இருபத்தைந்து வருடத்திற்கு பின்
சரவணனிடம் கூட ஆதி தான் நோட்டீஸ் அனுப்ப போவதை பற்றி தெரிவிக்கவில்லை. அவள் செய்யும் செயலுக்கான காரணத்தை அவள் மட்டுமே அறிந்திருக்க கூடும்.
அதே நேரம் சரவணனுக்கு உள்ளுக்குள் ஆதி வேல்முருகனை பற்றி சொன்ன விஷயத்தில் எந்தளவுக்கு உண்மை இருக்க கூடும் என்ற சந்தேகம் மனதை துளையிட்டது.
அந்த சமயத்தில்தான் சரவணன் யதேச்சையாக வேல்முருகனும் கனகவள்ளியும் மாடியில் நின்று பேசிக் கொண்டிருந்ததை கேட்டான்.
“அந்த புள்ளைய வீட்டில விட்டதற்கு என்ன காரியம் செஞ்சிருக்கா பாத்தியா கனகம்” என்றான் வேல்முருகன் சினத்தோடு!
“அவ உரிமையைதானே அவ கேட்கிறா…இதுல என்ன தப்பு?” என்று கனகம் சொல்ல
வேல்முருகன் எரிச்சலோடு,
“உரிமையாவது மண்ணாவது… நான் கட்டிக் காத்த சொத்தை நேத்து வந்தவளுக்கு… தூக்கி கொடுக்கனுமாமே… அதுவும் அவ என் தம்பி பொண்ணுன்னு சொல்லிட்டா அதை நான் நம்பிடனுமா… போடி பொசக்கெட்டவளே” என்று மனைவியை கோபமாய் கடிந்து கொண்டார்.
“உங்க தம்பி பொண்டாட்டிதானே செல்வி… அப்படியே ஆதி அசப்பில செல்வி போலவே இருக்கு… இதுல நீங்க நம்பறதுக்கு என்ன இருக்கு… அதுவும் இல்லாம உங்க தம்பியும் இந்த குடும்பத்துக்காக உழைச்சிருக்காரு… சொத்தை எல்லாம் கவனிச்சிட்டிருந்தாரு… அதை எல்லாம் ஞாபகபடுத்தி பாருங்க”
“அதெல்லாம் ரொம்ப பழைய கதை… நான் எதையும் ஞாபகப்படுத்திக்க விரும்பல… அந்த செல்வியும் அவ பொண்ணும் எந்த காரணத்தை கொண்டும் இந்த வீட்டுப்பக்கமே வர கூடாது… ஏன்? இந்த ஊர்பக்கமே வரக் கூடாது… அதுக்கு நான் ஒரு வழி பன்றேன்” என்றவர் ததன் மனதில் உள்ள வஞ்சத்தை வெளிபடுத்த,
“இதெல்லாம் எங்கே போய் முடியப் போகுதோ?!” என்று கனகம் தலையிலடித்து புலம்பி கொண்டே படியிறங்கியவர் அங்கே சரவணன் நின்றிருந்ததை கவனிக்கவில்லை.
சரவணன் இவர்கள் இருவரின் பேச்சையும் கேட்டு எந்த முடிவுக்கும் வரமுடியாமல் வேல்முருகனை பார்க்கச் சென்றவன்,
அன்றுதான் தன் மாமானின் மோசமான இன்னொரு பக்கத்தை தெரிந்து கொண்டான்.
சரவணன் தன் மாமனிடம் இயல்பாக வரிசையாய் பல விஷயங்களை பற்றி விவாதித்துவிட்டு இறுதியாய் ஆதியின் மீதுள்ள கோபத்தை தூண்டிவிட்டபடி பேச,
“அந்த தோப்பிலயே அவ கதையை முடிச்சிருப்பேன் அந்த நேரம் பார்த்து அந்த பையன் குறுக்கால வந்து காப்பாத்திட்டான்” என்று வேல்முருகன் சொன்னதை கேட்ட சரவணனுக்கு அதிர்ச்சியானது.
உண்மை அப்போதுதான் விளங்கியது.
ஆதியை கொல்வதற்கு அன்றிரவு கத்தியை வீசியது வேல்முருகன்தான் என்பது சரவணனுக்கு புரிந்தது.
“நம்ம தோப்பிலயா ?!”என்று சரவணன் தெரியாதவன் போல் கேட்க,
“ஆமாம்! அங்கயே அந்த புள்ளைய கொன்னிருந்தேனா ?… பேயடிச்சிடுச்சின்னு ஊருக்குள்ள நம்பவைச்சிருக்கலாம்… அந்த பையன் குறுக்கு புகுந்து காரியத்தையே கெடுத்துட்டான்… காலையில தோப்பில அவன் செத்துகிடப்பான்னு பார்த்தேன்… கடைசில அந்த இரண்டு சனியனும் எங்கயோ போய் தொலைஞ்சிடுச்சு… பயந்து ஓடிட்டான்னு பார்த்தா… திரும்பியும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி என் நிம்மிதியை கெடுக்கிறா” என்று ஆக்ரோஷமாய் உரைத்தார் வேல்முருகன்.
“நீங்க தப்பு பண்ணிட்டீங்க மாமா அவங்க அப்பாவுக்கு நடந்த மாதிரி அவங்களையும் தோப்போட வைச்சி எரிச்சிருக்கனும்” என்று சரவணன் வேண்டுமென்றே அந்த விபரீத வார்த்தையை சொல்ல,
அப்போது வேல்முருகன் சரவணனை பார்த்த பார்வையில் கொஞ்சம் சந்தேகமும் ஒளிந்திருந்தது. இவன் தன்னை போட்டு வாங்குகிறானா என்று!
“என்ன மாமா அப்படி பார்க்கிறீங்க ? உண்மையாதான் சொல்றேன்… மாமாவே இல்லன்னு ஆனா பிறகு என்ன உரிமையில சொத்துல பங்கு கேட்கிறா?” என்று சரவணன் சொல்ல வேல்முருகன் கொஞ்சம் நம்பிக்கை பெற்றவனாய்,
“அன்னிக்கி என் தம்பி செத்த போதே அந்த செல்வியும் கருகி போயிப்பான்னு பார்த்தேன்… தப்பிச்சிட்டா… ” என்றதும் சரவணன் துணுக்குற்றான்.
“தெரியாமதான் கேட்கிறேன்… அன்னைக்கி எப்படி தோப்பில நெருப்பு பத்திக்கிச்சு… அத்தையும் கூடவா நெருப்பில மாட்டிக்கிட்டாங்க?” சரவணன் சூட்சமமாய் தன் மாமனுக்கு வலை வீச,
வேல்முருகன் அந்த நாளை பற்றி யோசிக்க அவன் முகத்தில் வஞ்சமான சிரிப்பு வெளிப்பட்டது.
“என் வாழ்கையையே மாத்தினது அந்த நாள்தான் சரவணன்… என்னதான் இந்த வீட்டிற்கு மூத்தவனா இருந்தாலும் என் தம்பிதான் எங்க அப்பாவுக்கு எல்லாம்… இந்த ஊரே அவனை தலையில தூக்கி வைச்சு கொண்டாடிச்சு…
எங்க அப்பா உடம்பு சரியில்லாம படுத்து கிடந்த போது சிவசங்கரன்தான் ஊர் தலைவனாகனும் சொன்னாங்க… போயும் போயும் ஒண்ணுக்கும் வக்கில்லாத அந்த செல்வி இந்த வீட்டுக்கே மகாராணி ஆயிடலாம்னு பாத்தா…
அன்னைக்கு இந்த ஊர்ல எனக்குன்னு பேரோ மரியாதையோ எதுவும் இல்ல… இந்த ஊர்ல எங்கப்பனுக்கு அப்புறம் எல்லா மரியாதையும எனக்கு கிடைக்கனும்னா சங்கரன் இருக்க கூடாது…
கடவுளே அப்படி ஒரு வாய்ப்பை எனக்கு கொடுத்த போது நான் அதை பயன்படுத்திக்கிட்டேன்… தம்பி தோப்பில எவன் கூடயோ சண்டை போட்டுட்டிருந்த போது… அன்னைக்கு ஏற்பட்ட மின்னலில் தோப்பில நெருப்பு பரவ ஆரம்பிச்சுது.. என் தம்பி தப்பிக்க கூடாதுன்னு இன்னொரு பக்கத்தில நெருப்பை நான் எரிய வைச்சேன்…
ஆனா அவன் எப்படியோ தப்பிச்சிட்டான்… அப்போ முடிவெடுத்தேன் ஒண்ணும் நான் உயிரோட இருக்கனும் இல்ல அவன்… அந்த நெருப்பில நானே மாட்டிக்கிட்டு கத்தினேன்…
அன்னைக்கு நேரம் எனக்கு நல்லா இருந்துச்சு.. உள்ளே வந்தவன் என்னை காப்பாத்த போய் அவன் மாட்டிக்கிட்டான் நான் தப்பிச்சிக்கிட்டேன்… அந்த செல்வியும் புரிஷனோட சேர்ந்து சாம்பலாயிடுவான்னு பார்த்தேன்… அந்த நேரம் பார்த்து மழை வந்து கெடுத்துடுச்சு” என்று வேல்முருகன் தன் மனதின் வன்மத்தை கொட்டி தீர்க்க சரவணனின் முகத்தில் வேதனை நிரம்பியது.
அப்போது ஆதியின் வார்த்தை அவனுக்கு ஞாபகத்திற்கு வர,
‘பெரியப்பா எங்க அப்பாவுக்கு செஞ்ச சதி.. சரியா சொல்லனும்னா துரோகம்… எங்க அம்மாவுக்கு நடந்த அநீதி’
வேல்முருகன் தொடர்ந்து அவர் செய்த செயலை நியாயப்படுத்த அதை சரவணின் மனம் ஏற்று கொள்ள மறுத்தது. இது கொலை என்று மோசமான ஒன்றோடு கூட ஒப்பிட முடியாத துரோகம் என்று அவனுக்கு தோன்றியது.
சரவணன் தன் வெறுப்பையும் கோபத்தையும் காட்டிக் கொள்ளாமல் தன் மாமனிடம் இயல்பாய் பேசிவிட்டு அங்கிருந்து அகன்றான்.
*******
இருபத்தைந்து வருடத்திற்கு பின்…
ஆதித்தபுரத்தில் நுழைகிறார் செல்லம்மா.
தினம்தினம் ஆதவன் ஆதித்தபுரத்தில் நுழைந்து ஒளியூட்டுகிறான். இன்று அந்த விடியல் செல்லாமாவை வரவேற்கவே உதித்ததோ!
மீண்டும் அப்படி ஒரு நாள் வருமென்று அவள் கனவிலும் நினைத்ததில்லை. அந்த ஊரின் வரவேற்பு பலகையை பார்த்து வெறுப்போடு முகத்தை திருப்பிக் கொண்டார் செல்லம்மா.
காரின் ஜன்னல் கண்ணாடி வழியே செல்லம்மா ஆதித்தபுரத்தை பார்க்க,
அவர் சிறு வயதில் இருந்து ரசித்த அழகும் பொலிவும் இப்போது அங்கே தென்படவில்லை.
ஆதி தன்அம்மாவின் முகத்தில் தெரிந்த வேதனையை பார்த்து,
“என்னம்மாச்சு?!” என்று புருவத்தை நெறித்தாள்.
“ஏன் ஆதி என்னை இங்க கூட்டிட்டு வந்த?… எனக்கும் இந்த ஊருக்கும் என்ன இருக்கு?… இங்க இருக்கிற யாரையும் நான் இப்பவும் பார்க்க விருப்பபடல” என்றார்.
இந்த வார்த்தைகளை கேட்டு கொண்டே ஆதி காரை ஓரமாய் நிறுத்த,
செல்லம்மா தன் பார்வையால் அந்த இடத்தை சுற்றி பார்த்தார்.
அவர் கண்முன்னே ஆதிபரமேஸ்வரி ஆலயம் கம்பீரமாய் தலைதூக்கி நின்றிருக்க அவர் முகம் சுணங்கியது.
“வாங்கம்மா” என்று ஆதி அழைக்க,
“நான் உள்ளே வரமாட்டேன் ஆதி… ஆதிபரமேஸ்வரி என்கிற பெயரை உனக்கு வைச்சதுக்கு காரணம் அது உங்கப்பாவோட ஆசை… மத்தபடி இந்த சாமி மேல எனக்கு பக்தியும் இல்ல.. அந்த அம்மனுக்கு சக்தியும் இல்ல” என்றார் செல்லம்மா வெறுப்பான பாவனையோடு!
“அப்புறம் எதுக்கு இந்த டாலரை என் கழுத்தில கட்டினிங்க?” ஆதி அவரை கூர்ந்து பார்த்து இந்த கேள்வியை எழுப்ப,
“அதுல உங்க பாட்டி அத்தையோட அசீர்வாதம் இருக்கு… அவ்வளவுதான்” என்று செல்லம்மா பதிலளிக்க ஆதி லேசாக நகைத்தாள்.
“சரி… நீங்க அந்த அம்மனை பார்க்க வேண்டாம்… உங்க மேல இன்னும் அன்போட இருக்கிற இரண்டு ஜீவனை பார்க்கலாம்” என்று சொல்லி தன் அம்மாவின் கைப்பற்றி அழைத்து கொண்டு வந்தவள் அன்னம்மாவை காண்பிக்க,
செல்லம்மாவில் விழிகள் வியப்பில் அகலவிரிந்தன. அன்னம்மா மரத்தடியில் அமர்ந்திருக்கும் கோலத்தை பார்த்து கண்கலங்கியவர்,
“அன்னம்மா !” என்று ஆச்சர்யத்தோடு அழைத்து அவரின் கைகளை பற்ற,
அவரோ செல்லம்மாவை அடையாளம் கண்டு கொண்டு நெகிழ்ந்தபடி கண்ணீரால் தன் அன்பை உணர்த்தினார்.
வார்த்தையின்றி ஊமையாய் போனாலும் அன்னம்மாவிற்கு அவரின் அன்பை உணர்த்த கண்ணீரே போதுமானதாய் இருந்தது.
பின்னர் ஆதி செல்லம்மாவின் கரங்களை பற்றி அழைத்து ஈஸ்வரனின் முன்னிலையில் நிறுத்த,
பேச்சற்று போனார் அவர்.
இத்தனை வருடமாய் ஈஸ்வரன் தன் தாயாக எண்ணிக் கொண்டிருந்தது செல்லம்மாவைதான். இன்று அவரை பார்த்த நொடி தான் வருடங்களாய் காத்திருந்ததை தவிப்பை தன் கழுத்தின் மணி ஒலிக்க தலையசைத்து ஈஸ்வரன் உறைக்க அந்த ஆச்சர்யத்தில் சில நொடிகள் உறைந்து நின்றார் செல்லம்மா.
வெறும் ஐந்தறிவு ஜீவன் என்றாலும் அவனுக்கு பற்றுதலும் பாசமும் இருந்தது. மனிதனிற்கு இருப்பதையும் விட பன்மடங்கு அதிகமாயிருந்தது.
அதற்கு சான்றாய் செல்லம்மாவை பார்த்த நொடி ஈஸ்வரன் விழியிலும் நீர் பெருகி ஓட,
அந்த காட்சியை பார்த்தவர் நெகிழ்ந்து போனார்.
அவர் பரிவோடு தன் கரத்தால் அவனை தொட்டு தழுவ,
திமிழை சிலிர்த்து கொண்டு மண்டியிட்டான்.
“ஈஸ்வரா” என்று செல்லம்மா தழுதழுத்த குரலில் அழைக்க,
அவன் வாய் திறந்து என்ன சொல்லி இருப்பான் என வாசகர்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை.
ஆதியும் இந்த காட்சியை பார்த்து நெகிழ்ந்தவள் தன் அம்மாவின் தோள்களை தொட்டு,
“என்னம்மா… இந்த ஊருக்கு நீங்க திரும்பி வர இந்த காரணம் போதாதா ?! இந்த அன்பை வேற யார் காட்ட முடியும்?!” என்றவள் சொல்ல,
செல்லம்மாவும் தன் மகளின் வார்த்தையை ஆமோதித்தவர்
ஈஸ்வரனுடன் சில நொடிகள் இருந்துவிட்டு பின் அவனை தடவி பிரியா விடைபெற்றார்.
அதோடு செல்லம்மா அன்னம்மாவை தம்மோடு வர சொல்லி அழைக்க, அவர் சமிஞ்சையால் ஏதோ சொல்லி மறுத்தார்.
“என் தலையில இருக்கிற பாவம் இறங்கிற வரைக்கும் நான் வரமாட்டேன்” என்று திட்டவட்டமாய் அன்னம்மா சொன்னதாக அவர் வாயசைப்பிற்கு தம் வார்த்தைகளால் உயிர் கொடுத்தாள் ஆதி.
பிறகு மீண்டும் காரில் இருவரும் ஏறிச் செல்ல செல்லம்மா,
“நான் அந்த வீட்டுக்கு வரமாட்டேன்” என்று ஏற்கனவே ஆதியிடம் சொல்லி இருந்தார்.
அதனால் அவர்கள் சோமு வீட்டில் சென்று இறங்க,
அங்கே சங்கரி ஆதியை கட்டிணைத்துவிட்டு செல்லம்மாவை பரிவோடும் அத்தனை மரியாதையோடும் வரவேற்றார்.
செல்லம்மா ஆதியிடம் சங்கரியை யாரென்று வினவ, “சிவசங்கரி”என்று அவளை ஆதி அறிமுகப்படுத்த,
செல்லம்மாவிற்கு தன் கணவனுடனான பழைய நினைவுகள் மனதில் அணிவகுத்தன.
அதே நேரம் சோமுவும் செல்லம்மாவினை வரவேற்று அவரிடம் சிவசங்கரனின் பிரிவை பற்றி வர்ணிக்க அந்த சந்திப்பு முற்றிலும் சோகமமயமாய் மாறியது.
ஆதி உடனே,
“போதும் அப்பாவை பத்தி திரும்ப திரும்ப பேசி இந்த மொமன்ட்டை இமோஷனாலாக்கதீங்க ப்ளீஸ்” என்று கெஞ்சலாய் சொல்லி அவர்கள் பேச்சை நிறுத்த,
அதற்குள் வெளியே கதவு தட்டும் ஓசை கேட்டு சங்கரி சென்று கதவை திறந்தாள்.
வெளியே சரவணன் நிற்க அவனை வேண்டா வெறுப்பாய் பார்த்தவள்,
“நீ எதுக்கு இங்க வந்த?” என்று கேட்க,
“நான் உன்னை பார்க்க வரல… எங்க அத்தையை பார்க்க வந்தேன்… வழி விடு” என்றவன் அவளை சற்றும் பொருட்படுத்தாமல் உள்ளே நுழைந்தான்.
“ஏய் நில்லு” என்று சங்கரி அவனை தடுக்க முற்பட அதனை கவனித்து ஆதி,
“லெட் ஹிம் கம்… நான்தான் அவனை வரச்சொன்னேன்” என்றாள்.
சங்கரி கடுப்பாய் அவனை பார்க்க அவனோ நேராய் உள்ளே சென்று நிற்க,
சோமுவும் கூட அவனை பார்த்து எரிச்சலடைந்தார். அவன் மீது அவருக்கு இதுநாள்வரை நன்மதிப்பு கிடையாது. அவன் வேல்முருகனின் பேச்சையும் செயலையும் பிரதிபலிக்கும் ஓத்தவடிவம்.
ஆதலாலயே அவன் ஏதோ பிரச்சனை பண்ண வந்திருக்கிறானோ என்றவர் எண்ணி கொண்டிருக்க,
செல்லம்மாவும் கூட சரவணின் வருகையை விருப்பமில்லாமல் எதிர்கொண்டார்.
அவரால் எப்படி அவன் பேசிய வார்த்தைகளை மறக்க முடியும். அந்த இழிவான சொற்க்கள் இன்னும் அவர் காதுகளில் ஓலிக்க கோபத்தோடு அவர் முகத்தை திருப்பிக் கொண்டார்.
அந்த புறக்கணிப்புக்கான அர்த்தத்தை நன்கு உணர்ந்த சரவணன் அன்று தான் செல்லம்மாவிடம் பேசியவற்றை நினைவுகூர்ந்தான்.
அதற்கு பின்னர் அவன் செய்த காரியம் எல்லோரையும் உச்சபட்ச அதிர்ச்சியில் ஆழ்த்தியது என்றே சொல்ல வேண்டும்.
அவன் அப்படியே சாஷ்டாங்கமாய் செல்லம்மாவின் காலில் வீழ்ந்துவிட,
ஆதி அவன் செயலை பார்த்து, “அய்யோ சரவணா… எழுந்திரு” என்று பதறினாள்.
அப்போது செல்லம்மாவும் அவன் செய்கையில் துணுக்குற்று,
“சரவணா பரவாயில்ல எழுந்திரு” என்க,
“நான் அன்னைக்கு அப்படி உங்களை பேசின பாவத்துக்கு எனக்கு விமோச்சனமே கிடையாது… நானெல்லாம் மனிஷனே இல்ல” என்றான் படுத்தபடியே!
சங்கரி தான் பார்ப்பது சரவணன்தானா என்று நம்ப முடியாமல் வியப்பின் விளிம்பிற்கே சென்றுவிட,
செல்லம்மா பிராயத்தனப்பட்டு அவனை தூக்கிவிட அவனோ கண்ணீரோடு கைகளை சேர்த்து,
“நான் புத்திகெட்டத்தனமா அப்படி பேசிட்டேன்… மன்னிச்சிடுங்க அத்தை… இல்ல இரண்டு அடியாச்சும் அடிங்க… அப்பதான் என் மனசு ஆறும்” என்றதும் அவருக்கு சிறுவயதில் பார்த்த கள்ளங்கபடமில்லாத சரவணனின் முகமே கண்முன்னே தோன்றியது.