Akila Kannan’s Thaagam 30 (FINAL)

Akila Kannan’s Thaagam 30 (FINAL)

 

தாகம் – 30

            சூரிய பகவான் அழகாக சிரித்துக் கொண்டே காட்சி அளித்தார்.  இப்பொழுது வானம் தெளிவாக இருந்தது. ஆனால் பூமியில் மழை நீர் வேகமாக ஓடிக் கொண்டு தான் இருந்தது.

 

“என்னால் நடக்க முடியவில்லை. ரொம்ப தாகமா இருக்கு. கண்டிப்பா தண்ணி கிடைக்குமா..? இவ்வளவு தூரம்  நடந்து வந்ததுல  பசியும் வந்திருச்சு.. ” , என்று சோகமாக கேட்டுக் கொண்டே நடந்தாள் திவ்யா.

 

“இதுக்கு தான் மழை தண்ணீர்ல நடக்கிறது கஷ்டம்..  உன்னை வர வேண்டாமுன்னு ரமேஷ் சொன்னான்”, என்று விக்ரம் கூற, ” நானும்  ரமேஷ் வேண்டாமுன்னு சொன்ன உடனே வீட்ல இருக்கலாமுன்னு தான் நினச்சேன்….  நீங்க தான் நான் பாத்துக்கிறேன் அத்தைனு சொல்லி கூட்டிட்டு வந்தீங்க..” , என்று விக்ரமிடம் சண்டைக்கு போனாள்  திவ்யா…

 

               “அப்படியே இவ கேட்டுட்டாலும்… ” , என்று ரமேஷிற்கு தோன்றினாலும், திவ்யாவை பார்க்க பாவமாக இருந்தது. “சரி திவ்யா மெதுவா வா.., எங்கயாவது தண்ணி கிடைக்குதான்னு பார்ப்போம்…. “என்று அன்பாக கூறினான் ரமேஷ்.

 

      “தி கிரேட் இண்டஸ்ட்ரியலிஸ்ட் விக்ரம்.. ஒரு பாட்டில் தண்ணி வாங்கி குடுக்க முடியல…”, என்று திவ்யா விக்ரமை வம்பிழுக்க,  விக்ரம் பதில் கூறுமுன், “அப்புறமா சண்டை போடுங்க.. இப்ப இண்டஸ்ட்ரியை பார்க்க போவோம்… ” , என்று ரமேஷ் கூறிக் கொண்டே மழை நீரில் நடக்க, “ஹாய்  ரமேஷ்…  ” , என்ற  குரல் கேட்டு மூவரும் திரும்பினர். 

 

 

அங்கு சித்ரா நின்று கொண்டிருந்தாள். எந்த வித ஒப்பனையுமின்றி அழகாக இருந்தாள்.

 

“ஹாய்.. ” , என்று ரமேஷ் கூற, “எல்லாரும் இங்க தான் இருக்கீங்களா..? ரமேஷை தான் நான் முதல்ல பார்த்தேன்… உங்க எல்லாரையும் இப்ப தான் பாக்குறேன்….”. என்று சித்ரா கூற, “அது தான் எனக்கு தெரியுமே… ” , என்று திவ்யா முணுமுணுக்க ரமேஷ் திவ்யாவை முறைத்தான்.

 

             “உங்க ஏரியா எப்படி இருக்கு ? “,என்று விக்ரம் வினவ,      “நான் வாழற வீடு, வேலை செய்ற கம்பெனி எல்லாமே தண்ணில மிதக்குது….” , என்று சித்ரா கூறினாள். ” கரண்ட் இல்லை, தண்ணி இல்லை.. மொபைல் சிக்னல் இல்லை .. இன்டர்நெட் இல்லை… நல்ல சாப்பாடு இல்லை… ” , என்று புலம்பிக்கொண்டே  தாகம் பசி என அனைத்தையும் தாண்டி எல்லாரும் விக்ரம் இண்டஸ்ட்ரிக்குள் சென்றனர்.

 

   இண்டஸ்ட்ரி  திறக்கும் நிலைமையில் இல்லை..” தண்ணீர் வடிய இன்னும் ஒரு வாரம் ஆகும் போல தெரிகிறதே … ” , என்று ரமேஷ் கூற, அவனை ஆமோதிப்பது போல் தலை அசைத்தான் விக்ரம்.

 

“இங்கயும் நிறைய நஷ்டம் இருக்கும் போல தெரியுதே…. “, என்று சித்ரா கூற.., மௌனமாக  இருந்தான் விக்ரம்.

 

“இதிலிருந்து நாம் எப்படி மீண்டு வரப் போகிறோம் ?”, என்று திவ்யா வினவ, “வந்து தான் தீர வேண்டும்… ” , என்று விக்ரம் அழுத்தமாக கூறினான்.

 

” கோதண்டராமன் சார் வேற இல்லையே? உங்க ஆபீஸ் நிலைமை எப்படி இருக்கு?” , என்று விக்ரம் வினவ, “அதை தெரிஞ்சிக்க தான்  நான் வந்தேன்… அவர் பொண்ணு தான் டேக் ஓவர் பண்றாங்க போல…… அங்கேயும் எல்லாம் நஷ்டம் தான் … ” , என்று பேசிக்கொண்டே மூவரும் தண்ணீரில் நடந்தனர்.

 

“தனியாகவா வந்த..? ” , என்று விக்ரம் வினவ, “இல்லையில்லை … எல்லாரும் எனக்காக வெய்ட் பண்ணறாங்க .. நான் உங்களை பார்த்த உடனே பேசிட்டு போகலாமுன்னு வந்தேன்.. ” , என்று சித்ரா பேசிக்கொண்டிருக்கும் பொழுது, தண்ணீர் வழுக்கி  திவ்யா நிலை தடுமாறி கீழ விழப்பார்த்தாள்.  திவ்யா கீழே விழாமல் தாங்கி பிடித்தான் விக்ரம். அவன் திவ்யாவின் கைகளை விடாமல் பேசிக் கொண்டிருக்க,  ” நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் செய்துக்க போறீங்கன்னு  கேள்வி

பட்டேன்..”, என்று சித்ரா கூற, அவளை திவ்யா ஆச்சர்யமாக பார்த்தாள்.  

 

திவ்யா, “நாங்களே.. ” , என்று எதோ பேச தொடங்கும் முன் , திவ்யாவின் விரல்களை அழுத்தி அவள் பேச்சை நிறுத்தினான் விக்ரம்.

 

                ரமேஷ் , விக்ரம் இருவரும் அமைதியாக நடந்து வர,      ” கோதண்டராமன் சார், போன வாரமே பேசிக்கிட்டு இருந்ததை நான் கேட்டேன்… ” , என்று சித்ரா தன் தோழர்களிடம் பெருமையாக கூறிக் கொண்டிருக்க, “யார் அந்த “threatening phone call”  மனிதன் “, என்று ரமேஷிற்கும் , விக்ரமிற்கும் தெளிவாக தெரிந்து விட்டது. இனி அவரால் பிரச்சனை இல்லை என்றறிந்து  அந்த விஷயத்திற்கு அத்தோடு முற்றுப்புள்ளி வைத்தான் ரமேஷ்.. ” இந்த விஷயத்தை மீண்டும் ஒரு முறை தெரிந்த நண்பர் மூலம் confirm செய்து கொள்ள வேண்டும் ” , என்று விக்ரம் மனதிற்குள் குறித்துக் கொண்டான்.

 

“தண்ணி இருக்கானு கேளு”, என்று திவ்யா ரமேஷிடம் செய்கை காட்ட,  ரமேஷ் தலை அசைத்து மறுத்து விட்டான்.

     இதை பார்த்த விக்ரம், “சித்ரா உங்க friends யார் கிட்டையாவது தண்ணி இருக்கா? ” , என்று கேட்க.., “இல்லை விக்ரம்… நாங்களும் எங்கயாவது குடிக்க தண்ணி கிடைக்குமான்னு தான் பார்த்திட்டு இருக்கோம்.. “, என்று தலை அசைத்தபடியே கூறினாள்  சித்ரா.

 

 

       சித்ராவை யாரோ அழைக்க, அவர்கள் குரல் கேட்டு  “அப்புறம் மீட் பண்ணலாம்.. பை…. ” , என்று கூறிக்கொண்டு சித்ரா தண்ணீரில் மெதுவாக நடந்து  சென்றாள்.

 

“அந்த பொண்ணு உன்னை பாக்கிற பார்வையே சரி இல்லை.. ” , என்று திவ்யா கூற, “அது இன்னக்கி நேத்து கதை இல்லை.. பல வருஷங்களா  ஓடுது … நம்மாளு தான் ஒதுக்க மாட்டேங்கிறாரு.. ” , என்று விக்ரம் திவ்யாவிடம் கூற, ” ரெண்டு பேருக்கும் பொழுது போகலைனா தனியா போய் சண்டை போடுங்க… எதுக்கு என் கிட்ட ஜோடியா  வம்பு வளர்க்கிறீங்க..?” , என்று ரமேஷ் நக்கலாக கூறிக்கொண்டே மழை நீரில் நடக்க,  அவனை தொடர்ந்து திவ்யாவும் விக்ரமும்  மெதுவாக மழை நீரில் நடந்தனர்.

 

ஆங்காங்கு சென்ற தவளைகள் திவ்யாவை அச்சுறுத்தியது.

“ஆனால் நான் பயப்படுவேனா? ” , என்று மனதில் உறுதியோடு  நடந்தாள்  திவ்யா.

 

“இண்டஸ்ட்ரிக்குள் போகவே முடியலை.. இதுக்கு மேல் என்னால நடக்கவே முடியாது… தண்ணி வேணும்… ” , என்று திவ்யா கூற,

” தண்ணிக்கு எங்க போறது.. வாய்ப்பேயில்லை .. சுத்தி பாரு திவ்யா.. ஒரே  வெள்ளக் காடு …..  இப்ப ஓடுற தண்ணீர்ல யார்  கடையை திறந்து வச்சிருப்பா..? ” , என்று ரமேஷ் பொறுமையாக கேட்டான்.

 

     அவனுக்கும் தொண்டை வறண்டு இருந்தது. “எங்களுக்கும்  தாகம் தான்… ஒரு சொட்டு தண்ணீர் கிடைத்தால் கூட நன்றாக இருக்கும்..நம்மளால என்ன பண்ண முடியும்? ” , என்று விக்ரம் கூறினான்.

அப்பொழுது மக்களை அழைத்து செல்ல இரண்டு படகுகள் வந்தன.

 

” இந்த படகு நம்ம வீடு பக்கம் போகுமானு கேளுங்க..?” , என்று திவ்யா சலிப்பாக கூறினாள்.

 

” கூவம்  நதிக்கரைக்கு போகுது…. தண்ணி இப்ப சுத்தமா ஓடுது ….”, என்று படகோடு வந்த ஒருவர் கூற,   திவ்யாவின் கண்களில் ஆசை தெரிந்தது.

 

” சரி “, என்று தலை அசைத்து படகில் ஏறினான் விக்ரம். விக்ரம் கை  கொடுக்க திவ்யாவும் படகில் ஏறினாள் . படகு தண்ணீரில் அங்கும் இங்கும் அசைய திவ்யா அதை ரசித்தாள். ரமேஷும் படகில் ஏறிக்கொள்ள, படகு அசைந்தாடிய படியே  கிளம்பியது.

 

” அக்கா “, என்று தீபா அழைக்க அப்பொழுது தான் திவ்யா அவர்களை பார்த்தாள்.   தீபாவும் , பாண்டியும், படகில்  அமர்ந்திருந்தனர்.

 

                பாண்டி சோர்வாக அமர்ந்திருக்க, “தம்பிக்கு என்ன ஆச்சு?”, என்று திவ்யா வினவ ,  “ஒரு வாரமா காய்ச்சல் இப்ப கொஞ்சம் பரவால்லை.. எங்க வூட்டாண்ட தண்ணி வடிஞ்சிருச்சானு பார்க்க போறோம்”, என்று தீபா சோகமாக கூறினாள்

 

“உனக்கு கை சரியாகிருச்சா?” , என்று திவ்யா வினவ, ” சின்ன காயம் தான்… சரி ஆகிருச்சு அக்கா… ” , என்று தீபா கூறினாள்.

 

         அன்று தண்ணீருக்காக ஏங்கிய பல  வண்ணக் குடங்கள் இன்று மழை தண்ணீரில் மிதந்து வந்தன. குடங்களோடு  பாத்திரங்கள், பொம்மைகள் என பலவிதமான பொருட்களும் தண்ணீரில்  மிதந்து வந்தன.

” எங்க வூட்ல கூட ஒரு சாமானும் இல்லை .. எல்லாம் தண்ணீரோட போச்சு…. ” , என்று படகில் அமர்ந்த படி  தீபா கூற, “புதுசா வாங்கின தார்பாய் ஷீட் கூட போச்சு” , என்று பாண்டி தண்ணீரில் கை வைத்துக் கொண்டே  சோகமாக கூறினான்.

 

“பக்கத்து வூட்டு அலமேலு ஆயா…  நீங்க கூட பார்த்தீங்களே…? ” , என்று தீபா கூற, திவ்யாவுக்கு அலமேலு பாட்டியை  ஞாபகம் இல்லை.., ஆனாலும் தலை அசைத்து வைத்தாள். “அவங்கள காணும்.. எங்களோட தான் மழை தண்ணீல நடந்து வந்துச்சு … பார்த்தா  பாதியிலே காணும்.. ” , என்று சோகமாக தீபா கூற, பாண்டியோ , “எங்க வூட்டு  நாய் கூட காணும்… அப்படியே தண்ணியில போயிருச்சு … ” , என்று வருத்தத்தோடு கூறினான்.

 

” இப்ப எங்க தங்கியிருக்கீங்க? ” , என்று திவ்யா வினவ, “எங்க பள்ளிக்கூடத்துல தங்கியிருக்கோம்..”, என்று தீபா கூற, ” இவர்கள் வாழ்க்கையை முதலில் இருந்து தொடங்க வேண்டும்… இவர்கள் மட்டும் அல்ல பலரும் தான் … ” , என்று நினைத்துக்  கொண்டாள்  திவ்யா.

 

 

அங்கு நடந்து கொண்டிருந்த பேச்சுக்களை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தனர் ரமேஷும் , விக்ரமும். அவர்கள் கண்ட காட்சி மனதை உலுக்கியது.

 

  மழை நின்றுவிட்டது. ஆனால் ஏற்படுத்திய வலி.

 

திவ்யாவின் எண்ணம் எங்கோ சென்றது..

 

         அள்ளிப் பருக நினைத்த மழை

              அலைகளிக்க வைத்துவிட்டது

        தொழில் நிறைந்த சென்னை

               தொல்லை நிறைந்த சென்னையாக மாறிவிட்டது…

       சிங்கார சென்னை என  தலை நிமிர்ந்த நாங்கள்…

                   எந்த சூழ்நிலையிலும் தலை குனிய மாட்டோம்..

         ஒன்றிணைத்து இயற்கை சீற்றத்தையும் எதிர்த்து போராடுவோம்..

 

               இது அந்த மழை வெள்ளத்தில்  உடமை , தொழில், வாழ்வு  என அனைத்தையும் இழந்த ஒவ்வொருவரின்  குரலாய் ஒலித்து கொண்டிருந்தது.

 

இதை  பார்த்த வானமோ ….

 

                  ” உன் மீது எனக்கென்ன பகை..

                   உங்கள் ஒற்றுமையை கண்டு வியக்கிறேன்…

                   உங்கள் தன்னம்பிக்கையை பாராட்டுகிறேன்….

                   உங்கள் மண் செழிப்பாக வேண்டுமென 

                        பெய்த மழையை  ஏன் திட்டுகிறாய்..?

                   உனக்கு நீர் வளம் தர நினைத்த

                        மேகங்களை   ஏன் திட்டுகிறாய்..?

 

             பிளாஸ்டிக் பாட்டிலும் , பிளாஸ்டிக் கவரும்

                  அடைத்துக் கொண்டு  செல்ல வழி இல்லாமல்

                             தடுமாறுகிறது மழை நீர்… “

என்று மனிதர்களை பார்த்து வானம் பரிதாபமாக சொன்னது…

 

“திவ்யா , என்ன யோசிச்சிட்டு இருக்க? வா கூவம் நதிக்கரையை பார்த்திட்டு போவோம்.. இறங்கு .. ” , என்று விக்ரம்  கூற, திவ்யா இறங்கினாள்.   ரமேஷ் படகோட்டியிடம் ஏதோ பேசிவிட்டு வந்தான்.

தீபாவும், பாண்டியும் இறங்கினர்.

       

        “அரை மணி நேரத்துல வரேன்.. இங்கயே இருங்க ” , என்று கூறிவிட்டு சென்றான் படகோட்டி.

 

 கூவம் நதிக்கரை அத்தனை சுத்தமாக இருந்தது. எந்த குப்பையுமின்றி  சுத்தமாக சல சல வென்று சத்தத்தோடு பாய்ந்தோடி வந்தது கூவம் நதி. நதியின் அழகு அனைவரையும் கவர்ந்தது.

 

ரமேஷ், விக்ரம் , திவ்யா, தீபா, பாண்டி என அனைவரும் கூவம் நதிக்கரையில் நின்று கொண்டு கூவம் நதியை  பார்த்து கொண்டிருந்தனர்.

சாதி மத பேதமின்றி…, வர்க்க பிரிவினை இன்றி இயற்கை அனைவரையும் ஒரு கோட்டில் நிறுத்தி விட்டது..

 

திவ்யாவிற்கு ஆச்சரியம்.. தீபாவின் முகத்தில் எல்லையில்லா மகிழ்ச்சி..

 

” அக்கா நீங்க சொன்ன மாதிரி.. கூவம் நதிக்கரை  சுத்தம் ஆகிருச்சு….  எங்க ஏரியாவையும் சுத்தப் படுத்திரலாம் தானே..? “, என்று தீபா ஆர்வமாக வினவ.. ” கண்டிப்பா பண்ணிரலாம் ” , என்று விக்ரம் தன்னம்பிக்கையோடு கூறினான்.

 

                    விக்ரமை புன்னகையோடு ரமேஷ் பார்க்க, அவனை ஆனந்தம் கலந்த ஆச்சரியத்தோடு  பார்த்தாள்  திவ்யா.

 

                         அப்பொழுது  அங்கு” ட்டர்ர்ர்ர் ” , என்ற சத்தம் கேட்க அனைவரும் திரும்பி பார்த்தனர். பாதுகாப்பு பணிக்காகவும்,  மக்களுக்கு உணவு நீர் கொடுத்து உதவுவதற்காகவும் ஒரு ஹெலிகாப்டர் ரோந்து பணியில் சுற்றிக் கொண்டிருந்தது.

 

ஹெலிகாப்டரில் இருந்து சாப்பாட்டு பொட்டலமும் , தண்ணீர் பாட்டிலும்  கொடுத்தனர்.

 

     அனைவருக்கும் பசி.., தாகம் …

 

       செல்வந்தன் என்ன?  ஏழை என்ன..?

    தாகமும் பசியும் சமம் தானே….!!!!

 

  விக்ரம் , ரமேஷ் , திவ்யா எல்லோரும் சாப்பிட்டுவிட்டு பாட்டிலை திறந்து தண்ணீர் குடித்து அவர்கள் தாகத்தை தீர்த்து கொண்டனர்.

 

   தீபா சாப்பிட்டு முடித்துவிட்டு அந்த வாட்டர் பாட்டிலை கையில் எடுத்தாள்.  அவளுக்காக ஒரு வாட்டர் பாட்டில். அதில் தண்ணீர்  சுத்தமாக இருந்தது. அவள் கண்ணில் சந்தோஷ மின்னல்.  இதற்காக அவள் பட்ட கஷ்டம் என்ன..?

 

அந்த வாட்டர் பாட்டிலை திறந்து கைகளை தூக்கி  அந்த நீரை வாயில்  ஊற்றும் பொழுது அவள் கண்ணில் ஒரு காட்சி படமாக தோன்றியது. இந்த வாட்டர் பாட்டிலால் கூவ நதி  குப்பையாக காட்சி அளித்தது போல் ஒரு பிரமை. தண்ணீரை குடிக்காமல் மூடி வைத்து விட்டாள் தீபா.  “ஏன் அக்கா தண்ணி குடிக்கல?” , என்று பாண்டி வினவ..,  ” இந்த பாட்டில் தான் , நம்ம கூவ நதி குப்பை  ஆனதுக்கு காரணம்…. நமக்கு இந்த பாட்டில் தண்ணி வேண்டாம்டா பாண்டி…  இந்த பிளாஸ்டிக் கவர் வேண்டாம்டா.”, என்று சாப்பாடு பொட்டலம் இருந்த பிளாஸ்டிக் கவரை காட்டினாள்..

 

”  நம்ம கூவம் நதி இத்தனை சுத்தமாக இருந்தால், எனக்கு  எதுக்கு பிளாஸ்டிக் பாட்டில் தண்ணி ? ” , என்று கூறிக்கொண்டு கூவம் நதி தண்ணீரை குடித்தாள்.

 

அவள் பேசுவது எதுவும் புரியாமல், “இனிமேல் நீ வாட்டர் பாட்டில் கேக்கமாட்டியா? ” , என்று பரிதாபமாக கேட்டான் பாண்டி..

 

“மாட்டேன்… “, என்று தலை அசைத்தாள் தீபா.

 

“இவளுக்கு என்ன ஆயிற்று?” என்று எதுவும் புரியாமல் பாண்டி அவளை பார்க்க , அவள் அறிவுக்கு எட்டிய அளவில் தீபா எடுத்த முடிவு , அவள்  பேசியதை கேட்டுக் கொண்டிருந்த விக்ரம் , ரமேஷ் , திவ்யாவிற்கு ஆச்சர்யத்தை கொடுத்தது.

 

“ரமேஷ் .. நாமும் கம்பெனியை இப்ப ” renovate ” பண்ணும் பொழுது , “Industrial waste management ” க்கு ஒரு தனி  டீம் அமைக்கனும். ” , என்று விக்ரம் அழுத்தமாக கூற, ரமேஷ் அவனை ஆமோதிப்பது போல் தலை அசைத்து, ” நம்மால் இந்த கூவ நதி நாசம் அடைய கூடாது…” , என்று தீவிரமாக கூறினான்.   தனி மனிதன் ஒவ்வொருவரும் இந்த சமூகத்தின் மீது அக்கறை கொண்டால், தனி மனிதனின் வாழ்வு செழிக்கும் என திவ்யா நினைத்தாள்.

 

      அவர்கள் நல்வாழ்வு நோக்கி பயணிக்க ஆரம்பித்துவிட்டார்கள்..

 

நாம் என்ன செய்ய போகிறோம் ?

 

இன்று:

 

கடும் மழையிலும்,  வெள்ளத்திலும் , பல உயிர்களை இழந்து சென்னை மீண்டு விட்டது. 

எல்லோரும் பழைய வாழ்வுக்கு திரும்பிவிட்டோம் ….

மறுபடியும் சென்னை போல் வருமா..? என்று பெருமை அடைகிறோம்…

 

         நம் கூவ நதியை நம்மால் காப்பாற்ற முடியுமா..? நம்மால் பிளாஸ்டிக்கை தவிர்க்க முடியுமா..?  நான் என்னிடமே இந்த கேள்வியை ஒவ்வொரு நொடியும் கேட்டுக் கொள்கிறேன்.

 

நீங்கள் ???

 

   பிளாஸ்டிக்கை  தவிர்த்து ,   தண்ணீரை சேமித்து நம் வருங்கால சந்ததியினருக்கு வளம் நிறைந்த பூமியை பரிசளிப்போம்…

 

                தாகம் ஒருநாள் தீரும் என்ற நம்பிக்கையில்

 

                                      முற்றும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!