alaikadal-20

alaikadal-20

இதுவரை : பூங்குழலியின் வலியில் தன் காதலை உணர்ந்த ஆரவ், அவள் மயங்கியதும் அவளை மருத்துவமனை அழைத்துச் செல்வதற்காகத் தூக்கினான்.

அலைகடல் – 20

மயங்கிய பூங்குழலியைக் காரின் பின்னால் கிடத்தியவன், எப்பொழுதும் சற்று இடைவெளியுடன் மற்றுமொரு வாகனத்தில் தன்னைத் தொடரும் பாடிகார்ட்டை அழைத்தான்.

“நான் ராஜா ஹாஸ்பிடல்க்கு போறேன். சீக்கிரம் அங்க விஐபி ரூம் புக் பண்ணுங்க… தென்” சொல்லிக்கொண்டே பாக்கெட்டில் கைவிட்டு உடைந்த போனை வெளியே எடுத்தவன் அதை அவன் கைகளில் கொடுத்து, “இப்போ அவசரமா இதே மாடல் போன் வாங்கி, இந்த சிம் போட்டு என் கையில் தரணும் அண்ட் பழைய போன்ல இருந்து ஒரு டேட்டா கூட மிஸ் ஆகாம எல்லாத்தையும் புதுசுல ஏத்தி பழசை டிஸ்போஸ் பண்ணனும்” கட்டளையிட்டவாறு டிரைவர் சீட்டில் அமர்ந்து காரைக் கிளப்பினான் ஆரவ்.

சென்னை ட்ராபிக்கில் அருகிலிருந்த மருத்துவமனை அடையவே அரைமணி நேரம் பிடித்தது. காரைத் திறந்து வெளியேற முயன்றவனை தடுத்து நிறுத்தினர் ஏற்கனவே அங்கு வந்து நின்ற அவனின் பாதுகாவலர் இருவர். 

அருகில் வீல் சேர் இருக்க, “சார் நாங்க மேடமை அட்மிட் பண்றோம். நீங்க வீட்டுக்கு போங்க… உங்களுக்கு ட்ரீட்மென்ட் பண்ண டாக்டர் ராமை அங்கே வரச்சொல்லிட்டோம்” என்றனர். 

இத்தனை வருடத்தில் பூவேந்தனை தவிர யாரிடமும் நேரிடையாக தொடர்பு வைத்துக்கொள்ளாதவன், பூங்குழலியை ஏந்தி மருத்துவமனை வந்ததே அவள் யாரென உணர்த்த, தானாக அவளுக்கு மரியாதை கொடுத்தனர் அவர்கள்.

“யாரைக்கேட்டு டாக்டரை வீட்டுக்கு அனுப்புனீங்க? நான் ஹாஸ்பிடல்ல தானே இருக்கேன் இங்கேயே பண்ணிக்க மாட்டேனா? வரச் சொல்லுங்க டாக்டர் ராமை” தன்னிஷ்டத்திற்கு செயல்பட முடியாத ஆத்திரத்தில் எரிந்துவிழுந்தான் ஆரவ். 

“சாரி சார். நீங்க இங்க இருக்கீங்கன்னு வெளிய தெரிஞ்சா அதுவும் மேடமோடன்னு தெரிஞ்சா நல்லதில்லை. என்னதான் உங்களை நீங்க மறைச்சாலும் வெளியே வர்றது ரிஸ்க்தான் சார். கார் வேற இங்கிருக்கும் சோ” என்று தயக்கத்தோடு அவனிற்கு புரிய வைத்தனர். 

என்றும் ஆரவ் நிலைமை உணர்ந்து நடந்துக்கொள்வான் என்பதால் இதற்குமுன் இப்படி புரியவைக்க வேண்டிய சந்தர்ப்பம் வந்ததில்லை.

அவர்கள் கூறியதும் பின்னால் திரும்பி மயங்கியிருந்தவளைப் பார்த்தான். பின் மனமேயின்றி, “அட்மிட் பண்ணிருங்க” எனவும் ஒருவன் கார்க்கதவைத் திறந்து அவளைத் தூக்க கைதான் உயர்த்தியிருப்பான், இடையில் என்ன நினைத்தானோ? 

“வெயிட்… நோ நீட். நானே பார்த்துக்குறேன். இதனால என்ன நடந்தாலும் ஐ டோன்ட் கேர்” ஒருவித பிடிவாதத்துடன் முடிவெடுத்துக் கூறினான். 

தன்னிடமிருந்த தொப்பியும் கண்ணாடியும் நடந்த களேபரத்தில் எங்கோ தொலைந்திருக்க, காரில் உபரியாக இருந்த தொப்பியை மட்டும் அணிந்து கண்ணாடியைப் பார்த்தான். 

தாடி பெருமளவு மறைத்தும் தெளிவாய்த் தெரிந்தது முகவடிவம். இதற்குள் ஒருவன் அங்கிருந்த மருந்தகத்தில் முகக்கவசத்தை வாங்கி, “சார்…” என்று நீட்ட, “தேங்க்ஸ்” என்றவாறு அணிந்த பின்பே திருப்தியாய் இறங்கினான்.

இத்தனைக்கும் நகரத்தின் தலைசிறந்த மருத்துவமனைதான் இது. சாமானியர்கள் நுழைவதை நினைத்துக்கூட பார்க்கமுடியாது. முழுக்க முழுக்க பணத்தில் புரள்பவர்க்கு மற்றும் பிரபலங்களுக்குப் பெயர் போனது. ஆனால் அவர்களின் வருகையை அவர்கள் மேல் இருந்த ஆர்வம் கலந்த குறுகுறுப்பு காரணமாக மோப்பம் பிடித்து கதைகட்டி விடுவார்கள் ஊடகத்தினர்.

தான் மட்டும் என்றால் அதைப் பற்றிய கவலையின்றி உள்ளே நுழைந்திருப்பான். இப்போது பூங்குழலியும் இருக்க, முடிந்தளவு தன்னை வெளிப்படுத்தாமலே சென்றான் ஆரவ்.

தங்களுக்கான விஐபி அறையை அடைந்த அடுத்த நிமிடம் அங்கு வந்து சேர்ந்தாள் டாக்டர் அனிதா. டாக்டர் ராமின் சகதர்மினி. அமைதியான கணவனுக்கு நேர்எதிர்… கொஞ்சம் அடாவடியும் கூட. 

ஒருமுறை ராம் வெளிநாடு சென்றிருக்க இவளிடம் சிகிச்சையெடுத்த ஆரவ் அதன்பின் அவளிருக்கும் பக்கமே தலைகாட்டவில்லை. அந்தளவு தன் வாயால் படுத்தி எடுத்திருந்தாள். ஆனால் மருத்துவத்தில் அவளை அடித்துக்கொள்ள ஆளில்லை. அதனால்தான் இந்த குணத்திலும் இந்த மருத்துவமனையில் நிலைத்து நிற்கிறாள். 

வந்ததும் பூங்குழலியைக் கண்டவள், “எங்கே அடிப்பட்டிருக்கு இவங்களுக்கு” என்றவாறு தலையில் காயம் இருக்கிறதா என்று ஆராய்ந்தாள். பின்னே முகத்திலும் நெற்றியிலும் இரத்தம் உறைந்து மயங்கியிருந்தால் அவளிடம் தானே காயத்தை தேட முடியும்?

“அவங்களுக்கு மயக்கம்தான் டாக்டர்… அடியெல்லாம் இல்லை” என்ற ஆரவ்வை நிமிர்ந்து பார்த்தாள் அனிதா. கண்களைத் தவிர வேறெதுவும் தெரியவில்லை ஆனால் அணிந்திருந்த தொப்பியையும் மீறி வெளியே தெரிந்தது நெற்றியோரம் இருந்த காயம்.

“உங்களுக்குதான் அடிப்பட்டிருக்கா மிஸ்டர்? எப்படி அடிப்பட்டது? சிஸ்டர் நீங்க இவரைப்பாருங்க” என்றுவிட்டு பூங்குழலியை கவனிக்க ஆரம்பித்தாள்.

“ஆக்சிடென்ட்” என்று முனுமுனுத்தவாறு எதிரே இருந்த குஷனில் அமர்ந்தான் ஆரவ்.

“ஆக்சிடென்ட்டா?” குரலே தான் நம்பவில்லை என்று கூறியது. கூரான பொருள் கிழித்து ஏற்பட்ட காயத்தை ஆக்சிடென்ட் என்றால் நம்பிவிடுவாளா? 

தொப்பியை மட்டும் அகற்றியவன் மறந்தும் முககவசத்தை அகற்றவேயில்லை. அதற்கே எங்கோ பார்த்தாற்போல் இருக்கிறதே என்று ட்ரெஸ்ஸிங் செய்த செவிலியர்க்குத் தோன்றியது.

பூங்குழலியின் கண்களை சோதித்து முடித்தவள் இவனிடம் திரும்பி, “அடி ரொம்ப பலமோ?” என்று வினவ, அவளை உறுத்து விழித்தான் ஆரவ்.

அந்த கோபப்பார்வையில் வந்திருப்பது யாரென்று தெரிந்துவிட்டது அனிதாவிற்கு. முன்பும் ஒருமுறை இப்படித்தானே பார்த்தான்! உள்ளுக்குள் வழக்கமான குறும்புத்தனம் தலைதூக்கினாலும் அதை ஒதுக்கி வைத்து மருத்துவராய் தன் கடமையை செய்ய ஆரம்பித்தாள். 

“இவங்க நேம்?” என்று விசாரிக்க

“பூங்குழலி டாக்டர்” என்றான் ஆரவ். 

“இவங்க யாரு? உங்க வொய்ப் ஆ” என்றவளிடம் “ஆம்” என்று சொல்ல பேரவா எழுந்தாலும் அதனை அடக்கி, “என்னோட வுட் பீ டாக்டர்…” என்றான் சிறிதும் பிசிரில்லாத குரலில்.

தன் ஆச்சரியத்தை மறைத்தவள், “ஒஹ்… குட். இவங்க அம்மா அப்பா எங்க?” என்றவளிடம்

“அவங்க இல்லை டாக்டர்” எனும்போதே பூவேந்தன் நினைவு வர, ‘ஷிட்… எப்படி இவனை மறந்தேன்?’ என்று நினைத்தாலும் அனிதாவின் அடுத்தடுத்த கேள்விக்கு பதில் கூறிக்கொண்டிருந்தான் ஆரவ்.

“அடிக்கடி பூங்குழலிக்கு இந்த மாதிரி மயக்கம் வருமா?” யோசனையோடு கேட்டவளிடம்

“இல்ல… ஆனா ஒரு மூணு மாசம் முன்னாடி அதிர்ச்சில இதே மாதிரி மயங்கி விழுந்திருக்காங்க”

“அப்போ இன்னைக்கும் அதிர்ச்சிலதான் மயக்கமா?” ஒருவித ஆராயும் குரலில் வினவினாள் அனிதா.

“அதிர்ச்சிதான் டாக்டர். ஆனா அதுல அவ மயங்கலை… ரொம்ப கோபப்பட்டு அழுது அப்படியே மயங்கிட்டா. எனிதிங் சீரியஸ்?” தன்னைப்போல் ஒருமைக்குத் தாவியவனின் குரல் சற்றுக் கவலையை வெளிப்படுத்தியது.

“சீரியஸ்லாம் இல்லை… ஆனா இப்படியே விட்டா சீரியஸ்தான். ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகி ஆழ்ந்த மயக்கத்துல இருக்காங்க. இது டிப்ரஷனோட ஸ்டார்டிங் ஸ்டேஜ். இதுலேயே மூழ்கவிடாம வெளிய கொண்டு வந்துட்டா, ஷி வில் பீ ஆல்ரைட். இப்போ இங்கேயே ரெஸ்ட் எடுக்கட்டும். எழுந்ததும் தனியே விடாதீங்க” என்றுவிட்டு

“உங்களுக்கு தலைல அடிப்பட்டதால எதுக்கும் ஸ்கேன் பண்ணி பார்த்தா நல்லது. தலைவலி வரலாம்… தாங்கமுடியலைன்னா மட்டும் டேப்லெட் போடுங்க. உங்க நேம் மிஸ்டர்” சீட்டில் மருந்தை எழுதியவாறு ஓரப்பார்வையில் கேட்டாள். 

முழுப்பெயரையோ முற்பாதி பெயரையோ சொன்னால் சந்தேகம் வருமோ என்றெண்ணி பிற்பாதி பெயரைச் சொன்னான், “அமுதன்” என்று.

“அமுதன்? புல் நேம் அமுதன் தானா?” என்றவளை உற்றுப்பார்க்க, ‘அப்பாவி லுக்’ விட்டாள் அனிதா. ராம் என்றால் கண்டுபிடித்திருப்பான் வம்பு செய்கிறாள் என்று. 

ஆரவ்வோ, “ஹ்ம்ம்… ஆமா” என்றான் அவளைக் கணிக்கமுடியாமல்.

“அமுதன் – பூங்குழலி பொருத்தமான பெயர். அட்வான்ஸ் விஷஸ் பார் யுவர் மேரேஜ் மிஸ்டர் அமுதன்” முதல் வாழ்த்தை சிறு புன்னகையுடன் வாழ்த்திய கையோடு எழுந்தவள் வெளியே செல்லும் முன்,

“சார்ர்ர்ர்… பார் யுவர் கைண்ட் இன்பார்மேஷன். இங்க யாரும் வரமாட்டாங்க. வந்தவங்களும் நீங்க யாருன்னு தெரிஞ்சாலும் வெளியே சொல்ல மாட்டாங்க. சோ மாஸ்க் கழட்டிட்டு மாறுவேசத்தையும் கலைச்சிட்டு ப்ரீயா இருங்க” என்றாள் குறும்புடன்.

“பச்… கண்டுபிடிச்சிட்டு தான் போட்டு வாங்குனியா?” என்றவாறு அவள் சொன்னதை செய்தவனிடம் 

“நீங்க டீவி பார்க்க மாட்டீங்களா… லாஸ்ட் மந்த்… ஏதோ ஒரு கேம் ஷோ போட்டாங்க. பேர் மறந்துட்டேன். அதுல உங்க ஐஸ்(கண்) மட்டும் காமிச்சு யாருன்னு கண்டுபிடிக்க சொல்ல, நான்தான் அவங்க கண்டுபிடிக்குறதுக்கு முன்னாடியே கண்டுபிடிச்சேன். அப்படிபட்ட என்கிட்ட நேர்ல வந்து ஐஸ்(கண்) மட்டும் காமிச்சா கண்டுபிடிக்க மாட்டோமா” டாக்டர் கோட்டின் காலரை தூக்கிவிட்டு பெருமையடித்தாள் அனிதா. 

‘அட அல்பமே’ என்ற பார்வை பார்த்து மானசீகமாய் அவளை மனதினுள் தாளித்தான் ஆரவ். அதற்கு மேல் அவள் மொக்கைபோட நேரமின்றி போக இவனை விடுத்து அடுத்த பேஷண்ட்டைக் காணச் சென்றுவிட்டாள்.

அதன்பின்னே நியாபகமாய் பூவேந்தனை அழைக்க போனைத் தேடினான் ஆரவ். அப்பொழுதுதான் அதை வாங்கிவரச் சொன்னது நினைவு வர, உடனடியாய்க் கதவைத் திறக்கவும் அங்கு புது அலைபேசியுடன் நின்றிருந்தான் வாங்கிவரச் சென்றவன். 

அதை வாங்கி பரிசோதித்து எல்லாம் சரியாய் இருக்கவும் அவனைக் கிளம்புமாறு சொல்ல, அந்நேரம் ஆரவ்வின் செயலாளராய் இருந்து தற்போது துணை முதலமைச்சராய் இருக்கும் வினோத்திடம் இருந்து அழைப்பு வந்தது. 

பொதுவாக அலுவலக வேலை சம்பந்தமாக அல்லது இவர்கள் உருவாக்கியிருக்கும் கண்காணிப்பு சாதனமான கன்ட்ரோல் ஆப் டிஎன் (TN) குறித்து என்றால் மட்டுமே வினோத்திடம் இருந்து அழைப்பு வரும்.

இப்போதிருக்கும் நிலையில் அதைக்குறித்து விவாதிக்க விரும்பாதவன், “வினோத் நான் இப்போ எதையும் பேசுற மூட்ல இல்லை… டூ யுவர்செல்ப். உனக்கென்ன தோணுதோ அதைச் செய்” என்றான் ஆரவ்.

“சார் நான் பேச வந்ததே உங்களைப் பத்திதான். நம்ம சாப்ட்வேர்ல வேலை செய்யுற ஸ்பை நீங்க பூங்குழலியை கூட்டிட்டு போறதை பார்த்துட்டாங்க. அது நீங்கதான்னு அவங்களுக்கு தெரியல அதேசமயம் பூவேந்தன் வீட்டுக்கு வந்ததும் அவங்க அக்காவை காணோம்ன்னு பதட்டப்பட்டு தேடிருக்கான் போல ஸ்பை அவன்கிட்ட விசாரித்து இதை கடத்தல்ன்னு பதிவு பண்ணிட்டாங்க. போலீஸ் ஆர் ஆன் தி வே… மீடியா வரவும் வாய்ப்பிருக்கு” சூழ்நிலையை விளக்கினான் வினோத். 

ஆரவ்வோ இன்னொன்றை யோசித்தான், ‘வேந்தனுக்கு அது நான்தான்னு தெரிந்திருக்கும். ஆனா மீடியாக்கு போயிரும்னு அவன் சொல்லலை… எப்போதோ நான் மீடியாவுக்கு தெரியக்கூடாது என்பதால்தான் மாறுவேடத்தில் வெளியே செல்கிறேன் என்று சொன்னதை நினைவு வைத்து அதன்படி இக்கட்டான சூழ்நிலையிலும் நடக்கும் அவன் மேல் எப்போதும்போல் பிரியம் பொங்கியது. 

ஆனால் தான் உருவாக்கிய கன்ட்ரோல் தொடர்சங்கிலி தன்னையே குற்றவாளி ஆக்க வருகிறதே என்று கோபப்படுவதா? அல்லது நன்றாக செயல்படுவதாக எண்ணி மகிழ்வதா? என்று தெரியவில்லை.

“வேந்தன் இப்போ எங்கே இருக்கான்?” என்ற ஆரவ்வின் விசாரணைக்கு 

“அவனை நான் உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகச் சொல்லிட்டேன். இப்போ என்ன பண்ணலாம் சார்? அங்கிருந்து கிளம்பனும்னா சொல்லுங்க… கார் அங்கேயே இருக்கட்டும். நாங்க பார்த்துக்குறோம் இந்த விஷயத்தை” என்றான் வினோத்.

எப்பொழுதும் எல்லாவற்றையும் வெளியே தெரியாமல் மறைத்தே பழக்கப்பட்டவர்களுக்கு இதெல்லாம் தூசுதான். எத்தனை விஷயம் இதுவரை மறைத்திருப்பர், மறைத்துக்கொண்டிருப்பர், இனியும் மறைப்பர்? அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்பதை ஒன்றும் சும்மாச் சொல்லவில்லையே!

வினோத் கூறியதை அமைதியாக அசைப்போட்ட ஆரவ், “வேந்தன்கிட்ட எதையும் சொல்லவேண்டாம். நான் வந்து சொல்றேன்னு சொல்லிருங்க” என்றான். 

“அப்போ கிளம்புறீங்களா சார்? வெளியே வேற கார்… ” என்றவனை இடைமறித்து 

“நான்தான் இதை பண்ணுனதுன்னு தெரிஞ்சி இங்கிருப்பதும் தெரிந்தால் என்னாகும் வினோத்?” என்றான் அமைதியாய். அக்கேள்வியில் பல பல அர்த்தங்கள் பொதிந்திருந்தது.

“சார்…?” என்ன கூறுவது என்று தெரியாமல் முழித்தான் வினோத். 

“சொல்லு வினோத் வாட் வில் பீ ஹாப்பன் இப் ஐ அம் ஹியர்?” மீண்டும் அதையே கேட்டான் ஆரவ். 

“என்ன நடக்கும்னு குறிப்பிட்டு சொல்ல முடியாது சார்… எப்படி வேணும்னாலும் திரும்பலாம். உங்களையும் பூங்குழலியையும் இணைத்து பேசலாம், உங்க மேல குற்றம் சொல்லலாம், பூங்குழலியை விசாரிக்கலாம் சோ அவங்க பேர் பாதிக்கப்…” முடிக்கும் முன் குறுக்கிட்டான் ஆரவ். 

“வெய்ட் வெய்ட்…” என்றான் ஆழ்ந்த குரலில். அக்குரல் தீவிரமாய் யோசிக்கையில் வெளிப்படும் குரல். எதையோ முக்கிய முடிவினை எடுக்கப்போகிறான் என்று அறிவிக்கும் குரல். அதைத்தான் அடுத்து பேசிய அவனின் வார்த்தைகள் கூறியது. 

“லீவ் இட்… நீ எதுவும் பண்ண வேண்டாம் வினோத். நடக்குறது அதுபாட்டுக்கு நடக்கட்டும் பட் பூங்குழலியை பத்தி தவறா ஒருசொல் வெளிவரக்கூடாது. என்னோட வுட் பீ ஆ அட்மிட் பண்ணிருக்கேன் புரியுதா?” என்றான்.

சொல்லவந்தது தெளிவாய் புரிந்தது வினோத்திற்கு. பேசப்பட்டால் ஆரவ்வின் வருங்கால மனைவியாகதான் பேசப்படவேண்டும் என்கிறான். ஆனால் பூங்குழலி ஆரவ் மீது கோபமாய் இருப்பது அவனிற்கு தெரியுமே. அவள்மட்டும் இவனிற்கு எதிராய் ஒருவார்த்தை கூறிவிட்டால் விளைவுகள் படுமோசமாய் இருக்கும் என்று தோன்ற அதன்பொருட்டு தயங்கினான் வினோத். 

“சார்… மேடம்கிட்ட விசாரிப்பாங்க. அப்போ மறுத்து சொல்லிட்டாங்கன்னா, எப்போ எப்போன்னு காத்திருக்குறவங்களுக்கு அவலாகிரும் சார். எதுக்கும் கொஞ்சம் யோசிச்சி…” என்று தயக்கத்துடன் முடித்தான். 

இதுவரை அவன் முடிவை அச்சுப்பிசகாமல் செயல்படுத்தியவனிற்கு இம்முறை இது சிக்கலானதாக தோன்றியது. 

“யோசிச்சிதான் இந்த முடிவெடுத்தேன். எனக்குத்தெரியும் ரிஸ்க்தான் ஆனா இதைவிட்டா இனி பிடிக்கவே முடியாதுனு தோணுது” பார்வை தன்னை மறந்து உறங்கிக்கொண்டிருந்தவளை தஞ்சமடைந்திருந்தது.

பின், “டூ வாட் ஐ சே. இதுக்கு மேல இதைப்பத்தி பேச ஒன்னும் இல்லை. ஹான்… எதுவா இருந்தாலும் மார்னிங் வரமாதிரி மட்டும் பார்த்துக்கோ அதுபோதும்” பேசிவிட்டு வைத்ததும் வேந்தனிடமிருந்து அழைப்பு வந்தது. 

எடுத்துப்பேசினால் என்னவென்று சொல்வான்? எதுவும் பேசத் தோன்றாததால், “உங்க அக்கா இப்போ சேப். மார்னிங் நான் கூட்டிட்டு வரேன். போய் சாப்பிட்டு தூங்கு. குட் நைட்” என்ற குறுந்தகவலை அனுப்பி கைபேசியை சைலென்ட்டில் போட்டான். 

இரவு பத்துமணி போல் மீண்டும் வந்தாள் அனிதா.

ஆரவ்வைப் பார்த்து புன்னகைத்தவள், “மயக்கத்தில் இருந்து தூக்கத்திற்கு வந்துட்டாங்க சார்… சோ காலை எழுந்ததும் டிஸ்சார்ஜ் பண்ணிறலாம்” என்க

“டாக்டர் ஒரு நிமிசம்” என்று அவளை நிறுத்தினான் ஆரவ்.

“சொல்லுங்க சிஎம் சார்” என்றவளிடம் 

“பூங்குழலி மறுபடியும் காலையில் உணர்ச்சிவசப்பட்டா ஆபத்தா? அதைத் தடுக்க ஏதாவது மெடிஷின் இருக்கா?” என்று கேட்க,

அதில் மெல்ல நகைத்தவள், “ஏன் சார்… இன்னும் சண்டை முடியலையோ?” என்றாள் கிண்டலாய். 

“அனிதா…” பெர்சனலில் தலையிடுவதாக தோன்ற சட்டென்று குரல் உயர்த்தினான் ஆரவ்.

அவன் எண்ணம் புரிந்து இதற்கு மேல் அவனைச் சீண்ட வேண்டாம் என்றெண்ணி, “கூல் சார் கூல்… என்னைக்கேட்டா அழுகையோ கோபமோ அதை அடக்கி வைக்காமல் வெளிப்படுத்திவிட்டாலே மருந்து தேவையில்லை. கொடுத்த மாத்திரையை தவறாம எடுத்துக்க சொல்லுங்க. ஆரம்பத்துலயே கண்டுபிடிச்சது நல்லதுதான் சீக்கிரம் சரி ஆகிரும் சார். டேக் கேர்” என்றுவிட்டு அமைதியாய் சென்றாள்.

அவள் வெளியேறியதும் அறை நிசப்தத்தை தத்தெடுக்க, அவளருகே அமர்ந்தவனோ அவளது வலது கையைத் தன் இரு கரங்களுக்குள் சிறைசெய்தான்.

‘என் கண் முன்னாடி நிற்காத… என்னைக்கு உன்னைப் பார்த்தேனோ அன்னைக்கே என் நிம்மதி போச்சு… சந்தோசம் போச்சு… எல்லாம் போச்சு’ வலியில் தோய்ந்து ஒலித்த பூங்குழலியின் உணர்ச்சிமிக்க வார்த்தைகள் காதருகில் கேட்டுக்கொண்டே இருந்தது.  

‘நீ ரொம்ப ஸ்ட்ராங்ன்னு நினைச்சேன். இப்படி உடைஞ்சு போவன்னு எதிர்பார்க்கலை பூங்குழலி. எதிர்பார்த்திருக்கணும்… தெரியாம செஞ்சாக்கூட மன்னிப்பு கேட்டிருப்பேன் ஆனா எல்லாத்தையும் தெரிஞ்சேதான் செஞ்சேன். இன்னும் ஒருமுறை செய்யப்போறேன். 

நான் இதுவரை செய்ததெல்லாம் உன்னை என்கிட்ட இருந்து பிரிச்சிருக்கலாம். பட், இனி செய்யப்போறது கண்டிப்பா உன்னை என்னோடையே பிணைத்து வைக்கப்போகுது… பிணைக்க வைப்பேன் என் கடைசி மூச்சு வரைக்கும்’ மனதோடு சபதமெடுத்தவன் முடிவில் அவளின் கையில் அழுத்தமாய் தன் முதல் அச்சாரத்தைப் பதித்தான். 

எப்பொழுதும் தன் இலக்கை அடைந்தே பழக்கப்பட்டவன், இன்று இலக்காய் இல்லாமல் தன் வாழ்க்கையின் இலக்கணமாய் இருக்கும் பெண்ணவளை அடைந்துவிட துடித்தான்.

அன்று அடைய நினைத்ததோ அரசாளும் பதவியை… இன்று அடைய நினைப்பதோ அலைகடலைப் போல் அடங்காமல் ஆர்ப்பரிக்கும் பெண்ணை.

பதவியும் பெண்ணும் என்றேனும் ஒன்றாகுமா? பதவியை அடைந்ததும் இவனிடம் அது அடங்கிவிட்டதுதான். ஆனால், பெண்ணவளை இவன் அடைந்தாலுமே இவனிடம் அவள் அடங்கிப் போவாளா? அல்லது அடக்கி ஆள்வாளா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அலைகடல் ஆர்ப்பரிக்கும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!