Akila Kannan’s Thaagam 21
Akila Kannan’s Thaagam 21
தாகம் – 21
மழைச் சாரல் சற்று ஓய்ந்திருந்தது…
மொத்த இடங்களும் பசுமையாய் காட்சி அளித்தது. மரங்களிலிருந்து சொட்டு சொட்டாக நீர் வடிந்து கொண்டிருந்தது. அந்த காட்சி மனதிற்கு ரம்மியமாய் காட்சி அளித்தது. இந்த காட்சியை மொபைலில் படம் பிடித்தே ஆக வேண்டும் என்று தோன்ற, விடிந்து விடியாத வேளையில் மாடிக்கு சென்றாள் திவ்யா.
மொத்த சென்னை மாநகரும் பசுமையாய் காட்சி அளித்தது. “இந்த ஊர் எப்போழுதும் இந்த மாதிரி பசுமையா இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும் ” , என்று யோசித்தபடியே புகைப்படம் எடுத்தாள்.
“திவ்யா… இங்க என்ன பண்ற..? எல்லாரும் உன்னை தேடிகிட்டு இருக்காங்க…”, என்று கூறிக்கொண்டே அவள் அருகே வந்தான்.
“ஓ.. போட்டோஸ் எடுத்துட்டு இருக்கியா…? நீ போட்டோ எடுத்திருக்கும் அழகை பார்க்கலாம்…. குடு.. ” , என்று கூறியபடி அவள் மொபைலை வாங்கி பார்த்தான்.
“நாட் பேட்….”, என்று கூறிய ரமேஷ் தன் ஆள்காட்டி விரலை தன் கன்னத்தில் வைத்து யோசித்தான்.
“என்ன யோசிக்கற…? ” , என்று ரமேஷை கூர்ந்து பார்த்த படி கேட்டாள் திவ்யா.
“நீ எடுத்த எந்த கொடுமையான போட்டோவ பார்த்து விக்ரம் அம்மாவுக்கு ஷாக் அடிச்ச மாதிரி தலைவலி வந்துச்சு ?” , என்று தீவிரமான முக பாவனையோடு ரமேஷ் கேட்க, திவ்யாவின் முகம் மாறியது.
திவ்யா சிந்தனையில் ஆழ்ந்தாள்.
அவள் முகத்தின் முன் சொடக்கு போட்டான் ரமேஷ்.
” கோபப்பட்டு சண்டைக்கு வருவேன்னு நினச்சேன்.. ஆனால் நான் சொன்னது உண்மைன்னு இப்படி டக்குனு ஒத்துக்கிட்ட.. ” , என்று மீண்டும் ரமேஷ் திவ்யாவை வம்பிழுக்க, “ம்ச்… நீ வேற “, என்று திவ்யா சலித்துக்கொண்டாள்.
“என்ன ஆச்சு ? ” , என்று ரமேஷ் வினவ, “நீ சொல்றதுல பாதி உண்மை இருக்கு..” , என்று திவ்யா தன் பேச்சை பாதியில் நிறுத்தினாள்.
“நான் பேசினால் அது முழு உண்மை தான்.. ” , என்று ரமேஷ் கூற , அவனை முறைத்து, “நீ இப்ப என் கிட்ட சீரியஸா பேசு … “, என்று திவ்யா சிடுசிடுத்தாள்.
“ஒகே.. சீரியஸ்.. ” , என்று கூறி ரமேஷ் அவள் முகத்தை பார்த்தான்.
“அன்னக்கி ஏன் விக்ரம் அம்மா அப்படி ஷாக் ஆனாங்க? ” , என்று திவ்யா வினவ, “விக்ரம் கிட்ட போன் பண்ணி கேட்போமா..?”, என்று ரமேஷ் கூற, “என்ன நக்கலா ?” , என்று அவனை முறைத்துப் பார்த்தாள்.
“லூசு.. நம்ம வேலைய பார்ப்பியா..? விக்ரமிர்க்கே தெரியுமோ தெரியாதோ..?”, என்று பேச்சு வாக்கில் கூறிக்கொண்டே படி இறங்கினான் ரமேஷ்.
திவ்யா யோசித்துக் கொண்டே நின்றாள்.
“யோசிச்சது போதும்… கீழ வா.. ஷாப்பிங் போகணும்.. ” , என்று ரமேஷ் கூற, யோசனையை பின்னுக்கு தள்ளி விட்டு ரமேஷை பின் தொடர்ந்தாள் திவ்யா.
” ஒரு நாள்ல எப்படி டா பேக் பண்ணுவ?” , என்று வாசித்து முடித்த பேப்பரை மடித்த படி கேட்டார் ஷண்முகம்.
“ஏற்கனவே பிளான் பண்ணதுதானே.. கொஞ்சம் தான் ஷாப்பிங் பண்ணனும். இன்னக்கி பண்ணிரலாம்…. “, என்று காபி கோப்பையை
கையில் பிடித்தபடியே பேசினான் ரமேஷ்.
“ஊருக்கு போறதுக்கு முன்னாடி கோவிலுக்கு போகணும்…. கோவிலுக்கு போயிட்டு ஷாப்பிங் போங்க..” , என்று கிச்சனில் சப்பாத்தி போட்டுக் கொண்டே சத்தமாக பேசினார் ரமேஷின் தாயார்.
“எங்க தங்குவீங்க ரமேஷ்…?”, என்று திவ்யா வினவ, “எல்லாம் விக்ரம் பார்த்துப்பார்… நீ சீக்கிரம் கிளம்பு….. “, என்று ரமேஷ் கூறினான்.
இருவரும் கோவிலுக்கு கிளம்பினர்.
“கோவிலுக்கு போயிட்டு, அப்படியே ஷாப்பிங் முடிச்சிட்டு வருவோம்..”, என்று ரமேஷ் கூற, “கோவில்ல இருந்து வீட்டுக்கு வந்துட்டு ஷாப்பிங் போகலாமே” , என்று புஷ்பா கூறினாள்.
“இப்படி எதாவது சொன்னா, கோவில் போறதையே கேன்சல் பண்ணிருவேன் ‘, என்று திவ்யா மிரட்ட, “நேரம் இருக்காது அத்தை”, என்று கூறிவிட்டு இருவரும் கிளம்பினர்.
“பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க..”, என்று ஷண்முகம் மீண்டும் மீண்டும் அறிவுறுத்தி அனுப்பினார்.
“எந்த கோவிலுக்கு போகலாம் ?” , என்று ரமேஷ் கேட்க, “உங்க ஆபீஸ்க்கு எதிர் பக்கமா ஒரு அம்மன் கோவில் இருக்கும்… அங்க போகலாம் “, என்று திவ்யா கூறினாள்.
“எங்க ஆபீஸ் பக்கத்துல, என்ன இருக்குனு , என்னை விட உனக்கு தான் நல்லா தெரியுது.. ” , என்று நக்கல் அடித்தான் ரமேஷ்.
ரமேஷின் பைக் விக்ரம் ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரிக்கு எதிர்ப்பக்கம் இருக்கும் அம்மன் கோவில் முன் நின்றது.
இருவரும் அம்மனை தரிசித்து விட்டு, கிளம்பும் பொழுது, “இந்த டீக்கடைல தேன்மிட்டாய் நல்லா இருக்கும் வாங்கி குடு..” , என்று திவ்யா கேட்க , ” இப்ப தானே சப்பாத்தி சாப்பிட்ட ?”, என்று நொந்து கொண்டே கடைக்கு சென்றான்.
“தண்ணி எடுத்துட்டு வரலை.. ரெண்டு பாட்டில் தண்ணி வாங்கிக்கோ …” , என்று திவ்யா சத்தமாக கூறினாள்
“சரி”, என்று தலை அசைத்துக் கொண்டு , ” தேன்மிட்டாயும், ரெண்டு பாட்டில் தண்ணீரும் குடுங்க..” , என்று கேட்டான் ரமேஷ்.
“தம்பி தண்ணி ஒரு பாட்டில் தான் இருக்கு.. நம்ம பொழப்பு டீ தான்.. வெயில் காலத்துல மட்டும் தான் தண்ணீர் பாட்டில் வாங்கி வைக்கிறது… எல்லாம் வித்து போச்சு.. இது தான் கடைசி பாட்டில்..” , என்று தேன்மிட்டாயையும், தண்ணீர் பாட்டிலையும் கொடுத்துக் கொண்டே கூறினார் டீக்கடைக்காரர்.
இருவரும் ஷாப்பிங் செல்ல, நாம் தீபாவின் வீட்டுக்கு செல்வோம்.
ஞாயிற்று கிழமை :
பாக்கியம், தீபா, பாண்டி அனைவரும் வீட்டில் இருந்தனர். ராமசாமிக்கு விடுமுறை இல்லை போலும்….!!!
பாக்கியம் வீட்டிலிருந்து தண்ணீரை பாத்திரத்தில் அள்ளி வெளியே தீபாவிடம் கொடுத்தாள். தீபா அந்த தண்ணீரை அங்கு தேங்கியிருந்த குட்டையில் ஊற்றினாள்.
பாண்டி அங்குள்ள குழந்தைகளோடு தண்ணீரில் கப்பல் விட்டுக் கொண்டிருந்தான்.
பாண்டிக்கு பந்தயம் கட்டும் பழக்கம் இன்னும் மாறவில்லை. “உன் கப்பல் முதலில் வருகிறதா இல்லை என் கப்பல் முதலில் வருகிறதா?” , என்று பந்தயம் கட்டிக் கொண்டிருந்தான்.
“நான் காசு தர மாட்டேன் ..” , என்று தீபா பாண்டியை மிரட்டினாள்.
“சரி.. சரி.. காசு கேட்க மாட்டேன் .. ” என்று சலிப்பாக கூறிக் கொண்டு கப்பல் செய்து கொண்டிருந்தான் பாண்டி.
வீட்டில் இருந்து வெளியே வந்த பாக்கியம் வானத்தை பார்த்து, “இன்னைக்கும் மழை வரும் போல தெரியுதே” , என்று தனக்குள் சொல்லிக் கொண்டே ஏணியில் ஏறி பிளாஸ்டிக் பைகளை வைத்து கூரை மேல் உள்ள ஓட்டைகளை மூடினாள்.
“இதை நேத்தே பண்ணிருக்கலாம்ல ..?” , என்று பாண்டி வினவ, ” மழை பெய்ஞ்சா தானே எங்க ஒழுகுதுனு தெரியும்.. அப்ப தான் ஓட்டையை அடைக்க முடியும்… ” , என்று கூறிக் கொண்டே ஏணி படியிலிருந்து இறங்கினாள் பாக்கியம்.
இன்று மழை பெய்தாலும் வீட்டில் படுத்து தூங்க முடியும் என்ற நம்பிக்கையோடு மற்ற வேலைகளை பார்த்து கொண்டிருந்தனர் பாக்கியம் வீட்டினர்.
நாமும் அதே நம்பிக்கையோடு விக்ரம் US பிசினஸ் ட்ரிப்க்கு தயார் ஆகிவிட்டானா என்று பார்ப்போம்..
விக்ரம் மும்முரமாக பெட்டியில் ஏதோ “documents” எடுத்து வைத்துக் கொண்டிருந்தான். அவ்வப் பொழுது மொபைலில் பேசிக் கொண்டிருந்தான் .
“எந்த “flight ” எந்த “route” ? , என்று விக்ரமின் தாயார் வினவ , “Emirates
Chennai to Dubai —– Dubai to Washington துபாய்ல மூணு மணி நேரம் வெயிட் பண்ற மாதிரி இருக்கும், வாஷிங்டன்ல friend வந்து பிக்கப் பண்ணிப்பான் “, என்று ஒரு file யை பார்த்தபடி கூறினான்.
“விக்ரம் flight எத்தனை மணிக்கு “” ?” , என்று வினவினார் விக்ரமின் தாயார்.
” திங்கட்கிழமை அதிகாலை 12:30 மணிக்கு.. அதாவது இன்னக்கி மிட் நைட் அம்மா “, என்று பெட்டியை அடுக்கி வைத்த படியே கூறினான் விக்ரம்.
“நீ எத்தனை மணிக்கு கிளம்பனும்?” , என்று விக்ரமின் அம்மா கேட்க,
” இன்டர்நேஷனல் ட்ராவல் ரெண்டு மணி நேரத்திற்கு முன்னாடி செக் இன் பண்ணிட்டா கொஞ்சம் டென்ஷன் இல்லாம இருக்கலாம். இங்கேயிருந்து மீனம்பாக்கம் போக ட்ராபிக்ல 2 மணி நேரம் ஆகும்.. இன்னக்கி மழை அதிகமாக வர மாதிரி இருக்கு.. அதனால எட்டு மணிக்கு கிளம்பலாமுன்னு பாக்கறேன்… ” , என்று மூச்சு விடாமல் பேசி முடித்தான் விக்ரம்.
“எப்ப திரும்பி வருவ? ” , என்று விக்ரமின் அம்மா கேட்க, தன் வேலைகளை விட்டுவிட்டு தாயின் முகத்தைப் பார்த்தான் .
நேற்று அவர் சரியாக தூங்கவில்லை என்பது அவரின் கண்களில் தெரிந்தது. “தன்னிடம் மறுத்து விட்டு மனதிற்குள் வருந்தி இருப்பார்”, என்று விக்ரம் புரிந்து கொண்டான்.
அவரை சமாதானம் செய்யும் எண்ணத்தோடு, ” அம்மா.. ஜஸ்ட் 1 வீக்…
நீங்க நேத்து பேசின விஷயத்தை மறந்திருங்க ..” , என்று தன்மையாக கூறினான்.
“நீ மறந்துட்டியா?” , என்று அவர் வினவ, ” மறக்க முயற்சிக்கிறேன் அம்மா.. உங்களுக்கு பிடிக்காத விஷயம் என் வாழ்க்கையில் கிடையாது…”, என்று உறுதியாக கூறினான் விக்ரம்..
“பிடிக்காத விஷயம் இல்லை .. நடக்காத விஷயம் … “, என்று மனதுக்குள் கூறிக் கொண்ட விக்ரமின் தாய் , ” நேரமாச்சு வேலையை பாரு ” , என்று கூறிவிட்டு படி இறங்கி மீன் தொட்டியை தாண்டி ஹாலுக்கு வந்தார்
விக்ரமின் மொபைல் ஒலித்தது .
“சொல்லு ரமேஷ்…” , என்று விக்ரம் கூற,
“…”, ரமேஷ் எதோ கூற ,
” இங்கயும் மழை ரொம்ப அதிகமாக தான் இருக்கு…. நான் என் காரை எடுக்கல , ஒரு டாக்ஸி புக் பண்ணிட்டு உங்க வீட்டுக்கு வந்து உன்னை பிக்அப் பண்றேன்.. சேர்ந்தே ஏர்போர்ட் போய்டலாம்… “, என்று விக்ரம் கூறினான்.
“….. “, ரமேஷ் எதோ கூற,
” பை.. சி யூ சூன்…” , என்று மொபைல் பேச்சை முடித்துவிட்டு டாக்ஸி புக் செய்ய ஆரம்பித்தான் விக்ரம்
மழை வெளுக்க ஆரம்பித்து விட்டது.
எந்த டாக்ஸி டிரைவரும் விமான நிலையம் வரை வருவதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. முன்னூறு ரூபாய் கொடுக்க வேண்டிய இடத்தில் ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் மழையில் மீனம்பாக்கம் வரை செல்ல யாரும் தயாராக இல்லை.
விக்ரம் அவன் கம்பனி காரை வரவழைத்தான்.
விக்ரம் நினைத்தது போல் எட்டு மணிக்கு கிளம்ப முடியவில்லை.
மணி 8:30.” நேரமாச்சோ? ” , என்று விக்ரமின் தாய் வினவ, “அதெல்லாம் ஒரு பிரச்சனை இல்லை அம்மா.. போய்டலாம் … , என்று மழையின் வேகம் அறியாமல் கூறினான்.
கார் வந்ததும் கிளம்பிய விக்ரம் நேராக ரமேஷ் வீட்டிற்கு வந்தடைந்தான். மழையில் ரெய்ன் கோட் போட்டுக் கொண்டு ரமேஷ் வர, மற்றவர்கள் வாசலில் இருந்தபடி கை அசைத்தனர்.
வேகமாக திவ்யா உள்ளே ஓட, “என்னவாக இருக்கும்”, என்று சிந்தித்து கொண்டே ரமேஷ் காரில் ஏறினான். குடையோடு ஓடி வந்த, திவ்யா, “ இப்ப அங்க winter… ரெய்ன் கோட் போட்டதுல, இந்த ஜாக்கெட்டை மறந்துட்ட… இந்த ஜாக்கெட் போட்டுக்கோ.. ” , என்று திவ்யா கூற, “நம்ம கார் தான் , ரெய்ன் கோட்டை கார்ல விட்டுடலாம் .. இந்த ஜாக்கெட்டை கைல வச்சிக்கோ… ” , என்று விக்ரம் கூறினான்.
அப்பொழுது தான் விக்ரமை பார்த்த திவ்யாவுக்கு, “நான் இவனை காதலிக்கிறேனா..? எனக்கு இவனை பிடித்திருக்கிறதா..? “, போன்ற கேள்விகள் தோன்றியது.
விக்ரம் வழக்கமாக செய்வது போல் திவ்யாவை மனதுக்குள் படம் பிடித்துக்கொண்டான். ” என்னால் இவளை மறக்க முடியுமா..?”
விக்ரம் திவ்யாவை ஆழமாகப் பார்த்தான்.
மறக்க நினைப்பதை
மறக்க முடியாமல்
தவிர்க்க நினைப்பதை
தவிர்க்க முடியாமல் தானே வாழ்கிறோம்..
“திவ்யா “, ரமேஷின் குரல் அங்கு நிலவிய மௌனத்தை கலைத்தது.
“எல்லாரையும் பார்த்துக்கோ.. தனியா தெரியாத இடத்துக்கு போகாத… சீக்கிரம் வீட்டிற்கு வந்திரு.. “, என்று கண் அசைத்து விடை பெற்றான் ரமேஷ்.
” என்னை தேடி கண்டுபிடிக்கிறதுக்கு ரெண்டு பேரும் இல்லை.. அதனால எங்கயும் போக மாட்டேன் …. ” , என்று தீவிரமாக திவ்யா கூற இருவரும் சிரித்தனர்.
” ஏர்போர்ட் போன உடனே மெசேஜ் பண்ணு” , என்று திவ்யா கூறும் பொழுதே கார் கிளம்பியது.
திவ்யாவின் நினைவு பின்னுக்கு செல்ல, இருவரும் தாங்கள் செல்லும் மீட்டிங்கை பற்றி பேசினர்.
சில நிமிட பயணத்தின் பின் கார் நின்றது. அங்கு டிராபிக் ஜாம் . என்னவென்று டிரைவர் இறங்கி பார்த்தார்.
” சார்.. மழையால் ரோடு பிளாக் ஆகிடுச்சு.. வேற ரூட் எடுக்கணும்.. ” , என்று கூறிக் காரை ரிவர்ஸ் எடுத்தார் கார் டிரைவர்.
“கண்டிப்பா மீட்டிங் அட்டென்ட் பண்ணனும்.. மல்டி மில்லியன் பிசினெஸ் இது.. போகலைனா பெரிய நஷ்டம் ஆகிரும்…” , என்று தீவிரமாக பேசிய விக்ரமின் முகத்தில் முதல் முறையாக இத்தகைய அதீத பதட்டத்தை பார்த்தான் ரமேஷ்.
தீவிரமான சிந்தனையில் இருந்த விக்ரமை நிகழ் காலத்திற்கு அழைத்து வந்தது ஒரு டிராபிக் போலீசின் குரல்.
“பிரிட்ஜ் பிளாக் ஆகியிருக்கு.. பிரிட்ஜ் வழியாக போக முடியாது.. அந்த வழியா சுத்திட்டு போங்க.. ” , என்று கூறி வேறு ஒரு வழியை தன் வலது கையால் சுட்டி காட்டினார் டிராபிக் போலீஸ்.
விக்ரம் அவன் மொபைலில் மணியை பார்த்தான் .
மணி 10:10
விக்ரம் , ரமேஷ் மீட்டிங்கில் கலந்து கொள்வார்களா..?
அவர்களோடு சேர்ந்து நாம் US சென்று சுற்றி பார்க்கும் வாய்ப்பிருக்கிறதா..?
இயற்கையும் விதியும் விளையாடினால்,
பணமும் பதவியும் தாங்குமா?
தாகம் தொடரும்……