Aathiye anthamai – 29

அழகான மோதல்

  விஷ்வாவை பார்த்த நொடி சரவணன் எந்தளவுக்கு எரிச்சலுற்றான் என்று வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

அவனை ஊரை விட்டு அனுப்பிவிட்டோம் என்று எண்ணி கொண்டிருந்த நிலையில் அவன் தன் வீட்டில், தன் அறையில் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்ற கேள்வி எழ சரவணன் குழப்ப நிலைக்கு சென்றான்.

இந்த எண்ணம் ஒரு புறமிருக்க அவன் ஆதியுடன் நின்று கொண்டிருப்பதை பார்த்த கணமே சரவணன் பொறாமையில் சாம்பலானான்.

அதே நேரம் விஷ்வாவும் சரவணனை சீற்றமாகதான் பார்த்திருந்தான். அவன்  ஆதி இங்கே இல்லை என்று பொய்யுரைத்ததின் காரணம் இப்போது ஓரளவுக்கு  விளங்கிற்று விஷ்வாவிற்கு.

ஆதியின் மீதான அவன் பார்வையிலேயே விஷ்வா அவன் எண்ணத்தை கணித்துவிட்டான்.

விஷ்வாவும் சரவணனும் பார்வையினாலேயே ஒருவரை ஒருவர் ஆழமாய் வெறுத்து கொண்டிருக்க ஆதி அவர்களின் எண்ண ஓட்டத்தை தடையிட்டபடி பேசினாள்.

“நீங்க கெஸ் பண்ணது கரெக்ட் விஷ்வா… இவர்தான் சரவணன்… என் அத்தை மனோரஞ்சிதத்தோட பையன்” என்றவள் அறிமுகம் செய்ய விஷ்வாவின் முகம் கடுகடுவென மாறியது.

அதே நேரம் சரவணனை பார்த்தவள்,  “இவர் என்னோட ப்ஃரண்டு விஷ்வா” என்று சரவணனிடமும் விஷ்வாவை அறிமுகம் செய்வித்தாள்.

சரவணன் ஒருவித அலட்சிய புன்னகையோடு,

“ஒ… ப்ஃரண்டா சரி சரி… இருந்து சாப்பிட்டு போகச் சொல்லு” என்று உரைக்க,

ஆதி முன்வந்து, “இல்ல… சரவணன்… நான் இங்க இருக்கிற வரைக்கும் விஷ்வாவும் என் கூட இங்க தங்கி இருப்பாரு” என்றவள் சொல்ல சரவணன் கோபமானான்.

“கண்டவங்கெல்லாம் இங்க தங்க வைக்க முடியாது… ஒழுங்கா அனுப்பி வை” என்றவன் மிரட்டல் தொனியில் சொல்ல,

“பாத்து பேசுங்க சரவணன்… விஷ்வா என்னோட ப்ஃரண்டு” என்று ஆதி சினத்தோடு உரைத்தாள்.

இவர்கள் பேச்சுக்கிடையில் செல்லாமல் விஷ்வா கையை கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டிருக்க,

சரவணனுக்கு ஆதியின் கோபம் ஒரளவுக்கு விஷ்வாவின் முக்கியத்துவத்தை புரிய வைத்தது.

அதற்கு மேல் எதிர்ப்பு தெரிவித்து அவளிடம் வெறுப்பை சம்பாதிக்க விரும்பாமல்,

“சரி.. அப்புறம் உன் இஷ்டம்” என்று வேண்டா வெறுப்பாய் சம்மதித்தான்.

ஆதி தயங்கிய பார்வையோடு, “அப்புறம் இன்னோரு சின்ன உதவி” என்று மெலிதான குரலில் அவள் கேட்க,

“என்ன?” என்று புருவத்தை உயர்த்தி அவளை ஏறிட்டான்.

“அது ஒண்ணும் இல்ல… விஷ்வாவை நீந்க உங்க ரூம்ல ஸ்டே பண்ண அலோ பண்ணனும்” என்று மெல்ல தன் எண்ணத்தை சொல்ல அவனோ ரௌத்திரமானான்

“என்ன விளையாடிறிய.. அதெல்லாம் முடியாது” என்று ஆக்ரோஷமாய் அவளிடம் தன் மறுப்பை தெரிவிக்க,

ஆதி விஷ்வாவை தவிப்பாய் பார்த்தாள்.

விஷ்வாவோ சிரித்த முகத்தோடு,
“நோ பிராப்ளம் ஆதி… சரவணனுக்கு எதுக்கு தொந்தரவு… நான் வேணா  உன் ரூம்ல ஸ்டே பண்ணிக்கிறேனே” என்று ஒரே போடு போட ஆதி, சரவணன் இருவருமே அதிர்ச்சியாயினர்.

அவள் என்ன பதில் சொல்வது என்று புரியாமல் தவிப்புற சரவணனின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

விஷ்வா மீது வெறுப்பின் உச்சத்திற்கே சென்றவன் எங்கே ஆதி அவனை தன் அறையில் தங்க வைத்து கொள்ள சம்மதம் தெரிவித்துவிட போகிறாளோ என்ற எண்ணத்தில் தானே முந்திக் கொண்டு,

“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்… இந்த ரூம்லயே இருந்துட்டு போகட்டும்” என்றான்.

ஆதி பெரிதாய் மூச்சை இழுத்துவிட்டு கொண்டு, “தேங்க் யூ சோ மச்” என்று சரவணனிடம் சொல்ல விஷ்வாவிற்குதான் பெருத்த ஏமாற்றம்.

அவன் முகம் வாட்டமுற ஆதி அவன் புறம் திரும்பி,

“சரி விஷ்வா… நீ பிஃரஷாயிட்டு வா” என்று சொல்லி அந்த அறையை விட்டு வெளியேற யத்தனித்தாள்.

அப்போது சரவணன் அவளை வழிமறித்து, “வந்ததும் சொல்லனும்னு நினைச்சேன்… நீ புடவையில ரொம்ப அழகா இருக்க.. அப்படியே தேவதை மாதிரி” என்று வழிந்து ஊற்றினான்.

அவன் அப்படி சொன்னதை கேட்டு ஆதிக்கு அதீத எரிச்சல் மூண்டாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவள் மௌனமாய் நிற்க,

பின்னோடு இருந்த விஷ்வா, “ஆதிக்கு இப்படி எல்லாம் வர்ணிச்சா சுத்தமா பிடிக்காது.” என்று முந்திக் கொண்டு பதிலளித்தான்.

சரவணன் கடுப்பாகி விஷ்வாவை முறைத்து கொண்டு போக அந்த நிலைமையை சமாளிக்கும் விதமாய் ஆதி இடைபுகுந்து,

“விஷ்வா சும்மா விளையாட்டுக்கு சொல்றான்… அப்படி எல்லாம் இல்ல… அன் தேங்க்ஸ் பாஃர் தி காம்பிளீமன்ட்”  என்று சொல்லிவிட்டு இயந்திரத்தனமாய் சிரித்துவிட்டு அங்கிருந்து தப்பித்தால் போதுமென சென்றுவிட்டாள். 

விஷ்வாவிற்கோ ஆதி சரவணனிடம்  நடந்து கொள்ளும் விதம் குழப்பமாய் இருந்தது. அது அவளின் இயல்பில்லையே என்றவன்   மௌனமாய் யோசித்து கொண்டு நிற்க,

சரவணன் அப்போது,
“வந்தோமா… இரண்டு நாள் இருந்தோமான்னு கிளம்பி போயிட்டே இருங்க சொல்லிப்புட்டேன்” என்றவன் எச்சரிக்க,

“சாரி… நான் வந்தது ஆதிக்கு சப்போர்ட்டா.. அப்படி எல்லாம் அவளை விட்டுட்டு கிளம்ப முடியாது” என்று முகத்திலறைந்தது போல் பதிலுரைத்தான் விஷ்வா.

“நாங்க இத்தனை பேர் அவளுக்காக இருக்கும் போது உனக்கென்ன அவ்வளவு அக்கறை?” என்று சரவணன்  முறைத்து கொண்டு நிற்க,

“நேத்து அவ வாழ்கையில வந்த உனக்கே இவ்வளவு அக்கறை இருக்கும் போது அவ கூடவே பிறந்ததிலிருந்து இருக்கிற எனக்கு அக்கறை இருக்காதா?” என்று விஷ்வா குத்தலாய் பதிலுரைத்தான்.

“இத்தனை வருஷமா கூட இல்லங்கிற காரணத்துக்காக எங்க உறவு இல்லன்னு ஆயிடுமா?!”

சரவணன் உதட்டை சுளித்தபடி, “உறவா?” என்று கேட்டவன் ஆழ்ந்த பார்வையோடு,

“உறவுக்கு அர்த்தம் தெரியுமா உனக்கு… ஆதியோட அம்மா தன்னந்தனியா கஷ்டப்பட்ட போது இந்த உறவெல்லாம் எங்க போச்சு?” என்று கேட்க சரவணன் சற்று தடுமாறினான்.

“நீ எதுவும் தெரியாம பேசாதே… அத்தைதான் யார் உறவும் வேணாம்னு இந்த ஊரை விட்டு போனாங்க”

“சோ.. இத்தனை வருஷமா அவங்க எங்க இருக்காங்கன்னு தேடல… இல்லயா ?!” என்று விஷ்வா சரவணனை தன் கேள்வியால் மடக்க அவன் பதில் சொல்ல முடியாமல் திக்கிதிணற விஷ்வாவே மேலும் தொடர்ந்தான்.

“சாரி சரவணன்… உங்க கூட பிரச்சனை பண்றது என் நோக்கம் இல்லை… நான் ஆதிக்காக வந்திருக்கேன்…  தேவையில்லாம என்கிட்ட வம்புக்கு வராதீங்க” என்றவன் அழுத்தமாய் சொல்லிவிட்டு விறுவிறுவென அறையை விட்டு வெளியெறி விட,

சரவணனுக்கு எங்கேயோ அவன் கேள்வியின் நியாயம் மனதை துளையிட்டது.

*******
ஆனால் என்ன நடந்தாலும் ஆதி மட்டும் தான் வந்த வேலையில் கண்ணும் கருத்துமாய் இருந்தாள். அதன் முதல் முயற்சியாக வசந்தாவிடம் ரொம்பவும் நெருக்கமாக பழகி வேல்முருகன் தன்னுடைய நில சொத்து பத்திரங்களை எங்கு வைப்பார் என்ற விவரங்களை கேட்டறிந்தாள்.

அதற்கான சரியான சந்தர்ப்பத்திற்காக அவள் காத்திருக்க அடுத்த நாள் காலை வேல்முருகன்

சரவணன்,மணிமாறனை அழைத்து கொண்டு கோவில் வேலை சம்பந்தமாக வெளியே போக ஆதி அந்த சமயத்தை பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டாள்.

அவள் வேல்முருகன் அறையிலிருந்த பெரிய மர பீரோவை திறந்து பத்திரங்களை எடுக்க செல்ல எண்ணிய போது விஷ்வா அவளை வழிமறிக்க கடுப்பானவள்,

“நேரங்காலம் தெரியாம குறுக்க வந்த என் உயிரை எடுக்காதே விஷ்வா” என்று சொல்லி விட்டு அவனை கடந்து வர,

“எனக்கு இங்க ரொம்ப போரடிக்குது… போன்ல வேற சிக்னல் இல்ல… எங்கயாவது வெளிய போயிட்டு வரலாம்” என்று கேட்டபடி அவளை பின்தொடர்ந்தான் விஷ்வா.

“ஆமா… நான் என்ன டூருக்கா வந்திருக்கேன்… உன் கூட டைம் பாஸ் பண்ண… உதவி செய்யலன்னாலும் பரவாயில்ல… உபத்திரம் பண்ணாத விஷ்வா” என்று சொல்லியவள் மெதுவாக கதவை திறந்து
வேல்முருகன் அறைக்குள் நுழைந்தாள்.

அவளின் நல்ல நேரம் சாவி பீரோவின் கதவிலேயே தொங்கி கொண்டிருந்தது. அதை பார்த்து ஆனந்தமாய் புன்னகையிக்க, விஷ்வாவும் பின்னோடு அந்த அறைக்குள் நுழைந்தான்.

“யார் ரூம் இது?” என்றவன் கேட்க,

“என் பெரியப்பா ரூம்” என்றவள் அவனை உள்ளே வர விட்டு கதவை மூடியவள்,

“நீ ஸைலன்ட்டா இங்கயே நின்னு யாராச்சும் வர்றாங்களா பாரு” என்றவனிடம் பணித்துவிட்டு அவள் அந்த பீரோவை நோக்கி சென்றாள்.

“இந்த திருட்டு வேலையைதான் முக்கியமான வேலை… முக்கியமான வேலைன்னு சொன்னியா?! இதுல நான் வேற உனக்கு காவலா?” என்றவன் அவளை கேவளமாய் ஒரு பார்வை பார்க்க,

“நீதானே எனக்கு சப்போர்ட்டா வந்திருக்கேன்னு சொன்ன… கம்முனு அங்கேயே நின்னு வாட்ச் பண்ணு” என்று சொல்லியபடி அவள் பீரோ கதவை திறந்து அதன் உட்கதவை திறக்க அந்த கொத்து சாவியில் ஒன்றொன்றாய் நுழைத்து திறக்க முயற்சித்து கொண்டிருந்தாள்.

“ஹெலோ… இந்த மாதிரி வேலைக்கெல்லாம் என்னால சப்போர்ட் பண்ண முடியாது… அப்புறம் என் டிக்னிட்டி என்ன ஆகிறது”  என்று கேட்டு விஷ்வா தோள்களை குலுக்க,

“அய்யோ… நீ பேசாம உன் டிக்னிட்டியை தூக்கிட்டு வெளியே போயிரு… நானே பார்த்துக்கிறேன்” என்றவள் அவனை பார்க்காமலே சொல்லிவிட்டு தன் வேலையில் மும்முரமாக கவனிம் செலுத்தினாள்.

“நல்லதுக்கே காலம் இல்ல” என்று புலம்பியபடி அவன் கதவை திறக்க
அப்போது மணிமாறன் நடந்து வந்து கொண்டிருப்பதை விஷ்வா பார்த்துவிட்டு மீண்டும் கதவை முடியவன்,

“ஏ ஆதி… அந்த சரவணனோட அண்ணன் வர்றான்” என்று எச்சரிக்கை விடுக்க ஆதி பதட்டமாகி பீரோ கதவை மூடினாள்.

“நாம மாட்ட போறோம்” என்று விஷ்வா சொல்ல ஆதி அவன் கையை பிடித்து கதவோரமாய் இழுத்து வரவும், அதே நேரம் மணிமாறன் அறைக்கதவை திறந்து உள்ளே நுழையவும் சரியாய் இருந்தது.

ஆதி வேறவழியின்றி விஷ்வாவை  இடித்தபடி நிற்க அவன் அப்போது கிசுகிசுத்த குரலில்,

“சரவணன் மட்டும் நம்மை இப்படி பாத்தான்… அவன் நெஞ்சே வெடிச்சிடும்” என்று அந்த நிலைமையிலும் அவன் வேடிக்கை செய்ய அவளோ பதறி கொண்டு தன் கைகளால் அவன் வாயை மூடிவிட்டாள்.

பின்னர் அவள் என்ன நடக்கிறது என்று  கதவின் இடைவெளியில் பார்த்து கொண்டிருக்க விஷ்வா ஆதியின் அருகாமையை ரசித்தபடி நின்றிருந்தான்.

அந்த சமயத்தில் மணிமாறன்  பீரோவின் கதவிலிருந்து சாவியை பார்த்து திகைத்து போய் நின்றான்.

“இந்த சரவணனுக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல” என்று சொல்லிக் கொண்டவன் கதவை திறந்து பணத்தை எடுத்து எண்ணி தன் சட்டை பையில் வைத்து விட்டு சாவியை பூட்டி தன்னோடு எடுத்துச் சென்றான்.

மணிமாறன் சென்றுவிட ஆதி பெருமூச்சு விட்டு, “தேங் காட்” என்றாள்.

“நிச்சயமா இந்த மொமன்டுக்காக கடவுளுக்கு நன்றி சொல்லியே ஆகனும்” என்று சொல்லிய விஷ்வா  ஆதியை பார்த்து வசீகரமாய் புன்னகையிக்க,

துணுக்குற்றவள் அந்த நொடியே அவனை விட்டு விலகி வந்தாள். 

அதோடு அவள் அதீத கோபத்தோடு,

“உன்னாலதான் காரியமே கெட்டு போச்சு” என்று அவனை திட்டிக் கொண்டே  அறையை விட்டு வெளியே செல்ல,

“நீ என் பக்கத்துல அவ்வளவு நெருக்கத்தில நின்னதினால என் கண்ணியம் கூடதான் கெட்டு போச்சு” என்று அலட்டிக் கொள்ளாமல் உரைத்தான் விஷ்வா.

அப்போது முன்னே சென்று கொண்டிருந்த ஆதி அவன் வார்த்தைகளை கேட்டு அதிர்ச்சியாகி,

“திஸ் இஸ் டூ மச்” என்று கண்களை அகல விரித்து கோபப்பட்டாள் .

“இட்ஸ் ஒ.கே ஆதி… நான் இதை பத்தி யார் கிட்டயும் சொல்ல மாட்டேன்… முக்கியமா சரவணன் கிட்ட” என்று சொல்லி அவன் குறும்புத்தனமாய் சிரிக்க,

“விஷ்வா” என்றவள் கோபமாய் பல்லை கடித்தாள்.

அவன் புன்னகை ததும்ப, “யூ ஆர் இரிட்டிட்டிங் மீ… அதானே சொல்லப் போர” என்று அவள் வாக்கியத்தை அவனே உரைக்க,

“உன்னைய” என்றவள் கடுப்பாக, “என்னைய… கம்மான் பினிஷிட் இட்” என்று விஷ்வா அவளை நெருங்கினான்.

“நத்திங்… இட்ஸ் ஆல் மை பேஃட்” என்று சொல்லிவிட்டு அவனை பாராமல் அவள் கடந்து செல்ல,

“ஆதி… உனக்கு ஏதாச்சும் ஹெல்ப் வேணும்னா சொல்லு” என்றவன் அவள் காதில் விழும்படி உரைத்தான்.

“அய்யோ உன் உதவியும் வேண்டாம் ஓண்ணும் வேண்டாம்… என்னை விட்டுடு” என்று அவனை பார்த்து கையெடுத்து கும்பிட்டவள் தன் அறைக்குள் சென்று கதவை பூட்டி கொண்டு தலையிலடித்து கொண்டு,

“கருணா அங்கிள்… இவனை போய் எனக்கு துணையா அனுப்பி விட்டீங்களே… உங்களை சொல்லனும்” என்று புலம்பி தள்ளினாள்.

error: Content is protected !!