Aathiye anthamai – 42

Aathiye anthamai – 42

தீதும் நன்றும்

ஆதி கேட்ட கேள்வி ஊர்மக்கள் எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மனோரஞ்சிதம், கனகவள்ளி இருவரும் வாயடைத்து போய் நின்றிருந்தனர்.

வேல்முருகனோ அதிர்ச்சியில் இருந்து மீளாமல் நின்றிருக்க

மணிமாறன் கோபம் பொங்க,
“உன்னை கொன்னுடுவேன்டி” என்று  தன் மாமன் மீதிருந்த பற்றினால் ஆதியின் மீது எகிறி கொண்டு வர சோமு அவனை தடுத்தி பிடித்து கொண்டார்.

ஊர்மக்கள் எல்லோரும் ஆதியின் மீது வார்த்தைகளை தீயாய் அள்ளி வீச, ஆதி எதற்கும் அசராமல் திடமாய் நின்றிருந்தாள். அவள் முகத்தில் எந்தவித கலக்கமோ கலவரமோ இல்லை.

ஆனால் மணிமாறானோ அவளை தாக்குவதிலேயே குறியாய் இருக்க அவனை தடுக்க சோமு ரொம்பவும் பிராயத்தனப்பட்டு கொண்டிருந்தார்.

அப்போது ஆதி அவன் புறம் தன் கவனத்தை திருப்பி சற்றே கோபமாக,

“தப்பை தட்டி கேட்கிறவன்தான் ஆம்பள… இப்படி தொட்டதுக்கெல்லாம் கோபப்படறது ஆம்பளத்தனம் இல்ல…முழுசா நடந்தது என்னென்னு தெரியாம என் மேல உங்க வீரத்தை காண்பிக்காதீங்க” என்று ஆவேசமாய் சொல்ல மணிமாறனின் வெறி இன்னும் அதிகமானது.

“நீ யாருடி என் மாமனப்பத்தி பேசறதுக்கு… ஒழுங்கா ஊர் போய் சேரமாட்ட பாத்துக்கோ?!” மணிமாறன் சீற்றமாய் மிரட்ட வசந்தாவும் அப்போது  கணவனுக்கு துணையாய் வந்து நின்றாள்.

“எங்க அப்பா மேல உனக்கு கோபம் இருக்குன்னு எனக்கு புரியுது… அதுக்காக இப்படி அவர் மேலே நீ அபாண்டமான பழி போடிறத என்னால ஓத்துக்க முடியாது ஆதி” என்றாள்.

அந்த இடமே காரசாரமான விவாதங்களோடு  ரணகளப்பட்டு கொண்டிருக்க, செல்லம்மாவோ ஆதி அப்படி சொன்னதன் காரணத்தை தீவிரமாய் யோசித்து கொண்டிருந்தார்.

ஆதி எதையும் தீர விசாரிக்கமலோ அல்லது உண்மையை அறியாமலோ பேசக் கூடியவள் அல்லவே! அப்படியெனில் ?

அவர் மனம் அந்த உண்மையை எண்ணி பாரமாய் அழுத்த ஆதி மேலும் அந்த கூட்டத்தின் சலசலப்பாய் நிர்மூலமாக்கியபடி தன் குரலை உயர்த்தினாள்.

“நான் கேட்ட கேள்விக்கு முதலில் பெரியப்பா பதில் சொல்லட்டும்… அப்புறம் யார் வேணா என்ன வேணா பேசுவங்க”

ஆளுமையாய் எழுந்த அவள் குரலும் மிரட்டலாய் இருந்த அவள் பார்வையும்  அங்கிருந்த எல்லோரையும்  அமைதிப்படுத்தியது என்று சொன்னால் மிகையல்ல!

அங்கே நின்றாள் ஆதி!

ஆனால் வேல்முருகன் பதில் பேசாமல் மௌனமாய் அமர்ந்திருக்க,

“ஏன் பெரியப்பா அமைதியா இரூக்கீங்க?…  உண்மையா சொன்னா இந்த ஊர்மக்கள் எல்லாம் உங்க மூஞ்சில காரி துப்பிடுவாங்கன்னு பயப்படிறீங்களா?!”

இந்த கேள்வியை கேட்டதுமே ஊர்மக்கள் எல்லாரும் ஆதியை எதிர்த்து பயங்கரமாய் குரல் கொடுக்க,

இப்போது சரவணன் முன்வந்து தன் குரலை உயர்த்தினான்.

“நிறுத்துங்க… உண்மை என்ன ஏதுன்னு தெரியாம ஆளாளுக்கு உங்க இஷ்டபடி பேசாதீங்க” என்றவன் அப்போது

தன் பெரியப்பாவிடம் திரும்பி,

“ஏன் மாமா கல்லாட்டும் உட்காந்திட்டிருக்கீங்க… உங்க தம்பி மக கேட்கிறா இல்ல… பதில் சொல்லுங்க..” என்க,

“டே சரவணா! யார்கிட்ட பேசிட்டிருக்கன்னு தெரிஞ்சுதான் பேசிறியா?” என்று மணிமாறன் தன் தம்பியை கண்டித்தான்.

“நீ அமைதியா இருண்ணா… இது எனக்கும் மாமனக்கும் மட்டும் தெரிஞ்ச ரகசியம்… என்ன மாமா?!” என்று சரவணன் விஷமமாய் புன்னகையிக்க,

வேல்முருகனுக்கு பேரதிர்ச்சியாய் இருந்தது. தனக்கு எதிராக சரவணன் பேசுகிறான் என்பதை நம்பவே முடியவில்லை. அதுவும் அவனிடம் போய் எல்லா உண்மையை சொல்லிவிட்டோமே என்று உள்ளம் படபடக்க,

அந்த நொடியே சீற்றமானவர்,

“நன்றி கெட்டவனே… இத்தனை வருஷமா என் தயவிலதான் நீ இருக்கன்னு மறந்துட்டு பேசாதே” என்றார்.

“அப்படி நான் இருந்தேங்கிறதுக்காக நான் இன்னைக்கு வெட்கப்படறேன்” என்று சரவணன் ஆசுயையான பார்வையோடு சொல்ல ஊர்மக்கள் எல்லோரும் முற்றிலுமாய் குழம்பினர்.

“அந்த புள்ள மேல இருக்கிற மயக்கத்தில இப்படி புத்தி கெட்டுத்தனமா பேசிட்டிருக்கியா?! எனக்கு எதிரா நீ பேசினா உன்னைய கட்டிக்கிறன்னு சொன்னாளா அந்த சிறுக்கி” என்று வேல்முருகன் ஆக்ரோஷமாய் கேட்க,

“மாமா” என்று சரவணன் சத்தமிட்டான்.

அந்த நேரம் ஆதிக்கு கோபம் கனலாய் ஏற,

“போதும் நிறுத்துங்க” என்று கத்தியவள் மேலும்,

“நீங்க எந்த உண்மையும் சொல்லப் போறதும் இல்ல… சொல்லவும் மாட்டீங்க… ஆனா நடந்த உண்மை இங்க இருக்கிற எல்லோருக்கும் தெரியனும்.. இந்த பதவிக்காகவும் மரியாதைக்காகவும் தானே நீங்க இப்படி ஒரு துரோகத்தை பண்ணீங்க… அது இல்லாம போகனும்… அதிர்ஷ்டமில்லாதவன்னு எங்கம்மா  மேல பழி போட்டு நீங்க செஞ்ச காரியத்தை மறைச்சிட்டீங்க…இனிமேயும் அப்படி செய்ய முடியாது” என்று ஆவேசமாய் பேசியவள் தோப்பிற்குள் தீபிடித்த போது தன் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இழைக்கப்பட்ட அநீதியை எல்லோர் முன்னிலையிலும் விவரித்தாள்.

வேல்முருகன் எகத்தாளமாய் சிரித்து,

“நீ சொல்ற கதை எல்லாம் இந்த ஊர்மக்கள் நம்பமாட்டாங்கடி” என்றார்.

சரவணன் பதிலுக்கு சிரித்து விட்டு

“அப்போ நீங்களே சொன்னா நம்புவாங்க இல்ல மாமா” என்று கேட்க அவர் முகம் வெளிறி போனது.

சரவணன் தன் கைப்பேசியை எடுத்து,

“இந்த போஃனில நீங்க பேசின வீடியோ இருக்கு மாமா… அதை எல்லார் போனுக்கும் அனுப்பிட்டா போச்சு… அப்போ உங்க வஞ்சமும் கெட்ட புத்தியும் எல்லோருக்கும் தெரிஞ்சிரும்” என்றான்.

“எதுக்குடா இப்படி பண்ண?” என்று வேல்முருகன் ஆத்திரப்பட்டு சரவணன் சட்டையை பிடித்து உலுக்க,

“நீங்க உங்க தம்பிக்கு பண்ணதைவிடவா நான் பண்ணிட்டேன்”என்று சொல்லி சரவணன் தன்னை விடுவித்து கொண்டான்.

எல்லோருக்கும் வேல்முருகனின் அந்த மோசமான முகம் புரிந்து போனது. நடந்த விஷயங்களை ஆதி சொன்ன போது அந்த சம்பவத்தை பற்றி தெரிந்த எல்லோருக்குமே பயங்கரமான அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால் இவர்கள் எல்லோரையும் விட அந்த நிகழ்வால் பாதிக்கப்பட்டது செல்லம்மாதான்!

அன்று சிவசங்கரன் அவள் கையை உதறிவிட்டு தன் தமையனை காப்பாற்ற நெருப்புக்குள் சென்றதை எண்ண எண்ண செல்லம்மாவின் உள்ளமெல்லாம் எரிமலையாய் கொந்தளிக்க,

அவள் ஆவேசமாய் சென்று,

“படுபாவி… இப்படி பண்ணிட்டியே”என்று வேல்முருகன் கழுத்தை இறுக்கிபிடித்தார்.

பெண்களை பூமாதேவி என்று பொறுமைக்கு உதாரணமாய் சொல்லப்படுவது வழக்கம். ஆனால் அந்த பொறுமையின் எல்லை தகர்ந்தால் பெரும் பூகம்பகமே உருவாகி நிர்மூலமாக்கிவிடும் என்பது மறுக்க முடியாத உண்மை!

அப்படிதான் செல்லம்மா அப்போது ரௌத்திரமாய் மாறியிருந்தார்.

“அவரை கொல்ல எப்படி மனசு வந்துச்சு.. சொத்து பதவி வேணும்னு சொல்லிருந்தா அவரே ஒதுங்கி போயிருப்பாரில்ல… யாருக்குமே கெடுதல் நினைக்காத மனிஷன்… அண்ணன் நெருப்பில மாட்டிக்கிட்டாருன்னு பதறிட்டு ஓடினாரே… சாம்பலாக்கிட்டீயே .. மனிஷனா நீ… த்தூ… எவ்வளவு பெரிய துரோகம்” என்று காரி உமிழ்ந்தாள்.

வேல்முருகனுக்கு அவமானம் ஏற செல்லம்மாவின் கரத்திலிருந்து தனனை் மீட்க போராடினார். ஆனால் அது அத்தனை சுலபமல்லவே!

சாது மிரண்டால்  காடு கொள்ளாது. செல்லம்மாவின் கொதிப்பு அடங்கும் நிலையில் இல்லை. அது தன் எல்லையை மீறி கொண்டே போக,

“சே! நீயெல்லாம் உயிரோட இருக்க அதை அந்த சாமியும் பாத்திட்டிருக்கு… அது சாமியே இல்ல… கல்லு… ஆனா நான் உன்னை உயிரோட விடபோறதில்ல”  என்றவர் தன்னிலைப்பாட்டை கடந்திருக்க ஆதி பதட்டத்தோடு தன் அம்மாவிடம், “ப்ளீஸ்ம்மா விடுங்க”என்று அவரருகில் நெருங்கினாள்.

ஊர்மக்கள் எல்லோருக்கும் செல்லம்மாவின் கோபம் நியாயமாய்பட்டதால் யாருமே அவரை தடுக்கவில்லை.

செல்லம்மாவின் கோபத்தினால் உண்டான பலத்தை வேல்முருகனால் எதிர்கொள்ள முடியவில்லை. இருந்தும் அவர் முயற்சி செய்து செல்லம்மாவை தள்ளிவிட,

தன் அம்மாவினை தம் கரங்களால் தாங்கி கொண்டாள்.

ஆதியின் மனதில் அப்போது ஏதோ ஒரு ஆபத்தின் அறிகுறி தோன்ற, அது என்னவாக இருக்கும் என்று ஆழமாய் யோசித்தவளுக்கு உண்டான யூகம் சரியாய் அரங்கேறியது.

கோவிலின் வலதுபுறத்தில் கட்டி இருந்த ஈஸ்வரன் அங்கே நடந்து கொண்டிருந்த எல்லாவற்றையும் பார்த்து கொண்டிருந்தான். அப்போது அவனை சீற்றமாக்கிய விஷயம் செல்லம்மா வேல்முருகன் கழுத்தை பற்றிய காட்சி. தன் அம்மாவிற்கு பிரச்சனை என்றதும் எந்த மகனாவது ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பானா?

ஆதலாலயே அவன் ஆக்ரோஷமாய் வேல்முருகன் மீது பாய்ந்து கொண்டு வர எல்லோரும் மிரண்டு ஒதுங்கினர்.

ஆதி தடுக்க நினைப்பதற்குள்   ஈஸ்வரனின் கூர்மையான கொம்பு,

வேல்முருகனுக்கு பதிலாய் தன் கணவன் முன்னே வந்து நின்ற கனகவல்லியின் வயிற்றை குத்தி கிழித்தது.

யாரும் எதிர்பார்த்திராத அந்த சம்பவம் நொடி நேரத்தில் நிகழ்ந்தேறிவிட, இதை கண்ட ஊர்மக்கள் எல்லோரும் அதிர்ச்சியாயினர்.

கனகவல்லி வயிற்றை பிடித்தபடி தரையில் சாய, அத்தனை நேரம் கனகவள்ளியிடம் பாராமுகமாய் இருந்த செல்லம்மா அவரை தன் மடியில் தாங்கி கொண்டார்.

கனகவள்ளி தன் இரத்தம் தோய்ந்த கைகளால் செல்லம்மாவின் கையை பிடித்தபடி,

“உனக்கு நடந்த அநியாயத்துக்கு எல்லாம் நான்தான் காரணம்… என்னை மன்னிச்சிடு செல்வி” என்று சொல்லும் போதே அவர் உயிர் பிரிந்துவிட்டது.

இந்த காட்சியை பார்த்து வசந்தா கதறி அழ எல்லோருமே வேதனையில் மூழ்கிய சமயம் ஆதியின் விழியிலும் நீர்  வழிந்தோடியது.

இத்தனை நாளாய் குற்றவுணர்வில் தவித்திருந்த கனகா தனக்கான தண்டனையை இன்று அவரே ஏற்று கொண்டுவிட்டார். இனியாவது அவர் மனம் நிம்மதி அடையட்டும். ஆனால் அத்தகைய நிம்மதி வேல்முருகனுக்கு இனி கிடைக்கபோவதில்லை.

மனைவியின் இறப்பை கண்ணுக்கு நேராய் பார்த்து வேல்முருகன் நொறுங்கி போயிருக்க, அதையேதான் அவர் செல்லம்மாவிற்கும் செய்தார் என்பது இப்போது அவருக்கு நினைவுக்குவந்தது.

அந்த சம்பவத்தால் ஊரே அல்கல்லோலப்பட்டு கொண்டிருக்க,

சிறிது நேரம் கழித்து போலீஸ் ஆதித்தபுரத்தில் நுழைந்தது.

வந்த காவல்துறை அதிகாரியிடம் சரவணன் ஏதோ சொல்ல கனகவல்லியின் இறப்பை பற்றி விசாரணை நடத்தியவர்கள் பின்னர் வேல்முருகனை கைது செய்வதாக உரைத்தனர்.

வேல்முருகன் புரியாமல் விழிக்க,

விஷ்வாவை கொலை செய்ய முயற்சி செய்ததற்காகவே அந்த கைது!

கத்தியில் இருந்த கைரேகை மற்றும் சரவணின் செல்போனில் இருக்கும் வாக்குமூலம் எல்லாமே அவருக்கு எதிராய் இருந்தது.

இதுவும் கூட ஆதியும் சரவணனும்
போட்டு வைத்த திட்டத்தில் ஒன்று!

வேல்முருகன் அப்போது போலீஸ் அதிகாரியிடம் தன் மனைவி இறுதி சடங்கில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்க ஆதி யோசித்தாள்.

ஆனால் வசந்தா கோபம் பொங்க, “ஒண்ணும் வேண்டாம்… உங்களுக்கும் இந்த குடும்பத்திற்கும் சம்பந்தமில்லை… நீங்க எதுக்கும் வர வேண்டாம்” என்று ஆவேசத்தோடும் அழுகையோடும் உரைத்தாள்.

அந்த வார்த்தைகளை கேட்டு மனம் நொந்த வேல்முருகன் காவல்துறை அதிகாரியோடு செல்ல ஆதி அவர் முன்னே சென்று, “நான் பெரியப்பாகிட்ட கொஞ்சம் பேசனும்” என்று அந்த அதிகாரியிடம் அனுமதி பெற்றவன் வேல்முருகனிடம் பேச தொடங்கினாள்.

“இப்படி எல்லாம் நடக்கனும்னு நானே எதிர்பார்க்கல… ரொம்ப சங்கடமா இருக்கு.. ஆனா நடந்ததையும் நடக்க போறதையும் யாராலையும் தீர்மானிக்க முடியாது பாருங்க

தீதும் நன்றும் பிறர் தாரா வாரான்னு சொல்லுவாங்க…
இப்ப நடக்கிற எல்லாமே நீங்க அன்னைக்கு விதைச்சதுதான்… எங்க அப்பாவை இழந்து எங்க அம்மா அனுபவிச்ச தனிமை ரொம்ப கொடுமையானது பெரியப்பா… வார்த்தையால சொல்ல முடியாது” இப்படி சொல்லும் போதே அவள் கண்களில் நீர் தளும்ப அதனை துடைத்து கொண்டு  மேலும் தொடர்ந்தாள்.

“இனி நீங்க அந்த தனிமையை அனுபவிப்பீங்க… இந்த கொலை முயற்சி கேஸ் உங்களுக்கு கிடைக்க போற தண்டனை இல்ல… நீங்க வெளியே வந்த பிறகு உங்க குடும்பமும் இந்த ஊரும் உங்களை ஓதுக்கி வைக்கும் பாருங்க… அது நீங்க எங்க அம்மாவுக்கு செஞ்ச அநீதிக்கு கிடைக்க போற தண்டனை… எந்த மரியாதைக்காகவும் சொத்துக்காகவும் எங்கப்பாவை கொன்னீங்களோ அது இனிமே உங்களுக்கு கிடைக்காது… கிடைக்கவே கிடையாது… அது இந்த சிவசங்கரனோட மக உங்களுக்கு கொடுக்க போற தண்டனை” என்று ஆதி வெறியோடு சொல்லி முடிக்க வேல்முருகன் திகைத்து நின்றாரே ஒழிய அவனுக்கு பேச வார்த்தைகள் இல்லை.

அவர் மௌனமாகவே சென்றார். ஆதி சொன்னவை எல்லாம் வேல்முருகன் தன் வாழ்வில் நிச்சயம் கடந்து வருவார். தாமதமாய் கிடைத்தாலும் குற்றங்களுக்கான தண்டனை உறதியாக கிடைத்தே தீரும்.

இது விதியின் செயலோ அல்ல ஆதியின் மதியின் செயலோ?!

ஊரில் உள்ள எல்லோருமே கனகவள்ளியின் மரணத்தால் ஸ்தம்பித்திருந்தனர். குடும்பமே சோகத்தில் மூழ்கியிருந்தது. செல்லம்மா இத்தனை வருடம் கழித்து மீண்டும்  ஆதித்திபுரத்தில் ஒரு மரணத்தை கண்டது அவரை அவரே நொந்துக் கொள்ளச் செய்தது.

விஷ்வா ஒரளவுக்கு உடல் நலம் தேறிவிட்ட நிலையில் அவன் ஊரில் ஏற்பட்ட துக்க காரியத்தில் பங்கு கொள்வதாக சொல்ல ஆதி கண்டிப்பாக மறுத்தாள். கருணாகரனும் பத்திரிக்கை வேலைகளை விட்டு வர முடியாத சூழ்நிலையில் சிக்கி கொண்டார்.

இவை எல்லாம் ஒரு புறமிருக்க சங்கரி ஆதியிடம் கோபமாய் பேசிக் கொண்டிருந்தாள்.

“ஆதி… நீ இவ்வளவு பெரிய சுயநலவாதியா இருப்பன்னு நான் நினைக்கவே இல்ல” என்றாள் சங்கரி.

“என்ன சொல்ற?” ஆதி அலட்டிக் கொள்ளாமல் கேட்க,

“அந்த பேஃக்டிரி வேலையை நீ நினைச்சா நிறுத்த முடியும்… நீ அதை ஏன் செய்ய மாட்டிற?” என்றாள்.

ஆதி முகம் மலர்ந்தபடி,

“இதான் மேட்டரா?” என்று இயல்பாக கேட்க,

“என்ன இவ்வளவு கூலா கேட்கிற… பிரச்சனையோட சீரியஸ்னஸ் உனக்கு புரியுதா இல்லையா?!” என்று சீற்றமானார் சங்கரி.

ஆதி சிறிது நேரம் தீவிரமாய் யோசித்து விட்டு,

“கோவில் கும்பாபிஷேகம் எப்போ?” என்று கேட்க,

“நான் என்ன கேட்கிறேன்… நீ என்ன கேட்கிற” என்றாள் சங்கரி கோபத்தோடு!

“முதல்ல என் கேள்விக்கு பதில் சொல்லு சங்கரி”

அவள் பெருமூச்சுவிட்டபடி,

“கோவில்ல கும்பாபிஷேகம் நடக்கும்மான்னு தெரியல… போதா குறைக்கு கோவில் வாசலில் கனகம்மா இறந்ததை கெட்ட சகுனமா நினைக்கிறாங்க… சோ கஷ்டம்தான்…

ஆனா ஊர்காரங்க குறி கேட்டு அம்மன் சம்மதம் கிடைச்சா நிச்சயம் நடத்துவாங்க” என்றாள்.

“குறி கேட்கிறதுனா எப்படி?” ஆதி ஆர்வமாய் கேட்க,

“இது தெரியாதா?” என்று சங்கரி அவற்றை பற்றி விவரமாய் உரைக்க ஆதியின் முகம் பிரகாசமானது.

“குட்… இப்போதைக்கு கோவில் கும்பாபிஷேகம் நடக்கனும்….அதான் முதல்ல” என்று ஆதி சொல்ல

சங்கரி புரியாமல் நின்றாள்.

ஆதி அவளிடம், “எனக்கு நீ ஒரு ஹெல்ப் பண்ணனும்” என்க,

சங்கரிக்கு ஒன்றும் விளங்கவில்லை. அப்போது ஆதி அவளை அமர்த்தி அவள் மனதில் பூட்டி வைத்திருந்த கோவில் பற்றி ரகசியத்தை சொல்லிவிட்டு மேலும் ஆதி தன் திட்டம் என்னவென்று சங்கரிக்கு உரைத்தாள்.

அடுத்த நொடியே வாயில் கை வைத்து கொண்டு சங்கரி அதிர்ச்சியில் அமர்ந்தாள்.

அவளுக்கு தலையெல்லாம் கிறுகிறுவென சுற்றி மயக்கம் வரும் போல் இருந்தது. 

“ஆதி ப்ளீஸ் என்னை விட்டிடு” என்றவள் கெஞ்ச,

“இந்த ஊர் நல்லா இருக்கனும்னு நீ இதை செஞ்சிதான் ஆகனும்” என்று ஆதி அவள் விருப்பத்தை கேட்காமல் முடிவாய் சொல்லிவிட்டாள்.

சங்கரி என்ன நிகழுமோ என்று தவிப்போடு அவதியுற, வாசகர்களின் நிலைமையும் கிட்டதட்ட அப்படித்தான் இருக்கும்… இல்லையா?!

error: Content is protected !!