Akila Kannan’s Thaagam 16
Akila Kannan’s Thaagam 16
தாகம் – 16
“அதுக்காக என்னை அவன் முன் அடிப்பியா..? என்னை விட விக்ரம் உனக்கு முக்கியமா?” , என்று தன் முகத்தை சுருக்கி கொண்டு கேட்டாள் திவ்யா.
அவள் கேள்வியில் பக்கென்று சிரித்தான் ரமேஷ்.
” முட்டாள் தனமான கேள்வி.. விக்ரம் தான் முக்கியம்….” என்று அவன் உதடுகள் கூற, கண்கள் சிரித்தது.
“அது தான் எனக்கு தெரியுமே…!! ” , என்று திவ்யா கோபமாக கூற தன் வெண்பற்கள் தெரிய அழகாய் சிரித்தான் ரமேஷ்..
” திவ்யா..” , என்று ரமேஷ் அழைக்க, “ம்ம்…. ” , என்று அவனை பார்த்தாள் திவ்யா.
“ஒன்றுமில்லை …” , என்று ரமேஷ் கூற, “ஒரு சாரி , கேட்க உன் தன்மானம் இடம் கொடுக்கலை?..
சுத்தி வளைச்சி பேசிக்கிட்டு இருக்க……. நீ எதுவும் சொல்ல வேண்டாம்….” , என்று கூறிவிட்டு வெளியே செல்ல தயாரானாள் திவ்யா.
“திவ்யா… ” , என்று மீண்டும் ரமேஷ் அழைக்க.., “இப்ப என்ன?” , என்று கடுப்பானாள் திவ்யா.
“நீ ஏன் திரை விமர்சனம், கோவில் கொடை இந்த மாதிரி TV program பண்ண கூடாது..?”, என்று இன்முகமாக கேட்டான்.
ரமேஷை பார்வையால் அளந்த திவ்யா , “என் விசயத்துல தலையிட வேண்டாம் பாஸ்.. ” , என்று சிரித்த முகமாக கூறி விட்டு தன் அறைக்கு சென்றாள்.
“எவ்வளவு முக்கியமான வேலை பார்த்திட்டு இருக்கேன்… என்னை பார்த்து நக்கல் அடிக்கிறான்…” , என்று மனதுக்குள் ரமேஷை திட்டிய படியே தூங்கி விட்டாள் திவ்யா.
“டம் டம் டமென்று ” கதவு சத்தம் கேட்டு முழித்தாள் திவ்யா.
வெளியில் ரமேஷ் நின்று கொண்டிருந்தான்.
“ஏன்டா இப்படி கதவை தட்டுற… ? வேலை பார்க்கவும் விட மாட்ட .. தூங்கவும் விட மாட்ட…” , என்று கண்களை சுருக்கி கொண்டு தூக்க கலக்கத்தோடு பேசினாள்.
“திவ்யா, எனக்கு வண்டி வேணும். நான் உன்னை டிராப் பண்றேன் “, என்று ரமேஷ் கூற, “விடிஞ்சிருச்சா?” , என்று சோகமாக கேட்டாள் திவ்யா.
“எஸ்” , என்று தலை அசைத்தான் ரமேஷ்.
திவ்யா படு வேகமாக கிளம்பினாள்.
காலையில் திவ்யா உண்ணும் பொழுது அவளுக்கு பல அறிவுரைகள் பல விதமாக வழங்கப்பட்டது.
“நாங்க சொல்றது காதுல விழுதா “, என்று கோபமாக திவ்யாவின் அம்மா கேட்க, “வயிற்றிக்கு உணவு அளிக்கும் பொழுது, செவிக்கு உணவு குடுக்க கூடாதுனு வள்ளுவர் சொல்லிருக்காரு அம்மா…” , என்று தீவிரமாக கூறினாள் திவ்யா.
“என்ன சொல்றா இவ? “,
“செவுக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.” ,
இப்படி தானே வள்ளுவர் சொல்லிருக்காங்க , என்று புஷ்பா யோசிக்க, “அத்தை, திவ்யா எதோ சொல்லி உங்கள ஏமாத்தறா..” , என்று ரமேஷ் கூறினான்..
“டைம் ஆச்சு ….. வண்டியை எடு” , என்று திவ்யா வாசலில் நின்று கத்திக் கொண்டிருந்தாள் .
“ஏன் இப்படி சத்தம் போடுற..? ” , என்று ரமேஷ் கோபமாக கேட்க, ” நைட் நேரம் ஆச்சுன்னா நீ சத்தம் போடுற… அது மாதிரி தான் இதுவும்….” , என்று மிடுக்காக கூறினாள் திவ்யா.
” வண்டி சாவியை குடு…” , என்று ரமேஷ் ஹெல்மட்டை எடுக்க, “தேவையில்லை நீ உட்காரு நான் ஓட்டுறேன் …”, என்று திவ்யா கடுப்படித்தாள்.
“காலைலயே சண்டை இழுக்காத”, என்று கடுப்பாக கூறினான் ரமேஷ்.
“ஒ!!! நைட் சண்டை போடலாம் … அடிக்கலாம் … அப்படி தானே ?” , என்று வாயை பெரிதாக்கி கொண்டு கேட்டாள் திவ்யா.
“தன்னை வேண்டுமென்றே கடுப்பேற்றுகிறாள்…” , என தெரிந்து கொண்டு அமைதியாக அவள் வண்டியில் ஏறினான் ரமேஷ்.
திவ்யா நேராக, விக்ரம் ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரிக்கு சென்றாள்.
ரமேஷ் எதோ பேச தொடங்க, திவ்யா தன் இரு கரங்களையும் உயர்த்தி ” நோ அட்வைஸ் ப்ளீஸ்…..”, என்று கெஞ்சும் குரலில் நக்கலாக கூறினாள்.
ரமேஷ் எதுவும் பேசாமல் அலுவலகத்திற்குள் சென்றான்.
இண்டஸ்ட்ரி வாசலில், திவ்யாவை பார்த்த பாக்கியம், அவள் அருகே ஓடி வந்தார். ” எம் பொண்ணு தீபா உங்கள பத்தி தான் பேசிக்கிட்டே இருந்தா….. நேத்து ரெண்டு ஐயாவும் ரொம்ப பயந்துட்டாங்க….உங்களை தேடி எங்க வூட்டுக்கு வந்திருந்தாங்க…” , என்று கூறினாள் பாக்கியம்.
அமைதியாக கேட்டுக் கொண்டாள் திவ்யா.
“நேரம் ஆகிருச்சு….”, என்று கூறிவிட்டு வேலைக்கு சென்றார் பாக்கியம் .
“இனி எங்கு சென்றாலும் , ரமேஷிடம் சொல்லிவிட்டு செல்ல வேண்டும்… “, என்று நினைத்துக் கொண்டு, வண்டியை கிளப்பினாள் திவ்யா.
அவள் வண்டி கூவம் நதிக்கரை பாலத்தின் மேல் நின்றது. அங்கு நவீன், மனோஜ், ஸ்வாதி இவளுக்காக காத்திருந்தனர்.
நேற்று எடுத்த வீடியோக்களை அனைவரும் பார்த்தனர்..
“நைஸ் கவரேஜ் ” , என்று நவீன் பாராட்ட, “பாவம் அந்த மக்கள் ரொம்ப கஷ்டப்படுறாங்க ” , என்று மனோஜ் கூறினான்.
“ஊவா… , எப்படி உள்ள போய் வீடியோ எடுத்த.. ரொம்ப மோசமா இருக்கே..?” , என்று கேட்டாள் ஸ்வாதி.
“உன்னையெல்லாம் வச்சிக்கிட்டு …”, என்று தலையில் அடித்து கொண்டான் நவீன்.
“நெக்ஸ்ட் என்ன பண்ண போறோம்?” , என்று நவீன் வினவ, “அந்த பாட்டி சொன்ன ரிப்போர்ட்டர் யாரு..? ஏன் அந்த ஆர்டிகிள் முழுசா முடியலை..? இவங்கள பற்றி வெளிய தெரிய கூடாதுனு நினைக்கிற நபர் யாரு…? இதெல்லாம் நாம கண்டு பிடிக்கணும் ” , என்று மனோஜ் கூற அதை ஆமோதிப்பது போல் திவ்யா தலை அசைத்தாள்.
“எதாவது சாப்பிடலாமா…?”, என்று வினவினாள் ஸ்வாதி.
“நாம்ம என்ன பேசிட்டு இருக்கோம்… இவளை பாருங்க.. “, என்று நொந்து கொண்டு , “நீ எதுக்கு இந்த வேலைக்கு வந்த? ” , என்று கடுப்பாக கேட்டான் நவீன்.
“என் boy friend இதே வேலை தான்… கல்யாணத்துக்கு அப்பறம் ஒரே field ல இருந்தா வசதியா இருக்கும்.. “, என்று வெக்கப்பட்டு கொண்டே கூறினாள் ஸ்வாதி.
“இவளை விடுங்க….. மனோஜ்.. நாம்ம இதை கண்டுப்பிடிச்சா ஒரே சினிமா பாட்டுல பணக்காரங்க ஆகிற மாதிரி, நாமளும் பெரியா ஆள் ஆகிடலாம் ” , என்று ஆர்வமாக கூறினான் நவீன்.
“எனக்கு இப்படி ஒரு டீம்.. “, என்று மனதுக்குள் நொந்து கொண்டாள் திவ்யா.
பேசிக் கொண்டே இவர்கள் அனைவரும் coffee day சென்றனர்.
” Café Frappe, Crunchy Frappe, Devil’ own, Vegan shake ” ஆர்டர் செய்து விட்டு, இவர்கள் ஏதோ பேசிக் கொண்டிருக்க , ஸ்வாதி ” அங்க பாருங்க விக்ரம் சார்…” , என்று முணுமுணுத்தாள்.
“Really, he is a great industrialist… ” , என்று கண்களில் ஆச்சரியம் பொங்க மனோஜ் கூற, ” ஆம் ..” , என்று தலை அசைத்தான் நவீன்..
“இவன் இங்கு என்ன பண்ணுகிறான்? உண்மையிலே நம்மை வேவு பார்க்கிறானா..? பெரிய இண்டஸ்ட்ரியலிஸ்டுக்கு வேறு வேலை இருக்காதா..? ரமேஷ் சொல்வது போல் கோய்ன்ஸிடென்ஸ் தானோ …? ” , என்று யோசித்தாள் திவ்யா.
“இவனிடம் சென்று பேசினால் என்ன ? ” , என்று திவ்யா யோசிக்க, அங்கு விக்ரமின் எதிர் இருக்கையில் ஒரு பெண் வந்தமர்ந்தாள்.
பிரம்மிக்க வைக்கும் அழகாய் இருந்தாள். அவள் தன்னை அழகு படுத்தி கொண்ட விதம், அவளை இன்னும் அழகாய் காட்டியது. கருப்பு நிற லாங் ஸ்கிர்ட் அதில் பச்சை நிற பூ போட்டிருந்தது.. பச்சை நிற டாப்ஸ்.. கருப்பு நிறத்தில் தோடு, ஒரு கிளிப், ஒரு ப்ரசில்ட் அனைத்திலும் பச்சை நிறத்தில் கற்கள் அவளுக்கு அழகாய் பொருந்தி இருந்தது. முகத்தில் தேவையான அளவு ஒப்பனை இருந்தது.
திவ்யாவால் கண்களை அகற்ற முடியவில்லை.
“இவங்களுக்கு இந்த டிரஸ் எங்க கிடைக்கும்? நாம தேடினா கிடைக்க மாட்டேங்குது.. ” , என்று திவ்யாவின் காதில் முணுமுணுத்தாள் ஸ்வாதி.
தோள்களை குலுக்கினாள் திவ்யா. இவர்கள் ஆர்டர் செய்தது வர, பேசிக் கொண்டே சாப்பிட்டனர்.
“ஆபீஸ் போலாமா ? ” , என்று மனோஜ் கேட்க , “ ஆபீஸ் போயிட்டு, நேத்து நம்ம போயிருந்த டீக்கடைக்கு வந்துருங்க.. .. என் பிரென்ட்ஸ் வராங்க நான் அவங்களை பார்த்துட்டு நேரா , அங்கேயே வந்திறேன்…”, என்று கூறினாள் திவ்யா.
“ஒகே.. ” , என்று மூவரும் கிளம்ப, திவ்யா மேலும் அரை மணி நேரம் காத்திருந்தாள்.
“நாம் எதற்க்காக காத்திருக்கிறோம் ?” , என்று சிந்தித்தாள் திவ்யா.
“விக்ரம் என்னிடம் பேசுவானா? நாம் என்ன பேசுவது?” , இப்படி பல கேள்விகள் இருந்தாலும் , “பேசிவிட வேண்டும் “, என்பதில் முடிவாக இருந்தாள் திவ்யா.
விக்ரமிற்கும் , அந்த பெண்ணிற்கும் பேச்சு வார்த்தை முடிய அந்த பெண்மணி சென்று விட்டாள்.
திவ்யா ஹாய் சொல்ல, “எனக்காக காத்துகிட்டு இருக்கிற மாதிரி தெரியுது….” , என்று கேட்டான் விக்ரம். குரலில் தெரிவது நக்கலா அல்லது அக்கறையா ?? திவ்யாவால் இதை கணிக்க முடியவில்லை.
“ஆமாம் “, என்று கூறினாள் திவ்யா.
“என்ன விஷயம் ?” , என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தான் விக்ரம்.
“ஒரு தேங்க்ஸ், சொல்லிட்டு போலாமுன்னு காத்திருந்தேன் ” , என்று எந்த உணர்ச்சியும் இல்லாமல் கூறினாள் திவ்யா.
“இவள் உண்மையாக நன்றி கூறுகிறாளா..? வாய்ப்பில்லையே…. ” , என்று யோசித்த விக்ரம் , “எதற்கு ?” , என்று கேட்டான்.
“என்னை தேடி கண்டு பிடிச்சதுக்கு ” , என்று கூறினாள் திவ்யா.
தனக்கு வந்த சிரிப்பை அடக்கி கொண்டு , “ரமேஷ் எப்படியும் உனக்கு புரிய வச்சிருப்பான். இந்த ஜேம்ஸ் பாண்ட் வேலையெல்லாம் உனக்கு வேண்டாம்.. ” என்று கூறினான் விக்ரம்.
அவன் கண்களை நேராக திவ்யா பார்த்தாள்.
இவளிடம் அதிக நேரம் பேசினாள் தனக்கு ஆபத்து , எதையாவது உளறி விடுவோம் என்று நினைத்து “எனக்கு நிறைய வேலை இருக்கு”, என்று விக்ரம் கிளம்ப.,
“விக்ரம்.. எனக்கு அட்வைஸ் பண்றது பிடிக்காது.. அட்வைஸ் பண்றவங்களையும் பிடிக்காது.. அதனால நான் செய்ய வேண்டியதை நீங்க என்கிட்டே சொல்றதோ.., இல்லைனா ரமேஷ் மூலமா சொல்லறதோ இனி வேண்டாம்.. நீங்க என்ன சொன்னாலும் ரமேஷ் கேட்கலாம்…. நான் கேட்க மாட்டேன்.. அது என்னோட சுபாவம்..”, என்று மூச்சு விடாமல் பேசினாள் திவ்யா.
விக்ரம் எதோ குறுக்கிட, அவனை பேச விடாமல் மேலும் தொடர்ந்தாள் திவ்யா, ” அந்த ஏரியால என்ன பிரச்சனை.. எதை மறைக்க ட்ரை பண்றீங்க, எல்லாத்தையும் கண்டு பிடிப்பேன்… ” , என்று விக்ரமிடம் சவால் விட்டாள்.
“பெரிய புத்திசாலி…” , என்று விக்ரம் கூற, ” நான் பெரிய புத்திசாலி தான் , நீங்க புத்திசாலினா நான் கேட்கற கேள்விக்கு பதில் சொல்லுங்க,
“சிவப்பு நிறத்தை பார்த்தால் ஓடுவதும், பச்சை நிறத்தை பார்த்தால் நிற்பதும் யார்? எப்பொழுது?”, என்று கேட்டாள் திவ்யா.
“என்னை பார்த்தா விடுகதை போட்டு விளையாடற ஆள் மாதிரி தெரியுதா ? “, என்று கேட்டான் விக்ரம்.
“நேரம் ஆச்சு…. கிளம்புறேன் ” , என்று கூறி, அவனிடம் பேசுவதை தவிர்த்து விட்டு பறந்தோடினாள் திவ்யா.
“இவளை நேற்று ரமேஷ் அறைந்ததில் தப்பே இல்லை” , என்ற எண்ணம் தோன்ற தனக்குள்ளே சிரித்துக் கொண்டான் விக்ரம்.
தன் வண்டியை எடுத்துக் கொண்டு வேகமாக கிளம்பினாள் திவ்யா.
திவ்யாவின் வண்டி தீபா வீடு பக்கத்தில் உள்ள டீக்கடை முன் நின்றது.
அங்கு ஸ்வாதி, மனோஜ் மற்றும் நவீன் இவளுக்காக காத்திருந்தனர்.
“ஆபீஸ் ஒர்க் முடிஞ்சிருச்சா? ” , என்று திவ்யா வினவ , “Done” , என்று தன் கட்டை விரலை உயர்த்தி காட்டினான் மனோஜ்
திவ்யாவின் மொபைல் ஒலித்தது.
“சொல்லு ரமேஷ்” , என்று திவ்யா கூற ,
“சாரி”, என்று கூறினான் ரமேஷ்.
அமைதியாக இருந்தாள் திவ்யா. பேச்சை மாற்றும் விதமாக,
“ரமேஷ், நான் விக்ரமை பார்த்தேன்… ” , என்று கூறினாள்.
“எங்க?”, என்று ரமேஷ் வினவ, ” coffee shop ” என்று பதில் உரைத்தாள்.
“ஏதும் பேசினியா?, என்று ரமேஷ் தீவிரமாக கேட்க , “ஆமாம், விடுகதைக்கு பதில் கேட்டேன் ?” , என்று திவ்யா கூற, “லூசு , போய் வேலைய பாரு”, என்று கூறி மொபைலை வைத்து விட்டான் ரமேஷ்.
“நான் உண்மையை சொன்னாலும் யாரும் நம்புவதில்லை.. “, என்று நினைத்து கொண்டாள் திவ்யா.
“விக்ரமும், திவ்யாவும் சந்திப்பது ஜஸ்ட் கோய்ன்ஸிண்டென்ஸ் தானா? திவ்யாவிடம் எந்த வித்தியாசமும் இல்லை. விக்ரமிடம் எதோ நெருடுவது போல் தெரிகிறதோ…? ” , என்று ரமேஷ் யோசித்தான்.
திவ்யாவும் , அவள் டீமும் அங்குள்ள சுற்றுபுறத்தை நோட்டமிட, “அக்கா.. அக்கா .. ” , என்றழைத்து கொண்டு தீபா ஓடி வந்தாள்.
“அக்கா உங்களுக்காக நான் அந்த ஆயா கிட்ட சண்டை போட்டேன்.. நல்லது பண்றவங்கள திட்டுறியேனு கேட்டேன்.., அதுக்கு அந்த ஆயா என்ன சொன்னாங்க தெரியுமா?” , என்று கண்களை விரித்து கொண்டு கேட்டாள் தீபா.
“என்ன சொன்னாங்க ?” , என்று திவ்யா கேட்க, அனைவரும் அவளை ஆர்வமாய் பார்த்தனர் .
தாகம் தொடரும்.