alaikadal3

alaikadal3

அலைகடல் – 3

எட்டாம் வகுப்பில் அடியெடுத்து வைத்திருந்த பூங்குழலிக்கு சென்னையில் கால் பதித்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் விளையாட என்ன பேசக் கூட தன் வயதையொத்தவர்களிடம் கூட்டுச் சேர முடியவில்லை.

அந்தக் கோபமெல்லாம் தன்னையும் தாயையும் ஊரில் இருந்து கூட்டி வந்திருந்த அவளின் தந்தை மீது பாய்ந்திருந்தது. இரவு வீட்டிற்கு வந்த கணேசனிடம்,

“அப்ப்ப்பா… எனக்கு இங்க பிடிக்கவே இல்லை. ஊருக்கு போகலாம் வாங்க. அங்க நான் மாலினி, தீஷா கூடலாம் விளையாடுவேன்ல” கோபத்தில் ஆரம்பித்து அழுகையில் தேம்பியது குரல். அவளை அலேக்காக தூக்கி மடியில் அமர வைத்தவர்,

“அடடா… எதுக்கு இப்போ பூக்குட்டி அழுறா. இன்னும் கொஞ்ச நாள் போயிருந்தா உன்கூட விளையாட குட்டிப்பாப்பா வந்திருமே” இரண்டு நாளாக கணவனும் மனைவியும் வளர்ந்த பிள்ளையிடம் எப்படிக் கூறுவது என்று சங்கடப்பட்டுக் கொண்டிருந்த விசயம் இது. அவளே ஆரம்பித்ததும் தற்போது கூறிவிட்டார் கணேசன்.

“குட்டிப்பாப்பாவா அது யாரு? அங்க நம்ம வீட்டுல இருக்கே சித்தப்பா பாப்பா அதுவாப்பா?”

“இல்லைடா நமக்கே நமக்குன்னு ஒரு பாப்பா வர போகுது இப்போ உங்க அம்மா வயித்துக்குள்ள இருக்கே” சிறிது பயந்துக்கொண்டே விளையாட்டுப்போல் கூற மகளோ அதற்கு அவசியம் இன்றி துள்ளி குதித்தாள்.

“ஹைய்… அப்பா எனக்கு தங்கச்சி பாப்பா வர போகுதா? அதை நாம மட்டும் வச்சிக்கலாமா? அதை தூக்குனா யாரும் அடிக்க மாட்டாங்களா?” என்று உற்சாகத்தில் கூவ,

“இல்லைடா யாரும் அடிக்கமாட்டாங்க. அது நம்ம பாப்பாடா. தங்கச்சி இல்லைனா தம்பி பாப்பா இந்த பூக்குட்டி கூட விளையாட கொஞ்ச நாள்ல ஓடி வரப் போறாங்களாம். அது வரை சமத்தா போய் படிப்பீங்களாம் ஓகே”

“ஓகேப்பா நான் பாப்பா கிட்ட போய் பேசுறேன்” தாயின் வயிற்று சிசுவுடன் அப்போதே பேச்சுவார்த்தை நடத்த ஓடினாள்.

அவள் சென்றதும் நிம்மதி பெருமூச்சை வெளியிட்ட கணேசனிற்கு இன்னும் தந்தையிடம் வேறு சொல்ல வேண்டுமே என்றிருந்தது. அவர் நிச்சியம் மகிழ்வார்தான் கூடவே தாயிற்கும் செய்திபோகும்.

இரண்டு நாளாக மாமியார் என்ன சொல்வாரோ? என்ற பயத்தில் கணவரிடம் அழுது கரைந்திருந்தார் சாந்தா. அந்நேரங்களில் அவளைச் சமாளிப்பதற்குள் இவரது தாவு தீர்ந்துவிடும்.

விருதுநகரில் இருக்கும் சின்னாப்பட்டி கிராமத்தின் விவசாய குடும்பம்தான் அமுதவேல் உடையது. மனைவி நாச்சியார் இரண்டு மகன்கள் கணேசன், சிவராமன் என்ற அழகான அளவான குடும்பம் அவர்களது.

கணேசன் படித்து பட்டணத்து வேலைக்குச் செல்ல தம்பி சிவராமன் படிக்க விருப்பமின்றி அங்கேயே தேங்கிவிட்டார். தந்தை வழி சொந்தத்தில் இருந்து வந்த வரனாக சாந்தா கணேசனை மணமுடிக்க அப்போதே நாச்சியார் லேசாக சுணங்கினார். ஆனாலும் யாரும் கண்டுக்கொள்ளவில்லை.

மனைவியைப் பட்டணம் அழைத்துச் செல்ல கணேசன் விரும்பிய போதும் குடும்பத்தை வந்ததும் பிரித்த கணக்காக தாய் மூக்கால் அழுது அரட்ட வேறு வழியின்றி மாதம் ஒருமுறை வந்து போய்க்கொண்டிருந்தார்.

அதற்கு அடுத்து இளையமகனிற்கு நாச்சியார் தன் அண்ணன் பெண்ணையே மணமுடித்து வைக்க அவர்களுக்கு தான் மூன்று மாதம் முன்பாக இரண்டாம் குழந்தையாக பெண் குழந்தை பிறந்திருந்தது. மூத்த பிள்ளையாக ஐந்து வயதான ராம் இருக்கின்றான்.

எத்தகைய பொறுமைக்கும் அளவுண்டு என்பது போல் மனைவியைப் படுத்தும் பாட்டை தந்தை மூலம் அறிந்தவர்க்கு பொறுக்கவில்லை. அதிகம் குதிப்பவரை சாந்தாதான் சாந்தப்படுத்துவார். அதுவும் சில்லு சில்லாக உடையும் நாள் வந்தது.

அங்கே சுற்றி இங்கே சுற்றி கடைசியில் தன் செல்ல பெண்ணிடமே தம்பியின் தாரம் குழந்தையைத் தூக்கியதற்காக கை நீட்டியிருக்க, தந்தை கூறிய செய்தியில் அடுத்த நாளே அடித்துப் பிடித்து ஓடிவந்திருந்தார்.

தாயும் தன் அண்ணன் பெண்ணிற்கே ஆதரவாகப் பேச, மனம் வெறுத்து அத்தனை ஆண்டு ஆதங்கத்தையும் ஆத்திரத்தையும் கொட்டித்தீர்த்தவர் கையோடு மனைவி மகளை அழைத்து வந்துவிட்டார்.

அத்தனை ஆண்டு சம்பாரித்த பணத்தை வீட்டிற்குக் கொடுப்பது போக முதலீடு செய்திருந்தார் வீடு சொத்து என. அதனால் வசதிக்கு ஒரு குறைவுமில்லை.

மகிழ்ச்சியாக சென்றுக்கொண்டிருந்த வாழ்வில் வசந்தம் வெகுவருடங்கள் கழித்து ஒரு புதுவரவின் மூலம் வீச தந்தை மகள் மகிழ்ந்த அளவில் பாதியைக் கூட தாய் மகிழவில்லை எனினும் அவர்களின் மகிழ்ச்சியைக் குலைக்கவும் இல்லை. அமைதியாக இருந்துக்கொண்டார் சாந்தா.

தந்தையிடம் என்ன சொன்னாரோ ஏது சொன்னாரோ? அதன் பின் அதைப்பற்றிய பேச்சு வீட்டினில் எழவில்லை. மெல்ல மெல்ல சாந்தாவிடம் திருமணமாகி அத்தனை ஆண்டுகள் இல்லாத மகிழ்ச்சி தென்பட ஆரம்பித்தது.

வீட்டு வேலைகளை முடிந்த அளவு கணவனும் மகளும் செய்து வைக்க வயிறு பெரிதாக பெரிதாக தாயின் ஒவ்வொரு மாற்றமும் சிறுமியான பூங்குழலிக்கு மனப்பாடம்.

பள்ளியில் இருந்து வந்தவுடன் அவள் குரல் கேட்டதுமே வயிற்றினுள் கை கால் அசைத்து உற்சாகத்தில் உருண்டு வரும் அச்சிறுவாண்டு. அதை வெளியில் இருந்தே கைவைத்து உணரும் பூங்குழலிக்கு சோர்வெல்லாம் பறந்து சுறுசுறுப்பாகிவிடும். இருவருக்கும் இடையேயான நெருக்கம் ஆத்மார்த்தமாக மாறிக்கொண்டிருந்தது.

அதிக வயது வித்தியாசம் கூட அதற்கு காரணமாக இருக்கலாம். ஏற்கனவே தனிமையில் வாடி, குழந்தைகளிடம் பிரியமாய் இருக்கும் குழலிக்கு இயல்பாய் தன் உடன்பிறப்பிடம் அபரித பாசம் உண்டானதில் வியப்பேதும் இல்லை.   

அன்றும் அப்படித்தான் குட்டிப்பாப்பாவிடம் காலையில் டாட்டா சொல்லி வயிற்றில் முத்தமிட்டு மகள் பள்ளிக்குச் சென்றதும் அதை எப்போதும் போல் ரசித்துவிட்டு கணேசன் குளிக்க செல்ல டீபாவில் இருந்த அவரின் அலைபேசி சிணுங்க ஆரம்பித்தது.

தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வர, அவர் குளிக்க போயிருக்கார்னு சொல்லி அப்புறம் பேச சொல்லுவோம் என்றவாறு அதனை காதில் வைத்து பேசும் முன் அழுகையோடு மாமியாரின் குரல் குறுக்கிட்டது.

“கணேசா… இப்போவாச்சும் அம்மா சொல்றத கேளுடா உன்கூட பேச அந்த மனுஷன் போனைக்கூட தர மாட்டிக்கிறாரு. பக்கத்து வீட்டுல வாங்கி பேசுற நிலைமை. இப்போ நீ போன் வச்சா என்னை இனிமே உயிரோடையே பார்க்க முடியாது ஆமா” என

மாமியார் குரல் கேட்டதே அதிர்ச்சி என்றாள் அவரது மிரட்டல் அவளின் மொத்த உடலையும் நடுங்க வைத்து தூக்கிப்போட்டது. தன்னை சமன் செய்து பேசுவதற்குள், 

“சரி உனக்கு உன் புள்ள வேணும்ன்னா எனக்கு என்புள்ள வேணாமா? அதான் மனசு கேக்காம திரும்பப் போய் பரிகாரம் கேட்டுட்டு வந்தேன் இப்போ என்னமோ இருக்காமே… நாம சொன்ன தேதில சொன்ன நேரத்துல  பிள்ளைய எடுத்து குடுப்பாங்களாம் அப்படி பண்ணு ராசா… எதாச்சும் பேசு கேட்குதா? ஹலோ யப்பா கணேசா” நாச்சியார் கத்த

பேசவும் பயமாயிருந்தது வைக்கவும் தைரியமில்லை இருதலைகொல்லியாக தவித்து மெதுவே, “அ..அ..அத்தை” என்றதுதான் தாமதம்.

மருமகளின் குரலில் அடக்கி வைத்த ஆத்திரமெல்லாம் வெளியேற, “வாடியம்மா வாடி… வித்தாரக்கள்ளி கமுக்கமா என் மகன என்கிட்ட இருந்து பிரிச்சிட்டல்ல? சந்தோசமா… வழக்கம் போல வருசத்துக்கு ஒருக்கா ஜோசியம் பாக்கபோனா அங்க என் தலையில கல்லைத் தூக்கி போட்டான் ஆண்டவன். என் மூத்த புள்ள உன் வயித்துல வளருற வாரிசால அல்பாயுசுல போற போறானாமே… எவ்வளவோ சொன்னேன் அவன்கிட்ட அடுத்தது பெத்துக்கோ இதை கழுவிருன்னு கேட்டானா பாவிபயல்… என் புள்ளையால எனக்கு சாவு வரும்னா அது கூட எனக்கு சந்தோசம்தான்னு வசனம் பேசிட்டு அன்னையோட பேசுறதை விட்டுப்புட்டான்… பாவி பாதகத்தி எல்லாம் உன்னாலதாண்டி நீ நல்லாயிருப்பியா?” மேலும் பல வசைமொழிகளை வாரி வீச சாந்தாவின் மூளையோ கணவன் சொன்னதாகக் கூறிய வார்த்தையிலேயே திக்பிரமை பிடித்து நின்றுவிட்டது.

நாச்சியார் முழுதாகத் திட்டி போனை வைத்தும் அதைக் கீழிறக்காமல் காதிலேயே வைத்திருந்த மனைவியின் தோளைத் தட்டிய கணேசன், “சாந்தா என்ன யோசனை? அப்போதில் இருந்து கூப்பிட்டுட்டு இருக்கேன் அசையவே மாட்டிக்குற… யாரும்மா போன்ல?” என விரைந்து எழுந்தவள் கணவனை இறுக்கி அணைக்க துடித்தாள்.

பெரிய வயிறு அதற்கு தடையாய் இருப்பதால் தோள் வளைவில் முகம் புதைத்து சட்டையை இறுக்கி பிடிக்க கணேசன் பதட்டமானார். “என்னம்மா பண்ணுது? என்னாச்சி? வயிறு வலிக்குதா? ஹாஸ்பிடல் போலாமா?”

பதிலின்றி தலையை மறுப்பாக அசைத்து அப்படியே இருந்தாள். அழுகையை அடக்கியதால் முகம் செவசெவ என்று சிவந்திருந்தது.

வெகுநேரம் கழித்து கணவன் வேலைக்கு செல்ல வேண்டுமே என்றெண்ணி விலக, “என்னாச்சி சாந்தா சொன்னாதானே தெரியும்… யாரு போன்ல” சிறிது சந்தேகமாக கேட்டு வாங்கிப்பார்க்க

“ஹான் அது அதுவந்து யாரோ போன் பண்ணி மாதவன் இருக்காரான்னு கேட்டாங்க இல்லைன்னு சொல்லி வச்சிட்டேன்” முதல் பொய் பேசியதில் வியர்த்து ஒழுக புடவை முந்தானையால் துடைத்துவிட்டார்.

அதுக்கேன் நீ இப்படி பயப்படனும்? இரு நான் பண்றேன்.” அந்த நம்பருக்கு போடப்போக எங்கே கேட்டு மீண்டும் தாயிடம் சண்டை போடுவாறோ என்றஞ்சி, “இல்லை இல்லை அவங்க கொஞ்சம் மிரட்டுன மாதிரி பேசுனாங்களா அதான் கொஞ்சம் பயந்துட்டேன்”

அப்போது பார்த்து மீண்டும் போன் வந்து கடமை அழைக்க எடுத்து பேசி வைத்தவர், “கொஞ்சம் கவனமா இரும்மா. அவசரமா மில்லுக்கு போயிட்டு வரேன் ரெண்டு கோஷ்டி சண்டை போடுறாங்க போல பாத்துட்டு சீக்கிரம் வரேன் பத்திரமா இருந்துக்கோ… சாப்பிடு” என்று கூறிச்செல்ல

“ஹ்ம்ம் ஹ்ம்ம்” தவிர ஒன்றும் பேசாத வாய் இன்று, “நீங்களும் பத்திரமா போயிட்டு வாங்க” என்றிருந்தது. அதை கவனிக்காமல் சரி என்றதோடு புறப்பட்டுவிட்டார் கணேசன்.

சாந்தாவிற்கோ மாமியார் சொன்னதிலேயே மனம் வலம் வந்தது. உயிருக்கு ஆபத்தா? ஏன் என்கிட்ட சொல்லலை சொன்னா நான் கலைத்திருப்பேனே, ஒருவேளை அதனாலதான் சொல்லலையோ? கடவுளே இப்போ என்ன பண்ணுவேன்? அத்தை என்னமோ சொன்னாங்களே. அவங்க சொன்ன நாள்ல எடுத்தா இவருக்கு ஒன்னும் ஆகாதுல ஆமா அப்படிதான் பண்ணனும். அவரு வரட்டும் அத்தைகிட்ட பேசுனதை சொல்லி ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனும்” கிராமத்திலேயே ஊறி பெரியவர்கள் சொல்பேச்சு கேட்டே வளர்ந்த மனம் அஞ்சி நடுங்கியது.

கோவிலுக்குச் செல்ல வேண்டும் போல் இருக்க குளித்துக் கிளம்ப ஆரம்பித்தாள். அங்கே எதிர்பார்த்த அளவு கலவரம் நடக்கும்முன் கணேசன் தடுத்து நிறுத்திவிட தன்னிடத்தில் வந்து அமர்ந்தவருக்கு காலையில் நடந்தது நினைவுவந்து என்னவென்றே தெரியாமல் உறுத்தியது.

கை தன்பாட்டில் காலையில் வந்திருந்த எண்ணுக்கு அழைப்பு விடுத்தது.

“ஹலோ” கரகர குரல் அந்தபக்கம் கேட்க

“ஹலோ நான் கணேசன் பேசுறேன். காலையில் இந்த நம்பரில் இருந்து கூப்டீங்க அதான் என்ன விசயமான்னு கேட்க போன் பண்ணுனேன்”

“கணேசனா நல்லாருக்கியாப்பா நான் முத்துசாமி பேசுறேன்… காலையில் உங்கம்மா பேசுனாப்ல நீ பேசலையா? உம் பொஞ்சாதி எப்படி இருக்கா? நல்லாயிருக்காளா” வெள்ளந்தி மனிதர் சரசரவென்று பேசிக்கொண்டே செல்ல

திக்கித்திணறி பதில் கூறி போனை வைத்த கையோடு தலையில் கைவைத்தவர் தெரியகூடாத உண்மை தெரிந்ததில் மனைவியின் மனநிலை எப்படி இருக்கும் என்று கணிக்கமுடியாமல் வீடு நோக்கிச்சென்றார்.

கோவிலுக்குச் செல்ல பத்தடி தூரம் நடந்ததும் சாரல் சிறுதூறலாய் அவளை நனைக்க ஆரம்பித்தது. இந்த நிலைமையில் மழையில் நனையக்கூடாது என்பதால் குடை எடுத்துச்செல்ல வீட்டிற்கு வர, மாடியில் காயும் மகளின் சீருடை தெரிந்தது. ‘அடுத்தநாள் போட்டுட்டு போகணுமே’ என்றவாறு அதை எடுக்கவேண்டி மெதுவே மாடியேறினாள்.

‘வந்தது தான் வந்துட்டோம் எல்லாத்தையும் எடுப்போம்’ என்று அனைத்தையும் ஒற்றை தோளில் போட இடப்பக்கம் முழுதும் தொங்கியது துணிகள்.

வயிறு பார்வையை மறைத்து படிகள் கண்ணனுக்குப் புலப்படாததால் கவனமாக ஒவ்வொரு படியாக வலதுகையால் கம்பியைப் பற்றியபடி பாதி படிகள் இறங்கியிருக்க கணேசனின் கார் வீட்டின் முன் நின்றது.

மனைவியை மேலே பார்த்த கோவத்தில் கண்டனப்பார்வையோடு கணேசன் சட்டென்று இறங்க எதிர்பாராது அந்நேரத்தில் கணவனை கண்டதால் ஏற்பட்ட பரபரப்பில் சிறு புன்னகையோடு அடுத்த காலை வேகமாக எடுத்து வைத்ததுதான் தெரியும்.

வழுக்கித்தள்ளியது படி… பிடிமானத்திற்கு பிடித்திருந்த கம்பியிலும் மழை நீர் இருந்ததால் அதுவும் கைவிட, சமாளிக்கமுடியாமல் “ஆஆ…” என்றவாறு கடைசி பாதி படிகளில் உருண்டாள் சாந்தா.        

“சாந்தா…” அடிவயிற்றில் இருந்து அலறி கணேசன் பிடிக்க ஓடி வருவதற்குள் சாந்தாவின் பக்கவாட்டு வயிறும் நெஞ்சும் நச்சென்று பலமாய் தரையில் மோதியிருந்தது.

கதறி அழுதவாறு தன் சரிபாதியை அள்ளிக்கொண்டு காரில் கிடத்த அதனைக் கேட்டுக்கொண்டே தாயும் உள்ளிருந்த சேயும் மயங்கிச் சரிந்தனர்.

அலைகடல் ஆர்ப்பரிக்கும்…

error: Content is protected !!