Akila Kannan’s Thaagam 15
Akila Kannan’s Thaagam 15
தாகம் – 15
ரமேஷ் கன்னத்தில் அறைந்ததில் அதிர்ச்சியான விக்ரம், “ஏய் என்ன காரியம் பண்ற..?” பாவம்.. அவளை ஏன் அடிச்ச…? கொஞ்சமாவது அறிவு இருக்கா..?” என்று கோபமாக கேட்டான்.
“என்ன சார்..? குழந்தையையும் கிள்ளி விட்டுட்டு தொட்டிலையும் ஆட்டறீங்களா?” , என்று நக்கலாக கேட்டாள் திவ்யா.
விக்ரம் “நேரம் ஆச்சு வீட்டுக்கு கிளம்புங்க …” , என்று பொதுவாக கூறினான் .
“என்ன திமிர்? ” , என்று முணுமுணுத்த திவ்யா , “எந்த நேரம் எங்க போகணுமுன்னு எனக்கு தெரியும்” , என்று தெனாவட்டாக கூறினாள்.
” நல்லா தெரியும்…. “, என்று கடுப்பாக கூறிய ரமேஷ், “மணி என்னனு தெரியுமா..? 11:00. உன் மொபைலை ஒழுங்கா வச்சிக்க தெரியல… எட்டு மணில இருந்து உன்னைய தேடி தான் சுத்திட்டு இருக்கேன் … வீட்ல எல்லாரும் பதட்டத்தோடு இருக்காங்க.. வீட்ல உள்ளவங்கள நிம்மதியா இருக்க வைக்க முடியலை.. உனக்கு இந்த பொது சேவை எல்லாம் தேவையா?”, என்று வார்த்தைகளை கடித்து துப்பினான்.
“இவ்வளவு நேரம் ஆகிருச்சா ? இந்த வாட்ச்மன் கிட்ட சண்டை போட்டதுல, நேரம் போனதே தெரியல.. ரமேஷ் கடுங்கோபத்தில் இருக்கான் போல தெரியுதே.. இவன் இன்னக்கி வீட்ல நம்மள போட்டு கொடுத்திருப்பானோ..?? திவ்யா இப்ப நீ அடக்கி வாசி.. ” , என்று தனக்கு தானே மனதுக்குள் கூறிக் கொண்டாள்.
“ஆனால், இவன் யார்…? இவன் முன்னாடி ரமேஷ் என்னை எப்படி அடிக்கலாம்..? “, என்று திவ்யா நினைக்க, அவள் தன்மானம் அவளை சீண்டி எழுப்பியது.
“நீ இங்க வரலனாலும் நான் கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு வந்திருப்பேன்”, என்றாள் வீம்பாக.
“எதுக்கு இப்ப பேசிக்கிட்டு… வீட்டுக்கு கிளம்புங்க “, அமைதியாக ரமேஷிடம் கூறினான் விக்ரம்.
எதுவும் பேசாமல், திவ்யாவிடம் சாவியை வாங்கி கொண்டு வண்டியை கிளப்பினான் ரமேஷ்.. திவ்யா அமைதியாக வண்டியில் எற.. “தேங்க்ஸ் விக்ரம்… பை.. நாளைக்கி பாப்போம்”, என்று கூறிக் கொண்டு கிளம்பினான் ரமேஷ்.
அவர்கள் சென்றதும் , காரில் பாடலை ஆன் செய்தபடி வண்டியை ஓட்டினான் விக்ரம்.
“மழை அழகா வெயில் அழகா கொஞ்சும் போது மழை
அழகு கண்ணா நீ கோபப்பட்டால் வெயில் அழகு கண்ணா நீ
கோபப்பட்டால் வெயில் அழகு”
பாடலை கேட்ட, விக்ரமின் முகத்தில், புன்னகை தவழ்ந்தது.. ” இந்த சென்னை வெயில் கூட அழகு ஆகுமா…? ” , என்று சிந்தித்தவாறே காரின் ஆக்ஸிலேட்டரை வேகமாக அழுத்தினான் விக்ரம்.
புன்னகைத்தவாறே வீட்டுக்குள் வேகமாக நுழைந்த விக்ரம், ஹாலில் அமர்ந்திருந்த அவன் அம்மாவைப் பார்த்து , ” அம்மா டின்னர் முடிஞ்சிதா….? ” , என்று வினவினான்.
“இன்னும் அரை மணி நேரம் கழித்து வந்திருந்தா, இன்னக்கி நாள் முடிஞ்சிருக்கும் “, என்று கடுப்பாக கூறினார் விக்ரமின் தாயார்.
விக்ரம் எதுவும் பேசவில்லை.
“குளிச்சுட்டு வா…”, என்று அவர் கூற..
“இல்லம்மா சாப்பிட்டுட்டே போறேன்”, என்று கூறினான் விக்ரம்.
உணவை பரிமாறிட்டு அமைதியாக உண்ண ஆரம்பித்தார் விக்ரமின் தாயார்.
“என்ன அம்மா.. ரொம்ப கோபமா ? ” , என்று வினவினான் விக்ரம்.
“ஒரு கால் பண்ணிருக்கலாம்ல? ” , என்று விக்ரமின் தாய் வினவ, ” ஒரு பிரச்சனை அம்மா … அது தான் கொஞ்சம் நேரம் ஆகிருச்சு …” , என்று கம்மலான குரலில் கூறினான் விக்ரம் .
“இப்ப எல்லாம் சரி ஆகிருச்சா? ” , என்று அக்கறையாக கேட்டார் விக்ரமின் அம்மா .
“சரி ஆகிருச்சு அம்மா…” , என்று சாப்பிடப்படியே கூறினான்.
“சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோடா.. பொண்ணு பாக்கவா? ” , என்று தாய் வினவ.. ” மிடில் கிளாஸ் பேமிலில ஒரு பொண்ணு பாருங்க அம்மா ” , என்று குரலில் கவனத்தோடு விக்ரம் கூறினான் .
அவனை கூர்ந்து பார்த்த விக்ரமின் தாயார், “நீ எதுவும் பொண்ணு பார்த்து வச்சிருக்கியா ?” , என்று நேரடியாக கேட்டார்.
இந்த கேள்விக்கு விக்ரம் பதில் தெரியாமல் முழிக்க, ” பாத்திருந்தா என்கிட்டே சொல்லியிருக்க மாட்டியா.?” , என்று புன்னகைத்த படியே தான் கேட்ட கேள்விக்கு தானே பதில் கூறிக் கொண்டார் விக்ரமின் தாயார்.
இருவரும் பேசியவாறே சாப்பிட்டு முடித்தனர்.
“குட் நைட் “, கூறி விட்டு அவர் படுக்க செல்ல , விசில் அடித்தபடி படியேறினான் விக்ரம்.
ஏறிய படிகளில் இருந்து பின் பக்கமாக இறங்கி மீன்களைப் பார்த்தான். விக்ரமுக்கு திவ்யாவின் ஞாபகம் வந்தது. அவள் கண்களும் இப்படி தான் மீன் போன்று வளைந்திருக்கும் என்று நினைத்தான்.
“தன்னை மணப்பவள் மீனை ரசிப்பாளா? ” , என்று விக்ரம் யோசித்த காலம் மலை ஏறிவிட்டது.
விக்ரம் ரசிக்க ஆரம்பித்து விட்டான். இந்த மாற்றம் விக்ரமிற்கு தெரிகிறதா என்று தெரியவில்லை.., நமக்கு தெரிகிறது.
விக்ரம் படுக்க செல்வது போல் தெரியவில்லை.. அவன் கண்கள் மீன்களை தான் பார்த்துக் கொண்டிருந்தது.
ஆனால் மனமோ..?? விக்ரமின் கனவுகளுக்கு நாம் ஏன் இடைஞ்சலாக!!!!??
வண்டியின் சத்தம் கேட்டு ஷண்முகம் வெளியே வந்தார்.
அந்த அபார்ட்மெண்ட்க்குள் திவ்யாவின் வண்டி உள்ளே நுழைந்தது. ரமேஷ் அந்த வண்டியை ஓட்டிக் கொண்டு வர, திவ்யா எதுவும் பேசாமல் அமர்ந்துக் கொண்டிருந்தாள். வண்டியை நிறுத்தி விட்டு ரமேஷ் முன்னே செல்ல, திவ்யா பின்னே உள்ளே நுழைந்தாள்.
“ஏண்டா? உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா?” , என்று சத்தம் போட்டார் ஷண்முகம்.
“உனக்கு வேலை இருந்தா, நீ லேட்டா வா.. எதுக்கு திவ்யாவையும் உன்கூட வெயிட் பண்ண வைக்கிற? ” , என்று கேட்டார் ஷண்முகம்
ரமேஷ் திவ்யாவின் முகத்தை பார்த்தான் .. திவ்யா தலையை குனிந்து கொண்டாள்.
“அப்பா , திவ்யாவிற்கும் லேட் ஆகிருச்சு.. அவளை தனியே அனுப்ப வேண்டாமுன்னு தான் வெயிட் பண்ண வெச்சேன். கூட கொஞ்சம் நேரம் ஆகிருச்சு.” , என்று கூறி விட்டு உள்ளே சென்றான்.
“ரொம்ப நல்லவன்…… என்னை காட்டிக் குடுக்க மாட்டான். ஆனா கண்டவன் முன்னாடி , என்னை அடிப்பான்”, என்று மனதிற்குள் ரமேஷை திட்டினாள்.
“அப்படி என்ன தப்பு பண்ணிட்டேன், எல்லார் கிட்டயும் மறைக்கிற அளவுக்கு, வேலையா போன இடத்துல கொஞ்சம் நேரம் ஆகிருச்சு .. அதுக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா? ” , என்று மனதுக்குள் நொந்து கொண்டாள்.
“ஏண்டி ?? நேரம் ஆகும்னா ஒரு கால் பண்ண முடியாதா? எட்டு மணில இருந்து உன்னை தேடிட்டு இருக்கோம். உனக்கு கால் பண்ணா சுவிட்ச் ஆப்னு வருது.. வீட்ல இருக்குறவங்க மேல அக்கறை இல்லை.. ” , என்று கோபமாக பேசினார் திவ்யாவின் அம்மா.
“ரமேஷ், இவளால தானே நேரம் ஆச்சு ? “, என்று வினவினார் திவ்யாவின் அம்மா.
“அதெல்லாம் ஒன்னும் இல்லை அத்தை.. “, என்று கூறிக்கொண்டே சாப்பிட்டு கொண்டிருந்தான் ரமேஷ்.
“நீ இப்படி பொய் சொல்லி…, பொய் சொல்லி மறைக்கிற வரைக்கும், வீட்ல இருக்கிறவங்க பத்தி அவளுக்கு பொறுப்பே வரப்போறதில்லை ” , என்று ரமேஷை திட்டினார் திவ்யாவின் தாய்.
நடக்கும் அனைத்தையும் அமைதியாக வேடிக்கை பார்த்தார் ரமேஷின் தாய்.
நடக்கும் விஷயத்திற்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் திவ்யா.
சாப்பிட்டு முடித்த பின், ரமேஷும் , திவ்யாவிடம் பேச விரும்பவில்லை திவ்யாவும் ரமேஷிடம் பேசவில்லை.
இருவரும் அவர்களது அறைக்குச் சென்றனர்.
ரமேஷ் அவன் அறையில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தான்.
“திவ்யாவிடம் பக்குவமாய் பேசி வேலையை விட்டு விட சொல்ல வேண்டும் “, என்று எண்ணினான்.
திவ்யா கண்ணை மூடி கொண்டு படுத்திருந்தாள். தூக்கம் வர வில்லை. என்ன நடந்திருக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
” விக்ரம் ரமேஷிடம் நம்மை பற்றி எதாவது சொல்லி, ரமேஷ் கோபப்பட்டுவிட்டானா? அல்லது, வீட்டில் உள்ளவர்கள் “ என்னை காணவில்லை என்று பதறி” , ரமேஷை கோபப் படுத்திவிட்டார்களா…? ஏன் இன்று ரமேஷ் இவ்வளவு கோபப்பட்டான்.. நான் விக்ரமை கிரிமினல் என்று சொன்னது தான் காரணமோ..? விக்ரம் மீது எந்த தவறும் இல்லாமல் நான் தான் லூசு மாதிரி கற்பனை செய்து கொண்டிருக்கிறேனோ..? இருந்தாலும் ரமேஷ் என்னை விக்ரம் முன் அடித்திருக்க கூடாது. ” , என்று யோசித்தாள்.
தன் அறையில் இருந்து வெளியே வந்த திவ்யா ரமேஷின் “அறைக்கு செல்லலாமா வேண்டாமா?”, என்று யோசித்தாள். அவன் அறையின் முன் நின்று சிறிது நேரம் யோசித்தாள். ரமேஷின் அறைக் கதவை தட்ட வேண்டாம் என்று எண்ணி தன் அறைக்கு திரும்புகையில், ரமேஷின் அறைக் கதவு திறந்தது.
” உள்ள வா திவ்யா” , என்று ரமேஷ் கூற, ” நான் உன் ரூமுக்கு வரலை.. சும்மா இந்த பக்கமா நடந்தேன் “, என்று திரும்பிக் கொண்டாள்.
“பரவால்ல உள்ள வா.. உனக்கு தூக்கத்துல நடக்கிற வியாதி இல்லைனு எனக்கு தெரியும்” , என்று சிரித்துக் கொண்டே கூறினான் ரமேஷ்.
அவன் அறைக்கு சென்ற திவ்யா , அங்கிருந்த தலையணையை ரமேஷ் மேல் எறிந்தாள். அதை கையில் பிடித்து கொண்டான் ரமேஷ்.
“திவ்யா , நீ நினைக்கிற மாதிரி விக்ரம் சார் மோசம் கிடையாது… ” , என்று ரமேஷ் தன் பேச்சை ஆரம்பிக்க , “அவரை பற்றி பேசாத”, என்று சிடுசிடுத்தாள் திவ்யா.
“திவ்யா ப்ளீஸ் ” , நான் சொல்றதை கேளு என்று ரமேஷ் அழுத்தமாக கூற, திவ்யா அமைதி காத்தாள்.
“அன்னக்கி அவர் பணம் எதுவும் கொடுக்கல… இவர் போய் சொன்ன உடனே கரண்ட் வந்திருச்சு ” , என்று ரமேஷ் கூற,
” உனக்கு புரியலையா ரமேஷ்.. அதிகார பலம்.. தீபா மாதிரி ஏழைங்க எதையும் காசு குடுத்து கூட வாங்க முடியாது.. நம்மள மாதிரி மிடில் கிளாஸ், பணம் குடுத்து முடிந்ததை வாங்கிரலாமுன்னு நினைக்கிறோம்.. விக்ரம் மாதிரி ஆளுங்க அதிகார பலத்தை உபயோகிச்சு எல்லாம் பணத்தால் சாதிச்சிக்கிறாங்க… ” , என்று திவ்யா தன் மனதிற்கு பட்டதை பேசினாள்.
ரமேஷ் அமைதியாக இருந்தான்.
“அன்னக்கி அவங்களுக்கு எவ்வளவு கஷ்டம் தெரியுமா..? தண்ணி இல்லாம அவ்வளவு கஷ்டப் பட்டிருக்காங்க.. மூணு நாளைக்கு ஒரு தடவை தான் அவங்களுக்கு தண்ணி வரும்.. இவர் பண்ண வேலையால அவங்களுக்கு இன்னும் கஷ்டம்….” , என்று மேலும் தொடர்ந்து பேசினாள்.
“இது அவங்களோட விதி “, என்று கூறினான் ரமேஷ்.
“இல்லை.. அவரை மாதிரி பணக்காரங்களும் , உன்னை மாதிரி தன் வாழ்க்கை நல்லா இருந்தா போதுமுன்னு நினைக்கிற நடுத்தர வர்க்கத்தினரும் செய்ற சதி…. “, என்று திவ்யா கூறினாள்
“முட்டாள் மாதிரி பேசாத..அன்னக்கி விக்ரம் சார் மட்டும் அவங்களுக்கு உதவி பண்ணலனா , அவங்களுக்கு மறு நாளும் தண்ணி வந்திருக்காது. அந்த பாட்டி ஓட பேரன் கீழ விழுந்து சாக கிடந்தான் . விக்ரம் சார் தான் காப்பாத்தினார் தெரியுமா..?” , என்று கோபப்பட்டான் ரமேஷ்.
“கீழ விழுந்ததே உங்க கம்பனிக்கு கரண்ட் வந்து , அவங்களுக்கு கரண்ட் இல்லாம போனதால தானே? அந்த இருட்டுல தானே அந்த சின்ன பையன் கீழே விழுந்தான்” , என்று கட்டை விரலை உயர்த்தி நியாயம் கேட்டாள் திவ்யா.
“திவ்யா அது ஒரு கோய்ன்ஸிடென்ஸ்.. அவ்வளவு தான்.. ஒரு சில மாற்றங்கள் ஒரு சில பாதிப்புகளை உண்டாக்க தான் செய்யும்.. அதுக்காக ஒரு வர்க்கத்தினரை பழி சொல்ல முடியுமா..? இன்னக்கி விக்ரம் ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரியால எத்தனை குடும்பங்கள் வாழுது தெரியுமா..?” , என்ற கேள்வியோடு முடித்தான்.
“அவருக்கு எப்பவுமே இது பழக்கம் தான் போல…” , என்று திவ்யா கூறினாள்.
“எது? ” , என்று கண்களை சுருக்கி கொண்டு திவ்யாவை உற்று நோக்கினான் .
“குழந்தையையும் கிள்ளி விட்டுட்டு , தொட்டிலையும் ஆட்டி விடறது..” , என்று முணுமுணுத்த திவ்யா, “இன்னக்கி என்னை பற்றி விக்ரம் என்ன சொன்னார் ? நீ ஏன் இவ்வளவு கோபப்பட்ட ?” , என்று கோபமாக முடித்தாள்.
“திவ்யா உண்மையா நான் பயந்துட்டேன்.. எட்டு மணிக்கு கால் பண்ணிருக்காங்க…. மொபைல் சுவிட்ச் ஆப்.. வாட்ஸப் லாஸ்ட் சீன் 4:30. உன் பிரெண்ட்ஸ்க்கும் நீ எங்க இருக்கிறேனு தெரியல.. . நாங்க என்ன பண்ணுவோம்? உன்னை தேடி ரோடு ரோடா திரிஞ்சோம்…..” , என்று அதன் பின் நடந்ததை முழுமையாக கூறினான்.
” எதுக்கு இப்படி பயப்படணும் ரமேஷ்? நான் பத்திரமா வர மாட்டேனா?” , என்று திவ்யா கேட்க , ரமேஷ் அவள் தலையை ஆதரவாக தடவி, ” நீ சொல்றது நிஜம் . நான் ஒரு சுயநலவாதி. நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த சராசரி மனிதன். என் வாழ்க்கை , என் குடும்பம் நல்லார்ந்தா போதுமுன்னு நினைக்கிற சாதாரண மனுஷன். நீ பல பிரச்சனைகளை கண்டு பிடித்து, சாதனை பண்ணறதை விட , நீயும் அத்தையும் நிம்மதியா இருக்கணுமுனு நினைக்கிறேன்.. அவ்வளவு தான்.. எனக்கு இது தப்பா தெரியல… ” , என்று தீவிரமாக கூறினான்.
“ஓ…!! நான் சந்தோஷமா இருக்கனுமுனு நினைச்சி தான், அந்த மனுஷன் முன்னாடி என்னை அடிச்சியோ? ” , என்று கோபமாக வினவினாள் திவ்யா.
“விக்ரம் நீ நினைக்கிற அளவுக்கு மோசமான ஆள் இல்லை.. பிஸினஸ்னா கொஞ்சம் அப்படி இப்படி தான் இருக்கும்.. அப்படி அவர் தப்பே பண்ணாலும் , நம்மளால ஒன்னும் பண்ண முடியாது.. நமக்கு எதுக்கு ஊரு வம்பு .. எனக்கு தெரிஞ்சி விக்ரம் எந்த தப்பும் பண்ணல..” , என்று பொறுமையாக எடுத்துரைத்தான் ரமேஷ்..
“அதுக்காக என்னை அவன் முன் அடிப்பியா..? என்னை விட விக்ரம் உனக்கு முக்கியமா?” , என்று தன் முகத்தை சுருக்கி கொண்டு கேட்டாள் திவ்யா.
தாகம் தொடரும்…….