am2

am2

ஆசை முகம் 2

 

சென்னையில் இயங்கி வரும் வேந்தன் க்ரூப்ஸ்!

சகோதரர்கள் மூவர். வெற்றி வேந்தன், எழில் வேந்தன், கலை வேந்தன்.

முதலாமவர், மற்றும் மூன்றாமவர் இருவரும் பெயருக்கு வர்க்கிங் பார்ட்னர்.

மூவரின் தந்தை, சிறியளவில் வைத்து நடத்திய மெக்கானிக் ஷாப்பை அடுத்த அளவிற்கு கொண்டு வர யோசித்து, வேந்தன் ஸ்டோர்ஸ், வேந்தன் எலெக்ட்ரிகல்ஸ், வேந்தன் ஆட்டோமொபைல்ஸ், வேந்தன் அபார்ட்மெண்ட்ஸ் என அடுத்தடுத்து வளர்ச்சி கண்டிருக்கிறது.

இந்த வளர்ச்சியின் முக்கிய பங்கு எழில் வேந்தனுக்கு மட்டுமே.

ஒற்றையாய் தனித்திருந்த நேரத்தை, விழித்திருந்து செயல்படுத்தியதன் விளைவு, இத்தனையும் சாத்தியமாகியிருந்தது.

ஓராண்டில் கண்ட வளர்ச்சியல்ல! கடுமையான பதினைந்து ஆண்டுகள் தவம்! அதற்காக தனது உழைப்பு, நேரம் அனைத்தையும் செலவிட்டிருக்கிறான் என்றால் அது மிகையல்ல!

முப்பதுகளுக்கு மேலாகியும், இன்னும் தொழிலின் பின்னே அசுரத்தனமாக ஒடிக் கொண்டிருக்கிறான்.

சிரிப்பைத் தேக்கிய உதடுகள்! ஒவ்வொரு நொடியையும் வீணாக்க எண்ணாத திட்டமிடல்கள்!

மாநிறம்! அடர்ந்த கேசம். அழகன்!

கனன்று கொண்டிருந்த உள்ளக் கனலை, போதை வஸ்துகளின் பின்னே மறைந்து இறை கொடாது, திமிறிக் கொண்டு அதை மறக்க மேற்கொண்ட, ஒவ்வொரு ஆத்மார்த்தமான செயலும், இன்று வளர்ச்சி கண்டிருந்தது.

காதல் பிடிபடுமுன்னே பறிகொடுக்கப்பட்டது!

திருமணம் பற்றி இதுவரை பிடிகொடுக்கவில்லை.

கனவுகள் உண்டு.

புத்தகங்கள் அவனின் இளைப்பாறல்கள்!

புதுமெட்டுகள் அனைத்தும் தாலாட்டுகள்!

ரவிவர்மன் அளவிற்கு இல்லையென்றாலும், தூரிகையின் விசிறி அவன்.

காதலியை மட்டுமே இதுவரை வரைந்த கைகள்!

ஆனால் யாருமறியாத காதலியை இதய சிம்மாசனத்தில் பூஜிப்பதும் யாருமறியாத சிதம்பர ரகசியம்!

அவள்தான் வேந்தனை இயக்குகிறாள். விரட்டுகிறாள். தாலாட்டுகிறாள்! அனைத்திற்கும் அவளே காரணம்!

அவனிதயத்தில் சில ஆண்டுகளாக கனன்று கொண்டிருக்கும் பாடல்,

 

ஆசை முகம் மறந்து போச்சே -இதை
யாரிடம் சொல்வேனடி தோழி
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் – எனில்
நினைவு முகம் மறக்கலாமோ
(ஆசை)

கண்ணில் தெரியுதொரு தோற்றம் – அதில்
கண்ணனழகு முழுதில்லை
நண்ணு முகவடிவு காணில் – அந்த
நல்ல மலர்ச் சிரிப்பைக் காணோம்
(ஆசை)

தேனை மறந்திருக்கும் வண்டும் – ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் – இந்த
வையம் முழுதுமில்லை தோழி
(ஆசை)

கண்ணன் முகம் மறந்துபோனால் – இந்த
கண்களிருந்து பயனுண்டோ
வண்ணப் படமுமில்லை கண்டாய் – இனி
வாழும் வழியென்னடி தோழி
(ஆசை)

 

இதுபோன்ற சில பாடலின் துணையோடுதான் இத்தனை ஆண்டுகள் வித்தாரமாகக் கடந்து வந்திருக்கிறான் என்றால் அது மிகையல்ல!

 

சகோதரிகள் இருவர்!

மூத்த சகோதரிக்கு, தனது மகளை எப்படியாவது தம்பிக்கு திருமணம் செய்திட ஆசை.

ஆனால் மகளோ, “ம்மா! உனக்கே இது அநியாயமா தெரியலையா? பாதி கிழவன் அவரு.  அவருக்குப் போயி என்னை கல்யாணம் பண்ணணும்னு சொல்றியே.  உண்மையிலேயே நீதான் என்னைப்  பெத்தியா?”, என சண்டை போட்டாலும்

“யாரப்பாத்து என்ன சொல்றடீ. எந்தம்பி முன்ன இருவத்தைஞ்சு வயசுக்காரன் வந்து நின்னாலும் அவந்தான் ஹேண்ட்சம்மா இருப்பான்.  உண்மையச் சொல்லு”, என மகளிடம் தர்க்கத்தில் ஈடுபட

“உந்தம்பியா போயிட்டாரு.  இல்லைனா நீயே அவரை கட்டிருந்திருப்பபோல!”, என தாயிடம் பேசி, தாயின் வாயை அடைத்திருந்தாள், மித்ராதரணி.

“என்னப் பேச்சு பேசுறடீ!”, என மகளை அடிக்க வர, அதற்குள் மகள் இடத்தைக் கடந்திருந்தாள்.

அவ்வப்போது மகளுக்கு புரியும்படி எடுத்துச் சொல்கிறார்.  ஆனால் மித்ரா பிடிவாதமாக மறுத்துவிட்டாள்.

வேந்தன் தனது தாயுடன் வசித்து வருகிறான்.

மற்றவர்கள் தனிதனிக் குடும்பமாக அருகருகே வசித்து வருகின்றனர்.

வேந்தன் அனைத்தையும் செம்மையாகச் செய்து தந்திட, பேருக்கு அலுவலகத்திற்குச் செல்லவும், வருகின்ற வருவாயில் மேல்தட்டு வர்க்கம்போல காசைத் தண்ணீராக செலவளித்து, இன்பமாக வாழ்ந்து வருகின்றனர், சகோதரர்கள் இருவரும்.

சுயமாய் இந்த அளவிற்கு வளர்ச்சி என்பதால், அனைத்தும் வேந்தனின் பெயரிலேயே ஆரம்பிக்கப்பட்டு, சகோதரர்களின் மேற்பார்வையில், வேந்தன் ஸ்டோர்ஸ் மற்றும் வேந்தன் எலெக்ட்ரிகல்ஸ் இரண்டையும் ஒப்படைத்திருந்தான்.

மேலும், தற்போதைய வேந்தன் அபார்ட்மெண்ட் என்கிற புதிய நிறுவனத்தின் வாயிலாக, கட்டுமானம் முடிந்த வீடுகள், அபார்ட்மெண்ட்களை உருவாக்கி, பிளாட்கள், வீடுகளாக விற்பதில் கவனம் செலுத்தி வருகிறான்.

அதற்கான மெட்டீரியல்ஸ் இதர தேவையான அனைத்து பொருட்களும், தங்களது நிறுவனங்களிலிருந்தே சப்ளை செய்து கொள்வதால், ஒன்றைச் சார்ந்து, மற்றொரு நிறுவனம் என நல்ல வருவாய்.

அபார்ட்மெண்ட் நிறுவனத்திற்கு வேண்டிய, கட்டிட பொறியாளர்கள், வடிவமைப்பாளர்கள் என அனைத்திற்கும், நண்பர்களின் ஒத்துழைப்போடு ஆரம்பித்து, திறம்பட நடத்தி வருகிறான்.

வெளியில் வேலை பார்த்தவர்களை, பகுதிநேரப் பணிக்கு தன்னிடம் வரும்படி கேட்டுக் கொண்டு துவங்கியது, இன்று முழு நேரமாக அனைவரும் வேந்தன் க்ரூப்ஸ்ஸிலேயே பணியை மாற்றிக் கொள்ளும் அளவிற்கு நல்ல வருவாய்.

சகோதரர்கள் மட்டுமன்றி, நண்பர்களையும் அரவணைத்துச் செல்வதில் வேந்தனுக்கு நிகர் யாருமில்லை எனலாம்.

மூன்று மாதங்களாக வெளிநாடுகளில் பயணம் மேற்கொண்டிருந்தவன், இன்று இந்தியா திரும்புகிறான் என பரபரப்பாக அனைத்து அலுவலகங்களும் இயங்கிக் கொண்டிருந்தது.

ஒரு வீட்டிலிருந்து வந்த அழைப்பில், மீரா, நிஷா, மாதவி, ஷீபா, கயல் ஐவரும் கான்ஃபெரன்ஸ் அழைப்பில் காலையிலேயே இணைந்திருந்தனர்.

“ஏய் இன்னிக்கு வேந்தன் இண்டியா ரிட்டன்பா”

“நிஜமாவா?”

அனைவரது குரலிலும் குதூகலம்.

“இந்த தடவையாவது எப்டியாவது ஒரு பொண்ணைப் பாத்து கல்யாணம் பண்ணணும்பா”, மாதவி

“அவன் பிடி கொடுத்தாதானே பண்ண முடியும் மாது.  நமக்கென்ன நாம படற கஷ்டத்தை அவன் மட்டும் அனுபவிக்காம ஹாயா சுத்திண்டு வரானேனு காண்டு இல்லாமயா இருக்கோம்”, என அந்நேரத்திலும் உண்மையைக் கூறிய மீரா

மீராவின் பேச்சைக் கேட்டு தலையிலடித்தபடியே வெளியேறிய சித்திக், மற்ற ஆண்களை கான்ஃபெரன்ஸில் அழைத்தான்.

“வேந்தன் வரான்டா.  இதுக இப்பவும் அடுத்த புராஜெக்ட்னு ஒன்னு ஸ்டார்ட் பண்ணப் போதுங்களாம்.  எல்லாம் வேஸ்ட்டுனு எங்க புரியுது.  இது கதைக்காகாது.  நாம எல்லாம் பிரேக்ஃபாஸ்ட்கு வெளியே பாத்துக்குவோம்”, என்றபடியே வெளியேறியிருந்தான்,  மீராவின் காதல் கணவன் சித்திக்.

“நமக்குத் தெரியுமுன்னே வேந்தன் வரது எப்டிடா இந்த லேடீஸ்கு தெரியுது”

“அவங்க எல்லாரும் வாட்சப் க்ரூப்ல இருக்காங்க”

“ரொம்ப அநியாயம்டா இது”

“எதாவது சொல்லப் போனா எல்லாம் நம்ம பக்கம் திரும்பிரும்டா ஸ்”, என ஒரு குரல் அடக்கியது.

ஐவர் வீட்டிலும், நிலைமை புரிய அவரவர் வீட்டு ஆண்கள், காலை உணவுக்காக காத்திராமல் கிளம்பி வெளியில் செல்ல ஆயத்தமாயினர்.

தங்களது உதவாக்கரை புருசன்களின் வருமானத்தை (இப்டித்தான் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்) உயர்த்தி, தங்களையும் இந்தச் சமுதாயத்தில் நிமிரச் செய்திட்ட வேந்தனுக்காக இந்தப் பெண்கள் இன்னும் எவ்வளவோ செய்வார்கள்.

இந்த ஐவர் அளவிற்கும், வேந்தன் திருமணத்தில் ஆர்வம் காட்டாதவர்கள் உள்ளனர்.

ஆம், அவனது சகோதரிகள் மற்றும் அந்த வீட்டிற்கு வந்த ஓரகத்திகள்.

அதற்காக வேந்தன் வருந்தியதில்லை.

வேந்தனின் தாயார் அனுசியா அவர்களின் தலைமையில் இயங்கும் இந்த ஐவர் குழு, இதுவரை மேற்கொண்ட முயற்சிகள் அனைத்துமே தோல்வியை மட்டுமே தழுவியுள்ளது.  இந்த முறையேனும் வெற்றி கிட்டுமா எனப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

……………………………………………

ஒரு வாரத்திற்குமேல் தாக்குபிடிக்க முடியவில்லை முத்துரங்கனால்.  பொறுத்துப் பொறுத்து, மனதை விட்டிருந்தார் மனிதர். 

விழாமலேயே கீழே போய் படுத்துக் கொண்டு, “வீட்டுக்குள்ள சிலது நுழைஞ்சதுமே நமக்கு நேரம் சரியில்லைனு காட்டிக் குடுத்துருச்சே.  கடவுளே எனக்கு ஒன்னுன்னா அது போகட்டும்னு இருந்திருவேன்.  ஆனா எம்புள்ளை, புருசனுக்கு ஒன்னுன்னா யாரையும் சும்மா விடமாட்டேன்”, என ரௌத்திரமாக கத்தி மகனிடம் தனது பேச்சை நம்ப வைக்கும் முயற்சியில் இறங்கியவரை முத்துரங்கன் எட்டிக்கூடப் பார்க்கவில்லை.

எழில் சென்று பார்த்துவிட்டு, திரும்பியிருந்தாள்.

மகனுக்கு எழிலை திருமணம் முடிக்கும் தனது எண்ணத்திற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக, சுகுணா நடந்து கொள்வதைப் புரிந்து கொண்டவர், மகனிடம் நேரடியாகவே அழைத்துப் பேசிவிட்டார்.

“அந்தப் புள்ளை கஞ்சிக்கில்லாம உங்க வீட்ல வந்திருக்கல.  அதை எம்புட்டுச் சொன்னாலும் அந்த லூசு சிறுக்கிக்கு என்னால புரிய வைக்க முடியும்னு தெரியல.  நீயும் உங்காத்தாவுக்குத்தான் பக்கவாத்தியாமா இருப்ப போல.  உந்தம்பியும் அப்டித்தான் இருக்கான்.  என்னால அந்தப் புள்ளையோட நிம்மதியோ, எதிர்காலமோ கெட வேணானு முடிவு பண்ணிட்டேன்.  இனி நீங்க யாரு வருத்தப்பட்டும் ஒன்னுஞ் செய்ய முடியாது”, என்று முடிவாக உரைத்தவர், தனது தங்கைக்கு சேரும் பகுதியை முன்பே கொடுத்திருக்க, அவரது தாய், தந்தை பேத்திக்கென இறுதியில் சேர்த்து வைத்துச் சென்ற அசையும், அசையா சொத்துகள் அனைத்தையும் பத்தே நாள்களில் வந்த விலைக்கு விற்றிருந்தார்.

சில நகைகளை மட்டும் வைத்துக் கொண்டு மற்றதை அனைத்தையும் விற்றிருந்தார்.

நகைகளை மட்டும் பேங்க் லாக்கரில் வைக்க ஏற்பாடு செய்தார்.

நிதானமாக விற்கும் நிலையில் இன்னும் கூடுதலாகவே தொகை கிட்டியிருக்க வாய்ப்பு இருந்ததையும் அறிந்தே இருந்தார்.

முத்துரங்கனின் தந்தை பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றி, ஓய்வு பெற்றிருந்தவர்.

நல்ல கணிசமான ஓய்வூதியம் கிடைக்கப்பெற்றதால், பேத்திக்கு தங்களால் ஆன வகையில் சேர்த்து வைத்துச் சென்றிருந்தார்.

இதுநாள் வரை பொறுமையோடு இருந்த முத்துரங்கனுக்கு, சுகுணாவின் குரூரமான செயல் மற்றும் பேச்சினால், அன்று இரவே நெஞ்சு வலி என்று துடித்திருந்தார்.

நான்கு நாள்கள் மருத்துவமனையில் வாசம்.

அப்போது யோசித்து ஒரு முடிவுக்கு வந்திருந்தார்.

தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டே இந்த அவசர முடிவுக்கு வந்திருந்தார் மனிதர்.

மனிதனது நிலையை சரியாகக் கணித்திட இயலாது அல்லவா.

அதனால் தாமதிக்காமல் முடிவெடுத்துவிட்டார்.

கணிசமான தொகை வந்திருக்கவே, அதை அப்படியே எழில்வாணியின் பெயரில் டெபாசிட் செய்துவிட்டு, மாதந்தோறும் கிடைக்கும்படி செய்தவர், அவளின் எதிர்பார்ப்பிற்கிணங்க, சென்னையில் உள்ள மகளிர் விடுதி ஒன்றில் சேர்த்து விட்டிருந்தார்.

இனி எதற்காகவும், யாரிடமும் எழில்வாணி கையேந்தி நிற்கும் நிலை இல்லை.

தொகையைப் பற்றி பெண்ணிடம் மட்டுமே பகிர்ந்து கொண்டவர், “கணிசமான தொகை உம்பேருல இருக்கு.  யாருக்கும் இந்த விசயம் தெரிய வேணாம்.  அது உனக்கு சேஃப்டி இல்லை.  நீ புத்திசாலிப்புள்ள.  உனக்கு நான் சொல்லணும்னு அவசியமில்லை.  இருந்தாலும் பாத்து நடந்துக்கணும்”, என்று அறிவுரையைக் கூற மறக்கவில்லை.

“வட்டிப்பணம் மட்டுமே இருவதுல இருந்து இருவந்தஞ்சாயிரம் உனக்கு மாசம் மாசம் கிடைக்கும்.  வேலைக்குப் போகணும்னு இப்ப அவசியமில்லை.  நல்லா நீ நினைச்சதைப் படிச்சு முன்னுக்கு வரணும்.  மாமாவுக்கு எப்பல்லாம் வந்து உன்னைப் பாக்க முடியுதோ அப்பல்லாம் வந்து பாத்துக்குவேன்”, என தலையை வருடி விடைபெற்றிருந்தார்.

எழிலுக்கு மிகவும் சிறு வயது முதலே தனிமை பழகியிருக்க, பெரிய இழப்பாகத் தோன்றவில்லை.

அழுகை என்பதெல்லாம் மறந்தேபோயிருந்தது.

இல்லை… தனிமையில் தலையணையோடு அழுதழுது கண்ணில் நீர் வற்றிப் போயிருந்தது என்பதுதான் உண்மை.

சிறு வயதில் தாயின் அருகாமைக்கு, அதன்பின், உறவுகளின் அருகாமைக்கு இப்படியே பதினேழு ஆண்டுகள் சென்றிருந்தது.

ஏக்கங்கள் இல்லாமல் இல்லை.

ஆனால் அவை அவளை ஏங்கச் செய்திட முடியாதபடி, தனது நேரங்களை முறையாக செலவளித்திடப் பழகியிருந்தாள் பெண்.

முத்துரங்கனின் நண்பர் சத்தியேந்திரன் என்பவர் சென்னையில் இருக்கவே அவரிடம் பெண்ணை அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்தவர், “இதுதான் எந்தங்கை பொண்ணு.  இந்தப் பொண்ணைப் படிக்க வைக்கத்தான் நல்லா காலேஜ்ஜா பாத்து விசாரிச்சு சொல்லச் சொன்னேன்”, என்றிட

“ஏய்.. அதுக்குள்ள இவ்வளவு பெரிய பொண்ணாயிருச்சா.  சின்னப் புள்ளைல பாத்தது.  அப்படியே நம்ம வேணி மாதிரியே இருக்கு.  என்ன அதவிட இன்னும் ஒரு பிடி வளர்ந்திருக்கு!”

சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தவர்கள், “எதாவது அவசரம்னு கூப்பிட்டா நான் வர லேட்டாச்சுனா கொஞ்சம் பாத்துக்க.  பழகற வரை.  அப்புறம் அதுவே சமாளிச்சிக்கும்!”, என்று விடைபெற்றிருந்தனர்.

சென்னைக்கு இதுவே முதல்முறையாக வந்திருக்கிறாள் எழில்வாணி.

ஆனாலும் நிறைய புத்தகங்கள் சென்னையைப் பற்றி விவரித்ததை, தனது கற்பனையில் வடிவமைத்திருந்தவளுக்கு, புதிதாகத் தோன்றவில்லை.

பழகிய இடமாகவே காட்சியளித்தது.  சற்றுத் திணறல் இருக்கவே செய்தது.

மிகவும் தைரியமாகவே மாமனிடம் விடைபெற்றுக் கொண்டாள்.

எழில் வீட்டை விட்டு வெளியே வந்தபிறகு, சுகுணாவிற்கு நிம்மதி ஒருபுறம்.  மகன்களுக்கு இனி தான் விரும்பியதுபோல மருமகள்களை கொண்டுவரலாம் என்கிற தனது எண்ணம் நினைவேறிப் போனதாகவே மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்.

எழிலைக் காட்டிலும் இன்னும் பத்து, பதினைந்து மடங்கு சொத்துகள் தங்களிடம் இருக்க, அதைக்காட்டி இன்னும் வரப்போகும் மருமகள்களிடம் எவ்வளவு வாங்கி தனது நிலையை அதிகப்படுத்தலாம் என்கிற எதிர்பார்ப்பு மட்டுமே சுகுணாவிற்கு.

எண்ணங்கள் சாத்தியமானதா?

ஆசைகள் நிறைவேறியதா?

////////////////////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!