Akila Kannan’s Thaagam 28

Akila Kannan’s Thaagam 28

 

 

தாகம் – 28

 

எங்கும் தண்ணீர்… எதிலும் நீர்த்துளிகள்.

          வானம் விடாமல் அதன் வேலையை செய்து கொண்டிருந்தது….

  அந்த மழை துளிகளின் சத்தத்தை தாண்டி  தீபாவின் அலறல் சத்தம் அங்கிருந்தோரின் காதில் விழுந்தது.

      தூக்கியெறியப்பட்ட தீபா, அங்கு தேங்கியிருந்த குட்டையில் விழுந்தாள். நிதானிக்க முடியாமல் அங்கிருந்த மரக்கட்டையை பிடித்தாள்.  அவள் அருகே செல்ல எல்லோரும் பயந்தனர். அதற்குள் அனைத்து இடங்களிலும் மின்சாரம் துண்டிக்க பட்டது.  எதுவும் பிரச்சனை இல்லை என்றறிந்து சிலர் தீபா அருகே செல்ல, சிலரோ…, “அந்த பொண்ணுக்கு ஆயுசு ஜாஸ்தி… அது தான் உயிர் பொழைச்சிருச்சு… ” , என்று கூறிக் கொண்டே அங்கிருந்து சென்றனர்.  அதற்குள் திவ்யா தீபாவின் அருகே   சென்று  அவளுக்கு உதவினாள்.  தீபாவின் கைகள் சிராய்த்திருந்தது..  “நல்ல வேளை.., அவ்வளவு அடி  படலை…. ” என்று கூறிக் கொண்டே  , தீபாவின் கைகளை பிடித்து அவளை ஒரு கல் மீது அமர வைத்தாள் திவ்யா.  அவளை சற்று நேரம் அமர சொல்லிவிட்டு திவ்யா ரமேஷிற்கு மொபைலில் அழைத்தாள்.

 

விக்ரமின் ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரி:

             விக்ரம் ரமேஷின் அறைக்குள் நுழைய, ரமேஷ்  Laptop ல் மும்முரமாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான். விக்ரமின் கால்அடி சத்தத்தில் நிமிர்ந்த ரமேஷ் ” ஒரு நிமிடம்” , என கூறி வேலையை முடித்து விட்டு விக்ரமிடம் ” Any thing important..?” , என்று வினவ, ரமேஷின் மொபைல் ஒலித்தது..

 

ரமேஷ் மொபைலை silent இல் மாற்றியவாறே விக்ரமிடம் பேசினான்..

 

“அந்த “threatening call number track” பண்ண கேட்டிருந்தேன்.. அவருக்கு கொஞ்சம் உடம்பு சரி இல்லை… ரெண்டு நாளில் பார்த்து சொல்றேன்னு சொல்லிருக்காரு..  திரும்பவும் கால் வந்தா அன்னக்கி மாதிரியே ரிகார்ட் பண்ணனும்.. ” , என்று விக்ரம் கூற ரமேஷின் மொபைல் மீண்டும் ஒலித்தது..

 

ரமேஷ் புருவங்களை உயர்த்தி மொபைலை பார்க்க, “அட்டென்ட் பண்ணி பேசு.. ” , என்று விக்ரம்  கூற, “சொல்லு திவ்யா,…” , என்று ரமேஷ் கூறினான்…

“…….. ” , திவ்யா பேசுவது நமக்கு கேட்க வாய்ப்பில்லை..

ரமேஷ் சற்று பதட்டம் அடைந்தவனாக , “பெரிய பிரச்சனை ஒன்னும் இல்லையே… ? ” , என்று வினவ , திவ்யா நீண்ட நேரமாக பேச,  திவ்யாவிற்கு எதாவது பிரச்சனையாக இருக்குமோ என்று விக்ரமின் இருதயம் வேகமாக துடித்தது.

 

” சரி சரி.. அவங்களை … நான் அனுப்பறேன்.. ” , என்று மொபைல் பேச்சை முடித்தான் ரமேஷ்.

 

விக்ரம் என்னவென்று வினவ, ரமேஷ் விக்ரமிடம் விஷயத்தை கூறிவிட்டு பாக்கியத்தை அழைத்தான்.

 

செய்தியை கேள்விப்பட்ட பாக்கியத்திற்கு, எந்த விபரீதம் இல்லை என்றறிந்தாலும் அவள் பதட்டம் குறையவில்லை.

 

தீபா இருக்கும் இடத்தை கேட்டுக்கொண்டு வேகமாக  நடந்தாள்.

 

தீபாவை சுற்றி இருந்த கூட்டம் இப்பொழுது இல்லை.            பாக்கியத்தை பார்த்த தீபாவின் கண்களில் பயம் தெரிந்தது.  ” இந்த அக்கா இப்படி மாட்டி வுட்டுட்டாங்களே… நானே கம்முனு வூட்டுக்கு போயிருப்பேன்… ” , என்று தனக்கு தானே நொந்து கொண்டாள் தீபா.

 

தீபா அருகே வந்த பாக்கியம், அவளை ஆராய்ந்தாள். கைகளில் சிராய்ப்பு  இருந்தது.. நடந்த  சம்பவத்தால் தீபா  சோர்ந்திருந்தாள். தீபா நன்றாக இருக்கிறாள், என்றறிந்த பாக்கியம் நிம்மதி அடைந்தாலும் அவள் பதட்டம் கோபமாக மாறியது.

         திவ்யாவுக்கு நன்றி தெரிவித்து கொண்டு தீபாவை வீட்டிற்கு அழைத்து சென்றாள்  பாக்கியம்.  வீடு செல்லும் வரை பாக்கியம் தீபாவிடம் எதுவும் பேசவில்லை.

“நாம் இன்று தொலைஞ்சோம்.. இன்னக்கி முழுக்க என்னை இந்த அம்மா திட்டும் “,  என்று மனதிற்குள் புலம்பியபடியே பாக்கியத்துடன் நடந்து சென்றாள் தீபா.

 

              வீட்டுக்கு சென்றால் பாண்டி தூங்கி கொண்டிருந்தான்.      “உனக்கு கொஞ்சமாவது மூளை இருக்கா..? இப்படி தூங்கிற புள்ளய தனியா வுட்டுட்டு  வந்திருக்க?  அப்படி எங்கடி போன..? ” , என்று பாக்கியம் கோபமாக கேட்க, தீபா தலையை குனிந்து கொண்டு பதில் பேசாமல் அமர்ந்திருந்தாள்.

 

” வாயில என்ன வச்சிருக்க..? எதுக்கு வெளிய போன…? ” , என்று மீண்டும் பாக்கியம் கோபமாக கேட்க, ” வாட்டர் பாட்டில்.. ” , என்று தீபா தயக்கத்துடன் ஆரம்பிக்க ,  பாக்கியத்தின் கோபம் உச்சிக்கு சென்று விட்டது..  ” முட்டாள்.. முட்டாள்..  உனக்கு தண்ணி பைத்தியம் தான் பிடிச்சிருக்கு…. இந்த மழைல நீ அவசியம் வாட்டர் பாட்டில் தண்ணி தான் குடிக்கணுமா? ” , என்று பாக்கியம் போட்ட சத்தத்தில், முழித்த பாண்டியன்,  “நானும் இதை தான் சொன்னேன்”, என்று கூற, தீபா  அவனை முறைத்துப் பார்த்தாள்.

 

                தீபாவின் ஆசையும் , ஆதங்கமும் இவர்களுக்கு புரியவில்லை.

 

“அவனை  ஏண்டி  முறைக்கற..? அந்த சின்ன பையனுக்கு இருக்கிற அறிவு கூட உனக்கில்லை..  ” , என்று மீண்டும் ஆரம்பிக்க ,  நடந்த அனைத்தையும் வெளியில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த அலமேலு பாட்டி, “வுடு பாக்கியம்..  சின்ன புள்ள …. எதோ தெரியாம பண்ணிருச்சு…”,  என்று சமாதானம் கூற, வேறு வழி இல்லாமல் பாக்கியம் தீபாவிடம் தன்மையாக பேசினாள்.

 

” இதோ பாரு.. உன்கிட்ட கொடுத்த காசு உனக்கு தான்..   நானே உனக்கு நாளைக்கி வாட்டர் பாட்டில் வாங்கி தாரேன்…”, என்று பாக்கியம் கூற, வாங்கிய ஏச்சு பேச்சுக்களை மறந்து  சந்தோஷமாக தலை அசைத்தாள்  தீபா.

 

 

மழை நின்றபாடில்லை.  மீண்டும் விக்ரம் ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரி  செல்லலாம் என்று எண்ணிய பாக்கியம் மழையின் வேகத்தை பார்த்து அந்த  எண்ணத்தை கை விட்டாள்.

 

                  மழை சற்று அதிகம் தான்.  மழையால் எங்கும் நீர் பெருக்கெடுத்து ஓட  ஆரம்பித்தது.   நாம் சென்னை மாநகரத்தின் நிலைமையை தெரிந்து கொள்ள வேண்டாமா..?

 

                      நீரின் அளவு சற்று உயர்ந்திருந்தது.

 

மணி மாலை நான்கு:

    விக்ரம் ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரியிலிருந்து அனைவரும் வீட்டிற்கு கிளம்ப ஆரம்பித்தனர்.  வெளியில் வந்த அனைவருக்கும் நாம்  இன்று  எப்படி வீட்டிற்கு செல்ல போகிறோம் என்ற எண்ணம் அச்சமாய் மாறியது..

 

              விக்ரம்  காரை எடுத்துக் கொண்டு கிளம்ப, சாலையில் மக்களிடம் பேட்டி எடுத்துக் கொண்டிருந்த திவ்யாவை அழைத்து கொண்டு கிளம்பினான் ரமேஷ்.

 

            சிலர்  ஆட்டோக்காரர்களிடம் ஏதோ கேட்க , “அந்த ஏரியா இடுப்பளவு தண்ணி சார்..ஆட்டோ வராது.. ” , என்று கூற அவர்கள் பேருந்திற்காக காத்திருந்தனர்.

 

” அதோ அங்கு தள்ளு வண்டியோடு  வருகிறார்  ராமசாமி..”  , நாம் அவரை பின் தொடர்வோம்.

                   டீக்கடை சந்து அடையாளம் தெரியாதவாறு  மாறியிருந்தது. மழை நீர் பெருக்கெடுத்து ஓட,  அந்த தண்ணீரில் நடந்து சென்ற ராமசாமி அனைவரும் வீட்டிற்கு வெளியில் மழையில் நின்று கொண்டிருந்ததை பார்த்தார். சந்துக்குள் ஓடும் தண்ணீரின் அளவு  கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து கொண்டிருந்தது. ”இதே நிலை நீடித்தால்,  வீட்டிற்குள் தண்ணி வந்துவிடும். என்ன செய்யலாம்? “, என்று அங்கிருந்தோர் பேசிக்கொண்டிருக்க  , எந்த கவலையும் இல்லாமல் அந்த செல்ல பிராணியோடு தீபாவும் பாண்டியும் விளையாடிக் கொண்டிருந்தனர்.

 

       நேரம் செல்ல செல்ல மழை அதிகரித்தது. நீரின் அளவும் உயர்ந்து கொண்டே வந்தது.

 

    மணி  இரவு 8:30

 

      வாழ்வில் எது வந்தாலும் கடந்து சென்றாக  வேண்டும் அல்லவா..?

 

அதே எண்ணத்தோடு இரவு உணவை முடித்துக் கொண்டு ராமசாமி , பாக்கியம் , தீபா, பாண்டி அனைவரும் படுத்தனர்.

 

சுமார் 9:30 மணிக்கு பாண்டி முனங்க ஆரம்பித்தான்..,  அவன் சத்தத்தை கேட்டு பாண்டியின் நெற்றியில் கை வைத்த பாக்கியம் அதிர்ந்தார்.

 

பாண்டியின் உடல் தீயாய் சுட்டது.  ராமசாமி சட்டையை போட்டுக் கொண்டு அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு செல்ல தயாரானார்.

 

” பாக்கியம், மழையால் வியாபாரம் சரி இல்லை.. காசிருக்கா? ” , என்று கேட்க, ” தார்பாய் ஷீட் போட்டதுல செலவாகிருச்சு ” ,  என்று கூறியபடியே அவள் பணம் வைத்திருக்கும் பையை தேடினாள் பாக்கியம். சில பத்து ரூபாய் பாக்கியத்தின் கையில் கிடைக்க , பாக்கியம் தீபாவின் முகத்தை பார்த்தாள்.

 

     சூழ்நிலையை புரிந்து கொண்டு தீபா, அவள் வைத்திருந்த மொத்த பணத்தையும் கொடுத்தாள்.  “கண்ணு அடுத்த மாசம் கண்டிப்பா வாட்டர் பாட்டில்  வாங்கி தாரேன்..”, என்று தீபாவிடம் தன்மையாக பேசிவிட்டு,

அலமேலு பாட்டியிடம் தீபாவை பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு       பாண்டியை   தோளில் சுமந்து கொண்டு  பாக்கியமும் ராமசாமியும் மருத்துவ மனைக்கு  சென்றனர்.

 

காலையில் கீழே விழுந்த பொழுது கூட,  ஏற்படாத வலி தீபாவுக்கு இப்பொழுது ஏற்பட்டது.  ” நான் என்ன பெரிய வீடு, கார் என்றா கேட்டேன்? ஒரு வாட்டர் பாட்டில்..!!!  இது இத்தனை பெரிய குற்றமா கடவுளே..? ” இந்த கேள்வி தீபாவின் மனதில்  மீண்டும் மீண்டும் எழுந்ததால் ஏமாற்றத்தின் வலி அதிகமாகி அவள் கண்ணில் நீர்  வழிந்து கொண்டே இருந்தது.

 

ஏமாற்றங்களும் வலிகளும் நிறைந்தது தானே வாழ்க்கை..!!!

 

                   பாண்டியின் நிலையை அறிய அரசு மருத்துவமனைக்கு செல்வோம்.

 

     அங்கு பாக்கியமும் , ராமசாமியும் வரிசையில் காத்திருந்தனர். அங்கு பாண்டியைப்  போல் பல குழந்தைகள் காய்ச்சலில்  முனங்கி கொண்டிருந்தனர்.  பிறந்த பச்சிளம் குழந்தை, தவழும் குழந்தை, தத்தி தத்தி நடக்கும் குழந்தை முதல் வயது வாரியாக பல குழந்தைகள் காய்ச்சலிலும் வலியிலும் துடித்து கொண்டிருக்க , பெரியவர்கள் பலரும் சோர்வாக அமர்ந்திருந்தனர்.

 

               இங்கு சில மணி நேரம் ஆகுமென்பதால், நாம் ரமேஷ் , திவ்யா  என்ன செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள, அவர்கள் வீட்டிற்கு செல்வோம்.

      மழையின் காரணமாக ஆட்டோ , ஷேர் ஆட்டோ எதுவும் அவர்கள் பகுதிக்கு செல்ல தயாராக இல்லை.  பேருந்தில் கூட்டம்…  நிற்க கூட இடம் இல்லை. கூட்டத்தின் விளைவாகவும் மழை நீர் வெள்ளமாக ஓடுவதாலும்  பேருந்து ஒரு பக்கமாக சரிந்து  செல்வது போல் காட்சி அளித்தது.  பேருந்தில் இறங்கி தண்ணீரில் நடந்து ரமேஷ் வீட்டிற்கு செல்கிறோம்.  தண்ணீரில்  நடந்து செல்ல சற்று பயமாக இருக்கிறது.  மின்சாரம் தடை செய்து விட்டார்கள். கும்மிருட்டு.. நம் காலில் எதோ ஊர்ந்து செல்வது போல் தெரிகிறது.

 

 

         வேகமாக நடந்து ரமேஷ் வீட்டிற்கு சென்றால் ,  ரமேஷின் அபார்ட்மெண்டில் பெரியவர்களும் , குழந்தைகளும் குடையோடு வெளியே நின்று கொண்டிருந்தனர். குடியிருப்புக்குள்ளும் தண்ணீர் வர ஆரம்பித்திருந்தது .  அப்பொழுது ஒரு கார் சாலையில் செல்ல, கடல் அலை போல், தண்ணீர் அபார்ட்மெண்டுக்குள் வந்து வெளியே சென்றது. அங்கிருந்த குழந்தைகள் அந்த காட்சியை பார்த்து ஆனந்தமாக கை  கொட்டி  சிரிக்க, பெரியவர்கள் கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.

          முதல் தளத்தில்  கூடியிருந்தவர்கள் முகத்தில் பயம் இல்லை என்றாலும் , கவலை இருந்தது. ஆனால்  கீழ் தளத்தில்  குடியிருப்பவர்களின்  முகத்தில் பயமும் கவலையும் சூழ்ந்திருந்தது.

 

“இத்தனை வருஷம் எத்தனையோ மழையை பார்த்திருக்கிறேன்.. ஆனால் இப்படி தண்ணீர்  வந்ததில்லையே” , என்று வருத்தத்தோடு பேசிக் கொண்டிருந்தனர்  ஷண்முகமும், அவர் மனைவியும்.

 

       தண்ணீரின் அளவு  சிறிதுசிறிதாக  ஏறிக் கொண்டிருந்தது..

 

மணி 10: 00

           ரமேஷின் பைக் டயரின் கீழ் பகுதி நீரில் மூழ்க ஆரம்பித்தது. அபார்ட்மெண்ட் இளைஞர்கள் அவர்களது  வண்டியின் ” silencer ” பகுதியை பிளாஸ்டிக் கவரால் மறைத்து இறுக்க கட்டினர்.

 

 

மணி 11: 00

            ரமேஷ் வீட்டின் முதல் படி நீரில் மூழ்கியது.  அந்த நீரில் குப்பைகளும் , பூச்சிகளும் மிதந்தது.

 

மணி 11:15

             இரண்டாம் படியும் தண்ணீரில் மூழ்கியது.  பெரியவர்கள் சோர்வாய்  அமர,  அங்கிருந்த இளைஞர்கள் முகத்தில் பதட்டம் சூழ்ந்தது.

 

“ரமேஷ் வீட்டிற்குள் தண்ணி வந்திரும்னு நினைக்கிறேன்… ” , என்று திவ்யா  மெதுவாக கூற, “எனக்கும் அப்படி தான் தோணுது ” ,  என்று வாசலை பார்த்தபடி கூறினான் ரமேஷ். 

 

                     ரமேஷின் மொபைல் ஒலித்தது. அவன் மொபைலை     speaker ல் ஆன் செய்தான் .

 

“ரமேஷ் , நிலைமை ரொம்ப மோசமா இருக்கிற மாதிரி தெரியுதே..  இண்டஸ்ட்ரி  machine என்ன ஆகுமுன்னு தெரியலை ” , என்று விக்ரம் கூற, ” ஆமாம் விக்ரம்..  இங்கயும் ரொம்ப மோசமா இருக்கு… வாட்டர் லெவல் அதிகமாகிட்டே  இருக்கு” , என்று ரமேஷ் கூற,

 

“நீங்க ” ground floor ” தானே.. இங்க நம்ம வீட்டுக்கு வந்துருங்க… எங்க ஏரியா  கொஞ்சம் பரவாயில்லை ” என்று விக்ரம் கூற, ” இன்னக்கி நைட் நிலைமையை பார்த்துட்டு நாளைக்கி சொல்றேன்… “, என்று மொபைல் பேச்சை முடித்தான் ரமேஷ்.

 

“முடிந்த அளவுக்கு எல்லா சாமானையும் மேல எடுத்து வைப்போம்” , என்று இருவரும் முடிவெடுத்து தரையில் ஒரு பொருள் கூட இல்லாமல் அனைத்து பொருட்களையும்  கட்டில், சோபா மீது எடுத்து வைத்தனர்.

 

மணி 11:30

        ரமேஷ் வீட்டு வாசலை விட தண்ணீரின் அளவு ஒரு இன்ச் கம்மியாக இருந்தது…

 

 இவர்களுடைய நாளைய பொழுது எப்படி இருக்கும்?

இவர்களுக்கே இந்த நிலைமை என்றால், தீபா  வீட்டினரின் நிலை என்ன..?

 

                          நீரோட்டம் தொடரும்……. 

 

                                     தாகம் தொடரும்……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!