை உன் கழுத்தில் கட்டுகிறேன். நீயும் நூற்றாண்டு வாழ்வாயாக‘
உற்றமும், சுற்றமும் சூழ இருந்து அட்சதை தூவ அங்கே மாங்கல்ய தாரணம் நடந்தேறியது. மாலையும் கழுத்துமாக தன் அருகே அமர்ந்திருந்தவளை ஒரு நொடி ஆனந்தன் பார்க்க, அந்தப் பார்வையை உணர்ந்தவள் தானும் தலை நிமிர்ந்து பார்த்தாள். கண்கள் நான்கும் கலந்து கொள்ள அங்கே ஆனந்தம் கும்மி கொட்டியது.
‘நீயும், நானும் முதுமை அடைந்து விட்டாலும் கூட ஒருவரை ஒருவர் பிரியாதிருப்போம்‘,
என்று மந்திரமோதி தன் மனைவியின் கைப் பிடித்து அக்கினியை வலம் வந்தான் ஆனந்தன்.
அம்மி மிதித்து…
‘இந்தக் கல்லைப் போல உறுதியாக நின்று உன் எதிரிகளைச் சகித்துக் கொள்‘
என மந்திரமோதி அவள் காலில் மெட்டி அணிவித்த போது அவன் சின்ன விரலில் கணபதி ஹோமம் நடந்த அன்று அவள் போட்டு விட்ட மோதிரம் இருந்தது.
தம்பதிகள் பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்க, நண்பர்களும் உற்றார் உறவினர்களும் வாழ்த்துத் தெரிவித்தனர். லியம் அருகில் வந்தவன், ஆனந்தனை ஆரத்தழுவி தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினான். பைரவியின் கையைப் பிடித்தவன் வார்த்தைகள் வராமல் வெறுமனே சிரித்தான். மூன்று நாட்கள் மாத்திரமே விடுமுறை கிடைத்திருந்ததால், அன்றே புறப்பட வேண்டி இருந்தது. மணமக்களிடம் விடைபெற்றுக் கொண்டான்.
அடுத்து அவர்களை நோக்கி அரவிந்தன் வர, பைரவியின் உடல் விறைத்தது. அதை உணர்ந்த ஆனந்தன் அவள் கைபிடித்து ஆசுவாசப் படுத்த, அவன் முகம் பார்த்தவள் சிரிக்க முயன்று தோற்றாள்.
அரவிந்தன் எந்த வித பாகுபாடும் இன்றி ஆனந்தனை தழுவிக்கொண்டான். பைரவியின் அருகில் வந்தவன், அவள் வெளுறிய முகம் பார்த்து கனிவு கொண்டவனாக அவள் தலையை வருடிக் கொடுத்தான். அவள் லேசாகப் புன்னகைக்கவும்,
“நீ ரொம்ப லக்கி பைரவி, ஆனந்தன் என் நண்பன் என்றதுக்காக இதை நான் சொல்லலைம்மா, மனசார சொல்லுறேன். நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும். மனசுல எந்த குற்ற உணர்ச்சியும் உனக்குத் தேவையில்லை பைரவி. என் தங்கை அவள் வாழ்க்கையை சந்தோஷமா ஆரம்பிக்கணும். அப்போ தான் இந்த அண்ணனுக்கு சந்தோஷம். சரியாடா” அவன் நீளமாகப் பேசி முடிக்க, விக்கித்துப் போனாள் பைரவி. இதை அவள் அரவிந்தனிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. கண்கள் கலங்க…
“அரவிந்த் அண்ணா” என்க,
“எதுக்கும் கண் கலங்க கூடாது சரியா?”
“ம்…” அனைத்தையும் உணர்ச்சிகளற்ற முகத்தோடு பார்த்திருந்தான் ஆனந்தன்.
**–**–**–**–*–**–**
மணமக்கள் மாப்பிள்ளையின் வீட்டிற்கு வந்திருந்தார்கள். விருந்தினர் ஆரவாரம் ஒரு பக்கம் இருக்க, குடும்ப அங்கத்தவர்கள் பம்பரமாக சுழன்று கொண்டிருந்தார்கள். சடங்குகள், சம்பிரதாயங்கள் எல்லாம் முடிவு பெற்றிருக்க கொஞ்சம் களைப்பாக உணர்ந்தாள் பைரவி.
அவள் முகத்தைப் பார்த்த பாட்டி,
“சாதனா, அண்ணியை அவங்க ரூமிற்கு கூட்டிட்டு போம்மா, கொஞ்சம் ஓய்வெடுக்கட்டும்” என்றார். பட்டுப் புடவையில் பெரிய மனுஷியாக அன்று சாதனா பொறுப்பாக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். ஓடி வந்தவள் பைரவியின் கைபிடித்து ஆனந்தனின் ரூமிற்கு அழைத்துச் சென்றாள்.
“அண்ணி, இன்னைக்கு என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் கல்யாணத்துக்கு வந்திருந்தாங்க.”
“அப்படியா? ஏன் எனக்கு இன்ட்ரடியூஸ் பண்ணல்லை சாதனா“
“ரொம்ப கூட்டமா இருந்தது அண்ணி, அதனால கிளம்பிட்டாங்க. ஆனா உங்களைப் பாத்துட்டு நீங்க ரொம்ப அழகா இருக்கீங்கன்னு சொன்னாங்க.” கள்ளங் கபடம் இல்லாமல் அவள் சொல்லி முடிக்க, சிரித்த பைரவி…
“இந்த ஆரவாரம் எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறமா ஒரு நாளைக்கு உன் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரையும் இன்வைட் பண்ணி ஒரு லன்ச் குடுக்கலாம் சாதனா” அவள் திட்டமிட, சந்தோஷமாக தலை ஆட்டினாள் சாதனா.
“கண்டிப்பா பண்ணலாம் அண்ணி. இப்போ நீங்க கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க, நான் இருந்தா பேசிக்கிட்டே இருப்பேன்.”
அவள் ரூம் கதவை மூடிவிட்டுப் போக பைரவி கொஞ்ச நேரம் கட்டிலில் சாய்ந்த படி கண்மூடி அமர்ந்திருந்தாள்.
அன்றைய நிகழ்வுகள் அனைத்தும் மூடிய விழிளுக்குள் படமாக ஓடியது. மாப்பிள்ளைக் கோலத்தில் மாலையுங் கழுத்துமாக ஆனந்தன் அத்தனை கம்பீரமாக இருந்தான். அவன் கண்கள் தன்னை வருடுவதை தலை குனிந்து அமர்ந்திருந்தாலும் பைரவியால் உணர முடிந்தது.
சுவரில் மாட்டியிருந்த அந்தப் பெரிய ஃபோட்டோவை எப்போதும் போல இப்போதும் விழியெடுக்காமல் பார்த்திருந்தாள் பைரவி.
கால்கள் தன்னிச்சையாக அங்கே இழுத்துச் செல்ல, அதனருகே போனவள், அந்த ஆண்மை நிறைந்த முகத்தை பார்த்த வண்ணம் இருந்தாள். இன்று அவள் பார்வையில் அத்தனை உரிமை இருந்தது. தன் இத்தனை வருடக் கனவு நனவானதில் மெய்மறந்து நின்றவளை பின்னோடு அணைத்தது இரண்டு கரங்கள். அவள் கூந்தல் காட்டில் முகம் புதைத்தவன், அந்த மல்லிகை வாசத்தை ஆழ்ந்து சுவாசித்தான். அந்தக் கைகள் சற்றே எல்லை மீறத் துடிக்க, அதை தடுத்து நிறுத்தியவள் தலை குனிந்து கொண்டாள்.
அவளைத் தன் புறமாகத் திருப்பிய ஆனந்தன் அவள் கண்களுக்குள் பார்க்க, அவனைப் பார்க்க மறுத்து அவன் தோள் சாய்ந்து கொண்டாள்.
“ஹேய் பைரவி, இது நியாயம் இல்லை.” மெதுவாக அவனை விட்டு விலகியவள்,
“நான் ட்ரெஸ் சேன்ஞ் பண்ணிக்கட்டுமா?” என்றாள்.
“இல்லையில்லை. இது ரொம்ப அழகா இருக்கு. நான் இப்படியே கொஞ்ச நேரம் பாக்கனும். மண்டபத்துல சரியா பாக்க முடியலை பைரவி” என்றவன், அவளை இன்னும் நெருங்கி…
“பட்டு, இந்தப் பேச்சு இப்ப ரொம்ப முக்கியமா?” அவன் குரல் கரகரப்பாக வந்தது. அதில் சிலிர்த்ததுப் போனவள், அவனை நிமிர்ந்து பார்க்க, அவள் முகம் பற்றியவன், உரிமையோடு அவள் இதழ்களில் இதழ் பதித்தான். கண்மூடி அதை ஏற்றவள் அந்த நொடிகளை அனுபவித்திருக்க, அத்தனை சீக்கிரத்தில் அவளை விடுவிக்கும் எண்ணம் இருக்கவில்லை ஆனந்தனுக்கு.
அந்த மயக்கத்தில் திளைத்திருந்தவன் இன்னும், இன்னும் என அவளுக்குள் புதைந்து போனான். அவர்கள் ஏகாந்தத்தை குலைத்தது வெளியே கேட்ட பாட்டியின் குரல்.
சட்டென்று பைரவி விலக, அதில் அதிருப்தி கொண்டவன்,
“பைரவி!” என்றான் சற்று அதட்டலாக.
“ஆனந்த்… பாட்டி…” அவள் திணற, அவள் இடையை வளைத்து தனதருகே இழுத்தவன்,
“பாட்டிக்கு என்ன இப்போ?” என்றான். அவள் தடுமாற, அவள் நிலையை புரிந்து கொண்டு, அவளைக் கைப்பிடியாய் வாட்ரோபிற்கு அழைத்துச் சென்றவன், அதைத் திறந்து அந்தக் கவரை அவள் கைகளில் கொடுத்தான்.
மிகவும் கனமாக இருக்கவே, கட்டிலில் வைத்தவள் பிரித்துப் பார்க்க, அவன் சொன்ன வெள்ளை முகூர்த்தப் பட்டு இருந்தது.
“ரொம்ப அழகா இருக்கு” என்றாள்.
“அழகா இருக்கில்ல? அப்போ தாங்ஸ் சொல்லு பைரவி” என்க,
“ரொம்ப ரொம்ப தாங்ஸ் ஆனந்த்” என்றாள்.
“இந்த தாங்ஸ் எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி. இப்போ இந்த தாங்ஸ் எல்லாம் செல்லுபடியாகாது” என்றான். சிரித்தவள், சற்றே எம்பி அவன் கன்னத்தில் இதழ் பதித்து,
“தாங்ஸ்” என்றாள். உதட்டைப் பிதுக்கியவன்,
“இதுவும் கல்யாணத்துக்கு முன்னாடி குடுத்தாச்சு” என்றான். அவள் கலவரமாகப் பார்க்க… கண்ணடித்தவன்,
“நான் குடுத்த மாதிரி குடுக்கனும்” என்றான்.
“வாட்?” என்றாள் பைரவி அதிர்ந்து போய்.
“எதுக்குடி உனக்கு இத்தனை ஷாக்? அப்படி என்னத்தை நான் கேட்டுட்டேன்?” அவன் இலகுவாகக் கேட்க, முறைத்தவள்,
“நீங்க குடுக்காத ஒன்னு நான் குடுக்கட்டுமா?” என்றாள்.
அவள் ஏதோ வில்லங்கம் பண்ணப் போகிறாள் என்று புரிந்தவன், சிரித்துக் கொண்டே…
“பட்டு, நீ எங்கயோ போயிட்டடீ! குடு, குடு என்றான்” மீண்டும் மெதுவாக எம்பியவள், அவன் கன்னத்தைக் கடித்து வைத்தாள்.
“நினைச்சேன்டி ராட்சசி! நீ இப்படித்தான் ஏதாவது ஏடா கூடமா பண்ணுவேன்னு.” அவளை இழுத்து அவள் முகத்தோடு முகத்தை வைத்து உரசியவன்,
“அவனவன் கல்யாணம் பண்ணாமலே சேர்ந்து வாழுறான். நான் கல்யாணம் பண்ணினத்துக்கு அப்புறமும் போராடனும் போல இருக்கே!” தனக்குத் தானே அவன் பேசிக் கொள்ள, வாய் விட்டுச் சிரித்தாள் பைரவி.
**–**–**–**–**–**
மதிய விருந்து தடபுடலாக நடந்து கொண்டிருந்தது. வீட்டிற்கு வெளியேயும் பெரிய பந்தல் போட்டு விருந்தினர் எல்லோருக்கும் பந்தி பரிமாறப் பட்டது.
பைரவி சற்றே தலை அலங்காரத்தைக் கலைத்து ஓர் ஒற்றைப் பின்னல் போட்டிருந்தாள். புடவையை மாற்ற ஆனந்தன் விடவில்லை. அவன் ஆசைக்காக அந்தக் கனமான பட்டை அணிந்திருந்தாள். நடப்பது கூட கஷ்டமாக இருந்தது.
வாசுகி பெண் வீட்டாரை எந்தக் குறையும் இல்லாமல் கவனித்துக் கொண்டார். அருந்ததியின் குடும்பத்தினருக்கு அத்தனை மகிழ்ச்சி.
“அருந்ததி, பொண்ணை நல்ல இடத்துலதான் கட்டிக் குடுத்திருக்க.” என்று வாய்விட்டு பாராட்டவும் மகிழ்ந்து போனார். சந்திரனுக்கு இது எதுவும் கணக்கில் இல்லை.
‘என் பெண் சந்தோஷமாக இருக்கிறாளா, அது போதும் எனக்கு‘ என்ற எண்ணம் தான் அவருக்கு. பைரவியின் முகமே அதற்கு சாட்சி கூற, நிறைவாகிப் போனார்.
மூன்று மாதங்கள் விடுமுறை கிடைத்திருந்தது. தன் மகளோடும், மருமகனோடும் இந்த நாட்களைக் கழிக்க வேண்டும் என்று மிகவும் ஆசைப் பட்டார். அதிகம் விடுமுறைகள் எடுக்காததால் சுலபமாக மூன்று மாதங்கள் எடுக்க முடிந்தது.
மதிய விருந்து முடிந்த கையோடு பெண் வீட்டார் புறப்பட, சந்திரன் ஆனந்தனிடம் வந்தார். குடும்பம் மொத்தமும் ஜமுக்காளம் விரித்து அமர்ந்திருந்தார்கள். கீழே அமர முடியாத ஒன்றிரண்டு பெரியவர்கள் ஒதுக்கமாக போடப்பட்டிருந்த சோஃபாவில் உட்கார்ந்து இருந்தனர். அவர்களோடு ஆனந்தனும் அமர்ந்திருக்க, சந்திரன் தன்னை நோக்கி வருவதைக் கண்டவன், எழுந்து கொண்டான்.
“மாப்பிள்ளை…!” ஆனந்தனின் கைகளைப் பற்றிக் கொண்டவர் குரல் கலங்கியிருந்தது. அந்த இடமே அப்படியே அமைதியாகிப் போனது. அவர் கலங்கியதை கண்டவுடன் மனம் பதைத்தவன், அவர் கைகளை சற்று அழுத்தி பிடித்துக் கொண்டான்.
“மாப்பிள்ளை, எனக்கு ஆம்பிளைப் பசங்க இல்லைன்னு நான் என்னைக்குமே கவலைப் பட்டதில்லை. பைரவி பொறந்தப்போ, அருந்ததிக்கு கொஞ்சம் பிரசவம் சிக்கலாகி, இனி எங்களுக்கு குழந்தை பிறக்காதுன்னு சொல்லிட்டாங்க.”
அத்தனை பேரும் கேட்டிருக்க, எனக்கு எதைப்பற்றியும் கவலை இல்லை எனப் பேசிக்கொண்டிருந்தார் சந்திரன்.
“அப்ப இருந்து இன்னைக்கு வரைக்கும் நான் அதைப் பத்தி கவலைப் பட்டதே இல்லை. ஏன் தெரியுமா? என் பைரவிதான் எனக்கு எல்லாமே. எனக்கு எதுக்கு மாப்பிள்ளை இன்னொரு குழந்தை. என் தேவதை மாப்பிள்ளை அவ” சந்திரன் கண்கலங்கிப் பேச, அவரை அமைதிப் படுத்திய ஆனந்தன்,
“எதுக்கு மாமா இப்போ இதெல்லாம் பேசுறீங்க. ஏற்கனவே ரொம்ப டயர்டா இருக்கீங்க. உடம்புக்கு ஏதாவது ஆகிடப் போகுது.”
“இல்லை மாப்பிள்ளை. பேசாட்டித்தான் ஏதாவது ஆகிடும்.” எதையும் பற்றிக் கவலைப்படாமல் அவர் தொடர்ந்தார்.
“எம் பொண்ணுக்கு ஏன் பைரவின்னு பெயர் வெச்சேன் தெரியுமா?” அவன் அவரையே பார்த்திருக்க…
“பைரவி ராகம், நோய் தீர்க்கும். மனதை வாட்டுற எந்தக் கஷ்டமாக இருந்தாலும் இந்த ராகத்தைக் கேட்டா அமைதி வரும். மனதை வசீகரிக்கும். என்னோட பொண்ணும் எனக்கு இதையெல்லாம் கொண்டு வந்தா. அதனால தான் அவளுக்கு பைரவின்னு பெயர் வெச்சேன்.” சற்று நிறுத்தியவர்,
“ஆனா, என்னோட பைரவி இனி உங்களோட பைரவி மாப்பிள்ளை.” அவர் கண்கள் குளமானது. அதுவரை மௌனமாக இருந்த ஆனந்தன்,
“அப்படி இல்லை மாமா, என் மனைவியாகி இருக்கிற பைரவி, என்னைக்கும் உங்க பொண்ணு தானே” என்க,
“இல்லை மாப்பிள்ளை. அவளை உங்க பைரவின்னு சொல்லுறதுல எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நான் என் பைரவியை ராணி மாதிரி வளர்த்தேன். நீங்க உங்க பைரவியை மகாராணி மாதிரி பாத்துக்கங்க மாப்பிள்ளை” அதற்கு மேல் பேச முடியாமல் சந்திரன் குலுங்கி அழ, ஆனந்தன் அவரைக் கட்டிக் கொண்டான். அவர் முதுகைத் தடவிக் கொடுத்தவன்,
“எனக்கு எல்லாமே பைரவி தான் மாமா. நான் வேற, அவ வேற இல்லை. நீங்க கவலைப் படாதீங்க.” என்றான். அதில் சற்றே ஆசுவாசப்பட்டவர்,
“எனக்குத் தெரியும் மாப்பிள்ளை” அதற்கு மேல் அங்கு பேசுவது அத்தனை உசிதம் இல்லை என இருவரும் மௌனித்தார்கள்.
சுற்றிவர இருந்தவர்கள் அனைவரும் நெகிழ்ந்து போய் பார்த்திருக்க, தன் அப்பாவையே கண் கலங்கப் பார்த்திருந்தாள் பைரவி.
ஆனந்தனின் பைரவி!