alaikadal-22.1

alaikadal-22.1

அலைகடல் – 22.1

ஆரவ் வீடிருக்கும் தெருமுனையில் கார் திரும்பியதுமே அங்கிருந்த பரபரப்பிற்கு இடையிலும் எகிறியது எதிர்பார்ப்பு.

திரைத்துறையில் கொடிகட்டி பறந்த காலத்திலும் சரி, அரசியல் வந்து வருடத்திற்கு ஒன்று என நடித்தாலும் சரி, ஒரு கிசுகிசுவில் கூட கிசுகிசுக்கப்படாதவன் ஆரவ். 

சொந்த வாழ்க்கையைப் பற்றிய பேச்சுவந்தாலும் தவிர்ப்பதே தெரியாதவாறு தவிர்த்துவிட்டு செல்பவன், இன்றுதான் மாட்டியிருக்கிறான் என்று ஏக குஷி அவர்களுக்கு. 

அதுவும் கூட வேண்டுமென்றே மாட்டியிருக்கிறான் இல்லையென்றால் எப்பொழுதும்போல் சிறுவிஷயமும் கசிந்திருக்காது என்றறியாமல் பெரிதாக எதையோ சாதித்த பாவனையில் மார்தட்டிக் கொண்டிருந்தனர் மனதினுள்.

தன் அருகே அமர்ந்திருந்த பூங்குழலியின் முகத்தைப் பார்த்தான் ஆரவ். வாடிய பூவாய் கண்மூடி சாய்ந்திருந்தாள் அவள். 

இருநாட்கள் முன் தங்கப்பதுமையென வலம் வந்த உருவம் நெஞ்சை ஆக்கிரமிக்க, அவளை இவ்வாறு அறிமுகப்படுத்த விரும்பாததால் நேரே அவர்களைத்தாண்டி வீட்டின் வாயிலில் சென்று காரை நிறுத்தினான். 

பின்னாலேயே மற்றுமொரு கார் நுழைய அதிலிருந்து இறங்கினர் மருத்துவமனையில் இருந்த பாதுகாவலர் இருவரும் கூடவே ஒரு இளம்பெண்ணும். அவர்களுக்கும் இவளுக்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை அவர்கள் ஆண் இவள் பெண் என்பதைத் தவிர, நடையுடை பாவனை அனைத்திலும் ஒரு விறைப்பு இருக்க இவர்களை நோக்கி வந்தாள் அவள்.  

இறங்கிய பாதுகாவலர் இருவரும் தத்தமது இடத்தில் சென்று நின்றுக்கொள்ள, சத்தம் கேட்டு வெளியே ஓடிவந்த வேந்தனிடம், “உள்ளே கூட்டிக்கொண்டு போ வேந்தா” என்ற ஆரவ், அருகில் நெருங்கிய அந்த பெண்ணிடம் கண்ணைக்காட்டியபடி வெளியே தனக்காகக் காத்திருக்கும் நிருபர்களை அடைந்தான்.

“கைஸ்… என்ன நடக்குது இங்க?” புன்னகை முகமாக கேட்டுக்கொண்டு வந்தவனை சுற்றி வளைத்தனர் அங்கிருந்தோர். 

என்றுமே தன் புன்னகை முகத்தை காண்பிக்கத் தயங்காதவன் ஆரவ். புன்னகை எதிரில் இருப்போரை ஈர்க்கும் பெரும் ஆயுதம் என்று நம்புபவன். அதற்காக கோபம் வந்தாலும் மறைப்பவன் இல்லை, உணர்ச்சியற்ற முகமே அதனைக் காட்டிக்கொடுத்து விடும். 

அதையும் மீறி அவனின் கோபம், வன்மம் போன்றவற்றையெல்லாம் பார்க்க வேண்டுமென்றால் அவன் நடித்த படங்களில் பார்த்தால் மட்டுமே முடியும்.

அந்தளவு திரையிலும் நிஜத்திலும் மிகத் திறமையாய் நடித்துக்கொண்டிருக்கும் நடிகன் அவன். நடிப்பின்றி இயல்பாய் இருப்பது வீட்டில் மட்டுமே இப்பொழுது அங்கும் பூங்குழலியை அழைத்து வந்து காதலை மறைத்து நடிக்கப்போகிறான். 

ஆரவ்வின் கேள்விக்கு, “நீங்க தான் சார் சொல்லணும் என்ன நடக்குதுன்னு…” என்றாள் ஒரு குறும்புக்காரப் பெண்.

“ஹாஹா விடமாட்டீங்களே! அதான் எல்லாம் தெரிஞ்சி வச்சிருப்பீங்களே இன்னும் என்ன தெரியணும்?” என்றவனிடம்

“உங்க வருங்கால மனைவியை அறிமுகப்படுத்தனும் சார்… அவங்க யாரு? என்ன பண்றாங்கன்னு தெரிஞ்சிக்க எல்லாருமே ஆவலா இருக்கோம்… எப்போது மேரேஜ் சார்?” எங்கிருந்து கேள்வி வருகிறது என்றே தெரியவில்லை ஆனால் வந்துக்கொண்டே இருந்தது.

“அவங்க பெயர் பூங்குழலி. சப் கமாண்டர் ஆப் அவர் இந்தியன் நேவி” இதைக்கூறுகையில் தன்னையே அறிமுகப்படுத்தியது போல் நெஞ்சம் பெருமையில் விம்மித் தணிந்தது.

பின், “அவங்களுக்கு இப்போ கொஞ்சம் ரெஸ்ட் தேவை. இன்னும் ஒரு வாரத்தில் கல்யாணம் வருது… கண்டிப்பா அப்போ பார்க்கலாம்” இங்கிதமாய் மறுத்து செல்லப்பார்க்க அவர்களோ விடாமல் வாழ்த்துக்கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

பேட்டி என்றால் சர்ச்சையில்லாமலா? ஆரவ்வின் காயம்பட்ட நெற்றியைக் கண்டு, “சார் உங்களுக்கும் அடிப்பட்டிருக்கு… அவங்களும் ஹாஸ்பிடல்ல இருந்து வராங்க என்னாச்சு சார்?” என 

“அது எங்க பெர்சனல்… சோ ப்ளீஸ்” என்று அந்த கேள்வியை முடித்து வைத்தான். 

“உங்க லவ் ஸ்டோரியும் பெர்சனல்லா சார்… நாங்க கேட்கலாமா கூடாதா?” என்று மீண்டும் முதலில் குறும்பாக கேட்ட பெண் வினவ

“கண்டிப்பா சொல்றேன். இப்போ இல்லை எங்க கல்யாண நாள் அன்று…”

திரையில் அவன் கூறுவதைக் கேட்டு யோசனையில் மூழ்கியவாறு தன் ஐந்து வயது மகன் அபிமன்யுவிற்கு உணவு ஊட்டிக்கொண்டிருந்தான் அர்ஜுன். 

“அப்பா… ஆரவ் அங்கிள்” என்று டிவியை சுட்டிக்காட்டியபடி வெள்ளந்தியாய் சிரிக்கும் மகனை கடிய மனமின்றி டிவியை அணைத்து வைத்தவன், மகனின் வாயைத் துடைத்து விட்டவாறு, “டைம் ஆச்சுல… ஸ்கூல்க்கு போகணும். அம்மாகிட்ட போய் லன்ச் வாங்கிட்டு வா… ஓடு” என்றவாறு அமர்ந்திருந்த சோபாவில் இருந்து இறக்கிவிட்டான். தன்னையே உரித்து வைத்திருக்கும் மகன் என்றால் அவனிற்கு உயிர்தான்.

சிறிது நேரத்தில் மகனுடன் வந்த மனைவி நிர்மலாவிடம், “போயிட்டு வரேன் நிரு… அம்மா அத்தை கேட்டா சொல்லிரு” என்றவன் அவள் சம்மதித்ததும் விடைபெற்று காரிலேறினான்.

அர்ஜுன்… ஆரவ்வின் எதிரியாய் இருப்பது மட்டும் போதாதென்று மாமன் அருள்ஜோதியிடம் உள்ள கட்சியின் தலைமை பதவியை அவரிடம் இருந்து சென்ற வருடம் வாங்கி தற்போது எதிர்க்கட்சி தலைவராகவும் எம்.எல்.ஏ வாகவும் தன் வாழ்க்கையை நடத்துபவன்.

அன்று ஆரவ்வின் ஆட்கள் தன்னை தூக்கிச்சென்று அடித்து, ஊமைக்காயங்களுடன் தன் வீட்டின் முன் போட்டுச் சென்றதை இன்னமும் மறக்க முடியாமல் வஞ்சம் வைத்து உறுமிக்கொண்டிருக்கிறான் அர்ஜுன். 

ஏழு வருடங்கள் முன்பு ஆரவ் முதல்முறை தங்களை தோற்கடிக்கவுமே நேராய் அருள்ஜோதியிடம் சென்று தானே இனி கட்சி பொறுப்பை பார்த்துக்கொள்வதாய் கூற, அவரோ அவரின் வம்சமே கோலோச்சிய பதவி அவரிடம் இருந்து பறிபோன வெறியில் அடுத்தமுறை அவனை வென்றே தீருவேன் என்றவாறு இவனுக்கு பிரபல தொழிலதிபர் மகள் நிர்மலாவை மணமுடித்து வைத்தார். 

அவர்கள் உதவியுடன் மீண்டும் ஆட்சியைப்பிடிக்க ஐந்து வருடம் படாதபாடுபட, அனைத்தும் விழலுக்கு இறைத்த நீரானதுதான் மிச்சம். நெருங்கக்கூட முடியாத அளவு கடகடவென அசுர வளர்ச்சி வளர்ந்திருந்தான் ஆரவ்.

இதற்கிடையில் அடுத்து வந்த தேர்தலில் அர்ஜுனும் அரசியலில் குதிக்க, ஐந்து வருடம் கழித்தும் அருள்ஜோதி, அர்ஜுன் மற்றும் சிலரின் செல்வாக்கான தொகுதிகள் மற்றுமே வெற்றி பெற்றது. மற்றவை அனைத்திலும் பரிதாபமாய் தோல்வி அடைந்து மண்ணைக் கவ்வியிருந்தனர். 

அதில் மிகுந்த அவமானம் அடைந்த அர்ஜுன் வீட்டில் பயங்கரமாய் சண்டை போட்டான். அவனால் முன்னைப்போல் வரியை ஏய்க்கவோ, சட்டத்தை ஏமாற்றியோ தொழில் செய்ய முடியவில்லை. பயங்கர கிடுக்கிப்பிடியாய் இருக்க அந்த கோபம் அனைத்தும் மாமன் மீது பாய்ந்தது.

அப்போதும் அடுத்தமுறை என்று அருள்ஜோதி இழுத்தடிக்க, மிகவும் போராடி அவரை கரைத்தான் அர்ஜுன். அதில் மனமிரங்கி அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற கட்டளையுடன் சென்ற வருடம் கட்சியின் பொறுப்பை முழுதாய் ஒப்படைத்தார் அருள்ஜோதி.

அடுத்த தேர்தலுக்கு இன்னமும் மூன்று வருடங்கள் மிச்சம் இருக்க, எதிர்க்கட்சியின் முக்கிய வேலையாகிய ஆளும்கட்சியைக் குறைசொல்லும் வேலையில் மிகச்சிறப்பாய் இந்த ஒரு வருடமாக பணியாற்றி வருகிறான் அர்ஜுன். அவன் சொல்லும் பல குறைகள் நியாயமற்றதாய் இருந்தாலும் ஓரிரண்டு நியாயமாக இருக்கவே அவனை ஒன்றும் செய்யாமல் விட்டு அவனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறான் ஆரவ்.

இங்கு ஒருவழியாய் நிருபர்களிடம் இருந்து தப்பித்த ஆரவ் வீட்டினுள் நுழைய, அக்கா தம்பி இருவரும் அந்த புதிய இளம்பெண்ணை முறைத்துக்கொண்டிருந்தனர். 

சற்று முன்பு… 

தமக்கையைக் கண்டதும், “என்னக்கா என்னாச்சு… எதுக்கு ஹாஸ்பிடல் போன? ஆரவ் அண்ணா சொல்றதெல்லாம் உண்மையா? ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணப்போறீங்களா?” என்று படபடத்தான் இளையவன். 

பூங்குழலியோ பதில் கூறாமல் அருகில் இருந்த பெண்ணை யோசனையோடு வெறிக்க, அவளோ இவர்களைதான் இங்கிதமின்றி பார்த்துக்கொண்டிருந்தாள்.

“பூமா வா… என் ரூம் இங்க இருக்கு” அவனின் பழைய அறை அப்படியே இருக்க அங்கு அழைத்து சென்றான் வேந்தன். 

பின்னோடே அந்த பெண்ணும் வர, கடுப்பாகிய வேந்தனோ, “ஹலோ… நீங்க எதுக்கு எங்க பின்னாடியே வரீங்க?” என்று கோபப்பட்டான்.

“மேடம் எங்க இருக்காங்களோ அங்கேதான் நானும் இருக்கணும். இது சாரோட ஸ்ட்ரிக்ட் ஆர்டர்” என்றாள் அவளின் விறைப்பைக் கைவிடாமல்.

அதில் வேந்தன் முழிக்க, பூங்குழலியோ பல்லைக்கடித்தாள். ஆரவ் எதனால் இப்படிச் சொல்லிருப்பான் என்று நினைத்தவளுக்கு அவனின் புத்தி சாதுர்யத்தின் மேல் வெறிவெறியாக வந்ததென்றே சொல்லலாம். 

தன்னை கண்காணிப்பான் என்று நினைத்தாலே தவிர இப்படி ஒரு பெண்ணையே ஏற்பாடு செய்து தன் பின்னே சுற்றவிடுவான் என்று எதிர்பார்க்கவில்லை.

வேந்தன், “அதெல்லாம் வெளியே போகும்போதா இருக்கும்… இவ என் அக்காதான். நான் இருக்கும்போது நானே பார்த்துக்கிறேன். நீங்க வரத் தேவையில்லை” என்று கத்தரித்தான்.

இந்த பேச்சுவார்த்தையின் போதுதான் உள்ளே நுழைந்தான் ஆரவ். 

“சார் சொன்னது இதுதான். நீங்க அவங்ககிட்டயே இதைப்பத்தி பேசிக்கோங்க” என்று எதிர்த்து சட்டமாய் அங்கேயே நின்றுக்கொண்டாள் அவள். 

என்ன பிரச்சனை என்று நொடியில் புரிய, “தர்ஷனா… பூங்குழலியை அந்த ரூம்க்கு கூட்டிட்டுபோய் அவங்க பிரஷ் அப் ஆகுனதும் டைனிங் ஹால்ல சாப்பிடவைங்க. மறக்காம மாத்திரையும் தந்திருங்க” என்றவாறு மூவரையும் ஒரு பார்வை பார்த்து மாடியேறிச் சென்றுவிட்டான்.

இதற்கு மேலும் தான் இங்கிருந்து தப்பிப்பது எல்லாம் பிரம்ம பிரயத்தனம் என்று தோன்ற, விறுவிறுவென ஆரவ் கூறிய அறைக்குள் நுழைந்தாள் பூங்குழலி. 

பின்னோடு உள்ளே நுழைந்த தர்ஷனாவிடம், “இப்போ நான் பாத்ரூம் போகணும்… நான் மட்டும் போகவா இல்ல நீங்களும் வரீங்களா?” பல்லிடுக்கில் வார்த்தைகளை கடித்துத்துப்பினாள் பூங்குழலி. 

அது சிறிதும் தன்னை பாதிக்காத தோரணையில் அங்கிருந்த பைகளைப் பிரித்து அவள் எப்போதும் அணியும் டீசர்ட் ஃபேன்ட்டை எடுத்து நீட்டியவள், “நீங்க போயிட்டு வாங்க மேம். நான் இங்கேயே வெயிட் பண்றேன்” என்றாள் சாதாரணமாய். 

இதையெல்லாம் அறைவாசலில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த வேந்தனுக்கே ஆரவ் மீது சிறிது கோபம் வர, வந்த தடமின்றி சென்று தடதடவென மாடியேறினான் ஆரவ்வை உண்டில்லை என்றாக்கும் நோக்கத்துடன். 

ஆரவ் இருக்கும் அறையின் கதவை விடாமல் தட்டியவனை, “மேல வரதுக்கு இவ்ளோ நேரமா? நான் இங்கே இருக்கிறேன் வேந்தா” என்ற குரல் தடுத்து நிறுத்தியது. 

அவனை எதிர்பார்த்த பாவனையில் பால்கனியில் இருக்கும் மூங்கில் நாற்காலியில் அமர்ந்து பேப்பரை புரட்டிக்கொண்டிருந்தான் ஆரவ்.

அவனருகே நெருங்கியவன், “என்ன பண்ணீட்டு இருக்கீங்க அண்ணா? என்ன இதெல்லாம்?” முதன்முறையாக கோபத்தில் ஆரவ்விடம் குரல் உயர்த்தினான் வேந்தன். 

இந்த உலகத்திலேயே ஆரவ் முகத்திற்கு நேராக எகிறும் தைரியம் வாய்க்கப்பெற்ற இரண்டாவது ஆள் இவன். முதல் நபர் சாட்சாத் நம் பூங்குழலியேதான். என்ன ஒரு வித்தியாசம் என்றால் அவன் மீதான வெறுப்பில் பூங்குழலி எகிற, வேந்தனோ ஆரவ் மீதான உரிமையில் எகிறினான். 

ஒன்றும் கூறாமல் பேப்பரில் இருந்த கவனத்தை திருப்பி அமைதியாய் வானத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவனை தன்புறம் திருப்பியவன், “கேக்குறேன்ல? எதுக்கு அண்ணா பூமாவை கல்யாணம் செய்யுறேன்னு சொல்லி இப்படி அடிமை மாதிரி நடத்துறீங்க? கேட்க ஆளில்லைன்னு நினைச்சீங்களா? பதில் சொல்லுங்க” என்று கிட்டத்தட்ட உலுக்கினான். 

அதில் ஆரவ், “பிகாஸ் ஐ லவ் ஹேர்!” என்றான். குரலில் கோபம் இல்லை அமைதியும் இல்லை ஆனால் ஒருவித வலியில் வந்து விழுந்தது வார்த்தைகள். அடிமை மாதிரி நடத்துறீங்க என்றது அவனை காயப்படுத்தியிருந்தது. 

ஆனால் அவன் தரப்பில் இருந்து பார்த்தால் அவ்வாறே தெரியும் என்பதால் பொறுத்துக்கொண்டு உண்மையைக் கூறினான். வேந்தனிடம் அனைத்தும் மறைப்பது இயலாத காரியம் என்று தோன்றியது. அவன் இப்போதும் ஒன்றும் தெரியாத சிறுவன் இல்லையே!

“லவ்வா? பூமாவையா?” சிறிதும் நம்பிக்கையின்றி சந்தேகமாய் வினவினான் வேந்தன்.

அது ஆரவ்வை வெகுவாய்ச் சீண்டிவிட, “ஏன் நான் லவ் பண்ணக்கூடாதா? உன் பூமாக்கு என்ன குறைச்சல்?” என்று புருவத்தை உயர்த்திக்கேட்டவனிடம், 

“எங்கக்காவுக்கு என்ன குறைச்சல்? அவ கிடைக்க யாராயிருந்தாலும் கொடுத்து வச்சிருக்கணும். ஆனா உங்களுக்கு எப்படி லவ் வந்தது? அதுவும் உங்களைச் சுத்தமா பிடிக்காதவ மேல… நீங்க உண்மையத்தான் சொல்றீங்களா?” என்றான் வேந்தன். இன்னமும் அவனால் நம்பமுடியவில்லை! கண்முன் காராசாரமாய் சண்டை போட்டவர்கள் ஆகிற்றே!

‘அவளுக்குத் தானே பிடிக்காது… எனக்குப் பிடித்திருக்கிறதே’ என்று நினைத்தாலும் அதைச்சொல்ல பிடிக்காதவனாய், “எப்படியோ வந்துருச்சி… இப்போ அதுக்கு என்னடா பண்ண சொல்ற? சும்மா கேள்வி கேட்டுக்கிட்டு…” என்றவாறு எழுந்து செல்ல,

“நில்லுங்க அண்ணா… நீங்க லவ் பண்ணுனீங்க சரி, ஆனா பூமா எப்படி லவ் பண்ணுனா எனக்கு தெரிஞ்சி அவ முகத்தை பார்த்தா அப்படித் தெரியல. நீங்க தனியா பேசக்கூட விடமாட்டிக்குறீங்க எங்களை ஏன்?” எதைக் கேட்டுவிடக்கூடாது என்று நழுவப் பார்த்தானோ அதை வேந்தன் கேட்டுவிட, பெருமூச்செடுத்து தன்னை நிலைப்படுத்தினான் ஆரவ். 

உண்மையை முழுதாக சொல்ல முடியாது… அதேசமயம் தான் சொல்வது உண்மையாகவும் இருக்கவேண்டும். உண்மைத்தவிர வேறு எதைக்கூறினாலும் வேந்தன் நம்புவதற்கு வாய்ப்பு கம்மி. எனவே வருவது வரட்டும் என்றெண்ணி,

“அவள் திருமணத்திற்கு சம்மதிக்கலை என்றால் உன்னை கொன்னுருவேன்னு மிரட்டுனேன் வேந்தா” என்று சொல்லிவிட்டான். 

இதோ கோபப்பட போகிறான் குறைந்தபட்சம் அதிர்ச்சியேனும் அடைவான் என்று அவனையே பார்த்துக்கொண்டிருக்க, வேந்தனோ அவன் எதிர்பார்ப்பை பொய்த்து “கிளுக்” எனச் சிரித்தான். 

அடுத்து அவன் கூறிய வாக்கியத்தில் ஆரவ்வின் கண்கள் அவனறியாமல் கலங்க இளையவனை கட்டியணைத்தான் மூத்தவன். 

மீண்டும் மீண்டும் அவன் கூறியதை அசைப்போட்ட நெஞ்சமோ நெகிழ்ந்துதான் போனது. 

“நீங்களாவது என்னைக் கொலை பண்ணப்போறதாவது? பெஸ்ட் காமெடி ஆப் திஸ் இயர் இதுதான் அண்ணா” என்று கூறியிருந்தான் வேந்தன்.

நம்பிக்கை… மனித மனங்களை சிதறவிடாமல் காக்கும் பெரும் சக்தி வாய்ந்த ஆயுதம். ஒவ்வொரு உடைந்த உறவுகளுக்குப் பின்னாலும் அவர்களின் நம்பிக்கையே முதலில் அடிவாங்கியிருக்கும். அந்த முதல் அடியை இவர்கள் உறவிற்கு ஆரவ் இப்போது எதிர்பார்க்க, அதை கொடுக்கவில்லை வேந்தன். 

மாறாகச் சிறிதும் எதிர்பார்க்காத பதிலைச் சொல்லியிருந்தான். அவன் மட்டும், ‘நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு நினைக்கலை… உங்களை போய் நம்பினேன்னே’ என்றெல்லாம் பேசியிருந்தால் உள்ளுக்குள் உடைந்தாலும் வெளியே அவனை சமாதானம் பண்ணியிருப்பான் ஆரவ்.

தம்பி என்று தெரியும் முன்பே மகன் ஸ்தானத்தை வேந்தனுக்கு கொடுத்தவன் ஆகிற்றே! தவறாக நினைத்தாலும் புரியவைக்க வேண்டும் என்று நினைத்திருக்க, இவனானால் ஒற்றை வாக்கியத்தில் அவனின் மொத்த கவலையையும் தகர்த்து எறிந்திருந்தான்.

“விடுங்க அண்ணா… இந்த டம்மி மிரட்டலுக்கா பூமா அப்படி இருக்கா? பாவம் அவ… நான் போய் உண்மையைச் சொல்றேன்” என்று கீழே ஓடப்பார்த்தவனை அவசரமாய் பிடித்திழுத்து,

“அவ என்னை விரும்புன பிறகு நானே சொல்லிக்குறேன். இப்போ எதுவும் சொல்லாம தள்ளியே இரு” என்றான் ஆரவ்.

“நான் எதுக்கு தள்ளி இருக்கணும்? உண்மையைச் சொன்னால் மனசு மாறுவா தானே?” என்று தன்னைப்போல் தன் தமக்கையும் என்றெண்ணி வினவ, 

“யாரு உங்க அக்கா…? நான் விரும்புறது தெரிஞ்சா மனசு மாறுவா…!!! போடா டேய்…உன்னை நம்பி விட்டா நீ உளறினாலும் உளறுவ அதனால தள்ளியே இரு. இல்லைன்னா என்னைக் கல்யாணம் பண்ணுறதுக்கு பதிலா உங்க அக்கா எனக்கு சங்கு ஊதிற போறாடா” என்றான் உண்மையாய். 

“ஹாஹா… அண்ணா… ஹாஹா. இது சூப்பரா இருக்கே. ஒரு பெரிய ஸ்டார், சீஃப் மினிஸ்டர் வேற, எங்கக்காக்கு இப்படி பயப்படுறங்களே! ஐயையோ எனக்கு இதை யார்கிட்டயாவது சொல்லியே ஆகணுமே… இல்லைன்னா என் மண்டை வெடிச்சிருமே. நான் பூமாகிட்டயே போய் சொல்லுறேன்” என்று கவுண்டமணி குரலில் கத்தியவன் ஆரவ்விடம் இருந்து தப்பித்துச்செல்ல,

 “உன்னை நிஜமாவே கொல்லப் போறேன்டா டேய்…” என்றவாறு விடாமல் துரத்தினான் ஆரவ். சிறிது நேரத்திலேயே கீழே செல்வதை மறந்து மாடி முழுதும் கட்டி உருண்டனர் அந்த பாசக்காரர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!