Akila Kannan’s Thaagam 17

Akila Kannan’s Thaagam 17

தாகம் – 17

 

அனைவரும் தீபாவை ஆர்வமாய் பார்க்க அந்த வழியாக வந்த அலமேலு பாட்டி, “ஏய் என்னம்மா, நீ இன்னக்கி பள்ளிக்கூடத்துக்கு போகல..? ” என்று வினவினார்.

          தீபாவின் கவனம் அலமேலு பாட்டியிடம் திரும்பியது.  “இல்லை ஆயா, இன்னக்கி லீவு … ” , என்று கூறினாள்.

 

“எதுக்கு…?”, அவர் வினவ, அலமேலு பாட்டியிடம், எதோ பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் தீபா.

 

“இந்த பொண்ணுக்கிட்ட விஷ யத்தை வாங்கலாமுன்னு பார்த்தா.. , அந்த பொண்ணு ரொம்ப பிசியா இருக்கு… ” , என்று சலிப்புடன் கூறினாள் ஸ்வாதி.

 

பேசி முடித்து தீபா திரும்ப, “சொல்லுமா , அந்த பாட்டி என்ன சொன்னாங்க…. ?” , என்று கேட்டாள் திவ்யா.

 

“அந்த பத்திரிக்கை  நிருபர் பேட்டி எடுத்த மறுநாள் அந்த ஆயா போட்டோ  வந்துச்சாம் … அதுக்கு அடுத்தநாள் , அந்த பத்திரிக்கை நிருபரோட கண்ணீர் அஞ்சலி போட்டோ வந்துச்சாம்..  அவர் ஒரு விபத்துல செத்து போய்ட்டாராம்…. சிலர் கொலைனு கூட சொன்னாங்களாம்….. அத மாதிரி உங்களுக்கு எதாவது பிரச்சனை வந்திருமோனு பயந்து உங்களை திட்டினதா சொல்றாங்க.. ” , என்று தனக்கு தெரிந்த கதையை சொன்னாள் தீபா.

 

                        திவ்யா தலையை பிடித்துக் கொண்டு, வண்டியின் மீது சாய்ந்தாள்.

 திவ்யா பயந்து விட்டதாக எண்ணி, “நாம இப்படி  எல்லாம் பயப்பட கூடாது” , என்று மனோஜ் அறிவுரை கூறினான்.

 

நவீன் ஓடிச் சென்று அந்த டீக்கடையில்  அவளுக்கு ஒரு வாட்டர் பாட்டில் வாங்கி கொடுத்தான் . அவள் தண்ணீர் குடித்து விட்டு, மீதம் இருந்த தண்ணீரில் முகம் கழுவினாள், யாரும் அறியா வண்ணம் அவள் கண்களில் நீர் வழிந்தது.

 

      தீபா ஆசையாக அந்த வாட்டர் பாட்டிலை பார்த்தாள்.  “நானும் ஒரு வாட்டர் பாட்டில் வாங்கி, பாதியை குடித்து விட்டு, மீதியை பாண்டிக்கு குடுப்பேன்.”, என்று மனதுக்குள் நினைத்து கொண்டாள்.

 

“தேங்க்ஸ் தீபா.. பாட்டி சொன்ன விஷயத்தை, எங்களை தேடி வந்து சொன்னதுக்கு “, என்று திவ்யா கூற, “நீங்க எங்களுக்கு எவ்வளவு நல்லது பண்ண போறீங்க , எங்க ஏரியாவை சுத்தம் பண்ண போறீங்க … எங்க நதியை சுத்தம் பண்ண போறீங்க..” , என்று ஆர்வமாக தீபா கூறினாள். 

தீபாவை அனைவரும் கண் இமைக்காமல் பார்க்க, ” என் வீட்டுக்கு போறேன்”, என்று கூறிக் கொண்டு தீபா கிளம்பினாள்.

 

“என்ன திவ்யா..? வாக்குறுதிகளை அள்ளி கொடுத்த மாதிரி தெரியுது.” , என்று நக்கலாக கேட்டான் நவீன்.

 

” எதாவது நல்லது பண்ணலாம், ஆனால் கூவம் நதியை சுத்தம் பண்றது.., கொஞ்சம் ஓவர் தான்… நமக்கு பகல் கனவு தான்.. “, என்று கூறினான் மனோஜ்.

 

“என்னைக்காவது உன் வீட்டு தண்ணி தொட்டியை சுத்தம் பண்ணிருக்கியா..? ” , என்று ஸ்வாதி கேட்டாள்.

 

“நாம நல்லது நினைப்போம் , எதாவது நல்லது நடக்கும் ” ,  என்று கூறினாள் திவ்யா.

 

“இப்ப என்ன பண்ண போறோம் ?” , என்று ஸ்வாதி கேட்க,  “ஏன் coffee shop  போகனுமா…?” , என்று நவீன் நக்கல் அடித்தான்.

 

ஸ்வாதி அவனை முறைத்து பார்க்க ,” அது என்ன பத்திரிக்கை ? அங்க போய் எதாவது கிடைக்குதான்னு பார்க்கலாம் “, என்று கூறிய மனோஜ் முகத்தில் ஒரு தீவிரம் தெரிந்தது.

 

“ம்ம்ம்ச்ச்…. “, என்று சலிப்பாக திவ்யா கூறினாள்.

 

“ஏன் திவ்யா ? என்ன ஆச்சு …?” , என்று அவர்கள் வினவ..

 

” நேற்றே “நிஜம் பத்திரிக்கை “அலுவலகத்திற்கு சென்றேன்… உள்ளே போக முடியலை…  யாரையும் பார்க்கவும் முடியலை..  அப்படி இருக்கும் பொழுது  நமக்கு என்ன கிடைக்கும் “,  என்று வெறுப்பாக திவ்யா கூறினாள்.

 

“அந்த பத்திரிகை பெயர் “நிஜம்  பத்திரிக்கையா”..?” , என்று யோசனையாக ஸ்வாதி கேட்க,  “ஆம் ” என்று திவ்யா தலை அசைத்தாள்.  

 

“ஏன் நீ எதாவது கண்டு பிடிக்கப்போறியா ?” , என்று நவீன் நக்கலாக கேட்டான்.

“கண்டு பிடிச்சா என்ன தருவ….? “, என்று நவீனிடம் சண்டைக்கு போனாள் ஸ்வாதி.

“உங்க சண்டையை அப்புறம் வச்சிக்கோங்க….. ” , என்று மனோஜ் கோபமாக கூற,  ஸ்வாதி, நவீன் இருவரும் சண்டையை

விடுத்து மனோஜை பார்த்தனர் ..

 

“ஏதோ சொல்ல வந்தியே…?”, என்று மனோஜ்  காரியத்தில் கண்ணாக வினவ,  “என் Would be நந்தன், “நிஜம் பத்திரிகையில் “, நிருபரா இருக்கான்…  அவனால் முடியாதது ஒன்றும் இல்லை..”, என்று வெட்கப்பட்டபடியே பெருமையாக கூறினாள் ஸ்வாதி.

 

 “நேத்து சொன்ன boy friend போல”, என்று யோசித்துக் கொண்டே, நவீன் அவளை நக்கலாக பார்க்க, மனோஜ் யோசனையாக பார்த்தான்.

 

“சரி நந்தனுக்கு கால் பண்ணு.. நாம்  அவரை மீட் பண்ணலாம் ” , என்று திவ்யா ஆர்வமாக கூறினாள்.

 

“அவ அரை லூசு…. இவ ஒரு ஆர்வக் கோளாறு..  நம்ம நிலைமை கஷ்டம் தான்…” , என்று மனோஜிடம் சோகமாக கூறினான் நவீன்.

 

ஸ்வாதி நந்தனிடம் பேச, திவ்யா தீவிர யோசனையில் இருந்தாள்.

 

” லன்ச்சுக்கு  எல்லாரும் மீட் பண்ணலாம்னு சொன்னாங்க..” , என்று ஸ்வாதி கூற  , அனைவரும் ஏதோ  ஒரு புதிய வழி கிடைத்த சந்தோஷத்தில் அலுவலகத்திற்கு கிளம்பினர். 

 

விக்ரமின் கார் வேகமாக இவர்களை கடந்து செல்கிறது. இவர்களும் விக்ரமை கவனிக்கவில்லை. விக்ரமும் இவர்களை கவனிக்கவில்லை.

பல வேலைகளை முடித்து விட்டு , இப்பொழுது ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரிக்கு சென்று கொண்டிருக்கிறான் போலும்.. 

           வெயிலில் இவர்களோடு வண்டியில் செல்வதை விட, சிறிது நேரம் விக்ரம் இண்டஸ்ட்ரிக்கு சென்று எ சி யில் குளிர் காய்வோம்.

 

வேகமாக அலுவலகத்திற்குள் நுழைந்தான் விக்ரம். தன் அறைக்கு சென்று லேப்டாப்பில் செய்ய வேண்டிய வேலையை முடித்து விட்டு தன் நாற்காலியில் சாய்ந்தான்.  இப்பொழுது விக்ரமின் முகம் தெளிவாக அமைதியாக இருந்தது.  வேலையை முடித்து விட்டான் போலும்…!!

 

கதவு தட்டும் சத்தம் கேட்டு , ” எஸ் கம் இன்… ”  என்று விக்ரம் கூற,     “ஐயா ஜூஸ் கொண்டு வர வா?” , என்று பாக்கியம் வந்து நின்றாள்.

 

“வேண்டாம்…. கொஞ்ச நேரத்துல லஞ்ச் சாப்பிடுறேன்.. ” , என்று கூறிக் கொண்டே , தன் நாற்காலியில் இருந்து எழுந்தான். 

 

 எசி அறை கண்ணாடி ஜன்னல் வழியாக சாலையை பார்க்க…, அங்கு டிராபிக் சிக்னல் தெரிந்தது.. அவன் முகத்தில் சின்ன புன்னகை தவழ்ந்தது. 

 

            திவ்யா கூறியது நினைவுக்கு வந்தது..

 “சிவப்பு நிறத்தை பார்த்தால் ஓடுவதும், பச்சை நிறத்தை பார்த்தால் நிற்பதும் யார்? எப்பொழுது?,, உண்மையில் இது விடுகதை தானா இல்லை எதாவது உளறினாளா? ” , என்று விக்ரம் யோசித்தான்.

 

கண்ணாடி வழியாக பார்த்தால், அங்கு ஒரு ஹோட்டல் தெரிகிறது. அங்கு திவ்யா, மனோஜ், நவீன் , ஸ்வாதி அவர்களுடன் ஒல்லியாக உயரமாக ஒருவன் நுழைவதும் நமக்கு தெரிகிறது. அவன் தான் ஸ்வாதியின் would be நந்தன் போல் தெரிகிறது..

   அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்றறிய , நாமும் அந்த ஹோட்டலுக்கு செல்லுவோம்.

 

ஹோட்டலுக்குள் நுழைந்தால், சாம்பாரின் மணம் நம் மூக்கை துளைக்கிறது. பலர் FULL மீல்ஸை ஒரு கட்டுகட்டிக் கொண்டிருக்க , சிலர் சப்பாத்தி , நூடுல்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்…

 

ஆறு நாற்காலிகள் கொண்ட மேஜையில், திவ்யா, மனோஜ், நவீன் , ஸ்வாதி மற்றும் நந்தன் அமர்ந்திருக்க  ஒரு நாற்காலி காலியாக இருக்கிறது.. அது நமக்கு தான் போலும்.

 

                   இவர்கள் எதுவும் பேசவில்லை.

 

அனைவரும் மீல்ஸ் சாப்பிட , ஸ்வாதி மட்டும்  நூடுல்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

 

      அனைவரும் தயங்கிய படியே அமைதியாக இருக்க ” எதுக்கு என்னை பார்க்கனுமுனு  வர சொன்னீங்க?” , என்று முதலில் ஆரம்பித்தான், நந்தன்.

 

“நிஜம் பத்திரிக்கையில, சில வருடங்களுக்கு முன் கூவம் நதிக்கரை மக்களை பற்றி பேட்டி எடுத்து இருக்காங்க..  அந்த பேட்டி உங்க பத்திரிகைல வெளி வந்திருக்கு.. வருஷம் , தேதி எல்லாம் எங்க கிட்ட இருக்கு.. அந்த பத்திரிக்கை எங்களுக்கு வேணும்.. கிடைச்சா ரொம்ப உதவியா இருக்கும் ” , என்று கேட்டாள் திவ்யா.

 

“அப்ப, இந்த மாதிரி soft copy லாம் கிடையாது. எல்லாமே hard copies தான்”, என்று யோசித்த நந்தன் , ” இப்ப எதுக்கு அது..? ” , என்று கேட்டான்.

 

“அந்த பேட்டி பாதியில் நின்னு போயிருக்கு…. நாங்க பண்ற “industrial wastage project” க்கு கொஞ்சம் டீடெயில்ஸ் வேணும்…”, என்று மனோஜ் தயங்கியபடியே கூற, ” பார்க்கலாம் … ட்ரை பண்றேன்…” , என்று நந்தன் கூறினான்.

 

“அந்த பேட்டியை எடுத்த நிருபர், ரெண்டு நாள்ல இறந்துட்டாராம் … ” , என்று ஸ்வாதி கூற, நந்தன் அதிர்ச்சி அடைந்தான்.  மற்ற மூவரும் மனதுக்குள் நொந்து கொண்டனர்.

 

“எதோ வில்லங்கம் இருக்குதா இதுல…? என்னால முடியாது..” , என்று நந்தன் கூற, “அப்படிலாம் எதுவும் இல்லை “, என்று மனோஜ் கூறினான்.

 

“அப்படினா,  இந்த விஷயத்தையும் முதலிலேயே சொல்லிருக்க வேண்டியது தானே….” , என்று நந்தன் கோபப்பட, “என்ன சொல்வது என்று மனோஜும், திவ்யாவும் யோசிக்க, ” எங்களுக்கு அது அவ்வளவு முக்கியமுன்னு தோணல..  பேட்டி எடுத்துக்கிட்டு இருந்த நிருபர் எதேச்சலா விபத்துல இறந்துட்டார்… அவ்வளவு தான் “, என்று நவீன் கூறியது நந்தனை ஆசுவாசப்படுத்தியது.

 

நந்தன்  யோசித்தான்.

 

“ப்ளீஸ் நந்து..  கொஞ்சம் உதவி பண்ணு… அந்த மக்கள் ரொம்ப கஷ்டப்படுறாங்க.. நீயும் உன் வாழ்க்கையில நல்லது பண்ண மாதிரி இருக்கும்.” , என்று ஸ்வாதி கெஞ்சலாக கொஞ்ச “சரி” என்று தலை அசைத்தான் நந்தன்.

 

 “அரை லூசு இல்ல…  தெளிவு தான் “, என்று ஸ்வாதியை மனதுக்குள் பாராட்டினான் நவீன்.

 

“எனக்கு ஒரு ரெண்டு நாள் டைம் குடுங்க… நான் நாளைக்கே முடிக்க ட்ரை பண்றேன்.. “, என்று  கூறினான் நந்தன்.  

 

அனைவரும் பேசி முடித்துவிட்டு அவர்களது வேலையை பார்க்க கிளம்பினர். 

 

இவர்கள் அனைவரும் என்ன செய்யலாம் என்று யோசிக்க , வேலையோடு செல்லும் நந்தனை நாம் பின் தொடர்வோம்.

 

தன் அலுவலகத்திற்கு சென்ற நந்தன் தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்.

 

அவன் அருகே  சால்ட் அண்ட் பேப்பர் லுக்கில் மூக்கு கண்ணாடியோடு அமர்ந்திருந்த அந்த சீனியர் ரிப்போர்ட்டர், இவனை உற்று  பார்த்தார்.

 

“என்ன தம்பி? , பயங்கர யோசனை போல் தெரிகிறதே ….” , என்று வினவினார்.

 

“சார்.. உங்கள பத்தி தான் …. ” , என்று நந்தன் கூற,

 

“இவன் என்ன கதை விடறான்… இவனுக்கு மொபைல்ல பேசவே நேரம் பத்தாது…   இவன் நம்மள பற்றி என்ன யோசிப்பான் ?” , என்று மனதுக்குள் நினைத்தாலும் ,  “என்னை பற்றி என்ன யோசனை ?” , என்று வினவினார்.

 

“சார்.. உங்க எழுத்து நடை அருமை சார்…. ” , என்று மிக சீரியஸாக கூறினான் நந்தன்.

 

 

“இது என்ன திடீர் பாராட்டு… ” , என்று அவருக்கு தோன்றினாலும் புகழுக்கு மயங்காதவர் உண்டோ…

    

“நாங்கல்லாம் எங்க காலத்துல அவ்வளவு படிச்சோம்….” , என்று கூறிக் கொண்டே , பெரிய பெரிய புத்தங்களை எடுத்து நந்தனிடம் கொடுத்தார்.

 

“இது என்ன கிணறு வெட்ட பூதம் கிளம்புகிறது … “, என்று யோசித்த நந்தன்,  ” சார், புக்ஸ் மாதிரி இல்லாம பழைய ஆர்டிகிள்ஸ் இருக்கா சார்.. இல்லைனா கூட பரவாயில்லை .. நான் தேடி எடுத்துக்குறேன் .. ” , என்று நந்தன் கூறினான்.

“இந்த காலத்து புள்ளைங்களுக்கு ,எல்லாம் உடனே நடக்கணும், இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் மாதிரி கிடைக்கணும்… “, என்று அங்கலாய்த்துக் கொண்டு, ” இப்ப எதுக்கு நேரம் கடத்துற.. இப்ப இருக்கிற வேலைய பாரு…  இந்த புத்தங்களை எல்லாம் படித்து முடி.. அப்புறம் பார்த்துக்கலாம் ” , என்று கூறினார் அந்த சீனியர் ரிப்போர்ட்டர்.

 

“இது வேலைக்கு ஆகாது ” , என்று யோசித்தான் நந்தன்.

 

     இரவு எட்டு மணி வரை காத்திருந்த நந்தன், அனைவரும் சென்று விட, நைட் டூட்டிக்கு ஒரு சிலரே இருக்கே மெதுவாக, இருட்டும் தூசியுமாய்  இருந்த அந்த ஸ்டோர் ரூமுக்கு சென்றான்.

              சிறிது நேரத்தில் , அந்த இருட்டு அவனுக்கு பழகி விட்டது.

 

மொபைல் வெளிச்சத்தில் , ஒவ்வொரு வருடமாய் தேடினான்.  அவர்கள் சொன்ன வருடம் மாதம் கிடைத்து விட்டது. அதிலிருந்த செய்தித்தாள்களை எடுக்கும் பொழுது, யாரோ அந்த அறைக்கு வரும் சத்தம் கேட்டது..

 

நந்தனின் இதய துடிப்பு கூடியது. சுவரோடு ஒன்றி நின்றான். அந்த இருட்டில், அந்த அமைதியில் அவன் இதய துடிப்பு அவனுக்கே கேட்டது.

 

அவர்கள் செல்லும் வரை காத்திருந்தான். சிறிது நேரம் கழித்து அவர்கள்  பேச்சு குரல் கேட்க வில்லை. அவர்கள் சென்று விட்டார்கள் என அறிந்து கொண்டு மீண்டும் தேடி அந்த வார செய்தி தாளை எடுத்தான்.

      யாருக்கும் தெரியாமல் அதை சட்டைக்குள் வைத்து கொண்டு  வெளியே வந்து யாருக்கும் தெரியாதவாறு பத்திர படுத்திக் கொண்டான் .

 

அந்த அலுவலக கேமராவை கண்காணிக்கும் நந்தனின் நண்பனிடம் அந்த “footage” யை  அழிக்கும் படி கூறிவிட்டான்.” நான் தவறு செய்யவில்லை  ஒரு நல்ல காரியத்திற்க்காகத் தான் இதை செய்கிறேன். அந்த பகுதி மக்களுக்கு ஒரு நல்லது நடக்கட்டும்.. ” , என்று தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டான் நந்தன்

 

மறுநாள் காலை 10:00 மணி

               அனைவரும் coffee shop ல் சந்தித்தனர்..

 

              நந்தன் அந்த செய்தித்தாள்களை அவர்களிடம் கொடுத்தான்.

அதை மனோஜும் , நவீனும் ஆர்வமாய் பார்க்க , திவ்யா பதட்டத்துடன் பார்த்து கொண்டிருக்க, ஸ்வாதி நந்தனை பாராட்டினாள்.

 

         சிலரின் வாழ்க்கை

                 பலருக்கு செய்தி

                      இவர்களின் தேடல் தொடரும்…….    

                                              தாகம் தொடரும்…….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!