Aathiye anthamai – 44(PF)

Aathiye anthamai – 44(PF)

அந்தம்

கோவிலின் கட்டுமானப் பணி விரைவாகவே ஆரம்பிக்கப்பட்டது. அவற்றின் எல்லா பொறுப்புகளையும் மணிமாறன் கவனித்து கொண்டான்.
நடந்த சம்பவங்கள் அவனுக்குள் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி இருந்தது.

அதே நேரம் சரவணன் ஆதயின் அறிவுரைப்படி ஆதித்தபுரத்தில் இயற்கை விவசாயம் செய்வதற்கான விழிப்புணர்வை பரப்பினான்.

முதலில் எல்லோருமே இயற்கை விவாசயத்தின் மீது முனைப்பு காட்டவில்லை எனினும் அவனின் விடாமுயற்சியால் அதன் சிறப்புணர்ந்து  நாளடைவில் மக்கள் இயற்கை விவசாயத்தை ஊருக்குள் நடைமுறைப்படுத்த,

அதன் சிறப்பும் பயனும் அவர்களை வெகுவாக ஈர்த்தது. பல்வேறு சிரமங்களுக்கு பின் அவனின் முயற்சி வேலை செய்ய தொடங்கியது.

*****
சென்னை- பாரதி பத்திரிக்கை அலுவலகம்.

ஆதி தம் ஆலுவலக அறையில் அமர்ந்து மும்முரமாய் ஆதியே அந்தமாய் கதையின் முடிவை எழுதினாள். கற்பனையிலாவது தன் தந்தை உயிரோடு இருக்கட்டுமே என சிவசங்கரனை கதையின் முடிவில் வருவதுப் போல் எழுதி கொண்டிருந்தாள்.

அப்பொழுது தமிழ் வேந்தன் அவளை சந்திக்க வந்திருப்பதாக அமுதா உரைக்க, ஆதிக்கு ஆச்சர்யம் !

அவரை அவள் மரியாதையாக வரவேற்க அவரும்,

“எப்படி இருக்கீங்க ஆதிபரமேஸ்வரி” என்று அவளிடம் பரிவாய் நலம் விசாரித்தார்.

“ரொம்ப நல்லா இருக்கேன் சார்… திரும்பியும் உங்களை மீட் பண்ணது ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றவள் முறுவலிக்க,

“எனக்குமே” என்றார்.

அவர் மேலும்,

“நீங்க செய்த காரியம் எல்லோரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடிச்சிடுச்சு”என்றவர் அவளை பார்த்து வியக்க,

“நான் எதுவும் செய்யல சார்” என்றாள் ஆதி தன்னடக்கத்தோடு!

தமிழ்வேந்தன் மறுப்பாய் தலையசைத்து புன்னகையித்தவர்,

“அந்த சிலையை மீட்டு, அந்த ஊரையும் காப்பாத்தி, ஆதித்தியவர்மனோட ஆசையையும் நிறைவேற்றி… உங்களை பாராட்ட வார்த்தையே இல்லை ஆதி… யூ ஆர் கிரேட்… சிம்பிளி கிரேட்” என்றார்.

அவர் இப்படி புகழாரம் சூட்டிக் கொண்டிருக்க ஆதி பதில் பேச முடியாமல் தவித்து கொண்டிருந்தாள்.

பின்னர் ஆதி அவரை கேள்விகுறியோடு பார்த்து,

“ஒரு சின்ன டௌட்” என்றவள் அவரை ஆழ்ந்து பார்த்து,

“இத்தனை வருடமா ஆதித்தபுர மக்கள் எப்படி அந்த சிலை போலியானதுன்னு கண்டுபிடிக்காம இருந்தாங்க?”என்று கேட்டாள்.

“மக்களுக்கு விழிப்புணர்வு இல்ல ஆதி… அதுவும் இல்லாம அந்த சிலை பார்க்க கற்சிலை மாதிரியே வடிமைக்கப்பட்டிருக்கு… பக்தியோட பார்த்தா அது வெறும் கடவுள்… ஆனால் உன்னிப்பா அறிவியலோடு பார்த்தால்தான் அந்த சிலையின் ஆச்சர்யம் புரியும்…

அதே போல அந்த சிலை சரித்திரமாய் பார்த்தா விலை மதிப்பில்லாத நம் நாட்டோட பொக்கிஷம்… அந்த மக்கள் சாமியா மட்டுமே அந்த சிலையை பார்த்ததினால் அது போலியானதுன்னு அவங்களால கண்டுபிடிக்க முடியல…

அன் இது ஒண்ணும் முதல்முறை இல்ல ஆதி…

இப்படி நம் நாட்டோட பொக்கிஷமான ஆயிரம் வருட பழமையான பல சிலைகள் கடத்தி வெளிநாட்டுகளுக்கு விற்கப்பட்டிட்டு இருக்கு… அதுவும் இதை மாதிரியான சிறு கிராமங்களிலிருந்து சிறு கோவில் சிலைகள் கடத்தப்பட்டிட்டுதான் இருக்கு…

இந்த பொக்கிஷங்களை பாதுகாக்க வேண்டிய இடத்தில் இருக்கிறவங்க இதனை கண்டு கொள்றதே இல்லை…

அதுவும் இது இன்னைக்கு ஆரம்பிக்கல…

முகலாயர்கள் ஆட்சியை கைப்பற்றிய போது நம் நாட்டு கோவில்களும் சிலைகளும் சேதப்படுத்தப்பட்டன… பிறகு ஆங்கிலேயர் ஆட்சியில நம் நாட்டு பொக்கிஷங்கள் சுரண்டப்பட்டு அவங்க நாட்டுக்கு கடத்தப்பட்டது…

இன்னைக்கி நாடும் ஆட்சியும் நம் கையில இருக்கு… இருந்தும் சொந்த நாட்டு பொக்கிஷத்தை பேரம் பேசி வெளிநாட்டுக்கு நம் நாட்டினன்னே அதன் அருமை தெரியமா வித்திட்டிருக்கான்…

சில லட்சங்களுக்கு விற்கப்படுகிற அந்த சிலைகள் விலைமதிப்பற்றதுன்னு நமக்கு இதுவரை கற்ப்பிக்கபடவில்லை… நாம தெரிஞ்சிக்க முயிற்சி செய்யவும் இல்லை…

நம்முடைய தமிழ் வெறும் மொழியாய் கற்பிக்கபடும் வரை பல ரகசியங்களை நாம் தெரிந்து கொள்ள முடியாது…

தமிழில் அறிவியல், சரித்திரம், இலக்கியம், நற்பண்புன்னு எல்லாமே இருக்கு… என்ன செய்யறது ?இதெல்லாம் தமிழனே தெரிந்து கொள்ளாத அவலம் ” என்று தமிழ்வேந்தன் இயலாமையோடு சொல்லி கொண்டிருக்க ஆதி வியப்பு அடங்காமல் கேட்டு கொண்டிருந்தாள்.

“ரொம்ப சரியா சொன்னிங்க…  ஆங்கில மோகத்தால நம்மையும் நம் இனத்தின் பாரம்பரியத்தையும் நாம எப்பவோ தொலைச்சிட்டோம்… இனி அதை மீட்பதும் பழைய நிலைக்கு கொண்டுவருவதெல்லாம் சாத்தியமான்னு தெரியல” என்றவள் சொல்ல

“ஹ்ம்ம் உண்மைதான்” என்று தமிழ்வேந்தனும் அவள் சொன்னதை ஆமோதித்தார். அவர் மேலும்,

“சரி ஆதி… நான் கேட்கனும்னு நினைச்சேன்… அந்த உண்மையான ஆதிபரமேஸ்வரி சிலையை நீங்க கவனிச்சீங்களா?!” என்று ஆச்சர்யம் பொங்க கேட்க,

“பார்த்தேன்… ஆனா அதன் சூட்சமத்தை என்னால புரிஞ்சிக்க முடியல”என்றாள்.

“அந்த சிலை உண்மையிலேயே அந்த கோவில் கல்வெட்டில் இருக்கிறது போல அந்த ஊரை பசுமையோடும் செழுமையோடும் வைத்திருக்கும் சக்தி இருக்கு…

அந்த சிலை ஒரு அறிவியலின் ஆச்சர்யம்… இன்னும் மூடி மறைக்கப்பட்ட ரகசியங்கள் அதில் நிறைய இருக்கு… அதை நாம் தெளிவான ஆராய்ச்சியின் மூலமாதான் தெரிஞ்சிக்க முடியும்” என்றார்.

“வேண்டாம்  சார்… சில ரகசியங்கள் ரகசியங்களாகவே இருக்கட்டும்… அது தெரிய வரும் போது பயபக்தி மறைஞ்சி அதனை பணமாவும் பொக்கிஷமாவும் பார்க்க ஆரம்பிச்சிடுவாங்க… அதனால்தான் தமிழன் நிறைய ரகசியங்களை கடவுளெனும் பக்திக்கு பிண்ணனியில் ஒளிச்சு வைச்சிருக்கான்… 

நாம நல்லா யோசிச்சா ஒரு விஷயம் புரியும்… தமிழன் கட்டிய அரண்மனைகள் இன்னைக்கி இல்லை… ஆனா  கோவில்கள் இன்னும் காலங்கள் தாண்டி நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்திட்டிருக்கு… அதற்கு காரணம் பக்தியும் கடவுள் நம்பிக்கையும்தான் ” என்று ஆதி சொல்லி கொண்டிருக்கும் போது மேஜை மீதிருந்த தொலைபேசி ஒலித்தது.

அமுதாதான் பேசினாள். அவள் விஷ்வா வந்திருப்பதாக சொல்ல ஆதி சிறிது நேரம் அவனை காத்திருக்கும்படி சொல்லிவிட்டு மேலும் தமிழ்வேந்தனிடம்  பேசினாள்.

அவர்கள் இருவரும் வெகுநேரம் பலவிஷயங்களை பற்றி சுவார்ஸ்யமாய் பேசி பரிமாறி கொண்ட பின்,

அவர் விடைப்பெற்று செல்ல ஆதி விஷ்வாவை உள்ளே அனுப்ப சொன்னாள்.

அவன் நேராய் அறைக்குள் நுழைந்தவள் அவள் முன்னே முறைப்பாய் நின்றான்.

அவன் பார்வையில் தெறிக்கும் கோபத்தை உணர்ந்தவள்,

“சாரி விஷ்வா ரொம்ப நேரம் வெயிட் பண்ண வைச்சிட்டேனா?!”என்று அவள் தயங்கியபடி சொல்ல அவன் இன்னும் சீற்றமானான்.

“உன் சாரியை தூக்கிட்டு போய் குப்பையில போடு” என்றவன் எரிச்சலாய் சொல்ல,

“விஷ்வா” என்றபடி ஆதி ஏதோ பேச யத்தனிக்க அவன் அவளை பேசவிடாமல்,

“யாரை கேட்டிறி கோவில் கும்பாபிஷேகம் நடந்த பிறகு நமக்கு கல்யாணம்னு சொன்னே?!” என்று ஆங்காரமாய் கேட்டான்.

“ப்ளீஸ் விஷ்வா இது ஆபிஸ்… கொஞ்சம் மெதுவா”

“ஆமா இது ஆபிஸ்னு எனக்கு தெரியாது பாரு” என்று முறைத்தவன் மீண்டும் இடைவெளிவிட்டு அவனே தொடர்ந்தான்.

“மேடமை வெளியே மீட் பண்ண முடியல… வீட்டிலயும் பாக்க முடியல.. போன் பண்ணா வேலை இருக்குன்னு சொல்ற.. இங்க பேசினா… இது ஆபிஸ்னு சொல்ற… எனக்கென்னவோ நமக்குள்ள இந்த காதல் கல்யாணம் எல்லா செட் ஆகாதுன்னு தோணுது… நீ முதலியே சொன்ன.. நான் தான் கேட்கல.. இட்ஸ் மை மிஸ்டேக்” என்றவன் சரவெடி கணக்காய் பொறிய ஆதிக்கு கலவரமானது.

அவன் மேலும், “குட் பை… இனிமே நமக்குள்ள ஒண்ணுமில்ல” என்றவன் சொல்லிவிட்டு செல்ல பார்க்க,

ஆதி அவனை வழிமறித்து கொண்டாள்.

“கொஞ்சம் பிஸியா இருந்திட்டேன்…சாரி” அவள் பரிதாபமாய் சொல்ல,

“வழி விடு ஆதி” என்றவன் முறைத்து கொண்டு நிற்க,

“ரிலேக்ஸ் விஷ்வா” என்றவள் சொல்லியபடி அவனை இறுக்கி அணைத்து கொண்டாள்.

அவளின் அணைப்பும் நெருக்கமும் அவனை பேசவிடாமல் செய்ய அவனின் கோபமெல்லாம் கரைந்து காணாமல் போனது.

ஆதி அவன் மார்பில் சாய்ந்தபடி,

“என்னை கொஞ்சம் புரிஞ்சிக்கோ விஷ்வா… நம்ம கல்யாணம் புதுசா கட்டிட்டிருக்கிற ஆதிபரமேஸ்வேரி கோவில்ல நடக்கனும்னு நான் ஆசைபடிறேன்…

ஏன் தெரியுமா ?” என்று அவனை அணைத்தபடியே தலையை நிமிர்த்தி அவள் முகத்தை கேள்வியாய் ஏறிட,

அவன் மனம் அப்படியே அவள் புறம் நொடி நேரத்தில் சாய்ந்துவிட்டது.

அவள் மேலும், “அந்த கோவில் கட்டிட்டிருக்கிற இடத்திலதான் எங்கப்பாவோட நினைவுகள் இருக்கு… அந்த சிலையை காப்பத்த எங்கப்பா போராடி இருக்கிறார்.

ஆதிபரமேஸ்வரி சிலையை அந்த கோவிலில் பிரதிஷ்டை செய்யனும்… கும்பாபிஷேகம் நடக்கனும்… அப்புறம்தான் என் கடமை முழுமை அடையும்… அதுவும் இல்லாம அந்த கோவிலில் நம்ம கல்யாணம் நடந்தா எங்க அப்பாவோட ஆசீர்வாதமும் கிடைக்கும்னு என்னோட நம்பிக்கை….  அதனாலதான்… ” என்று அவள் சொல்ல அவன் மனமுருகி போனது.

அத்தனை நேரம் இறுக்கமாய் இருந்தவன் மனம் இறங்கி அவளை அணைத்து கொள்ள யத்தனிக்கும் சமயம் ஹரீஷ் அவசரமாய் கதவை திறந்து கொண்டு அறைக்குள் நுழைந்தான்.

ஆதி சட்டென்று விலக விஷ்வாவின் முகம் மீண்டும் வெறுப்பாய் மாறியது. ஹரீஷ் அவர்கள் இருவரையும் அப்படி பார்த்து அசடுவழிந்தவன் ஆதியிடம் சில போட்டோக்களை கொடுத்துவிட்டு உடனடியாக வெளியேறினான்.

“விஷ்வா” என்று அவள் ஏதோ சொல்ல,

அவன் அவள் முகத்தை பாராமல்,

“நீ எதுவும் சொல்ல வேண்டாம்… கல்யாண வரைக்கும் நாம இரண்டு பேரும் பாத்துக்கோவோ பேசிக்கோவோ வேண்டும்” என்றான்.

“ஏன்?” அவள் அதிர்ந்தபடி கேட்க,

“நான் உன்னை பாக்க வந்து நீ பிஸியா இருந்து… வேண்டாம்…நமக்குள் தேவையில்லாத சண்டையும் பிரிவினையும் வர்றதை விரும்பல…சோ பை” என்று சொல்லிவிட்டு ஆதியின் அழைப்பை காதில் வாங்காமல் அவன் அந்த நொடியே அறைகதவை திறந்து வெளியேறினான்.

அவன் நேராய் ஹரீஷின் முன்னிலையில் வந்து அவன் தோளில் கைப்போட்டு,

“போனாப் போதுன்னு இந்த தடவை மன்னிச்சு விடிறேன்…இனிமே கதவை தட்டிட்டு வரனும்… இல்லன்னா கன்னம் வீங்கிடும்” என்றவன் எச்சரிக்க,

“இனிமே நீங்க உள்ளே இருந்தா நான் வரவே மாட்டேன்” என்று ஹரீஷ் பயத்தோடு சொல்ல,

“தட்ஸ் பெட்டர்” என்று சொல்லிவிட்டு விஷ்வா அலுவலகத்தை விட்டு வெளியேறினான்.

விஷ்வா ஆதியிடம் சொன்ன வார்த்தையை அப்படியே கடைபிடித்தான். ஆதி சந்திக்க வந்தாலும் அவன் அதிகம் பேசாமல் அவளை நிராகரித்து சென்றுவிட சாரதாவுக்கும் செல்விக்கும் அவர்களின் நிலைப்பாடை புரிந்து கொள்ளவே முடியவில்லை.

அந்த ஊரே எதிர்பார்த்த அந்த நாள் வந்தது.

ஆதிபரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்.

பேய்கள் நடமாடிக் கொண்டிருந்த தீமைகளே நடக்கும் என்ற மக்களின் அவநம்பிக்கையின் அவதாரமாய் இருந்த தோப்பில் இன்று ஆதிபரமேஸ்வரி பிரமாண்டமான கோவில் கோபுரத்திற்குள் வீற்றிருக்கிறாள்.

இனி அங்கே பாவங்களுக்கு பதிலாய் பக்தி நிரம்பி இருக்கும்.

அங்கே திரண்டிருந்தது மனித கூட்டமல்ல மனிதக் கடல். எல்லோருமே திக்கு முக்காடிப் போயினர். கோபுரக் கலசத்தில் பூஜை நடத்தப்பட்டு புனித தீர்த்தம் தெளிக்கப்பட எல்லோரும் அவரவர்களின் பாவம் கரைந்துவிட்டதெனவும் புண்ணியம் பெற்றுவிட்டதாகவும் சந்தோஷ களிப்புற்றனர்.

அதே நேரத்தில் பழைய கோவிலிலும் குடமுழக்கு நடைபெற்றது. மனோகரன் போலியாய் அமைத்தாலும் அதை தெரிந்து கொள்ளாமல் அந்த சிலையையும் மக்கள் கடவுளாகவே வணங்கினர்.

ஒரே சமயத்தில் இரு கோவில்களிலும் பூஜைகளும் அபிஷேகங்ளும் நடைபெற ஆதிபரமேஸ்வரி அழகின் சொரூபமாய் கம்பீரத்தின் அடையாளமாய் தரிசிப்பவர்களை வசீகரித்து கொண்டிருந்தாள்.

சரவணனும் மணிமாறனும் தலைமை தாங்கி அந்த பொறுப்பை செவ்வனே செய்து முடித்தனர்.

அதே நேரம் மற்றொரு முக்கியமான விஷயம். ஆதி அவளுக்கு தெரிந்த மகப்பேறு மருத்துவரிடம் வசந்தாவை அழைத்து சென்றதன் விளைவாக இன்று வசந்தா நிறைமாதமாய் இருக்கிறாள்.

இருப்பினும் அந்த கூட்டத்தில் தானும் கோவிலுக்கு வருவேன் என அவள் அடம் பிடிக்க செல்லம்மாவும் ரஞ்சிதமும் கண்ணும்  கருத்துமாய் அவளை பார்த்து கொண்டனர்.

ஆதி அத்தனை அழகாக புடவை உடுத்திக் கொண்டு எல்லோரையும் பார்த்த மாத்திரத்தில் வசீகரிக்க, விஷ்வா மட்டும் அவள் அருகில் வராமல் விலகியே நின்றான்.

அவனின் பிடிவாதம் ஆதியை காயப்படுத்திய போதும் இரண்டு நாட்களில் திருமணம் நடைபெற இருப்பதால் அவளை அவளே சமாதானம் செய்து கொண்டாள்.

error: Content is protected !!