am3

am3

ஆசை முகம் 3

அனுசியாவிற்கு மகன் வந்தது முதலே மகனைக் கவனிப்பதிலும், மகனுக்கு பெண் பார்ப்பது சம்பந்தமாகவும் பொழுது வேகமாகச் சென்றது.

தனது மேற்பார்வையில், மகனது நண்பர்களின் மனைவிகள் வாயிலாக வரவழைத்த அனைத்து மணமகளின் போட்டோவையும் பார்க்காமலேயே நிராகரித்த மகனைக் கண்டு கோபம் வந்தாலும், கட்டுக்குள் வைத்து அமைதி காத்தார் அனுசியா.

வேந்தன், “ம்மா என்ன அவசரம்.  மெதுவா பாப்போம்”, என வழமைபோலக் கூறவே

“இன்னும் மெதுவானா, நீ கம்பு ஊனி கிழவனா ஆனப்புறமா!”, என மகனைக் கேட்டு திகைக்கச் செய்தார்.

“ம்மா. கடைசியில நீங்களும் என்னை கிண்டல் பண்ண ஆரம்பிச்சிட்டீங்க!”

“கல்யாணம் பண்ணத்தான் பொண்ணு பாக்கறேன்.  நீ என்னவோ சதாபிசேகம் பண்ணற மாதிரிச் சொல்ற?”

“நல்லாத்தான் பேசுறீங்க!”

“வேற வழி! மயிலே மயிலே இறகு போடுன்னா எப்டிடா போடும்!”

“அதுக்கு! மயிலைப் புடிச்சு, உங்களுக்கு வேணுங்கற இறகை எடுக்கப் போறீங்களாக்கும்!”

“வேற என்ன செய்யச் சொல்ற?”

“நான் சொன்னா யாரு கேக்கறா?”

“நீ சொன்னதைக் கேக்கத்தான் ஒரு க்ரூப்பே ஃபார்ம் பண்ணியிருக்கோம்.  யாருகிட்டயாவது நீ என்னைக்காவது வாயைத் திறந்திருக்கியா?”, ஆதங்கத்தோடு அனுசியா கோபமாகவே இரைஞ்சினார்.

அத்தோடு, “சரி அவங்கட்ட பேச ஒரு மாதிரி இருக்குன்னா பெத்தவ எங்கிட்டச் சொல்ல உனக்கு என்ன?”, என மகனிடம் நேரடியாகவே வினவ

“என்னை இப்டியே விட்ருங்கம்மா!”, என கெஞ்சும் குரலில் கேட்ட மகனை

“என்னதான் உன் பிரச்சனை.  அந்த ரூமுக்குள்ள ஒரு நாளு கள்ளச்சாவி போட்டு திறந்து பாத்தாதான் விசயம் என்னனு பிடிபடும்போல!”, என வேந்தனின் அறையைக் காட்டிப் பேசினார்.

“அதுல ஒன்னுமே இல்லை!”, என கள்ளச் சிரிப்பு சிரித்தவனிடம்

“கள்ளா! அப்றம் ஏன் அந்த ரூமைப் பூட்டிப் பூட்டி வச்சே அட காக்கற? ஒன்னுமில்லைல!”, என மகனின் முகத்தருகே ஆட்காட்டி விரலைக் காட்டி கேட்டவர்

“வா! இப்பவே வந்து கதவைத் திறந்து விடு!  பாத்துட்டு நானும் கன்ஃபார்ம் பண்ணிக்கிறேன்!”, என முன்னே எழுந்து நடக்க

பாவம்போல தாயின் பின்னே வந்த வேந்தனை, “திறக்க மாட்டன்னுதான் நான் சொல்றேன்ல!  அப்ப விசயம் எதுவோ இருக்கு!  ஆனா வாயைத் திறக்க மாட்டிங்கற! சரியான கல்லூழிமங்கன்டா நீயி!”, என்று மீண்டும் மகனிடம் தனது தர்க்கத்தைத் துவங்கிட

“நான் நினைச்சா இப்பவே இந்தக் கதவைத் திறந்து உள்ள என்ன இருக்குனு பாக்க முடியும்.   தலைக்கு மேல வளர்ந்த புள்ளைய அசிங்கப்படுத்தக் கூடாதுனு யோசிக்கறேன்.  ஆனா நீ.. வயசானவன்னுகூட யோசிக்காம எங்கிட்டயே உன் திருகுதாளத்தையெல்லாம் காட்டற!  இன்னும் எத்தனை நாளுக்குன்னு நானும் பாக்கறேன்டா!”, என மகனிடம் பேசிவிட்டு அங்கிருந்து கோபமாக நகர்ந்தார் அனுசியா

வேகமாகச் சென்று மூச்சிரைக்கச் சென்று அமர்ந்த தாயின் காலருகே அமர்ந்து, தாயில் மடியில் தலைவைத்துக் கொண்ட வேந்தன், “ம்மா கோபப்படாதீங்கம்மா! அங்க எதுவுமேயில்லை.  உங்க விருப்பப்படி பாருங்க.  எனக்குப் புடிக்கற மாதிரி பாருங்க!”, என்றதும்

“அதைத்தாணடா இவ்வளவு நேரம் பேசறேன். உனக்குப் புடிச்சது எப்படினு எனக்கு ஒரு ஐடியா வேணும்ல!  அதுக்குத்தான் அந்த ரூமைத் திறந்து விடுங்கறேன்!”, என தனது நிலையிலேயே நின்றிருந்தார் அனுசியா.

தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்த சாவியை தாயின் கையில் ஒப்படைத்தவன், அப்படியே அமர்ந்துவிட்டான்.

வேந்தனது சிகையை தடவிக் கொடுத்தபடியே சற்று நேரம் அமைதியாக இருந்தவர், “அவிங்களைப் பெத்த அதே வயிறுதான் உன்னையும் எந்தக் குறையுமில்லாமப் பெத்துச்சு”, என தனது வயிற்றைத் தொட்டுக் கூறியவர்,

“அவங்கள்லாம் பொண்டாட்டி, புள்ளைன்னு சந்தோசமா இருக்கும்போது, காசு பின்னாடியும், தொழில்பின்னாடியும் ஓடி, ஒடி ஓஞ்சு போயி வர்ற.  அப்டி ஓஞ்சு போயி வந்தா உன்னை ஆசையாப் பாத்துக்க, உங்கூட சந்தோசமா வாழனு, உனக்கு நல்லா சமைச்சுப் போட, உன்னோட எல்லாத்திலயும் பங்கெடுத்துக்க ஒருத்தி இல்லைனு பாக்கும்போது, நான் வாழ்ந்த வாழ்க்கையில பூரணமே இல்லாத உணர்வு.  எல்லாரைப்போல நீயும், குடும்பம் கோத்திரம்னு இருந்தா அதுதான் எனக்கு சந்தோசம்.  அப்பத்தான் என்னோட ஆன்மா செத்தாலும் சாந்தி அடையும் வேந்தா.  இப்டியே என்னை ஏமாத்திட்டே திரிஞ்சா காலத்துக்கும் உன்னையேதான் சுத்தி வரணும்”, என்றவர்

“ஆஃபீஸ்கு நேரமாயிருச்சு.  கிளம்பலையா?”, என வேந்தனிடம் கேட்க

பாவம்போல முகத்தை வைத்துக் கொண்டு தலையை ஆட்டிய மகனிடம், “என்ன ரொம்ப யோசிக்கிறியா?”,

மறுத்துத் தலையை ஆட்டிய மகனிடம், “இன்னும் ஒரு வாரத்தில உனக்கு பொண்ணு ரெடி”, என்று மிகவும் ஆணித்தரமாகக் கூறிய தாய் அனுசியாவை ஆச்சர்யமாகப் பார்த்தவாறே அலுவலகத்திற்கு கிளம்பிவிட்டான் வேந்தன்.

………………

கல்லூரிகள் திறக்க இன்னும் நாட்கள் இருந்தது.

அதுவரை விடுதியில் அடைந்து கிடக்க வாணிக்கு மிகவும் சங்கடமாக உணர்ந்தாள்.

சிட்டாக இல்லையென்றாலும், வெட்டியாக பொழுதுபோக்கி இதுவரை அனுபவமில்லாதவள்.

முதல் இரண்டு தினங்கள் ஒன்றும் தெரியவில்லை. 

அறைக்குள் இருவர் தங்குமாறு அமைக்கப்பட்டிருந்தது. இரண்டு சிங்கிள் காட். திசைக்கு ஒன்றாக சுவரை ஒட்டிப் போடப்பட்டிருந்தது.  இரண்டு வார்ட்ரோப்.  அதில் ஆளுக்கொன்றை பயன்படுத்திக் கொள்ளுமாறு பாதுகாப்பாகவே அமைக்கப்பட்டிருந்தது.

இரண்டு ஒற்றைக் கட்டில்களுக்கு இடையே நாலடி தூரம்.

நீளமான டேபிள் ஒன்று. இருவரும் பயன்படுத்தும்படியாக பொதுவாகப் போடப்பட்டிருந்தது. இரண்டு சேர்கள். இதுதான் மெயின் ஏரியா.

அடுத்து திரைச்சீலைத் தடுப்பிற்குப் பின்னே  மேடையுடன் கூடிய கிச்சன். சிறியளவு ஷெல்ஃப்.

இண்டக்சன் ஸ்டவ் ஒன்று அங்கு இருந்தது.

எழில்வாணியின் அறையில் இந்துமதி என்பார் முன்பே தங்கியிருந்தார்.

அதற்கு எதிரே ஒரு ஓரத்தில் வாஷ்பேசின், மற்றொரு புறம் சிங்க். அந்த இடத்தை ஒட்டினாற்போல, அட்டாச்டு டாய்லட், பாத்ரூம்.

வந்த அன்று பொருள்களை தரவாரியாக பிரித்து, அடுக்கி வைத்தாள். புத்தகங்கள் ஒரு அடுக்கிலும், துணிமணிகள் ஒரு அடுக்கிலும், அத்தியாவசிய பொருள்கள் சிலவற்றை மூன்றாம் அடுக்கிலும் வைத்திருந்தாள்.

அடுத்த நாள் சிலவற்றை மாற்றி அமைத்துப் பார்த்தாள். அதற்குமேல் அந்த அறைக்குள் சுற்றிப் பார்க்க ஒன்றுமில்லை.

அதன்பின் பொழுது போவதே நெட்டித் தள்ளும்படியான ஒரு உணர்வு.

மாலை நேரங்களில், மிகவும் நெருக்கடியான ஜனநெரிசலில் வெளியே சென்று வந்தாள்.

பொருள்கள் சிலவற்றை மட்டும் வாங்கிக் கொண்டு திரும்பியிருந்தாள்.

அலுவலகங்களில் பணிபுரிவோரிடம், அருகே நூலகங்கள் இருக்கிறதா எனக் கேட்டறிந்து கொண்டாள்.

செல்லும் வழித்தடம், பேருந்து எண் ஆகியவற்றை வாங்கிக் கொண்டு அடுத்த நாள் காலையில் சென்று பார்த்து வந்தாள்.

அங்கு அப்படியொன்றும் கூட்டம் இல்லை.

மதியம் வரை அன்றையப் பொழுதை நெட்டித் தள்ளினாள்.

மதியத்திற்குமேல் உணவிற்காக திரும்பியவள், அடுத்து அறையில் இருந்தபடியே யோசித்தாள்.

விடுமுறை காலமாக இருப்பதால், விடுமுறையை கழிக்க ஏதுவான, நுண்கலை (ஃபைன் ஆர்ட்ஸ்) சம்பந்தமான வரைதல், பெயிண்டிங், எம்ப்ராய்டரி, க்ளாஸ் பெயிண்டிங், ஃபேப்ரிக் பெயிண்டிங், மெஹந்தி டிசைனிங், பாட் டிசைனிங், க்ளே டிசைனிங் போன்ற விசயங்களை ஆன்லைனில் எடுப்பது பற்றி தீவிரமாக யோசித்தாள்.

விடுமுறை தினத்தில் தொலைக்காட்சியின் முன்னே நேரத்தை செலவளிப்பதை பயன்மிக்கதாக செலவளிக்க நிச்சயமாக இது ஒரு அறிய வாய்ப்பு என்பதால், நல்ல வரவேற்பு கிடைக்கும் என முடிவு செய்தாள்.

தனியே அதற்காக புதிய அலைபேசி எண்ணை வாங்கி அதன்மூலம் வாட்சப்பில் விளம்பரம் செய்யும் வகையில் ஸ்டேட்டசில் வைத்தாள்.

ஒவ்வொரு டிசைனிங் முறைமைக்கும் ஏற்ற வீடியோக்களை தானே உருவாக்கி, கண்கவரும் வகையில் வைத்து, விடுதியில் இருந்தவர்களிடமும் இதுபற்றிக் கூறி, அவர்கள் எண்ணிலிருந்தும் க்ரூப்களுக்கு அனுப்பச் செய்தாள்.

நான்கே நாள்களில் முப்பத்தைந்து நபர்கள் கற்றுக் கொள்ளும் ஆவலோடு கேட்டிருக்க, அதை ஆன்லைன் மூலமாக எடுக்கத் திட்டமிட்டாள்.

முதலில் தேவையான பொருள்களை, குறிப்பிட்ட இடத்தில் உள்ள நிறுவனத்தில் இருந்து அவரவர் வாங்கிக் கொண்டு குறிப்பிட்ட நாளில் வகுப்புகளைத் துவங்கினாள்.

ஆரம்பத்தில் ஒரு மணி நேரம் எனத் துவங்கிய வகுப்பு, அடுத்தடுத்து அதிகமான மாணாக்கர்கள் சேரவே, இரண்டு மூன்று மணி நேரம் என வகுப்புகள் நீண்டது.

ஆன்லைன் பேமேண்ட் என்பதால் பணப்பிரச்சனை ஏதுமின்றி, வார நாள்களில் மட்டும் நடத்தத் துவங்கினாள்.

சிலர் ஆர்வம் கொண்டு, வாரயிறுதியில் எங்களுக்குத் தனியாக எடுக்கலாமா எனக்கேட்க, அதையும் ஒப்புக் கொண்டு, முழுநேரமும் மிகவும் பிஸியாகியிருந்தாள் எழில்வாணி.

தினசரி முத்துரங்கன் எழில்வாணியிடம் அழைத்துப் பேசினார்.

அவரது பேச்சில் இருந்த விரக்தியைக் கண்டு கொண்டாலும், எழில்வாணி எதையும் விசாரிக்கவில்லை.

இளமாறனைப் பற்றியும் சிறிதுநேரம் புலம்பினார்.

“மனசுக்குள்ள ஆசைய வச்சிக்கிட்டிருந்து என்ன பிரயோசனம். அவனுக்கு வேணுனா அவனாதான் முன்னாடி வந்து சொல்லணும்.  ஆத்தாகிட்ட ஒரு பேச்சு.  நம்மளை பாத்தவுடனே பாவப்பட்டவன் கணக்கா முகத்தை தூக்கி வச்சிக்கிட்டா, இவன் மனசுக்குள்ள என்ன இருக்குனு நானென்ன கனவா கண்டேன்.  உனக்குத் தெரியாததாப்பாங்கறான்.  வெட்டிப்பய.  உங்கம்மாவை எதித்துட்டு அந்தப்புள்ளைய நல்லா வச்சிப்பேனு எனக்கு உறுதி குடுனா, திருதிருனு முழிக்கிறான். அப்ப இந்தப் பயலுக்கு எதுக்கு ஆசை.  அதான் பட்டுத் திரிஞ்சாத்தான் புத்தி வரும்னா, வரட்டும்னு விட்டுட்டேன்!”, என புலம்பியபோதும் கேட்டுக் கொண்டாளே தவிர வாயைத் திறக்கவில்லை.

சென்னையில் தற்போதைய தனது நிலவரம் பகிர்ந்து கொண்டாள்.

தனது பொழுதுபோக்கிற்காக யோசித்ததைப் பற்றியும் மாமனிடம் கூறினாள்.

“உன்னை மாதிரி ஒரு புள்ளைய இந்தக் காலத்தில பக்கத்துல வச்சி பதவிசா வளத்து, ஒரு நல்லவனுக்கு ஊரே பாத்து வியக்கறமாதிரி கட்டிக் குடுக்க முடியலையேனுதான் எனக்கு அடிச்சிக்குது தாயி! உன்னோட நல்ல மனசு, நேர்த்தியான குணத்துக்கு ஆண்டவன் உனக்கு எந்தக் குறையுமில்லாம நல்ல வாழ்க்கையக் குடுப்பாரு.  என்ன! இந்த மாமன் எல்லாத்தையும் பாத்து சந்தோசப்படக் குடுத்து வைக்கணும்!”, என அழுகையோடு பகிர்ந்து கொண்டார் அந்த மாமன்.

“நீங்க நினைக்கிறது கண்டிப்பா நடக்கும் மாமா.  இப்ப என்ன எனக்கு வயசாகுதுன்னு புலம்பறீங்க.  எல்லாம் ஒரு காலம் வரும்.  உங்க நினைப்பு எல்லாம் நடக்கும்!”, என நம்பிக்கையோடு ஆறுதல் கூறினாள் வாணி.

நேர்த்தியோடு நுண்கலை சார்ந்த வகுப்புகளை எடுப்பதால், விரைவில் எழில்வாணியைப் பற்றிய விசயங்கள்  சென்னை மட்டுமல்லாது, இதர இடங்களிலும் பிரசித்தியாயிற்று.

தினசரி மூன்று வகுப்புகளுக்கு மேல் முடியாது என்றிருந்தாள்.

வகுப்புகளை மிகவும் எளிதில் புரியும் வகையில், தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் நடத்தியதால் பிறமொழி மாணவர்களும் ஆர்வத்தோடு கலந்து கொண்டு பயின்றனர்.

பெரும்பாலும் பெண்களே இதில் கவனம் செலுத்தினர்.  மிகவும் குறைவான எண்ணிக்கையில் ஆண்கள் கலந்து கொண்டனர்.

இதையே சில கணினி சார்ந்த அப்ளிகேசன்களில் டிசைன்களை உருவாக்குவதைப் பற்றிய வகுப்புகளை எடுக்கும் உத்தேசம் இருக்க, ஆனால் கணினி இல்லாத காரணத்தால் ஒத்தி வைத்திருந்தாள் பெண்.

ஒவ்வொன்றிற்கும் தனித்தனி வகுப்புகள், செய்முறைகள் என விளக்கிக் கூறியதால், அனைவரும் ஆர்வத்தோடு தனது படைப்புகளைச் செய்ததோடு, அது சார்ந்த சந்தேகங்களைக் கேட்டு உடனுக்குடன் தங்களது புதிய முயற்சிகளை மேற்கொண்டு, தனித்துவமாக தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சிலர் நேரடி வகுப்புகள் மூலமாக தொடர்ச்சியாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தினங்கள் வகுப்புகள் எடுக்குமாறு கேட்டுக் கொள்ள அதற்கான முயற்சியில் இறங்குவதாகக் கூறினாள் எழில்வாணி.

பயிற்சிக்குத் தேவையான பொருள்களை வாங்குபவர்களிடம், நேரடி வகுப்பு சார்ந்த விசயங்களைப் பற்றிப் பேசினாள்.

“சார் சமீப காலமா பைன் ஆர்ட்ஸ் ரிலேடட் கிளாசஸ்கு உங்ககிட்டதான் மெட்டீரியல்ஸ் வாங்கிட்டு இருக்கேன்.  என்னோட ஸ்டூடன்ட்ஸூம் இங்கதான் ரெகுலரா வாங்கறாங்க.  இப்ப ரெகுலர் கிளாஸ் ட்டூ டூ ஒன் வீக் ஷெட்யூல்ல போட்டா நல்லாயிருக்கும்னு எதிர்பாக்கறாங்க.  இதுல ஒன்வீக் ஷெட்யூல் அரேன்ஞ் பண்ணித்தர உங்களுக்கு ஏதேனும் வாய்ப்பு இருக்குமா”, எழில்வாணி

“ரெண்டு நாள் கழிச்சு வந்து பாருங்கம்மா”, என முதலில் அனுப்பியிருந்தனர்.

மீண்டும் வாணி அங்கு அணுகியபோது, புதியதாக ஆரம்பம் முதல் விசயங்களைக் கேட்டறிந்தனர். பிறகு இன்னும் ஒரு வாரம் கழித்து வந்து பாருங்கள் என்றனர்.

இடைப்பட்ட தினத்தில், எழில்வாணி வகுப்புகள் எடுக்கத் துவங்கியது முதல், தற்போது வரை தங்களுக்கான ஆதாயம் பற்றிய வரவு செலவுகளை தீர ஆராய்ந்தனர்.

மீண்டும் வந்தவளிடம், “வாடகைக்கு இடம் பார்க்கறது ஒன்னும் பெரிய பிரச்சனை இல்லை.  ஆனா ஒன் வீக்குகான எல்லா எக்ஸ்பென்ஸ்ஸும் பாக்கணும்.  நாம எதிர்பாக்கற அளவுக்கு மக்கள் வரலைனா எங்க கைய கடிச்சிறக்கூடாது.  சோ கன்ஸ்ட்ரக்சன்ஸ் மாதிரி, பெயிண்ட் டீலர்ஸ், மெட்டீரியல்ஸ் சப்ளையர்ஸ் இவங்ககிட்ட இதற்காக ஷ்பான்சர் கேட்கலாம்” என சில யுக்திகளைக் கூறியது அந்நிறுவனம்.

அதாவது அவர்களுக்கு நல்ல இலாபம் என்றபோதிலும், முழுக்க தாங்களாகவே முன்வரத் தயங்கினர்.

தங்களைப் போன்ற நிறுவனங்களின் துணையோடு, கட்டிட நிறுவனங்களை அணுகலாம் என்ற யுக்தியை செயல்படுத்திடக் கூறியதும், எழில்வாணி ஆரம்பத்தில் மிகவும் யோசித்தாள்.

தான் மேற்கொண்டிருப்பது நுண்கலை சம்பந்தப்பட்டது.  இதில் கட்டிட நிறுவனங்களிடம் உதவி என்று போய் நின்றால் அது சரியா? அவர்களின் பதில் என்னவாக இருக்கும் என ஆராய்ந்ததில், அதில் உடன்பாடு எழவில்லை எழில்வாணிக்கு.

ஏனெனில், தங்களுக்கு ஏதேனும் ஆதாயம் கிட்டுமா என அந்நிறுவனங்கள் யோசிக்கும் நிலையில், தன்னால் அவர்களுக்கு என்ன கைமாறு  செய்ய இயலும் என ஆழ்ந்த சிந்தனைக்கு உட்பட்டாள்.

எந்த ஆதாயமும் இன்றி இன்றைய காலத்தில் யாரும் எதுவும் செய்ய மாட்டார்கள் என்பது புரிந்தே இருந்தது பெண்ணுக்கு.

வந்து சந்திப்பதாகக் கூறியவள், இரண்டு தினங்கள் வகுப்புகளை மட்டுமே கவனித்தாள்.

அதன்பின் தேவைக்காக மட்டுமே பொருள்களை வாங்குவதோடு அடுத்து நேரடி வகுப்புகள் பற்றி எதுவும் நிறுவனத்திடரிடம் பேசவில்லை.

////////////////////

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!