Akila Kannan’s Thaagam 29

 

 

தாகம் – 29

 

     மழை நின்றபாடில்லை. யாரும் இந்த அளவு மழையை எதிர்பார்க்கவில்லை.

 

              மழை  மீதிருந்த ஆர்வம் அச்சமாக மாறியிருந்தது.

 

“மழை நின்று விடுமா?”,  என்று அனைவரும் கொட்டும் மழையிலும்  வானத்தை  ஆர்வமாய்  பார்த்தனர்.   வானம் கரு நீலத்தில் காட்சி அளித்தது.  ஒரு நட்சத்திரம் கூட வானத்தில் காட்சி அளிக்கவில்லை. “இன்னும் மழை வெளுக்கும்”,  என்று எண்பது வயது மதிக்க தக்க தாத்தா அவர் அனுபவத்தை பறை சாற்றிக் கொண்டிருந்தார்.

 

கண்  இமைக்கும் நேரத்தில், வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து விட்டது. ஷண்முகம்,  அவர் மனைவி  மற்றும்  புஷ்பா கட்டிலில் மீது ஏறி அமர்ந்தனர். “என்ன செய்வது?”, என்றறியாமல் தண்ணீரில் அங்கும் இங்கும் திவ்யாவும் ரமேஷும் நடந்தனர்.

 

               வீட்டுக்குள் வந்த தண்ணீரில் பாம்பு மிதக்க, “வீலென்று” கத்தினாள் திவ்யா.

 

“திவ்யா பதட்டப்படாத… அது தண்ணி பாம்பு தான் .. ஒன்னும் பண்ணாது..”, என்று ரமேஷ் பொறுமையாக கூற, ரமேஷின் கைகளை இறுக பிடித்துக் கொண்டாள் திவ்யா.

 

 

மணி 12:00

 

      வீட்டுக்குள்ளும்  தண்ணீரின் அளவு ஏறிக் கொண்டே இருக்க,  முதல் தளத்தில் வசிப்பவர்கள்  Ground  floorல்  வசிப்பவர்களை  அவர்கள் வீட்டிற்கு அழைத்து செல்ல, அனைவரும் முதல் மாடிக்கு குடியேறினர். திவ்யா அவள் கேமராவை கையில் எடுத்துக் கொள்ள, ரமேஷிற்கு  கோபம் தலைக்கேறியது.

 

“இப்பவும் உனக்கு உன் வேலை தான் முக்கியமா?” , என்று கோபப்பட, “இல்லை” என்று தலை அசைத்த திவ்யா, “நாளைக்கி இதுல என்னென்ன  சாமான்  எப்படி இருக்குமோ தெரியல…  மத்ததெல்லாம் இங்க வாங்கினது தான்…  திரும்பவும் வாங்கிக்கலாம்.. கேமரால தண்ணி பட்டிருச்சுனா…  ஒர்க் ஆகாதுல.. ” , என்று திவ்யா தீவிரமாக கூற, தலையில் அடித்துக் கொண்டு படியேறினான் ரமேஷ்.

 

அனைவருக்கும் அது உறக்கமில்லா இரவாக அமைந்தது.

 

முதல் தளத்தில் நின்று கொண்டு இளைஞர்கள் தண்ணீரின் அளவை கண்காணித்து கொண்டே இருந்தனர்.. அவர்களால் கண்காணிக்க மட்டும் தானே முடியும்… பெரியவர்கள் மழையையும் தண்ணீரையும் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்…  

 

        இரவு முழுக்க மழை ஓயாமல் பெய்ய, இவர்களும் வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருந்தனர்.

 

  ரமேஷின்  மொபைல் ஒலித்தது.

 

“சொல்லு விக்ரம்” , என்று ரமேஷ் கூற, ” டிவில  உங்க ஏரியாவை பயங்கர மோசமா காட்டிட்டு இருங்காங்க … எல்லாரும் எப்படி  இருக்கீங்க..? ” என்று விக்ரம் பதட்டத்தோடு வினவ,  ரமேஷ் அங்குள்ள நிலைமையை எடுத்துரைத்தான் .

 

 

“அப்பவே இங்க வந்திருக்கலாம். ” , என்று விக்ரம் கூற, ” இவ்வளவு மோசம் ஆகுமுன்னு நாங்க நினைக்கல… நாங்க  நாளைக்கி   காலைல அங்க தான் வருவோம்….” , என்று கூறி மொபைல் பேச்சை முடித்தான் ரமேஷ்.

 

மறுநாள்  காலை மணி 8:00

 

           மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. முதல் தளத்தில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்றாக கூடி அந்த அபார்ட்மெண்டில்  வசிப்பவர்கள் அனைவருக்கும்  சுட சுட ருசியான பொங்கலும் , பாசிப்பருப்பு   சாம்பாரும்   காலை உணவாக கொடுத்தனர். 

 

     அவர்களுக்கு ஒரு நம்பிக்கை துணிவோடு ஒற்றுமையாக எதிர்கொண்டால் இந்த நிலையை சமாளித்து விடலாம் என்று…. ஆனால் இயற்கை நினைத்ததென்ன..?   

 

 

            மழை சாரல் இன்னும் அதன் வேலையை  பார்த்துக் கொண்டு  தான்  இருந்தது. அனைவரும் கீழ் தளத்தில் உள்ள அவர்கள்   வீட்டின்  நிலைமையை பார்க்க  சென்றனர்.   வீட்டுக்குள் நீரோடு குப்பையும் குவிந்திருந்தது. 

 

      பல பொருள் சேதம்.. என்ன செய்வது ? எப்பொழுது தண்ணீர் வடியும் என்று அவர்கள் யோசித்துக் கொண்டிருக்க,  ஒரு படகு  வந்தது.

 

படகோட்டி சொன்ன செய்தி..

 

”  மழை நீடிக்கும்….. எல்லாரும் முக்கியமான பொருட்களை எடுத்துக் கொண்டு படகுல ஏறுங்க…வேற ஏரியாவுக்கு போங்க…  ” , என்று கூறிவிட்டு , விசில்  சத்தம் செய்து கொண்டே செல்ல,  அனைவரும் சில துணிமணிகளோடும், கையிலிருந்த பணத்தை எடுத்துக் கொண்டும் கிளம்பினர்.

 

” எங்கு செல்ல  போகிறோம் …” , என்றறியாமல்   படகில் ஒவ்வொருவராக  ஏறி அந்த பகுதியை விட்டு வெளியேறினர்.

 

அம்மா வீடு,  அத்தை வீடு, மாமா வீடு, பாட்டி வீடு, சித்தி வீடு , சித்தப்பா வீடு,  ஒன்னுவிட்ட மாமா வீடு , காலேஜ் நண்பன் வீடு.., என்று அனைத்து சொந்தங்களும் இப்பொழுது நினைவுக்கு வர அந்த ஏரியாவை  விட்டு மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக  வெளியேற ஆரம்பித்தனர்.

 

 இரண்டு பைகளில் சில பொருட்களோடு வெளியே வந்த ஷண்முகம்,

“நம்ம எங்க போறோம்?” , என்று  வினவ, “விக்ரம் வீட்டிற்கு ” , என்று ரமேஷ் திடமாக கூறினான்.

 

” நம்ம ஊருக்கு போவோம்.. இல்லன்னா அண்ணி  ஊருக்கு போவோம்.. நமக்கு என்ன சொந்த பந்தங்கள் இல்லையா..? ” , என்று  புஷ்பா கூற, “அம்மா, பஸ் ..  ரயில் வண்டி எதுவும் ஓடல…  போற வழியெல்லாம்  தண்ணி தான் .. இன்னக்கி சென்னைல  எதாவது ஹோட்டல்ல இருங்க…  நாளைக்கி  சூழ்நிலை பார்த்திட்டு  தான் ஊரை விட்டு கிளம்ப முடியும்….”, என்று ஒருவர் கூறிக் கொண்டே சாலையில்  நடந்து சென்றார்.

 

வந்தோரை வாழ வைக்கும் சென்னையின் நிலை இப்படி ஆகுமென்று  யாரும் நினைத்ததில்லை..

 

” விக்ரம் அவ்வளவு கூப்பிட்டும் போகலைனா  நல்லா இருக்காது அத்தை..”,  என்று ரமேஷ் கூற, வேறு வழி இல்லாமல் புஷ்பா சம்மதிக்க அனைவரும் விக்ரமின் வீட்டிற்கு செல்ல முடிவு எடுத்தனர்.  பெரியவர்கள் படகில் செல்ல, ரமேஷும் , திவ்யாவும் நடந்தே மெயின் ரோட்டிற்கு வந்தனர். இடுப்பளவு தண்ணீர் இருந்தது.

               ரமேஷ் , திவ்யா வசிக்கும் பகுதி  அளவுக்கு மெயின் ரோட்டில் மழைநீர் இல்லை.  ஆட்டோக்களும் , ஷேர் ஆட்டோக்களும் ஓடிக்கொண்டிருந்தது.

 

      ஷேர் ஆட்டோவில் ஏறி  அனைவரும் விக்ரம் வீட்டிற்கு சென்றனர்.

 

விக்ரம் வீடு இருக்கும் சாலையில் தண்ணீர் சிறு ஓடை போல்  ஓடிக்கொண்டிருந்தது..

 

 மழை இன்னும் பெய்து கொன்டு தான் இருந்தது. விக்ரம் அவர்களை வாசலுக்கு வந்து வரவேற்றான்

“உனக்கு தான் காலைல இருந்தே கால் பண்ணிட்டு இருக்கேன்..  சுவிட்ச் ஆப்னு வருது…”  ,  என்று விக்ரம் கூற, “மொபைல்ல சார்ஜ்  இல்லை.. எங்க ஏரியால கரென்ட்டும் இல்லை… ” , என்று ரமேஷ் சலிப்பாக கூறினான்.

 

விக்ரம் வீட்டிற்குள் செல்ல, அந்த வீட்டின் பிரமாண்டம் ஷண்முகத்தையும்,  புஷ்பாவையும் அச்சுறுத்தியது. ரமேஷின் தாய் வீட்டை ஆச்சயரியமாக பார்த்தார்.

     

                            வீட்டிற்குள் படிகள்.. அந்த படி பக்கத்தில் பிரமாண்டமான மீன் தொட்டி, பல விலை உயர்ந்த அலங்கார பொருட்கள்,  வீட்டை ஆர்வமாக  பார்த்தார் ரமேஷின் தாய்.

 

அவர் அறையில் இருந்து வெளியே வந்த விக்ரமின் தாய், அனைவரையும் வரவேற்றார்..

 

” ஏன் புஷ்பா.. நீ எங்களை பார்க்க வரதுக்கு, இவ்வளவு பெரிய மழை வரணுமா..? ” , என்று தோழமையுடன்  கோபித்துக் கொண்டார்.

 

அனைவரும் புஷ்பாவுக்கு சற்று தனிமை கொடுத்து பொதுவாக பேசி கொண்டிருக்க, சிறிது நேரத்தில் இயல்பான மனநிலைக்கு புஷ்பா வந்துவிட அனைவரும் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தனர்.  அனைவருக்கும் குடிப்பதற்கு பழச்சாறு கொடுத்தார் விக்ரமின் தாயார்.

 

          பொதுவாக மழையை பற்றி  தான் பேச்சு அதிகமாக   இருந்தது.  அனைவரும்   ஏதேதோ பேசிக் கொண்டிருக்க, திவ்யா மீன்தொட்டி அருகே சென்று மீனோடு பேசி கொண்டிருந்தாள்.

 

மீன் செல்லும் இடமெல்லாம் மீன்களை தொட்டு விளையாடி கொண்டிருந்தாள் திவ்யா.  விக்ரமிற்கு மீன் தொட்டியை யார் தொட்டு

விளையாடினாலும்  கோபம்  வரும், ” விக்ரம் எதாவது சொல்லிவிடுவானோ ” என்று அச்சத்தோடு மீன் தொட்டியையும் , விக்ரமையும், விக்ரமின் தாய்  மாறி  மாறி  பார்க்க அதை பார்வையிலே புரிந்து கொண்ட ரமேஷ், “திவ்யா மீன் தொட்டியை தொடாம பாரு.. ” , என்று கூறினான்.

 

” உனக்கு என்ன பிரச்சனை….  என்னை தொட வேண்டாமுன்னு மீன்கள் சொல்லட்டும், நான் தொட மாட்டேன்…. ” , என்று திவ்யா கோபமாக கூறிவிட்டு மீன்களோடு விளையாட ஆரம்பித்தாள்.  ஏனோ விக்ரமிற்கு கோபம் வரவில்லை, திவ்யா விளையாடுவதை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான்.

 

விக்ரமின் பார்வையை உணர்ந்த  விக்ரமின் தாயார், அவன்  சர்வ நிச்சயமாக  திவ்யாவை  மறக்க மாட்டான் என்று புரிய, ” என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் ” ,  என்று முடிவு செய்து, ” புஷ்பா…,  நான் திவ்யாவை என் வீட்டு மருமகள் ஆக்கிக்கட்டுமா ?” , என்று நிதானமாகவும் , அழுத்தமாகவும் கேட்டார்.

 

புஷ்பா  ஷண்முகத்தை பார்க்க , ” புஷ்பா , உங்க தொடர்பே வேண்டாமுனு வந்திருந்தாலும்,  விக்ரமும் , ரமேஷும் ஏன் நண்பர்கள் ஆகணும்…?  விக்ரமும் , திவ்யாவும் ஏன் சந்திக்கணும்?   இதை விதின்னு  சொல்றதா..? இல்லை திவ்யா அப்பாவோட ஆசைன்னு சொல்றதா ? ” , என்று ஷண்முகம் பேச, ” எதுக்கு சுத்தி வளைச்சி பேசிக்கிட்டு?” , என்று அவரை இடைமறித்த ரமேஷின் தயார் “எங்களுக்கு முழு சம்மதம்…  திவ்யா எனக்கும் பொண்ணு  தான்.. உங்கள மாதிரி சம்மந்தம் கிடைக்க நாங்க ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்.. ” , என்று கூறினாள்.

 

            ஷண்முகமும்  இன்முகத்தோடு ரமேஷின் தாய் கூறுவதை ஆமோதிப்பது போல் தலை அசைத்தார்.” இவர்கள்  பேசுவதை பார்த்தால்,  இவர்களுக்கு ஏற்கனவே இந்த விஷயம் தெரியும் போல் தெரிகிறதே ” , என்று விக்ரம் சிந்திக்க , ” எல்லாம் திவ்யா ஏற்கனவே சொல்லிட்டா .. ” , என்று ரமேஷ் விக்ரமின் காதில் கிசுகிசுத்தான்.

 

  விக்ரம் ஆர்வமாக திவ்யாவை பார்க்க, திவ்யா எதுவும் தெரியாதவள் போல், இன்று அவள் பகுதியில் எடுத்த புகைப்படங்களை தன்  பத்திரிக்கை அலுவலகத்திற்கு அனுப்பிக் கொண்டிருந்தாள். 

 

                 விக்ரமின் வீட்டில் மின்சாரம்  இருந்ததால் , மொபைல், கேமரா,  லேப்டாப்  அனைத்திலும் சார்ஜ் ஏற்றிக் கொண்டிருந்தபடியே அவள் வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள் திவ்யா. மழை இன்னும் வெளுத்துக் கொண்டிருந்தது. யாரும் அலுவலகம் செல்ல வில்லை.

 

                 விக்ரமின் தொலைபேசி ஒலித்தது.

” ஹலோ சித்ரா…. ” , என்று விக்ரம் கூற,

“…….. ” ,  எதிர் பக்கம் பேசுவது நம் காதில் விழ வாய்ப்பில்லை..

“வாட்…? ” , என்று விக்ரம் அதிர்ந்து கேட்க ,

“……………….” , எதிர்பக்கம் சித்ரா நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்தாள்.

” ஒகே… முடிந்தால் வரேன்… ” , என்று கூறிவிட்டு  விக்ரம் மொபைல் பேச்சை முடித்துக் கொண்டான்.

 

ரமேஷும் , திவ்யாவும் அவன் முகத்தை தீவிரமாக பார்க்க ,

 

” G.K இண்டஸ்ட்ரீஸ் கோதண்டராமன் இறந்துட்டார் … ” , என்று விக்ரம் கூற, ரமேஷும் திவ்யாவும்  அதிர்ச்சியாய் பார்க்க, “ஹார்ட் அட்டாக்..  எல்லாம் கருப்பு பணம் போல.. basement ல வச்சிருக்காரு.. நேத்து வீட்டுக்குள்ள தண்ணி போனதுல, எல்லாம் நாஸ்தி.. அதிர்ச்சில ராத்திரி படுத்தவரு தான் காலைல எழுந்திருக்கவே இல்லை… ” . ,  என்று விக்ரம் கூற, “நாம போகணும் தானே ..?” , என்று ரமேஷ் வினவ, ” நானும் கூட வருவேன் … ” , என்று திவ்யா கூறினாள்.

 

“யாரும் போக வேண்டாம் , இன்னும் மழை விட்ட பாடில்லை” ,  என்று விக்ரமின் தாயார் அழுத்தமாக கூற, விக்ரமும் ரமேஷும் திவ்யாவை முறைத்தனர்.

 

மழையின் காரணத்தால் வேலைக்காரர்கள் வரவில்லை.   பெண்கள் சமைத்து  கொண்டிருந்தனர். ஷண்முகம் தொலைக்காட்சியில் செய்திகள் பார்த்துக் கொண்டிருக்க, விக்ரம், ரமேஷ், திவ்யா மூவரும் பேசிக்கொண்டிருந்தனர்.

 

        தொலைக்காட்சியில்  வந்த செய்தி அவர்கள் அனைவரையும் பீதியில் ஆழ்த்தியது.

 

” ஏரிகள்  உடையும் அபாயம் உள்ளதால், ஏரிகளை திறந்து  விட அரசு முடிவு செய்துள்ளது… “

 

“ஏரியை திறந்து விட்டா,  தண்ணீர்  எந்த பக்கம் வரும்னு கணிக்க முடியாது… ” , என்று விக்ரம் யோசனையாக கூற, ” எது நடக்கணும்னு  இருக்குதோ அது தான் நடக்கும்..” , என்று திவ்யா சித்தாந்தம் பேசினாள்.

 

” விக்ரம், எதுக்கும் bread,  jam  , பழங்கள் , வாட்டர் கேன்  வாங்கிட்டு வந்திரு” , என்று விக்ரமின்  தாயார் கூற, விக்ரமும் , ரமேஷும் கடைக்கு கிளம்பினர் .  வேண்டாம் என்று அனைவரும் தடுத்தும் திவ்யா அவர்களுடன் சென்றாள்.

 

 

“வாட்டர் கேன் – 200 ரூபாய்..  ரெண்டு கேன் தான் இருக்கு …   ஒரு பாக்கெட் bread  – 70 ரூபாய் ,  பால் ஒரு பாக்கெட் – 80 ரூபாய்.”, என்று கடைக்காரர் கூறிக் கொண்டே போக இவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

“வேணும்னா வாங்குங்க , வேணாமுன்னா   கிளம்புங்க … ” , என்று கடைக்காரர் கறாராக பேச, ” வேணும் குடுங்க … ” , என்று விக்ரம் வேறு வழி இல்லாமல் கூறினான்.  

 

“வேண்டியதை சீக்கிரம் சொல்லுங்க “ , என்று கடைக்காரர் அவசரப்படுத்த, மூவரும் தேவையானதை  வாங்கி கொண்டனர்.

 

அவர்கள் வாங்கிய பொருட்கள்  2000 ரூபாயை தாண்ட , இதை எதிர்பாராத  விக்ரம் கார்டை நீட்ட,  ” சார் , நடப்பை தெரிஞ்சிக்கோங்க.. ATM, CARD MACHINE,  எதுவும் ஒர்க் ஆகலை. துட்டை குடுங்க சார் …” , என்று கடைக்காரர் கூற,   மூவரும் கையிலிருந்த மொத்த ரூபாயையும் போட்டு  பொருட்களை வாங்கி காரில் வைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தனர்.

 

ஏரிகள் திறந்து விட பட்டது.

 

    அனைத்து இடங்களிலும் தண்ணீர் பாய்ந்தோடியது.

 

 ஏரிகள் அபார்ட்மெண்டுகளாய்  மாறி இருக்க,  குளங்கள் எல்லாம் தொலைந்துவிட்டதால் , அனைத்து  வீடுகளுக்குள்ளும்  போக்கிடமில்லாமல்  தண்ணீர்  தஞ்சமடைந்தது.

 

              விக்ரமின் வீடு உயரமாக கட்டப்பட்டதால், வீட்டிற்குள் தண்ணீர் வரவில்லை. ஆனால் அவன் கார் டயர்  தண்ணீரில் மூழ்கி இருந்தது. காருகுள்ளும் தண்ணீர் சென்றிருந்தது.

 

           இப்பொழுது விக்ரம் வீட்டிலும் மின்சாரம் இல்லை..

மொபைலில் சிக்னல் இல்லை. இன்டர்நெட் இல்லை..

 

நான்கு நாட்கள் ஆகியும், இவர்கள் பகுதியில் தண்ணீர் வடியவில்லை… 

மின்சாரம் இல்லாததால் MIXIE, GRINDER, REFRIGIRATOR, MOTOR , எதுவும் வேலை செய்யவில்லை. பாலை பாதுகாக்க முடியவில்லை.  “GREEN TEA, BLACK TEA” குடித்தனர்.  பசியை போக்க ஏதோ எளிமையான சமையல்,  பிரட் ஜாம் , பழங்கள்   என ஒரு வாரம் ஓடியது.

 

மின்சாரம் இல்லாததால் மோட்டார் வேலை செய்யவில்லை.  தொட்டியில் தண்ணீர் காலியாக ஆரம்பித்தது.  ரமேஷும்,  விக்ரமும் தொட்டியின் மூடியை திறந்து வைத்து மழை நீரை சேகரித்தனர்.  சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்தினர்.

 

  இவ்வாறாக,  ஒரு வாரம் கழிந்தது. இவர்கள் பகுதியில் தண்ணீர் சற்று வடிய தொடங்கி இருந்தது.   

 

“ரமேஷ் ஆபீஸ் போய் பார்ப்போம்..” , என்று விக்ரம் கூற, திவ்யாவும் கிளம்பினாள்.

 

“நீ எங்க கிளம்பற?   நாங்களே நடந்து தான் போக போறோம்.. ” , என்று ரமேஷ் கூற, “எனக்கு வேலை இருக்கு.. ” , என்று திவ்யா கூற., ” என்ன வேலை ?” , என்று புஷ்பா  வினவினார்.

 

” அம்மா… பாதிக்கப்பட்ட இடத்தை போட்டோ எடுக்கணும்.. மக்களை பேட்டி காணனும்” , என்று திவ்யா கூற,  “அத்தை நாங்க பாத்துக்கறோம்”, என்று விக்ரம் கூறினான்.

” மாப்பிள்ளையை எதிர்த்து என்ன பேசுவது..” , என்றறியாமல் தாய் முழிக்க , அவளை பார்த்து கண்ணடித்து விட்டு அவர்கள் பின்னே சென்றாள்  திவ்யா..

 

       வண்டி எதுவும் ஓட  வில்லை.. எல்லோரும்  தண்ணீரில் நடந்து கொண்டிருக்க, இவர்களும் அவர்களோடு நடந்தனர்.

 

         தண்ணீரில் நடப்பது, அதுவும் இத்தனை தூரம் நடப்பது கால் வலியை  கொடுத்தாலும்,  அவர்கள் கண்ட காட்சி  அனைத்தையும் மறக்கடிக்க செய்தது..

 

 

             பலர் வீடுகளை இழந்து சாலையில் நின்று கொண்டிருந்தனர்..   வீட்டின் கூரை மற்றும் பல பொருட்கள் , கடையில்  உள்ள பொருட்கள் சாலையில் மிதப்பதை பார்த்த திவ்யா,  “ரமேஷ் நம்ம  வீடு நிலைமை என்ன ஆகிருக்கும்? ” , என்று வினவ ரமேஷ் பதில் ஏதும் கூறாமல் மழை நீரில் நடந்தான்.  சாலையில் ஒருவர், “ எந்த ஏரியா?” ,  என்று வினவ, திவ்யா இடத்தை கூறினாள்.  ” தண்ணி வடிய இன்னும் பத்து நாள் ஆகும் ” , என்று பேசிக்கொண்டே அவர்களோடு நடந்தார்.

 

அவர்கள் அம்மன் கோவில் பக்கம் வந்தனர்.

              அம்பாள்  தண்ணீரில்  மூழ்கி  இருந்தாள்.   டீக்கடை இருந்த சுவடே தெரியவில்லை. கூவ நதிக்கரை  மக்கள் என்ன ஆனார்கள்?  அங்கு யாரும் இல்லையே..?,  என்று திவ்யா அந்த பக்கம் பார்க்க , விக்ரம் அவன் இண்டஸ்ட்ரியின்  நிலையை பார்த்து அதிர்ச்சியில் ஸ்தம்பித்து நிற்க, அப்பொழுது ஒரு நாய்  இறந்தபடி மிதந்து வந்து கொண்டிருந்தது.  அதை பார்த்து திவ்யா சற்று பயந்து போனாள். 

” நம் வீட்டின் நிலை என்னவாக இருக்கும்?” , என்று ரமேஷின் எண்ணம் அவன் வீட்டை  சுற்றி கொண்டிருந்தது.

 

               அந்த நாயை உற்று  பார்த்தால் ,  அது திவ்யாவும் , பாண்டியும் விளையாடிக் கொண்டிருந்த செல்ல பிராணி.

    ஐயோ.. ஐயோ.. அந்த செல்ல பிராணிக்கு இந்த நிலைமை என்றால், தீபா , பாண்டி எங்கே என்று நம் மனம் பதைபதைக்கிறது.

 

நடந்து வந்த களைப்பில் இவர்களுக்கு தாகம் எடுத்தது.. அவர்களை  சுற்றிலும் தண்ணீர்.. ஆனால் குடிப்பதற்கு தண்ணீர் இல்லை.

 

  ஒரு வாரமாக சரியான உணவு இல்லாத காரணத்தினாலும் , நடந்து வந்த களைப்பும் இவர்களுக்கு பசியையும் தாகத்தையும் அதிகப்படுத்தியது.

 

” எங்கயாவது வாட்டர்  பாட்டில்  கிடைக்குமா..? ” , என்று திவ்யா கேட்க,

” ஆயிரம்  ரூபாய்  குடுத்தாலும் கிடைக்காது.. எங்கயும் கடை இல்லை… எல்லாம்  மழை வெள்ளத்தோட போயிருச்சு……”  , என்று ஒரு பெரியவர் கூற,  ”  ரொம்ப தாகமா இருக்கு.. திரும்ப இப்படியே நடந்து எப்படி வீட்டுக்கு போறது ? ” , என்று ரமேஷிடமும் விக்ரமிடமும் திவ்யா சோர்வாக கேட்டாள்.                                     

                     

“நம்ம கம்பெனிக்கு போலாம்…. எங்கயாவது தண்ணீர் கிடைக்குதான்னு பார்ப்போம்… ” , என்று கூறிக் கொண்டு அவளை விக்ரம் ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரிஸ்க்கு அழைத்து சென்றனர் விக்ரமும் ரமேஷும்.

 

தாகத்தால் தவிக்கும்  திவ்யாவுக்கு குடிக்க தண்ணீர் கிடைக்குமா?

 

                                              தாகம் தொடரும்……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!