Akila kannan’s Thaagam 19

Akila kannan’s Thaagam 19

தாகம் – 19

 

“திவ்யாவின் மிரட்டலுக்கு பயப்படுவேனா”,  என்று  சுவாரசியமாக பழைய   கதையை கூற  ஆரம்பித்தான் ரமேஷ்.

 

      ” ஆண்ட்டி!! இவள் எதிர் வீடு, பக்கத்து வீடு , மாடி வீடுன்னு எந்த வீடு வம்பையும் விட மாட்டா.. எல்லாரும் எத்தனை நாள் இவளை சும்மா விடுவாங்க..?” , என்று கூறி விட்டு , “இவன் எந்த கதையைச் சொல்லுவானோ ?” என்று கோபமாக முறைத்து கொண்டிருந்த திவ்யாவை பார்த்து கண் அடித்தான் ரமேஷ்.

 

திவ்யாவை பற்றிய பேச்சு விக்ரமிற்கு கசக்குமா..? விக்ரமும் சுவாரசியமாக கதை கேட்டுக் கொண்டிருந்தான்.

 

       “அத்தை பாவம் தனியா இவளை வளர்த்தாங்க.  தினம் ஒரு பஞ்சாயத்து. “, என்று ரமேஷ் கூற, விக்ரமும், விக்ரமின் தாயும் அவளை புன்னகையோடு பார்த்தனர்.

 

 “இதெல்லாம் இவங்க கேட்டாங்களா?’, என்று மனதில் திவ்யா ரமேஷை திட்டிக் கொண்டிருக்க, எங்கிருந்தோ ஒரு மணி ஓசை கேட்டது.

 

திடீரென்று கேட்ட மணி ஓசையில் அவள்  பதட்ட மடைந்தாள்.

 

” திவ்யா இந்தா தண்ணீ குடி… “, என்று ரமேஷ் அழுத்தமாக கூற,

“பெல் சவுண்ட் எங்கிருந்து வருது?”, என்று கடுப்பாக  திவ்யா கேட்டாள்.

 

“மணி சத்தத்திற்கு ஏன் இவ்வளவு பதட்டப்படற திவ்யா..? நீ எவ்வளவு தைரியமான பொண்ணு..?” , என்று கேட்டார் விக்ரமின் தாயார்.

 

“தைரியம் தான் …. தைரியத்துக்கு ஒரு குறைச்சல்  கிடையாது..” , என்று கூறினான் ரமேஷ்.

 

“இவனுக்கு திவ்யாவின் மேல் இருக்கும் பாசம் எத்தகையது…? ” , என்று ஒரு நொடி யோசித்தான் விக்ரம்.

 

“ஒரு சின்ன சம்பவம் தான் இதற்கு காரணம் ஆண்ட்டி.” , என்று  ரமேஷ் கூற, “அப்படி என்னப்பா நடந்தது..? ” , என்று விக்ரமின் தாயார் வினவினார்.

 

ரமேஷ் தயக்கமாக திவ்யாவை பார்க்க, திவ்யா “ சொல் “ என்பது போல் செய்கை செய்தாள்.

 

” வீட்டுக்கு தெரியாம , ரோட்ல ஐஸ் கிரீம் வாங்கிருக்கா.. அதை பக்கத்துக்கு வீட்டு சின்ன பையன் கேட்ருக்கான்..  இவ குடுக்க மாட்டேன்னு சொல்லிருக்கா… “, என்று கதையை ரமேஷ் நிறுத்தினான்.

 

” எனக்கு ஐஸ் கிரீம் பிடிக்கும். நான் வாங்கிய ஐஸ் கிரீம்.. நான்  ஏன் குடுக்கணும் ஆண்ட்டி…?” , என்று தீவிரமாக  கேட்டாள் திவ்யா.

      

            “அது சரி…” , என்று நினைத்தான் விக்ரம்.

 

“அந்த சின்ன பையன் இவை ஐஸ் கிரீமை பிடுங்கி கீழ போட்டுட்டான்…”, என்று ரமேஷ் கூறும் பொழுது, “ஆண்ட்டி, நீங்களே சொல்லுங்க யார் மேல தப்பு? இவங்க எல்லாரும்  என்னை தான் திட்டுவாங்க..” , என்று திவ்யா கூறினாள்.

 

“சின்ன பையனாக இருந்தாலும் அந்த பையன் மேல் தான் தப்பு.. “, என்று நியாயம் கூறினார் விக்ரமின் தாய்.

 

“ஆண்ட்டி நடந்ததை நீங்க முழுசா கேளுங்க… ” , என்று கூறினான் ரமேஷ்..

 

 

“அந்த சின்ன பையனை கையில கடிக்க ஆரம்பிச்சி விடவே இல்லை.. அந்த ஐஸ் கிரீம் காரர் எவ்வளவோ சொல்லியும் விடாம கடிச்சிகிட்டே இருந்திருக்கா..  அந்த சின்ன பையன்  வழி தாங்காம, இவ  தலையிலே  ஐஸ் கிரீம்  வண்டியில் இருக்கிற மணியை இழுத்து அடிச்சிட்டான்.. தலைல இருந்து ரத்தம் வழிய ஆரம்பிச்சிருச்சு. திவ்யா காதுல கடைசியா கேட்டது அந்த மணி சத்தம் தான். அப்படியே ரத்தத்தை பார்த்து  மயங்கி ஐஸ் கிரீம் பக்கத்திலேயே கீழ விழுந்திட்டா.. அந்த நாளில் இருந்து இன்னக்கி வரைக்கும் மணி சத்தம் கேட்டா டென்ஷன் ஆகிருவா…… ” , என்று கூறி கதையை முடித்தான் ரமேஷ்.

            

“இந்த மொக்கை  flashback க்கு இவ்வளவு buildup ?” , என்று கூறிய விக்ரம்  திவ்யாவை சுவாரசியமாக பார்க்க , விக்ரமின் தாய் சத்தமாக சிரித்தார்.

 

“ஆண்ட்டி , என்னை பார்த்தா உங்களுக்கு சிரிப்பா வருதா..? இவனும் வீட்ல  இருந்தா இப்படி தான் என்னை பார்த்து சிரிப்பான்..வெளிய இருந்தா  தான் நல்லவன் மாதிரி  தண்ணீர்  கொடுப்பான்.. ” , விக்ரமின் தாயிடம் செல்லமாக கோபித்துக் கொண்டாள் திவ்யா.

 

“இவள் எப்படி ஒரே நாளில் அம்மாவோடு இவ்வளவு நெருக்கமானாள்? என்னிடம் மட்டும் தான் சண்டை வளர்ப்பாள் போல… ” , என்று  சிந்தித்தான் விக்ரம்.

 

“குறும்புக்காரி … “, என்று மீண்டும் சிரித்தார் விக்ரமின் அம்மா.

 

“அத்தையால இவளை தனியா பார்க்க முடியாதுனு  முடிவு  பண்ணி தான் அப்பா இவளை கையோட வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டாங்க …” , என்று கூறினான் ரமேஷ்.

 

விக்ரமும், ரமேஷும் மற்றவர்களோடு செல்ல , திவ்யா  அனைவரையும் அவள்  மொபைலில் படம் பிடித்துக் கொண்டிருந்தாள்.

 

           “ஆண்ட்டி போட்டோஸ் பாக்கறீங்களா..? நான் நல்ல போட்டோ எடுப்பேன் ” , என்று கூறிக்கொண்டு  மொபைலை அவரிடம் நீட்டினாள்.

 திவ்யாவின் மொபைலில் அவள் ” screen saver” பார்த்த உடன் விக்ரமின் தாயார்  சற்று அதிர்ச்சி அடைந்து  தலையை பிடித்துக் கொண்டு நாற்காலியில் சாய்ந்தார்.

 

“ரமேஷ், ரமேஷ்….. விக்ரம்…. ” , என்று அலறினாள் திவ்யா. 

 

  திவ்யாவின் குரல் கேட்டு , ரமேஷ் விக்ரம் இருவரும் ஓடி வந்தனர்.

 

“அம்மா… அம்மா.. ” , என்று அழைத்து அவருக்கு தண்ணீர் கொடுத்தான் விக்ரம்.

 

அவர் சற்று தெளிவானதும், “அம்மா என்ன ஆச்சு..?” , என்று விக்ரம் கேட்டான்.

 

“கொஞ்சம் அசதியா இருக்கு.. அவ்வளவு தான் ” , என்று கூறிக் கொண்டே அங்கிருந்த நாற்காலியில் சாய்வாக அமர்ந்தார்.

 

விக்ரமின் புருவங்கள் சுருங்கியது.

 

“ஆண்ட்டிக்கு இப்படி அடிக்கடி தலைவலி  வருமா..? ” , என்று திவ்யா வினவ “எதாவது அதிர்ச்சியான விஷயத்தை பார்த்தா இப்படி நடக்கும் ” , என்று மனதிற்குள் நினைத்து கொண்டே மறுப்பாய் தலை அசைத்தான் விக்ரம்..

 

“அம்மா எதாவது பேசிக்கிட்டு இருந்தாங்களா…?”, என்று விக்ரம் வினவ மறுப்பாய் தலை அசைத்த திவ்யா, ” போட்டோஸ் பாக்கிறதுக்காக என் மொபைலை கொடுத்தேன் ..  எதுவும் பேசலியே.. “, என்று கூறினாள் திவ்யா.

 

“என்ன நடந்திருக்கும்?” , என்று யோசித்தான் விக்ரம்.

 

விக்ரமின் முகத்தில் குழப்பத்தைப் பார்த்த அவன் அம்மா, “விக்ரம்.. ஒன்னும் இல்லை..  வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுத்தா எல்லாம் சரி ஆகிரும்…. கவலை பட வேண்டாம்.. ” , என்று கூறினார்.

 

“சரி” , என்று தலை அசைத்தான் விக்ரம். ஆனால், அவன்  மனமோ “அம்மா எதையோ நினைத்து கவலை படுகிறார்களோ? என்னிடம் மறைகிறார்களோ? ” , என்று நினைத்தது.

 

அனைவரின் கவனத்தை கலைக்கும் விதமாக,

   சட்.. சட்… என்ற சத்தம்…

               வேகமாய் விழுந்தது நீர் துளி…

 

“வீட்டுக்கு கிளம்பலாம்” , என்று அனைவரும் ஒரு மனதாக கிளம்பினர்.

 

 

  “மனிதர்களுக்கு இயற்கையின் பாதிப்பும் அவரவரின் வசதிக்கு ஏற்ப தான்…” , என்று நாம் நினைக்கும் விதமாக காரில் பயணித்தவர்கள் மழையில் நனையாமல் செல்ல,  டூ வீலரில் வந்தவர்கள் நனைந்துக் கொண்டே சென்றனர்.  இவர்களுக்கு இந்த நிலைமை என்றால், தீபாவின் நிலை என்னவாக இருக்கும்..?

 

      அங்கு சென்று பார்ப்போம்.

          

மழை வெளுத்து வாங்கியது. நமக்கு ஒதுங்குவதற்கு இடமே இல்லை. நனைத்தபடியே சென்னை சாலையில் சென்று கொண்டிருக்கிறோம்.

 

       இள வட்டங்கள் மழையை ரசிக்க, தாய்மார்கள் குழந்தைகளை முடிந்தவரை மழையில் நனையாமல் மறைத்துக் கொள்ள, முதியவர்கள் மழையில் நடுங்கியபடியே சென்றனர்.

           சின்ன குழந்தைகள் வேண்டுமென்றே  ஆங்காங்கே தேங்கி கிடக்கும் தண்ணீரில் தோம் தோமென்று மிதித்தனர். அந்த சகதி நம் மேல் பட்டு, நமக்கு கோபம் வர, அந்த குழந்தையின் முகத்தை பார்த்த உடன், நம்  கோபம் மழை நீரோடு கரைந்து விடுகிறது.

 

  தீபா  வீடு அருகில் உள்ள டீக்கடைக்கு வந்துள்ளோம்.”மழைக்காக யாரவது டீ  குடிக்க வருவார்கள் “, என்று டீக்கடைக்காரர் காத்திருப்பது போல் தெரிகிறது.

                    ஆனால், அனைவரும் வீட்டுக்கு அவசர அவசரமாக செல்வது தெரிகிறது.

   டீக்கடைக்கு  ஒட்டிய சந்துக்குள்  சென்றால், தண்ணீர் செல்ல இடம் இல்லாமல் அங்கு தேங்கி கிடந்தது.

 தண்ணீரில் நடந்து , அந்த சந்துக்குள் சென்றால், தேங்கிய தண்ணீருக்குள் கால்களை உள்ளே விடுவதும், வெளியே எடுப்பதுமாக விளையாடி கொண்டிருந்தான் பாண்டி.

 

“தீபா எங்க..?”, என்று நம் மனதிற்குள் கேள்வி எழும்ப, தீபா ஏதோ பாடலை முணுமுணுத்தபடி மழையில் அங்கு இங்கும் ஓடி கொண்டிருக்கிறாள்..

    தீபாவின் அருகே சென்றால், அவள் பாடும்  சினிமா பாடல் நம் காதில் விழுகிறது.

“ டட்டா டட்டா   டடடட்டா  டார டட்டா டடடட்டா

சூ சூ மாரி  சூ சூ மாரி “

                  பாட்டுக்கு ஏற்றார் போல் கைகளை அசைத்துக் கொண்டிருந்தாள்.

 

“என்ன அக்கா ரொம்ப சந்தோசமா இருக்க..? ” , என்று வினவினான் பாண்டி…

    

பாண்டி பேசியது தீபாவின் காதில் விழவில்லை.

 

“என்னது….?” , என்று கத்தினாள் தீபா.

 

“அக்கா ரொம்ப சந்தோசமா இருக்கியா ? ” , என்று கத்தினான் பாண்டி.

 

“ஆமாம்…. மழை பெய்யுதுல…. தண்ணி கஷ்டம் கிடையாது… ” , என்று ஆனந்தமாக மழையில் ஆடியபடியே கூறினாள் தீபா.

 

அவளோடு அவள் வயதை ஒட்டிய பல குழந்தைகள் மழையில் நனைந்த படி விளையாடிக் கொண்டிருந்தனர்.

 

அப்பொழுது அக்கா என்று கத்தினான் பாண்டி.

 

“என்னடா” , என்று தீபா வினவ , “அங்க பாரு..” , என்று கையை நீட்டிய படியே கூறினான் பாண்டி.

 

பாண்டி கை காட்டிய இடத்தில்,  ஒரு பொந்து  இருந்தது. அங்கிருந்து ஒரு சத்தமும் வந்தது. ஆனால் மழையின் சத்தம் அதிகமாக இருப்பதால், அந்த பொந்திலிருந்து வரும் சத்தம் நம் காதை எட்டவில்லை..

 

           அந்த பொந்துக்குள் என்ன இருக்கிறது என்று அங்கிருந்த குழந்தை செல்வங்கள் எல்லாம் ஒன்று கூடி பொந்துக்குள் எட்டி பார்க்க, இரண்டு கண்கள் மட்டும் வெளியே தெரிந்தது..

 

”  ஐயோ..!! “, என்று அலறிக் கொண்டு ஒரு அடி பின்னே நகர்ந்தனர் அந்த மழலை செல்வங்கள்..

 

அங்கிருந்து இரண்டு தவளைகள் வெளியே வர.., அனைத்து    குழந்தைகளும், ” ஹோ.. ” என்று கத்திக் கொண்டு சிரித்த படியே ஓடினர்.

 

“டட்டா டட்டா  தண்ணிகுள்ள

தவளை ரெண்டும் பொந்துகுள்ளே

சூ சூ மாரி “

                       என்று சினிமா பாடலை தொடர்ந்து பாடிய படியே அங்கிருந்து நகர்ந்தாள் தீபா.

 

அந்த மழையில் ஒரு கோழிக்குஞ்சு நடுங்க.., சேவல் ஒன்று வெளியே வருவதும் உள்ளே செல்வதுமாக இருந்தது. அதைப் பார்த்த தீபா, இடது  கையை  தன் இடுப்பில் வைத்துக் கொண்டு வலது கையால் கோழி குஞ்சுகளை தடவிய படியே,

 

“கோழி குஞ்சிக்கு லைட் அடி

சூ சூ மாரி

குசும்பு பண்ணும் சேவல

கொழம்பு வெச்சி முக்கடி

சூ சூ மாரி “

                         என்று தீபா பாடும் பொழுது.. “தீபா… பாண்டி… “, என்ற பாக்கியத்தின் குரல் அவர்கள் காதில் விழுந்தது.

 

“பாண்டி … அம்மா கூப்பிடறாங்க…. ” , என்று பாண்டியனின் கைகளை இழுத்துக் கொண்டு வீட்டை நோக்கி ஓடினாள் தீபா.

 

“ஏய்… தனி ஆளா இருந்து தண்ணி பிடிச்சிக்கிட்டு இருக்கேன்.. கொஞ்சம் கூட இருந்து உதவி பண்ண கூடாதா… மழையை பார்த்த உடனே விளையாட போய்ட்டிங்க? ” , என்று கோபமாக கேட்டாள் பாக்கியம்.

 

“அம்மா இனிமேல் தினமும் மழை பெய்யாதா?” , என்று அப்பாவியாக கேட்டான் பாண்டி.

 

“மழை பெய்யுமா..? பெய்யாதா?” , என்று யோசித்துக் கொண்டிருக்க, மழை  முன்பை விட  வேகமாக பெய்தது.

 

“அம்மா…  வீட்டுக்குள்ள தண்ணியா  இருக்கு… ” , என்று கத்தினான் பாண்டி.

 

 

“உங்க அப்பாவை கூரையை மாத்த சொன்னேன்… அவ்வளவு மழை வராது.. கைல காசு இல்லைனு சொல்லிட்டாரு.. “, என்று புலம்பினாள் பாக்கியம்.

 

வீட்டில் இருக்கும் அனைத்து பொருட்களும் மழை நீரில் நனைய , தன் காசு பொட்டலத்தை எடுத்து பத்திரப்படுத்தினாள் தீபா.

 

“ஏண்டி…..  மசமசன்னு  நிக்காம்மா சாமானை பொட்டலம் கட்டு.. ” , என்று கூறினாள் பாக்கியம்.

 

அனைத்து பொருட்களையும் மூவரும் சாக்கு பை போட்டு மூடினர்.

 

மழை நீர் கூரை வழியாக ஒழுகி, வீட்டுக்குள் தண்ணீர் தேங்க ஆர்மபித்தது.

               தேங்கிய தண்ணீரை வாளியில் எடுத்து, வெளியில் ஊற்றினர்  பாக்கியமும் தீபாவும்.

 

                              மழையில்  ஆர்வமாக விளையாடிய பாண்டி. இப்பொழுது மழை  நிற்குமா  என்று குளிரில் நடுங்கியபடி  வானத்தை பார்த்து கொண்டிருந்தான் .

       

“ஏண்டா  பாண்டி மழையிலே  வெளிய நிக்கற?” , என்று  கேட்டுக் கொண்டே தள்ளு வண்டியோடு வந்தார் ராமசாமி. 

 

“உள்ள இருந்தாலும் மழை பெய்யுது.. வெளியா இருந்தாலும் மழை பெய்யுது.. ” , என்று பாண்டியன் கூற, எதுவும் புரியாமல் வீட்டுக்குள்  பார்த்தார் ராமசாமி.

 

வீடு முழுவதும் தண்ணீர் ஒழுகுவதைப்  பார்த்த ராமசாமிக்கு, பாண்டி கூறியது புரிய, “இன்று இரவு எங்கு படுக்கப் போகிறோம்?”,  என்ற சிந்தனையோடு ராமசாமி நிற்க , அவர் அருகில் அந்த செல்ல பிராணியும்   குளிரில் நடுங்கியபடி நின்றது.

 

        பொருட்களை பத்திரப்படுத்தும் வேலையில்  பாக்கியமும், தீபாவும் மும்முரமாய் இருக்க,  மழை நீரை அண்ணாந்து வாயில் வாங்கிய படியே தன்னுடைய தாகத்தையும் , பசியையும் போக்கிக் கொண்டிருந்தான் பாண்டி.

   நீரில் அடங்கிய தாகம் வேறு எந்த ரூபத்தில் விஸ்வரூபம் எடுக்குமோ..?

 

                               தாகம் தொடரும்……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!