aatjiye anthamai – 7
aatjiye anthamai – 7
குரூரம்
மனோரஞ்சிதத்தை திரும்பியும் பார்ப்போம் என்று கனவிலும் கூட செல்லம்மா நினைத்ததில்லை.
இத்தனை நாளாய் தான் ஆதியை இவர்கள் கண்ணில் படாமல் வளர்த்து வந்தது எல்லாம் வீண் என்று தோன்றிற்று.
செல்லம்மா வாயடைத்துப் போய் அவர்கள் வருகையைப் பார்த்திருக்க, மனோரஞ்சிதம் கண்ணீரோடு வந்து அவரை அணைத்துக் கொண்டார்.
செல்வி அப்படியே அதிர்ச்சியில் என்ன செய்வதென்று புரியாமல் உறைந்து போய் நிற்க, சரவணன் வேட்டிச் சட்டை அணிந்து கொண்டு மிடுக்காகவும் கம்பீரத்தோடும் தன்னுடைய வலது கையால் இடது கைச்சட்டையை மடித்தபடி உள்ளே நுழைந்தான்.
அவன் விழிகள் அந்த வீட்டைச் சுற்றிலும் அலைபாய, அவன் யாரைத் தேடியிருப்பான் என நம் வாசகர்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை.
அதற்குள் மனோரஞ்சிதம் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு செல்வியிடம் பேசினார்.
“இத்தனை காலமாய் நீ உயிரோடவே இல்லைன்னு எல்லோருமே நினைச்சிட்டு இருந்தோம் செல்வி” என்றவர் நெகிழ்ந்தபடி சொல்லிக் கொண்டிருக்க,
செல்லம்மா அலட்சிய புன்னகையோடு,
“அவமானத்தில் உயிரை விட்டு இருப்பேன்னு நினைச்சீங்களா ?” என்று எந்தவித உணர்ச்சியுமின்றி கேட்கவும் ரஞ்சிதத்தின் முகம் சுருங்கி போனது.
“என்ன செல்வி இப்படி சொல்லிட்ட ?” என்றவர் வேதனைத் தாங்காமல் கேட்க,
“வேற எப்படி மதனி சொல்லனும்” என்று அலட்டிக் கொள்ளாமல் பதிலுரைத்தார்.
செல்லம்மாவின் இறுகிய முகத்தோற்றமும் பேச்சும் ரஞ்சிதத்தை ரொம்பவும் காயப்படுத்தியது.
அவர் கனத்த மனதோடு, “உன்னை பத்தியும் சங்கரன் பத்தியும் நான் நினைக்காத நாளே இல்லை… தெரியுமா ?!” என்றவர் தன் மனவேதனையை எடுத்துரைக்க, இந்த வார்த்தைகளெல்லாம் செல்லம்மாவின் இறுக்கத்தைச் சற்றும் தளர்த்தவில்லை.
அவரின் பார்வை கூர்மையாக சரவணனை நோட்டமிட, அவனோ அந்த அறையில் மாட்டியிருந்த ஆதியின் புகைப்படத்தை அத்தனை குரூரமாய் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவருக்கு எரிச்சலும் கோபமும் மூள,
மனோரஞ்சிதம் தன் பார்வையைச் சுழற்றிவிட்டு எதிர்பார்ப்போடு,
“ஏன் செல்வி… உனக்கு ஒரு பொண்ணு இருக்காளமே… அப்படியே உன் சாயலில் இருப்பாளமே… எங்க காணோம் ?” என்று கேட்டுவிட, சரவணனும் ஆர்வத்தோடு செல்வியின் பதிலை எதிர்பார்த்து அவர் புறம் திரும்பினான்.
செல்லம்மா விட்டேற்றியான பார்வையோடு, “அவ வேலைக்கு போயிருக்கா மதினி” என்க,
மனோரஞ்சிதம் ஆவல் ததும்ப, “என் தம்பி மவளை பாக்கலாம்னு நினைச்சனே!” என்றார்.
செல்லம்மாவின் உள்ளம் கொதிப்படைந்திருக்க, வேண்டா வெறுப்பான பார்வையோடு,
“நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க மதனி… நீங்க யாரும் இங்க வர வேணாம்… நான் இதுவரைக்கும் எப்படி இருந்தேனோ அப்படியே இருந்துக்கிறேன்” என்று அழுத்தமாய் உரைக்கவும்
மனோரஞ்சிதம் அதிர்ச்சியோடு, “எங்க உறவே வேண்டாம்னு சொல்றியா செல்வி” என்று கண்ணீர் தளும்பக் கேட்க,
“எனக்கு உறவுகளே இல்லைன்னு சொல்றேன்” என்று இறுக்கமாய் சொல்லி அந்தப் பேச்சை அத்தோடு முற்றுப் பெற செய்தார்.
மனோரஞ்சிதம் அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் புடவை முந்தானையால் தன் விழிகளில் வழிந்தோடிய நீரைத் துடைத்தபடி வெளியேறிவிட,
இத்தனை நேரம் அவர்கள் உரையாடலில் பங்கெடுத்துக் கொள்ளாத சரவணன் இப்போது கொஞ்சம் திமிராய் செல்வியின் முன்னே வந்து நின்றான்.
அவன் முகத்தில் ஒளிர்ந்த குரூரமான புன்னகை பார்த்த செல்லம்மாவிற்கு உள்ளுக்குள் அச்சம் தொற்றி கொண்டது.
அவர் அவனை நேர்கொண்டு பார்க்க விரும்பாமல்,
“யாரும் இனிமே இந்த வீட்டுக்கு வர வேண்டாம்… யாரையும் பார்க்க வேண்டாம்… கிளம்புங்க” என்று பார்வையை எங்கோ வெறித்தபடி அவர் உரைக்க, அவனின் முகப்பாவனை வேறு விதமாய் மாறியது.
அதில் திமிரும் அலட்சியமும் கலந்திருக்க அவன் ஏளனமாய் நகைத்து,
“அப்படி எல்லாம் நீங்க சொல்ல முடியாது அத்தை… நான் ஆதிபரமேஸ்வரியை பார்க்க வருவேன்… அவ என் மாமன் பொண்ணு… நான் அவ கிட்ட பேசுவேன்… பழகுவேன்… இன்னும் கேட்டா
எனக்கு அவளைக் கல்யாணம் கட்டிக்கிட கூட உரிமை இருக்கு” என்றான்
செல்லம்மா அதிர்ந்து அவனைப் பார்க்க,
அவன் மேலும்,
“என்ன அத்தை அப்படி பார்க்கிறீங்க… நான் என் மாமா பொண்ணை கட்டிக்கிட கூடாதுன்னு யார் சொல்ல முடியும்” என்று இளக்காரமாய் கேட்டான்.
செல்லம்மா அவன் பேச்சை கேட்டுப் புன்னகையித்தவள்,
“உன்னை எல்லாம் என் பொண்ணு மனிஷனா கூட மதிக்க மாட்டா” என்றார்.
“சரி மனிஷனா வேண்டாம்… புருஷனா மதிக்கட்டும்” அவன் அலட்டிக் கொள்ளாமல் பதிலளிக்க,
“என்ன உளற ?” என்றவர் அவனைச் சீற்றமாய் பார்க்க,
“நான் உங்க பொண்ண கல்யாணம் கட்டிக்கிறேன்னு சொல்றேன்… பாவம் என்னை விட்டா வேற எவன் அவளை கல்யாணம் பண்ணிக்கிடுவான்”
“அவ படிப்புக்கும் திறமைக்கும் அயிரம் பேர் வருவாங்க” என்று செல்லம்மா கோபமாய் பதிலுரைத்தாள்.
“அது சரிதான்… கல்யாணம்னா சொந்தம் பந்தம் எல்லாம் வேணாமா உங்களுக்கு… இன்னாருடைய மகன்னு சொன்னா மட்டும் போதுமா… அந்த இன்னார் யாரு… அவங்க ஊர் உறவெல்லாம் எங்கன்னு கேட்க மாட்டாங்களா… சரி அது கூட போகட்டும் விடுங்க… உங்க பொண்ணு ஒழுக்கமானவன்னு நம்பனனும்னா முதல்ல அவங்க அம்மாவுக்கு அந்த பேர் இருக்கனுமே” என்றவன் தீயாய் வார்த்தைகளை வீச,
அவரின் தேகமெல்லாம் பற்றி எரிந்த உணர்வு.
“வார்த்தைய அளந்து பேசு” என்று செல்லம்மா சரவணனை எச்சரிக்கும் போதே அவர் விழியில் நீர் கோர்த்திருக்க,
“இப்ப ஏன் இவ்வளவு கோபப்படிறீங்க ? ஊருக்குள்ள பேசிக்கிறதைதானே நான் சொன்னேன்… ஓடுகாளி பெத்த மவளை எவன் கட்டிக்கிடுவான்” என்று அவன் சொன்ன நொடியே எரிமலையாய் அவர் கோபம் பொங்க,
“எந்த சொந்த பந்தமும் இல்லாம என் பொண்ணுக்கு எப்படி கல்யாணம் பன்னனும்னு எனக்கு தெரியும்… முதலில் நீ வீட்டு விட்டு வெளியே போ” என்று கத்தினார்.
“இப்ப போறேன்… ஆனா இதே வீட்டுக்கு மருமகனா நான் வருவேன் அத்தை”
“இந்த ஜென்மத்தில அது நடக்காது” என்றவர் தீர்க்கமாய் உரைக்க,
அவன் தன் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு வெளியே சென்றபடி, “நானும் பார்க்கிறேன்… என்னை தவிர வேற எவன் அவளை கட்டிக்கிறான்னு” என்று மிரட்டலாய் சொல்லிவிட்டு அகன்றுவிட செல்லம்மாவின் தேகமெல்லாம் நடுக்கமுற்றது.
அவன் பேசிய இழிவான வார்த்தைகள் அவர் காதில் ஓயாமல் ரீங்காரமிட்டு கொண்டிருந்தன.
அந்த நொடி தன் கணவனின் நினைவு வந்தது அவருக்கு.
தான் அவரை வெறுத்து ஒதுக்கியபோது கூட யாரிடமும் தன்னை அவர் விட்டுக் கொடுத்ததேயில்லை. அவர் முன்னிலையில் யாரும் தன்னை குறைவாய் ஒரு வார்த்தை கூடப் பேச விடமாட்டார்.
இன்று சரவணன் பேசிய பேச்சுக்கு அவர் மட்டும் இருந்திருந்தால்…
அபரிமிதமான ஏமாற்றத்தாலும் வலியாலும் அவர் விழிகளில் கண்ணீர் பிரவாகமாய் மாறியது.
*******
சிவசங்கரனின் வீடு.
திருமண முடிந்த ஒரு வாரம் கழிந்துபோனது.
அக்கா மனோரஞ்சிதம் ஊருக்குப் புறப்பட்டுவிட்ட நிலையில் அங்கே சிவசங்கரனுக்கு பிரச்சனை துவங்கியது.
அவனுக்கு உணவு பரிமாறுவது முதற்கொண்டு எல்லா வேலைகளையும் மனோரஞ்சிதம் பார்த்துக் கொண்டாள்.
செல்வியோ அவனிடம் துளியும் ஓட்டுதல் இல்லாமல் அவனை விட்டு விலகியே இருக்க, இப்போது அவன் எல்லாவற்றிற்கும் தன் அண்ணிமார்களை எதிர்பார்க்க வேண்டிய நிலை.
அவன் காலை உணவு பரிமாற சொல்லி கனகவல்லியிடம் கேட்டுவைக்க இதுதான் சமயம் என அவள் குத்தலாக,
“நீங்க ஆசைப்பட்டு கட்டிட்டு வந்த உங்க பொண்டாட்டியை கேளுங்க தம்பி” என்றாள்.
கனகவல்லியின் எண்ணமோ சிவசங்கரன் செல்விக்கு இடையில் புகைந்து கொண்டிருக்கும் பிரச்சனையை ஊதி பெரிதாக்கி நெருப்பாய் மாற்ற வேண்டும்.
அந்தக் குரூர எண்ணத்தோடே அவனைத் தூண்டிவிட, சிவசங்கரனின் நிலைமையோ பரிதாபகரமாய் இருந்தது.
அவன் நெருங்கிப் போனாலே அவள் முகத்தைச் சுளிக்க, அவளிடம் பேசவே அவனுக்குத் தயக்கமாய் இருந்தது.
செல்வி அப்போதுதான் மாடுகளுக்குத் தீவனம் வைத்துவிட்டு, வாசலில் மண்டியிருந்த அழகான பூச்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தாள்.
கனகவல்லி அவன் தயக்கமான பார்வையைக் கவனித்துவிட்டு,
“உங்க பொண்டாட்டி மறக்காம மாட்டை கவனிச்சிக்கிறா… செடி கொடி எல்லாம் கவனிச்சிக்கிறா… உங்களை கவனிச்ச மாட்டேங்கிறாளே தம்பி… அவ உங்களுக்கு பொண்டாட்டியா வந்திருக்காளா இல்ல இந்த வீட்டுக்கு வேலைக்காரியா வந்திருக்காளா” என்று சொல்லியவள் மேலும் அவன் மனதில் கோபத்தீயை மூட்டினாள்.
சிவசங்கரன் உண்மையிலேயே இந்த வார்த்தைகளால் ரொம்பவும் காயப்பட்டு போனான்.
இவற்றிற்கெல்லாம் காரணமானவள் அவள்தானே எனச் சீற்றமாய் செல்வி இருக்கும் இடத்தை நோக்கி விரைய, கனகவல்லி அந்தச் சமயம் அருகில் இருந்த தன் ஓரகத்தி கண்ணம்மாவை பார்த்துக் குரூரமாய் புன்னகையித்தார்.
செல்வி செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்க, அவள் பின்னோடு சென்று நின்றவன் சீற்றமாய்,
“ஏ செல்வி” என்று உயர்த்தலாய் அழைக்க அவள் அவன் குரல் வந்த தொனியில் மிரண்டு தன் கையிலிருந்த தண்ணீர் பானையைத் தவற விட்டாள்.
அது கீழே விழுந்த சிதில்சிதிலாய் நொறுங்கிவிடச் செல்வி கலக்கமாய் அவனை ஏறிட்டாள்.
சிவசங்கரனின் விழிகளோ எரிமலை குழம்பாய் சிவப்பேறியிருந்தது.
அவன் சீற்றத்தோடு, “என்னை பாத்தா எப்படிறி தெரியுது உனக்கு… பால் டம்ளரை தூக்கி போடற… பானையை கீழே போட்டு உடைக்கிற… ஏன்டி இப்படி மனுஷனை கொல்ற ?” என்றவன் ஆவேசமாய் அவளிடம் கத்த,
அவள் பானையை தவற விட்ட குற்றவுணர்வில் வாய் பேசாமல் நின்றிருந்தாள்.
இதுதான் சமயம் என்று கனகவல்லி ஓடிவந்து உடைத்த பானையை பார்த்துச் செல்வியை வசை மாரி பொழிந்தாள்.
அவள் விழியெல்லாம் நீர் சூழ்ந்து தலைகுனிந்து நின்றிருப்பதைப் பார்த்தவனுக்கோ அந்த நொடியே கோபமெல்லாம் கரைந்து காணாமல் போனது.
சற்று மனம் இளகியவன்,
” போதும் விடுங்க மதினி… பானைதானே” என்று சொல்லக் கனகவல்லி நிறுத்தாமல்,
“அவளுக்கு எதோட மதிப்பும் தெரியல… அதுக்குதான் தகுதி தாரதரம் பார்த்து கட்டனு” என்று வார்த்தையைக் கொட்ட சிவசங்கரன் கோபத்தின் உச்சத்தை தொட்டான்.
“போதும் நிறுத்துங்க மதனி… ஒரு பானைக்கு போய் என்ன பேச்சு பேசிறீங்க ?… அதுவும் தகுதி தாரதரம்னு… அவ இல்லாதவன்னு குத்தி காட்டிற வேலையை இதோட நிறுத்துக்கோங்க…. அப்புறம் நான் மனிஷனாவே இருக்க மாட்டேன்… சொல்லிட்டேன்” என்றவன் பொங்க கனகவல்லி அப்படியே பேச்சற்று நின்றார்.
அவன் தனக்காகவா பரிந்து பேசுகிறான் என்பதை நம்ப முடியாத வியப்போடு செல்வி பார்த்திருக்க,
அப்போது சிவசங்கரன் அவள் புறம் திரும்பி, “வந்து சாப்பாடு எடுத்து வை” என்று அதிகார தொனியில் சொல்லிவிட்டு முன்னே செல்ல அவள் பதில் பேசாமல் அவன் பின்னோடு சென்று தன் கணவனுக்கு உணவு பரிமாறினாள்.
இதற்கிடையில் கனகவல்லி உள்ளே இருந்த தன் கணவன் வேல்முருகனிடம் சிவசங்கரன் பேசியவற்றை எல்லாம் சொல்லித் தூண்டிவிட, வேல்முருகன் அதைப் பெரிதாக்க விரும்பவில்லை.
முக்கியமாக அவன் தன் தம்பியை எதிர்த்துக் கொள்ளும் நிலையில் இல்லை. எல்லாப் பொறுப்புகளும் சிவசங்கரன் கையில் இருக்க தான் கோபப்படுவதினால் எதுவும் நிகழப் போவதில்லை என்று சொல்லிச் சாமர்த்தியமாய் அந்தப் பிரச்சனையை அதோடு முடித்துவிட்டான்.
ஆனால் கனகவல்லியின் கோபம் அடங்கியபாடில்லை.
சிவசங்கரன் செல்வி இருவரையும் அவள் எரிப்பது போல் பார்த்துக் கொண்டிருக்க, சிவசங்கரனும் அவளின் குரூரமான சிந்தனை ஓட்டத்தை ஒருவாறு யூகித்தான்.
உணவு முடித்துக் கைகளை அலம்பியவன் செல்வியின் முந்தானையில் கைகளைத் துடைக்க, அவன் செயலைக் கண்டு செல்வி எரிச்சலானாள்.
“உனக்கு என் மேல இருக்கிற வெறுப்பை எல்லார் முன்னாடியும் காண்பிச்சு என் மானத்தை வாங்காதே” என்று சிவசங்கரன் முகத்தில் புன்முறுவலோடு சொல்லித் தூரத்திலிருந்த கனகவல்லியின் பார்வையில் அவர்களின் பிரிவைக் காட்டாமல் நடித்துவிட்டுப் புறப்பட்டான்.
********
சிவசங்கரன் போன்ற ஓர் கணவன் அமைந்தது அவளின் பாக்கியம் எனினும் அவனுடன் வாழ முடியாமல் போனது அவளின் பெரும் துர்ப்பாக்கியம்தான்.
தன்னவனின் நினைவுகளைச் சுமந்தபடி செல்லம்மா கண்ணீரில் கரைந்திருக்க,
அந்தச் சமயம் மனோரஞ்சிதத்தை அழைத்துக் கொண்டு சரவணன் காரை ஓட்டியடி போய்க்கொண்டிருந்தான்.
“சரவணா” என்று மனோரஞ்சிதம் அழைக்க,
“ம்… சொல்லுங்க” என்றான் முகத்தைத் திருப்பாமல்
“உன் மனசில என்ன எண்ணத்தோட என்னை செல்லம்மா வீட்டுக்கு அழைச்சிட்டு போனே ?!” என்றவர் வினவ,
“நீதானே ம்மா… அத்தை பத்தியும் மாமாவை பத்தியும் வருத்தப்பட்டு எப்ப பாரு பேசிட்டிருப்ப… அதான்”
“நான் உனக்கு அம்மாடா… என்கிட்ட நீ உன் கதை அளக்காதே சொல்லிட்டேன்… நீயும் உன் மாமானும் சேர்ந்துக்கிட்டு ஏதோ திட்டம் போடிறீங்களோன்னு எனக்கு தோணுது” என்றவர் சொல்ல,
அவன் சூட்சமமாய் சிரித்தபடி, “பரவாயில்லயே… கண்டுபுடிச்சிட்ட” என்றான்.
“வேண்டாம் சரவணா… செல்வி ரொம்ப பாவம்.. அவளை விட்டிடுங்கடா”என்று கெஞ்சலாக அவர் கேட்க,
“எனக்கென்ன…. அத்தையை தொல்லை பண்ணனும்னு வெளிப்பா… எனக்கு பிரச்சனை கொடுத்தா நானும் அவங்களுக்கு பிரச்சனையாதான் இருப்பேன்… மாமன் சொத்துக்கு இத்தனை காலமா வாரிசே இல்லன்னு பார்த்தா ஒசரமா ஒருத்தி வந்து நிக்கிறா… விஷயம் தெரியாமலே அவ இவ்வளவு பிரச்சனை பன்றான்னா… விஷயம் மட்டும் தெரிஞ்சா… அதான் மாமன் பொண்ணை சொந்தமா ஆக்கிக்கிட்டா அப்புறம் மாமன் சொத்தும் எனக்கு சொந்தம்தானே…
எல்லாமே ஒரு கணக்குதான்” என்று
சரவணன் சொல்ல அவனின் குரூர எண்ணம் மனோரஞ்சிதத்தை பயம் கொள்ளச் செய்தது.
அவனிடம் புத்தி சொல்வதில் பயனில்லை என்று அவருக்கு நன்றாகத் தெரியும். அவனுக்குத் தன் மாமன் வேல்முருகன் சொல்வதுதான் வேதவாக்கு. இதுவும் அவரின் திட்டமாகத்தான் இருக்கும் என்று எண்ணிக் கொண்டார்.
இந்தப் பிரச்சனைகளை செல்லம்மா எப்படிச் சமாளிக்க போகிறாரென அவர் கவலையுற்றிருக்க, செல்லம்மாவிற்கும் அதே சிந்தனைதான்.
அவர் நினைத்ததை விடவும் பிரச்சனை அதிதீவிரமாய் இருக்க, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமெனில் ஆதிக்கு திருமணம் செய்விக்க வேண்டும்.
அவர் மனதில் உதித்த ஓரே முகம் விஷ்வா. சிறுவயதிலிருந்தே அவனை அவர் பார்த்திருக்கிறார். அவன் கோபக்காரன்தான் எனினும் நல்லவன். ஆதிக்கு பொருத்தமானவன் என்று அவர் மனதிற்குத் தோன்ற,
அவர் அந்த எண்ணத்தைக் கருணாகரன், சாரதாவிடம் வெளிப்படுத்தினார்.
அவர்கள் மனதிலும் இப்படியொரு ஆசை இருந்தது. ஆனால் பிரச்சனை அதுவல்லவே!
சம்மதம் சொல்ல வேண்டிய இருவருமே எதிரும் புதிருமாய் நின்று கொண்டிருக்க, இது சாத்தியமா என்று சந்தேகம் மூவருக்குமே எழுந்தது.