AK-2

AK-2

அலைகடல் – 2

தயக்கத்தில் நடை தயங்க ஜான்சி உள்ளே வர, “ஜான்சி மார்னிங் என்ன ஆச்சுன்னு சொன்னீங்க?” என்று நெற்றியோரம் நீவியவாறு கேட்டாள் பூங்குழலி.

கேட்ட ஜான்சிக்கு உள்ளே பகீரென்று இருந்தது. ஆனால் அடுத்த நொடி அவள் கூறியதைக் கேட்டு நிம்மதி பெருமூச்சை வெளியேற்றினாள்.

“ஹான் வாமிட்டிங் இருக்குன்னு சொன்னீங்களே. கண்டிப்பா ரூம்ல தொங்குற வாமிட்டிங் கவர் எடுத்து யூஸ் செஞ்சிருப்பீங்க இல்லையா? அப்புறம் அதை என்ன பண்ணுனீங்க?” என்றாள் தீவிரக் குரலில் ஆனால் அபிஷேக்கை ஓரப் பார்வையால் பார்த்தவாறு.

அங்கே அனைத்து அறைகளிலும் முதலுதவிப்பெட்டி முதல் தேவையான அவசர உபகரணம் வரை எப்பொழுதும் இருப்பதாலேயே இப்படித்தான் நடந்திருக்கும் என்றெண்ணி கேட்க அதை ஒத்துக்கொள்வது போல்,

“மேம் அதை டிஸ்போஸ் பண்ணிட்டேனே” என்றாள் சங்கடத்துடன் உள்ளுக்குள் ‘இந்த மேம் என்னை விட்டால்போதும்’ என்றிருந்தது.

ஒரு போலி அதிர்ச்சியுடன், “அச்சோ… என்ன ஜான்சி இப்படி பண்ணீட்டீங்க? இருக்குற ஒரு ஆதாரமும் போயிருச்சே. சரி விடுங்க பட் இனிமேல் இப்படி பண்ணாம நேரா அதை கொண்டு வந்து இந்த சார் கைல கொடுத்திருங்க ஓகே?” என்றதுதான் தாமதம், தாளாத கோபத்தில் அபிஷேக் சட்டென்று எழுந்துவிட அரைகுறையாய் அங்கே கவனித்தவாறு இருந்தவர்கள் நெருங்கி வர ஆரம்பித்தனர்.

இப்போது எது செய்தாலும் மேலிடத்திற்கு செல்லும் அபாயம் இருப்பதால் சற்றுத்தணிந்தவன் தவறும் முதலில் தன்பக்கம் இருந்து ஆரம்பித்திருக்க பாதி சாப்பாட்டில் இருந்து தட்டை எடுத்து அவ்விடத்தில் இருந்து நகர்ந்துவிட்டான்.

மனம் கொதித்தது அபிஷேக்கிற்கு. கிட்டதட்ட ஒரு வருட வஞ்சம். முன்னரே பல முறை இவ்வாறு பூங்குழலியை ஜாடைமாடையாய் அவளிற்கு நேரே பேசியிருந்தாலும் கண்டுக்கொள்ளாமல் அலட்சியமாய் ஒதுங்கியவள் இப்போது பாய்வது ஏன் என்றுதான் புரியவில்லை.

ஆனால் அவன் ஒன்றை மறந்துவிட்டான். தனியே வம்பிழுத்தாலும் மற்றவரிடம் என்றும் அவளைப் பற்றி புறம் பேசியதில்லை. அதற்கு யாரும் செவிசாய்க்க மாட்டார்கள் என்பது வேறு. இன்றோ ஜான்சியுடன் புதிதாக வந்திருந்த செட்டோடு இருக்கும் ஒருவனிடம் சக பெண் வீரர்களைக் குறித்தே தவறாகக் கூற அது இனிவரும் காலங்களில் ஒற்றுமையோடு செயல்பட வேண்டிய குழுவை பாதித்தால் யார் பொறுப்பு? அதைப் பார்த்துக்கொண்டிருக்க இவள் ஒன்றும் மகாத்மா இல்லையே?

மெதுவே நடுவில் இருப்பவன் அபிஷேக்கின் பின் நகர பார்க்க, “எங்கே போறீங்க? உட்காருங்க உங்க கிட்ட இன்னும் பேசலையே” நழுவியவனை இப்போது பேச்சில் நிறுத்த, 

“மேம்… சாரி மேம் நான் வேணும்ன்னு சொல்லலை சாதரணமா எல்லாரும் சொல்ற மாதிரி விளையாட்டா…” என்றிழுத்தான்.

அதற்கு பதில் கூறாமல், “ரியாஸ்? ரியாஸ் தானே உங்க நேம்…” என

“எஸ் மேம்” என்றான் அவன். ‘சப் கமாண்டரையே ஓட வச்சிட்டாங்க நமக்கு என்னன்னு தெரியலையே’ என்றிருந்தது. ஆம் அபிஷேக்கும் பூங்குழலிக்கு நிகரான பதவி படைத்தவனே ஆனால் வேறு துறையில்.

இவள் படையை வழிநடத்தும் போர்காலத் துறையில் என்றால் அவன் அப்படைக்குத் தேவையான ஆயுதம், கப்பலில் இருக்கும் இயந்திர பாதுகாப்பு போன்றவற்றிற்கு. இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்றாலும் இவர்கள் தான் தொடர்பில் இருக்கமாட்டார்கள்.

நாட்டிற்காக என்று வருகையில் இருவரும் சுய விருப்பு வெறுப்பு கடந்தே பணிபுரிவதால் அந்த ஒரு விசயத்திற்காக பூங்குழலியும் கண்டுக்கொள்ளாமல் சென்றாள். இப்போதும் கூட தனியே என்ன கூறியிருந்தாலும் இந்தளவு பேசியிருப்பாளா என்பது சந்தேகமே.

ரியாஸிடம், “வந்து ஒரு வாரம் ஆகியிருக்கு தானே, உங்க… ஐ மீன் இங்க வந்திருக்குற ஆண்கள் ஒருத்தர் கூட பெர்மிஷன் கேட்கலை என்று உங்களால சொல்ல முடியுமா?” என்று வினவ,

பதில் இன்றி அவளின் முகத்தையே சங்கடத்துடன் பார்த்திருந்தான். ஓரிருவருக்கு ஒத்துக்கொள்ளாமை இருந்ததை கண்ணாரக்கண்டும் பொய் சொல்ல மனம் வரவில்லை.

“சோ இருக்காங்க இல்லையா? அப்போ அவங்களைப் பார்த்து ஏன் நீங்க இந்த வார்த்தையைச் சொல்லல? என்ன அது… வீட்டுல இருந்து புள்ள குட்டி பார்க்கணுமா? அதை ஆண்களும் செய்யலாமே செய்யக்கூடாதுன்னு எங்கேயும் சொல்லல. அது அவங்களால முடியாது அதை மறைக்க இப்படியே சொல்லிப் பழகிட்டாங்க.

உங்களுக்கான முதல் மற்றும் கடைசி வார்னிங் இது. பேசுறதுக்கு முன்னாடி யோசிச்சி பேசணும். முதுகுக்கு பின்னாடி பேசுறது எல்லாம் நியாயமேயில்லை அதுவும் ஒரு நாட்டை காப்பாத்துற கடமைல இருக்குறவங்க இந்த குணத்தோடு இருக்குறது…” என்றதோடு நிறுத்தி தோளைக் குலுக்கியவள் எழுந்து காய்ந்துபோன தன் கைகளைக் கழுவச் சென்று விட ஜான்சியும் சத்தமின்றி வெளியேறினாள்.

பூங்குழலியின் இத்தகைய பேச்சில் பள்ளிக்கூடத்தில் முதன்முதலாக திட்டு வாங்கிய மாணவனைப் போன்ற வருத்தத்தில் அமைதியாக அமர்ந்திருந்த ரியாஸின் முதுகை ஆறுதலாகத் தட்டினான் மூன்றாமவன்.

அவன் பெயர் சபரி. அனைத்தையும் ஆதியில் இருந்து கவனித்துக்கொண்டிருந்த, அந்த கப்பற்படையில் அபிஷேக்கின் கீழ் வேலை செய்யும் கடற்படை அதிகாரி.

தினமும் பயிற்சி எடுத்தால் மட்டுமே போர்க்கால அவசரத்தில் அது கைகொடுக்கும் என்பதால் அனைத்து பயிற்சிகளும் சுழற்சி முறையில் செய்வார்கள். துப்பாக்கி சுடுதல், கப்பல் மற்றும் விமானம் ஓட்டுதல், ஏவுகணை செயல்பாடு, வெள்ள பாதிப்புகளில் இருந்து மீட்டல் என்று தனித்தனி குழுவாக இயங்குவர்.

அதில் கடற்படை மாலுமிகள் மட்டுமின்றி அதிகாரிகளும் பயிற்சியில் ஈடுபட அவர்களைப் பார்த்து மற்றவர்கள் தங்களது தவறைத்திருத்தி அல்லது புதியன கற்று முன்னேறிவிடுவர்.

இதில் பூங்குழலியின் படிப்பே வானூர்தி பொறியியல் என்பதால் அதில் அதிக ஆர்வம் கொண்டு அனைத்துப் பயிற்சியோடு போர்விமானம் ஓட்டுதலில் தனிக்கவனம் செலுத்தி நன்குதேர்ந்தவள் கூட. விக்ரமாதித்யா கப்பல் கடலில் இருந்தாலும் அதில் கிட்டதட்ட முப்பதிற்கும் மேற்பட்ட போர்விமானங்கள் கூடவே அதற்கான விமானத் தளவாடமும் அதிக தூரம் நீண்டு அக்கப்பலிற்கே தனியொரு கம்பீரத்தைக் கொடுத்தது.

அடுத்தநாள் அதில் பயிற்சி என்பதால் அதற்கான வேளைகளில் மூழ்கிவிட்டாள் பூங்குழலி காலையில் நடந்த அனைத்தையும் மறந்து.

சபரி மற்றும் ரியாஸ் இருவருக்கும் இடையில் இந்த ஒரு வாரத்தில் சன்னமான நெருக்கம் வந்திருந்தது. அதனாலேயே கிடைத்த ஓய்வு வேளையில் பூங்குழலிக்கும் அபிஷேக்கிற்கும் இடையில் நடக்கும் பனிப்போர் குறித்து ரியாஸ் கேட்க, சபரி சொல்ல ஆரம்பித்தான்.

“பொதுவா நான் யாருக்கும் இதெல்லாம் சொல்லமாட்டேன் ஆனால் நீ அவங்களைப் புரிஞ்சிக்கணும்ன்னு நான் ஆசைப்படுறதால உனக்கு சொல்றேன்.

சார், மேம் ரெண்டுபேருமே ஒரே வருசத்துல தேர்வாகி வந்தவங்கதான். நான் அவங்க வந்த அடுத்த வருடம் சேர்ந்தேன். மேம் எப்போதும் இப்படித்தான் அவங்க வேலைய அவங்க கரெக்ட்டா பண்ணிட்டு புதுசா எதாச்சும் இருந்தாலும் கத்துப்பாங்க. அதே மாதிரி நாங்க எல்லாரும் ரெண்டு இல்ல மூணு மாசம் விடுமுறைல ஊருக்கு போயிட்டு வர அவங்க இதுவரைக்கும் எங்கேயும் போனதில்லை”

அந்த இடத்தில் ரியாஸ் இடையிட்டான், “ஏன் அவங்க வீட்டுக்கு போகலை யாருமே இல்லையா அவங்களுக்கு?”

அவனைக்கண்டு முறைத்த சபரி, “எனக்கு தெரிஞ்சதைத் தானே நான் சொல்ல முடியும் இதெல்லாம் எனக்கு மட்டுமில்லை இங்கிருக்குற யாருக்குமே தெரியாது. மே பீ கமாண்டர்க்கு தெரிஞ்சிருக்கலாம் உனக்கு தெரியனும்ன்னா மேம் கிட்டையே கேளு நல்ல்லா சொல்வாங்க” நல்லா என்ற வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்துச் சொல்ல,

அழுத்தத்தின் அர்த்தத்தைப் புரிந்துக்கொண்ட ரியாஸ் இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி கும்பிட்டான். பின் மேலே சொல்லுமாறு ஒரு கையை வாய்மீது வைத்து மூடியும் மறுகையை அசைத்தும் சைகை செய்ய சபரி தொடர்ந்தான்.

“போன வருடம் பதவி உயர்வு கொடுக்க முடிவு செஞ்சப்போ மேம் நல்ல மார்க் எடுத்து முன்னாடி இருந்தாங்க அபிஷேக் சாரும் அதே அளவு மார்க்ல போட்டிக்கு இருக்க ரெண்டு பேருமே ஒரே துறைல, அதான் இப்போ மேம் இருக்கங்களே… படையை வழிநடத்துற துறை அதுக்குப் போக ஆசைப்பட்டாங்க ஆனா மேம்க்கு கூடவே தொடர்ந்து ஏழு வருசமா விடுமுறையே எடுக்காத ரெக்கார்ட் இருந்துச்சு. அதுனால அவங்களை அங்க போட்டுட்டு சாரை ஆயுதம் கப்பல் பாதுகாப்பு துறைல போட்டுட்டாங்க”

சொல்வதை கவனிக்காமல் எதையோ புருவம் சுருக்கி யோசித்துக்கொண்டிருந்த ரியாஸின் தலையில் ஒரு தட்டு தட்டிய சபரி, “என்னை பார்த்தா உனக்கு எப்படிடா இருக்கு? ஏதோ என் தம்பி மாதிரி இருக்கியேன்னு நினைச்சுப் பேசுனா ஓவரா போற நீ? போ மேன்” என்றுவிட்டு எழ முயல 

“சார் சார்… என்ன சார் இப்படி பொசுக்குன்னு பாதிக்கதையில போறீங்க? அவ்ளோ தானா அபிஷேக் சார் நினைச்சது நடக்காததால அவங்க மேல கோபமா இருக்காங்க கரெக்ட்டா” என

“ஹ்ம்ம்… அவ்ளோதான் கதை”

“இதுகெல்லாமா கோபப்படுவாங்க? ஒரே சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு”

“பாத்தியா… காலையில் வாங்கி கட்டியும் உனக்கு வாய் அடங்கலை இப்போ அபிஷேக் சார் இதை கேட்ருக்கணும்”

என்று சபரி கூறியதும் அவசரமாய் சுற்றும்முற்றும் பார்த்தான் ரியாஸ். அபிஷேக் கண்ணில் சிக்கவில்லை என்றதும்தான் நிம்மதி அடைந்தான்.

“ஹப்பா… தப்பிச்சேன் ஏன் சார் ஏன்? ஏன் இந்த கொலைவெறி? ஒரு நொடி இந்த நாள் என் வாழ்க்கையில் திட்டுகளின் கொண்டாட்ட தினம்னு பொறிக்க வேண்டி இருக்குமோன்னு பயந்தே போயிட்டேன்” நெஞ்சை தடவிவினான் போலி பயத்துடன்.

“ஹாஹா இவ்ளோ பயம் இருக்குறவன் ஒழுங்கா இருக்கனும் எப்போவும் ரியாஸ் நாம எதுக்கு இங்க இருக்கோம் என்று மறக்கக்கூடாது” நல்ல நட்பாக அறிவுரையும் சபரியிடம் இருந்து வந்தது. 

ஓகே சார்… ஆனா எனக்கு வேற ஒரு யோசனை வந்துச்சு அதான் கவனிக்கல. ஏழு வருசமா இருக்காங்கன்னு சொன்னீங்க இல்லையா அப்போ அவங்க வயசு என்னவா இருக்கும்ன்னு யோசிச்சேன் ஒரு முப்பது இருக்குமா?” ரியாஸ் சந்தேகத்தோடு வினவ

அவனின் மண்டையில் மேலும் நாலு கொட்டு கொட்டிய சபரி, “உன்னையெல்லாம் எவன்டா கப்பற்படைல சேர்த்தது புத்தி போகுது பாரு” என்றதோடு கூட பல வசைமொழிகள் உதவியுடன் திட்டிவிட்டு, 

“மேம்க்கு அவ்வளவு வயசெல்லாம் ஆகலை இருபத்து எட்டு தான்” என்றான்.

“ரொம்ப அதிகமா சொல்லிட்டேன் பாருங்க ரெண்டு வயசு தானே கூட சொன்னேன். ஹிஹி சார் வயசென்னுதான் நான் யோசிச்சேன். அதைக் கேட்டா நீங்க சொல்ல மாட்டீங்களே! அதான் இப்படி போட்டு வாங்குனேன் எப்புடி?” என்று அடங்காமல் காலரை இழுத்து விட்டவன்,

“ஆனாலும் மேம் பார்க்க அப்படி தெரியவே இல்லைல. இப்போத்தான் காலேஜ் முடிச்ச மாதிரி இருக்காங்க, ஆனா அவங்க பேச்சுதான் பாஹ் காலேஜ் ஹச்ஓடி யவிட பயங்கரமா இருக்கு. என்னை விட அஞ்ஞ்ஞ்சு வயசு பெருசு ஹ்ம்ம்” என்று பெருமூச்சுவிட,

“டேய் டேய்… என்னடா பீதிய கிளப்புற? எதாச்சும் வம்பு கிம்பு பண்ணிறாத சுத்திலும் கடல்தான் இருக்கு உன்னை போட்டுத்தள்ளி தண்ணில இறக்குனா எலும்பு கூட மிஞ்சாது பாத்துக்கோ” என சபரி கடுப்படித்தான். (கடுப்பில் கடித்தான் என்று சொல்ல வேண்டுமோ?)

“ஐயைய…ஏன் சார் நீங்க வேற. என்னை விட பெரியவங்க எனக்கு அக்கா மாதிரி இல்லையா? சோ திட்டினாலும் பரவால்ல தப்பு செஞ்சோம் அதனால வாங்கி கட்டுனோம். இனி எனக்கு வரப் போற பொண்டாட்டி தவிர எல்லா பெண்களும் எனக்கு அக்கா தங்கச்சிங்கதான் இது நம்ம மேம் மேல சத்தியம் சார்” வீர சபதம் போட்டு முடிக்கவில்லை,

“உன் மேல பண்ணு… எதுக்குடா மேம் மேல பண்ணுற?” என பாய்ந்தான் சபரி. பின், “அவங்க ரொம்ப நல்லவங்க உன்னை மாதிரி இல்லை ரொம்ப நாள் நல்லாயிருக்கணும். அப்புறம் செஞ்சோம் கட்டுனோம் இல்லைடா தம்பி… நீ செஞ்ச அதனால வாங்கி கட்டுன. இப்போ நடையைக் கட்டுவோம்” இருவரும் பேச்சு முடிந்ததென வேலையைப் பார்க்க செல்ல அன்றைய நாள் முடிவடையும் நேரத்தை நோக்கி காலமும் நிற்காமல் நகர்ந்தது.

வானமெங்கும் நிலவிருக்கும் இடத்தைத் தவிர்த்து ஏனைய இடங்களில் காரிருள் சூழ்ந்திருக்க பூமியில் நடுக்கடலில் வீற்றிருக்கும் விக்ரமாதித்ய போர்க்கப்பல் வான்நிலவிற்கு போட்டியாகத் தன் சோபையை இழந்துவிடாமல் எங்கும் மின்விளக்கை ஆங்காங்கே எந்திப் பிரகாசித்துக் கொண்டிருந்தது.

பெண்கள் மூவர் அவ்வறையில் இருந்தாலும் சிறிதும் சத்தமின்றி நிசப்தமாக இருந்தது. அதற்கு காரணம் வேறு யார் பூங்குழலிதான்.

முன்னாள் கப்பற்படை படைத்தளபதியின் பத்து வருட அனுபவங்கள் அடங்கிய புத்தகத்தை மேசையில் விரித்துவைத்து அதனுள் ஆழ்ந்திருந்தாள் பூங்குழலி.

ஜான்சி அவளருகே செல்லப் பார்க்க பவிகா தடுத்து கொண்டிருந்தாள். “ஒரே ஒரு தாங்க்ஸ் சொல்லிட்டு வரேன் பவி” என்று முணுமுணுக்க,

“அதெல்லாம் வேணாம் அவங்க அதெல்லாம் எதிர்பார்க்க மாட்டாங்க. பேசாம வா ஜான்சி” என்றாள்.

கிட்டதட்ட இருவரும் ஒத்த வயத்தில் இருக்க இரு வருட சீனியர் என்றாலும் பந்தா இல்லாமல் பவிகா பழகுவதால் வா போ என்ற பேச்சு இருவருக்கும் சரளமாக வந்தது.

“எனக்கு பேசணும்போல இருக்கு ப்ளீஸ்” என்றவாறு தன் கைகளை உடனடியாக விடுவித்து பூங்குழலி பின் நிற்க,

என்னமோ பண்ணு என்னும் பாவனையில் அடுக்கடுக்காய் இருக்கும் மூன்று படுக்கையில் மூன்றாவது அடுக்கில் இருக்கும் தன் படுக்கைக்குச் சென்றாள் பவிகா. நடுவில் ஜான்சி படுக்க கீழே இருக்கும் படுக்கை பூங்குழலிக்கானது.

கூப்பிட தேவையின்றி அருகில் அசைவுணர்ந்து திரும்பி பார்த்த பூங்குழலியிடம், “மேம் ரொம்ப தேங்க்ஸ் மேம்” என்றாள் உணர்ந்து.

முகத்தில் எவ்வித பாவனையும் இன்றி அவளை ஒரு பார்வை பார்த்தவள் லேசாக தலையசைத்தவாறு திரும்பி புத்தகத்தினுள் புக,

அவளின் அசைவில் ஜான்சிக்கு தலையசைவு மறைந்து, கண்டுக்கொள்ளாமல் திரும்புவது போல் தோன்ற, “எனக்காக நீங்க பேசுவீங்கன்னு எதிர்பார்க்கவேயில்லை மேம்… தாங்” வாக்கியம் முடிக்கும் முன்,

“நான் ஒன்றும் உனக்காகப் பேசலை அவங்க பேசிய விதம் தப்பு அதான் பேசுனேன்” என்று அவளின் பேச்சினை பாராமலே கத்தரித்தாள் பூங்குழலி.

ஏனோ இந்த பாராமுகம் ஜான்சியை தூண்டிவிட, “அப்போ ஜூஸ் குடுத்ததுக்கு தேங்க்ஸ் சொல்லவா மேம்” என்றாள் இதுக்கு எப்படி மறுப்பீங்க என்ற தொனியில்.

அதற்கெல்லாம் அசருபவளா பூங்குழலி? மீண்டும் திரும்பி, “சரி… சொல்லீட்டீங்கள்ள கிளம்புங்க” என்றவிட்டு புத்தகத்தை மூடினாள்.

“இன்னொன்னும் சொல்லணும் மேம். ரொம்ப வருசம் கழிச்சு எங்க அம்மாவை ஒரு நொடி உங்களுக்குள்ள பார்த்தேன். ஏதோ சொல்லனும்ன்னு தோணிச்சு மேம் தப்பாயிருந்தா மன்னிச்சிக்கோங்க” இதை சொல்லவேண்டும் என்று அவள் நினைக்கவேயில்லை ஆனால் தன்னை மீறி கூறிய பிறகே சிறிது பயம் வர மன்னிப்பை யாசித்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று தன் படுக்கைக்கு ஓடினாள்.

பூங்குழலி அதிர்ந்து போனாள். சத்தியமாக இப்படி ஒரு வார்த்தையை அவள் எதிர்பார்க்கவில்லை. மேலும் அங்கிருக்க முடியாமல் வெளியேறியவள் இரவு நேரம் வேலையில் இருக்கும் சிலரின் பார்வையை உணர்ந்து எப்போதும் டீ மற்றும் காபி இருக்கும் இடத்திற்கு கால்களைத் திருப்பினாள்.

கை தனக்கான டீயை எடுக்க, மனம் எங்கோ சென்றது. அருகிலேயே அமர்ந்து குடிப்பதற்காக பால்கனி போல் திறந்தவெளியில் நான்கு ஐந்து மேசைகள் மற்றும் நின்றுகொண்டே குடிப்பதற்காக திண்டும் இருக்கும்.

நேரே சென்று திண்டில் டீயை வைத்து அதில் சாய்ந்தவள்  கடல் எது வானம் எது என்று பிரித்தறிய முடியாமல் இரண்டும் ஒன்றாக கலந்திருக்கும் கும்மிருட்டை வெறித்திருந்தாள்.

நெஞ்சம் முழுதும் ‘எங்க அம்மாவை ஒரு நொடி உங்களுக்குள்ள பார்த்தேன்’ என்ற ஜான்சியின் வார்த்தையை எண்ணி எண்ணிப் புழுங்கியது.

நடுக்கடல் அவ்விரவில் ஆழ்ந்த அமைதியில் காட்சியளிக்க கடற்காற்றும் தன்னை தென்றலென எண்ணி வெண்சாமரம் வீசயது.

ஆனால் அதற்கு நேர்மாறாய் மனமென்னும் ஆழ்கடலில் புதைத்து வைத்த பெண்ணவளின் நினைவுகளானது பொங்கிப்பெருகி ஒரு பெரும் புயலை உண்டாக்கிக்கொண்டிருந்தது. 

அது….

அலைகடலும் ஓய்ந்திருக்க அகக்கடல்தான் பொங்குவதேன்?

நிலமகளும் துயிலுகையில் நெஞ்சகந்தான் பதைப்பதுமேன்? 

வானகமும் நானிலமும் மோனமதில் ஆழ்ந்திருக்க மான்விழியாள் பெண்ணொருத்தி மனத்தில் புயல் அடிப்பதுமேன்?

வாரிதியும் அடங்கி நிற்கும் மாருதமும் தவழ்ந்து வரும் காரிகையாள் உளந்தனிலே காற்றுச் சுழன்றடிப்பதுமேன்? (பொன்னியின் செல்வன் பாடல்)

அலைகடல் ஆர்ப்பரிக்கும்

 

error: Content is protected !!