Aathiye anthamai – 35

இரக்கமற்ற இரவு

அந்த இரக்கமற்ற இரவில் வானம் இடிமுழக்கத்தோடு மின்னலை வாளாய் வீசிக் கொண்டிருக்க செல்வியின் விழிகள் தன் கணவனின் வரவை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தது.

அதற்கு ஓர் முக்கிய காரணமும் இருந்தது. காலையில் இருந்து அவளுக்குள் ஏற்பட்டிருந்த சோர்வும் மயக்கமும் அவளுக்குள் ஜனித்திருக்கும் உயிரின் அறிகுறியை அவளுக்கு உணர்த்தியிருக்க,

அதை அவனிடம் பகிர்ந்து கொள்ள வேண்டி அவள் உள்ளம் தவியாய் தவித்து கொண்டிருந்தது.

அதை அவனிடம் தெரிவிக்கும் போது அவன் எந்தளவுக்கு பூரித்து போவான் என்று எண்ணும் போதே அவள் மனம் இன்பக்கடலில் திளைக்க, இன்று பார்த்து  அவன் வராமல் தாமதித்து கொண்டிருந்தான்.   

இரவு நடுநிசியை எட்டியிருக்க வாசலில் நின்றிருந்த செல்வியை சற்றும் பொருட்படுத்தாமல் வேல்முருகன் வீட்டிற்குள் இருந்து வெளியே வந்து நின்றான்.

சிவசங்கரன் இன்னும் ஏன் வரவில்லை என்ற எண்ணம் அவனுக்குள்ளும் உதித்தது போலும். என்றும் இல்லாத திருநாளாய் தம்பிக்காக காத்துகொண்டிருந்தான் வேல்முருகன்.

அதற்கான காரணத்தை செல்வி ஒருவாறு யூகித்தாள்.

அன்று மாலை கனகவல்லி வேல்முருகனிடம் சொத்துக்கள் அனைத்தையும் பாக பிரிவினை செய்ய சொல்லி நச்சரித்து கொண்டிருந்தாள்.

சண்முகவேலன் நடமாட முடியாத நிலையில் இருக்க அனைத்து பொறுப்புகளும் இப்பொழுது சிவசங்கரன் கைக்கு போய் விட்டது.

ஆதலால் வீட்டில் இளையவனின் அதிகாரத்திற்குட்பட்டு இருக்க கனகவள்ளி விரும்பவில்லை. குடும்பத்தில் கையாளாகதவனாய் நிற்கும் அவமானத்திற்குரிய நிலையை கனகவல்லி தன் கணவனிடம் ஓயாமல் சுட்டிகாட்டியபடி இருக்க,

அதற்கெல்லாம் முடிவு கட்ட எண்ணியே வேல்முருகனும் வீட்டின் திண்ணையில் அமர்ந்து தன் தம்பிக்காக காத்துக்கொண்டிருந்தான்.

அந்த சமயத்தில் ஊரில் உள்ள ஒருவன் பதட்டத்தோடு வீட்டின் வாசலை அடைந்து,

“சங்கரன் அண்ணே தோப்புக்குள்ள யார் கூடயோ பிரச்சனை பண்ணிட்டிருக்காரு” என்று வேல்முருகனிடம் தெரிவிக்க,

“சங்கரனா” என்று அதிர்ச்சியாய் கேட்டான் வேல்முருகன். இந்த தகவல் செல்வியின் செவிகளையும் எட்டி அவள் மனதை கலவரப்படுத்த,

“ஆமா நான் பாத்தேன்..” என்று உறுதிப்பட சொன்னான்.

“யார் கூட?” வேல்முருகன் குழப்பமான பார்வையோடு கேள்வி எழுப்ப,

“சரியா தெரியல… தூரத்தில இருந்து அண்ணனை மட்டும்தான் பாத்தேன்… தோப்புக்குள்ளே போக பயமா இருந்துச்சு… அதான் வந்துட்டேன்”

இதை கேட்ட செல்விக்கு ஒன்றும் புரியவில்லை. சிவசங்கரனுக்கு அப்படி யாரிடமும் தேவையில்லாமல் வம்புக்கு போகும் பழக்கமில்லை.

வேல்முருகனும் கிட்டதிட்ட இதையேதான் எண்ணிக் கொண்டிருந்தான். உடனே அவன் கையில் விளக்கொன்றை ஏந்தி கொண்டு புறப்பட்டு சென்றுவிட செல்வியின் கலக்கம் அதிகமானது.

செல்வி பொறுமை இழந்தவளாய் அவளும் அந்த தோப்பின் வழியை நோக்கி நடந்தாள். சிவசங்கரன் வராததினால் ஏற்பட்ட பயம் அவளுக்கு அதீத தைரியத்தை ஏற்படுத்த, அந்த இருளும் இடி மின்னலும் அவளை அச்சமுற செய்யவில்லை.

அந்த பதட்டத்தில் செல்வி எந்த விளக்கையும் கைகளில் எடுத்து கொள்ளாமல் நடக்க அவ்வப்போது வீசிய மின்னல்ஓலியை அவளுக்கு வழிகாட்டியது.

அதே நேரம் இடிமின்னல்களுக்கிடையில் இந்த அடர்ந்த மரங்களுக்குள் நடந்து செல்வது உசிதமில்லை எனினும் அவளுக்கு அதை தவிர்த்து வேறுவழியுமில்லை.

அந்த இரவில் அவள் எப்படி அந்த இருளடர்ந்த தோப்பிற்குள்  நடந்து சென்றால் என அவளுக்கே தெரிந்திருக்கவில்லை. எல்லாம் கணவன் என்ற ஒற்றை தாரக மந்திரம் அவளுக்கு அத்தகைய சக்தியையும் துணிச்சலையும் வழங்கியிருந்தது.

அந்த தோப்பிற்குள் அவள் முன்னேறி செல்ல இருளின் தாக்கம் பயங்கரமாய் அவளை மிரட்டியது.

அதே நேரம் கனிரென ஒலித்த சிவசங்கரனின் குரல் அந்த இருளையும் அமைதியையும் குலைத்து கொண்டு கேட்க அந்த சத்தமே அவள் வழியை தீர்மானித்தது.

எப்படியோ அவன் இருந்த இடத்தை அவள் சென்றடைய,

அவள் அங்கே பார்த்த காட்சி அவளின் இதயத்துடிப்பை ஒரு நொடி நிறுத்திவிட்டது.

சிவசங்கரன் கோவிலை ஆராய்ச்சி செய்ய வந்த மனோகரனின் கழுத்தை அழுத்தி பிடித்தபடி நிற்க அவன் பிடியை விலக்கிவிட வெள்ளையப்பன் முயன்று கொண்டிருக்க அன்னம்மா கைகளில் விளக்கை ஏந்தியபடி, “வேண்டாம் தம்பி” என்று பதட்டத்தோடு கத்தி கொண்டிருந்தார்.

ஒரு சில விநொடிகள் அதிர்ச்சியின் அந்த தாக்கத்தில் நின்றவள் பின் தன்னிலை மீட்டு கொண்டு,

  “ஏன் இப்படி செய்றீங்க?… அவரை விடுங்க” என்று தன் குரலை உயர்த்தியபடி படபடப்பாய் உரைத்தாள்.

மனோகரன் சிவசங்கரனின் இரும்புபிடியில் தன் கழுத்தெலும்புகள் நொறுங்கிப் போய்விடுமோ என்று எண்ணிக் கொண்டிருக்கையில்,

செல்வியின் குரல் சிவசங்கரனின் பிடியை தளரத்த அவன் தற்காலிகமாய் உயிர் பிழைத்து கொண்டான்.

சிவசங்கரனின் பார்வை செல்வியை கவனிக்க அவளோ சிலர் அடிப்பட்டு  அங்கே விழுந்து கிடப்பதை பார்த்து குழப்பமடைந்தாள்.

அவர்கள் யாரும் இந்த ஊரை சேர்ந்தவர்கள் அல்ல என்பது நன்றாய் தெரிந்தது.

காலையில் வெள்ளையப்பனிடம் சிவசங்கரனிடம் வெளியாட்களின் நடமாட்டத்தை பற்றி கேட்டு மிரட்டியதை நினைவுபடுத்திக் கொண்டாள்.

கர்ப்பமாய் இருக்கும் காரணத்தால் ஏற்கனவே அவளுக்கு தலைசுற்றி  கொண்டிருக்க  இதையெல்லாம் பார்த்தவளுக்கு இன்னும் அதிகமாய் தலைசுற்றியது.

அவள் மயக்கநிலைக்கு போக எண்ணிய போது கர்ஜனனாய் சிவசங்கரனின் குரல் அவளை நிலைநிறுத்தியது.

“அறிவுகெட்டவளே… எதுக்குடி இங்க வந்த” என்று மிரட்டலாய் கேட்க

அவனின் குரலின் உக்கிரம் அவளை பதில் சொல்ல முடியாத அளவுக்கு தொண்டையை அடைத்தது.

மனோகரன் அருகில் வந்து வெள்ளையப்பன் ஆசுவாசப்படுத்தி,

“அண்ணி வந்ததினால நீங்க தப்பிச்சீங்க சார்” என்று சொல்ல அந்த இருளில் அப்போதுதான் செல்வியை மனோகரன் கவனித்தான்.

செல்வி பதில் பேசாமல் நிற்க சிவசங்கரன் மேலும்,

“பைத்தியமாடி நீ… இந்த இருட்டில தன்னந்தனியாய் தோப்புக்குள்ள வந்திருக்க… ஒண்ணுகிடக்க ஒண்ணு ஆச்சுன்னா” அக்கறையும் கோபமும் ஒரு சேர தெறித்தது அவன் குரலில்.

அப்பொழுது செல்வி கொஞ்சம் சுதாரித்து,

“நீங்க ஏதோ பிரச்சனை பண்ணிட்டு இருக்கீங்கன்னு” என்று அதற்கு மேல் வார்த்தை வராமல் தடுமாற,

சிவசங்கரன் தலையில் கை வைத்து கொண்டு தவிப்பில் ஆழ்ந்தான்.

அதே நேரம் வெள்ளையப்பா சிவசங்கரன் பின்னோடு நின்று,

“எதுக்கு அண்ணே இந்த வீண் வம்பு… பேசாம அண்ணிய கூட்டிட்டு வீடு போய் சேர வழிய பாருங்க” என்க,

அப்போது அன்னம்மா தன் மகனின் சட்டையை பிடித்தபடி,

“பாவி பையலே… எப்படிறா நீ என் வயித்துல பிறந்த… காசு பணத்துக்காக இப்படி எல்லாம் கூட செய்வாங்களா? பிறந்த போதே செத்து ஒழிஞ்சு போயிருந்தா நல்லா இருந்திருக்கும்” என்று சொல்ல வெள்ளையப்பா எரிச்சலோடு,

“போ அந்தாண்ட உனக்கென்ன தெரியும் என் கஷ்டம்” என்று உரைத்தபடி தன்னை பெற்றவள் என்றும் பாராமல் அவரை பிடித்து கீழே தள்ளினான்.

இதை பார்த்து கொண்டிருந்த செல்வி பதற, அன்னம்மா தரையில் வீழ்ந்து
அவர் நெற்றியில் ரத்தக்காயமானது.

இதனை பார்த்த சிவசங்கரன் ரௌத்திரமாய் மாறி  வெள்ளையப்பாவின் கன்னத்தில் அறைந்தான். வெள்ளையப்பா அவன் அடித்த அடியில் திணறிப் போய் விழ

அப்போது சிவசங்கரன் மனோகரனின் புறம் திரும்பி,

“நீ இந்த ஊரை விட்டு இப்பவே போறதுதான் உனக்கு நல்லது… இல்லன்னா உன் கழுத்தில தலை இருக்காது பாத்துக்கோ” என்று ஆவேசமாய் மிரட்டலானான்.

மனோகரன் இளக்காரமான சிரிப்போடு,

“நான் என்ன வேலையை ஆரம்பிச்சனோ அதை செய்து முடிக்காம இந்த ஊரை விட்டு போக மாட்டேன்… உனக்கு  தேவையானதை எல்லாம் நான் செய்றேன்… என் விஷயத்தில குறுக்கே வராதே” என்றான்.

“இந்த ஊருக்குள்ள உன்னை விட்டு வைச்சதுக்கு நீ என்னையும் விலை பேசுவ.. இந்த ஊரையும் சேர்த்தே விலை பேசுவ.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உன்னை உயிரோட விட்டேன் பாரு… அது பெரிய தப்புடா” என்று சிவசங்கரன் சீற்றத்தோடு பொங்க,

“என் ஆயுசு கெட்டி … அதான் நான் தப்பிச்சிட்டேன்… உனக்கு அல்பாயுசுதான்… நீ என் கையிலதான் சாகப்போற” என்று மனோகரன் சொல்லிவிட்டு

அன்னம்மாவின் காயத்தில் வழியும் இரத்தத்தை துடைத்திருக்கும் செல்வியை பார்த்து,

“ஏ பொண்ணு… ஒழுங்கா உன் புரிஷனை நல்லா வார்த்தை சொல்லி கூட்டிட்டு போயிடு… அப்புறம் ரொம்ப வருத்தபடுவ” என்றான்.

செல்விக்கு அங்கே நடப்பது ஒன்றும் புரியவில்லை என்றாலும் மனோகரனின் வார்த்தைகள் கோபத்தை உண்டாக்க,

“உன் மாதிரியான ஆளெல்லாம் அவரை ஒண்ணுமே செய்ய முடியாது…கோபத்தில அந்த மனிஷன் ஏதாச்சும் செய்யறதுக்கு முன்னாடி இங்கிருந்து நீ ஓடி போயிடு” என்றவள் மனோகரனுக்கு பதிலடி கொடுக்க சிவசங்கரனின் இதழ்களில் ஓர் கர்வப்புன்னகை!

மனோகரன் கடுகடுத்த முகத்தோடு நிற்க, சிவசங்கரன் அடித்த அடியிலிருந்து நினைவுபெற்று எழுந்த வெள்ளையப்பா தோப்பிற்குள் புகைமூட்டம் ஏற்படுவதையும் நெருப்பு ஜுவாலையால் அந்த இடத்தின் இருள் மறைந்து வெளிச்சமாகி கொண்டு வருவதையும் கவனித்தான்.

மனோகரனின் தோளை மிரட்சியோடு தட்டி, “சார் தோப்புக்குள்ள நெருப்பு பத்திகிச்சு” என்று சொல்லும் போது அவர்கள் எல்லோரும் கண்ட காட்சி பயங்கரமாய் இருந்தது.

தூரமாய் பரவிக் கொண்டிருந்த நெருப்பு வெகுவிரைவாய் அவர்களை நோக்கி வர வெள்ளையப்பா தன் தாயை பற்றி கூட கவலையில்லாமல்,”சார் வாங்க ஓடிலாம்” என்று மனோகரனை அழைத்தான்.

சிவசங்கரன் அந்த காட்சியை கண்டு அதிர்ச்சியோடு நின்றுவிடாமல் செல்வியின் கைகளை பிடித்து கொண்டு அன்னம்மாவை மெல்ல எழுப்பி அழைத்து கொண்டு,

“சீக்கிரம் வாங்க.. இந்த பக்கமா போனா வெளியே போயிடலாம்” என்று அவர்களை நெருப்பு பரவாத திசையில் நகர்த்தி செல்ல,

மனோகரன் நின்ற இடத்திலிருந்து நகராமல் வெள்ளையப்பாவிடம் ஏதோ ரகசியமாய் சொல்ல,

“அய்யோ சார்… இப்போ உயிர் பிழைச்சா போதும் .. மத்த வேலை எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்” என்று சொல்லி அவனை அழைத்து கொண்டு போக நினைத்தான்.

ஆனால் அந்த நேரத்தில் மனோகரன் விசித்திரமாய் ஒரு காரியம் செய்தான். அதை வெள்ளையப்பா கவனித்து கொண்டிருக்க எதிர்புறத்திலும் தீ  மரங்களை தம் கோரபசிக்கு இரையாக்கி கொண்டு வந்தன.

அன்னம்மா திரும்பி பார்த்தபடியே வந்து கொண்டிருக்க அந்த அனல் பரவிக்கிடந்த புகைமூட்டத்தில் வெள்ளையப்பாவும் மனோகரனும் நெருப்பை சமாளிக்க முடியாமல் தவிக்கலாயினர்.

அந்த கோரத் தீயால் ஓர் மரத்தின் கிளை  முறிந்து விழ, எதிர்பாராவிதமாய் அது மனோகரன் வெள்ளையப்பன் இருவர் உயிரையும் பலியாக்கி கொண்டது.

கணநேரத்தில் நடந்த அந்த சம்பவத்தை பார்த்து, “வெள்ளைப்ப்ப்ப்ப்பா…..” என்று அன்னம்மா கதறி துடித்தார்.

அதுதான் அவர் தொண்டை குழியிலிருந்து எழும்பிய கடைசி ஒலி.அத்தோடு அவரின் நா பேசும் சக்தியை இழந்தது. அவர் அப்படியே நினைவிழுந்து சரிந்துவிட செல்வியும் சிவசங்கரனும் என்ன செய்வதென்று புரியாமல் திகைத்தனர்.

தாமதித்தால் தப்பிப்பது சிரமம் என்ற நிலையில் சிவசங்கரன் அன்னம்மாவை தன் தோள் மீது தூக்கி போட்டு கொண்டு செல்வியின் கரத்தை இறுக்கமாய் பிடித்து கொண்டான்.

நெருப்பு பரவி வரும் திசையை அந்த புகைமூட்டத்திலும் கணித்தவன் ரொம்பவும் லாவகமாய் அவர்கள் இருவரையும் வெட்ட வெளியான இடம் பார்த்து வந்து சேர்ந்தான். அவர்கள் வந்து நின்றது ஊருக்கு வெளிப்புறத்திற்கு செல்லும் வழி.

மற்றொரு பக்கம் தீ பரவிய காட்சியை பார்த்த ஊர் மக்கள் எல்லாம் அதிதீவிரமாய் அணைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

ஆனால் அது அத்தனை சுலபமான காரியம் அல்ல. ஏற்கனவே அந்த தோப்பின் வழித்தடம் மக்களால் உபயோகப்படுத்தபடாமல் இருக்க அந்த நெருப்பு எல்லோருக்குள்ளும் கிலியை ஏற்படுத்தியது.

ஊருக்கு மறுபுறத்தில் சிவசங்கரன் அன்னம்மாவை பத்திரமாய் இறக்கிவிட்டான்.

செல்விக்குள் இருந்த படபடப்பை கவனித்தவன் அவளை கட்டிணைத்து கொண்டு,

“பயப்படாதே செல்வி… ஒண்ணுமில்ல… நாம தப்பிச்சிட்டோம்” என்றபடி அவளை ஆசுவசப்படுத்த

அவளோ தன்னவனின் அணைப்பில் சகலமும் மறந்து கிடந்தாள். அவனுமே அவளை விடாமல் தன்னிலை மறந்து அவளை ஆரத்தழுவி கொண்டிருந்தான். அந்த நொடி அவளுக்குள் இருந்த கலக்கமும் பயமும் மறைந்து நிம்மதி படர்ந்தது.

அப்போது அவளுக்கு தெரியாது… இனி அதை போல ஒரு நிம்மதியும் அணைப்பும் அவளுக்கு இனி கிடைக்க போவதே இல்லை என்று…

நெருப்பின் உக்கிரம் குறையாமல் இருக்க அந்த நேரத்தில் வானின் இடிமுழக்கம் பயங்கரமாய் கேட்டது.

செல்வியை கட்டிணைத்து கொண்டிருந்த சிவசங்கரன், “தெய்வாதீனமா இப்போ மழை வந்தால் நல்லா இருக்கும்” என்று சொல்லி கொண்டிருக்கும் போதே சிவசங்கரனின் காதில் தன் அண்ணனின் வேல்முருகனின் அபயகுரல் ஒலித்தது.

அவளை விடுவித்து விட்டு நிமிர்ந்து பார்த்தவன், “அண்ணன் குரல் கேட்குதில்ல செல்வி” என்றான்.

“எங்கே?” அவள் குழப்பமாய் அவனை ஏறிட்டு பார்க்க,

“சங்கரா… சங்கரா…” என்று  வேல்முருகனின் குரல் கேட்க

சிவசங்கரன் அவளிடம்,  “அண்ணே உள்ளே மாட்டிக்கிட்டாரா?” என்று சொல்லி பதறியவன் அந்த படுஉக்கிரமாய் எரியும் நெருப்பை துளியும் பொருட்படுத்தாமல் தோப்பிற்குள் போக யத்தனிக்க,

அவன் கரத்தை பிடித்து தடுத்தவள், “நானும் வர்றேன்” என்றாள்.

“விடு செல்வி…இது விளையாட்டு காரியம் இல்ல” என்று அவன் சொல்ல அவள் கையை விடுவதாக இல்லை.

அந்த நேரத்தில் அவள் பிடிவாதத்தை தாங்க முடியாமல் கையை உதறி அவளை கீழே தள்ளிவிட்டவன்,

“என் மேல சத்தியமா நீ பின்னாடி வரக் கூடாது” என்று முடிவாய் சொல்லிவிட்டு சென்றான்.

நெருப்பிற்குள் இருந்து மீண்டும் மீண்டும் வேல்முருகனின் மரணஓலம் கேட்க அன்று தன் அண்ணனை காப்பாற்ற சென்ற சிவசங்கரன் திரும்பவேயில்லை.

சில நொடிகளிலேயே வேல்முருகன் தப்பி பிழைத்தோம் என்று வெளியே வர செல்வியின் கண்கள் அவளின் கணவனை ஆவலாய் தேடிக் கொண்டிருந்தது.

“மாமா… எங்கே அவரு?” என்று செல்வி கண்ணீரோடு கதற வேல்முருகன் முகத்தை மூடிக் கொண்ட அழத் தொடங்கினான்.

என்ன நடந்தது என்று யூகிக்க முடியாத அந்த தருணத்தில் செல்வியும் உடனடியாய் யோசிக்காமல் அந்த நெருப்பிற்குள் புகுந்தாள்.

அந்த அனலையும் புகைமூட்டத்தையும் சமாளிக்க முடியாமல் போக செல்வி அந்த அடர்ந்த நெருப்பிற்குள் மயங்கி சரிய,

அன்றே அவனோடு முடிந்திருக்க வேண்டிய அவள் விதியை இயற்கை மாற்றி தீர்மானித்தது.

அந்த நெருப்பை பெரும் மழை வந்து சில மணி நேரங்களில் அணைத்துவிட எல்லாம் ஆதிபரமேஸ்வரியின் சக்தி என மக்கள் பெருமிதம் கொண்டனர்.

சிவசங்கரன் அந்த தீந்தழிலில் கரைந்து போனான். செல்வி உயிரோடு மீட்கப்பட்டாள்.

அவள் அவனிடம் தான் கர்ப்பமாக இருக்கிறோம் என்று சொல்ல எண்ணிய செய்தியை சொல்லும் தருணம் கடைசிவரை அமையாமலே போனது.

அந்த விஷயத்தை கேட்டு அவன் முகத்தில் ஏற்பட்டிருக்கும் ஆனந்தத்தை அவளால் பார்க்க முடியாமலே போனது. அந்த இன்பத்தை கேட்டறியாமலே அவன் வாழ்வும் முடிந்து போனது.

அந்த ஊரில் உள்ளவர்கள் சொன்னது போல் தான் துரதிஷ்டசாலிதான் என செல்வி ஆழமாய் எண்ணி கொண்டாள்.

ஏற்கனவே செல்விக்கு உள்ள அவப்பெயர்கள் பரவிகிடக்க இன்னும் அந்த விபத்துக்கும் அவளின் துரதிஷ்டமே காரணம் என பழி சுமத்தினர்.

சிவசங்கரனை கொன்றது அங்கு பரவிய நெருப்பா? அல்லது அவன் அண்ணன் மனதில் எரிந்து கொண்டிருந்த பொறாமை தீயா?

நியாயம் கேட்கவோ அந்த ஊரில் செல்விக்கு உரிமையும் சூழ்நிலையும் அமையவில்லை.

ஆனால் வேல்முருகன் தயவில் வாழக் கூடாதெனவும் அந்த பாவச் சாயல் படிந்த குடும்பத்தில் தனக்கு பிறக்க போகும் குழந்தை வளரக் கூடாது என ஆழமாய் தீர்மானித்து ஆதித்தபுரத்தை விட்டு வெளியேறினாள் செல்வி.